ஓய்வின்றி உழைப்பதால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிடுவதில்லை. அந்த உழைப்பின் பயன் வெளிப்பட ஓர் அரண் வேண்டும். ‘திட்டமிடல்’ என்பதுதான் அந்த அரண்!
”வாழ்வில் வெற்றி பெற்றவர்களைப் பாருங்கள்! அவர்கள் ஓய்வின்றி உழைத்தவர்களாகவே இருப்பார்கள்”.
இப்படி ஒரு கருத்தை நாம் எல்லோருமே கேட்டிருக்கிறோம், இதில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்புள்ளதா? இல்லை! “உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்" என்ற கருத்தில், என்ன வேறுபாடு சொல்லமுடியும்?
ஆனால், இந்தச் சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியில், சொல்லில் வராத செய்தி ஒன்று புதைந்திருக்கிறது! என்னவென்று ஊகிக்க முடிகிறதா உங்களால்?
செக்கு மாட்டிற்கும் வண்டி மாட்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமையைக் கேட்டால் எதைச் சொல்வீர்கள்? இரண்டு மாடுகளும் நடந்து கொண்டே இருக்கின்றன; இது ஒற்றுமை. என்ன நடந்தாலும், செக்கு மாடு, இருக்கும் இடத்தை விட்டு ஓர் அடிகூட முன்னேறுவதில்லை! ஆனால் வண்டிமாடு கிளம்பின இடமும் போய்ச் சேரும் இடமும் வெவ்வேறு. இது வேற்றுமை.
நடந்துகொண்டே இருப்பதாலேயே, முன்னேறிக் கொண்டு இருக்கிறோம் என்பது பொருளில்லை. உடற்பயிற்சிக் கூடங்களிலும், உடல் தகுதி காணும் சில மருத்துவமனைகளிலும், ஒரு நடைக்கருவி (Treadmill) வைத்திருப்பதை நீங்கள் கண்டிருக்கக்கூடும். சிலர் அதில் நடப்பார்கள். சிலர் வேகமாக மூச்சிரைக்க, வேர்வை வழிய ஓடுவார்கள். ஆனால் ஓர் அங்குலம்கூட முன்னே செல்ல மாட்டார்கள்.
இது உடற்பயிற்சிக்குப் பொருந்தும். வாழ்க்கைக்குப் பொருந்துமா? நடப்பதன் நோக்கமே ஓர் இடம் விட்டு வேறு இடம் போக வேண்டும் என்பதுதானே? “இங்கிருந்து கிளம்புகிறேன்; இந்த இடத்தை அடைவேன்” என்ற தெளிவுடன் நடப்பவனே, குறித்த இடத்தை விரைவில் அடைகிறான். தெருத் தெருவாக நடந்து கொண்டே இருந்தால் பயன் உண்டா? ‘பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர்போய்ச் சேராது’ என்றார் கண்ணதாசன்.
இது உழைப்புக்கும் பொருந்தும். ஓய்வின்றி உழைப்பதால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிடுவதில்லை. அந்த உழைப்பின் பயன் வெளிப்பட ஓர் அரண் வேண்டும். ‘திட்டமிடல்’ என்பதுதான் அந்த அரண்!
உழைப்பின்றி ‘இப்படிச் செய்ய வேண்டும்! அப்படிச் செய்யவேண்டும் என்பவர்களை ‘வாய்ச்சவடால்’ பேர்வழி என்கிறோம். ‘ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டியதைப்போல’ என்ற பழமொழியும் இவர்களைக் குறிக்கிறது. உழைப்பில்லாத திட்டமிடல் வெறும் வீண் பேச்சுதான். ஆனால் திட்டமிடாத உழைப்பு?
‘விழலுக்கு இறைத்த நீர்’ என்ற பழமொழி இந்தக் கருத்தையே வலியுறுத்துகிறது. நீர் இறைப்பது என்பது கடினமான உழைப்புதான். ஆனால், இறைக்கும் நீர், எங்கே போய்ச் சேர வேண்டுமோ, அதை நோக்கிப் பாயவேண்டும். இல்லா விட்டால் நீரை இறைத்துத்தான் என்ன பயன்?
திட்டமிடுதலும், செயல்படுதலும் இணைந்தால்தான் வெற்றியின் வாசல் தென்படுகிறது. நாட்டின் எதிர்காலம் குறித்துத் திட்டமிடுவதற்கு ஆணையம் (Planning commission) வைத்திருக்கிறது அரசு. திட்டமிடல் என்பதுதான் வேர். செயல்படல் என்பது, கிளைபரப்பி தளிர் விட்டு மலர் தருவது! வேரின்றி அமையாது மரம்!
ஓர் இராணுவத்திற்கு வெற்றி எதிரிகளைத் தாக்குதலால் மட்டும் வருவதில்லை! தாக்குதல் நடத்தப்போகும் நேரத்தையும், முறைகளையும், வேகத்தையும் திட்டமிட்டுக் கொண்டு களத்தில் இறங்கினால்தான் வெற்றி சாத்தியமாகிறது. தேர்வுக்குப் படிக்கும் மாணவன் தொடங்கி, பெரும் நிறுவனம் நடத்தும் முதலாளி வரை, திட்டமிட்டு செயல்படுபவரே வெற்றி பெறுகிறார்கள்.
ஒருமுறை தோற்றவர், மறுமுறை வெல்வதற்கான முதற்காரணம், எப்போதும் திட்டமிடுதலாகவே இருக்கிறது. இமய மலையின் எவரெஸ்ட் சிகரத்தை முதலில் ஏறி சாதனை புரிந்தவர் எட்மண்ட் ஹிலாரி என்னும் செய்தி எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலருக்குத் தெரியாத செய்தி ஒன்றுண்டு. அவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடவில்லை என்பதே அது.
மலையேற முடியாமல் திரும்பிய போது, எட்மண்ட் ஹிலாரி சொன்ன சொற்கள் மிக உயர்ந்தவை. எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி அவர் சொன்னார்: “உன்னை நான் கண்டிப்பாக வெல்வேன்; உன் சிகரத்தில் நான் கால் பதிப்பது உறுதி. காரணம், உனக்கு இதற்கு மேல் வளர்ச்சியில்லை. அது நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது. ஆனால், நான் இன்னும் முயல்வேன்; வளர்வேன்”.
மலையேறுதல் என்னும் அவரது செயலில் மாற்றம் ஏதுமில்லை. ஆனால் கடுமையான பயிற்சி உட்பட அனைத்தும் திட்டமிட்டு செயல்பட்டபோது, அந்த செயலுக்குரிய பலன் எட்மண்ட் ஹிலாரிக்கு கிடைத்து விட்டது.
உலகத்தையே வெல்வதற்கு வழி சொல்லவில்லையா நம் வள்ளுவன்?
‘ஞாலம் கருதினும் கைகூடும்; காலம்
கருதி இடத்தால் செயின்’
செயல்பட வேண்டிய காலத்தையும், செயல்பட வேண்டிய இடத்தையும் திட்டமிட்டுக் கொண்டு செயல்படுபவர்கள் எதைப் பெற விரும்புகிறார்களோ அதைப் பெற்றுவிடுகிறார்கள்!
‘திட்டமிடல்’ என்பதும் வறட்டுத்தனமாக இருந்து பயனில்லை. அறிவினாலும், அனுபவத்தினாலும் தீட்டப்பட்டதாக அது இருக்க வேண்டும். வள்ளுவனே அதற்கும் வழிகாட்டி விடுகிறான்.
'வினைவலியும், தன்வலியும், மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்'
செய்ய விரும்பும் செயலின் தன்மையையும் அதைச் செய்து முடிக்கத்தேவையான ஆற்றலையும் முதலில் அறிந்து கொள்ளல்; செயலை செய்து முடிப்பதற்கான ஆற்றல் தன்னிடம் ஏற்கனவே உள்ளதா - இல்லை, இன்னும் பெருக்கிக்கொள்ள வேண்டுமா என்பதை உணர்ந்து கொள்ளல்.
செயலை நாம் செய்து முடிக்க நமக்குச் சவாலாக இருப்பவர் எவர் என்றும் அவரது ஆற்றலின் அளவு என்ன? என்றும் தெரிந்து கொள்ளல்; அவருக்குத் துணையாக எவரேனும் வருவரா என்பதையும் வருபவரின் ஆற்றல் என்ன? என்பதையும் ஆய்ந்து கொள்ளல்; நமக்குத் துணையாக செயல்பட எவரேனும் உள்ளனரா என்பதையும் அவரின் ஆற்றலையும் புரிந்து கொள்ளல்!
எச்செயலை செய்வதற்கும் திட்டமிடல் என்பது அளவுக்கு கூர்மைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பதை விளக்கவே வள்ளுவன் இவ்வாறு அடுக்கிக்கொண்டு செல்கிறான்.
“ஒரு மரத்தை வெட்டுவதற்கு 45 மணித்துளிகள் நேரம் தந்தால், அதில் முதல் 40 மணித் துளிகளை ஆயுதத்தைக் கூர்மைப்படுத்தவே செலவிட வேண்டும்” என்ற முதுமொழியைக் கேட்டிருக்கிறீர்களா?
"30 நிமிட மேடைப்பேச்சை 5 நிமிடங்களில் நான் தயாரித்து விடுவேன். ஆனால் 5 நிமிட மேடைப்பேச்சினை தயாரிக்க எனக்கு 30 நிமிடங்கள் வேண்டும்” என்றார் மிகச் சிறந்த பேச்சாளரான சர்ச்சில்.
மிகச்சரியாகவும் கூர்மையாகவும் திட்டமிடுதலே சிக்கல்கள் வராமல் தடுக்கின்றன; எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட சிக்கல்களிலிருந்து தப்பிக்கவும் வைக்கின்றன.
‘வாழ்க்கை ஒரு மிக மோசமான ஆசிரியர்’ என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பாடம் நடத்தி, தேர்வு வைத்து அதில் தேர்ச்சியடையவில்லை என்றால், ஆசிரியர் தண்டனை தருவார். வாழ்க்கையோ முதலில் தேர்வு நடத்தி, தண்டனை வழங்கிவிட்டு அதிலிருந்து ஒரு பாடத்தை நமக்குக் கற்றுத்தருகிறது.
திட்டமிட்டு படிக்காத மாணவனுக்கு ஆசிரியர் தண்டனை தருகிறார். திட்டமிட்டு செயல்படாதவனுக்கு வாழ்க்கையே தண்டனையாகி விடுகிறது.
‘வாழ்க்கை என்பது போராட்டமா? பூந்தோட்டமா? என்ற தலைப்பில் பட்டி மன்றங்கள்கூட நடத்தப்படுகின்றன. விடை மிக எளிதானது. வாழ்க்கையைப் போராட்டமாக எடுத்துக்கொண்டு திட்டமிட்டு செயல்படுபவர் களுக்கு அது பூந்தோட்டமாக விரிகிறது. பூந்தோட்டமாக எண்ணி அமர்ந்திருப்பவர்களுக்கு அது என்றும் போராட்டமாகவே இருக்கிறது.
மலர்ப் பாதையாக வாழ்க்கை எப்போதுமே இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அது சலிப்பினைத் தந்துவிடும்.
அடங்காத அலைகள் நிறைந்த கடலைப் போல, எதிர்பாராத ஏற்றங்களும் இறக்கங்களும் வளைவுகளும் நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். அமைதியான கடல் என்றுமே திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை.
ஆர்ப்பரிக்கும் கடலை எதிர்கொண்டு செல்பவனே சிறந்த மாலுமியாக வளர்ச்சியடைகிறான். திட்டமிட்டு செயல்படுபவனே, வாழ்வின் ஏற்ற இறக்கங்களை மீறி வெற்றி பெறக் கற்றுக்கொள்கிறான்.
திட்டமிடுவது என்பது மிகப்பெரிய வேலை என்றும், நம்மால் அது முடியாது என்றும் எண்ணத் தேவையில்லை. எல்லோருக்குமே திட்டமிடல் என்பது ஓரளவுக்கு இயல்பாகவே இருக்கத்தான் செய்கிறது.
காலையில் உடற்பயிற்சிக்கோ அல்லது நடைப்பயிற்சிக்கோ நாம் அணியும் உடை வேறு. வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அணியும் உடை வேறு. ஒரு நேர்காணலுக்கோ, கல்லூரிக்கோ அல்லது அலுவல் தொடர்பாகவோ வெளியே செல்லும்போது அணியும் உடை வேறு. மறந்தும் கூட ஓரிடத்து உடையைப் பிற இடத்துக்கு நாம் அணிவதில்லை. பழக்கத்தில் நமக்குள் குடியேறிவிட்ட ஒரு சிறு அளவிலான திட்டமிடல்தான் அது.
நம்முடைய ஒவ்வொரு சொல்லும் அதை விரிவுபடுத்திக் கொள்ளவேண்டும் அவ்வளவுதான்.
சற்று முனைப்பு இருந்தால் இந்த பழக்கம் எளிதில் கைகூடும். வெற்றி இலக்கும் எளிதாகும்.
‘தன்மனத்தே நினைந்து செய்யும் கொடுமையால் அனந்தாள்’ என்று கைகேயியைக் கம்பன் குறிப்பதுபோல, திட்டமிட்டே கெடுதல் செய்பவர்கள் உண்டென்றால், நம்மால் திட்டமிட்டு நற்செயல்கள் செய்யமுடியாதா என்ன?
