"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


ழுதலும் வீழ்தலும் இயற்கையாய் இயைந்த நீரலை போன்ற நேரத்தில், இன்னமும் நான் உருண்டு கொண்டே இருக்கிறேன்

சின்னதும் பெரியதுமாய் வாழ்க்கைச் சுழலில் நீர்த்தும் ஓடியும்

ஓ... முடிவிலா விசை எனக்கு துன்பம்தான் தருகிறது - இனியும் அவற்றில் விருப்பமில்லை

எப்பொழுதும் உழன்றுகொண்டே இலக்கை அடைய இயலாமல் இருக்க ஏன்? கரை கண்ணுக்குக்கூடத் தென்படவில்லை!

பிறவிக்குமேல் பிறவியெடுத்தும் - இன்னமும் வாசலிலேயே நான்; வாசற்கதவுகள் திறந்தபாடில்லை

மங்கிய கண்கள் நீண்ட நாளாய் தேடிய அந்த ஒற்றை ஒளிக்கற்றையைப் பிடிக்க வீணாய் முயலுகின்றன

வாழ்க்கையின் உயர்வான ஒடிசலான பாலத்தின் மீதேறி கீழே பார்க்கிறேன்! மக்கள் கூட்டமங்கே - மிகவும் கஷ்ட்டப்படுபவர்களும், அழுபவர்களும், சிரிப்பவர்களுமாய் - எதற்காக? யாருக்கும் தெரிவதில்லை!

கதவுகளுக்கு முன்னால் கடுமையான முகத்துடன் குரலொன்று கேட்கிறது "இதற்குமேல் ஓரடியும் எடுத்து வைக்காதே! விதியை உன் வசப்படுத்தப் பார்க்காதே! இயன்றளவு அதை ஏற்றுக் கொள்ளப்பார்" என்று

மேலும், "அதோ அந்தக் கூட்டத்துடன் சேர்ந்துகொள். இந்தக் கோப்பையில் இருக்கும் ரசத்தைக் குடித்து, அவர்களைப்போல எவ்வளவு பித்துக்கொள்ள இயலுமோ, அதைக்கொள்

அறிவதற்கு துணிவிருந்த உனக்கு, எதற்கு ஒப்பாரி? நில், அவர்களோடு கிட, என்றது

அந்தோ என்னால் சும்மா இருக்க இயலவில்லையே. மிதக்கும் நீர்க்குமிழியான புவி - அதன் வெற்று வடிவமும், வெற்று பெயரும், வெற்று பிறப்பு இறப்பு சுழலும் - இவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை. நாமம், வடிவம் போன்ற தோற்றங்களைத் தாண்டி உள்ளே செல்ல எவ்வளவு காத்துக் கிடக்கிறேன்!

ஆ... கதவுகள் திறக்காதோ! எனக்காக அவை திறந்தேதான் ஆக வேண்டும்.

அன்னையே... சோர்ந்துபோன மகனுக்காக, வெளிச்சக் கதவுகளை திறந்துவிடாயோ?

வீட்டுக்குத் திரும்பக் காத்திருக்கிறேன் அம்மா என் விளையாட்டு முடிந்துவிட்டது

நீ என்னை இருளில் விளையாட அனுப்பிவிட்டு பயமுறுத்தும் முகமூடியை அணிந்து உள்ளாயோ?

நம்பிக்கை இழக்க, துன்பம் வர, விளையாட்டு வினையானது

இங்கும் - அங்குமாய் அலைகளில் அலைக்கழிக்கப்பட பொங்கும் கடலில், வலிய இச்சைகளும், ஆழ்ந்த துக்கங்களும் நிறைய இருப்பது சோகம் வேண்டுவது மகிழ்ச்சி...

வாழ்க்கையோ, வாழும் இறப்பெனவாக, அந்தோ இறப்போ - யாரறிவார்? ஏனெனில், இன்னொரு துவக்கம் இன்னொரு சுழற்சி - மீண்டும் சோகமும், ஆனந்தமும்?

சின்னஞ்சிறார்கள் பெரிதாய்க் கனவுகாண பொற்கனவுகள் சீக்கிரமே பொடி பொடியாய்ப் போக

நம்பிக்கை நீரூற்றிக் காத்திருக்க வாழ்க்கையோ பெரிதாய் துருப்பிடித்த இரும்பு

தாமதமாக வயது ஆக ஆக பெறும் அனுபவ அறிவோ சுழற்சியை பயமுறுத்த போய் சேர்ந்துவிடுகிறோம்

இளைஞராய் துவக்கத்திலிருக்கும் சக்தியில் சக்கரம் சுழல, நாட்கள் நகர, ஆண்டுகள் உருண்டோடுகின்றன. தோற்ற மயக்கத்தின் விளையாட்டு பொம்மையாய், அறியாமை தரும் நம்பிக்கை இன்னமும் சுழற்றிவிட, ஆசை நமைக்க, துன்பமும் - இன்பமும், சக்கரத்தின் ஆரங்கள்

நானோ நீரோட்டத்தில் இருந்து விலகி விடுகிறேன் செல்வது எவ்விடத்திற்கென அறியாமல்

இந்த நெருப்பில் இருந்து காப்பாற்று

கருணை நிறை அன்னையே... ஆசையில் மிதக்கும் என்னைத் தடுத்து ஆழ்க்கொள்!

உன் அச்சுறுத்தும் முகத்தைக் காட்டாதே, என்னால் அவ்வளவைத் தாங்க இயலுவதில்லை

கருணை கொள்வாய் இச்சிறுவனின் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு

என்றும் ஆர்ப்பாட்டமில்லா அமைதியான கரைகளுக்கு என்னை எடுத்துச் செல்வாய் அம்மா - துன்பங்களுக்கு அப்பால், கண்ணீருக்கு அப்பால், உலக இன்பங்களுக்கும் அப்பால்

சூரியனோ, சந்திரனோ, அல்லது மின்னும் நட்சத்திரங்களோ, அல்லது பளிச்சிடும் மின்னலோ - இவர்கள் யாராலும் அவனின் புகழை, முழுமையாக வெளிப்படுத்த இயலாது, அவன் ஒளியையே அவர்கள் எல்லோரும் பிரதிபலித்தாலும்!

இனியும் சிதறடிக்கும் கனவுகள், அவன் முகத்தை என்னிடம் இருந்து மறைப்பதை அனுமதிக்காதே

என் விளையாட்டு முற்றுப் பெற்றது அன்னையே... என் தளைகளை, உடைப்பாய், விடுதலை செய்வாய்!

("My Play is Done" என்ற தலைப்பில் விவேகானந்தர் 16 மார்ச் 1895 இல் நியூயார்க்கில் எழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம்)


My Play Is Done



Ever rising, ever falling with the waves of time, still rolling on I go
From fleeting scene to scene ephemeral, with life's currents' ebb and flow.
Oh! I am sick of this unending force; these shows they please no more,
This ever running, never reaching, nor e'en a distant glimpse of shore!
From life to life I'm waiting at the gates, alas, they open not.
Dim are my eyes with vain attempt to catch one ray long sought.
On little life's high, narrow bridge I stand and see below
The struggling, crying, laughing throng. For what? No one can know.
In front yon gates stand frowning dark, and say: `No farther away,
This is the limit; tempt not Fate, bear it as best you may;
Go, mix with them and drink this cup and be as mad as they.
Who dares to know but comes to grief; stop then, and with them stay.'
Alas for me, I cannot rest. This floating bubble, earth-
Its hollow form, its hollow name, its hollow death and birth-
For me is nothing. How i long to get beyond the crust
Of name and form! Ah, open the gates; to me they open must.
Open the gates of light, O Mother, to me Thy tired son.
I long, oh, long to return home! Mother, my play is done.
You sent me out in the dark to play and wore a frightful mask;
Then hope departed, terror came, and play became a task.
Tossed to and fro, from wave to wave in this seething, surging sea
Of passions strong and sorrows deep, grief is, and joy to be.
Where life is living death, alas! and death-who knows but `tis
Another start, another round of this old wheel of grief and bliss?
Where children dream bright, golden dreams, too soon to find them dust,
And aye look back to hope long lost and life a mass of rust!
Too late, the knowledge age doth gain; scare from the wheel we're gone.
When fresh, young lives put their strength to the wheel, which thus goes on
From day to day and year to year. 'Tis but delusion's toy,
False hope its motor; desire,nave;its spokes are grief and joy.
I go adrift and know not whither. Save from this fire!
Rescue me, merciful Mother, from floating with desire!
Turn not to me Thy awful face, 'tis more than I can bear,
Be merciful and kind to me, to chide my faults forbear.
Take me, O Mother, to those shores where strifes for ever cease;
Beyond all sorrows, beyond tears, beyond e'en earthly bliss;
Whose glory neither sun, nor moon, nor stars that twinkle bright,
Nor flash of lightning can express. They but reflect its light.
Let never more delusive dreams veil off Thy face from me.
My play is done; O Mother, break my chains and make me free!


- Swami Vivekananda


("My Play is Done" was composed on 16th March 1895 when he was in New York)


Swami Vivekananda Poetry...


அன்றாட அற்புதங்கள்

"அவனா, சமாளிக்கவே தெரியாத ஆசாமிப்பா. நல்ல நிலைமையில இருக்கான். கைநிறைய அத்தியாவசியம் மற்றும் ஆடம்பரத்துக்குப் போதுமான மாச சம்பளம். அவன் அப்படி ஒன்றும் செலவாளியுமில்ல. இருந்தும் பாரேன், எப்பவுமே சிரமதசையில இருக்கான். காசைச் சரியா செலவழிக்கத் தெரியாதவன்னு தான் சொல்லணும். புதுப்பேண்ட் போட்டா பழைய சட்டை போடறான். டை புதுசுன்னா ஷு பார்க்க சகிக்கல்ல. சம்பளப்பணம் எப்படிப் போகுதுன்னே தெரியல்லன்றான். அவன் சம்பாத்தியத்துல பாதி எனக்கு இருந்தாப் போதும். சூப்பரா பட்ஜெட் போட்டு எத்தன அருமையா வாழ்வேன், தெரியுமா", என்று நாம் என்னவோ, அப்படியே வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருவதைப் போல, பந்தாவாக நம்மில் பலர் ஏதோ ஒரு சமயத்தில் அலட்டுகிறோம்.

நாம் எல்லோருமே ஏதோ நிதியமைச்சர் என்ற சுகமான கற்பனை நம் மனதில். வரவுசெலவுத் திட்டத்தில் என்னை மிஞ்ச யாருண்டு என்ற ஒரு சுய போதை! அந்தக் கணத்தில் அது ஒரு சகமான சிந்தனையாகவே இருக்கிறது. நாளிதழ்களைப் பாருங்கள். பக்கம் பக்கமாய், செலவுக் கணக்கும் அதுதரும் வசதிகளுமான அறிவுரைகள். கண்ணைச் சுண்டும் விளம்பரங்களும் பேட்டிகளுமாய். இவ்வகையான செய்திகள் படிப்போரை ஈர்க்கவே செய்கின்றன. சமீபத்தில் ஒரு செய்தித் தாளில் கிளம்பியது ஒரு விவாதம். கட்டுரையில், "எண்பது ரூபாயில் ஒரு வாரத்துக்கு வாழ்வது எப்படி?" ஆனால், "ஒரு நாளைக்கு இருபத்துநான்கு மணிநேரத்துக்கு எப்படி 'வாழ்வது'?", என்பது போன்ற எந்தக் கட்டுரையையும் நான் கண்டதில்லை. இருந்தாலும், 'டைம் ஈஸ் மனி' என்று சொல்கிறார்களே. காலம் என்பது பணத்தைவிட அதிக மதிப்பு வாய்ந்தது என்பது என்னவோ உண்மைதான். பொதுவாகவே, கையில் நேரம் இருந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்பது எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடியது. ஆனால், உங்களிடம் கோடிக்கணக்கில் பணமிருந்தாலும் எனக்கு இருக்கும் அதே அளவிலான மணித்துணிகள் தான் உங்களிடமும் இருக்கும். ஒரு பூனையிடமும் கூட அதே இருபத்துநான்கு மணிநேரம் தான் இருக்கும்.

தத்துவவாதிகள் 'வெளி'யை விவரித்திருக்கிறார்கள். ஆனால், காலத்தை விவரித்ததுண்டா? காலம் தான் எல்லாவற்றுக்குமான கச்சாப் பொருள். ஆதிமூலம் அல்லது லோகமூலம் அது. அதைக் கொண்டு எதையுமே சாத்தியப் படுத்தலாம். நேர உற்பத்தி என்பதுதான் இந்த யுகத்தில் நடக்கக்கூடிய மிகப்பெரிய அற்புதம் என்றால் அது மிகையில்லை. ஒரு ஆச்சரியகரமான சம்பவமாகவும் அது இருக்கக்கூடும்! காலையில் எழுந்து கொண்டதுமே உங்களின் பணப்பையில், அற்புதமான இருபத்துநான்கு மணிநேரம் நிரம்பியிருக்கிறது! அம் மணித்துளிகள் யாவுமே, உங்களுக்கே, உங்களுக்கு மட்டுமே உரியது. அவைதான் ஒருவர் உரிமை கொண்டாடக்கூடிய மிகவும் மகத்தான சொத்து. அந்தச் சொத்தினை உங்களிடமிருந்து யாரும் அபகரிக்க முடியாது; திருட முடியாது. உங்களை விட அதிகமாகவோ குறைவாகவோ வேறு யாரிடமும் இருக்கவும் இருக்காது.

ஒரு மகத்தான மக்களாட்சியில், காலம் எனும் பெரும்சக்தியின் முன், செல்வத்தின் அதிகாரங்களோ, அறிவின் அதிகாரங்களோ செல்லுபடியாகுமா! அறிவாளிகளுக்கு ஒரு நாளைக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் கிடைக்கிறதா? இல்லையே. இந்த மதிப்புமிகுந்த நேரத்தை கவனமுடன் கணக்குபோட்டுச் செலவிட்டுப் பாருங்கள். அதன்பலன் முழுக்க முழுக்க உங்களுக்கே உரித்தானதாகிவிடும். "இவன் முட்டாள் இல்லை. வெகுளியும் இல்லை. இவனுக்கு இனிமேல் 'நேரம்' வேண்டாம். இவனுக்குரிய நேரத்தை இனி வெட்டி விடுவோம்", என்று எந்த ஒரு மர்மசக்தியும் போடமுடியுமா கத்தி? நேரம் கொடுக்கும் பலம் ஞாயிறுகளால் தடைபடாது. எதிர்காலத்தை இப்போதே செலவிடமுடியாது. ஆகவே, கடன் தொல்லையும் இல்லை! நிகழ்காலத்தை வேண்டுமானால் வீணடிக்கலாம். நாளையை வீணடிக்க முடியாது. அது உங்களுக்காகக் காத்திருக்கும். அடுத்த மணித்தியாலத்தையும் வீணாக்க முடியாது. அதுவும் உங்களுக்கென்று காத்திருக்கும்.

இதெல்லாம் அற்புதம்தான்! இல்லையா? நாள்தோறும் இந்த இருபத்துநான்கு மணிநேரத்திலேயே வாழ்ந்து கழிக்க வேண்டியதான இவ்வாழ்க்கையே ஓர் அற்புதம்தான்! அதற்குள்ளாகவே ஆரோக்கியத்தை, கேளிக்கையை, பணத்தை, சொத்தை, கௌரவத்தை மட்டுமின்றி, ஆன்மிக பரிணாமத்தையெல்லாம் தேடிச் செல்ல வேண்டியதாக இருக்கிறது. காலத்தின் சரியான முறையான பயன்பாடு மட்டுமே மகத்தான பலன்களைக் கொடுக்க முடியும். எல்லாமே அதில்தான் அடங்கியிருக்கிறது. நண்பர்களே, உங்களின் மகிழ்ச்சியும் நீங்கள் பற்றியிருக்கும் அவ்வரிய பரிசுகளும் கூட அதில்தான் அடங்கியிருக்கின்றன! அதைச் சார்ந்தேதான் இருக்கின்றன.

நவீனமும் சாதுர்யமும் கொண்ட நாளிதழ்கள் என்றுமே 'கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் எப்படி வாழ்வது' என்று சொல்வதே இல்லை என்பது எத்தனை விநோதம்! பணம் கிடைப்பது காலம் கிடைப்பதை விட மிகச் சுலபம். ஆழமாகச் சிந்தித்தோமானல், பணம் என்பதுதான் ஆகச் சுலபமாகக் கிடைக்கக் கூடியது என்று ஒருவரால் புரிந்து கொள்ள முடியும். 'காலம்' பூமியின் மேல் மலைகளெனக் குமிந்து பாரமேற்றியபடியிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட அளவிலான பணத்தில் ஒருவரால் வாழ முடியாத நிலையில் அவர் இன்னும் அதிகமாகச் சம்பாதிக்க நினைக்கிறார். அதற்காகத் திருடவும் கூடச் செய்கிறார். வருடத்திற்குப் பத்தாயிரம் ரூபாயில் வாழ முடியாததால் வாழ்க்கையை ஒருவர் குழப்பிக் கொள்வதில்லை. எப்படியேனும் சமாளிக்கத்தான் செய்கிறார். ஆனால், இருபத்துநான்கு மணிநேரம் கையிலிருக்கும் ஒருவர் சரிவரச் செலவிடப் போதுமானதாக இல்லையென்றால் அவர் தன் வாழ்க்கையை நிச்சயம் குழப்பிக்கொள்ளத்தான் செய்கிறார்!

நிற்காமல் தொடர்ந்து வரவிலேயே இருந்திடும் இந்த 'காலம்' இரக்கமே இல்லாத கட்டுப்பாட்டையும் கொண்டது.

நம்மில் யார் இருபத்துநான்கு மணிநேரமும் 'வாழ்கிறோம்'? 'வாழ்கிறோம்' என்றால் 'இருக்கிறோம்' என்பதல்ல! 'சமாளிக்கிறோம்' என்பதும் அல்ல!

காலத்தைச் சரியாகச் செலவிடவில்லை, என்ற ஒருவித அசௌகரியமான குற்றவுணர்வு இல்லாமல் எத்தனை பேர் நம்மிடையே இருக்கிறோம்! நம்மில் எத்தனை பேருக்கு பழைய பேண்டுக்கு புதிய சட்டை அல்லது பழைய சட்டைக்குப் புதிய பேண்ட் என்ற விநோதம் இல்லாமல் எப்போதுமே ஒரே சீரான வாழ்க்கை நடக்கிறது! "இன்னும் கொஞ்சம் கூட நேரமிருந்தால் நானும்கூட மாற்றங்கள் கொணர்வேன்", என்று நம்மில் எத்தனை பேர் அடிக்கடி சொல்லிக் கொள்கிறோம்! பல காலமாகவே சொல்லி வந்திருக்கிறோம்!...

