"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

                                         


நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.

நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன.

அவை:

1. தன்னம்பிக்கை 2. ஆர்வம் 3. செயல் ஊக்கம் 4. விழிப்புணர்வு
5. புரிந்துகொள்ளல் 6. உடல் நலம்.

இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.

1. தன்னம்பிக்கை (Self Confidence)

“என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். “நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது” - என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.

“நினைவாற்றல்” என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!

2. ஆர்வம் (Interest)

ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.

3. செயல் ஊக்கம் (Motivation)

இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.

4. விழிப்புணர்வு (Awareness)

மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைபுரியும்.

5. புரிந்துகொள்ளல் (Understanding)

புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் - தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்?... என்று கேள்விகளைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.

6. உடல் ஆரோக்கியம் (Health)

உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

நண்பர்களே!

ஓர் அறிவிப்பு : “இன்னும் ஒரு மணி நேரத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி ஏந்தி உங்கள் இடம் நோக்கி வந்துகொண்டு இருக்கிறார்கள். நீங்கள் தப்பிச் செல்வதாக இருந்தால் எந்த வழியில் செல்வது என்று சொல்கிறேன். கேட்டுக்கொண்டு அந்த வழியில் சென்றால் நீங்கள் தப்பிச் சென்று விடலாம்” என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் அவர் சொல்கின்ற வழி உங்களுக்கு மறந்துவிடுமா?

மொத்தத்தில் நினைவாற்றல் நன்றாக இருக்க மனம் ஒரு முக்கிய காரணமாகிறது. மனம் ஆர்வமானதாக உற்சாகமுள்ளதாக, விழிப்புநிலை உள்ளதாக, செயலை வெற்றியாக்க வேண்டும் என்ற தீவிரத் தன்மை உள்ளதாக இருந்தால் நினைவாற்றல் நன்கு இருக்கும். எதுவும் மறந்து போகாமல் ஒவ்வொரு செயலும் வெற்றியடைய ஒரு திருக்குறளின் மூலம் வள்ளுவர் வழிகாட்டுகிறார்.

“பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்”

அதாவது ஒரு செயலுக்குப் போகும் முன்பு கீழ்க்கண்டவை சரியாக உள்ளதா என்று கவனித்து விட்டுச் சென்றால் எதுவும் மறக்காது.

1. பொருள் : தேவையான பணம்.

2. இடம் : எங்கு செல்கிறோம்? (முகவரி, தொலைபேசி எண், செல்லும் வழி)

3. காலம் : எவ்வளவு நேரமாகும், எப்பொழுது அலுவலகம் அல்லது கடை திறந்து செயல்படும் நேரங்கள், விடுமுறையா அல்லது வேலை நாளா? முதலிய செய்திகள்.

4. கருவி : எந்த வாகனம், எடுத்துச் செல்லும் துணைக் கருவிகள் (பேனா, பேங்க் சென்றால் செக் புக், ஹாஸ்பிடல் என்றால் டாக்டர் பைல்… முதலியவை)

5. வினை : எப்படிச் செய்வது? யாரிடம் தெரிந்து கொள்வது என்பது போன்ற அந்தச் செயலை முடிக்க உதவும் விபரங்கள்.

நினைவாற்றலை வளர்த்து

வெற்றியடைய அன்பு வாழ்த்துக்கள்!

- சூரியன்

http://www.thannambikkai.net/2002/11/01/2362/
1) நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (EGO) விடுங்கள்.

2) அர்த்தமில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள் (LOOSE TALKS).

3) எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள் (DIPLOMACY), விட்டுக் கொடுங்கள் (COMPROMISE).

4) சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் (TOLERANCE).

5) நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள் (NARROW MINDEDNESS).

6) உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் (CARRYING TALES).

7) மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் (SUPERIORITY COMPLEX).

8) அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (OVER EXPECTATION).

9) எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

10) கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

11) உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் (FLEXIBILITY).

12) அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

13) மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் (MIS-UNDERSTANDING).

14) மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள் (COURTESY).

15) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

16) பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

17) அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் விட்டு பேசுங்கள்.

18) பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.

19) நிலையை உயர்த்து; நினைப்பை உயர்த்தாதே.

20) விட்டுக் கொடுப்பவன், கெட்டுப் போவதில்லை.


- வேதாத்திரி மகரிஷி

லக அளவில் அதிகம் பேர் பேசும் மொழி ஆங்கிலம் என்பதை நாம் அறிவோம். அந்த மொழியில் அதிகம் மதிக்கப்படும் இலக்கிய ஆசிரியன் யார் எனக் கேட்டால் ஷேக்ஸ்பியர் என்ற பெயரைக் குறிப்பிடுவார்கள்.

இங்கிலாந்தில் பிறந்து (1564-1616) ஆங்கில இலக்கியத்தின் முக்கியமான சானட் என்னும் கவிதை வடிவத்தில் 154 கவிதைகளையும், கதை தழுவிய இரண்டு நீள்கவிதைகளையும் எழுதியிருந் தாலும் உலக நாடக இலக்கியத்தின் பிதாமகனாகச் ஷேக்ஸ்பியரை அறியச் செய்தவை அவரது 38 நாடகங்கள் தான். இன்பியல் நாடகங்களாகவும், துன்பியல் நாடகங்களாகவும் அவரது படைப்புக்களைப் படிப்பது என்பதுதான் ஆங்கில இலக்கியத்தின் முக்கியமான பகுதி என்று கூடச் சொல்வார்கள். அவரது வரிகளை மேற்கோளாகச் சொல்வதை ஆங்கில மொழிக்காரர்களும், ஆங்கில இலக்கியம் கற்றவர்களும் விரும்பிச் செய்வதுண்டு.

அதிக எண்ணிக்கையில் பேசும் மொழியாகத் தமிழ் இல்லையென்றாலும், அதிக நாடுகளில் ஆட்சி மொழியாகவும், அங்கீகரிக்கப்பட்ட தொடர்பு மொழியாகவும் இருக்கும் இந்திய மொழி தமிழ் என்று சொல்லலாம். இந்தியாவைத் தவிர, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அரசாங்க அலுவல்கள் நடக்கும் மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இருக்கிறது. இலங்கையின் உள் நாட்டுப் போர் காரணமாக இன்று தமிழர்கள் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி, தமிழ் என்னும் மொழியின் இருப்பை உலக நாடுகளின் பார்வைக்குக் கொண்டு போய்விட்டனர்.

அகதிகளாகத் தமிழர்கள் அலையும் படி ஆகி விட்டது என்ற வருத்தம் ஒரு புறம் இருக்கிறது என்றாலும், குடியேறிய ஒவ்வொரு நாட்டிலும் தமிழ் என்னும் மொழி பேசும் மனிதக் கூட்டத்தின் இருப்பை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. துன்பத்தில் விளைந்த இன்பம் இது எனச் சொல்லிக் கொள்ளலாம்.

செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே உலகப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் மொழியாகவும், கற்பிக்கும் மொழியாகவும் தமிழ் இருக்கிறது. தென்னாசியக் கல்வி மையங்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் துறை, இந்திய மொழிகள் துறை, கீழைத்தேசங்களின் பண்பாட்டுத்துறை என்னும் பெயர்களில் உலகப் பல்கலைக் கழகங்களில் இயங்கும் துறைகள் தமிழ் மொழி அல்லது தமிழக வரலாற்றை ஒரு பாடமாகக் கற்பிக்கின்றன. அவ்வாறு கற்பிக்கவில்லை என்றால், கற்பிக்கப்படும் இந்தியாவின் பண்டைய வரலாற்றில் முக்கியமான பகுதியாகவாவது தமிழ் அறிமுகம் செய்யப்படுகிறது என்பதை நினைத்துத் தமிழர்கள் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். அத்தகைய பெருமையுடைய தமிழ் மொழியில் அதிகம் மேற்கோள் காட்டப்படும் இலக்கியம் அல்லது இலக்கியவாதி யார் எனக் கேட்டால் சரியான புள்ளி விவரங்களோடு நம்மால் பதில் சொல்ல முடியாது.