வாழ்க்கையைப் போராட்டமாக எடுத்துக்கொண்டு திட்டமிட்டு செயல்படுபவர்களுக்கு அது பூந்தோட்டமாக விரிகிறது. பூந்தோட்டமாக எண்ணி அமர்ந்திருப்பவர்களுக்கு அது என்றும் போராட்டமாகவே இருக்கிறது.
- வழக்கறிஞர் த. இராமலிங்கம்
நமது நம்பிக்கை (சூடு பறக்கும் சுயமுன்னேற்ற மாத இதழ்)
தலைப்பு : சுயமுன்னேற்றம்
தொழிலில் ஏற்படுகிற ஏற்றத்தாழ்வுகளால்
உங்கள் உறுதியும் தடுமாறுகிறதா?
உங்களை நீங்களே சரிபார்க்க…
இதோ சில அடிப்படை அவசியங்கள்!
வார்த்தைகளில் உண்மை:
சொன்ன வார்த்தைகளுக்கு உண்மையாக இருங்கள். சொன்ன நேரத்திற்கு எதையும் முடித்துத் தருவதில் உறுதியாய் இருங்கள்.
தவிர்க்க முடியாத தாமதங்களையும் முன் கூட்டியே கணித்து, முன்னதாகவே அறிவித்து, கூடுதல் அவகாசத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இது எப்போதாவது தான். எப்போதும் செய்யக் கூடியதல்ல. எந்த சமயத்திலும் நீங்கள் தந்த வார்த்தையின் தரத்தை தரைமட்டமாக்காதீர்கள்.
நேர மேலாண்மை:
நீங்கள் ஒப்புக்கொண்ட சந்திப்புகளுக்குத் தாமதமாக வருவது, சந்திப்பவர்களை அவமதிப்பது. நீங்கள் ஏற்பாடு செய்த சந்திப்புக்கு தாமதமாகச் செல்வது, உங்களை மதித்து வந்தவர்களை அவமதிப்பது. ஒவ்வொரு விநாடியும் மதிப்புள்ளது என்பதை உங்கள் செயல்பாடுகள் உணர்த்தும்போது வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்.
கணக்குகள் சமர்ப்பித்தல்:
நீங்கள் உண்மையானவர், நியாயமானவர் என்று பிறர் உங்களை போற்றக் காரணமாக இருப்பவை கணக்குகள். இனிப்பென்று நினைத்து கடித்த பழம் புளித்தால் முகம் சுளிப்பதுபோல் தவறான கணக்குகள் தருபவர்கள்மீது மற்றவர்களுக்கு மனச்சுளிப்பை ஏற்படுத்தும்.
பழகுவதற்கு எளிமையாக இருங்கள்:
உலகின் ஒரு நிறுவனத்தின் வெற்றி அதன் தலைவர்கள் பழக எளிமையானவர்களாக இருக்கிறார்களா என்பதைப் பொறுத்தே அமைகின்றன என்று நிர்வாகவியல் ஆய்வுகள் சொல்கின்றன. நீங்கள் பழக எளிமையானவர்களாக இல்லையென்றால் உங்களுடன் வணிக தொடர்பு வைத்துக்கொள்ள பெரும்பாலோர் தயங்குவார்கள். உங்களுடன் பணியாற்றக்கூடிய யாவரும் தங்கள் நிலையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இயலாது. இது உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிக்கும்.
கூட்டுமுயற்சி:
ஒரு நிறுவனத்தின் வெற்றி அதன் பின் இயங்குகிற ஒட்டுமொத்த குழுவை சார்ந்தே இருக்கிறது. தனி மனிதனின் திறமைகளைத் தாண்டி பிறரின் கருத்துகளுக்கு செவிசாய்த்து, மற்ற பணியாளர்களின் திறமைகளை அங்கீகரிக்கிற போது, நிறுவனத்தின் வெற்றி தானாகவே உயரும். இந்தக் கூட்டு முயற்சியின் மூலமாக சக பணியாளர்களிடையே நம்பிக்கை, பொறுமை, சிக்கல்களை எதிர்கொள்கிற விதம் என அத்தனை திறமைகளும் வளரும்.
செயலில் ஒழுக்கம்:
பலர், வேலை நேரங்களில் எந்நேரமும் வீண் பேச்சுகள் பேசி பொழுதைக் கழிப்பார்கள். அலுவலக உடைமைகளை தவறான வழியில் பயன்படுத்துவார்கள். புரளி பேசுவார்கள், உயர் அதிகாரிகளை விமர்சனம் செய்வார்கள். இது செயலொழுக்கம் இல்லாத சூழ்நிலை. இந்நிலையை மாற்ற ஒரு நிறுவனம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
துணிவு:
வெற்றியின் அடிப்படையே உங்கள் தடைகளை தகர்த்தெறிந்து செயலில் ஈடுபடுதல்தான். பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு வித்தியாசமான அணுகுமுறை மூலம் தீர்வு காணுகிறபோது உங்கள் போட்டி நிறுவனங்களுக்கு உங்கள் மீது பயம் ஏற்படுவது நிச்சயம். நீங்கள் அசந்துவிடுகிற நொடியில் உங்கள் கண்களுக்கு எட்டாதூரம் நீங்கள் பெற்ற வெற்றியை கடந்து உங்கள் போட்டியாளர் ஓடிக்கொண்டிருப்பார்! எனவே துணிந்து செயல்படுங்கள். உங்கள் திறமைகளை உணர்ந்து செயல்படுங்கள்.
அழுத்தத்தை எதிர்கொள்ளுங்கள்:
அழுத்தம் இல்லாத எந்த துறையும், வேலையும் இன்றளவும் கண்டுபிடிக்கப்படவில்லை. உங்கள் வேலையில் அழுத்தம் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. நிலத்தில் அழுந்திப் பதிகின்ற பந்துகள் விண் நோக்கி எம்புவது போல், நீங்கள் எதிர் கொள்கிற வேலையின் அழுத்தம் உங்களை வெற்றியின் உயரத்திற்குக் கொண்டு செல்லும்.
நீங்கள் தற்பொழுது அடைந்து உள்ள நிலை மிகவும் சுகமானதாக, போதுமானதாக தோன்றும். ஆனால் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் நகர வேண்டும். தேடுதலை நிறுத்தினால் தேக்கம்தான். எனவே தொடர்ந்து செயல்படுங்கள்!
- ரகுராம்
நமது நம்பிக்கை
தலைப்பு : சுயமுன்னேற்றம்
தவணை முறையில் வெற்றி காண்போம்.
சரியான நேரத்தில் எதையும் நிறுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இது பற்றி ஒரு பெரிய பட்டியலே தயாரிக்கலாம்.
பல விதமான முறைகளில் – பிறப்பு முதல் இறப்பு வரை, கவலையில் இருந்து தற்கொலை வரை – சிலர் தங்கள் துன்பத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள். வயிறு நிறைந்தவுடன் போதும் என்று சாப்பாட்டை நிறுத்தி விட வேண்டும், இல்லையேல் வயிறு பெருத்து சீக்கிரம் இறந்து விட நேரிடும்.
இது போலவே மதுபானம், பேச்சு போன்றவற்றையும் நிறுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.
பல உதாரணங்களைச் சொல்லலாம். இவைகள் போன்ற உடல் சம்பந்தப்பட்டவற்றை பழக்கத்தினால் நிறுத்தலாம். ஏனெனில் உங்கள் அறிவார்ந்த மனதுக்கு உடல் கட்டுப்படுகிறது. ஆகவே நிறுத்து என்றவுடன் தேவையற்றவைகளை நிறுத்த முடிகிறது.
உள்மனதில் கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளை நிறுத்துவது சாத்தியமில்லை. உடல் சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருந்தால்கூட உணர்ச்சி மயமானதாக இருந்தால் அவற்றையும் உள்மனத்தால் கட்டுப்படுத்த முடியாது.
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கையில் பிரச்சினைகள் தோன்றுகின்றன. பிரச்சினைகள் நிறைந்த இந்த உலகில் சங்கடங்களுக்கு முக்கிய காரணம் நிறுத்தத் தவறுவது தான். உணர்ச்சிமயமான பிரச்சினையைச் சமாளிக்க எப்படி நிறுத்துவது எப்பொழுது நிறுத்துவது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர்மறை உணர்ச்சியை அதிகரிக்க விடாதீர்கள். குறை கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. குறை சொல்வதில் பயன் இல்லை. குறை சொல்லத்தான் வேண்டும் என்றால் அதிகம் உணர்ச்சி வசப்படாமல் கூறலாம். அதில் எரிச்சல், பழிவாங்குதல், வெடுவெடுப்பு, வெறுப்பு போன்ற எதுவும் தலைகாட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மிருதுவாக, விசனம் இல்லாமல் நல்ல எண்ணத்தோடு நீங்கள் வழிகாட்டுவதாக உணர்த்திக் குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள். அத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
அது அவர்களுக்குத் தொல்லை தரும் வரை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.
சிறு சண்டையே காரசாரமான விமர்சனங்களுக்கு வழி செய்கிறது. உங்கள் விமர்சனம் எதுவரை செல்லுபடியாகும் என்பதைப் புரிந்து கொண்டு அத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். விவாதத்துக்கு இடம் கொடுத்து சர்ச்சையை வளர்க்காதீர்கள். அந்தப் பேச்சை அதற்குப் பின் எடுக்காதீர்கள்.
உங்கள் உணர்வுகள் பாதிக்கப்பட்டனவா? எல்லோருடைய மனதுக்கும் மூன்று விதமான ஆசைகள் உண்டு:
1) மற்றோர் மனதில் முக்கியமானவர்களாய் இருக்க வேண்டும்.
2) தம்மைப் பிறர் புகழ வேண்டும்.
3) பாராட்ட வேண்டும்.
இவைகளைப் புரிந்து கொள்ளாத சிலர் உங்களை அவமானப்படுத்தி இருக்கலாம். இதனால் உங்கள் உணர்வுகள் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
இவைகளைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். அதை மீண்டும் மீண்டும் நினைத்துக் கவலையை அதிகரிக்காதீர்கள்.
நடந்தது நடந்து விட்டது, நிறுத்துங்கள்.
நடந்தவற்றை மாற்ற முடியாது. அதை நினைத்திருக்காதீர்கள். நிறுத்துங்கள்.
உங்களைப் போலவே மற்றவர்களுக்கும் கவலைகள் உண்டு. கவலையைப் போக்க என்ன செய்தால் என்று யோசித்தால் பலன் உண்டு, துன்பத்திலேயே தோய்ந்திருந்தால் என்ன லாபம்?
தொல்லை தரும் கவலையை, பிரச்சினைகளைத் தீர்க்க ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்கள். உங்கள் கவலைக்குக் காரணம் எதுவாக இருந்தாலும் நிறுத்திவிடுங்கள். நிறுத்துவது தொடர வேண்டும்.
எல்லோரும் எல்லோரையும் விரும்ப முடியாது. உங்களுக்கு சிலரைப் பிடிக்காமல் இருக்கலாம். அத்தோடு நிறுத்தி விடுங்கள்.
“எனக்குப் பிடிக்காதவரைப் பற்றி நான் நினைப்பதே இல்லை“ என்று ஐசன் ஹோவர் கூறினார்.
அந்த எண்ணங்கள் வந்தவுடன், அவனை/அவளை எனக்குப் பிடிக்காது. நிறுத்தவும். அவ்வளவு தான். அதன் பிறகு மனதில் வேறு எண்ணங்களைச் செலுத்தவும்.
யாருக்குத் தான் தொல்லைகள் இல்லை? அவைகளோடு கவலைகளைச் சேர்த்து துன்பம், பயம் என்று அதிகரித்துக் கொண்டே செல்வானேன்?
எதிர்மறை உணர்வுகளை அதிகரிக்காதீர்கள். முடியுமானால் தீர்வு காணுங்கள், இல்லையேல் நிறுத்தி விடுங்கள்.
விதி ஒரு கதவை மூடினால் நம்பிக்கை மற்றொரு கதவைத் திறக்கிறது. அதை நம்பலாம். நிறுத்தவும்.
மகத்தான நதி போல் செயற்படுங்கள்...!
மகத்தான நதி தன்னுடைய புகலிடம் நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கிறது. அது அங்கு நிச்சயம் சென்றடையும். அது தன் வழியை வகுத்துக் கொண்டுவிட்டது.
நீங்களும் அது போல் செயற்படுங்கள்.
நீங்கள் போய் சேர வேண்டுய இடம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைக் குறிக்கோளை அடைய ஒரு வழியும் உங்களுக்குப் புலப்பட வேண்டும்.
மகத்தான நதியைப் போல் அந்த வழியிலேயே உங்கள் பயணம் முன்னேறட்டும்.
வெள்ளம் வந்து நதியின் போக்கை இலேசாக மாற்றலாம். ஆனால் வெள்ளம் வடிந்த பின்னர் நதி தன் வழியாகவே செல்லும். அது தன் இலக்கை நோக்கி ஓடிய வண்ணமே இருக்கும்.
நீங்களும் அவ்வாறே செயல்படுங்கள்.
உங்கள் வழியிலும் பல பிரச்சினைகள் தோன்றலாம். மகத்தான நதியைப் போல் மீண்டும் உங்கள் வெற்றிப் பாதைக்கு வந்து சேருங்கள். உங்கள் குறிக்கோளை நோக்கி நகர்ந்த வண்ணம் இருங்கள்.