நமக்கு இதற்கு மேல் நேரம் கிடையாது. அன்றும் இன்றும் நாளையும் என்றுமே இதேபோல இருபத்துநான்கு மணித்தியாலங்களே இருக்கும். எப்போதுமே அலட்சியப் படுத்தப்பட்டிருக்கும் இந்த முக்கியக் கூற்றினை உணர்தலே மிகமிக முக்கியம். இந்தக் கூற்றினை நான் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை. சிந்தித்து உணர்ந்தேன். அவ்வளவு தான். இவ்வுண்மையை உணர்ந்த பிறகு தான் நான் தினசரி நேரம் செலவிடும் நுட்பமான செயல்முறைப் பரிசோதனையை மேற்கொண்டேன்.

"ஆனா, எதற்கு இருபத்துநான்கு மணி நேரத்தைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறான் இவன்? இருபத்துநான்கு மணிநேரமும் வாழ்வதில் எனக்கொன்றும் பிரச்சனையில்லையே. நான் செய்யத் திட்டமிடுவதையெல்லாம் செய்கிறேன். அதே நேரத்தில் சில போட்டிகளுக்கும் போக முடிகிறது என்னால். இதெல்லாம் சின்ன விஷயம். ஒரு நாளைக்கு இருபத்துநான்கு மணிநேரம் மட்டும் தான் இருக்கிறது என்று உணர்ந்து கொண்டு திருப்திப்பட்டாப் போச்சு. இதற்குப்போய்..." என்று முக்கிய செய்தியை விட்டுவிட்டு ஒரு சிலர் இதைச் சாதாரணமாகக் கூட நினைக்கலாம்.

ஐயா, என்னை மன்னியுங்கள். உங்களைப் போன்ற ஒருவரைத்தான் நாற்பது ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தேன். உங்களின் முகவரி, தொலைபேசி எண் எல்லாவற்றையும் அவசியம் கொடுங்கள். வாழ்க்கையில் அப்படி எப்படி உங்களால் திருப்திப்பட்டுக் கொண்டிருக்க முடிகிறது என்று தெரிந்துகொள்ள எனக்கும் ஆசை. விரிவாக எனக்குச் சொல்ல என்ன கட்டணம் என்றும் சொல்லி விடுங்கள். நான் உங்களிடம் பேசுவதை விட நீங்கள்தான் என்னிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். முன்னால் வாருங்கள். நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் என்பதில் எனக்கு ஒருவித சந்தேகமுமில்லை. ஆனால், இங்கே ஏராளமான பாவப்பட்ட ஆன்மாக்கள் வருடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உருண்டோடுவதைப் பார்த்தபடியே இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை ஒரு சீரான ஓட்டத்துக்குக் கொண்டு வர முடியவில்லையே என்ற ஒருவிதமான வலியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்முன்னால் வரும்வரை நான் இவர்களுடனேயே பேசிக் கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது.

அவ்வுணர்வைப் பற்றி நாம் விரிவாக யோசித்தால் மேலும் நன்றாகப் புரியும். ஒரு வித அசௌகரியமும், எதிர்பார்ப்பும், ஏமாற்றமும், முன்னோக்கிய அகப்பார்வையும் ஊக்கமும் கலந்த ஓர் உணவு அது. தீராத தொடர் சௌகரியத்தை ஏற்படுத்தக் கூடியது. அது. நமது அனைத்து மகிழ்ச்சிகளையும் தின்று, கோரமாக இளிக்கும் ஓர் எலும்புக்கூடு போலச் செயலாற்றும். திரையரங்கத்திற்குப் போய் நாம் சிரித்து மகிழ்வோம். ஆனால், அது தனது தீனமான ஒரு விரலைச்சுட்டி நம்மைக் குற்றம் சாட்டும். நாம் கிடுகிடுவென்று கடைசி ரயிலைப் பிடிக்க ஓடுவோம். அங்கே தளமேடையில் ரயிலுக்குக் காத்திருக்கும் போதும் நம்மை விடாது பின்தொடர்ந்து, "உன் இளமையை எல்லாம் என்னப்பா செஞ்ச? இந்த வயசுல நீ இப்ப என்ன செஞ்சிகிட்டிருக்க?" என்று கேட்டுத் துளைக்கும். இவ்வகையான உணர்வுகள் வாழ்க்கையில் சகஜம் என்றும் அத்துடன்தான் வாழ்ந்து தீர்க்க வேண்டும் என்றும் நீங்கள் நினைக்கலாம் உண்மை!

ஆனால், ஒவ்வொரு செயலுக்கும் பல்வேறு கட்டங்கள் உண்டு. ஒருவருக்கு மெக்காவுக்குப் போய்வரும் ஆசை இருக்கலாம். மெக்காவுக்குப் போகவேண்டும் என்று இடைவிடாது அவரின் மனசாட்சி சொல்லிக் கொண்டிருக்கும். சுற்றுப்பயண அலுவலகத்தின் துணையுடனோ சுயமாகவோ ஒருமுறை மட்டுமே முயன்றால் போதாது. அதற்குப் பல்வேறுகட்ட முயற்சிகள் தேவையாக இருக்கிறது. நினைத்த மாதிரியே மெக்காவுக்குப் போய்ச் சேரவும் சேரலாம். செங்கடலை எட்டும் முன்னரே அவர் இறக்கவும் இறக்கலாம். அவரது ஆசையோ நிறைவேறாமலே இருக்கும். ஆனால், மெக்காவுக்குப் போக நினைக்கும் அவர் தன்னுடைய ஊரைவிட்டே கிளம்பாமல் இருப்பதுதான் பெரும்பாலும் நடக்கும் வேடிக்கை.

நம் ஊரைவிட்டே கிளம்புவதில்லை நாம். பக்கத்தில் இருக்கும் சுற்றுலாப் பயண அலுவலகத்திற்குப் போய் சுற்றுப்பயண விவரங்களைக் கூடக் கேட்பதில்லை. நமக்கு இருக்கும் காரணம் என்ன தெரியுமா? அதைக் காரணம் என்றுகூடச் சொல்ல முடியாது. சால்ஜாப்பு என்றோ சப்பைக்கட்டு என்றோ தான் சொல்ல வேண்டும். ஒரு நாளைக்கு இருபத்துநான்கு மணிநேரம் மட்டுமே இருக்கிறது என்பதுதான் அந்த ஒரே அங்கலாய்ப்பு.

நாம் நமது தெளிவற்ற குறிக்கோளை ஆழ்ந்து ஆராய்ந்தால் அது, அந்தச் சோம்பேறி மடம் கட்டிய கதை, சால்ஜாப்பு கிளம்பிய வேர் நமக்குப் புலப்படும். அதாவது, அதைச் செய்ய வேண்டும் என்ற குறிப்பிட்ட யோசனையில் ஆரம்பித்திருக்கிறது. நம்மிடையே படிந்துள்ள யோசனைகளைக் கடந்தும் நாம் ஏதேனும் செய்யவேண்டும். காலம் காலமாக நம்மில் படிந்திருக்கும் வாழ்க்கைக்கு வேண்டியதைச் சம்பாதிப்பது, சௌகரியங்களைத் தேடுவது, கடன்களை அடைப்பது, சேமிப்பது, சொத்துக்களையும் வாய்ப்புக்களையும் பெருக்குவது, மற்றும் அதற்கு வேண்டிய முயற்சிகள். என்பதுபோன்ற எழுதப் பட்டதும் படாததுமான விதிகள் எல்லாமே, மாற்றியெழுதப் படாமல் இருக்கின்றன. இந்த வேலைகள் கடினமானவை தான்! நம்மில் வெகு சிலரே சாதித்திடும் வேலைகள்! நம்மை மீறியவையாகத் தோற்றம் காட்டும் வேலைகள்! இருந்தும், நாம் அவற்றில் வென்றாலும் தோற்றாலும் மேற்கூறிய 'எலும்புக்கூடு' மட்டும், அனுபவப் பாடம் என்கிறாப்போல. நம்முடனேயே இருக்கும்.

நம் திறனையும் மீறிய செயல் என்று நமக்குத் தெரிந்தாலும். நம் சக்தியால் முடியாதவை என்று தெரிந்திருந்தாலும், நாம் எளிதில் திருப்தியடையக் கூடாது. செலவிட்டுக் குறைந்து போயிருக்கும் நமது சக்திக்கு மேலும் கொஞ்சம் செய்ய வேண்டியிருக்கிறது.

ஆமாம், இது சத்தியம். எல்லோரையும் போல தினசரி செயல் திட்டங்களைக் கடந்தும் ஏதேனும் சாதிக்கும் ஆசை வாழ்க்கையில் குறிப்பிட்ட கட்டத்தைக் கடந்தவர் அனைவருக்குமே வரும்.

அந்த ஆசையை நிறைவேற்றிடும் முயற்சியை மேற்கொள்ளும்வரை மேற்கூறிய அசௌகரியமான காத்திருப்பு இருக்கும். அது நம் ஆன்மாவின் அமைதியைக் குலைத்தபடியே இருக்கும். அந்த ஆசைக்கு எண்ணற்ற பெயர்கள் உண்டு. அறிவுத்தேடல் எனும் பிரபஞ்ச ஆசை என்பது அவற்றில் ஒன்று. இந்த ஆசை மிகவும் உறுதியானது. எந்த அளவிற்குத் தெரியுமா? வழக்கமான தினசரி வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த ஆசையால் உந்தப்பட்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறவும், அறிவை மேலும் அதிகமாகத் தேடவும் நினைக்கிறார்கள். ஹர்பெர்ட் ஸ்பென்ஸர் உலகிலேயே மகத்தான மனம் கொண்டவர் என்றறியப்படுபவர். அவரே இந்த ஆசைக்குள் அடிக்கடி விழுந்தபடியிருந்தார்.

வழக்கமான திட்டமிட்டதுபோன்ற வாழ்க்கையைக் கடந்தும் வாழ ஆசைப்படும், இந்த ஆசைகுறித்த புரிதல் இருக்கும் நிறைய ஆசாமிகள் பெரும்பாலும் அறிவுப்பசி கொண்டவர்கள். அவர்கள் நிறைய வாசிக்கவும் தெரிந்துகொள்ளவும் விரும்புகிறார்கள். இவர்கள் இலக்கிய ஆர்வம் மிகுந்தவர்களாகவும் உருவாகிறார்கள். ஆனால், இலக்கியம் மட்டுமே அறிவுலகைத் தன்னுள் அடக்கியதல்ல என்பதை நான் இங்கே சொல்லியே ஆகவேண்டும். இலக்கியத்தைக் கடந்து அப்பாலும் சுயமுன்னேற்றத்துக்கான, அறிவுப்பசியைத் தீர்க்கும் ஓர் உலகம் விரிகிறது. அவற்றைப்பற்றி நான் பிறகு விரிவாகச் சொல்வேன். இலக்கிய ஈடுபாடு இல்லாதவர்களுக்கு இங்கு ஒன்றே ஒன்றைச் சொல்லிக்கொள்ளவிழைகிறேன்.

அறிவுதாகத்தைத் தீர்க்க இலக்கியக் கிணறு மட்டும் தான் உதவும் என்று நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டாம்!

அன்றாட வாழ்வில் ஒருவித அதிருப்தி மற்றும் அசௌகரியத்துடனேயே வாழ்ந்து வருகிறீர்கள், அதற்கு முக்கியக் காரணம் தினமும் செய்ய நினைக்கும் பணிகளில் பலவற்றை முடிக்காமல் விடுகிறீர்கள், அதிக நேரமிருக்கும் போது அவற்றைச் செய்ய நினைக்கிறீர்கள், என்றெல்லாம் உங்களை நம்ப வைத்தாயிற்று. இந்நிலையில் இப்போது, 'அதிக நேரம்' என்றைக்கும் கிடைக்காது எனும் முகத்தில் அறையும் உண்மை உங்களின் முன்னால் இருக்கிறது! உங்களுக்குரிய நேரம் உங்களிடம்தான் இருக்கிறதே. இப்போது வேலையை அரைகுறையாக விட்டுவிட்டதால் ஏற்படும் அந்த அசௌகரிய ஏமாற்ற உணர்வை உதறித் தள்ளிவிடுவது எப்படி என்ற ரகசியத்தை உங்களுக்குச் சொல்லட்டுமா?

மிக அற்புதமான ரகசியம் அது. அதை நான் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை. அப்படியான எந்த எதிர்பார்ப்பும் என்னில் இல்லை. வேறு யாரும் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் கூட எனக்கில்லை. இன்னும் அது கண்டுபிடிக்கப் படவேயில்லை! இதுவரை நான் சென்னதைக் கேட்டதில் உங்களுக்குள் செத்துக்கிடந்த நம்பிக்கையில் ஒருவித உயிர்ப்பை உணர்ந்திருப்பீர்கள். ஒருவேளை நீங்கள், இத்தனை நாளாக நான் என் சலிப்பையும் அலுப்பையும் விரட்டவென்று தேடித்தேடித் தோற்றுப்போன நேரத்தில் இந்த மனுசன் எனக்கு ஒரு சுலப வழியைச் சொல்லப் போகிறான்" என்று கூட நினைத்திருக்கலாம். அடடா... ஆனால் அந்த மாதிரியான எந்த எளிய அல்லது சுலப வழியும் இல்லையே. மெக்காவுக்கான பாதை அங்கே போய்ச் சேருவோமா இல்லையா என்றே உறுதியாகத் தெரியாதபடி கரடுமுரடாகவும் கடினமாகவும் தானே இருக்கிறது.

ஒருவர் முழுமையாக வாழ ஆசைப்பட்டு தன் வாழ்வைச் சீர்படுத்த முயற்சிக்கும்போது மிக முக்கியமாக கவனத்தில்கொள்ள வேண்டியது இதில் இருக்கக்கூடிய சவாலைத்தான். தியாகங்களும் முடிவற்ற முயற்சிகளும் கொண்ட இந்த வேலை மிகவும் சவாலானது என்ற புரிதல்மட்டும் முதலில் இருந்து விட்டால் நமக்குள் வரக்கூடிய ஓர் அமைதி மிக இன்றியமையாதது. இதை மேலும் அதிகம் அழுத்திச் சொல்லவும் என்னால் முடியாது.

ஒரு காகிதத்தில் பேனாவைக் கொண்டு உங்களின் கால அட்டவணையை முறைப்படுத்திக் கொண்டு உங்களின் குறிக்கோளை அடைய நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள். அந்த யோசனையே வேணாம். ஊக்கக் குறைவுகளுக்கும் மாயைகளுக்கும் நீங்கள் நிச்சயம் தயாராகவே இருக்க வேண்டும். பெரிய முயற்சியில் கிடைக்கும் சிறிய பலனில் அதிருப்தியடையாதவர்களும் இதனால் பலனடைய முடியாது. ஆகவே அத்தகையோர் பேசாமல் நீட்டிப் படுத்துக் கொள்ளுங்கள். வழக்கம்போல உங்களின் 'இருத்தல்' மட்டும் தொடரட்டும். சும்மா இருத்தலே சுகம்.

மிகவும் மனச்சோர்வும் சுவாரஸ்யமின்மையும் கொண்ட அந்தநிலைதான் எத்தனை வருத்தத்திற்கு உரியது? இருந்தாலும், அதுவும் பரவாயில்லை என்றே நான் சொல்வேன். ஏனெனில், இந்தவித இருத்தலில் இருந்து இருந்து, பின்னர் அதைக் கடந்துதான் சொந்தச் செயல் திட்டத்தையையும் மிஞ்சிச் சாதிக்கும் ஆர்வமே வரும். ஆகவே, மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திடும் இந்த 'இருத்தல்' எனக்கும் பிடிக்கும்.

"சரி, நான் போருக்குத் தயார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சொன்னதையெல்லாம் யோசித்து விட்டேன். நான் எப்போது ஆரம்பிக்கலாம்?", என்று நீங்கள் கேட்டீர்களானால், "உடனே! இப்பவே!" என்பதுதான் என் பதில். இதை ஆரம்பிக்க எந்த மந்திரமோ மாயமோ கிடையாது. குளத்து நீர் மிகவும் குளிர்கிறது என்று நீரில் குதிக்காமல் நீச்சல்குளத்தின் கரையிலேயே நின்று கொண்டிருப்பவனுக்கு எப்படி நீச்சல் பயில முடியும்? முதலில் நீருக்குள் இறங்க வேண்டும். பிறகு தான் சில முயற்சிகள் மேற்கொண்டு நீந்தக் கற்கலாம்.

நான் முன்பே சொன்னதுபோல காலத்தின் தொடர்வரவு என்பது எப்போதுமே அழகுதான். அதை நாம் முன்பே செலவிட முடியாது. அடுத்த ஆண்டை, அடுத்த நாளை, ஏன் அடுத்த மணிநேரத்தை நாம் முன்பே செலவிட முடியுமா? ஆனால், அது எதிர்காலத்தில் துல்லியமாக, குறைவற்று, வீணாகாமல், செலவாகாமல் உறுதியாக நமக்காகக் காத்திருக்கும். ஒவ்வொரு மணிநேரமும் நீங்கள் திருந்த நினைத்தால் திருந்தலாம். வேறு எதுவுமே உங்களுக்காகத் தயாராக அடுத்த வாரத்திலோ நாளைக்கோ காத்திருக்காது. நீச்சல்குளத்தின் நீர் அடுத்த வாரம் வெதுவெதுப்பாக இருக்காது. எப்படி இருக்குமோ தெரியாது. சொல்லப் போனால், இன்னும் அதிகக் குளிராகக்கூட ஆகலாம்.

ஆனால், நீங்கள் ஆரம்பிக்கும் முன்னர், உங்கள் காதில் சில சொற்களை நான் ரகசியமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.

மிக முக்கியமாக உங்களின் சொந்த உற்சாகத்திற்கு எதிரான எச்சரிக்கை இது. நல்லது செய்ய நினைக்கும்போது ஏற்படக்கூடிய ஊக்கம், மிகவும் சூது நிறைந்ததும் வழிதவறக் கூடியதுமானது. அது திடீரென்று செயல் ஒழுங்குகளுக்காக அலறும். அதன் வெறியை முதலில் உங்களால் தீர்க்க முடியாது. மேலும் மேலும் அதிகமான செயல்களைக் கேட்கும் அது. மலைகளையும் ஆறுகளையும் தகர்க்க நினைக்கும். வியர்வை ஆறாகப் பெருகும் வரை திருப்தி அடையாது அது. அதற்குப் பிறகு அடிக்கடி புருவத்தின் மேல் துளிர்க்கும் வியர்வையை உணர்ந்து, "போதும்டா சாமி", என்று சலிப்பாகக்கூட ஓரிரு வார்த்தைகள் பேசும் முன்னரே சடாரென்று களைத்து இறந்துபோகும்.

ஆரம்பத்தில் உற்சாக மிகுதியால் ஒரேயடியாக உங்கள் சக்திக்கு மீறி செயல்படாதீர்கள். குறைவாகச் செயல்பட்டு நிறைவு காணுங்கள். விபத்துக்களை சகஜமாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கக் கூடிய மனித இயல்புக்கு, சுபாவத்துக்கு இடம் கொடுங்கள்.