நிகழ்காலத் தமிழில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட வாக்கியம் பாரதியின் வரிகளாக இருக்கலாம். ஆனால் மொத்தத்தில் தமிழர்கள் அதிகம் மேற்கோள் காட்டும் வரிகளுக்குச் சொந்தக்காரன் அய்யன் திருவள்ளுவர் என்றே நினைக்கிறேன். பேருந்துகள் தொடங்கி, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என எங்கும் திருக்குறளின் ஆட்சி இருக்கிறது என்பதை நாம் அறிவோம். பொதுக் கட்டுரைகளிலும் சரி மேடைப் பேச்சிலும் சரி திருக்குறளை மேற்கோள் காட்டவில்லை என்றால் அது சிறந்த கட்டுரையாகவோ, சிறந்த மேடைப் பேச்சாகவோ கருதப்படும் வாய்ப்பில்லை என்றே தமிழர்கள் நம்புகிறார்கள். தொடர்பு இருந்தாலும் இல்லை யென்றாலும் முன்னுரையிலோ முடிவுரையிலோ ஒரு குறளைச் சொல்லி முடித்து விட்டு முழுத் திருப்தி அடையும் பலரை நான் பார்த்திருக்கிறேன். தனிமனித வாழ்க்கைக்குத் தேவையான யோசனைகள் என்றும், பொது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் எனவும் கருதி வள்ளுவர் எழுதிய 1330 குறள்களில் ஏதாவதொன்றைத் தமிழர்கள் மேற் கோளாகக் காட்டுவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

வெறும் பதின்மூன்றே வரிகளை எழுதிய ஒரு தமிழ்க் கவிஞனும் தமிழில் அதிகம் மேற்கோள் காட்டப்படுபவனாக இருக்கிறான் என்று சொன்னால் பலர் ஆச்சரியம் அடையலாம். "யாதும் ஊரே; யாவரும் கேளிர்"’ இந்த வாக்கியமும் மேடைகளிலும் எழுத்துக்களிலும் தமிழர்கள் மேற்கோள் காட்டும் வாக்கியம் தான். திருக்குறளுக்கு அடுத்து அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட கவிதை வரியாகக் கூட இதைச் சொல்லலாம். இந்த வரியை முதன் வரியாகக் கொண்ட கவிதையை எழுதிய கணியன் பூங்குன்றன், அதன் 13 வரிகளைத் தவிர வேறு எந்த இலக்கியத்தையும் எழுதவில்லை. ஒரே ஒரு கவிதையை எழுதித் தமிழ் பரப்பையே தனதாக்கிக் கொண்டவன் பூங்குன்றன்.

கணியன் பூங்குன்றனின் முதல் வரியான "யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்ற புறநானூற்று வரியைச் சொல்லி விட்டு,  "உலகத்தில் உள்ள எல்லா ஊரையும் தனது ஊராகவும், அங்கு வாழும் எல்லா மக்களையும் தனது உறவினர்களாகவும் கருதி வாழ்ந்தவன் பண்டைத் தமிழன் என முழக்கமிடும் மேடைப் பேச்சுக்களை நான் பலதடவை கேட்டிருக்கிறேன். நீங்களும் கேட்டிருக்கலாம். அப்படிப் பேசுபவர்கள் எப்போதும் அதன் அடுத்தடுத்த வரிகளுக்குள் நுழைவதே இல்லை. திடீரென்று "பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"  என அகக்கவிதையின் கடைசி இரண்டு வரிகளுக்குத் தாவி, பண்டைத் தமிழர்கள், "பெரியவர்- சிறியவர் என்று பாகுபடுத்திப் பார்க்கும் குணங்கள் இல்லாதவர்கள்; அனைவரையும் சமமாக மதிப்பதே அவர்களது பொதுக்குணம் என்று கூறி முடிப்பார்கள்.