நதியின் ஓட்டம் ஒரே சீராக இருக்காது, சில நேரம் வேகமாகவும், சில நேரம் மெதுவாக அமைதியாகவும் ஓடும். ஆனால் தன் புகலிடம் நோக்கி எப்போதும் ஓடியவாறே இருக்கிறது.
நீங்களும் அவ்வாறே செயல்படுங்கள்.
மெல்ல நகர்வது நதியின் ஓட்டத்தைப் பாதிப்பதில்லை, வேகம் முக்கியம் இல்லை. தொடர்ந்து உங்கள் குறிக்கோள் நோக்கிய பயணம் தான் முக்கியம். உங்கள் முன்னேற்றத்தை நதியின் ஓட்டத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். தொடர்ந்து முன்னேறும் இயக்கத்தை உணருங்கள்.
உங்கள் வாழ்க்கை குறிக்கோள் நோக்கி வழிநடக்கட்டும். திட்டமிட்ட வழியிலிருந்து திசை திரும்பாதீர்கள். மகத்தான தடுத்து நிறுத்த முடியாத சக்தியை உங்களுக்குள் உணருங்கள்.உங்கள் குறிக்கோளை அடைவதில் உறுதி மனதில் ஆழமாகப் பதிந்திருக்கட்டும்.
தொடர்ந்து ஓடுவதான, தடுக்க முடியாத மகத்தான ஓர் இயக்கம் உங்கள் வாழ்க்கை சென்றடையும் வழி என்று உணருங்கள்.
இந்த அசையும் நதியின் உணர்வு சதா உங்களுக்குள் இருக்கட்டும்.
-காப்மேயர்
தலைப்பு : சுயமுன்னேற்றம்
கடந்த காலம் கழிந்து விட்டது !
நீங்கள் நிகழ்காலத்தில் தான் வாழ முடியும்; கடந்தது கடந்தது தான். இந்த வாக்கியத்தை நீங்கள் நினைவில் நிறுத்தித் தொடர்ந்து கூறிவந்தால், அது உங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றியமைக்கும்.
நீங்கள் இறந்த காலத்தில் வாழ முடியாது. பழைய சுகங்களை அசை போட்டு அனுபவிக்கலாம். பழைய துக்கங்களை உங்களால் முழுவதும் மறக்க முடியாமல் போகலாம். ஆனால் நீங்கள் பழைய சுகங்களையும் துக்கங்களையும் பழைய நிகழ்ச்சியாகளாகவே பார்க்கவேண்டும்.
நினைவுகளாக அவை உங்கள் மனதில் நிற்கலாம், ஆனால் நிகழ்கால உணர்ச்சிகளாக அல்ல.
புத்திசாலித்தனமாக, வெற்றிகரமாக, மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்கு இது ஒரு முக்கியமான பாடமாகும். பழைய சுகங்களும் பழைய துக்கங்களும் மறைந்து விட்டன.
இறந்த காலம் கடந்து சென்றது. கதவை மூடிவிடுங்கள்.
பழைய சுகங்களும் பழைய துக்கங்களும் வெறும் நினைவுகளே. அவற்றை நிகழ்கால உணர்ச்சிகளாக மறு அவதாரம் எடுக்க வைக்காதீர்கள். இறந்த காலம் சென்று மறைந்தது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். நிகழ்காலம் கண் முன் இருக்கும் உண்மை. இறந்த காலத்தில் வாழவோ இல்லை அதை மாற்றவோ நம்மால் முடியாது.
உங்கள் கடந்த காலத் தவறுகளும் சென்று ஒழிந்துவிட்டன. அதன் விளைவுகள் சில நிகழ்காலத்திலும் உங்களுக்கு இடைஞ்சல் தரலாம். நிகழ்காலத்தில் அவற்றை எதிர் கொள்ள வேண்டி வரலாம். நடந்து முடிந்த தவறுகளைத் திருத்த முடியாது. அவற்றிலிருந்து உண்மைகள் உணரப்பட வேண்டும். உணர்வு பூர்வமாக அலசுங்கள் – உணர்ச்சி பூர்வமாக அன்று.
பழைய சோகங்கள், தவறுகள், எரிச்சல் இவற்றை நினைத்து உணர்ச்சி வசப்படுவோர் – நிகழ்காலச் சங்கடங்களை அதிகமாக்குகிறார்கள். மகிழ்ச்சியற்ற கடந்த காலத்தின் நினைவுகள் பற்றி உணர்ச்சி வசப்படும்போது நிகழ்காலம் மகிழ்ச்சியற்றதாகத்தான் இருக்கும்.
சென்றவை சென்று ஒழிந்தது, கதவைச்சாத்துங்கள்.
நிகழ்காலத்தில் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கும் கதவைத் திறந்து வையுங்கள். இன்று கைகொடுப்பவை நிகழ்கால வாய்ப்புக்கள் மட்டுமே.
இன்று இப்பொழுது தான் நம்முடைய நேரம்.
- காப்மேயர்
தலைப்பு : சுயமுன்னேற்றம்
அதிகாலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு, நெற்றிக்கு இட்டுக்கொண்டு, நேற்று பாதியில் நிறுத்திவிட்ட பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கிறார் நமது நண்பர் முருகன். இந்த வேலைகளை செய்வதற்கு அவரது கண்கள் முதலான ஐம்புலன்களும் கால் கை முதலான உடல் கருவிகளும் உதவுகின்றன. கண் முதலான கருவிகளை அறிவுக் கருவிகள் என்றும் கை முதலான கருவிகளை செய்கருவிகள் என்றும் நாம் அழைக்கலாம். இவை யாவும் முருகனின் உடம்புக்கு வெளியே நிகழும் செயல்களுக்குக் காரணமாக உள்ளன. ஆதலால் இவற்றைப் புறக் கருவிகள் என்று அழைப்பது வழக்கம்.
முருகனின் செயல்களுக்கெல்லாம் புறக்கருவிகள் மட்டுமே காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இவை வேலைகளைச் செய்வதற்கு முன்பு முருகனுக்குள்ளே, அவனது மூளையில் எண்ணங்கள் உருவாக வேண்டுமல்லவா? அந்த எண்ணங்களின் தொகுப்பைத்தான் நாம் பொதுவாக மனம் என்று குறிப்பிடுகிறோம். மனமானது உள்ளிருந்தபடி செயல்படுவதால்தான் முருகனின் உடல் வெளியிருந்தபடி செயல்படுகிறது. ஆதலால் மனத்தொகுப்பை அகக் கருவி என்று சொல்கிறார்கள்.
கண்முதலான அறிவுக்கருவிகளையும், கை முதலான செய் கருவிகளையும் புறக்கருவிகள் என்றும் மனத்தை அகக்கருவி என்றும் வகைபடுத்துகிறோம். மனம் என்ற அகக்கருவியை மனம், புத்தி, அகங்காரம், சித்தம், என்று விரித்து நான்காவும் சொல்லலாம். மனம் என்று ஒரு பொதுச் சொல்லலும் அழைக்கலாம். மனத்தை ஒரு பொருளாகக் கொள்ளாமல் மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்று நான்காக விரித்து அழைப்பதற்குக் காரணம் இருக்கிறது. மனம் செயல்படும் விதத்திலிருந்து இப்படி நால்வகை பிரிவுகளை அறிய முடிகிறது. மேலை நாட்டு விஞ்ஞானமும் உளவியலும் மனத்தை இப்படி பாகுபடுத்தி அறிய முற்படுவதில்லை. இந்திய சித்தாங்களில் மட்டுமே இது போன்ற விரிவான விளக்கங்கள் காணப்படுகின்றன.
கண்கள் காண்பதை காது அறிவதில்லை. அதுபோலவே காது அறிந்ததை கண்களோ நாக்கோ அறிவதில்லை. எனவே அறிவுக்கருவிகளாகிய இவை வெறும் கேமரா, மைக் போன்ற சாதனங்களே ஒழிய கண்டதையோ உண்டதையோ கேட்டதையோ தாமாக அறிவதில்லை. மூளையில் இவற்றிற்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இவற்றிலிருந்து வழங்கப்பட்ட தகவல்கள் யாவும் உணர்வுகளாக மாற்றப்பட்டு மனம் என்ற கருவியாலேயே அறியப்படுகிறது. மனமானது ஐந்து புலன்களிலிருந்தும் வரும் தகவல்களை ஒருங்கிணைத்து அறிகிறது. மனத்தின் வேலை தகவல்களை ஒருங்கிணைப்பதாக இருந்தாலும் அதனால் கண்டதையோ கேட்டதையோ இன்னதென்று அறிவதற்கு அது புத்தியின் துணை வேண்டும்.
புத்தி என்பது கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் போன்றது. அதில் பிறந்தது முதல் கண் காது முதலான அறிகருவிகள் மூலம் அறிந்தது, அனுபவத்தால் கற்றது, பள்ளிக்கூடத்தில் பயின்றது ஆகிய அனைத்தையும் பதித்து வைத்துக்கொண்டுள்ளது. மனித மூளையின் செரிபிரல் கார்ட்டெக்ஸின் பெரும்பகுதி இந்தத் தகவல்களுக்காகத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தியில் தகவல்களைப் பதிக்கும் வேலையை மூளையின் மையத்தில் இரு பக்கவாட்டிலுமுள்ள ஹிப்போகேம்ப்பஸ் என்ற எழுத்தாணிதான் செய்கிறது.
மனமானது புத்தியின் உதவியுடன் கருவிகள் மூலம் அறிந்ததை இன்னது என்று தெளிகிறது. மனத்தை நாம் கம்ப்யூட்டரின் ரேம் நினைவாகக் கொள்ளலாம். தற்காலிக நினைவு மட்டுமே மனத்தில் இருக்கும். அவை நிரந்தரமாக்கப்படவேண்டுமாயின் புத்தியில் அவை பதிந்தாக வேண்டும். சித்தம் என்பது சிந்திக்கும் வேலையைச் செய்யும் அகக்கருவி. புத்தி வெறும் நினைவகமாக இருப்பதால் அது கோப்புகளை சேமித்து வைக்கும் கிடங்கு என்றுதான் கொள்ளவேண்டும். எனவே சித்தம் எனும் அகக்கருவி மனத்தினால் அறிந்ததை புத்தியின் கண் உள்ள தகவலின் அடிப்படையில் இது இப்படித்தான் என்று நிச்சயிக்கும் வேலையையும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் செயலையும்; இப்படி செய்யலாம் என்று திட்டம் போடும் வேலையையும் செய்கிறது.
மனம் அறிந்ததை சித்தமானது புத்தியின் உதவியால் நிச்சயம் செய்கிறது என்பதை அறிந்தோம். இத்தனை செயலும் யாருக்காக எனில் அது ஆங்காரம் எனப்படும் இன்னொரு அகக்கருவியின் பயனுக்காகவாம். ஆங்காரம் அல்லது அகங்காரம் இல்லாமல் மனமோ-புத்தியோ-சித்தமோ செயல்பட்டுப் பயனில்லை. கம்ப்யூட்டரில் புத்திக்கு நிகரான திட நினைவகம் இருந்தும், மனத்திற்கு நிகரான ரேண்டம் அக்சஸ் நினைவு இருந்தும், சித்தத்திற்கு நிகரான மென் பொருட்கள் செயல்பட்டாலும் அதில் ஆங்காரம் எனும் அங்கம் இல்லாதால் கம்ப்யூட்டர் என்ன செய்தாலும் அதன் பயனை அது அனுபவிக்க முடியாமல் போகிறது. மனம், புத்தி, சித்தம், என்ற மூன்று உறுப்புகளை கம்ப்யூட்டர் பெற்றிருந்தாலும் அதற்கு ஆங்காரம் எனப்படும் "நானிருக்கிறேன், என்னுடையது" போன்ற செயல்கள் இல்லாததால் அது சடக் கருவியாகவே உள்ளது.
இன்றைய நவீன உளவியலும் நரம்பியலும் சேர்ந்து மூளையின் செயல்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் மனம் புத்தி சித்தம் ஆங்காரம் என்று வேறுபடுத்தி ஆராயாவிட்டாலும் மேற்கூறிய பகுதிகளை வேறு பெயர்களில் சுட்டிக்காட்டியபடி இருக்கிறார்கள். ஆங்காரம் என்பதை அவர்கள் கான்சியஸ் என்று அழைக்கிறார்கள். கான்சியஸானது மூளையில் எப்படி உருவாகிறது என்பதில் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. புத்தி எனும் பகுதியை மெமொரி என்று அழைக்கிறார்கள். மனம் என்பதை மென்ட்டல் ஆக்டிவிட்டி என்றும் வெறுமனே மைன்ட் என்றும் அழைக்கிறார்கள். சித்தம் என்பதை 'தாட்' என்று சொல்கிறார்கள்.