சுயமதிப்பிற்கும் தன்னம்பிக்கைக்கும் அதிக சேதாரமில்லாத அளவில் ஒன்றிரண்டு தோல்விகள் ஏற்படுவதில் ஒரு பிரச்சனையுமில்லை. ஆனால், ஒரு தோல்வியை விட இன்னொரு தோல்வியோ, ஒரு வெற்றியை விட இன்னொரு வெற்றியோ பெரியதில்லை. உருப்படாமல் போனவர்களில் பெரும்பான்மையினர் அளவிற்கு அதிகமாக முயற்சித்தவர்கள்தான்! துவக்கத்தில் ஏற்படும் தோல்விகள்தான் ஊக்கத்தை அழிக்கக் கூடியது. ஆகவே, இருபத்துநான்கு மணிநேரத்திற்குள் நிறைவாகவும் முழுமையாகவும் சௌகரியமாகவும் வாழ நினைக்கும்போது உடனடியாக நேரக்கூடிய தோல்விகளைத் தவிர்த்தல் மிகவும் நல்லது.

சின்ன வெற்றியைவிட பெரிய தோல்வியே மேல் எனும் பெருவியாபாரிகளின் தத்துவத்தில் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை. சின்னச் சின்னத் தோல்விகளில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு. பெரிய தோல்வி எங்குமே நம்மை இட்டுச் செல்லாது. ஆனால், கண்டிப்பாகச் சின்ன வெற்றியானது பெரிய வெற்றிக்கு தான் நம்மை இட்டுச் செல்லும்.

ஆகவே, ஒரு நாளில் இருக்கும் கால அளவைக் கணக்கெடுப்போம். உங்களின் நாள் முழுவதும் இடைவெளியே இல்லாது நிரம்பியிருக்கிறது என்கிறீர்களா? எப்படி? நீங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வளவு செலவிடுகிறீர்கள்? சராசரியாக ஏழு மணிநேரம் செலவிடுவீர்களா? உங்களின் தூக்கத்துக்கு ஏழு மணிநேரம் செலவாகிறதா? சரி, நான் தாராளமாகவே இன்னும் இரண்டு மணிநேரத்தைக் கூட்டிக் கொள்கிறேன். இந்தக் கணத்தில், உங்களிடம் மீதியிருக்கும் எட்டு மணிநேரத்துக்கு நீங்கள் கணக்கு காட்டுங்கள் என்று நான் உங்களைக் கேட்கிறேன்!

நேரத்தைச் செலவிடும் உயரிய யுத்தி கைவரப் பெறவேண்டுமானால் செய்யக் கூடியவை என்ன? இதற்கு நான் குறிப்பிட்ட ஓர் உதாரணத்தை முன்னிருத்தித் தான் பேசவேண்டியிருக்கிறது. உண்மையில் சராசரி ஆள் என்ற ஒருவர் இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அவனளவில் சிறப்பானவன். நாம் பார்க்கப் போவது ஒரே ஒரு சராசரி உதாரணம் தான். ஆனாலும், அது ஒன்றே போதுமானதாக இருக்கிறது. பத்து முதல் ஆறு மணி வரை அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெருநகரவாசியை எடுத்துக் கொள்வோம். காலையும் மாலையும் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையேயான இவர் பயணத்திற்கு பதினைந்து நிமிடம் செலவிடுகிறார். இதை விட அதிகநேரம் வேலையிலும் பயணத்திலும் செலவிடுவோரும் இருக்கிறார்கள். அதே போல குறைவாகச் செலவிடுவோரும் இருக்கிறார்கள். ஆனால், நாம் சராசரியைக் குறித்துப் பேசுகிறோம்.

இருத்தலின் பொருளாதாரக் கோணம் இப்போது நமக்குத் தேவையில்லாத ஒன்று. நம்மைப் பொறுத்தவரை வாரத்துக்கு ஓராயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு குமாஸ்தாவும் ஒரு கோடிஸ்வரன் அளவிற்கு சௌகரியமாகவே வாழ்கிறார்.

இப்போது இந்த உதாரண மனிதன் செய்யும் ஒரே பெரிய தவறு என்ன என்று பார்த்தோமானால், அவன் தன் வேலையை வெறுப்பதில்லை. ஆனால், அதேசமயம் ஈடுபாட்டுடன் செய்வதில்லை. பெரும்பாலான நேரங்களில் ஒருவருக்கு (மேற்கூறிய உதாரண மனிதர்) தன் பணியிலோ வியாபாரத்திலோ ஆழ்ந்த ஈடுபாடு இருக்காது. அவருக்கு வெறுப்பு ஏற்படவில்லை என்பதே சின்ன ஓர் ஆறுதல். வேலையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாமதமாகத் துவங்கி அரைமனதோடு இயங்குவார். மிகவும் மகிழ்ச்சியுடன் சீக்கிரமே வேலை நாளை முடித்துக் கிளம்புவார். வேலையில் இருக்கும்போது அவரின் இயங்கு சக்தி அதன் முழுத்திறனோடு இருப்பது அரிதுதான். (என்னிடம் கோபம் கொள்ளும் வாசகர்கள் என்னைக் குற்றம் சாட்டுவார்கள். ஆனாலும், இந்த நம்பிக்கையை நான் மாற்றிக்கொள்ளப் போவதில்லை).

இருந்தும் இந்த மனிதர் தொடர்ந்து பத்திலிருந்து ஆறு வரையிலான நேரத்தைத்தான் தனது முக்கிய 'நாள்' எனக் கொள்கிறார். அதற்குப் பிறகும் அதற்கு முன்பும் இருக்கும் காலத்தை முன்னுரையாகவும் பின்னுரையாகவும் கொள்கிறார். இவ்வகையான மனோபாவம் அவர் அறியாமல் அனிச்சையாகவே அவரில் இருக்கிறது. அந்த மணித்தியாலங்களில் அவருடைய ஈடுபாடு சுத்தமாக அழிந்து போய்விடுகிறது. அதன் காரணமாக, அந்த நேரத்தை அவர் வீணாக்கா விட்டாலும் அவற்றைக் கவனத்தில் கொள்வதில்லை. மணித்துளிகளை எண்ணுவதுமில்லை. அதை வெறும் விளிம்பாக எண்ணிக் கொள்கிறார்.

"ஏதோ ஓடுது சார். இன்னிக்குப் பாடு ஓடினாச் சரின்னு இருக்கு வேற என்ன", என்று நாட்களை வெறுமே 'ஓட்டும்' இந்த மனோபாவாம் மிகவும் அபத்தமானதும் ஆரோக்கியமற்றதுமாகும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கும் அதற்குள் அடங்கியிருக்கும் சில நடவடிக்கைகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒருவர் தன் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியை இப்படியே கடத்தினால் 'வாழ' முடியுமா? நிச்சயம் முடியாது. வெறுமனே 'இருக்க'த் தான் முடியும்.

நமது உதாரண மனிதர் முழுமையாக வாழ நினைக்கிறார். அப்படி நினைக்கும் அவர் முதலில் அவரின் ஒரு நாளுக்குள் இன்னொரு நாளைத் திட்டமிட வேண்டும். இதுதான் முக்கிய சூட்சமம். ஒரு டப்பாவுக்குள் இருக்கும் சீனப்பெட்டியைப் போல. நாளுக்குள் இருக்கும் இந்த நாள் மாலை ஆறு மணிக்குத் துவங்கி அடுத்த நாள் காலை பத்து மணிவரைக்கும் நீளும். அந்த நேரத்தில் உடலையும் ஆன்மாவையும் நட்புவட்டத்தையும் வளர்ப்பதைத் தவிர பதினாறு மணிநேரம் இருக்கும் இந்த ஒரு நாளில் அந்த ஒவ்வொரு மணிநேரத்திலும் அவருக்குச் செய்ய ஒன்றுமே இல்லை. அப்போது அவர் மிகவும் வேலையற்றிருக்கிறார். ஆகவே, சம்பளம் இல்லை. லௌகீகங்களில் ஈடுபடாமல் சுயவேலையில் இருக்கும் ஒருவரைப் போல நிம்மதியாக இருக்கிறார். இது தான் அவரின் மனோபாவம். இந்த மனோபாவம் மிகவும் முக்கியமானதும் கூட. பெரிய அளவில் பதிவுவரி செலுத்தி வாங்கும் அவரின் பெருநிலத்தின் பெருமானத்தைவிடவும். அந்த மனிதரின் வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றி இந்த மனோபாவத்தில் தான் அடங்குகிறது.

என்ன? அந்த பதினாறு மணிநேரத்தில் செலவிடும் நேரமும் சக்தியும் வேலையின் எட்டு மணிநேரத்தின் வேலைத்தரத்தைக் குறைக்கும் என்கிறீர்களா? அப்படியில்லை. மாறாக, வேலைத்தரத்தைக் கூட்டத்தான் உதவும். கால்கைகளைப் போலில்லை மூளை. மூளையின் செயற்திறன் தொடர்ந்து செயலாற்றும் ஆற்றல் பெற்றது என்பதை நீங்கள் முதலில் நம்ப வேண்டியது. மூளைக்குத் தேவையானதெல்லாம் மாற்றம் தான். தூக்கம் தவிர வேறு ஓய்வு அதற்கு இல்லை.

காலையில் படுக்கையை விட்டு எழுந்து கொண்டதிலிருந்து கையில் உங்களுக்கு உங்களுக்கே உரியதான பதினாறு மணிநேரத்தை எப்படிச் சரியாகச் செலவிடலாம் என்று ஆராய்வோம். நீங்கள் செய்து கொண்டிருப்பதையும் நீங்கள் செய்ய வேண்டியதையும் மட்டுமே நான் இப்போது சொல்லப் போகிறேன். வாழ்விடங்களை உருவாக்கும் நோக்கில் அழிக்கப் பட்ட மரங்களை மறுநடவு செய்யும் விதத்தில் நேரத்தை எப்படி ஆங்காங்கே நடுவது என்பதைக் குறித்து நான், அப்புறம்தான் பேசபோகிறேன்.

9.10க்கு வீட்டை விட்டுக் கிளம்பும் முன்னர் நமது உதாரண மனிதர் ஒவ்வொரு நொடியையும் வீணாக்குகிறார் என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். பெரும்பான்மையான வீடுகளின் இம்மனிதர் 9.00 மணிக்கு எழுந்து 9.10க்குள் தயாராகி அவசரமாகப் பசியாறி ஓடுகிறார். ஆனால், வாயிற் கதவை விட்டு வெளியேறிய நொடியிலிருந்து அவரின் மூளை கிட்டத்தட்ட செயலிழந்து போகிறது. அது 'கோமா'வில் விழுகிறது.

ரயில் நிலையத்தில் ரயிலுக்குக் காத்திருக்கும் போது கொஞ்சம் நேரம் வீணாகிறது. இப்படித் தளமேடையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடியே நூற்றுக்கணக்கான நாட்கள் பணத்தால் ஈடுகட்ட முடியாத நேரத்தை வீணாக்குகிறார். ரயில்வே போக்குவரத்துத் துறை எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் கவனித்துக் கொண்டிருக்கிறது. உதாரண மனிதர் நூற்றாயிரக்கணக்கான மணிநேரங்களை கொஞ்சமும் யோசிக்காமல் வீணடிக்கிறார். உண்மையில் இதைத் தடுக்க அவருக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் தோன்றவில்லை.

அவர் கையில் இருக்கும் நேரம் ஒரு முழு ஐநூறு ரூபாய்த் தாள் என்று வைத்துக் கொள்வோம். அதைச் சில்லறையாக மாற்றிக் கொள்வதுதான் அவருடைய முதல் வேலை. அப்படி சில்லறையாக மாற்றும்போது அவர் நிறைய சில்லறைகளைச் சிந்தி வீணாக்குகிறார்.

சில்லறை கொடுப்பவர் உதாரண மனிதரிடம், "உங்களுக்கு சில்லறை கொடுக்கிறேன். ஆனால், மூன்று சதவீதம் கட்டணம் வசூலிப்போம்", என்று சொன்னால் நமது உதாரண மனிதன் ஆச்சரியப் படுவானோ? இருக்கலாம். ஆனால், இதைத் தான் ரயில்வே போக்குவரத்துத் துறை இவனிடம் செய்கிறது. அதுவும் தினமும் இரண்டு முறை.

மிகச் சில்லறை விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன் என்கிறீர்களா? ஆமாம். ஆனால், இது எப்படி முக்கியத்துவம் பெறுகிறது என்று நான் பிறகு சொல்வேன்.

இப்போது நீங்கள் நாளிதழை வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறத் தயாரா?

மூலம் : ஆர்னால்ட் பென்னெட்
தமிழில் : ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர் அவர்களின் இதர படைப்புகள்



உற்சாகம் என்னும் ஊக்கி

வெற்றிகரமான மனிதர்களின் செயல்களைக் கவனித்துப் பார்த்தால் ஒரு முக்கிய விஷயம் புலப்படும். அவர்களது திடமான குறிக்கோளை செயல்களாக மாற்றுவது ஒரு ஊக்கியாக இருக்கும்.

அந்த ஊக்கிதான் உற்சாகம். உற்சாகமே அவர்களது உயிர்.

கடவுள் மயம்

உற்சாகம் என்பதை ஆங்கிலத்தில் ENTHUSIASM என்கிறோம்.

ENTHUSIASM என்ற ஆங்கில வார்த்தை ENTHEOS என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து பிறந்தது. இதன் பொருள் கடவுள் உன்னுடன் இருக்கிறார் அல்லது 'கடவுள் மயம்' என்பதாகும்.

ஆகவே 'உற்சாகத்துடன் இயங்குகிறார்கள் வெற்றியாளர்கள்' என்று சொல்லும்போது கடவுளே அவர்களுக்கு தைரியம், செயல்படும் உத்தி, ஞானம் இன்னும் அனைத்தையும் தருகிறார் என்று ஆகிறது.

சாதனையாளர்கள் அனைவரையும் இந்த உற்சாகம் 'கள்வெறி' போன்ற போதையைத் தந்து அவர்களைக் குறிக்கோளை நோக்கி இட்டுச் செல்கிறது.

'உற்சாகத்தை நினையுங்கள், உற்சாகம் பற்றிப் பேசுங்கள், உற்சாகமாகச் செயல்படுங்கள்'. நீங்கள் உற்சாக புருஷராகவே ஆகிவிடுவீர்கள்.

வாழ்வில் ஒரு புதிய மலர்ச்சி, அழுத்தமான ஈடுபாடு, மகத்தான அர்த்தம் தென்படும்.

நீங்கள் விரும்பினால் சோம்பலை நினைத்து, பேசி, சோம்பேறியாகி துயரத்துடன் ஆழ் இருளில் இருக்கவும் இருக்கலாம். இல்லை, அதே முறையில் ஊக்கம் உற்சாகம் பெற்று மகிழ்ச்சி ஊற்று ததும்பி வழியும் புது வாழ்வையும் அமைத்துக் கொள்ளலாம்

நார்மன் வின்சென்ட் பீல் டிக்கன்ஸின் வெற்றி

பிரபல ஆங்கில நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸ் தனது கதையில் வரும் நாயக, நாயகியர் இதர கதாபாத்திரங்கள் அனைவரும் தம்மைப் பிடித்து ஆட்டுவதாகவும் விரட்டுவதாகவும் கூறுவார். அவர்களைப் பேப்பரில் உரிய முறையில் ‘இறக்கி வைக்கும் வரை’ அந்தப் பாத்திரங்கள் அவரை விட மாட்டார்களாம். ஒருமுறை, ஒரு மாதம் வரை தன் அறையிலே அடைப்படுக் கிடந்து பிறகு வெளியே வந்தபோது கொலையாளி போலத் தெரிந்தாராம். அவரது பாத்திரங்கள் அவரை அப்படி ஆக்கிவிட்டிருந்தன!

உலகில் சரித்திர முக்கியத்துவம் பெறும் பெரிய தருணங்கள் உற்சாகத்தின் வெற்றியையே அறிவிக்கிறது என்கிறார் எமர்ஸன்.

நெப்போலியன் உற்சாகம்

ஒரு வருடத்தில் முடிக்கும் போரை நெப்போலியன் இரண்டே வாரத்தில் முடித்துவிட்டான் என்றால் அதன் மூல காரணம் அவனது உற்சாகம்தான்!

"பிரெஞ்சு வீரர்கள் ஆண்மையாளர்கள் அல்ல; அவர்கள் பறந்தோடிவிடுவர்" என்றனர் ஆஸ்திரியர்கள்.

இத்தாலிப் படையெடுப்பில் முதல் பதினைந்தே நாட்களில் ஆறு பெரும் வெற்றிகளை அடைந்து 1500 பேரை சிறைக் கைதிகளாக்கி மாபெரும் வெற்றி பெற்றான் அவன்.

நெப்போலியனைப் பார்த்த ஆஸ்திரிய ஜெனரல் வியந்து கூவினான். "இந்த இளம் தலைவனுக்குப் போர்க்கலை என்றால் என்னவென்றே தெரியாது" என்று.

ஆனாலும் அந்தக் குள்ளமான தலைவனைப் பின்பற்றி உற்சாகத்துடன் நடைபோட்ட வீரருக்குத் தோல்வியும் தெரியவில்லை; இருளடைந்த எதிர்காலமும் இல்லை!

மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியம்

மைக்கேல் ஏஞ்சலோ ஓவியம் வரைவதற்கு முன்னால் 12 வருட காலம் உடலியலைப் (ANATOMY) படித்தார். இதுவே அவரது ஓவியப் படைப்பை உயிருள்ளதாக்கியது. உடல் எலும்பு அமைப்பு, உடல் தசை, சதை, தோல் எனப் படிப்படியாக தனது படைப்புகளை உருவாக்க அவரது அடிப்படை உற்சாகமே காரணம். தனது வண்ணங்களைத் தாமே கலப்பது அவர் வழக்கம். வேலையாட்களையோ, தமது மாணாக்கர்களையோ வண்ணங்களைத் தொடக்கூட அவர் அனுமதிக்கவில்லை.

மொசார்ட்டிடம் கேட்ட கேள்வி

இசை அமைக்க விரும்பிய ஒரு 12 வயதுச் சிறுவன், மேதை மொசார்ட்டை அணுகி, "ஐயா! இசை அமைக்க விரும்புகிறேன். எப்படி ஆரம்பிப்பது?" என்று கேட்டான்.

"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்" என்றார் மொசார்ட்.

"ஆனால் நீங்கள் என்னைவிட இளம் வயதில் ஆரம்பித்து விட்டீர்களே?" என்றான் அந்தச் சிறுவன்.

"ஆம், உண்மைதான்! ஆனால் உன்னைப்போல் யாரையும் அணுகி எப்படி ஆரம்பிப்பது என்று நான் கேட்கவில்லையே. இசை அமைக்க ஊக்கமும், உற்சாகமும் வந்தவுடன் அமைக்க வேண்டியதுதான்" என்றார் மொசார்ட்.

