"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

காலத்தை வெல்லுதல் மனிதர்களுக்குச் சாத்தியமல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்துதான் வைத்திருக்கிறார்கள். பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் இறக்க வேண்டும் என்பது அறிந்து கொள்ள முடியாத திசையிலிருந்து வருகின்ற உத்தரவு. அந்த உத்தரவின் ரூபம் என்ன?

உள்ளங்கால் தொட்டு உச்சந்தலைவரை வருடிச் செல்லும் அதிகாலைப் பனிக்காற்றா? உரலிலிட்டு இடித்துக் காய்ச்சிய கம்மங்கூழுக்குக் கடித்துக் கொண்ட பச்சை மிளகாயின் உறைப்புச் சுவையா? வெண் பஞ்சுக் கூட்டத்தில் பொன்பரப்பாய்ச் சிதறும் அந்தி நேரத்து மலைமுகட்டுச் சித்திரமா? கைவளையோசையாகவும் கால் கொலுசின் சிணுங்கலாகவும் காதில் நுழைந்து கண் பொத்திக் கட்டி அணைத்துப் பின் கழுத்தில் முத்தமிட்டுக் கலவி செய்துக் காணாமல் போன கனவுப் பிம்பமா? கருக்கிருட்டில் காராம்பசுவின் மடிபிதுக்கிக் கறந்த பாலின் இளஞ்சூடா?

மரணங்கள் ஒருவிதத்தில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தின் பதிவும் கூட. வாழும் காலத்தில் அவர் செய்த செயல்களின் பதிவுகளை மரணத்திற்குப் பின்னும் வாசிக்க முடியும் என்றாலும் அந்த மரணம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதும் கூட. வாழ்ந்த காலத்து இருப்பைச் சொல்லும் உடனடி வெளிப்பாடு என்பதை நாம் மறுக்க முடியாது. இருந்த காலத்தின் பதிவுகள் அவருக்கு அழியாத அடையாளங்களைப் பரப்பிக் காட்டுகின்றன. அந்தப் பரப்பு சார்ந்து குடும்ப மனிதனாகச் சுருங்கிச் சொல்லலாம். இங்கே பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் அப்படிச் சுருங்கிப் போனவர்கள் தான். ஆனால் எல்லா மனிதர்களும் சுருங்கிப் போவதை விரும்புபவர்களும் அல்ல.

தங்கள் வெளியைக் கிழித்து வெளியேறும் போது தான் தத்துவ, அரசியல், சமூக, கலை, அறிவியல்.பண்பாட்டு மனித அடையாளங்கள் உருவாகின்றன. அந்த உருவாக்கத்திற்கு முயலாத மனிதர்கள் இல்லை என்றாலும், எல்லாருக்கும் அந்த அடையாளம் கிடைத்து விடுவதும் இல்லை. வந்த சுவடு தெரியாமல் போவதைப் பற்றிச் சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. வந்தது போலவே சென்று விட வேண்டும் என நினைப்பதும் கூட ஒருவிதத்தில் ஆசை தான். வந்த சுவடு தெரியாது; ஆனால் இருக்கும் போது நான் உண்டாக்கிய சுவடுகள் ஏராளம்; நான் போனாலும் நான் உண்டாக்கிய சுவடுகளை அழிக்கக் கூடாது என நினைப்பது பேராசை. ஆசைகள் விரும்பத்தக்கவை. பேராசைகள் ஆபத்தானவை.

கண் முன்னே விரியும் இந்த உலகம் எனக்கானது; இதனை அனுபவிக்கவும் அடக்கிக் காட்டவும் பிறந்தவன் என நம்பும் ஒருவனிடம் மரணத்தைப் பற்றிக் கேட்டால் அவனுக்கு உண்டாகக் கூடியது கோபம். நான் வாழப்பிறந்தவன்; ஆளப்பிறந்தவன். என்னிடம் ஏன் மரணத்தைப் பற்றிக் கேட்கிறாய்? எனக்கெப்படித் தெரியும்? செத்தவனைத் தான் கேட்க வேண்டும். என வீறாப்பாகச் சொல்லி விட்டுப் போன ஒருவனின் மரணச் செய்தியை தந்தி சுமந்து வந்த போது அதிர்ந்து போன கணங்களை நீங்கள் சந்தித்திருக்கக்கூடும்.

