அரிது அரிது மானிடராதல் அரிது. அதனினும் கூன் குருடுசெவிடு நீங்கிப் பிறத்தல் அரிது என்பதோடு மட்டும் ஒளவை தனது பாடலை நிறுத்திவிட்டார்.
வளர்ந்து வரும் மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும், எடுக்கவும் கொடுக்கவும் கூடிய சமுதாய அமைப்பை இப்பொழுது பெற்று வருகிறோம். எனவே தானமும் தவமும்கூட எந்த ஒரு விதத்திலாவது செய்துவிட முடியும்.
இத்தனைக்க மேல் ஒருவன் கவிஞனாகப் பிறக்கிறான் என்றால் அது எத்தனையோ நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்ச்சி என்றுதான் கூறமுடியும். கம்பனுக்குப் பின் தமிழ் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று வரும் கவிஞர் சுப்ரமணிய பாரதியார் ஒருவரே.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு எத்தனையோ தேசியத் தலைவர்களைப் பெற்றெடுத்த பெருமை உண்டு. வ.உசி. சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்றவர்கள் அதே மாவட்டத்தில் பிறந்தவர்கள். எட்டையபுரத்தில் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி சின்னச்சாமி அய்யருக்கும் லெட்சுமி அம்மாளுக்கும் பிறந்த குழந்தைதான் நமது சுப்ரமணிய பாரதியார்.
அவர் இளமையிலேயே கவிபாடக்கூடிய திறமை பெற்றிருந்தார். பதினொரு வயது நிரம்பிய சுப்பையா என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவரை எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் பற்பல சோதனைக்கு உட்படுத்தினர். அவைகளில் வெற்றி பெற்றதால் அந்தப் புலவர்கள் வியந்து அளித்த பட்டம் 'பாரதி'.
அவர் 1894-1897 வரை திருநெல்வேலி ஹிந்துகல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை படித்தார். படிக்கும் போதே தமிழ்ப் பண்டிதர்களுடன் ஏற்பட்ட சொற்போர் காரணமாக 14 வயதிலேயே அக்கால வழக்கப்படி திருமணம் நடந்தது. 7 வயது நிரம்பிய செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
1898-1902 வரை காசியில் தனது அத்தை குப்பம்மாள் அவர்களுடன் தங்கியிருந்தார். அப்போது அலகாபாத் சர்வகலாசாலையில் பிரவேசத் தேர்வு எழுதி வெற்றிப்பெற்றார். காசி இந்து சர்வகலாசாலையில் ஹிந்தியும், வடமொழியும் பயின்றார். அப்போதுதான் நமது பாரதியாருக்கு தலைப்பாகை கட்டும் பழக்கமும் மீசை வைத்துக் கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டதாக அறிகிறோம். மீண்டும் எட்டையபுரம் வந்து 1902 முதல் இரண்டாண்டு காலத்திற்கு எட்டையபுரம் மன்னருக்குத் தோழனாக இருந்தார். அப்போதுதான் மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'விவேக பானு' என்ற பத்திரிகையில் இவரது முதல் பாடல் 'தனிமை இரக்கம்' அச்சாகி வெளியிடப்பட்டது.
1904ம் ஆண்டு மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அதே ஆண்டு நவம்பரில் சென்னையிலிருந்து வெளிவரும் 'சுதேசமித்திரன்' பத்திரிகைக்கு உதவியாசிரியரானார். பின்பு 'சக்கர வர்த்தினி' என்ற பத்திரிகையின் ஆசிரியராக ஆனார்.
1905ம் ஆண்டில் பாரதியார் அரசியலில் ஈடுபட்டு இருந்தார். தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார்.
1906ல் சென்னையிலிந்து 'இந்தியா' என்ற வாரப் பத்திரிகை துவங்கி அதன் மூலம் தனது அரசியல் கருத்துக்களை இந்நாட்டு மக்களிடம் பரப்பினார். அப்போது திருமலாச் சாரியார். வ.உ.சி. சர்க்கரைச் செட்டியார் முதலியோரின் நட்புக் கிடைத்தது.
சூரத் காங்கிரசில் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் 1907ல் பிளவு ஏற்பட்டது. பாரதியார், திலகர் போன்ற தீவிரவாதிகள் பக்கம் நின்று பணியாற்றினார். அப்போது திலகர், லாலா லஜபதிராய், அரவிந்தர் முதலியோரைச் சந்தித்தார். கிருஷ்ணசாமி அய்யர் என்ற தேசபக்தர் பாரதியாரின் பாடல்களில் உள்ள வேகத்தின் தன்மையை உணர்ந்து 'சதேசகீதங்கள்' என்ற தலைப்பில் அவரது பாடல்கள் பலவற்றை அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார்.