இளமை உற்சாகம்

இளமையில் உற்சாகத் துள்ளல் அதிகம் இருக்கும். இளம் வயதிலேயே அலெக்ஸாண்டர் உலகை வென்றான். நெப்போலியன் 25-ம் வயதிலேயே இத்தாலியை வெற்றி கொண்டான். பைரன் 37 வயதிலேயே புகழேணியில் இறந்தார். பாரதியார் 39 வயதில் அருட்கவியைக் கொட்டி தேசத்தைத் தட்டி எழுப்பி புகழுடம்பு எய்தினார். 39 வருடங்கள் வாழ்ந்தே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த பாரதத்தை ஆன்மீக விழிப்படையச் செய்தார் சுவாமி விவேகானந்தர். ஆறு மதங்களை நிறுவி இந்து மதத்தை புனருத்தாரணம் செய்ய பாரதமெங்கும் கால்நடையாகவே சென்று நான்கு இடங்களில் மடங்களை நிறுவி உலகின் குருவாக - ஜகத் குருவாக 33 வயதிலேயே திகழ்ந்தார் ஜகத்குரு சங்கரர்.

முதுமையிலும் உற்சாகம்

இளமையில் உற்சாகம் இயல்பே என்றால், முதுமையிலும் விடாப்பிடியாக அதைப் பிடித்தால் எப்படி இருக்கும்? வயதான ஹோமர் படைத்த உலக மகா காவியம் தான் ஓடிஸி.

'கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு' என்ற புத்தகத்தை டாக்டர் ஜான்சன் எழுதும்போது அவருக்கு வயது 71.

ராபின்சன் குரூஸோ எனும் உலகப் புகழ்பெற்ற நாவலை வெளியிடும்போது (DEFOE) டீபோவின் வயது 58. தனது "பிரின்சிபியா" என்ற நூலுக்கு விளக்கவுரை அளித்தார் நியூட்டன் தனது 83-ம் வயதில்.

ஆங்கில அகராதியைத் தொகுத்த வெப்ஸ்டர் ஐம்பது வயதிற்குப் பின்னர் 17 மொழிகளைக் கற்றார்.

பிராங்க் பெட்கரின் வெற்றி

பிராங்க் பெட்கர் உலகின் புகழ் பெற்ற சேல்ஸ்மேன் நம்பர் ஒன். அவர் ஆரம்பத்தில் பேஸ்பால் விளையாடுபவராக இருந்தார். எல்லாத் திறமைகளும் இருந்தும் கூட அவரை டீமிலிருந்து விலக்கி விட்டனர் - அவரிடம் உற்சாகம் இல்லை என்ற ஒரு காரணத்தால்.

அதே துறையில் வல்லுநரான ஒருவர் அவரிடம் அக்கறை கொண்டு, "பிராங்க் உன்னிடம் உற்சாகம் வேண்டும். வெற்றிக்கு அதுவே அடிப்படைத் தேவை" என்றார்.

"நான் என்ன செய்வது? அது என்னிடம் இல்லையே! கடையிலா வாங்க முடியும் அதை? என்னிடம் இல்லை என்றால் அது இல்லைதானே?" என்றார் பிராங்க்.

"அப்படி இல்லை பிராங்க், உற்சாகமுள்ளவனாக உன்னை ஆக்கிக் கொள். உற்சாகமுடன் விளையாடு. உற்சாகமுடன் இருப்பதுபோல் நட, விளையாடு. உற்சாகம் தானாக உன்னை வந்து அடையும். உறுதியான முனைப்புடன், உற்சாகத்துடன் நீ விளையாடினால் உனது இயல்பான திறமைகள் உன்னை சிகரத்தில் ஏற்றிவிடும்" என்றார் அவர்.

அப்படியே நடந்தது. பேஸ்பாலில் மட்டும் வெற்றி பெறவில்லை பிராங்க். பின்னர் சேல்ஸ்மேனாக ஆகி, உலகின் நம்பர் ஒன் சேல்ஸ்மேனாக உயர்ந்தார்.

உலகின் தலைசிறந்த சேல்ஸ்மேனாகத் தான் ஆனதற்கான காரணம் உற்சாகம் என்கிறார் பிராங்க் பெட்கர்.

"HOW I RAISED MYSELF FROM FAILURE TO SUCCESS IN SELLING" என்ற அவரது புத்தகம் படிப்பதற்குரியது.

இருப்பது போல

"இருப்பது போல" (AS IF) என்னும் இயற்கை விதி ஒன்று உண்டு.

உங்களிடம் இல்லாவிட்டாலும் கூட தேவையான குணம் இருப்பது போல நீங்கள் நடக்க ஆரம்பித்தால் நீங்கள் விரும்பும் குணம் தாமாக உங்களை வந்தடையும்.

ஜலதோஷம் போல எளிதில் தொற்றிக் கொள்ளக் கூடியது உற்சாகம். ஆனால் ஜலதோஷம் போலக் கெடுதலைச் செய்யாமல் நல்லதைச் செய்கிறது என்கிறார் நார்மன் வின்சென்ட் பீல்.

உற்சாகம் இருப்பது போலச் செயல்படுங்கள். தானே உற்சாகம் வந்து சேரும்.

தோரோ காட்டும் வழி

அமெரிக்கா தத்துவஞானி தோரோ காலை துயிலெழும் போது படுக்கையில் ஒரு 5 நிமிடம் இருந்தவாறே தன்னிடம் உள்ள நல்ல அம்சங்களை எல்லாம் எண்ணிப் பார்ப்பார். ஆரோக்கியமான உடல், விழிப்பான மனம், வேலையில் ஆர்வம், பிரகாசமான எதிர்காலம் தன்னை நம்பி உள்ள மக்கள் இவற்றை எண்ணிப் பார்த்து இந்த "நல்ல செய்திகளை" முதலில் மனதில் போட்டு எழுந்திருப்பார். இந்த உத்தியைக் கடைப்பிடிப்பதால் வெளி உலகம் தரும் கெட்ட செய்திகள் அவரைப் பாதிக்காத அளவில் அவரது மனம் பண்பட்டது. ஆனால், நாளடைவில் நல்ல செய்திகள் மட்டுமே நிறைந்த நாட்களே அவருக்கு உருவாகத் தொடங்கின.

கெட்டவற்றைத் தூக்கி எறியுங்கள்

உற்சாகம் எப்போதும் தவழ ஒரு சிறிய உத்தி உண்டு. மனசாளரத்தைத் திறந்து கெட்ட எண்ணங்களை, கெட்ட செய்திகளை, கெட்டவை அனைத்தையும் ஒவ்வொன்றாகத் தூக்கி எறிவதுதான் அது.

சஞ்சலம் மிக்க சம்பவங்கள், தூக்கி எறிந்து பேசப்பட்ட வினாடிகள், துயரமான வார்த்தைகள், மனதை நோகச் செய்யும் செயல்கள், சிந்தனைகள் இவற்றால் நல்ல "மூடை" இழந்து எல்லாமே பாழாகிவிட்டது போல வரும் உணர்ச்சியை மாற்ற வல்லது இந்த உத்தி.

அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்தோ, படுத்தோ அன்று நடந்த ஒவ்வொரு உற்சாகமற்ற, வெறுப்பூட்டும் செயலை, சிந்தனையை "சம்பவத்தை மனதிலிருந்து எடுத்து, வெளியே போடுவது போல" பாவனையுடன் நினையுங்கள்.

அந்தச் செயல்களுக்கும் உங்களுக்கும் இனி சம்பந்தம் இல்லை. இப்போது வெற்றிடமாக இருக்கும் உங்கள் மனதில் உங்களுக்குப் பிடித்த வெற்றிகரமான, உற்சாகமாக செய்திகளை, சிந்தனைகளை நிரப்பி "நாளை நமதே", "நாளை வெற்றி நிச்சயம்" என்ற உணர்வுடன் உறங்கச் செல்லுங்கள்.

இந்த உத்தி தரும் அமைதியும், ஆனந்தமும் அனுபவித்தால் மட்டுமே புரியும்.

உற்சாகம் என்ற எரிபொருள், ராக்கெட்டான உங்களை வெற்றி விண்வெளியில் ஏற்றிவிடும்.

சிரி: உலகம் உன்னுடன் சிரிக்கும்!

உற்சாகமே உயிர் மூச்சாக இருக்கும்போது, இயல்பாகவே மகிழ்ச்சியும், மலர்ந்த முகமும் கூடவே இருக்கும். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் உள்ள மலர்ந்த முகத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள்? அழுமூஞ்சியாக, உலத்தின் இறுதியை அறிவிக்கும் சாகுருவியாக இருப்பவனை யார்தான் விரும்புவார்கள்?

"அழு நீ தனியாக அழுவாய்! சிரி உலகமே உன்னுடன் சேர்ந்து சிரிக்கும்" என்பது முதுமொழி

லிங்கனின் வழி!

"சிரிக்க மட்டும் தெரியாதிருந்தால் எப்பொழுதோ நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்" என்றார் மகாத்மா காந்தி.

அவருக்கு முன்னதாகவே இதே வார்த்தைகளை "IF IT WERE NOT FOR THIS, I SHOULD DIE" என்று சிரிப்பைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் சொன்னார்.

சொன்னதோடு நிற்கவில்லை, தம் வாழ்க்கை நெடுக தேசத்தைக் கஷ்டமான பாதையிலிருந்து விடுவிக்க நடத்திய பெரும் போராட்டமான நாட்களில் சிரிக்க வைக்கும் துணுக்குகளைப் பேசினார். இருள் சூழ்ந்த நேரங்களில் நகைச்சுவை மூலம் ஒளி ஏற்றினார். தனது மேஜையின் ஒரு மூலையில் புதிதாக வெளியிடப்பட்ட ஜோக் புத்தகம் ஒன்றை எப்போதும் அவர் வைத்திருந்தார். கோபம் வந்தாலோ, வருத்தம், துயரம் ஏற்பட்டாலோ மனச்சோர்வு ஏற்பட்டாலோ அதை எடுத்துப் படித்து வாய்விட்டுச் சிரிப்பார். பிறகு எப்போதும் போல சிரித்த முகத்துடன் வேலையை ஆரம்பிப்பார்.

கவலை அற்ற மனம்!

உலகப் பெரும் கவிஞன் ஷேக்ஸ்பியர் கூறினான் "LIGHT HEART LIVES LONG" என்று! நமது அரச சபைகளில் அரசனின் மனோபாவத்தை சமநிலைபடுத்தவென்றே விகடகவிகள் இருந்துள்ளார்கள். அரசனின் கோபத்தை மாற்றி அவனது மனச்சோர்வை போக்கி சரியான அணுகுமுறை மூலம் பிரச்சினைக்குத் தீர்வைத் தரும் பாங்கினில் அவனது மூளையைக் கூர்மையாக வைக்க இவர்கள் பெரும் உதவியாக இருந்தார்கள். கோபம் நம்மைச் சிதறடிக்கிறது. மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஒரு முனைப்படுத்துகிறது. கவலை நமது மூளையில் உள்ள செல்களை அழிக்கிறது என விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது.

வேலையில் பாட்டு! வேலையில் பாடிக் கொண்டே இருப்பவனை தாமஸ் கார்லைல் பாராட்டுகிறார்.

"கொடுக்கப்பட்ட நேரத்தில் அவன் அதிகமாக வேலையைச் செய்வான், நேர்த்தியாகச் செய்வான், நீடித்து நிலைக்கும்படி செய்வான் என்கிறார் அவர்.

"கவலைப்படுதலே கரு நரகம்மா" என்கிறார் பாரதியார்.

ஒரு நிறுவனத்தில் நல்ல அதிகாரி எப்படி இருப்பார்?

தனது மலர்ந்த மகிழ்ச்சியான முகத்துடன் எங்கு சென்றாலும் கவலையை விரட்டி மலர்ச்சி ஊட்டுவார். மன இறுக்கத்தை, சோர்வை, கவலையைப் போக்கும் டானிக்காக இருக்கும் அவரது வருகை. அவருடன் பேசுவதே கவலை போக்கும் மருந்தாக தனி ஒரு அனுபவமாக இருக்கும்.

சிட்னி ஸ்மித்தின் யோசனை!

சிட்னி ஸ்மித் ஒரு சிறிய யோசனையைக் கூறுகிறார். "ஒரு நாளைக்கு ஒரு மனிதரையாவது மகிழ்ச்சி அடையச் செய்வது என்ற கொள்கையைக் கடைப்பிடியுங்கள்" என்பதே அது.

"பத்து வருடங்களில் 3650 பேரை நீங்கள் மகிழ்ச்சியுறச் செய்திருப்பீர்கள். அதாவது ஒரு சிறிய டவுனையே உங்கள் மகிழ்ச்சி-நிதி மூலம் ஒளியுறச் செய்திருப்பீர்கள்" என்கிறார் அவர்.

உலகின் சிறந்த சிந்தனை!

உலகின் மிகச் சிறந்த சிந்தனைக்கு 500 டாலர்கள் பரிசு அளிப்பதாக ட்வைட் எல்.மூடி என்பவர் அறிவித்தார். பரிசு பெற்ற சிந்தனை வாக்கியம் எது தெரியுமா?

"முட்களை ரோஜாக்களுடன் படைத்ததற்காகக் கடவுள் மீது மனிதன் பொருமுகிறான். ரோஜாக்களை முள்ளுடன் படைத்திருக்கிறான் என்பதால் அவனுக்கு நன்றி செலுத்துவதே சரியாக இருக்கும், இல்லையா?" என்பதே அது!

மகிழ்ச்சி என்னும் மொசைக்!

மகிழ்ச்சி பல வண்ணச் சிறு துண்டுக்கற்களால் மொசைக் போல ஆன ஒன்றாகும்.சின்னச் சின்ன அன்பான வார்த்தைகள், சிறுசிறு நல்ல செயல்கள், ஆதரவு தரும் வார்த்தை, இரக்கமூட்டும் செயல், உதவும் மனப்பான்மை, மற்றவர் மனதைப் புண்படுத்தாமை, சுயநலமின்மை, மற்றவரின் அந்தரங்கமான வாழ்க்கைப் பகுதிகளைக் குத்திக் காட்டாதிருப்பது, மற்றவரின் பலவீனங்கள் மீது இரக்கம், பரிவான பார்வை இவையே இரவைத் தொடர்ந்து வரும் பகல் போல் வாழ்க்கைத் துயரத்தை ஓட்டி மகிழ்ச்சியைத் தரும் சிறுசிறு செயல்களாகும்.

கவலையை வளர்க்காதே!

குழந்தையை வளர்ப்பதுபோலக் கவலையை வளர்க்கக் கூடாது. தொந்தரவுகளை மனதில் பத்திரமாகப் பாதுகாத்து வருவதன் மூலம் அவை பெரிதாக வளர்ந்து விடுகின்றன. (TROUBLES GROW LARGER BY NURSING) மகிழ்ச்சியான மனோபாவம் மூலம் அதை அகற்றிவிட்டால் வாழ்க்கை மூலம் இன்பம் தான்!

புன்னகைக்கு ஈடேது?

நல்ல ஒரு சிரிப்பை எனக்குத் தாருங்கள் என்கிறார் சர் வால்டர் ஸ்காட். மலர்ந்த முகத்தில் தோன்றும் புன்னகைக்கு ஈடு இணை இல்லை. இதை அடிஸன் (ADDISON) என்னும் பெருமானார் அழகாகக் கூறுகிறார்: "பூக்களுக்குச் சூரிய ஒளி எப்படியோ, அப்படியே மனித குலத்திற்குப் புன்சிரிப்பாகும். புன்னகைப் பூக்கள் நிச்சயமாக சிறியவைதாம். ஆனால், வாழ்க்கைப் பாதை நெடுக அங்குமிங்குமாக சிதறிக் கிடந்தவாறே அவை பரப்பும் நறுமணத்திற்கு ஈடு இணை இல்லை".

அனைவரது அந்தரங்கத்தையும் தொடும் உன்னதம் புன்னகைக்கு மட்டுமே உண்டு. மலர்ச்சிப் புன்னகை உங்கள் இடரை விரட்டும், யாரோ சொல்லவில்லை இதை, உலகின் தலை சிறந்த சிந்தனைப் பெட்டகம்-வான் புகழ் வள்ளுவரே கூறி இருக்கிறார்.  "இடுக்கண் வருங்கால் நகுக" என்று "இடரை வெல்ல அதை ஒப்புவது வேறொன்றுமில்லை" என்பது அவர் வாக்கு. இந்த மகிழ்ச்சி மனப்பான்மையை வளர்ப்பதே வெற்றி பெற விரும்புவோர் செய்ய வேண்டிய அவசியக் கடமைகளில் ஒன்று.

கதேயின் கீதை!

இந்த மனப்பான்மையை வளர்ப்பது எப்படி?

வழி சொல்கிறான் உலகப்பெரும் கவிஞன் கதே. "ஒரு மனிதன் நிச்சயம் ஒரு நாளில் செய்ய வேண்டியது இதுதான்!

குறைந்தபட்சம் ஒரு சின்னப் பாடலையாவது கேளுங்கள். ஒரு நல்ல கவிதையையாவது படியுங்கள். அழகிய ஒரு ஓவியத்தையாவது பாருங்கள். முடியுமானால், அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒரு சில வார்த்தைகளைப் பேசுங்கள்"  உற்சாகம், மகிழ்ச்சி, மலர்ச்சி இவையே வெற்றி பெறத் துடிப்பவர் அடைய வேண்டிய மூன்றாவது குணாதிசயமாகும்.

மகிழ்ச்சியான மனிதன் இந்த உலகில் ஒரு சிறிய இடத்தையாவது மற்றவர்கள் வாழ்வதற்காக சுமையை நீக்கி, பிரகாசமாக்கி, இதமாக்குகிறான். காலையில் அவனைப் பார்ப்பதே விஷயங்களை லேசாக்கி அன்றைய போராட்டங்களை எளிதில் எதிர்கொள்ள உத்வேக மூட்டுவதாகும்.

வேறுபடுவதைக் குறை :

நம் வாழ்நாளில் வாழ்க்கை முழுவதும் ஆயிரக்கணக்கானோரை சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர்களிடம் நம் காரியத்தைச் சதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் முக்கியமாக நாம் நினைவிலிறுத்த வேண்டிய ஒன்று :

"எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக மற்றவரிடமிருந்து வேறுபடுகிறோமோ, எவ்வளவுக்கெவ்வளவு குறைவாகப் பூசலிடுகிறோமோ, உரசுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. மிகமிகக் குறைவாக இவற்றை ஆக்க ஆக்க வெற்றியின் விகிதாச்சாரம் அதிகரித்துக் கொண்டே போகும்".

எஃகு மன்னரின் அறிவுரை :

எஃகு மன்னன் என்று புகழ் பெற்ற ஆண்ட்ரூ கார்னீகி தனது வெற்றிக்கான காரணத்தைக் குறிப்பிடும்போது இனிமையான ஆளுமைக்கே முதலிடத்தைக் கொடுக்கிறார். இதை வைத்தே மனிதர்களை நிர்வகிக்கும் முறையை அவர் நன்றாகத் தெரிந்திருந்து வெற்றி பெற்றார். 'மூளைக்குப் பதிலாக இனிமையான ஆளுமையே போதும்' என்ற அவரது கூற்றே அவர் எவ்வளவு முக்கியத்துவத்தை இதற்குத் தந்துள்ளார் என்பதைப் புலப்படுத்தும்.