மரணத்தை எதிர்கொள்ளுதலில் மனிதமனங்களுக்கு ஒரே மனநிலை தான் இருக்கிறது எனவும் சொல்ல முடியாது. மரணம் குறித்து வரும் அந்த உத்தரவை மீற முடியாது என்று தெரிந்த போதும், அதைத் தள்ளிப் போட முடியும் என நம்பாதவர்கள் ஒருவரும் இல்லை. மரணம் எப்படிப் பட்டது எனக் கேட்டு விளங்கிக் கொள்ளலாம் என முயன்றால் அதை அனுபவித்துப் பார்த்துச் சொல்ல ஒருவரும் இங்கே இல்லை. வாழ்ந்து கொண்டே மரணத்தைப் பற்றிச் சொல்பவர்களின் கூற்று அனுபவக் கூற்று அல்லவே. மரணத்தின் வண்ணங்களை, ஒலிநயத்தை, சுவைப் பெருக்கத்தை, உரசுதலை, நாற்றக் கடப்பை விளக்கிச் சொல்லுதல் யாருக்கு முடியும்.? மரணம் விநோதமானது; வேடிக்கையானது எனச் சிலர் சொல்லக் கூடும். எது வேடிக்கை? எது விநோதம்? என விளக்க முடியாதவன் தான் மரணத்தையும் விநோதமானது! வேடிக்கையானது எனச் சொல்லி ஒதுங்கிக் கொள்கிறான்.

சாத்தியமே இல்லை என்ற போதும் கடவுளை விளக்கி விட முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் மனிதர்கள் தானே மரணத்தையும் விளக்கிக் காட்ட முயல்கிறார்கள். விளக்கிச் சொல்ல முடியாத ஒன்றைத் திரும்பத் திரும்பத் தேடிக் கொண்டிருப்பதில் மனிதர்களுக்கு அலுப்பே தோன்றுவதில்லை போலும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் கொள்ளும் உறவைச் சொல்ல நட்பு, பாசம், அன்பு, நேயம், பகை, வன்மம் எனப் பல சொற்களைப் பயன் படுத்தி விளக்கி விட முடியும் என நம்பும் நமது மனம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தோன்றும் உறவை விளக்கப் பயன்படுத்தும் உச்சபட்ச வார்த்தை காதல்.

காதல் என்ற வார்த்தையின் எதிர்ப்பதமாகச் சொல்ல தமிழில் ஒரு வார்த்தை இல்லை என்றே தோன்றுகிறது. காதல் என்னும் சொல்லுக்கு எந்த மொழியும் எதிர்ப்பதம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள விரும்பாது என்றே தோன்றுகிறது. காதல், அனுபவித்துப் பார்த்து விளக்கிக் காட்ட முயலும் ஒரு வினை. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகத் தோன்றும் வினை. எத்தனை மனிதர்கள் தோன்றினார்களோ, எத்தனை பேர் காதலிப்பதாக நினைத்தார்களோ அத்தனை பேருக்கும் அது ஒரு புதுவித அனுபவம் தான்.

மரணமும் காதலைப் போன்றது தான் என்றாலும் நேர் எதிரானது. மரணம் விளக்கிச் சொல்லும் தர்க்கம் அல்ல என்பதை விட அனுபவித்துப் பார்த்துச் சொல்லும் காரணமும் அல்ல என்பதுதான் அதன் சிறப்பு. காதலின் அனுபவித்தைச் சொல்ல ஏராளமானவர்கள் இங்கே இருந்து கொண்டிருக்கிறார்கள். காதலில் வென்றவர்களும், தோற்றவர்களும் எழுதி வைத்த கவிதைகளால் நிரம்பி வழிகிறது இந்த உலகம். ஆனால் மரண அனுபவித்தைச் சொல்ல ஒருவரும் இல்லை என்றாலும் அதனை எதிர் கொள்ளத் தயாரானவர்கள் இருக்கக் கூடும். தென்றலில் மிதந்து வந்து வருடிச் செல்லும் மெல்லிய மயிலிறகைப் போல என்னைப் பிரியட்டும் அந்த உயிர் எனக் காத்திருப்பவர்கள் மரணத்தை ரசிப்பதற்குரியதாகக் கருதக் கூடும். பிரியமானவர்கள் தரும் முத்தத்தை ஏற்றுக் கொள்ளும் ஆதர்சத்துடன் உள் வாங்கிக் கொள்ளக் கூடும். ஆனால் விபத்தும் நிகழ்வும் ஏற்படுத்தும் மரணத்தை அப்படி எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் மனித சமூகத்தின் தவிப்பாக இருக்கிறது.

க.செல்லப்பாண்டியன்
நூல்: பயங்கரவாதம் - ஓர் உளவியல் பார்வை

ரு மகாராஜா தன் அரண்மனையில் மிகச் சிறந்த சேவல் ஓவியத்தை வைக்க நினைத்தார். மன்னனின் ஆசை காட்டுத் தீ போல் எல்லா ஊரிலும் பரவியது. ஏத்தனையோ ஓவியங்கள் வந்தும் அவற்றில் மன்னனுக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. மற்ற நாடுகளில் உள்ள ஓவியர்களுக்காக ஒரு போட்டி வைத்தார் மன்னர்.