1908ஆண்டு 'சுயராஜ்ஜிய தினம்' சென்னையிலும் தூத்துக்குடியிலும் கொண்டாடப்பட்டது. அதில் வ.உ.சி சுப்ரமணியசிவா போன்றவர்களுக்குச் சிறைத்தண்டனை கிடைத்தது. அந்த வழக்கில் பாரதியார் சாட்சியம் சொல்லியுள்ளார்.
அதே ஆண்டில் கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் வெளியிட்ட 'சுதேச கீதங்கள்' என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு ஒன்றை பாரதியார் வெளியிட்டார்.
இது வெளிவந்தபின், பிரிட்டிஷ் அரசாங்கம் பாரதியார் மீது ஒரு கண்ணோட்டம் விட்டது. 'இந்தியா' பத்திரிகையின் சட்ட ரீதியான ஆசிரியர் கைது செய்யப்பட்டு பாரதியார் மீது வாரண்ட் போட்டது. பாரதியார் தலைமறைவானார். புதுச்சேரி சென்றார். அங்கும் போலீஸ் தொல்லைகளுக்கு உட்பட்டார்.
அப்போது 'இந்தியா' பத்திரிகை 1910 வரை புதுச்சேரியிலிருந்து தனது தேசியத் தொண்டைத் துவங்கியது. எரிமலை வெடித்தது போன்ற எழுத்துக்களால் மக்களிடையே விடுதலை வேட்கையைப் பரப்பினார். இதனைக் கண்ட பிரிட்டிஷார் இந்தியா' பத்திரிகை வருவதைத் தடுத்தது. அத்துடன் பத்திரிகை, விற்பனைக் குறைவால் நின்று போயிற்று.
1911ல் மணியாச்சியில் கலெக்டர் ஆஷ்துரை சுட்டுக்கொல்லப்பட்ட போது புதுச்சேரியில் உள்ள தேசபக்தர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அங்கு உள்ள தேசபக்தர்களுக்குத் தாங் கொணாத் துன்பத்தை ஆட்சியினர் கொடுத்தனர். மேலும் அவர்களை அங்கிருந்த வெளியேற்றவும் முயற்சிகள் நடைபெற்றன. பாரதியாரின் சீடர்கள் ஏராளமாயினர்.
பாரதியார் 1912-ல் கீதையை மொழி பெயர்த்தார். மேலும் கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்கள் எழுதப் பெற்றன. பாஞ்சாலி சபதம் வெளியிடப் பெற்றதும் இந்த ஆண்டில்தான்.
அடுத்த ஆண்டில் 'ஞானபாநு' என்ற பத்திரிகைக்குச் செய்திகள் சேகரித்துக் கொண்டிருந்தார். 1914ல் முதல் உலகப் போர் துவங்கியதும் அங்கு உள்ள தேசபக்தர்களுக்கு ஏராளமான தொல்லைகள் ஏற்பட்டன.
பரலி சு. நெல்லையப்பர் அவர்கள் 1917ல் கண்ணன் பாட்டு முதற்பதிப்பைச் சென்னையில் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து 1918ல் 'சுதேச கீதங்கள்', 'நாட்டு பாடல்' முதலியன வெளியிடப்பட்டன.
புதுச்சேரி வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு உணர்வால் பாரதியார் 1918ம் ஆண்டு நவம்பர் 20ந் தேதி அங்கிருந்து வெளியேறினார். அப்போது கடலூருக்கு அருகே கைது செய்யப்பட்டு, சில நாட்கள் சிறை இருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவுடன் கடையத்துக்குச் சென்றார்.
1918 முதல் 1920 வரை கடையத்தில் வாழ்ந்து வந்த பாரதியார் எட்டையபுர மன்னனுக்கு சீட்டுக் கவிகள் மூலம் தன் நிலைமையைச் சொல்லியும் எவ்விதப் பயனும் ஏற்படாமல் சென்னைக்கு வந்தார். சென்னையில் ராஜாஜி அவர்கள் வீட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார்.
1920ல் மீண்டும் சுதேசிமித்திரனுக்கு உதவியாசிரியரானார். பாரதியாரின் எழுத்துக்கள் அப்போது அதில் நிறைய இடம் பெற்றன.