மின்சாரம் போன்ற சக்தி ஆளுமை :

இனிமையான ஆளுமை உள்ளவர்கள் ஒரு இடத்திற்கு வந்தாலே அந்த இடம் மின்சாரம் வந்தாற்போல ஒளிவெள்ளம் பெறும் மற்றவர்களைத் தன்வயப்படுத்துவதில் இவர்களுக்கு ஈடு இணை இல்லை.

சார்லஸ் டிக்கன்ஸ் ஒரு அறைக்குள் நுழைந்தார் என்றால் கணகணப்பூட்டும் அடுப்பைக் கிளறுவதன் மூலம் குளிரைப் போக்க வரும் இதமான வெப்பம் வருவது போல இருக்கும் என்கிறார் நண்பர் ஒருவர்.

பிரபல கவிஞன் கதே, ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தாரென்றால் கையிலுள்ள கத்தி, ஃபோர்க், உணவை அப்படியே வைத்துவிட்டு வைத்த விழி மாறாமல் அவரையே அனைவரும் பார்த்திருப்பார்களாம். அவ்வளவு இனிய ஆளுமை அவருக்கு.

நெப்போலியன் மனைவி ஜோசஃபைனின் ஆளுமைக்கு அடிமை ஆகாதவரே இல்லை. பிரான்ஸ் நாட்டில் மட்டுமல்ல, நெப்போலியன் வென்ற நாடுகளில் உள்ளவர்கள் எல்லாம் கூட ஜோசபைன் வசமானார்கள்! தனது இனிய ஆளுமையின் வெற்றியின் ரகசியத்தை அவளே ஒரு முறை கூறிவிட்டாள். "எனது விருப்பம் என்ற வார்த்தைகள் என் வாயிலிருந்து ஒரே ஒருமுறை தான் வரும், அது எப்போதென்றால் என்னைச் சூழ்ந்துள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே என்று நான் சொல்லும்போது! அது மனப் பூர்வமாக நான் கூறும் உண்மைதான்!". இனிமையான ஆளுமை உள்ளவர்களைச் சூழ்ந்துள்ளவர்கள் மகிழ்ச்சிப் பரவசத்தில் திளைப்பவர்களே.

புற அழகு அழகல்ல :

இரண்டு முறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் வெகுஜன கவர்ச்சியாளர், சிறந்த பேச்சாளர், சக்தியும் உற்சாகமும் துள்ளும் மனிதர். அமெரிக்காவையே தன் கவர்ச்சி மூலம் வசப்படுத்தியவர். கவர்ச்சி என்று கூறும்போது புறஅழகை கூறுவதாக எண்ணக்கூடாது.

புற அழகு சிறிது அனைவரையும் கவரவே செய்யும். ஆனால் அக அழகு, உள் அழகு, பலவித நல்ல குணங்களால் விகசித்து மலரும் உள்ளழகு மட்டுமே நிலைத்து நிற்கும் பயனைத் தரும். பொக்கை வாய்க் கிழவரான மகாத்மாவிற்கு உலகமே அடிபணியவில்லையா? உலகிலேயே குள்ளமான படைத் தலைவனான நெப்போலியன் காலில் உலகமே விழவில்லையா?

ஆளுமையின் அடிப்படை :

ஆளுமை என்பது பல நல்ல நடத்தைகளைக் கொண்டிருப்பது. நெப்போலியன் ஹில் இவற்றைப் பட்டியலிட்டுத் தருகிறார்.

1. வெகுஜன கவர்ச்சி : மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் ஆசை அபிலாஷையை நிறைவேற்ற முன்வரும் தன்மை.

2. மனோலயம் : தன் மனத்தை வசப்படுத்துபவனே பிறரை வசப்படுத்த முடியும்.

3. திடக்குறிக்கோள் : தனக்கெனக் கொண்டுள்ள குறிக்கோள்.

4. நல்ல உடை : இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற உடை.

5. உடல் அசைவு, இருக்கை பாவனை : நடை, உடை, பாவனையில் ஒரு தனித்துவம்.

6. குரல் : தொனி, கம்பீரம், ஏற்ற இறக்கம், தெளிவான உணர்ச்சி கொண்ட குரல்வளம்.

7. கொள்கையில் தீவிர பற்று : இது இல்லாமல் யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்.

8. மொழியை இடம் அறிந்து பயன்படுத்தல் : தகுந்த பொருத்தமான சொற்களை இனிய நடையில் பயன்படுத்துதல்.

9. நிதானம் : தன்னம்பிக்கை, தன்னடக்கம் இவற்றுடன் கூடிய நிதானம்.

10. நகைச்சுவை உணர்வு : முக்கியத் தேவையானை இது இல்லாவிடில் வாழ்க்கை தாழ்ந்து கொண்டே இருக்கும்.

11. சுயநலமின்மை : சுயநலமும் இனிய ஆளுமையும் நேர் எதிரானவை, ஒத்துவராதவை.

12. முகபாவம் : அகத்தின் அழகு முகத்திலே! தெளிவான சிந்தனையைக் குறிக்கும் முகபாவம்.

13. ஆக்கப்பூர்வமான சிந்தனை : நல்லதே நடக்கும் என்னும் ஆக்கப்பூர்வமான சிந்தனை.

14. உற்சாகம் : இது இல்லவிடில் மற்றவரை எப்படி உற்சாகப் படுத்தமுடியும்?

15. நல்ல உடல்நலம் : சுவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும். நல்ல உடல்நலமே நினைத்ததை முடிக்க அடிப்படைத் தேவை.

16. கற்பனை வளம் : இனிய ஆளுமைக்கான முக்கிய குணங்களுள் ஒன்று.

17. தந்திரம் : நாசுக்காக பல இடங்களில் நடக்காவிட்டால் வீண் சச்சரவு தோன்றும்.

18. பல்துறை ஞானம் : நாட்டு நடப்புகளை அறிவதோடு, பல துறைகளில் ஆர்வமும், அறிவும், அக்கறையும் கொண்டிருத்தல்.

19. கேட்கும் செவியைக் கொண்டிருப்பது : அனைவர் சொல்வதையும் பொறுமையுடன் கேட்கும் செவி. அதற்கான மனோபக்குவம்.

20. பேச்சுக்கலை : தன் மனதில் உள்ளதை ஆற்றலுடன் சரியாக வெளிப்படுத்தும் பேச்சுத்திறன்.

21. தனிப்பட்ட கவர்ச்சி : கட்டுப்படுத்தப்பட்ட "செக்ஸ்" சக்தி. இயல்பாகப் பிறப்புடன் வரும் குணம் இது ஒன்றுதான். மற்ற அனைத்து குணங்களும் பயிற்சி மூலம் பெற்று விடலாம்.

புற அழகு இல்லாது அக அழகு வளர வளர ஆளுமையின் இனிமையும், கவர்ச்சியும் அதிகரிக்கும்.

அபெல்லஸ் படைத்த ஓவியம் :

கிரேக்க நாட்டைச் சேர்ந்த அபெல்லஸ், எழில் தேவதையை ஓவியமாகத் தீட்டுமுன்னர் கிரீஸ் முழுவது பல வருடங்கள் சுற்றி அலைந்து அழகிய பெண்களை உற்றுக் கவனித்தானாம். அவர்களது எழில், நடை, உடை, பாவனை, சாயல், நளினம் இவற்றைக் கவனித்து, தான் கண்ட சிறப்புகளையெல்லாம் ஒருங்கிணைத்து வீனஸ் தேவதைக்கு உருக்கொடுத்தானாம்!

நாகரீகமுள்ள கிரேக்கப் பெண்களின் பண்பாட்டின் வெளிப்பாடே அவன் படைத்த வீனஸ்ஓவியம் ஆயிற்று அழகுடன் பிறக்கவில்லையே என்ற ஏக்கத்தை விட்டு விட்டு அகஒளியை வளர்க்கும் வழியைப் பார்த்தாலே போதும். அதற்காக ஆடை அணிகலன்கள் வேண்டாம் என்று அர்த்தம் இல்லை. "ஆடைபாதி ஆள்பாதி" என்பது முதுமொழி. குண்டா, ஒல்லியா, உயரமா, குட்டையா, கறுப்பா, சிவப்பா, தன்னிடம் உள்ள சிறப்பு அம்சம் என்ன என்று இவற்றை எல்லாம் கவனித்து, உடையை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அணியத்தக்க ஆடை எது என்பதை நல்ல டெய்லரோ, அழகு நிலையப் பணியாளரோ சுலபமாகக் கூறிவிடுவர்.

நாசம் விளைவிக்கும் நச்சு குணங்கள் :

நல்ல குணங்களைக் கூட்டுவதோடு, தன்னிடமுள்ள எதிர்மறைக் குணங்களைப் பட்டியலிட்டு அவற்றைக் களையவும் வேண்டும். நாசம் விளைவிக்கும் நச்சுக்களாக விளங்கும் இவைகளைப் பட்டியலிட்டுப் பார்க்கலாமா?

பொய் புரட்டு செய்தல், நாணயமின்மை, பேராசை, வெறுப்பு, பொறாமை, கோபம், பயம், பழிவாங்கும் மனப்பான்மை, அடுத்தவரைக் குறை கூறுதல், கிசுகிசுக்களைப் பரப்புவது, தேவையற்ற அதிக உற்சாகம், நழுவும் மனப்பான்மை, எதையும் அளவுக்கு மீறி கூட்டி உரைத்தல், தன் தவறுகளை அடுத்தவர் மீது சுமத்தல், நான் என்ற அகம்பாவம், வறட்டுப் பிடிவாதம், சுயநலம்.உங்களின் நல்ல பண்புகளை உங்கள் நடத்தை மூலம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கணமும் கவனித்து கொண்டே இருக்கிறார்கள். இல்லத்தில் கணவன், மனைவி, குழந்தைகள், தெருவில் அண்டை அயலார், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், இவர்கள் அனைவரும் இடைவிடாது உங்களை எடைபோட்டுக் கொண்டே இருப்பதை மறக்க வேண்டாம்.
ஒவ்வொரு செய்கையும் ஒரு மனிதனின் நிழலின் நீட்டிப்பே.-எமர்ஸன்


ராணிக்கு மூடப்பட்ட கதவு :

விக்டோரியா மகாராணிக்கும் அவரது கணவர் பிரின்ஸ் ஆல்பர்ட்டுக்கும் ஒருமுறை விவாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ராணியாரின் பேச்சினால் மனம் புண்பட்ட ஆல்பர்ட், தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். ஐந்து நிமிடம் கழித்து அறையைத் தட்டும் சத்தம் கேட்டது. "யார் அது?" வினவினார் ஆல்பர்ட். "நாந்தான் மகாராணி வந்திருக்கிறேன்" கதவு திறக்கப் படவில்லை. சற்று நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டினார் விக்டோரியா. "நாந்தான் உங்கள் மனைவி விக்டோரியா வந்திருக்கிறேன்" உடனே கதவைத் திறந்தார் ஆல்பர்ட், சமாதானம் ஏற்பட்டது.

"நான்" என்ற அகம்பாவமும், பெண்மைக்கு ஒவ்வாத சொற்களும் இனிய ஆளுமைக்கு எதிரானவை.

வெப்ஸ்டரின் எளிமை :

வாஷிங்டன் நகரிலிருந்து ஒரு அரசியல்வாதி டேனியல் வெப்ஸ்டரைப் பார்க்க அவரின் இருப்பிடமான மார்ஷ்பீல்டு என்னும் இடத்திற்கு வந்தார். வழியிலே ஒரு நீரோடை. அதைத்தாண்ட அவரால் முடியவில்லை. அருகே கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட ஒரு விவசாயி வேலை செய்வதைப் பார்த்த அவர் "அப்பா, என்னை அக்கரை சேர்த்துவிடு. உனக்கு கொஞ்சம் மதுபானம் தருகிறேன்" என்றார். அந்த விவசாயி அரசியல்வாதியைத் தன் தோள்மீது தூக்கி வைத்துக் கொண்டு அனயாசமாக அக்கரை வந்தார். வெகுமதியாகத் தரப்பட்ட மதுபானத்தையும் வாங்கவில்லை. வெப்ஸ்டரின் வீட்டையும் சுட்டிக் காட்டினார். சற்று நேரம் கழித்து வெப்ஸ்டர் வீட்டுக் கதவைத் தட்டியவுடன் கதவை திறந்து கொண்டு வந்தவரைப் பார்த்தவுடன் "விருந்தாளி" திகைத்தார். கதவைத் திறந்தது வேறு யாருமில்லை, விவசாயியாக இருந்த வெப்ஸ்டர்தான்!

ஜெபர்சனின் பாடம் :

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜெபர்சன் ஒரு முறை தன் பேரனுடன் குதிரை சவாரி செய்யும்போது வழியிலே ஒரு நீக்ரோ அடிமை அவர்களைப் பார்த்தவுடன் தனது தொப்பியை மரியாதை நிமித்தம் எடுத்துத் தலைகுனிந்து வணங்கினான். ஜனாதிபதி உடனே பதில் மரியாதை தெரிவிக்கத் தன் தொப்பியை எடுத்தார். ஆனால் பேரனோ அந்த அடிமையை அலட்சியமாக நோக்கினான். 'தாமஸ்'! என்று பேரனைக் கூப்பிட்ட ஜெபர்ஸன் "அந்த அடிமை உன்னைவிடச் சிறந்த கனவானாக இருக்க நீ அனுமதிக்கலாமா?" என்று கேட்டார். வெட்கிய பேரன் தன் தொப்பியை எடுத்து பதில் வணக்கம் கூறி தானும் ஒரு கனவானே என நிரூபித்தான். நல்ல பண்புகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

அரிஸ்டாட்டிலின் விளக்கம் :

அரிஸ்டாட்டில் கனவான் ‘GENTLEMAN’ என யாரைக் குறிப்பிடுகிறார் தெரியுமா?

"நல்லது கெட்டது எது வந்தபோதிலும் நடுநிலையில் பெருந்தன்மையுடன் நடப்பவனே கனவான். தன்னை உயர்த்தவோ, தாழ்த்தவோ அவன் அனுமதிப்பதில்லை. வெற்றியில் மகிழ்ச்சியோ, தோல்வியில் வருத்தமோ அவன் அடைவதில்லை. அபாயத்தை அவன் தேர்ந்தெடுப்பதுமில்லை. அணுகுவதுமில்லை. தன்னைப் பற்றித் தானாக பேசுவதுமில்லை. மற்றவரைப் பேச விடுவதுமில்லை. தன்னைமட்டும் புகழ வேண்டும், மற்றவரை இகழ வேண்டும்" என்று அவன் நினைப்பதில்லை.

ஒரு கனவான் கனவான்தான். இதற்கு மேல் எதற்கு விளக்கம்? ஆம், A GENTLEMAN IS A GENTLEMAN அவ்வளவுதான்.

ஒவ்வொருவரும் தன்னுடன் தனது ஆளுமையைச் சூழ்ந்து சுமந்து செல்கிறான். ஒரு சூழ்நிலையை உருவாக்கியவாறே இருக்கிறான். இதில் அவனது ஆளுமையின் நல்ல, கெட்ட குணங்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நல்லதைப் பெருக்குங்கள், நச்சுகளை அகற்றுங்கள்.

உங்களின் சங்கேத மொழி என்ன?

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் மெக்ஸிகோவில் ஜெர்மன் அரசு ஒரு ஒற்றர் படையை அமைத்திருந்தது. ஒற்றர்கள், ரகசியமாகத் தங்கள் செய்திகளை பெர்லினுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சங்கேத மொழி (CODED MESSAGE) இருந்தது.

அமெரிக்க நிபுணர்களுக்கு அந்த சங்கேதமொழி ஒரு சவாலாக இருந்தது. தீவிரமான ஆராய்ச்சிக்குப் பின்னர் அந்த சங்கேத மொழிக்கு ஆதாரம் ஏதோ ஒரு அகராதி தான் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது.

எந்த அகராதியாக இருக்கக்கூடும் அது? கடைசியாக அதை கண்டே பிடித்துவிட்டனர். அவர்கள் மேஜையின் மீது இருந்த அகராதிதான் அது! அது ஜெர்மனியின் ராணுவ ரகசியங்களை அமெரிக்காவிற்கு விளக்கிவிட்டது.
நான் விரும்பாத ஒரு மனிதனை இதுவரை நான் சந்திக்கவே இல்லை                                                                                                                              - யாரோ
நாம் நமது ஆளுமையை உயர்த்த நமக்குத் தடையாக இருக்கும் சங்கேத மொழியை உடைத்து சிக்கலை அவிழ்க்க வேண்டும். நாம் வெற்றி பெறாமல் இருக்க எந்த சங்கேத மொழியை நம்மை அறியாமல் அனுப்புகிறோம்? இதை அறிந்து தவறைத் திருத்தினால் சரியான செய்தியை அனுப்பினால் வெற்றிபெறுவது எளிது.

இன்னும் அதிகப்படுத்துங்கள் :

இரண்டே வார்த்தைகளில் நமது ஆளுமையை உயர்த்திவிடலாம் "இன்னும் அதிகப்படுத்துங்கள்" ஆம்! நல்லவற்றை "இன்னும் அதிகப்படுத்துங்கள்" நல்ல நண்பர்களை இன்னும் அதிகப்படுத்துங்கள். தீய குணங்களை ஒழிப்பதை இன்னும் அதிகப்படுத்துங்கள். இந்த ஒரே ஒரு உத்திமட்டும் போதும். உங்களுக்கு அளப்பரிய முன்னேற்றத்தைத் தர!

இன்றே ஆரம்பியுங்கள் :

ஒரு விளக்கு அதன் ஒளியின் தீவிரத்தைப் பொறுத்தே தனது பிரகாசத்தைத் தரும்!! அதுபோலவே ஒரு மனிதனின் மனோசக்தியே அவனது சூழ்நிலையில், வாழ்க்கையில் பிரகாசத்தைத் தரும். அவனது செல்வ நிலைக்கும் சேர்த்து! இந்த பிரகாசத்தை உயர்த்தி வெளிப்படுத்த இனிய ஆளுமை இன்றியமையாத தேவையாகும். இதை என்றிலிருந்து உயர்த்த ஆரம்பிப்பது? இன்றே! இப்பொழுதே! இக்கணமே!

உங்கள் குழந்தையிடம், மனைவியிடம் அல்லது கணவரிடம் இதை ஆரம்பிக்கலாம். அட நன்றாகச் சமைத்திருக்கிறாயே என்று மனைவியிடமோ அழகாகப் படிக்கிறாயே என்று குழந்தையிடமோ கூறினால் ஏற்படும் சூழ்நிலையே தனிதான்!

நல்ல ஒரு வழிகாட்டி :

இனிமையாக எப்படி மற்றவருடன் பழகுவது, அனைவரையும் வயப்படுத்துவது எப்படி என்பதைக் கற்று உணர நல்ல புத்தகம் ஒன்று இருக்கிறது.

ஆண்டாண்டு காலமாக லட்சக்கணக்கானவகளுக்கு வழி காட்டிய இந்தப் புத்தகம் இன்று உங்களுக்கும் வழியைக் கற்றுக் கொடுக்கக் காத்திருக்கிறது.