கவி கணியன் பூங்குன்றன் உண்மையிலேயே இந்த அர்த்தத்தில் தான் அந்தக் கவிதையை எழுதியிருக்கிறானா? முழுக் கவிதையையும் நிதானமாக வாசிக்கும் ஒருவர் அப்படிச் சொல்லமாட்டார்.

இதோ கவிதை:

யாதும் ஊரே யாவருங் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவதன்றே; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தென்றும் இலமே;
முனிவின், இன்னா தென்றலும் இலமே;
‘மின்னொடுவானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
முறைவழி படூஉ மென்பது திறவோர்
காட்சியின் தௌந்தனம், ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமோ!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
[கணியன் பூங்குன்றன்/ புறநானூறு / பாடல் எண்:192]

இந்தக் கவிதையின் அடுத்தடுத்த வரிகளின் பொருளை விளக்கிக் கொண்டே வந்தால் அதன் சாராம்சம் இதுவரை நாம் மேடைகளில் பேசியதல்ல என்பது புரிந்து போகும்.

இந்தக் கவிதையின் மையமே அதில் வரும் , நீர்வழிப் படூஉம் புணைபோல் என்ற உவமையில் தான் இருக்கிறது. மனித உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவு என்பது எப்படிப் பட்டது என்றால் ‘’மல்லல் பேரியாற்று நீரில் அடித்துக் கொண்டு வரப்படும் புணை அதாவது தெப்பம் போன்றது. அதற்கு நிரந்தரம் என்று எதுவும் கிடையாது. நீர் போகும் போக்கில் புணை போவது போல் , உயிரும் இருக்கும் அல்லது போகும்’. இதைச் சொல்வதுதானே கணியன் பூங்குன்றனின் மைய நோக்கமாக இருக்கிறது.

இந்த மைய நோக்கம் அவன் காலத்தில் எழுச்சி பெற்ற பௌத்தத்தின் நிலையாமைத் தத்துவத்தின் சாரம் என்று கூடச் சொல்லலாம். ஒவ்வொருவரும் இந்த உலக வாழ்க்கை தரும் இன்ப துன்பங்களைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும்; தப்பித்தல் என்பது சாத்தியமில்லை எனப் பேசும் நவீன இருப்பியல் வாதமும் கூட இதைத் தான் சொல்கிறது. நிலையாமையை அல்லது இருப்பியலின் சாரத்தைப் பேசும் கணியன் பூங்குன்றனின் கவிதை மேடைப் பேச்சுகளுக்கான மேற்கோள் வாக்கியமாக மாறி, மொத்த அர்த்தத்தையும் இழந்த ஆச்சரியம் எப்படி நடந்தது ?

இந்தக் கேள்விக்கு எனக்குத் தெரிந்த பதில் முழுமையைத் தேடுவது தமிழர்களின் வேலையாக இல்லை என்பதுதான். ஒரு தலைவனை அல்லது ஒரு இயக்கத்தை ஆதரிப்பதானாலும் சரி, எதிர்ப்பதானாலும் சரி தமிழர்களுக்கு ஒரேயொரு காரணம் போதும். இப்படித்தான் தமிழர்களின் பொதுப்புத்தி பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் ஆபத்தானது. ஒரு படைப்போ அல்லது இயக்கமோ அதை முழுமையாகப் புரிந்து கொண்டு, சாராம்சமாக என்ன இருக்கிறது எனப் பார்ப்பதுதான் முழுமையான மனிதனின் அடையாளம். அதை நோக்கித் தமிழர்களின் பொதுப்புத்தையைத் திருப்பும் வரிகளை எழுதும் படைப்பாளிகளே நிகழ்காலத்தின் படைப்பாளிகளாக இருக்கப் போகிறவர்கள்.

- அ.ராமசாமி

http://ramasamywritings.blogspot.com/2008_05_01_archive.html