உயிரியல், நரம்பியல், மற்றும் உளவியல் வல்லுநர்கள் மனத்தை மூளையின் செயல்களினால் ஏற்படும் ஒரு நிகழ்வதாக கருதி மூளை நரம்பமைப்பின் அடிப்படையில் மனத்தை விளக்குகிறார்கள். இதை நியூரல் கோரிலேட்ஸ் ஆஃப் கான்சியஸ்னஸ் என்று அழைக்கிறார்கள். மனமானது மூளையில்தான் தோன்றி செயல்படுகிறது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. மூளையில் அடிபட்டால் மனம் கலக்கமடைவதை நாம் அறிகிறோம். மனத்தில் ஏற்படும் சித்தக் கோளாறுகளுக்கு மூளையில் செயல்படும் மருந்தைத்தான் பயன்படுத்துகிறோம். மூளையைச் சரிசெய்தால் மனம் சரியாவதை அறிகிறோம். மூளையை பாதிக்கும் கள் சாராயம் மற்றும் லாகிரிப் பொருட்கள் மனத்தையே பாதிக்கின்றன என்பதையும் நாம் அறிவோம். எனவே சுருங்கச் சொல்லவேண்டுமாயின் மனமும் மூளையும் ஒன்றே. மூளை கருவி என்றால் மனம் அதன் செயலாகும்.
இது இப்படியிருக்க சித்தாந்திகள் மனத்தை மூளையிலிருந்து பிரித்து சுதந்திரமாகவும் தனியாகவும் செயல்படும் கருவியாக வைக்கிறார்கள். மனிதன் இறந்து அவன் உடல் மண்ணில் மறைந்த பிறகும் மனமானது சூக்கும வடிவத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்று சொல்கிறார்கள. இந்த இடத்தில் அறிவியலும் ஆன்மிகமும் முறண்பட்டுக் கொள்கின்றன. மனமானது மூளையிலிருந்து பிரிக்க முடியாதது என்று அறிவியல் சொல்ல, ஆன்மிகமோ மூளையிலிருந்து தனித்தும் மனம் செயல்படும் என்று சொல்கிறது. அறிவியல் தன் கருத்தை வலியுறுத்த ஏராளமான ஆதாரங்களை முன்வைக்கிறது. ஆனால் ஆன்மிகமோ சித்தர்களின் சொல் ஒன்றையே ஆதாரமாகக் கொள்கிறது. வேறு நேரடியான காட்சி ஆதாரம் அதனிடம் இல்லை. அறிவியல் ஆய்வாளர்கள் மேலும் ஆராய்ச்சி செய்தால் ஆன்மிகம் சொல்வது உண்மையா இல்லையா என்பது வெளிப்படும்.
அறிவியல்கூட மூளை என்ற சடப்பொருளிலிருந்து எப்படி மனம் என்கிற உணர்வு எழும்புகிறது என்பதற்கு சரியான விளக்கங்களைத் தரவில்லை. அவர்களும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். மூளையின் செயலும் கம்ப்யூட்டரின் செயலும் அடிப்படையில் ஒன்றுபோலவே இருக்கின்றன. இரண்டிலும் மின்சாரம்தான் செயல்படும் சக்தியாக இருந்துவருகிறது. நரம்பில் மின்சாரம் பாய்வதுபோல கம்ப்யூட்டரின் சிப்பத்திலும் மின்சாரமே பாய்ந்து வேலைகளை செய்கிறது. அப்படியானால் மூளையில் மனம் எனும் உணர்வு எழுவது போல கம்ப்யூட்டரிலும் ஒரு உணர்வு எழுந்தாக வேண்டும்.
வருங்காலத்தில் மனிதர்கள் கம்ப்யூட்டரை மனித நியூரான்களுக்கு நிகராகச் செயல்படும்படி வைத்துவிட்டார்களானால் அப்போது மனம் என்ற உணர்வு கம்ப்யூட்டருக்கு ஏற்படலாம். ரோகர் பென்ரோஸ் போன்ற தலை சிறந்த கணித கணிணி மேதைகள் மனிதனால் கம்ப்யூட்டருக்கு மூளையின் செயலைப்போன்ற மென்பொருளை வழங்கவே முடியாது என்று உறுதியுடன் இருக்கிறார்கள்.
மூளையின் செயல்பாட்டைப்போல கம்ப்யூட்டரால் ஒருக்காலும் செய்யவோ செய்விக்கவோ முடியாது என்று நிச்சயமாக நம்புகிறார்கள். ஒருவேளை சித்தாந்திகள் கூறுவதுபோல மூளை வெறும் கருவி மாத்திரம்தனோ; அதில் மனம் எனும் வேறு ஒரு சக்தி நுழைந்து அதை ஆட்டுவிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படி மனமானது மூளைக்கு வேறான சக்தி என்றால் ஏன் பிறந்தபோதே அது முழுவீச்சில் செயல்படாமல் வயதுக்கேற்ப, மூளை வளர்ச்சிக்கெற்ப அதுவும் வளருகிறது? மூளைக்கு வெளியிலிருந்து செயல்படும் ஒரு சக்தி மூளையை வாகனமாகப் பயன்படுத்துமேயானால் அது வாகனத்தின் வளர்ச்சியை நம்பியிருக்கக்கூடாது. என்று வாதிடத் தோன்றுகிறது. ஒரு வேளை மூளை மெள்ள முதிர்வடைவதால்தான் மனத்தின் செயலும் மெள்ள முதிர்வடைவது போலத் தெரிகிறதோ என்றும் வாதிடலாம். இந்த வாத விவாதங்கள் பல நூற்றாண்டுகளாக உலகெங்கும் நிகழ்ந்தபடி இருக்கிறது. முடிவு என்று வருமோ தெரியவில்லை.
- முனைவர். க. மணி
கீற்று.காம்
தலைப்பு : அறிவியல்
உயிரில்லாத உடலாக அம்மா என் முன்னே கிடந்த போது எனக்கு எட்டு வயது. அதுதான் நான் முதலில் பார்த்த மரணம். சாந்தமான ஒரு புன்னகையோடு அம்மா செத்துப் போயிருந்தாள். அம்மா இறந்து போனாள் என்றே நம்ப முடியாமல் தடுமாற வைக்கிற அற்புதமான, இயற்கையான புன்னகை. அன்றிலிருந்து இறந்தவர்களைப் பார்க்கும் போதெல்லாம் சாவைப் பற்றிய பயமோ அல்லது வேறு எதிர்மறையான எண்ணங்களோ எனக்கு வந்ததே கிடையாது.
ஒருவர் இறந்த உடனே உற்றார் உறவினர் கூடி அழுவதானாலோ, செய்தித்தாள்களில் 'மரண அறிவித்தல்' என்று விளம்பரப்படுத்துவதாலோ, அல்லது நகரின் சுவரெங்கும் 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டர் ஒட்டுவதாலோ, மரணம் ஒரு பொதுவான விஷயம் என்று எண்ணி விடாதீர்கள். மரணம் ரொம்ப பர்ஸனல் விஷயம்.
ஓஷோ சொன்னது போல உலக வாழ்க்கையில் இரண்டே இரண்டு அனுபவங்கள்தாம் அந்தரங்கமானவை. உங்கள் கனவுகளும் உங்கள் மரணமும். ஒருவன் போல இன்னொருவன் கனவு காணுவதும், ஒருவன் போலவே இன்னொருவன் இறப்பதும் சாத்தியமில்லாதவை. வாக்குச் சாவடியில் உங்கள் வாக்கை இன்னொருவர் போட இயலும். ஆனால் உங்கள் கனவை வேறொருவர் காண முடியாது.
மேற்கத்தியர்களின் பார்வையில் மரணம் ஒரு தீண்டப்படாத விஷயமாகவே இருக்கிறது. மரணம் பற்றிப் பேசவோ அல்லது விவாதிக்கவோ யாருமே அங்கு விரும்புவதில்லை. மரணம் பற்றிய பயமே அவர்களுக்கு அதிகம். மரணம் ஒரு கெட்ட விஷயமாக, எதிர்மறை சமாச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் முதுமை என்பதே ஒரு தவிர்க்கப்பட வேண்டிய விஷயமாக பிரச்சாரம் செய்யப்பட்டு, ''வயதாகாமல் தடுப்பது எப்படி, எப்போதும் இளமையாக இருப்பது எப்படி, அதற்கு என்னென்ன அழகுச் சாதனங்கள் உபயோகப்படுத்த வேண்டும்'' என்றெல்லாம் வணிக வழிகளில் மக்களின் கவனத்தைத் திருப்புகிற வழிகளைப் பிரமாதமாகக் கையாளுகிறார்கள் அவர்கள்.
கீழை நாடுகளின் மரணம் பற்றிய பார்வை இதிலிருந்து மாறுபடுகிறது. ஓஷோவின் எளிமைப்படுத்தப்பட்ட வார்த்தைகளின் வழியே சொல்ல வேண்டுமென்றால் - பிறப்பும் இறப்பும் இரு பகுதிகள், நீண்ட பிரபஞ்ச வாழ்வின் இரு பகுதிகள்.
ஒவ்வொரு உள் வாங்கும் சுவாசத்திலும் நீங்கள் பிறக்கிறீர்கள், ஒவ்வொரு வெளி விடும் சுவாசத்திலும் நீங்கள் இறக்கிறீர்கள். ஆனால் இந்த இரண்டு எதிர்மறை நிகழ்வுகளுமே ஒரு வித ஒற்றுமையுடன் இயங்குவதால்தான் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். இன்னும் சுருக்கமாகச் சொல்வதென்றால் பிறக்கும்போதே நீங்கள் இறக்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.
பிறப்பும் இறப்பும் ஒரே நேரத்தில் தொடர்ந்து நிகழ்கிற வாழ்வின் இரண்டு அம்சங்கள். மரணம் என்பதை வாழ்வின் எதிரியாகவே எண்ணுகிற தவறான மனப்போக்கு நம் எல்லோருக்குமே இருக்கிறது. மரணம் இல்லாமல் வாழ்வு இல்லை. ஒரு பறவையின் இரண்டு சிறகுகள் போலவே வாழ்வின் இரண்டு சிறகுகள்தாம் பிறப்பும் இறப்பும். ஒரு சிறகுடன் பறவை பறக்க முடியாது.
மரணம் உங்கள் எதிரி அல்ல. மரணம் உங்களோடு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது. ஒவ்வொரு முறை மூச்சு வெளிவிடும் போதும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டுதானிருக்கிறோம். ஆனால் அதன் மீது இருக்கிற பயத்தினால்தான் மரணம் எங்கோ தொலைவில், ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் இருப்பதாக கற்பனை சுகத்தில் சந்தோஷப்பட்டுக்கொள்கிறோம்.
- சுவாமி சத்ய வேதாந்த் அவர்கள் உரையின் தமிழாக்கம்
நிலாச்சாரல்
ஒருவர் இறந்த உடனே உற்றார் உறவினர் கூடி அழுவதானாலோ, செய்தித்தாள்களில் 'மரண அறிவித்தல்' என்று விளம்பரப்படுத்துவதாலோ, அல்லது நகரின் சுவரெங்கும் 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டர் ஒட்டுவதாலோ, மரணம் ஒரு பொதுவான விஷயம் என்று எண்ணி விடாதீர்கள். மரணம் ரொம்ப பர்ஸனல் விஷயம்.
ஓஷோ சொன்னது போல உலக வாழ்க்கையில் இரண்டே இரண்டு அனுபவங்கள்தாம் அந்தரங்கமானவை. உங்கள் கனவுகளும் உங்கள் மரணமும். ஒருவன் போல இன்னொருவன் கனவு காணுவதும், ஒருவன் போலவே இன்னொருவன் இறப்பதும் சாத்தியமில்லாதவை. வாக்குச் சாவடியில் உங்கள் வாக்கை இன்னொருவர் போட இயலும். ஆனால் உங்கள் கனவை வேறொருவர் காண முடியாது.
மேற்கத்தியர்களின் பார்வையில் மரணம் ஒரு தீண்டப்படாத விஷயமாகவே இருக்கிறது. மரணம் பற்றிப் பேசவோ அல்லது விவாதிக்கவோ யாருமே அங்கு விரும்புவதில்லை. மரணம் பற்றிய பயமே அவர்களுக்கு அதிகம். மரணம் ஒரு கெட்ட விஷயமாக, எதிர்மறை சமாச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் முதுமை என்பதே ஒரு தவிர்க்கப்பட வேண்டிய விஷயமாக பிரச்சாரம் செய்யப்பட்டு, ''வயதாகாமல் தடுப்பது எப்படி, எப்போதும் இளமையாக இருப்பது எப்படி, அதற்கு என்னென்ன அழகுச் சாதனங்கள் உபயோகப்படுத்த வேண்டும்'' என்றெல்லாம் வணிக வழிகளில் மக்களின் கவனத்தைத் திருப்புகிற வழிகளைப் பிரமாதமாகக் கையாளுகிறார்கள் அவர்கள்.
கீழை நாடுகளின் மரணம் பற்றிய பார்வை இதிலிருந்து மாறுபடுகிறது. ஓஷோவின் எளிமைப்படுத்தப்பட்ட வார்த்தைகளின் வழியே சொல்ல வேண்டுமென்றால் - பிறப்பும் இறப்பும் இரு பகுதிகள், நீண்ட பிரபஞ்ச வாழ்வின் இரு பகுதிகள்.
ஒவ்வொரு உள் வாங்கும் சுவாசத்திலும் நீங்கள் பிறக்கிறீர்கள், ஒவ்வொரு வெளி விடும் சுவாசத்திலும் நீங்கள் இறக்கிறீர்கள். ஆனால் இந்த இரண்டு எதிர்மறை நிகழ்வுகளுமே ஒரு வித ஒற்றுமையுடன் இயங்குவதால்தான் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். இன்னும் சுருக்கமாகச் சொல்வதென்றால் பிறக்கும்போதே நீங்கள் இறக்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.