அவரது ஆசை போல், மற்ற நாட்டு ஓவியர்கள் வரைந்த படங்கள் மன்னரின் பார்வைக்காக வைக்கப்பட்டன. மன்னர் தான் குழந்தையாக இருந்த போது தனக்கு ஓவியம் கற்றுக் கொடுத்த அந்த வயதான ஓவிய ஆசிரியரை இப்போட்டியின் நீதிபதியாக நியமித்தார்.

எல்லா ஓவியங்களையும் பார்த்த அந்த வயதான ஆசிரியர் மீண்டும் ஒருமுறை ஓவியங்களைப் பார்த்தார். கன்னத்தைத் தடவிய படியே நடந்த அவரிடம், மன்னர்.

"என்ன சிறந்த சேவல் ஓவியத்தைத் தேர்வு செய்து விட்டீர்களா?" என ஆசையாகக் கேட்டார். "இந்தப் போட்டிக்கு இதில் எந்த ஓவியமும் தகுதி ஆனது இல்லை" என்றார். ஆசிரியர் அமைதியாக, எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு, "இந்த ஓவியங்கள் வைத்த அறையில், சேவல்களை விடுவோம். ஒரே இனத்தைச் சேர்ந்த மற்ற சேவலைப் பார்த்ததும், சேவலுக்குச் சண்டை போடத் தோன்றும். அப்படி எந்தச் சேவல், எந்த ஓவியத்தைப் பார்த்துச் சண்டை போடத் துவங்குகிறதோ, அந்த ஓவியம்தான் மிகச் சிறந்த ஓவியம் என்று முடிவு செய்வோம்" என்றார் அந்த ஓவிய ஆசிரியர்.

அவரது வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாமல், மன்னர் அந்த அறையில் நிறைய சேவல்களைக் கொண்டு வந்து விட கட்டளை பிறப்பித்தார். ஆனால் வந்த சேவல்கள் எந்த ஓவியத்தையும் பார்த்துச் சண்டை போடாமல், நேரே வெளியே வந்தன.

மன்னர் மனம் தளராமல், "சேவல்களைச் சண்டை போடத் தூண்டும் அந்த ஓவியத்தை நீங்கள் ஏன் வரையக்கூடாது?" என ஓவிய ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார்.

"மன்னர் உங்கள் சித்தம். ஆனால் எனக்கு ஆறு மாத கால அவகாசம் தேவை" என்றார் முதியவர். மன்னரும் சரி என்று "ஆறு மாதம் கழித்து, இதே அறையில் இப்போட்டி நடக்கட்டும்" என்று கட்டளை பிறப்பித்தார். காலம் சுற்றியது. சரியாக ஆறு மாதம் ஆனதும், அதே அறையில் எல்லா ஓவியர்களும் மீண்டும் கூடினார்கள். ஆனால் அந்த முதியவர் கையில் எந்த ஓவியத்தையும் கொண்டு வரவில்லை. மன்னர் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

"மன்னா ! இப்போது இங்கேயே அரை மணியில் வரைகிறேன். எனக்கு அதற்கான உபகரணங்கள் தேவை" என்று முதியவர் கூறியதும், அனைத்தும் வந்து சேர்ந்தன. ஓவியர் கடகடவென ஓவியத்தை வரைந்தார். பிறகு அதை மற்ற ஓவியங்களோடு வைத்தார். மீண்டும் அந்த அறைக்குச் சேவல்கள் அனுப்பப்பட்டன. எல்லோரும் மிக ஆவலாகக் காத்திருக்க, அவரது ஓவியத்தைப் பார்த்து ஒரு சேவல் அதில் வரையப்பட்டிருந்த சேவலை நிஜ சேவலாக நினைத்துச் சண்டைக்குப் போனது ! அப்போட்டியில் வெற்றி பெற்றது இவரது ஓவியம்தான் !

மன்னனுக்கு ரொம்ப சந்தோஷம். "உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? ஏன் ஆறு மாத காலம் உங்களுக்குத் தேவைப்பட்டது? இருப்பினும், நீங்கள் அப்போது எதுவும் வரையாமல், கடைசியில் வரைய அரைமணி நேரம் ஏன் கேட்டீர்களா?" என மன்னர் அந்த முதியவரிடம் கேட்டார்.

"மன்னா, கடந்த ஆறு மாதமாக நான் கோழி, சேவல்களோடு வாழ்ந்தேன் . அவை எப்படி உணவு உண்கிறதோ, அதுபோன்றே நானும் உணவு உட்கொண்டேன். அவை எப்படி நடக்கிறதோ அது போலவே நானும் நடந்தேன். அவை எப்படி தூங்குகிறதோ அது போலவே நானும் தூங்கினேன். நானே கோழியாக ஒன்றிப்போய் கோழியாகவே மாறி விட்டேன். அதற்குப் பிறகுதான் நான் அந்த சேவல் படத்தை வரைந்தேன்" என்று அந்த முதியவர் கூறினார்.