1921ல் திருவல்லிகேணியில் கோயில் யானை ஒன்றால் தூக்கி எறியப்பட்டு, அதிர்ச்சியுற்று, நோய்வாய்ப்பட்டு 1921 செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவுக்குப் பின் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார். உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்ற பாரதியார், உலக மக்களின் உள்ளங்களிடையே இன்னும் வாழ்ந்து வருகிறார். வாழ்க மகாகவி பாரதியார்.
நன்றி : ஸ்ரீ ஆனந்த நிலையம்
தலைப்பு : வரலாறு
பொருள் இல்லாதவர்களுக்கு இந்த உலக வாழ்க்கை இல்லை என்பார் திருவள்ளுவப் பெருந்தகையார்.
உலக வாழ்க்கைக்குப் பொருள் மிக முக்கியம் என்று அழுத்தமாகவே சொல்வார்.
ஆனாலும் நாம் தேடும் செல்வம் நிலை இல்லாதது என்றும் சொல்வார்.
கலைநிகழ்ச்சி நடக்கும்போது அரங்கத்தில் பெருங்கூட்டம் கூடுகிறது.
நிகழ்ச்சி முடிந்தவுடன் கூட்டம் கலைந்து போகிறது.
அரங்கத்துக்கு வரும் கூட்டம் அரங்கத்திலேயே நிலைத்து இருப்பதில்லை.
ஒருவனிடம் சேரும் செல்வம் என்றென்றும் அவனிடத்திலேயே நிலைத்து இருப்பதில்லை.
செல்வம் சேரும்போது சேரும்; போகும்போது போகும்.
செல்வம் நிலைத்து நிற்பதில்லை.
“கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று” (332) என்கிறார் திருவள்ளுவர்.
செல்வம் மிக முக்கியம் என்கிறார்.
ஆனால் அது நிலை இல்லாதது என்றும் சொல்கிறார்.
செல்வம் நிலை இல்லாதது என்றால் செல்வத்தை ஏன் தேடவேண்டும்?
நிலை இல்லாத ஒன்றைத் தேடும் வேலை வீண் வேலைதானே?
நிலை இல்லாத ஒன்று எப்படி முக்கியமானது ஆகும்?
திருவள்ளுவர் முரண்படுகிறாரோ?
மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
நாட்டுப் பொய்யெலாம் பேசிடும் நாணிலீர்
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே. (5.84.2)
மாட்டைத் தேடி மகிழ்ந்து நீர் நும்முளே
நாட்டுப் பொய் எலாம் பேசிடும் நாண் இலீர்
கூட்டைவிட்டு உயிர் போவதன் முன்னமே
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே.
`செல்வத்தைத் தேடி உமக்குள்ளே மகிழ்ந்து நாட்டில் உள்ள பொய்கள் எல்லாம் பேசிடும் நாணம் இல்லாதவர்களே! உடலைவிட்டு உயிர் போவதற்கு முன்பே திருக்காட்டுப்பள்ளி உள்ளான் திருவடி சேர்வீர்களாக!’
மாடு – செல்வம்
நும்முளே – உமக்குள்ளே
நாண் – நாணம்
இலீர் - இல்லாதவர்களே
நாணிலீர் – நாணம் இல்லாதவர்களே, நாணம் அற்றவர்களே
கூடு – உடல்
காட்டுப்பள்ளி – ஊரின் பெயர்: மேலைத் திருக்காட்டுப்பள்ளி என வழங்கப்பெறும்
காட்டுப்பள்ளியுளான் – திருக்காட்டுப்பள்ளியில் எழுந்தருளியுள்ள இறைவர்
கழல் – திருவடி
சேர்மினே – சேர்வீர்களாக
உலக வாழ்க்கைக்குப் பொருள் தேவை என்பது உலகறிந்த உண்மை.
இந்த உண்மையைச் சைவ சமயச் சான்றோர்கள் மிகவும் வலியுறுத்தியே சொல்வார்கள்.
“மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்” (3.24.1) என்பார் திருஞானசம்பந்தர்.
மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்குப் பொருள் தேவை.
பொருள் தேவை என்றால் தேடித்தான் ஆகவேண்டும்.
`பொருள் தேடுங்கள்; பொருள் தேடி நன்றாக வாழுங்கள்’ என்று ஊக்கம் ஊட்டுகிறார்கள் சமயச் சான்றோர்கள்.
பொருள் தேடுவது எப்படி என்றும் சொல்கிறார்கள்.
உடல் வளர்ச்சிக்கும் நலத்துக்கும் உணவு தேவை.
எனவே உணவு தேடுவதும் உணவு உண்பதும் மிக முக்கியம் ஆகின்றன.
உணவு தேடுவதில் மகிழ்ச்சி இருக்கவேண்டும்.