பிறப்பும் இறப்பும் ஒரே நேரத்தில் தொடர்ந்து நிகழ்கிற வாழ்வின் இரண்டு அம்சங்கள். மரணம் என்பதை வாழ்வின் எதிரியாகவே எண்ணுகிற தவறான மனப்போக்கு நம் எல்லோருக்குமே இருக்கிறது. மரணம் இல்லாமல் வாழ்வு இல்லை. ஒரு பறவையின் இரண்டு சிறகுகள் போலவே வாழ்வின் இரண்டு சிறகுகள்தாம் பிறப்பும் இறப்பும். ஒரு சிறகுடன் பறவை பறக்க முடியாது.
மரணம் உங்கள் எதிரி அல்ல. மரணம் உங்களோடு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது. ஒவ்வொரு முறை மூச்சு வெளிவிடும் போதும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டுதானிருக்கிறோம். ஆனால் அதன் மீது இருக்கிற பயத்தினால்தான் மரணம் எங்கோ தொலைவில், ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் இருப்பதாக கற்பனை சுகத்தில் சந்தோஷப்பட்டுக்கொள்கிறோம்.
- சுவாமி சத்ய வேதாந்த் அவர்கள் உரையின் தமிழாக்கம்
நிலாச்சாரல்
தலைப்பு : படித்ததில் பிடித்தது
மரபணு (Genomic DNA):
பெரும்பாலான உயிருள்ள செல்களினுள் (cells) இருக்கின்ற டீஆக்சி ரைபோநியூக்ளிக் அமிலங்களே (DNA) (சில வைரஸ்கள் ரைபோநியூக்ளிக் அமிலங்களையும் (RNA), Prion எனப்படும் நுண்ணுயிரிகள் இரட்டிப்பாகும் தன்மையுடைய புரதங்களையும் கூட மரபணுக்களாக வைத்துக்கொள்ளுகின்றன) மரபணுக்களாக (Genomic DNA) செயல்படுகின்றன. இந்த மரபணுக்களின் அமைப்பும் அவற்றின் தன்மையும் (எவ்வளவு பெரிய அல்லது சிறிய புரதங்களை, எத்தகைய வரிசையில்) ஒவ்வோர் உயிருக்கும் மிக மிகத் தனித்தன்மையுடைவை. இத்தனித்தன்மை மட்டுமே வைரஸ்களையும், வாத்துகளையும், மனிதனையும், மாங்காயையும் பிரிக்கின்றது.
மரபணுக்களின் அமைப்பு:
மீத்தேனை உருவாக்கும் திறனுடைய (methanogenic) ஒரு பாக்டீரியம் உதாரணமாக 99 மரபணுக்களை, 123456……99 என்று வரிசைக்கிரமம் மாறாமல் வைத்திருக்கும் எனக் கொண்டால், உதாரணத்துக்கு அதே மீத்தேனை ஆற்றலாக மாற்றி வளர்க்கும் திறனுடைய மற்றொரு பாக்டீரியத்தின் (metholotrophs) மரபணு 321456879…..99 என்று சிறு மாறுதலுடன் அமைந்திருக்கலாம். இந்த மரபணுக்கள் செல்களினுள் எந்த இடத்தில் அமைந்துள்ளன என்பதை பொருத்தும்கூட அந்த உயிரினம் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள நிலை நிர்ணயிக்கப்படுகிறது.
Box நுழைவுச்சீட்டுடன் தனி பாக்ஸில் அமர்ந்து படம் பார்ப்பது ஏதோ ஒரு விதத்தில் வளர்ச்சி என்பது போல, பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள அமீபா, பூச்சிகள், தவளைகள், மனிதன், தாவரங்களில் –தாலோபைட்டா, டெரிடோபைட்டா, ஜிம்னோஸ்பெர்ம், பூக்கும் தாவரங்கள் இவை அனைத்திலும் மரபணுக்கள் க்ரோமோசோம்களில் வைக்கப்பெற்று அந்த க்ரோமோசோம்கள் செல்லின் மற்ற பகுதிகளிலிருந்து ஒரு சவ்வினால் (Nucleoli membrane) பிரிக்கப் பெற்றுள்ளன, அப்பகுதி நியுக்லியஸ் (Nucleus).
க்ரோமோசோம்:
M. jannaschill (1,700), E.coli (4,700), S.cerevisiae (13,500) A.thaliana (100,000), Trillium(100,000,000), D. melanogaster (165,000), H. sapiens (3,000,000) எண்களெல்லாம் அவை கொண்டுள்ள மரபணுக்களின் எண்ணிக்கையினை (KB – kilo base) குறிப்பவை. பணம் அதிகமானவுடன் பாதுகாப்பாக வைப்பது போன்று, எண்ணிக்கை (No of Nucleotides) அதிகமாக அதிகமாக, அவை தனியே இல்லாமல் குரோமோசோம்களினுல் (அவை நியுக்ளியசினுள்)வைக்கப்படுகின்றன. உயிர் இரட்டிப்பாகும்போது சில அமைப்புச் செயலாளர்களான(!) குறிப்பிடத்தகுந்த சில புரதங்களின் மூலம் (eg. DNA polymerase) மரபணுக்களின் அமைப்பு மாறாமல் பிரதியெடுத்தல் நடைபெறுகிறது. அதன் அமைப்பும் எண்ணிக்கையும் பரிணாமத்தால் வந்தது/வரும் என்பது விஞ்ஞானபூர்வமான விளக்கம்.
DNA-யும், அதன் தயாரிப்பான புரதங்களும், இத்தயாரிப்பை வழிநடத்தும் mRNA (messangerRNA) போன்ற அனைத்து macro molecule-களும் அமைவதற்கு எந்தக் காரணங்களும் வேண்டியதில்லை. அவற்றின் அடிப்படைக் கட்டுமானமான எலக்ட்ரான்களின் (electronic configuration of structure) பண்புதான் அவை அப்படி அமையக் காரணம். ஒரு மனிதனோ, பாக்டீரியமோ எல்லாமே ஒரு மாலிக்யூலார் கட்டமைப்புதான். நான் தண்ணியடிக்கிறதோ, டாவடிக்கிறதோ, பதிவரசியலோ, பாழும் கிணற்றில் விழுவதோ என்னுடைய எலக்ட்ரான்களைச் சார்ந்தது, அதற்கெல்லாம் எந்த purpose-ம் கிடையாது. மனிதன் தோன்றியதற்கே ஒரு பெரிய காரணம் (Purpose) இல்லை என்றுரைத்து இந்திய தத்துவ மரபுகளைக்கூட வம்பிழுக்கலாம்.
Plasmids (Plasmid DNA):
மரபணு திருத்தத்தினைச் சரியாக புரிந்துகொள்ள, முக்கியத்துவம் வாய்ந்த பாக்டீரியம்களின் மற்றொரு மரபணுவினைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். சில பாக்டீரியம்களில் (as usual some exceptions) மட்டும் கூடுதலாக செல்லினுள் இருக்கின்ற, அளவில் சிறிய மரபணுவான Plasmids என்பது. இந்த Plasmids உதவியால்தான் இன்றைக்குத் தூணிலும் துரும்பிலும் (Ubiquitous nature), இன்னும் சொன்னால் Nuclear Radio reactor மற்றும் இரண்டரை கிலோ மீட்டர் ஆழமுள்ள பூமி, அழுத்தம் அதிகமான ஆழ்கடல் என்று நீக்கமற (2&3) சில பாக்டீரியம்களால் வாழ முடிகிறது.
Plasmids மூன்று வகைப்படும்:
(1) Anitbiotic-க்கு எதிராக வாழ R-plasmids (Resistance-plasmid)
(2) இந்த எதிர் பண்பினை, அது இல்லாத இன்னொரு பாக்டீரியத்துக்குக் கொடுக்க F-plasmid (Fertility)
(3) கடைசியாக Col-plasmid (இது பற்றி இன்னொரு முறை).
இந்த பிளாஸ்மிட்கள்தான் சில நேரங்களில் அவற்றை பெட்ரோலில் வளர உதவுகின்றன. Steroids போன்ற விஷத்தன்மை உடையவற்றிலிருந்துகூட ஆற்றலை உருவாக்கி கொண்டு பேக்டீரியம் வளர உதவி செய்கின்றன. Plasmids DNA எவ்வாறு தோன்றியது, ஏன் இதன் பிரதியெடுப்பு, அடுத்த தலைமுறைக்கு கடத்தல் போன்ற பண்புகள் தனியாக நிர்வகிக்கப்படுகின்றன (independent from Genomic DNA) என்பதற்கு இதுவரையில் வரையறுக்கப்பெற்ற காரணங்கள் கண்டறியப்படவில்லை.
பாக்டீரீயங்களின் சூழ்நிலை, வளரும் சூழல் என்பது நிமிடத்துக்கு ஒருமுறை மாறிக்கொண்டேயிருப்பது. அந்த மாற்றத்துக்கு ஏற்றாற்போல் தகவமைத்து பரிணாம வளர்ச்சி (adaptive evolution) அடைவதில் இந்த plasmid-கள் பெரும் பங்கு வகிக்கின்றன. (இந்த இடத்தில், கட்சிகளின் கூட்டணி மாற்றப் பரிணாம வளர்ச்சி கூட, அறிவியல்பூர்வமானதுதான் என்று யோசனை செய்கிற மக்கள் – தொடந்து படிப்பது உங்கள் மனநலனுக்குக் கேடானது).
Plasmid DNA-விலோ அல்லது மரபணு (genomic DNA)-விலோ ஏற்படுகின்ற திடீர் மாற்றம் (mutation)மூலம், சூழ்நிலையில் குளுக்கோஸ் இல்லையென்றால் சுக்ரோஸ் சர்க்கரை வைத்துகொண்டு வாழ்கின்றன. (ஒல்ட்மங்க் இல்லாமல், 5000 குடிக்கிறதுக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லை) இந்த plasmid தவிர்த்து Genomic islands, Transposons என்று மேலும் சில (Extra genetic elements) மரபணுக்கள் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில்.
தீடீர் (சிறு) மாற்றத்தின் மூலம் தகவமைப்பு எப்படிச் சாத்தியம்?
கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியத்தின் அடிப்படை உடற்கூறு செயலியலானது (Basal metabolicrate), அதனுடைய உடலின் அளவு மற்றும் பருமன் சார்ந்து (Surface to volume ratio), ஒரு யானையின் BMR-ஐவிட அதிகம். நமது ஊரின் வெப்பநிலை தீடீரென்று 60°C தொடும் பட்சத்தில் யானைகளால் வாழமுடியாது. ஆனால் பாக்டீரியம்கள் ஒரு சிறிய மாற்றத்தினை அதன் மரபணுக்களில் ஏற்படுத்திக்கொண்டு வாழ ஆரம்பிக்கும். இவ்வாறு மரபணுவில் இயற்கையாகவே ஏற்படும் சிறு மாற்றம் (spontaneous mutation) ஆய்வகத்தில் பல வழிமுறைகளில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு அதன் விளைவுகள் ஆராயப்படும்.
குளுக்கோஸை கொண்டு உயிர் வாழ மரபணு அமைப்பு அதனுள் எப்படி இருக்க வேண்டும், சுக்ரோஸுடன் சுபிட்சமடைய எத்தகைய மாற்றம் தேவைப்படுகிறது, அதனால் எந்த புரத(ம்)ங்கள் மாற்றப்படுகிறது என்பதெல்லாம் அடிப்படை ஆராய்ச்சி. நாம் கவனம் கொள்ளவேண்டியது இத்தகைய மாற்றம் அவைதன் சூழ்நிலையிலேயே இயற்கையாகவே நடைபெறுகிறது என்பதுதான். ஆய்வகத்தில் நாம் சுக்ரோஸ் கொடுப்பது எவை எவை ஏற்கெனவே மாறியுள்ளன என்பதனைத் தேர்ந்தெடுப்பதற்காகத்தான் (Selection pressure). நாம் சுக்ரோஸ் கொடுப்பதால் மாறவில்லை. மற்றும் இந்த தகவமைப்புக்கு மொத்த மரபணுக்களும் மாற்றப்படவில்லை (changing genome), சில மரபணுக்கள் மட்டுமே திருத்தப்படுகின்றன. அத்திருத்தம் ஜீனோமிக் DNA-விலோ அல்லது பிளாஸ்மிட் DNA-விலோ நிகழ்த்தப்படலாம் (Genetic modification).
பாக்டீரியாவில் எந்த மரபணு திருத்தப்படுகிறது? Genomic DNA or plasmid DNA? தாவரங்களில் எது? விலங்குகளில் எது? இயற்கையாக மரபணு மாற்றம் நடைபெறுகிறதா? அல்லது BT-cotton-ல் மட்டும் நடைபெற்றதா? பார்க்கலாம்.
மரபணு திருத்தங்கள் – பாக்டீரீயாவில் (Genetic modification in bacteria)
Genetic modification என்றவுடன் பெரும்பாலும் Genomic DNA-வில் செய்யப்படும் மாற்றம்தான்
எனப் புரிந்து கொள்ளப்படுகிறது. எல்லா நேரங்களிலும் அப்படியன்று. (except commercial vectors) 3 நாட்களில் வளர்ச்சியடைந்து, வைட்டமின் B12 தரும் ஒரு பாக்டீரியத்தின் (A) மரபணுக்களின் சிறு பகுதி (GAAATCAACTTAA – இது போல) மற்றொரு பாக்டீரியத்தின் (B) plasmid DNA-வுடன் ஒட்டப்பெற்று (now this plasmid DNA of B becomes recombinant DNA, and B known as genetically modified), இந்த B-யின் plasmid DNA, 8 மணி நேரத்தில் அதே அளவு B12 தரும் வல்லமையுடைய C – என்ற மற்றொரு பாக்டீரியத்தினுள் செலுத்தப்பட்டு அதன் மரபணு பகுதியாகவோ அல்லது plasmid DNA-வாகவோ திருத்தப்படுகிறது.