டேல் கார்னிகி எழுதிய HOW TO WIN FRIENDS AND INFLUENCE PEOPLE என்ற புத்தகம் அது.

இனிமையான ஆளுமையை வெற்றி பெறத் துடிப்பவர் அடைய வேண்டிய நான்காவது குணாதிசயமாகும்.

- ச.நாகராஜன் (வெற்றிக்கலை நூலிலிருந்து)

ச.நாகராஜன் அவர்களின் இதர படைப்புகள்



ன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்பது பற்றி அலெக்டுமெக்கன்சி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். காலத்தைச் சரிவரப் பயன்படுத்தாமைக்கு அவர் கூறும் காரணங்கள்.

  • நாம் அடைய விரும்பும் இலட்சியங்களைப் பற்றிய திட்டங்கள் நம்மிடம் இல்லை. எது முக்கியம் என்ற தெளிவில்லை. எனவே திசை தெரியாமல் இருளில் துழாவிக் கொண்டிருக்கிறோம்; நேரம் போய்விடுகிறது.
  • யார் வந்தாலும் பார்க்கலாம் என்ற “திறந்த கதவு” கொள்கையினால் நேரம் பறிபோய்விடுகின்றது.
  • ஒத்திப்போடும் மனோ பாவம், சோம்பல்.
  • எடுத்த காரியங்களின் விளைவுகள் பற்றிய செய்திகள் நமக்குச் சரியாக வந்து சேருவதில்லை; காலம் விரயமாகிறது.
  • ஏதோ புத்தகம் பேப்பர் கிடைத்தது என்று எல்லா குப்பைகளையும் படிக்கிறோம். படிப்பதை ஒரு பொழுது போக்காய்க் கொள்கிறோம். நேரம் போய்விடுகிறது.
  • வேலை செய்து கொண்டிருக்கும் போது அடிக்கடி பிறர் உள்ளே நுழைகிறார்கள். வேலை தடைபடுகிறது.
  • போனில் வளவளவென்று ‘அக்கப்போர்’ பேசுகிறோம். டெலிபோன் ஒரு செய்தியை தெரிவிப்பதற்குத்தான் இருக்கிறது.
  • குப்பை விஷயங்கள் எல்லாம் உம் மேஜைக்கு வருகின்றன. எல்லாவற்றையும் படித்து தொலைக்கிறீர்கள்.
  • எந்தக் கடிதத்தை எங்கு வைத்தோம்? அதை எப்படி உடனே எடுப்பது? என்பதில் ஒரு வழிமுறை இல்லாமல் திண்டாடுகிறீர்கள்.
  • போதுமான குமாஸ்தாக்கள் இல்லை எல்லாம் நீங்களே செய்ய வேண்டியிருக்கிறது. உங்கள் பொன்னான நேரம் போயிற்று.
  • பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொள்கிறீர்கள். ஒன்றிலும் கவனமில்லாமல் ஒன்றும் சரிவரச் செய்யப்படாமல் போய்விடுகிறது.
  • சும்மா ‘சலசல’ வென்று பேசுகிறீர்கள். பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
  • எதையும் மறுத்துப்பேச முடியாது உங்களால். எதையும் இல்லை என்றோ தவறு என்றோ கூறமுடியாது உங்களால். எனவே எல்லாவற்றிற்கும் இசைந்து கொடுக்கிறீர்கள். எது நன்மை என்று தெரிந்திருந்தும் அதில் கண்டிப்பாக இல்லாதததால் நீங்கள் நினைப்பது நடப்பதில்லை. காலம் வீணாகிறது.

- டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி




பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்
ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன்

கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்

கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன

சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன

பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்

கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல

கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது

கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது

கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது

நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன

நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்

மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது

நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்

ஜனனத்தில்
ஒருகதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது

இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா

கதவுதட்டும்
ஓசை கேட்டால்
யார் என்று
கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம்

- அப்துல் ரகுமான்



பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம்

ரு முயற்சி வெற்றி பெறும்போது நமக்கு என்ன கிடைக்கிறது?

நாம் விரும்பியதை அடைகிறோம்.
நம் சாதனை - நம்மால் முடியும் என்று நிரூபிக்கிறது.
நமக்கு நம்  மீதே ஒரு பெருமை ஏற்படுகிறது.
நமக்கு மனநிறைவைத் தருகிறது.

மேலே கூறிய நான்கு விளைவுகளையும் பார்த்தோமானால் கடைசியில் கூறப்பட்ட மூன்று விளைவுகளும் நம் மனதில் ஏற்படுகின்ற உணர்வுகள் என்பது புரியவரும்.

நம்மைப் பற்றி நம் மனதில் ஏற்படும் பெருமை, நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, நமக்குள் ஏற்படும் மனநிறைவு - இவைதான் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குகின்றன. மேலும் சாதனை செய்யத் தூண்டுகின்றன.

இப்படிப்பட்ட எண்ணங்கள் ஆணின் மனதில் அதிகம் எழுகின்றனவா அல்லது பெண்ணின் மனதில் அதிகம் எழுகின்றனவா என்று கேட்டால், அந்த வாய்ப்பு, குறிப்பாக கிராமங்களில் வாழும் பெண்களுக்கு அதிகம் கிடைப்பதில்லை.

சாதனை புரியும் வாய்ப்புகள் பொதுவாக பெண்களுக்குக் குறைவு. அதிலும் கிராமப் பெண்களுக்கு இன்னும் குறைவு. காரணம் கல்வியறிவின்மை மற்றும் நமது சமூகப் பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள், மரபுகள்.

வெற்றிக்கு முதல்படி: அறிவு - படிப்பு

ஒரு ஆணுக்குக் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை நாம் ஒரு பெண்ணுக்குக் கொடுப்பதில்லை.

"ஒரு பெண் எதற்குப் படிக்க வேண்டும்? கல்யாணம் செய்து கொண்டு கணவன் வீட்டுக்குப் போகிறவள்தானே?" என்று ஒரு பெண்ணைத் திருமணத்திற்காகவே வளர்க்கிறோம்.

ஒரு ஆண் திருமணம் ஆகாமல் இருக்கலாம். ஒரு பெண் திருமணம் ஆகாமல் இருந்தால் அபவாதம். 'கெட்ட பெயர்'. இப்படி ஒரு மரபு. மேனாடுகளில் ஆண்களைப் போல பெண்கள் இப்போது காலந்தாழ்ந்து திருமணம் செய்துகொள்கிறார்கள் அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்கிறார்கள்.

ஒரு பெண்ணின் முன்னேற்றத்தைத் தடை செய்வது படிப்பின்மைதான். படிப்பு இருந்தால்தான் ஊர் உலகம் தெரியும்; படிப்பு இருந்தால்தான் நல்ல வேலைக்குப் போக முடியும். நல்ல வேலைக்குப் போனால்தான் நிறைய சம்பாதிக்க முடியும்; தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்.

வெற்றி என்பது: தன் காலில் நிற்கும் பெருமை

தன் காலில் நிற்கும் பெருமை இருக்கிறதே. அதை நம் நாட்டில் பெண்களுக்கு இல்லாமல் செய்துவிட்டோம். பெண்களை "சார்ந்து நிற்க வேண்டிய ஒரு சமுதாயமாக" உருவாக்கிவிட்டோம்.

ஒரு பெண்ணோ, ஆணோ, தன் காலில் நிற்கும்போது - தன்னால் சம்பாதித்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வரும்போது, அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கிறது. அவர்கள் யாரையும் 'சட்டை' செய்யவேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு சமூக மதிப்பு, சமூகத்தில் ஒரு பெருமை கிடைக்கிறது. வாத்தியாரம்மா, டாக்டரம்மா, வக்கீலம்மா என்று ஊரும் உலகமும் உங்களைப் பெருமையுடன் அழைப்பதைப் பாருங்கள். வேலை பார்க்கும் பெண்களுக்கும் வீட்டிலே இருந்துகொண்டு வேலைக்குப் போகாத பெண்களுக்கும் கொடுக்கப்படும் மரியாதை வெவ்வேறானது.

சம்பாதிக்கிற மருமகளை மாமியார் அதிகம் அதட்டிக் கேட்க முடிவதில்லை; அதிகாரம் செய்வதில்லை. மாறாக மதிப்பும் மரியாதையும் கிடைக்கின்றன.

"பொட்டைக் கழுதை" என்று பெண்களை இழிவுபடுத்துவதும், "பொம்பளை மாதிரி பேசறீயே!" என்று பெண்களை உதாரணம் காட்டுவதும் சமுதாயத்தில் பெண்களைக் கேவலப்படுத்துகிறது.

"சாண் பிள்ளையானாலும் அவன் ஆண்பிள்ளை!" என்று ஆண்பிள்ளையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது அவனது சகோதரியின் மண்டையில் அடிக்கிறது. "உன்னால் ஒன்றும் செய்ய முடியாது; ஏனெனில் நீ ஒரு பெண்!" என்று சொல்லாமல் சொல்கிறது, நம் சமுதாயம்.

முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும். அதற்கு முதலில் பெண்கள் படிக்க வேண்டும்.

வெற்றிக்குத் தேவை: பொருளாதார சுதந்திரம்

பொருளாதார சுதந்திரம் - அதாவது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, ஒரு பெண் வாழ்வதற்குத் தேவையான வருமானம்தான் அவளுக்கு உறுதுணையாக என்றும் நிற்கும்.

ஆணுக்குள்ள அத்தனை திறமைகளும் ஒரு பெண்ணிடம் இருக்கின்றன. அதற்கு மேலும் இருக்கின்றன. இதை நாம் புரிந்துகொண்டு மதிப்புக் கொடுத்து நம் பெண்களை வளர்க்கத் தவறிவிட்டோம். பெண்களுக்கு ஏன் பொருளாதார சுதந்திரம் வேண்டும்? இந்த உலகத்தைப் பார்த்தோமானால் ஒருவன் படித்தவனா; படிக்காதவனா என்பது முக்கியமல்ல! பணமிருந்தால் படிக்காதவன் கூட மதிக்கப்படுகின்றான். மரியாதை செய்யப்படுகிறான்.

ஒருவன் பதவியில் இருக்கிறானா? அல்லது பதவி ஏதும் இல்லாமல் இருக்கிறானா? என்பது முக்கியமல்ல. பதவி இல்லாமல் இருந்தாலும் பணம் இருந்தால் பதவியில் உள்ளவர்களை எல்லாம் அடிபணிய வைக்கலாம். எனவே பணம்தான் முக்கியம்.

ஒரு நபர் ஆணா பெண்ணா என்பது முக்கியமல்ல. சொத்துக்கு வாரிசு ஒரு பெண்தான் என்னும்போது உலகமே அந்தப் பெண்ணுக்கு அடிவணங்குவதைப் பார்க்கலாம்.

பணம் என்பது நமக்குப் பாதுகாப்பைத் தருகிறது; பெருமை தருகிறது; செல்வாக்குத் தருகிறது; வலிமை தருகிறது. அதனால்தான் வள்ளுவர், "மகளே! பணம் இல்லாவிட்டால் இந்த உலகில் உனக்கு வாழ்வே இல்லை" என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

35 வயதுக்குமேல்: வெற்றி உண்டு

பணம், சாதனை, வெற்றி என்பதெல்லாம் எதற்காக? அதன் பலன் என்ன? என்ற கேள்வி வருகிறது.

மனிதன் தன் வாழ்வில் மகிழ்வுடன் மனநிறைவுடன் இருக்க விரும்புகிறான். அதுதான் வாழ்வு என்று கருதுகிறான். ஒரு ஆணைப் பார்த்து, "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்கிறோம். அவர் "சும்மாதான் இருக்கிறேன்" என்றால் எவ்வளவு கேவலமாக அவரை மதிப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். வேலை, சம்பாத்தியம் எல்லாம் ஆண்மையின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.

மாறாக, ஒரு பெண்ணை யாரும் 'என்ன செய்கிறீர்கள்?' என்று நம் ஊரில் கேட்பது இல்லை. காரணம் பெண்ணுக்குக் குடும்பம், குழந்தைகள், கணவன், வீடு என்று இருக்கின்றன. அதுவே பெரிய வேலைதான். அதுவே பெரிய மனநிறைவைத் தருகிறது.

ஆனால், ஒரு 30-35 வயது பெண்மணியின் நிலை என்ன? அந்த வயதுக்கு மேலும் ஒரு 30 ஆண்டுகள் வாழக்கூடிய - வாழவேண்டிய பெண்ணின் நிலை என்ன?

கணவன் வேலைக்குப் போகிறான். குழந்தைகள் பெரியவர்களாகி படிக்கப் போகிறார்கள். ஒரு பெண்மணி தன்னிடம் எவ்வளவோ திறமை இருந்தும் அவற்றிற்கெல்லாம் எந்த வாய்ப்புமில்லாத நிலையில் வீட்டில் பொழுதைக் கழிக்கிறார்.

இத்தனை நாள் நம் சமுதாயத்தில் தொழில், வேலை என்பது ஆணுக்கும், குடும்பம், குழந்தை வளர்ப்பு என்பது பெண்ணுக்குமாக என்ற ஒரு நடைமுறை இருந்து வந்தது.

இன்று உலகம் மாறி வருகிறது. பெண்கள் படிக்கிறார்கள். அதிகம் பேர் வேலை பார்க்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள்; தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து சமுதாயத்திற்குப் பயன்படும் பணிகளைச் செய்கிறார்கள். எனவே, மாறிவரும் புதிய உலகிற்கு ஏற்பக் கிராமத்துப் பெண்களும் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

சம்பாத்தியம், குடும்பம் என்ற இரண்டிலும் பங்கு பெறும் போதுதான் தன் காலில் நிற்கும் குணமும், பொருளாதார சுதந்திரமும், தன்னைப் பற்றிய நம்பிக்கையும், சார்ந்து நிற்காத குணங்களும் வளரும். இது பெண்களுக்கு நாளைய உலகிற்கு அவசியமான தேவைகள்.

வருமானம், குடும்பம் என்பவற்றில் ஆண்-பெண்ணின் பங்கு பாதிப் பாதி என்ற விகிதத்தில் இருக்க வேண்டியதில்லை. அது அவர்கள் தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். அதேபோல, வளரும் குழந்தைகள் வீட்டிலிருக்கும்போது வருமானத்திற்காக தொழிலிலோ, வேலையிலோ இறங்க வேண்டியதில்லை. அந்தக் குடும்பக் கடமை முடியும்போது, அடுத்த கடமைக்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கும் பெண்தான் வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்க முடியும்.

பெண் குணம்

பெண்களைப் பற்றி ஆராய்ந்தவர்கள் ஆண்களைவிடப் பெண்கள் நம்பற்குரியவர்கள், பிறரை மன்னிப்பவர்கள், உறவில் நயம் தெரிந்து அன்பு காட்டுபவர்கள், கடின உழைப்பாளிகள் என்று எழுதுகிறார்கள்.

ஒரு ஆளை மதிக்கும் அளவுகோல் இன்று எல்லா நாடுகளிலும் பணம்தான். ஆனால் ஜப்பானியர் பணத்தைவிடக் குணத்தை அதிகமாக மதிக்கிறார்கள். அடக்கம், பணிவு, எளிமை, சமுதாயத்துடன் சேர்ந்து இணைந்து இயங்குதல்; பிறருடன் இனிமையாகப் பழகுதல் என்ற பெண் குணங்களை ஜப்பானியர் போற்றுகிறார்கள். அதற்காக அவர்களிடம் பணம் பண்ணும் - தன் காலில் நின்று தொழில் செய்யும் குணங்கள் இல்லை என்பது பொருளல்ல. இன்று பணத்தில் அமெரிக்காவை மிஞ்சும் நிலையில் ஜப்பான் இருக்கிறது.

அமெரிக்காவைப் பொதுவாகப் பார்த்தால் அங்கே ஆண் குணங்கள் அதிகம். அசாத்திய தன்னம்பிக்கை, சுதந்திரம், தன்னைப் பற்றிய பெருமை, தனது தனித்தன்மை பற்றிய உணர்வு - இவை எல்லாம் அதிகம் அங்கே.

எந்த சமுதாயத்திற்கும் இந்த இரண்டு வகைக் குணங்களும் தேவை.

பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் பெண்கள் சமுதாயம், குறிப்பாக நம்முடைய கிராமப் பெண்கள் - அடுத்த நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்க வேண்டுமானால், அவர்களுக்கு இன்று அவசியமான ஒன்று: கல்வி. இரண்டாவது: உலக ஞானம். மூன்றாவது: தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை.


- டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி (வெற்றிக்கு முதல் படி-நூலிலிருந்து)




தோல்வி என்பது ஒரு விஷயத்தை மீண்டும் பரிசீலனை செய்ய ஒரு வாய்ப்பு. எங்கோ தவறி இருக்கிறோம் என்பதைப் புலப்படுத்தும் நமக்குத் தெளிவுபடுத்தும் ஒரு நிகழ்ச்சி. அதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பல நேரம் நாம் செல்லும் திசையைத் திருப்புவதற்காக அத்தகைய தோல்விகள் ஏற்படுவதுண்டு.

தோல்வியின் நன்மை

ஒரு இளைஞர் இருந்தார். ஒரு பெண்ணைக் குறிப்பிட்டு அவளுடன் தான் பழகி வருவதாகவும் அந்தப் பெண்ணுக்கும் தன்னை பிடித்திருப்பதாகவும் சொன்னார். காதல் திருமணங்கள் நல்லவைதாம். திருமண வாழ்வு என்பது, ஒத்த உள்ளத்துடன், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒருவர் மற்றவருக்காக வாழும் உயர் வாழ்வு; உயர் பண்பு; உயர் நட்பு.

அந்தப்பெண் வேறு மதம்; மாறுபட்ட பழக்க வழக்கங்கள் கொண்ட குடும்பம். இளைஞர் படித்தவர். எனவே, பெண்ணின் படிப்பைப் பற்றிக் கேட்டேன். "படிக்காத பெண்" என்றார். எவ்வளவு நாள் தெரியும் என்றேன். "மூன்று மாதமாக" என்றார். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் நான் திருமணத்திற்கு வந்து வாழ்த்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

வேறு வேறு பழக்கங்களையும் பண்பாடுகளையும் கொண்ட மனிதர்கள் சேர்ந்து வாழ்வது என்றால், அதிக பொறுமையும், சகிப்புத் தன்மையும் வேண்டும். அத்துடன் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்களின் குணங்களைப் பற்றி இருவரும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

காதலின் உந்துதல் - உடலுறவின் வேகம் - அதிகமாயிருக்கும்போது மற்றவரது குணங்களைப் பற்றி கவனிக்க மாட்டோம். அது முடிந்து, அன்றாட வாழ்வு வாழும் போதுதான் மற்றவர்களது பழக்க வழக்கங்கள் பெரிய பிரச்சனையாகத் தலைதூக்கும்.

"இன்னும் கொஞ்சநாள் பழகுங்கள். ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்ளுங்கள். அதன்பின் திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று நான் யோசனை சொன்னேன். ஆனால், சில வாரங்களில் அந்தப் பெண் அந்த இளைஞரை விட்டு விட்டுப் போய்விட்டாள்!