உணவு உண்பதில் மகிழ்ச்சி இருக்கவேண்டும்.
ஆனால் உணவு தேடுவதே மகிழ்ச்சி என்று வாழலாமோ?
உணவு உண்பதே மகிழ்ச்சி என்று வாழலாமோ?
உணவே மகிழ்ச்சி என்று வாழத் தொடங்கினால் உணவே நமக்குப் பகையாகிவிடும்.
மூன்றுவேளை உணவு என்பது மறைந்து ஒருவேளை உணவும் நான்குவேளை மருந்தும் உட்கொள்ளும் நிலை வந்துவிடும்.
ஊரிலுள்ள மருத்துவர்கள் எல்லாரும் நமக்கு மிக வேண்டியவர்கள் ஆகிவிடுவார்கள்.
செல்வம் தேடுவதில் மகிழ்ச்சி இருக்கவேண்டும்.
செல்வத்தை நுகர்வதில் (அனுபவிப்பதில்) மகிழ்ச்சி இருக்கவேண்டும்.
ஆனால் செல்வம் தேடுவதே மகிழ்ச்சி என்று வாழலாமோ?
செல்வத்தை நுகர்வதே மகிழ்ச்சி என்று வாழலாமோ?
செல்வமே மகிழ்ச்சி என்று வாழத் தொடங்கினால் செல்வமே நமக்குப் பகையாகிவிடும்.
“மாட்டைத் தேடி மகிழ்ந்து” என்கிறார் திருநாவுக்கரசர்.
`செல்வம் தேடுவதற்கே வாழ்கிறோம்; செல்வம் தேடுவதே மகிழ்ச்சி’ என எண்ணுவதையே அப்பர் குறிப்பிடுகிறார்.
இப்படி எண்ணத் தொடங்கினால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்காகவே செல்வம் தேடுகிறோம் என்பது மறைந்துபோகும்.
செல்வம் தேடுவதே மகிழ்ச்சியான வாழ்க்கை என்னும் எண்ணம் தலைதூக்கி வலுப்பெற்றுவிடும்.
செல்வமே வாழ்க்கை எனும் எண்ணம் வலுப்பெற்றால் `எப்படியும் செல்வம் திரட்டலாம்; எப்படியும் செல்வம் திரட்டவேண்டும்’ என்று செயல்படத் தொடங்குவோம்.
எப்படியும் செல்வம் திரட்டவேண்டும் என்று செயல்படத் தொடங்கினால் எதனையும் செய்யலாம் என்பதே நம் கொள்கை ஆகிவிடும்.
`ஊராரை ஏமாற்றலாம்; வஞ்சகம் செய்யலாம்; நம்பியவர்களை நட்டாற்றில் விடலாம்; பிறர் குடியைக் கெடுக்கலாம்; சட்டத்தை வளைக்கலாம்; சட்டத்தை மீறலாம்; நமக்குப் பணம் வந்தால் சரி, பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என்று எதனையும் செய்யத் தொடங்கிவிடுவோம்.
பணத்துக்காகத் தவறான வழிகளில் இறங்குபவர்களுக்கு உற்ற துணையாகவும் வலுவான கருவியாகவும் இருப்பது பொய் ஆகும்.
பொய்யையே முதலாகக் கொண்டு பொய்யைப் பெருக்கிப் பொருளைப் பெருக்குவார்கள்.
பொய் பெருகப் பெருகப் பொருளும் பெருகும்.
பொருள் பெருகப் பெருகப் பொய்யும் பெருகும்.
அளவில்லாமல் பொய் பேசத் தொடங்குவார்கள்.
நாட்டிலுள்ள எல்லாப் பொய்களையும் சேர்த்துப் பேசுவார்கள்.
எவ்வளவு பொய் பேசினாலும் அவற்றுக்காகச் சிறிதும் நாணம் கொள்ளமாட்டார்கள்.
சிறிதுகூட நாணம் இல்லாமல் பணத்துக்காகப் பொய் பேசுவார்கள்.
“நாட்டுப் பொய்யெலாம் பேசிடும் நாணிலீர்” என இவர்களை விளிக்கிறார் அப்பர்.
பொருளுக்காகப் பொய் பேசலாமோ?
பொய் பேசிப் பொருள் தேடலாமோ?
`கூடாது’ என்கிறது சைவம்.
`கூடாது’ என்கிறார் திருவள்ளுவர்.
`கூடாது’ என்கிறார் திருநாவுக்கரசர்.
பொருள் தேடுவது குறித்த சைவக்கொள்கை மிகவும் தெளிவானது.