மற்றொரு உதாரணம். 30% ஆல்கஹால் தயாரிக்கப் பயன்படும் பாக்டீரியத்தின் (அ) genomic DNA 12345,,,99 என்று அமைந்திருக்குமானால், அதன் plasmid DNA atctttgcgaaa என்று அமைந்திருக்கும். இந்த அமைப்பினை atatttgcgaaa என்று திருத்தி (modification) மீண்டும் அதனை அந்த (அ) செல்லினுள் செலுத்தும்போது அதன் ஆல்கஹால் தயாரிக்கும் பண்பானது 40%-ஆக அதிகரிக்கும் (ஏன் அதிகரிக்கிறது என்பதையும் சேர்த்து ஒரு PhD). இந்த முறையில்தான் 1980-லிருந்து ஆல்கஹால் தயாரிக்கப்படுகின்றது. இந்த recombinant strain தருகின்ற ஆல்கஹாலினால் எந்த பிரச்சனைகளும் இல்லை. ஆனால் அதனைக் குடித்துவிட்டு ‘கருத்துகளை கக்குவதும், எலக்கியம் படைப்பதும்’ பிரச்சனைக்குரியதாக அறியப்படுகிறது. சில பாக்டீரீயம்களில் (உதாரணம்: Antibiotic தருகின்ற Streptomycetes. Sp) Genomic DNA கூட அதிக உற்பத்திக்காக அங்காங்கே மாற்றப்பட்டுள்ளன.
மீண்டும் புரிந்து கொள்ளவேண்டியது, எந்த ஒரு பாக்டீரீயத்தின் முழு மரபணுக்களையும் (Genomic DNA) மாற்ற இயலாது. அவ்வாறு மாற்ற முயன்றாலும் ஒரு பாக்டீரியத்தின் எதிர்ப்புத்தன்மை காரணமாக (due to restriction endonucleases), செலுத்தப்படும் மரபணுக்கள் சென்று சேராது. ஆனால், சில மரபணுக்களை மட்டும் திருத்தமுடியும்.
இந்த மாற்றங்கள் ஏதோ திடீரென்று ஆய்வகத்தில் மட்டுமே உருவாக்கப்படுபவை அல்ல. இரு வெவ்வேறான பேரினத்தினை (Genus) சார்ந்த பாக்டீரியம்கள் (Pseudomonas. Sp &E.coli) அவற்றின் சூழ்நிலையில் வளரும்போது அவற்றுக்கிடையே மரபணுக்கள் பரிமாற்றம் (through transposable elements) நடந்து கொண்டேதான் உள்ளது (Horizontal gene transfer – transformation, conjugation & transduction). அ-விலிருந்து ஆ-க்கும், அங்கேயிருந்து உ-என்ற மற்றொரு பாக்டீரீயத்துக்கும், அங்கேயிருந்து மீண்டும் அ-வுக்கும் தொடர்ந்து நடைபெறும். ஆய்வகத்தில் அதற்கேற்றாற்போல் சூழல் (conditional existence) உருவாக்கப்பட்டு மரபணு திருத்தம் செய்யப்பட்ட பாக்டீரியம் அதன் மாற்றத்தினை இழந்துவிடாவண்ணம் கையாளப்படுகிறது, அவ்வளவுதான்.
எதற்காக இவ்வாறு மரபணுவை மாற்றவேண்டும்? (or) மாறுதலுக்குட்பட்ட மரபணுவை ஆராயவேண்டும்?
குறைபாடுகளோ, மாறுதலோதான் அந்தக் குறிப்பிட்ட மரபணு(களின்)வின் வேலை எதுவென்று அடையாளம் காட்ட உதவும். காது கேட்கவில்லை என்றால்தான் அதன் வேலை என்னவென்று தெரியவரும். காதலில் தோற்றவனுக்குத்தான் காதலி(யி)ன் அருமை புரிகிற மாதிரி. ஒரு மரபணு குறைபாடு/மாறுபாடுதான் அதன் வேலை அந்த பாக்டீரியத்தில் என்னவென்று காட்டும். அந்த வேலைதானா என்று சரிபார்ப்பதற்காக அதே மரபணு வேறு ஒரு பாக்டீரியத்துக்கு மாற்றப்பட்டு அதே வேலை அங்கும் நடைபெறுகிறதா எனப் பரிசோதிக்கப்படும். சென்று சேர்ந்தது சரியான மரபணுவின் பகுதிதான் என்று நிரூபிக்கப்படும்.
ஒரு புத்தகம் என்னிடம் இருக்கிறதென்று என்னால் நிரூபிக்கமுடியும். என்னிடம் அதே புத்தகம் இல்லை என்று மற்றொருவரால் எப்படி நிரூபிக்கமுடியும்? வேறு ஓர் இடத்தில் அது இருக்கிறதென்று நிரூபித்தால் போதும். அதுபோல வேறு ஓர் இடத்தில் இந்த மரபணுவின் இருப்பும் அதன் விளைவு(களும்)ம் நிருபிக்கப்படும்.
GM plants
இதுபோலவே சில பாக்டீரியங்களின் உதவியுடன், தாவரங்களிலும் அதன் மரபணுக்கள் திருத்தியமைக்கப்படுகின்றன. உதாரணம்: Fungus என்ற நுண்ணுயிரி ஒரு தாவரத்தின் இலையின் செல்லுலோஸினை உண்டு தாவரத்தினை அழிப்பதாகக் கொள்வோம். Fungus-ன் செல்சுவர் கைட்டின் என்ற மூலக்கூறால் ஆனது. இந்த கைட்டினைச் செறிக்கும் ஒரு நொதி (Enzyme) ஒரு பாக்டீரியத்தின் சிறு பகுதியான மரபணுவில் (மொத்த மரபணுக்கள் அல்ல) இருக்கும்பட்சத்தில், அத்தகைய சிறு பகுதி மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு மற்றொரு பாக்டீரியத்தின் உதவியோடு (Agrobacterium mediated transformation) அத்தாவரத்தின் மரபணுக்களோடு சேர்க்கப்படும். இப்போது அத்தாவரம் (Transgenic plant), Fungus-ஆல் தாக்கப்படும்போது, அதனைத் தாமே அழிக்கும் புதுச்சக்தியைப் பெறும்.
இங்கு முக்கியமானது, பரிணாம வளர்ச்சி அடைந்த தாவரங்களில் மரபணுக்களை தையல்கலைஞர் போன்று வெட்டி ஒட்டமுடியாது. மரபணு அமைந்துள்ள குரோமோசோம்களில் ஏதாவது ஒன்றில் இத்தகைய மாற்றம் நடைபெறும். அல்லது சில நேரங்களில் சில குரோமோசோம் மொத்தமும் திருத்தப்பட்டு செல்லினுள் அனுப்பப்படும் (Nuclear transplantation).
இது இயற்கைகு எதிரானதா?
இல்லை. இத்தகைய ஆய்வக மாற்றம், இங்கு நடைபெறாவிடினும், எல்லா நேரங்களிலும் இயற்கையாகவே நடைபெறும் (When a plant virus infects and injects its RNA into the plant genome). அத்தகைய நிகழ்தகவினை அதிகரிப்பதே ஆராய்ச்சியாளர்களின் வேலை. மரபணு திருத்தம் செய்யப்பட்ட உருளைக்கிழங்கை (S. tuberosum) உண்பதால் திருத்தப்பட்ட தாவரத்தின் மரபணுவும், சாப்பிடும் மனிதனின் மரபணுவும் சேரப்போவதில்லை. அப்படியே கிழங்கை விட்டுவிட்டு அத்தாவரத்தின் இலையினைச் சாப்பிட்டாலும் (by chance கடித்தாலும்) மரபணுக்களின் சேர்க்கை என்பதேயில்லை. அது செரிக்கப்பெற்றுவிடும் (மனித மரபணுக்களால் உருவாக்கப்பட்ட புரதங்களால் – அது வேறு பேட்டை).
உருளைக்கிழங்கின் மரபணு உருளைகிழங்காக/ உருளைக்கிழங்குக்காகச் செயலாற்றுவதே குறிப்பிட்ட நிலைகளில்தான் (obligatory conditional existence). இது அந்நிலையிலிருக்க, உருளைக்கிழங்கு திடீரென நச்சாக மாற வாய்பேயில்லை. ஆனால் காலையில் உருளைக்கிழங்கு சாம்பார், இடையில் உருளைக்கிழங்கு சிப்ஸ், மதியம் வறுவல், மாலை உருளைக்கிழங்கு சமோசா, டின்னர் ஆலு சப்பாத்தி என்று சாப்பிட்டு உட்கார்ந்தபடியே வேலை செய்பவரேயானால் அது வேறுமாதிரியான் நச்சுதான்.
GM in animals:
தாவரங்களைப் போன்றே, விலங்குகளிலும் நாம் மாற்ற விரும்பும் ஏதாவது சில மரபணுக்கள் உள்ள மொத்த குரோமோசோமும் நீக்கப்பெற்று (Knock out) அதன் விளைவுகள் அறியப்பெற்று, அத்தகைய மரபணுவின் செயல்பாடுகள் கண்டறியப்படுகின்றன. ஏன் மரபணுக்களை மாற்றி அவற்றைக் கொடுமைப்படுத்தவேண்டும் என்கிற, ‘புன்கணீர் பூசல் தரும்’ மேனகா காந்தி வகையறாக்கள், ஏதாவதொரு மரபணு குறைபாடு/மாறுபாடு தொடர்பான நோயால் அவதியுற்று இறக்கும் மனிதன், உணவு/வைட்டமின் பற்றாக்குறையால் அவதியுறும் குழந்தைகள்மேலும் கொஞ்சம் அன்பு கொள்ள ‘நோய்நாடி நோய்முதல் நாடி’, ’உற்றான் அளவும் பிணியளவும்’ போன்ற குறள்களையும் படிக்கலாம்.
Cardiac hypertrophy என்கிற மரபணு சார்ந்த ஓர் இதய நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்று அறிய, கண்டிப்பாக எலியின் சில மரபணுக்களை knock out செய்ய வேண்டியிருக்கும். அப்போதுதான் அந்த மரபணு ஏற்படுத்தும் புரதங்கள் யாவை, அவை எங்கு என்னென்ன வேலைகளைச் செய்கின்றன, அதே புரதங்களின் கூட்டமைப்பினை ஒரு பாக்டீரீயத்தின் மூலம் மட்டுமே தயாரிக்கமுடியுமா போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும்.
இவர்கள் யாரும், பாக்டீரிய வதையைத் தடுப்போம் என்று கிளம்பவில்லை என்பது பெரிய ஆறுதல்தான்.
இது செயற்கையா? இயற்கையா?
எந்தவொரு மரபணு திருத்தமும் செயற்கையன்று. பரிணாமத்தின் ஒரு விளைவாக, தானாகவே மரபணு பரிமாற்றம் இரு வேறுவேறான பாக்டீரியங்களிடையே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. உதாரணம்: பாக்டீரியங்களில் அடையாளம் காணப்பெற்றுள்ள பெரும்பாலான புரதங்கள், அவற்றின் அமினோ அமிலக் கட்டமைப்புகள், தாவரங்களிலும் விலங்குகளிலும் ஒத்துள்ள நிலை. ஒரு வைரஸ் தாவரத்தினைத் தாக்கும்போதோ, அல்லது விலங்குகளைத் தாக்கும் வைரஸின் பரவலின்போதோ இத்தகைய மாற்றங்கள் ஏற்படும். ஆனால் ஒரு மனிதனின் இனப்பெருக்கத்தின்போது வெளிப்பட்டு கடத்தப்படும் நாட்கள் அதிகமாகையால், ஏதாவதொரு மனித செல்லின் (cell lines)மூலம் அதே மாதிரியான நிகழ்வு ஆய்வகத்தில் நிகழ்த்தப்பெற்று, அத்தகைய மரபணுவின் விளைவு ஆராயப்படுகின்றது.
மனிதன் போன்ற பரிணாம வளர்ச்சி அடைந்த (?) Primates-ம், அவற்றின் செல்களும் சில நேரங்களில் வைரஸ்களின் மரபணுக்களை ஏற்றுக்கொள்கின்றன. பட்டுப்புழு மற்றும் மலேரியா தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு, ரத்த அணுக்களில் சில வைரஸ் அல்லது Plasmodium. Sp-ன் மரபணுப் பகுதிகள் Transfection என்ற சோதனை மூலம் அனுப்பப்படுகின்றன. சில குறிப்பிட்ட மரபணுப் பகுதிகளை அதன் அமினோ அமில வேதியியல் சார்ந்து host விலங்குகளின் செல்கள் அனுமதிக்கின்றன, எவ்வளவு மரபணுக்களை அவ்வாறு அனுமதிக்கின்றன? அந்த அளவைத் தாண்டமுடியுமா? அளவுக்கு அதிகமான மரபணுக்களை அனுப்பி அவற்றை ஏற்றுக்கொள்ளச் செய்வது இயற்கைக்கு எதிரானதாகாதா?