இளைஞருக்கு காதலில் தோல்வி! மனமுடைந்து போனார். அதையே எண்ணிப் புலம்பிக் கொண்டிருந்தார் சில வாரம். பிறகு அந்த உண்மையை ஏற்றுக் கொண்டார்.

வாழ்வில் நமக்கு வழி காட்டவே சோதனைகளும் தோல்விகளும் வருகின்றன. சரியான திசையில் செல்லாத போது அவை வழி காட்டுகின்றன. அப்போது அந்த நேரத்தில் நமக்கு அந்தத் தோல்வியின் உண்மை புரிவதில்லை. வருந்துகிறோம். கலங்குகிறோம்!

வேலை போயிற்று! நன்மைக்கு

என் நண்பர் பேராசிரியர் பரஞ்சோதி சொன்னார். "ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். உற்சாகமில்லாத வாழ்க்கை. 'தெண்டமே' என்று வேலைக்குப் போய் வருவேன். ஒரு நாள் என்னை வேலையிலிருந்து நீக்கினார்கள். எனக்கும் உள்ளூர இந்த வேலையிலிருந்த விடுபட வேண்டும் என்பதுதான் விருப்பம். எனினும் வேலை போய்விட்டதால் குடும்பம் நடத்துவது கஷ்டமாகிவிட்டது கவலைப்பட்டேன். பயம் பிடித்துக் கொண்டது.

மூ‎ன்று மாதம் வேலையில்லாமல் அலைந்து ஏறி இறங்கிய பிறகு, ஒரு வேலை பாதி சம்பளத்தில் கிடைத்தது. இருந்தாலும் நல்ல வேலை. பிடித்த வேலை. ஏற்றுக்கொண்டேன். இது என் வாழ்க்கையிலே மிகப்பெரிய திருப்பம். பின்னால் நான் வாழ்க்கையில் முன்னேற வழி கோலியது. அவர்கள் வேலையை விட்டு என்னை வீட்டுக்கு அனுப்பியிராவிட்டால், நான் அதிலேயே உட்கார்ந்திருப்பேன். 'இது நல்லதுக்குத்தான் ஏற்பட்டது' என்பதைப் புரிந்து கொள்ளவே இரண்டு ஆண்டு ஆயிற்று."

வாழ்வில் ஏற்படும் தோல்விகள் நம்மை திசை திருப்புகின்றன. நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. தோல்விகளைப் புரிந்து கெள்ளும்போது - ஏற்றுக்கொண்டு செயல்படும் போது - ஒரு புதிய உலகம் நம்மை வரவேற்கிறது.

தோல்வியைத் தோண்டாதே! திசை திரும்பு

அமெரிக்காவில் நாங்கள் இருந்த ஊருக்கு அருகில் - பதினைந்து மைலில் - ஒரு கிராமம் இருந்தது. அங்கே வயல் முழுவதும் எண்ணெய் கிணறுகள். அதிலிருந்து எண்ணெய் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அதன் சொந்தக்காரனை நான் சந்தித்து "எப்படி இவ்வளவு பெரிய பணக்காரன் ஆனாய்? இவ்வளவு பெரிய எண்ணெய் வயலை உண்டு பண்ணினாய்?" என்று கேட்டேன்.

வால்டர் சொன்னார் - "ஐயா! நீங்கள் இருக்கும் ஊரில்தான் நானும் குடி இருந்தேன். எண்ணெய் கிணறு தோண்டுவதுதான் என் தொழில். ஓரிடத்தில் நிபுணர்கள் எண்ணெய் கிடைக்கும் என்றார்கள். நிலத்தை வாங்கி தோண்டினேன். இரண்டாயிரம் அடியில் எண்ணெய் கிடைக்கவில்லை. 'எண்ணெய் கொஞ்சம் ஆழத்தில் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தோண்டுங்கள்' என்றார் நிபுணர். இரண்டாயிரம், மூவாயிரம் என்று பத்தாயிரம் அடிவரை போனோம். எண்ணெய் ஏதும் கிடைக்கவில்லை; காசுதான் போயிற்று.

யோசனை செய்தேன். "இங்கில்லாவிட்டால் சரி விடு. வேறிடத்தில் தோண்டு என்று. தோண்டியிருந்தேனானால், ஐந்து புதிய இடங்களில் தோண்டி இருப்பேன். ஏதாவது ஓரிடத்தில் எண்ணெய் கிடைத்திருக்கும். இருப்பதையே வைத்துக்கொண்டு அதிலேயே ஈடுபட்டு தோல்வியை மேலும் மேலும் சரிப்படுத்த முயல்வது முட்டாள்தனம் என்று கண்டுகொண்டேண். இந்த ஊருக்கு வந்து புதிய இடத்தில் தோண்டினேன்; எண்ணெய் கிடைத்தது!" என்றார்.

தோல்வியை சரிப்படுத்த முயல்வதைவிட வேறு திசையில் அணுகுவது நல்லது.

"வெற்றி என்பது எப்போது நிலையாக இருக்கும்?" என்று கேட்டுவிட்டு தத்துவஞானி ஜேம்ஸ் ஆலன் பதில் கூறுகிறார்.

“வெற்றியடைந்ததும், வெற்றி பெற்றுவிட்டோம். இனி கவலைப்பட வேண்டியதில்லை. எல்லாம் தானே ஓடும்! என்ற இறுமாப்பு வராமல் சதாசர்வ நேரமும் 'அடுத்து என்ன செய்யலாம்?' என்று கவனமுடன் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். இல்லாவிடில் வீழ்ச்சியின் வித்து அங்கே முளைவிடுகிறது" என்கிறார்.

வெற்றி என்பது ஒரு மன நிலை. முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மனநிலை. கர்வமும், தற்பெருமையும் கொண்டவர்கள் பொது வாழ்வில் எப்படி மக்கள் அபிமானத்தை இழக்கிறார்கள் என்பதை நாம் திரும்பத் திரும்பப் பார்க்கிறோம்.

சார்ந்து நிற்காதீர்கள் - வயோதிகம் தோல்வியல்ல

நமக்கு இரண்டு கால்கள் இருக்கின்றன. நாம் நேரே நிற்கலாம். ஏன் சுவர் மீது தேவை இல்லாமல் சார்ந்து நிற்க வேண்டும்? சாய்ந்து நிற்கும்போது நமக்கு என்ன நேரிடுகிறது? நமது நேரான கம்பீரமான தோற்றம் பாழ்பட்டு விடுகிறது. குழந்தை அம்மாவைத் தான் சார்ந்து நிற்கிறது. வளரும் வரை. ஆனால் நாம் வளர்ந்தவர்கள். இனியும் குழந்தை அல்ல.

திருமண வீட்டிற்கு வாழ்த்துக் கூற மூத்த நண்பர் ஒருவர் வந்திருந்தார். வயது 78. எனவே மேடை மீது அழைத்துச் செல்ல நான் அவர் கையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு நடந்தேன். அவர் என் கையை உதறி தள்ளினார். "என்னால் தனியே நடக்க முடியும்!" என்றார். அவரது சார்ந்து நிற்க விரும்பாத குணத்திற்கு தலை வணங்கினேன். வயோதிக காலத்திலும் உதவியை நாட விரும்பாத உள்ளம்! எப்பேர்ப்பட்ட உள்ளம்!

ஊனம் தோல்வியல்ல!

சமீபத்தில் பார்வையிழந்த ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியைப் படித்தேன். அந்தப் பெண் தனக்குப் பார்வை இல்லை என்பதை ஒரு குறையாகவே கருதவில்லை. இயல்பாக எல்லோரையும் போல் நடந்து கொள்கிறாள். பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள். அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் அவருக்காக பரிதாபப்பட்டு அவரது ஊனத்தை அவருக்கு சதா நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும்? சார்ந்து நிற்க அவர் விரும்பவில்லை. மன ஊனம் அவருக்கில்லை. எப்போதும் எதற்கும் நாம் பிறரை சார்ந்து நின்றோமானால் நாம் நம் தனித்தன்மையையும் கம்பீரத்தையும் இழந்துவிடுவோம்.

ஒரு துன்பம் வந்த நேரத்தில் யாராவது நண்பர்களிடம் சென்று மனச்சுமையை இறக்கி வைக்க முயன்றோமானால், அவர்கள் கேட்பதை எல்லாம் கேட்டுவிட்டு, பிறகு நம்மையே குற்றம் சாட்டுவார்கள். கேவலப்படுத்துவார்கள்.

நாம் அனுதாபத்திற்காக செல்கிறோம். கிடைப்பதோ கேவலம், இழிவு, குற்றச்சாட்டு, கண்டனம்.

இது ஏற்படக் காரணம் நமது சார்ந்து நிற்கிற குணத்தினால்தான். நாம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். உதவ முன் வருபவர்களது உதவியைப் பெற்றுக்கொள்வது வேறு; மாறாக அவர்களைச் சார்ந்து நிற்பது வேறு.

நாம் மிடுக்கான மனிதர்கள். அந்த மிடுக்குடன் வாழ்நாள் முழுக்க உலாவுவோமாக!

- டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி (வெற்றிக்கு முதல் படி-நூலிலிருந்து)


வாழ்வில் தோல்வி என்பது சாதாரணம். மனம் தளர்ச்சி அடைவது இயல்பு. அந்தத் தளர்ச்சி அடைந்த காலங்களில் நாம் ஆற அமர யோசிக்க வேண்டும். அப்போது நமக்குப் புது வழிகள் தென்படும்.

வழக்கமாக, நாம் என்ன செய்கிறோம்? பலரும் தோல்விகளைக் கண்டு சலித்துவிடுகிறோம். "இப்படித்தான் முன்பு முயன்றேன். தோல்வி கண்டேன். அங்கே போனேன், அதிலும் தோல்விதான் கிட்டியது. என் அதிர்ஷடம் அவ்வளவுதான். நான் ஒரு தோல்வியாளன்" என்று நம்மைப்பற்றி நாமே தீர்மானம் செய்துவிடுகிறோம்.

நாம் தோல்வியாளன் என்று நம்மீது நாமே முத்திரை குத்திவிடுகிறோம். ஆனால், நாம் தோல்வியாளர்களா? இல்லை! நாம் எத்தனையோ முறை இதற்கு முன் வெற்றி பெற்றிருக்கிறோம். ஏதோ இந்தமுறை தோல்வியுற்றோம். அவ்வளவுதான்.

அப்படி எடுத்துக்கொள்ளாமல், நம் தோல்வியை எண்ணிப் புலம்பிக் கொண்டிருந்தோமானால், எல்லோரிடமும் அதைச் சொல்லி அழுது கொண்டிருந்தோமானால் - எதையும் சாதிக்க முடியாது! நமது நிலைமை இன்னும் மோசமாகிவிடும்!

666 மருந்து

ஒரு மருந்துக்கு 666 என்று பெயரிட்டார்கள். காரணம் 665 முறை முயன்றும் அதை அவர்களால் தயாரிக்க முடியவில்லை. ஆனால் சளைக்கவில்லை. 666-வது முறைதான் அதைத் தயாரித்தார்கள். எனவேதான் அதற்கு பெயர் "சால்வர்சான் 666".

அதேபோல, எடிசன் மின்சார விளக்கைத் தயார் செய்து கொண்டிருந்தார். அதற்கு மின்சாரம் பாய்ந்தவுடன் ஒளி விடும் ஒரு கம்பி தேவை. அதாவது மின்சார சக்தியைத் தடுத்து, ஒளியாக மாற்றும் ஒரு சுருள் கம்பி தேவை. எடிசன் எத்தனையோ உலோகக் கம்பிகளை எடுத்து முயன்றார்.. முயன்றார். மனம் சளைக்காமல் முயன்றார். கடைசியில் 'டங்ஸ்டன்' என்ற உலோகக் கம்பி அந்த வேலையைச் செய்தது!

தோல்வியை சமாளிப்பது எது? சளைக்காத மனம்தான்!
தோல்வியை வெற்றி கண்டது எது? விடாமுயற்சிதான்!

"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்" என்பார் வள்ளுவர். ஆம், தெய்வத்தால் முடியாதது கூட, முயற்சியால் முடியும். தம்பீ ! சோர்வு இல்லாமல், முயற்சியில் குறைவு இல்லாமல், மீண்டும் மீண்டும் முயற்சிப்பவர்கள், விதியைக்கூட வெற்றி கொள்வார்கள் என்றும் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

இரவும் பகலும்

நாம் வாழும் உலகை - இந்த பிரபஞ்சத்தைப் பாருங்கள். இதிலிருந்து சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த உண்மைகள் நமக்கு மன ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகின்றன.

என்ன அந்த உண்மைகள்?

உலகில் பகலுக்குப் பின் இரவு வருகிறது. அதே போல இறப்பு பிறப்பு, இன்பம் துன்பம், வெற்றி தோல்வி என்பவை உலகில் மாறி மாறி வருகின்றன. இவற்றை மாற்ற முடியாது. இதுதான் உலக உண்மை.

துன்பம் இல்லாத உலகம் உண்டா?
இருள் இல்லாத வெளிச்சம் உண்டா?
பள்ளம் இல்லாத மேடு உண்டா?

துன்பம், தோல்வி இவையெல்லாம் வாழ்க்கையின் பகுதிகள்; ஒரு காசின் இரண்டு பக்கங்கள்.

"என் குழந்தை செத்து விட்டான். அவனைப் பிழைக்க வையுங்கள்" என்று அழுத தாயிடம் புத்தர் சொன்னார். "எந்த வீட்டில் சாக்காடு இல்லையோ அந்த வீட்டிலிருந்து கொஞ்சம் எள் வாங்கி வா".

அந்த பெண்மணி வீடு வீடாக ஏறி இறங்கினாள். ஒவ்வொரு வீட்டிலும் இப்படி ஏதாவது ஒரு சாவு நிகழ்ந்துதான் இருக்கிறது என்பதைக் கண்டாள். பிறப்பும், இறப்பும், துன்பமும் தோல்வியும், வெயிலும் மழையும், மின்னலும் இடியும் வாழ்க்கையின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து கொண்டாள்.

சோதனை மேல் சோதனை

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? அதைக் கண்டு அழுது 'ஐயோ இப்படி நேர்ந்து விட்டதே' என்று புலம்பலாம். அல்லது, "தோல்வி தானே! எனக்குத் தெரியும், அதை எப்படி சமாளிப்பது என்று" எனச் சொல்லிக் கொண்டு, தைரியத்துடன் அதைச் சமாளிக்கலாம். இப்படிப்பட்ட அணுகுமுறை ஒன்றுதான் நம் கையிலிருக்கிறது.

சில காலகட்டங்கள் நமக்கு சாதகமாக இருப்பதில்லை. என் நண்பர் டாம், குடும்பத்துடன் இரவு விருந்துண்ணப் போனார். கடைகள் எல்லாம் மூடிவிட்டார்கள். சாமான் வாங்க கடைத்தெருப்பக்கம் போனார். சிலை திறப்பு விழாவில் பாதைகளெல்லாம் திசை திருப்பி விடப்பட்டன. ரெயிலேறினார். இவர் ஏறிய ரெயிலுக்கு முன் சென்ற ரெயில் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால், ரெயில் பாதி வழியில் நின்று போயிற்று! சில நேரம் தொடர்ந்து இப்படி நடக்கிறது. பட்ட காலிலேயே படும் அல்லவா?

ஏன் இப்படி? உலகமே நமக்கெதிராக - ஆண்டவனே நமக்கெதிராக இருக்கிறார்களா? அதெல்லாமில்லை!

மனவியல் அறிஞர் யங் சொல்கிறார்: "இவையெல்லாம் அடையாளங்கள்! இவை எல்லாம் முன்னோடிகள் - வரும் நிகழ்ச்சிகளின் போக்கைத் தெரிவிக்கும் சூட்சுமங்கள். "மேலே செல்லுங்கள் அல்லது செல்லாதீர்கள் என்று எச்சரிக்கும் வழிகாட்டிகள்" என்கிறார்.

"இதை நாம் புரிந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்கிறார்.

அதேபோல சிலநேரங்களில் எடுத்ததெல்லாம் வெற்றியடைவதைப் பார்த்திருப்பீர்கள். தொட்டதெல்லாம் பொன்னாவதைப் பார்த்திருப்பீர்கள். ஒரு முறை எனக்கு டெல்லியிலிருந்து கடிதம், பத்திரிக்கையிலிருந்து பாராட்டு, சர்வதேச விருது என்று அதிசயப்படும்படி ஒன்று மாற்றி ஒன்று நடந்து என்னை திகைப்பில் ஆழ்த்தின.

ஆடிப்பட்டம் தேடி விதை

மலை, ஆறு, கடல், வீடு வாசல், மாடு, மனை என்பன நாம் கண்ணால் பார்க்கின்ற உலகம்; மற்றொன்று நாம் புரிந்து கொள்ள முடியாத - புலனுக்கு அப்பாற்பட்ட சக்திகள் இயங்கும் உலகம்.

இந்த புலனுக்கு அப்பாற்பட்ட உலகம், சிலநேரம் நமக்கு சில செய்திகளை சொல்கிறது; சில காலகட்டம் ஏற்றது; சில காலகட்டம் ஏற்றதில்லை என்று. இன்று மனவியல் அறிஞர் யங் அப்படிச் சொல்வதைத்தான் அன்றே வள்ளுவர் "காலமறிதல்" - காலமறிந்து செயல்படுதல் என்று எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார்.

"ஆடிப்பட்டம் தேடி விதை" என்பதுபோல நமது நல்வாழ்வின் காற்று எந்தப் பக்கம் அடிக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. காற்றுள்ள பொழுதே தூற்றிக்கொள்ள வேண்டும். தவற விட்டு விடக்கூடாது. ஏனென்றால், எப்பொழுதாவது ஒரு முறைதான் அதிர்ஷ்டம் நம் வீட்டுக் கதவைத் தட்டும்!

"தோல்வியின் அடையாளங்கள் தென்படும்போது கொஞ்சம் பின்வாங்கி, நிதானித்து, மறு பரிசீலனை செய்யுங்கள்; அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்; வேறு பாதையில் முயலுங்கள்" என்று சொல்கிறார் யங். தோல்வியின் அடையாளம் 'காலம் கனிந்து வரவில்லை' என்பதைக் காட்டுகிறது. காலச் சக்கரம் மறுபடியும் திரும்பும்.

தோல்வி என்பது நாம் செல்லும் பாதை சரியில்லை என்பதை சூசகமாக தெரிவிக்கிறது. அதை நாம் புத்திசாலித்தனமாக புரிந்துகொள்ள வேண்டும். உடனே வேறு பாதையை ஆராய வேண்டும்.

தடைகள் ஏற்படும்; ஏற்பட்டால் நின்று நிதானிக்க வேண்டும். தடைக்கல் மீது ஏற முடியுமா? தடைக் கல்லைத் தாண்ட முடியுமா? அல்லது, கல்லைக் குடைந்து உள்ளே புக முடியுமா? என யோசிக்க வேண்டும்.