`எவ்வளவு செல்வம் வேண்டுமானாலும் தேடுங்கள்; முறையான வழியில் தேடுங்கள்; அறவழியில் தேடுங்கள்’ என்கிறது சைவ சமயம்.
இந்தக் கொள்கையோடு திருக்குறளும் முரண்படவில்லை; திருமுறையும் முரண்படவில்லை.
இல்லறம் நல்லறம் ஆவதற்குப் பொருள் வேண்டும்.
அறவழியில் நின்று பொருள் தேடவேண்டும்.
பொருள் தேடி மண்ணில் நல்லவண்ணம் வாழவேண்டும்.
உடலைவிட்டு உயிர் பிரிந்துபோவது உறுதி.
என்றாவது ஒரு நாள் உயிர் பிரியத்தான் செய்யும்.
ஆனால் அதற்கு முன் வாழவேண்டும்.
செத்துச் செத்து வாழக்கூடாது.
நன்றாக வாழ்ந்து இறக்கவேண்டும்.
http://nanavuhal.wordpress.com/2009/03/11/selvam-vaazkkai/
தலைப்பு : சிந்திக்க சில நிமிடங்கள், படித்ததில் பிடித்தது
வாழ்க்கையில் மகிழ்ச்சி தேவை என்றால் முதலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென எண்ணுவதை நிறுத்துங்கள். நீங்கள் வருந்துவதாலோ, அதையே நினைத்துக் கொண்டு இருப்பதாலோ எதுவும் மாறப் போவதில்லை.
வாழ்வை அதன் போக்கில் விட்டு, உங்கள் முயற்சியைத் தொடருங்கள். நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ளுங்கள். எரிமலை சாம்பலில் அதிக சத்துக்கள் இருப்பதைப் போல் எந்த ஒரு துன்பத்திலும் நிச்சயம் ஒரு நன்மை இருக்கும்.
அன்னப்பறவை போல் துன்பத்தை விலக்கி நன்மையை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் நிச்சயம் ஒரு வலி மிகுந்த கடினப் பாதை இருக்கும்.
மற்றவர்களிடம் குறை காணுவதை விட்டு உங்களுக்குள் என்ன நடக்கிறது என கவனியுங்கள். உங்கள் ஆழ்மனதின் விருப்பங்கள், நம்பிக்கைகளை அறிந்து, அதன் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி, உங்களின் லட்சியத்திற்குத் தயார் படுத்துங்கள்.
அனைத்து வசதிகளும் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்பது தவறு. வசதி இருப்பின், வரும் வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்த முயலுவோம். இல்லாவிட்டால், இனி என்ன செய்யலாம் என யோசித்தே மற்றவருக்கும் வாய்ப்புகளை வழங்குவோம்.
எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்தியமென ஹெரொடொடுச் என்ற அறிஞர் கூறுகிறார். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை விட்டுவிட்டு, ஒரு வழி மூடினால் வேறு வழி திறக்கும் என எண்ணுங்கள். அதில் உங்களால் எவ்வளவு தூரம் சாதிக்க முடியும் எனப் பாருங்கள்.
ஒரு நிகழ்வு நிகழ்வில்லையெனில் அதில் உங்கள் குணத்திற்கு ஒவ்வாத ஏதோ ஒன்று உள்ளது என அர்த்தம். இன்று முதல் ஆனந்தம் என வீட்டில் உங்களுக்கு பிடித்த இடத்திலிருந்து உங்களுக்கு பிடித்த செயலைச் செய்யுங்கள். வீட்டில் எந்த இடமும் பிடிக்கா விட்டால் வெளியே வாருங்கள்.
இயற்கை மலர்கள், மனிதர்கள், மரங்கள், மலைகள், நதிகள் எனப் பரந்து விரிந்திருக்கிறது. அதில் உங்களுக்குப் பிடித்த தனிமை நிச்சயம் கிடைக்கும். அந்தத் தனிமையில் உங்களைத் தேடி எதிர்மறை எண்ணங்களை விலக்குங்கள். மனதில் எதிர்மறை எண்ணங்களை விலக்கினால் அந்தக் காலி இடம் நேர்மறை எண்ணங்களால் நிறையும்.
இயற்கையை நம்பி வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து உங்கள் லட்சியத்திற்குத் தேவையான உங்களிடம் இல்லாத திறமையைக் கற்றுக் கொண்டு, கடுமையான உழைப்புடன் நல்ல எண்ணங்களால் நல்முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றி உங்களுக்கே!
(மூலம் : enlightenedbeings.com)
தலைப்பு : சிந்திக்க சில நிமிடங்கள்
Subscribe to:
Posts (Atom)