ஆகவே ஒரு காரியத்தில் ஒன்றிப் போதல் என்பது மிகவும் அவசியம். வெற்றியின் ரகசியம் ஈடுபட்ட காரியத்தில் ஒன்றிப் போவதுதான். அது எந்தக் காரியமாக இருந்தாலும் முழு ஈடுபாடும், ஒன்றிப் போவதும் முக்கியம்.

அலுவலக வேலையாக இருந்தாலும், வீட்டு வேலையாக இருந்தாலும் படிப்பாக இருந்தாலும் எடுத்த காரியத்தோடு நாம் ஒன்றிப் போனால், வெற்றி நிச்சயம்.

- இனிய திசைகள்


லிமையான கரையே என் காதலன்; நான் அவனது காதலி.

காதலால் கட்டுண்டவர்கள் நாங்கள். நிலவுதான் என்னை அவனிடமிருந்து இழுக்கிறது.

அவசரமாய் அவனை நோக்கி நான் செல்கிறேன்; சட்டென பிரிகிறேன்; பலமுறை சின்னச் சின்ன விடைபெறல்கள்.

நீலவானத்திற்கு அப்பாலிருந்து வெள்ளி நுரைகளை நான் சட்டென திருடி வந்து, அவனது பொன்மணல் மேல் பரப்பி வைக்கிறேன்.

ஒளிமயமாய் நாங்கள் கூடிக் கலக்கிறோம்.

நான் அவனது தாகத்தைத் தணிக்கிறேன். அவனது இதயத்திற்குள் செல்கிறேன்.

அவன் என் குரலை மென்மையாக்குகிறான்; என் சினத்தை அடக்குகிறான்.

விடியற்காலையில் நான் அவன் காதில் காதலின் விதிகளை ஓதுகிறேன். அவன் ஆசையோடு என்னைத் தழுவிக் கொள்கிறான்.

ஏற்றவற்ற அலைகளின்போது நான் நம்பிக்கையின் பாடல் பாடுகிறேன். அவன் முகத்தின்மேல் இனிய முத்தங்கள் பதிக்கிறேன்.

எனக்கு பயம். எனக்கு வேகம்.

ஆனால் அவன் அமைதி; பொறுமை;சிந்தனை.

அவனது நிம்மதியின்மையை அவனது பரந்த மார்பு அமைதிப்படுத்துகின்றது.

அலையடிக்க நாங்கள் தொட்டுக் கொள்கிறோம். அலை பின்வாங்க நான் அவனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்.

கடற்கன்னிகளைச் சுற்றி பல முறை நான் நடனமாடியிருக்கிறேன். அவர்கள் என் அடியாழத்திலிருந்து எழுந்து அலை நுனியில் நின்று விண்மீன் பார்ப்பார்கள்.

காதலர்கள் பலமுறை என்னிடம் வந்து முறையிடுவது வழக்கம். நான் அவர்கள் பெருமூச்சு விட உதவுவேன்.

பலமுறை நான் பாறைகளை சீண்டிவிட்டு பார்த்திருக்கிறேன். அவற்றை கிச்சுகிச்சு மூட்டியும் பார்த்திருக்கிறேன். அவை ஒரு முறை கூட சிரிக்கவே இல்லை.

என்னில் மூழ்கிப் போகிற உயிர்களை மென்மையாய் ஏந்தி கரை சேர்த்திருக்கிறேன்.

கரைக்காதலன் என் வலிமை எடுத்தது போல அவர்களுக்கு வலிமை தந்திருக்கிறான்.

பலமுறை நான் அடியாழத்திலிருந்து வைரமணிகளைத் திருடி வந்து என் காதலனுக்குப் பரிசளித்திருக்கிறேன். அவன் மெளனமாய் அவற்றை ஏற்றான். என்னை அவன் வரவேற்பான் என்று இன்னமும் தந்து கொண்டிருக்கிறேன்.

கனத்த இரவில் எல்லாம் உறங்க நான் அமர்ந்து ஒரு்முறை பாடுகிறேன். ஒரு முறை பெருமூச்சு விடுகிறேன். நான் என்றும் விழித்திருக்கிறேன்.

அந்தோ! உறக்கமின்மை என்னை பலவீனப்படுத்திவிட்டது. என்றாலும் நான் காதலியாயிற்றே? காதலின் உண்மை கனத்தது அல்லவா?

நான் களைத்துப் போனாலும் எனக்கு மரணமில்லை!

அலையின் பாடல் - கலீல் ஜிப்ரான்
நூல்: பொன்மணிப் புதையல்