வீடு கட்டிய இடத்தில் ஒரு பெரிய பாறை இருந்தது. வீடு கட்டிக் கொண்டிருந்தவன் முதலில் அதை அப்புறப்படுத்த விரும்பினான்; முயன்றான்; முடியவில்லை. அந்த பாறை மீது ஒரு காவல் மாடம் (வாட்ச் டவர்) ஒன்றைக் கட்டினான்! "யார் வருகிறார்கள் இந்தப்பக்கம்?" என்று உயரத்திலிருந்து பார்க்க முடிந்தது இப்போது!

மீந்த இட்லி

எங்கள் கிராமத்தில் கிருஷ்ண அய்யர் காப்பிக் கடை என்றால் பிரசித்தம். ஊரில் மூன்று நாள் திருவிழா. இட்லிக்கு மாவு நிறைய அரைத்து வைத்திருந்தார். மாவை அப்படியே வைத்திருந்தால் புளித்துப் போய்விடும்.

ஆனால், எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. சுட்ட இட்லி பாதிக்கு மேல் அப்படியே இருந்தது. நேற்று சுட்ட இட்லியை என்ன செய்ய முடியும் என்று கவலைப்படலாம்; அல்லது குப்பையில் கொட்டலாம். தடைக்கல்தான்! ஆனால், அதைத் தடைக்கல்லாக எடுத்துக் கொண்டாரா அவர்? இல்லை. படிக்கல்லாக மாற்றினார்! அதை இன்னும் சிறப்பான பொருளாக செய்து விற்றார்.

என்ன செய்தார் கிருஷ்ணய்யர்? இட்லியை எல்லாம் உதிர்த்தார். வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப்போட்டு வதக்கினார். கடுகு தாளித்து, இட்லியை உதிர்த்துப்போட்டுப் புரட்டினார். சாப்பிட்டால் தேவாமிருதமாய் இருந்தது. 'இட்லி உசிலி' பறந்து போய்விட்டது. அதிக விலையில்!

சில ஓட்டல்காரர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? 'இட்லி உசிலி' மிஞ்சினால், மாலையில் அத்துடன் மாவு சேர்த்துப் பிசைந்து பகோடா ஆக்கிவிடுவார்கள்! பகோடா மிஞ்சினால் இரவு பகோடா குழம்பு வைத்துவிடுகிறார்கள்.

வெற்றிக்கும் இப்படி எத்தனையோ வழிகள் இருக்கின்றன!. 'தோல்வி ஏற்பட்டுவிட்டதே' என்று துவண்டு போய் கன்னத்தில் கை வைத்துவிட்டால், ஒரு வழியும் தோன்றாது. அதனால்தான் நம் ஊரில் "கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே" என்பார்கள்.

புல் வெட்டும் எந்திரம்

அமெரிக்க நாட்டில் ஒரு கம்பெனி புல் வெட்டும் எந்திரம் செய்து விற்றது. அங்கே எல்லார் வீட்டிலும், வீட்டிற்கு முன் புல் வளர்த்திருப்பார்கள். கோடையில் மூன்று மாதம் வாரா வாரம் புல் வெட்ட வேண்டும். கோடைகாலம் முடிந்ததென்றால் பனிக்காலம் தொடங்கிடும்; புல் வளராது. புல் வெட்டத் தேவை இல்லை. எனவே வியாபாரம் பனிக் காலத்தில் படுத்துவிடும்.

இந்த நேரத்தில் ஒரு மனிதர் வந்தார். இந்த புல் வெட்டுகிற எந்திரத்தின் அடியில் பனியில் சறுக்க, சறுக்குப் பலகைகளை வைத்துத் தரமுடியுமா? என்று கேட்டார். புதிய முயற்சி. அதிக வேலை. எனினும் அவர்கள் சளைக்கவில்லை. செய்து கொடுத்தார்கள்.

எந்திரத்தின் மீது சவாரி செய்துகொண்டு புல் வெட்டுவது போல, இப்போது பனியின் மீது சறுக்கிக் கொண்டு வேகமாக செல்ல முடிந்தது! புதிய பனி வண்டி ("ஸ்நோ மொபைல்") பிறந்தது! விற்பனை இலட்சக்கணக்கில் போயிற்று.

பனிக்காலம் என்று கம்பிளியைப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருக்கவில்லை அவர்கள்! பனிக் காலத்திலும் வியாபாரம் நடக்கும் ஒரு புதிய கருவியைத் தயாரித்தார்கள்.

மனம் இருக்கிறதே, அது ஒரு அபார சாதனம். அதைத் தட்டிக் கொடுத்து, உற்சாகமாக பேசினோமானால் தோல்வியைக் கூட வெற்றியாக அது மாற்றிவிடும்.

தோல்வி என்பது தோல்வியல்ல! நாமே மேலே ஏறும் வெற்றிப் படி.

- டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி (வெற்றிக்கு முதல் படி-நூலிலிருந்து)






வாழ்வில் எது முக்கியம் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

யாராவது புதிய மனிதர்களை எங்காவது சந்தித்தோமானால் முதலில் நமது பெயரைக் கேட்கிறார்கள். அடுத்து அவர்கள் என்ன கேட்கிறார்கள்?

"என்ன செய்கிறீர்கள்? எங்கே வேலை பார்க்கிறீர்கள்?" என்பதைத்தான்.

'என்ன வேலை செய்கிறோம், எங்கே வேலை பார்க்கிறோம்' என்பதிலிருந்து நம்மைப் பற்றி ஒரு அனுமானத்திற்கு வர முயல்கிறார்கள். நாம் செய்யும் வேலை - தொழில் - நம்மை அடையாளம் காட்டுகிறது.

ஏதாவது தொழில் செய்தால்தான் நாம் பிழைக்கலாம். நமக்கு வயிறு இருக்கிறது. நம்மை நம்பி பெற்றோரும் மனைவி மக்களும் இருக்கிறார்கள். எனவே "வாழ்வில் எது முக்கியம்" என்று நூற்றுக்கணக்கான பேரை சர்வே செய்தபோது, "தொழில் தான் முக்கியம்" என்றார்கள்.

நீங்கள் கொஞ்சம் சொல்லிப் பாருங்கள்.. "நான் ரசிகர் மன்றம் வைத்திருக்கிறேன்!" என்று. அல்லது நான் "கட்சியில் இருக்கிறேன்" என்று. அது ஒரு தொழிலா என்று கொஞ்சம் நீங்களே யோசித்துப் பாருங்கள்!

எப்படி நல்ல வேலையைப் பெறலாம்? நல்ல தொழிலில் இறங்கலாம்?

நல்ல படிப்பு வேண்டும். எழுதப் படிக்கத் தெரிய வேண்டும். ஊர் உலக வரலாறு தெரிய வேண்டும். நமது ஊர், நமது மாவட்டம், மாநிலம், நாடு, உலகம் என்று உலகியல் தெரிய வேண்டும். அறிவியல் தெரிய வேண்டும். இப்படிப்பட்ட கல்வியை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகத் தெரிந்து கொண்டிருக்கிறோமோ, அவ்வளவு நாம் எடுக்கும் வேலையைத் திறமையுடன் செய்ய முடியும். படிப்புக்கேற்றபடி சம்பளம் கிடைக்கிறது.

இந்தியா முன்னேறும்

இந்தியா முன்னேறும் என்று சொல்பவர்கள் இதைத்தான் சொல்கிறார்கள். அதாவது இந்தியர்கள் தங்கள் குழந்தைகளைப் "படி படி" என்று சொல்லி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால் இன்று அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, அவர்கள் குழந்தைகள் பெரிய ஆபிசராகவோ, கலெக்டராகவோ, விஞ்ஞானியாகவோ நாளை ஆவார்கள். இந்தியா முன்னேறிவிடும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

பள்ளிப் படிப்பு என்பது ஒன்றும் கஷ்டமானதல்ல. கோடிக்கணக்கானவர்கள் உலகம் முழுவதும் செய்கிற வேலையைத்தான் நாமும் செய்கிறோம். அப்படியே படிப்பு வராவிட்டாலும் குறைந்தது எழுதப் படிக்கவாவது நமக்குத் தெரிய வேண்டும். அன்றாடப் பத்திரிக்கையைப் படிக்கிற அளவுக்கு - பிறருக்கு ஒரு கடிதம் எழுதுகிற அளவுக்கு நமக்கு படிப்பு தேவை. பத்திரிக்கை படிக்கும்போது நாம் உலக ஞானம் பெறுகிறோம். ஊர் உலகம் இப்படிப் போகிறது என்று தெரிந்துகொள்ளும்போது நாமும் பயப்படாமல் இறங்கி பிழைத்துக்கொள்ள முடியும். இன்று இருக்கும் பெரிய தொழிலதிபர்கள் சிலர் அதிகம் படிக்காதவர்கள்தான். ஆனால், எதையும் சமாளிக்கும் உலக ஞானம் அவர்களிடம் நிறைய உண்டு.

அவர்கள் எல்லாம் வாழ்வில் ஒரு குறிக்கோளை, "நான் பெரிய பணக்காரனாக ஆகப் போகிறேன், நான் பெரிய கலெக்டராக ஆகப் போகிறேன்; பெரிய கம்பெனி வைத்து நடத்தப் போகிறேன்" என்று சின்ன வயதிலேயே ஆசைப்பட்டவர்கள்.

அவர்கள் சினிமா மோகத்திலோ, பெண்ணாசையிலோ, கள்ளச் சாராயம் காய்ச்சுவதிலோ, குடிப்பதிலோ இறங்குவதில்லை.

அவர்களுக்கு வாழ்க்கையில் எது முக்கியம் என்று தெரியும். கண்ணுக்குப் பட்டை போட்ட குதிரை எப்படி நேர் சாலையைப் பார்த்துக் கொண்டு ஓடுகிறதோ அதைப் போல கண்ணுங் கருத்துமாக தங்கள் தொழிலில், தாங்கள் முன்னுக்கு வருவதில்தான், கவனம் செலுத்துவார்கள்.

ரசிகர் மன்றங்கள்

நமது நாட்டில் - தமிழ் நாட்டில்தான் - சினிமா ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. பக்கத்து மாநிலமான கேரளாவில் கூட இதெல்லாம் இல்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதெல்லாம் இல்லை; சினிமா நடிகர்களையும் நடிகைகளையும் "ஆகா... ஓகோ!" என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும் இளைஞர்கள் இங்குதான் ஏராளம். தான் காதல் கொண்ட நடிகர், நடிகை நடித்த முதல் காட்சிக்கு அவர் படத்தின் முன் தூப தீப ஆராதனை எல்லாம் செய்கிறார்கள். ஒரு நாலு ஊரில் ஒரு ரசிகர் மன்றம் இருந்தால்கூட, "அகில உலக" ரசிகர் மன்றம் என்று பெயர் வைப்பார்கள்!

தங்கள் நேரத்தை, பணத்தை, உழைப்பை எல்லாம் இந்த ரசிகர் மன்றத்துக்கு வீணடிப்பார்கள். பிற நாடுகளில் இப்படி இருக்கிறதா? இல்லை! இல்லவே இல்லை!!

அங்கெல்லாம் அவர்களுக்கு அவர்கள் தொழில்தான் முக்கியம். அவர்கள் குடும்பம் மனைவி மக்கள்தான் முக்கியம். வீட்டில் சினிமாக்காரர்கள் படமோ, அரசியல் தலைவர்கள் படமோ மாட்டப்பட்டிருக்காது. மாறாக குடும்பப் படம், அவர்களை வளர்த்த அவர்களின் பெற்றோர் படம் இவைதான் இருக்கும்.

சினிமா நடிகர் என்பவர் பஸ் டிரைவரைப் போல, ஓட்டல் சர்வரைப் போல ஒரு தொழில் செய்கிறார், அவ்வளவுதான். ஒரு ஓட்டல் சர்வர் பிரமாதமாக நல்ல காப்பி போட்டுத் தருகிறார் என்று நாம் அவருக்கு ரசிகர் மன்றம் வைக்க முடியுமா? ஒரு பஸ் டிரைவர் மிக நன்றாக ஓட்டுகிறார் என்பதற்காக ஒவ்வொரு முறை பஸ் புறப்படும்போது அவருக்கு மாலை போட்டு தீபம் காட்டி அவரை வழி அனுப்புகிறோமா?

செய்வதில்லை!

அதுபோலத்தான் ஒரு நடிகரும் சரி, அரசியல்வாதியும் சரி. அவர்கள், அவர்கள் வேலையை - தொழிலைச் செய்கிறார்கள். நாம் நம் தொழிலில் கவனம் செலுத்தினால்தான் நாம் பிழைக்க முடியும்; நமக்கு சாப்பாடு கிடைக்கும்!

சினிமா கனவு!

நமது ஊரில் இளைஞர்கள் எல்லாரும் சினிமாவில் சேர்ந்து நடிகராகிவிடலாம், கை நிறைய சம்பாதித்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். வீட்டுக்கு வீடு எல்லாரும் நடிகர்களும் நடிகைகளுமாக மாறி விடுகிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உங்கள் அப்பா, நீங்கள், உங்கள் தம்பி, உங்கள் அம்மா, அத்தை, தங்கை எல்லாரும் நடிகர்கள் - நடிகைகள் என்று யோசித்துப் பாருங்கள்!

பக்கத்து வீட்டிலும் இப்படியே! ஊர் முழுவதும் எல்லாரும் இப்படி ஆசைப்பட்டு தமிழ்நாடு நடிகை, நடிகர்களால் நிறைந்திருக்கிறது என்றால் பிழைப்பு எப்படி நடக்கும்?

வீட்டிலுள்ள எல்லாரும் உழைத்து அதிகமான நெல்லையோ, வாழைக்காயையோ, மல்லிகைப் பூவையோ உற்பத்தி செய்தால், மிகுந்ததை வெளி நாடுகளுக்கு அனுப்பி நாம் பணம் பெற முடியும். அந்தப் பணத்தை வைத்து நாம் நமக்கு வேண்டிய வெளிநாட்டுப் பொருளை வாங்கிக்கொள்ள முடியும்.

மாறாக, நம் நாடு நடிகர்களாலேயும் வழக்கறிஞர்களாலும், டாக்டர்களாலும், ஆசிரியர்களாலும், காப்பிக் கடைகாரர்களாலும், பார்பர் கடையினாலும் நிறைந்திருக்கிறதென்றால் என்ன ஆகும்? இந்தத் தொழில் எல்லாம் முதலில் கூறிய உற்பத்தி செய்கிறவர்களுக்கு, அவர்கள் குழந்தைகளுக்கு, குடும்பத்திற்கு உதவுகிற தொழில்கள்தான். அதாவது பிறருக்குத் தொண்டு செய்கிற தொழில்கள். ஆகவேதான் பொருளாதாரத்தை "உற்பத்தி செய்கிற இனம்" என்றும் அவர்களுக்கு உதவியாக "தொண்டு செய்கிற இனம்" என்றும் இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள்.

நம் நாட்டில் உற்பத்தி என்றைக்கு அதிகமாகிறதோ அன்றுதான் எல்லாரும் அதிகமான வளத்தைக் காண முடியும். எல்லாரும் அந்த அதிக விளைச்சலைப் பங்கு போட்டுக் கொள்ள முடியும். நம் வருமானம் அதிகமாகும்.

எல்லா நாடுகளிலும் உற்பத்திக்கும் - தொண்டு வேலைக்கும் ஒரு விகிதம் இருக்க வேண்டும். தொண்டு வேலைக்கு ஆள் அதிகம் இருக்கிறார்கள். உற்பத்திக்குப் போதிய ஆள் இல்லை. நாம் எல்லாரும் வசதியுடன் வாழ வேண்டுமானால் நம் நாடு நிறைய உற்பத்தியாளர்களால் நிறைய வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு பணக்கார நாடாக, பஞ்சாப் போல, குஜராத் போல ஆக முடியும்.

நமது வருமானம் போல இரண்டரைப் பங்கு சம்பளம் அதிகமாக அங்கே பஞ்சாபில் இருப்பவர்கள் பெறுகிறார்கள். அதனால் தான் அந்த மாநிலத்து மக்கள் சொந்த வீடு வைத்துக் கொண்டும், மோட்டார் சைக்கிள், கார் வைத்துக் கொண்டும், நல்ல வேட்டி சட்டை போட்டுக் கொண்டும், வசதியுடன் வாழ்கிறார்கள். நாமோ, நமது ஊர்காரர்களோ அவர்களுக்கு வேலை செய்ய டெல்லிக்கும் பம்பாய்க்கும் போய்க் கொண்டிருக்கிறோம்!

சினிமா! சினிமா!

சமீபத்தில் நான் புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். ஒரு புத்தக வெளியீட்டாளரான இளைஞர் சொன்னார் :

"ஐயா! எத்தனையோ நல்ல புத்தகங்கள் போட்டேன். விற்பனை இல்லை; வாங்குவோர் இல்லை. சில மாதம் முன் "சினிமாவில் சேருவது எப்படி?" என்று ஒரு புத்தகம் எழுதினேன். சின்னப் புத்தகம்தான். ஆனால், சில மாதங்களில் அது மூன்று பதிப்பு வெளி வந்துவிட்டது. விற்பனை 'ஓகோ!' என்று போகிறது!" என்றார்.

"சுயமாக உழைத்து முன்னேறுவது எப்படி?", "நீங்களும் எப்படி ஒரு தொழில் அதிபர் ஆகலாம்?" என்று நான் ஒரு இருபது ஆண்டுகளாக தன் முன்னேற்ற நூல்கள் எழுதி வருகிறேன். இப்போது நிறைய பேர் இப்படி எழுதி வருகிறார்கள். இந்தப் புத்தகங்கள்தான் அதிகம் விற்கின்றன என்று பதிப்பாளர்கள் சொல்கிறார்கள்.

இருந்தாலும் "சினிமாவில் சேருவது எப்படி?" ஓராண்டிற்குள் மூன்று பதிப்பு விற்பனை ஆகிறதென்றால், நம் இளைஞர்கள் உழைத்து முன்னேறுவதில் நம்பிக்கை வைக்கிறார்களா? நிரந்தரமாக வெற்றி பெறுவதில் நம்பிக்கை வைக்கிறார்களா? அல்லது திடீர்ப் பணக்காரராவதில் நம்பிக்கை வைக்கிறார்களா? அல்லது நிரந்தரமில்லாத ஒரு தொழிலில் மோகம் கொண்டு திண்டாட முன் வருகிறார்களா, யோசித்துப் பாருங்கள்!

வாழ்வில் எது முக்கியம், எது சரியான வழி என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய தொழில் நிர்வாகத்தில் மெத்தப் படித்தவர்கள் தொழில் வெற்றி பெறுவதன் இரகசியம் "எது முக்கியம்?" என்பதை உணர்வதுதான். அதைத்தான் ஆங்கிலத்தில் 'பிரையாரிட்டி' (Priority) என்று அடிக்கடி சொல்வார்கள். நீங்களும் 'எது முக்கியம்?' என்று நாலுமுறை சொல்லிப் பாருங்கள் - ஒரு வேலை தொடங்குவதற்கு முன்னால், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

- டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி