"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

ஆணென்றும் பெண்ணென்றும் இல்லாதெம்மை தடுத்தாய்
இருதலைக் கொள்ளியென ஏனெமெக்கு உருக்கொடுத்தாய்.


திருநங்கை (Transwoman) எனப்படுவோர் பிறப்பால் ஆண்களாக அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும். அதாவது "பிறப்பால் ஒரு பாலினத்தை சார்ந்தவர்கள், சில உயிரியல்(Biological) மாறுபாட்டினால் எதிர்பாலினமாக அகவுணர்ந்து, பல உளவியல் சிக்கல்களைக் கடந்து, தொடர்ந்து தங்கள் வாழ்க்கை முறையையும் அவ்வாறே நடத்துபர்கள்" திருநங்கைகள் என்று குறிக்கப்படுகின்றார்கள்.

பல காலமாக அலி, பேடி, அரவாணி போன்ற சொற்களே வழக்கத்தில் இருந்தன. அச்சொற்கள் திருநங்கைகளை கேலிபடுத்தும் படியாக அல்லது அந்த பொருளில் பயன்படுத்தப்படுவதால், திருநங்கை என்ற சொல் திருநங்கைகளால் பரிந்துரைக்கப்படுகின்றது.

ஒடுக்கலுக்குள்ளாகி விளிம்புநிலைக்குத் தள்ளப்படும் அரவாணிகள், பொதுவாகத் தமது குடும்பச்சூழலை விட்டு விலகி, அரவாணிகள் எனும் குழுமத்தில் கலந்துவிடுகிறார்கள். பெண்மை எனும் பாலின அடையாளத்தை பெறுவது அவர்களுக்கு விடுதலையளிப்பதாக அமைகிறது என்ற கருத்து நிலவுகிறது.

திருநங்கைகளின் தனித்த பண்பாட்டியற் கூறுகள்

மரபு ரீதியான இனப் பெருக்கத்தின் அடிப்படையிலான தொடர்ச்சி எதுவும் இல்லாமலேயே அரவாணிகள் சமூகம், தமது பாரம்பரியத்தை வரலாற்றோடு இனம் கொண்டு ஒரு சமூகத்தையும், தனித்துவமான குடும்ப அமைப்புகளையும், தனித்துவமான சடங்குகளையும், வாய்மொழி மரபுகளையும் பேணி வருகிறது. பல்வேறு தனித்துவம் கொண்ட வேறுபட்ட கூறுகளையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கொண்ட தேசமாய் விளங்கும் இந்தியா முழுக்க அரவாணிகள் சமூகம் தனக்கென ஒரு பொதுப் பண்பாட்டையும், பொது கலாச்சார சடங்குகளையும், பொது வழக்காற்றையும் கொண்டுள்ளது. பொதுவான நாட்டார் வழக்காற்றிலிருந்து அரவாணிகள் வழக்காறு முற்றிலும் வேறுபட்டது.

கூத்தாண்டவர் திருவிழா

ஒரு அரவாணியின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வு கூத்தாண்டவர் திருவிழா. அந்த அளவிற்கு அரவாணிகளின் உணர்வோடு பின்னிப் பினைந்த ஒரு சமுதாயச் சடங்குஅது. அரவாணிகள் சமூகத்திற்கென்றே தனித்துவ அடையாளமாக விளங்கும் இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது.

இந்திய அரவாணிகள் வரலாற்றில் அழியாப் புகழ் பெற்ற புண்ணியத்தலம் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மடப்புரம் சந்திப்பிலிருந்து 30.கி.மீ தூரத்தில் உள்ளது கூவாகம் கிராமம். இங்குள்ள அரவாணிகளின் தெய்வமாகிய கூத்தாண்டவர் ஆலயத்தில் ஒவ்வோர் சித்திரா பௌர்ணமியன்றும் பல்லாயிரக் கணக்கான அரவாணிகள் கூடுவர்.

பாண்டிச்சேரியிலுள்ள பிள்ளையார் குப்பம், மடுகரை சிதம்பரம் அருகில் கொத்தடை, தேவனாம்பட்டினம் பகுதிகளிலும் கூத்தாண்டவர் ஆலயம் அமைந்திருந்தாலும், விழுப்புரம் கூவாகம் ஆலயத்திற்கு மட்டுமே அரவாணிகள் அதிகம் வருகின்றனர். மகாபாரதப் பெருங்காதையில் அர்ஜானனால் கவரப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட வேடுவப் பெண்ணான நாகக்கன்னியின் மகன் அரவான்.

குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க ‘எந்த குற்றமும் இல்லாத சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனிதப்பலி தங்கள் தரப்பில் முதல் பலியாக வேண்டும்’ என ஆருடம் கூறுகிறது. பாண்டவர் தரப்பில் இவ்வாறு சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவர்களாகக் காட்டப்படுபவர்கள் மூவர். அர்ஜுனன், அவன் மகன் அரவான், ஸ்ரீகிருஷ்ணர்.

அர்ஜானனும், கிருஷ்ணரும் தான் இந்த போருக்கான முகாந்திரம் உடையவர்கள் என்பதால் அரவானைப் பலியாக்க முடிவு செய்து அவனை அணுகுகின்றனர். அரவானும் பலிக்கு சம்மதித்தாலும், தனக்கான இறுதி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லற வாழ்வை துய்த்த பின்பே தான் பலிக்களம் புகுவேன் என உரைக்கிறான். வேந்தர் குலம் முதல் வேடுவர் குலம் வரை எந்தப் பெண்ணும் அதனை ஏற்கவில்லை. இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரமெடுத்து அரவானை மணக்கிறார். ஒரு நாள் இல்லற வாழ்விற்குப்பின் பலிக்களம் புகுகிறான் அரவான். விதவைக் கோலம் பூணுகிறாள் மோகினி. இந்த சாராம்சத்தின் அடிப்படையில் மோகினியாய் தம்மை உணரும் அரவாணிகள் கூடி வரும் இடமே கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா.

சித்திரா பௌர்ணமிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே அரவாணிகள் விழுப்புரத்திற்கு வந்துவிடுகின்றனர். அனைத்து விடுதிகளும் அரவாணிகளால் நிரம்பிவிடுகின்றன. எங்கு நோக்கிலும் அரவாணிகள். இந்த நிகழ்வு ஓர் சமயம் சார்ந்த நிகழ்வாக இருப்பினும் இந்தியாவின் பல பாகங்களில் இருந்துவரும் அரவாணிகளை ஒன்றினைக்கும் விழாவாகவே அமைகிறது. அரவாணிகள் தங்கள் தோழிகளை சந்திக்கவும், உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், நலம் விசாரிக்கவும், தங்கள் கலைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் இது அமைவதால், சமுதாயத்தின் கேலிப் பார்வைகள், ஒதுக்குதல் கூவாகத்தில் இல்லை.

சித்திரா பௌர்ணமியன்று கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக தம்முள் வரித்துக் கொண்டு கோயில் அர்ச்சகர் கையால் தாலி கட்டிக் கொள்கின்றனர் அரவாணிகள். விடியவிடியத் தங்களது கணவனான அரவானை வாழ்த்தி பொங்கல் வைத்து கும்மியடிச்சிட பாட்டமும், ஆட்டமுமாக இரவு கழிகிறது. பொழுது மெல்ல புலரத் துவங்க,அதுவரை ஆனந்தமாய் இருந்த அரவாணிகள் முகத்தில் மெல்ல சோக ரேகைகள் படரத் துவங்குகின்றன.

அரவானின் இரவு களியாட்டம் முற்றுப் பெற்று களப்பலிக்குப் புறப்படுகிறான். நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் மரத்தால் ஆன அரவான் சிற்பம் வைக்கப்பட்டு, கூத்தாண்டவர் கோயிலிலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள கொலைக் களமான அமுதகளம் கொண்டு செல்லப்படுகிறான்.வழியெங்கும், சோகத்துடனும், அழுத கண்ணீருடனும் அரவாணிகள்.

வடக்கே உயிர் விடப்போகும் அரவானைப் பார்த்து ஒப்பாரி வைக்கின்றனர். அமுதகளத்தில் அரவான் தலை இறக்கப் படுகின்றது. தன் தாலி அறுத்து, பூ எடுத்து, வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவை கோலம் பூணுகின்றனர்.

http://ta.wikipedia.org/wiki/திருநங்கை

Tamil transgender people in Singapore (Part 1 of 3)Tamil transgender people in Singapore (Part 2 of 3)Tamil transgender people in Singapore (Part 3 of 3)