மனிதனும் இப்பூலகத்தின் ஒரு பகுதிதான், மனிதனின் இச்செயல்பாடுகளால் மட்டும்தான் இத்தகைய பரிணாம வளர்ச்சி வேகமடையும் என்பதுகூட இயற்கையின் ஏற்பாடாக இருக்கலாம். எங்கேயோ இருந்து ஒருவன் (?) தூங்கும்போது காணும் கனவுதான் இவ்வுலக நிகழ்வுகள், அவன் விழித்துக்கொண்டால் கனவு சுபம் அல்லது அவன் ஒரு பெரிய மைக்ரோஸ்கோப் மூலமாக அனைத்தையும் பார்ப்பதாகக் கொண்டால் மனிதனின் மரபணு திருத்த ஆராய்ச்சிகள் ஒரு சின்ன விஷயம். அதுவும் ஒரு (சக!) நிகழ்வு, இயற்கையின் ஒரு சிறு பகுதி. இங்கு எதுவும் செயற்கையன்று, நீ எங்கிருந்து எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப் பெற்றது! (பா.ராகவன் மன்னிக்க).
யானையை பூனையாக்கலாமா? வேப்பமரம் சந்தன மரமாகுமா?
சாத்தியமே இல்லை. பத்ரியின் பதிவில் சொல்லியபடி ஒரு கருவின் (யானை) மொத்த நியுக்ளியஸும் நீக்கப்பெற்று, மற்றொரு விலங்கின் நியுக்ளியஸ் (பூனையின்) திணிக்கப்பெற்று, அது ஒரு பெண் யானையின் (Surrogate mother) கருப்பையில் வைக்கப்பெறுமானால் அது பூனைக்குட்டியையோ அல்லது யானைக்கும் பூனைக்கும் இடையில் (பூயா?) எதையுமோ ஈன்றெடுக்காது. யானை, யானையாகவே மரபணு செயல்படுவதே obligatory conditional existence (ஒரு 4 PhD-யாவது ஆகும், இந்த conditions-களைக் கண்டறிவதற்கு). பூனை ஜீனோம் (Genome) பூனையைத்தான் கொடுக்கும், அதுனால்தான் அது பூனை. யானைக்கும், பூனைக்குமான வித்தியாசங்களுக்கு காரணம், ஒரே மாதிரியான வேதியியலை அடிப்படையாக கொண்ட டீஆக்ஸிரைபோ நியுக்ளிக் அமிலங்களேயானாலும், காரணமானவன் எல்லாம் வல்லவனாயிருந்தால்?காரணமும் நீ, காரணியும் நீ! ஒரு பாக்டீரிய (E.coli) பேரினம் (Genus) அதன் மொத்த மரபணுக்களும் (DNA) வேறொரு பாக்டீரியத்தின் (Salmonella) DNA-க்களால் மாற்றியமைக்கப்படுமானால், கண்டிப்பாக அந்த மாற்றப்படும் மரபணுக்கள் அதன் குணங்களையும்(Properties) சேர்ந்தே இழந்துவிடும். அளவில் சிறிய பாக்டீரிய மரபணுக்களுக்கே இத்தகைய நிலை கடினம் என்னும்போது நியுக்ளியஸினுள் மரபணுக்களை கொண்டுள்ள வேப்பமரம், மாற்றம் மூலம் சந்தன மரமாக ஆகவே முடியாது. வேப்பமரம் சிறிய அளவில் சந்தனமரத்தின் மரபணுக்களை ஏற்றுக்கொள்வதை வைத்து மொத்த மரபணுக்களையும் மாற்ற முடியாது. மாற்றினாலும் அது சந்தனமரத்தின் தன்மையினை கொடுக்காது.
ஏன்?
இங்குதான் சூழலும் அதனை ஒத்து/சார்ந்து வெளிப்படும் மரபணுக்களின் குணாதிசயங்களும் இரண்டுக்கும் இடையேயான நெருக்கமான தொடர்புகளும் கடவுள்தானோ என்று எண்ணவைக்கின்றன. ஒரு மரபணுவின் (Eg. ATGCCTTTACCGGGGGG) குணாதிசய வெளிப்பாடு அந்த மரபணு அமைந்துள்ள Genome-ன் மற்றொரு பகுதியில் உள்ள இந்த மாதிரியான ஒரு GGGGSCTAAAA மரபணுக் கட்டமைப்புகள் உருவாக்கும் புரதங்களால் (Either activators or repressors) கட்டுப்படுத்தப்படும். இந்தப் புரதங்கள் உருவாவதையோ அல்லது உருவாகாமல் தடுப்பதையோ சில நேரங்களில் சூழ்நிலையும் சில நேரங்களில் மற்றொரு மரபணுவும் செய்கின்றன. ஒரு மரபணு குணாதிசயங்களின் வெளிப்பாடு அந்த மரபணுவாலேயே நெறிப்படுத்தப்படுகின்றது (Gene regulation).
எளிதான உதாரணம், நமது ஊரில் நாடளுமன்றம் சட்டத்தினையும், சட்டம் ஜனாதிபதியையும், ஜனாதிபதி நாடளுமன்றத்தினையும் கட்டுப்படுத்துவது போல். இன்னும் கொஞ்சம் எளிதாகச் சொன்னால் ‘ஒளிவேட்கை கண்ணாகியது’. சூழலால் கட்டுப்படுத்தப்படும் அல்லது நெறிமுறைப்படுத்தப்படும் மரபணுக்கள், சில பாக்டீரியத்தில் உள்ள அளவில் சிறிய ஜீனோம்களில் நிரூபிக்கப்பட்டுள்ளன, ‘ஒளிவேட்கை கண்ணாகியது’ என்பதனை விலங்குகளில் சோதனைகள் மூலம் நிரூபித்தால் நோபல் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனாலும் ஹாலிவிட் படத்தில் காண்பதுபோல் ஏதாவது மிருகமோ அல்லது விஷங்களை பரப்பும் மரமோ மரபணு திருத்தத்தால் தோன்றுவதற்கு எவ்வளவு வாய்ப்புள்ளது?
எவ்வளவு வாய்ப்புகள்?
‘பூயா’ பிறப்பதற்கான வாய்ப்பு இந்திய நாடாளுமன்றம் (குரோமோசோம்) அதன் உறுப்பினர்களோடும், (அதனுள்ள மரபணு) சட்டப் புத்தங்களோடும் (Repressors) பெயர்த்தெடுக்கப்பட்டு லண்டனில் அமைக்கப்பெற்றவுடனே (host), அப்புத்தகங்கள் சொல்லும் சட்டங்களும், அவ்(நம்)வுறுப்பினர்களின் அவை நடத்தையும் (gene expressions) அந்நாட்டுக்குப் பொருந்துவதற்கு எவ்வளவு வாய்ப்பு இருக்கிறதோ அவ்வளவுதான். அல்லது ஒரு கணிணியை எதிர்பாராமல் பார்க்கும் ஒரு குரங்கு, தட்டச்சும்போது அது கம்பராமாயணமாக மாறுவதற்கு எவ்வளவு நிகழ்தகவோ அவ்வளவு. ஒரு விநாயகர் (Transgenic God) மீண்டும் தோன்றுவதற்கான வாய்ப்பு மட்டுமே இருக்கிறது. மரபணுக்களுக்கு அதன் தன்மையினைக் கொடுப்பது எது என்பதற்கான விடை (விநாயகர்!) ஸ்டெம்செல் ஆராய்ச்சிகளில் கிடைக்கும்.
மனமாற்றம் அவசியமா மரபணு மாற்றத்துக்கு?
ஆம், புரிதல் அதனைத் தரும். ஏதோ BT-பருத்தியும், Terminator ஜீன்களை கொண்டுள்ள விதைகளும், கோவேறு கழுதை, விதையில்லா மாதுளை இவற்றில் மட்டும்தான் மரபணு மாற்றப்பட்டுள்ளது, மற்றபடி வேறு எங்கும் மாற்றம் செய்யப்பட்ட உயிரினங்கள் கிடையாது என்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக மூலக்கூறு அறிவியல் துறையிலிருந்தும, IISc, IIT-ல் இருக்கின்ற ஆய்வகம்வரை ஒவ்வொரு ஆய்வகத்திலிருந்தும் மரபணு மாற்றம் செய்யப்பெற்ற பாக்டீரீயங்கள் சுற்றுப்புறச் சூழலை நோக்கி தினமும் அனுப்பபடுகின்றன. ஆய்வக உபகரணங்களைச் சுத்தம் செய்யும் பொழுதுகளில் இது அவர்களுக்குத் தெரியாமலே நடைபெறும். ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவற்றில் இத்தகைய மரபணு மாற்றம் செய்யப்பெற்ற பாக்டீரியாக்களின் எதிர்பாராத வெளியேற்றம் (inadvertent release) என்பது கடுமையான விதிமுறைகளால் குறைக்கப்படுகிறது. ஆனால் தடுக்கமுடியாது.
மரபணு மாற்றம் தாங்கிகொள்ள கூடியதுதானா?
மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் மனிதனால் தாங்கிகொள்ளக் கூடியவையாகத்தான் இருக்கும். உதாரணம்: பீர்க்கங்காய், கொத்தவரங்காய், பாகற்காய் (Tropical Vegetables) போன்ற நமது காய்கறிகளின்றி, முழுவதுமாக இங்லீஷ் காய்கறிகள் மட்டுமே நாம் எடுத்துகொள்ளும் சூழல் வந்த/வந்தாலும் நம் உடலின் உடற்கூறு செயலியலானது அதற்கேற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது.
மனிதன் யார் இதை சொல்ல? மற்றும் செய்ய?
இப்புவியில் வாழும் Primates-களில், அனைத்தையும்விடக் கூடுதலாகச் சில பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள மனித மிருகம் (6&7), இந்த மாதிரியான செயல்களை/ஆராய்ச்சிகளைத் தன்னிச்சையாகச் செய்கிறது. தவிர எங்களுக்கு அனுமதி கொடுங்கள் என்று யாரிடம் அனுமதி வாங்குவது? யாரிடம் கேட்பது? அது சில பெண்கள், யாரிடமோ ‘பெண் சுதந்திரம் கொடுங்க’ என்று கேட்பது மாதிரி ஆகிவிடும். யார் வந்து அனுமதி கொடுப்பார்கள்? (MCP என்று கொதித்தெழும் பெண் தெய்வங்கள் பொறுத்தருள்க) துரைமார்கள் எதிர்க்கிறார்கள், நானும் எதிர்க்கிறேன், ஆதரித்தால் பொதுக்குழுவில் கேட்டுவிட்டு அப்பால யோசிக்கலாம் என்பவர்களுக்கு அதிலுள்ள ஆபத்து புரியமாட்டேன் என்கிறது. காரண காரியங்களை அலசி ஆராய்ந்து, சில பின்நவீனத்துவ பித்து தலைக்கேறின விஞ்ஞானிகள் கடவுளையெல்லாம் கிழித்துத் தொங்கவிட்டு விளக்கும்போது துரைமார்கள் தீடிரென்று அருள் வந்தமாதிரி எல்லா அனுமதியையும் அள்ளி விட்டுவிடுவார்கள். கடந்த வாரம் மனித ஸ்டெம்செல் (stem cell) ஆராய்ச்சிகளுக்கு அனுமதி கொடுத்தமாதிரி. அதனால் அடிப்படையினைத் தெரிந்துகொள்வது, போத்தீஸ் இல்லை என்றால் சென்னை சில்க்ஸ் போகலாம் என்று மாறுவதுபோல மனம் மாறுவதற்கு உதவியாக இருக்கும்.
இதன் பிறகும் மரபணு திருத்தம்/மாற்றம் என்றவுடனே மீசை துடித்தால் உடனடியாக தமிழில் வலைப்பதிவு எழுத ஆரம்பிக்கலாம் அல்லது மீசையினை எடுத்துவிடலாம். அடுத்த 50 வருடங்களில் மரபணு மாற்றப்பெற்ற உணவுப் பொருட்களும், உயிர் காக்கும் மருந்துகளும் தவிர்க்க முடியாதவை(indispensable). அப்போது மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்ற சாக்கு போக்கிலிருந்து சிலரை காப்பாற்ற வேண்டி தரையினை மணலின்றி சுத்தமாக பேணுவதே இதன் நோக்கம், யாருடைய மீசையுமன்று.
நன்றி.
எழுதியவர்: சுவேக்
அறிவியல்.இன்போ
References
1. Journal of Biological Chemistry, June 20 (2008) 283 17380 – 90
2. Microbes in their natural environment, Whittenbury R & Wimpenny T (1983) Cambridge University Press
3. Nature Reviews Microbiology 6 (2008) 579 – 591
4. Nature 29 Jan (2009) 516
5. Nature 22 Jan (2009) 485 – 89
6. New scientist 24 May (2008) 28 – 34
7. New scientist 11 Oct (2008) 46 – 47
8. Principles of cell and molecular biology, Kleinsmith & Kish 2nd edition (1995) Harper Collins college publishers
9. சுஜாதா
10.http://www.jeyamohan.in/?p=724
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு கிலோ வெளிநாட்டு விதைகளை இரண்டே ரூபாய்க்கு தருவோம்' என்பது அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியாக இன்னும் சில ஆண்டுகளில் மாறலாம். அரிசி, பருப்பு ஆகியவற்றுடன் பயிர் விதைகளும் அரசின் பொது வழங்கல் பட்டியலில் வரலாம். 'ஒரு கிலோ நெல்லு கொடுங்க' என உழவர்கள் கடைகளில் சென்று கேட்கலாம். ‘தக்கன தழைத்தல்’ - டார்வினின் இந்தத் தத்துவம் இன்னும் சில நாட்களில் பொய்த்துப் போகலாம். மாற்றம் மட்டுமே மாறாதது என்னும் இவ்வுலகில் 'டார்வின்' மட்டும் விதிவிலக்கா என்ன?
சரி செய்திக்கு வருவோம்! மரபு மாற்று விதைகளுக்கு இந்திய அரசு உரம் போட்டுத் தண்ணீர் தெளித்திருக்கிறது! தக்காளி, கத்தரிக்காய், காலிபிளவர் ஆகிய காய்கள் இன்னும் மூன்று ஆண்டுகளில் மரபு மாற்றுத் தொழில்நுட்பம் மூலம் உற்பத்தி செய்யப்படும் என அறிவித்திருக்கிறது. மைய அரசின் மரபறிவியல் ஒப்புதல் குழு, மரபியல் மேலாய்வுக்குழு ஆகியவற்றின் ஒப்புதலுக்குப் பின் இந்தியாவில் அவை பயிரிடப்படும். அரசின் இம்முடிவு வேளாண்மை அறிஞர்களை மட்டுமல்லாது பல வெளிநாட்டு அறிஞர்களையும் வியப்படைய வைத்திருக்கிறது.
ஒரு பக்கம் மரபு மாற்று விதைகளை அமெரிக்கா முதலிய நாடுகள் தீவிரமாக ஆதரிக்கின்றன. பெருகிவரும் உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க இம்முறை உதவும் என்பது அந்நாடுகளின் வாதம். மரபு மாற்று முறையில் பயிர்களின் மரபுகளை மாற்றுவதால் பூச்சிக்கொல்லிகள் குறைந்த அளவிலேயே தேவைப்படும்; இதனால் மண்வளம் பாதுகாக்கப்படும். அருகி வரும் சில பயிரினங்களை மரபு மாற்று முறையில் காப்பாற்ற முடியும் எனப் பல வாதங்களை முன் வைக்கிறது அமெரிக்கா. நோபல் பரிசு பெற்ற 25 அறிவியலாளர்கள், 3400 அமெரிக்க வேளாண்அறிவியலாளர்கள் அமெரிக்காவின் இக்கருத்தை ஆதரிக்கிறார்கள்.
(கொசுறுச் செய்தி: பல நாட்கள் வைத்திருந்து விற்பதற்கு வசதியாக மெதுவாகப் பழுக்கும் 'பிளார் சாவர்' என்னும் மரபு மாற்றுத் தக்காளியை முதன்முதலில் கலிபோர்னிய நிறுவனம்தான் அறிமுகப்படுத்தியது)
வலுக்கும் எதிர்ப்புக்குரல்கள்
இத்தனை இருந்தாலும் எதிர்ப்புக்குரல்களும் பலமாகவே கேட்கின்றன. முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் இல்லாத நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் மரபு மாற்றுக் காய்கறிகளைத் தனியே வைத்திருக்கின்றன. இக்காய்களைச் சந்தை விற்பனைக்கு அனுமதித்தாலும் அவற்றின் மீது ஒட்டுத் தாள்கள் ஒட்டப்பட்டு அவை வேறுபடுத்தப்படுகின்றன.
வெனிசுலா நாடு கடந்த 2004ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் மரபு மாற்றுப் பயிரிடலைத் தடுத்திருக்கிறது. அங்கேரி நாடு மரபுமாற்றுப் பயிரிடலையும் இறக்குமதியையும் சட்டம் போட்டு நிறுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் கருத்துகள் அனைத்தும் வடிகட்டிய பொய் என்கிறார் வேளாண்அறிவியலாளர் சார்லசு பென்புருகு. 'இம்முறையால் 5 - 7 விழுக்காடு நட்டம் கூடும்; 5 - 10 மடங்கு களைக்கொல்லி அதிகம் செலவாகும்' என்கிறார் இவர். "ஒட்டு மொத்த ஐரோப்பா கண்டமே புறக்கணித்த மரபு மாற்றுப் பயிர்களை இந்தியா ஆதரிக்கக்கூடாது. மீறி ஆதரித்தால் வட அமெரிக்காவின் சந்தையாக இந்தியா மாறிவிடும். இந்தியர்கள் ஆய்வுக்கூட எலிகளாகப் பயன்படுத்தப் படுவார்கள்" என எச்சரிக்கிறார் பிரான்சைச் சேர்ந்த மரபணு ஆய்வாளர் செராலனி. "எலி, ஆடு, முயல் ஆகியவற்றிற்கு மரபு மாற்றுப் பயிர்களை உணவாகக் கொடுத்து ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவ்விலங்குகளின் இரத்த உறைதல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் மாற்றங்கள் காணப்பட்டன. எனவே மரபு மாற்றப்பயிர்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது" என்கிறார் இலண்டன் கிங் கல்லூரிப் பேராசிரியர் அந்தோனியோ.
“அரசின் அறிவிப்பே ஒரு மோசடி”
இயற்கையைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடும் கிரீன் பீசு தன்னார்வ அமைப்பு மரபுமாற்றுப் பயிரிடலைத் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. ‘காலம் காலமாக இருந்து வரும் உணவுச் சங்கிலியை மாற்றுவது தவறானது. வணிகத்தைப் பெருக்க வேண்டுமானால் மரபு மாற்று முறை உதவும். வாழ்க்கைக்கு உதவாது’ என்பது கிரீன் பீசின் கருத்து. இதைப் பற்றி, 'கிரீன்பீசு' அமைப்பைச் சேர்ந்த செய் கிருட்டினனைக் கேட்டபோது, " இந்திய அரசின் அறிவிப்பே ஒரு மோசடி! மரபு மாற்றுப்பயிர்கள் தொடர்பான முடிவுகளைச் சுற்றுச்சூழல் அமைச்சகம் தான் எடுக்க வேண்டும். ஏனென்றால் இது நிலம் தொடர்பான சிக்கல்! ஆனால் இப்போது வேளாண்துறை அமைச்சர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுவே தவறானது!" எனப் பொரிந்து தள்ளினார்.
“வடிகட்டிய பொய்”
"ஒரே ஒரு மரபணுவை மாற்றுவதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும் என்பதே வடிகட்டிய பொய்! நம் நாட்டில் ஏற்கெனவே மரபு மாற்று முறையில் பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால் உழவர்களுக்கு அதனால் எவ்விதப் பயனும் இல்லை. சொல்லப்போனால் பருத்தி உழவர்கள் தற்கொலை இன்னும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது." என்றவர் "மரபு மாற்றுப் பயிர் நிறுவனங்கள் நெல்லையும் மரபு மாற்றுப் பயிரிடல் முறையில் திட்டமிட எண்ணியுள்ளன. இந்திய அரசு இப்போதே கவனமாகச் செயல்பட்டு அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். கனடா, அர்சென்டினா, வட அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளில் மட்டும்தான் மரபு மாற்றுப் பயிரிடல் முறை நடைமுறையில் உள்ளது. வேறெந்த நாட்டிலும் இல்லை. மேலும் முதன்மைப் பயிர்களை மரபு மாற்று முறையில் பயிரிட எந்த நாடும் ஒப்புக்கொண்டதில்லை. அமெரிக்கா புளோரிடாவின் முதன்மைப் பயிர் பருத்தி. அங்கு 'பிடி' பருத்திக்குத் தடை உள்ளது. இதே போல் பெரு நாட்டில் உருளைக்கிழங்கும் சீனாவில் சோயாவும் மெக்சிகோவில் சோளமும் மரபு மாற்று முறையில் பயிரிடத் தடை விதித்துள்ளார்கள். நம்முடைய நாட்டிலும் மரபு மாற்றுப் பயிர்களுக்கு முழுமையாகத் தடைகள் வேண்டும்" என்று அவர் விலாவாரியாக விளாசித் தள்ளினார்.
பிடி' (‘Bt’) என்றால் என்ன?
பேசில்லசுத் துரிசென்சி (Bacillus Thurigiensis) என்பது ஒருவகை புரதம். அப்புரதத்தில் இருந்து பருத்திப் புழுக்களைக் கொல்லும் ஒருவகை மரபீனி பருத்திப் பயிர்களில் சேர்க்கப்படுகிறது. இம்மரபீனி சேர்க்கப்பட்ட பருத்தி வகைகள் 'பிடி' பருத்தி எனப்படுகின்றன. இயற்கை வேளாண்மையை ஆதரிக்கும் நம்மூர்க்காரர்கள், "பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த முறையை மாற்றுவது மண்வளத்தைப் பாதிக்கும்; உழவர்கள் விதைகளுக்காகப் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டி வரும்" என்கிறார்கள். முதலாளித்துவத்தை வளர்ப்பதே இதன் நோக்கம் என்பது இவர்களின் குற்றச்சாட்டு.
மலட்டுத்தன்மை அடையும் நிலம்
தமிழ்நாடு உழவர்கள் சங்க மாநிலத்தலைவர் வேட்டவலம் மணிகண்டனிடம் கேட்டபோது "மரபு மாற்றுப் பயிரிடலால் நிலம் மலட்டுத்தன்மை அடைந்துவிடும். மராட்டிய மாநிலத்தில் மரபு மாற்றுப் பயிர்களைப் பயிரிட்ட உழவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். தமிழ்நாட்டில் மரபு மாற்றுப் பயிர்களைப் பயன்படுத்திய உழவர்கள் பலருக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்காகப் பலகட்டப் போராட்டங்கள் நடத்தி ஏக்கருக்கு ஐயாயிரம் பணத்தைப் பெற்றுக் கொடுத்தோம். எனவே மரபு மாற்றுப் பயிர்கள் அதிக மகசூல் தரும் என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை" என முடித்துக்கொண்டார்.
தடை விதித்துள்ள நாடுகளில் சில : தாய்லாந்து, ஆசுதிரியா, அங்கேரி, வெனிசுலா , பிரான்சு, இரசியா, நியூசிலாந்து
"மரபு மாற்றுப் பயிரிடல் முறை பயிர்களில் பல வகைகள் அழியும் வாய்ப்பு அதிகம். இந்தியாவில் பழைய காலத்தில் 120000 அரிசி வகைகள் இருந்தன. 'பசுமைப் புரட்சி'யின் விளைவாகத் தற்போது வெறும் ஐம்பது அரிசி வகைகள் மட்டுமே உள்ளன. இன்னும் மரபு மாற்றுப் பயிரிடலைக் கொண்டு வந்தால் இருக்கும் அரிசி வகைகளும் அழிந்து போகும். சொல்லப்போனால் அன்றாடம் நாம் சாப்பிடும் கத்தரிக்காயில் மட்டுமே இரண்டாயிரத்திற்கும் அதிகமான வகைகள் உள்ளன. அரசின் இவ்வறிவிப்பால் இவை எல்லாம் அழிந்து போகும் நிலை ஏற்படும்" என எச்சரிக்கிறார் இயற்கைமுறை வேளாண்மை முறையைப் பின்பற்றும் செல்லையா.
“வழக்கமாக உழவர்கள் ஓராண்டு விளைச்சலில் இருந்து அடுத்த ஆண்டுக்கான விதைகளைப் பெறுவார்கள். ஆனால் மரபு மாற்று விதைகளை இப்படிப் பயிரிட முடியாது. மரபு மாற்று விதைகள் 'அறிவுசார் உரிமை'ச் சட்டத்தின் கீழ் வருகின்றன. மரபு மாற்று விதைகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும். அவற்றிடம் இருந்து தான் உழவர்கள் விதைகளைப் பெற வேண்டும். இல்லாவிட்டால் 'எங்களை ஏமாற்றி விதைகளைப் பயிரிட்டிருக்கிறார்கள்' என அந்நிறுவனங்கள் வழக்குத் தொடுக்கும். 1998 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஒரு விவசாயி மேல் இப்படி வழக்குத் தொடரப்பட்டது." எனப் புள்ளிவிவரங்களை அடுக்குகிறார்கள் சமூக ஆர்வலர்கள் சிலர்.
இன்னும் பிரான்சில் உள்ள கேன் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறைத் தலைவர் செராலனி, ஒரிசா மாநில ஓமியோபதி மருத்துவர்கள் சங்கத் தலைவர் தத்தா, இயற்கை வேளாண்மை ஆராய்ச்சியாளர் கவிதா குருகந்தி, மரபியல் துறை அறிஞர் பார்கவா, முன்னாள் அமைச்சர் அன்புமணி இராமதாசின் ‘பசுமைத்தாயகம்’ தன்னார்வ அமைப்பு, நடிகைகள் அமலா, உரோகிணி, இயக்குநர்கள் மிசுகின், வசந்து, மருத்துவர் கமலா செல்வராசு என மரபு மாற்றுப் பயிரிடல் முறையை எதிர்ப்போர் பட்டியல் நீளுகிறது.
இப்படிக் கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாகப் பல சிக்கல்கள் இருக்கின்றன. இவையெல்லாம் இருக்க, இந்திய அரசின் தடாலடி அறிவிப்புப் பலரைப் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.
- முத்துக்குட்டி
கீற்று.காம்
தலைப்பு : உங்களுக்கு தெரியுமா?, மரபணு
Subscribe to:
Posts (Atom)