செஞ்சுருட்டி - திஸ்ர ஏக தாளம் சிருங்கார ரஸம்
தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சந் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம் - மனது
வெறுத்து விட்ட தடீ! (1)
பாயின் மிசை நானும் - தனியே
படுத் திருக்கை யிலே,
தாயினைக் கண்டாலும் - சகியே!
சலிப்பு வந்த தடீ!
வாயினில் வந்ததெல்லாம் - சகியே!
வளர்த்துப் பேசிடுவீர்,
நோயினைப் போலஞ் சினேன்; - சகியே!
நுங்க ளுறவையெல் லாம். (2)
உணவு செல்லவில்லை; - சகியே!
உறக்கங் கொள்ளவில்லை
மணம் விரும்பவில்லை; - சகியே!
மலர் பிடிக்கவில்லை;
குண முறுதி யில்லை; - எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உள்ளத்திலே - சுகமே
காணக் கிடைத்த தில்லை. (3)
பாலுங் கசந்த தடீ! - சகியே
படுக்கை நொந்த தடீ!
கோலக் கிளிமொழியும் - செவியில்
குத்த லெடுத்த தடீ!
நாலு வயித்தியரும் - இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலத்துச் சோசியனும் - கிரகம்
படுத்து மென்று விட்டான். (4)
கனவு கண்டதிலே - ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்
இனம் விளங்க வில்லை - எவனோ
என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண் விழித்தேன்; - சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே - புதிதோர்
மகிழ்ச்சி கண்ட தடீ! (5)
உச்சி குளிர்ந்ததடீ! - சகியே!
உடம்பு நேராச்சு,
மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல்
மனத்துக் கொத்ததடீ!
இச்சை பிறந்ததடீ! - எதிலும்
இன்பம் விளைந்ததடீ!
அச்ச மொழிந்ததடீ! - சகியே!
அழகு வந்ததடீ! (6)
எண்ணும் பொழுதிலெல்லாம் - அவன்கை
இட்ட விடத்தினிலே
தண்ணென் றிருந்ததடீ! புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; - அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் - அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ! (7)
- மகாகவி சி.சுப்ரமணிய பாரதியார்
தலைப்பு : மகாகவி பாரதி கவிதைகள்
சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! (1)
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந்தேனே! (2)
ஓடி வருகையில் - கண்ணம்மா
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ! (3)
உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ! (4)
கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்த மாகு தடீ! (5)
சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ! (6)
உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ!
என் கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ? (7)
சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய் . (8)
இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ? (9)
மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ? (10)
- மகாகவி பாரதி
தலைப்பு : மகாகவி பாரதி கவிதைகள்
கண்ணிகள்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்! - பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்! - எதனூடும்நின்
றோங்கும் அறிவென்றே தெய்வமென்
றோதி யறியிரோ?
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? - பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?
வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே - உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெலாம் - நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே - இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப் - பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?
ஒன்று பிரம முளதுண்மை யதுன்
உணர்வெனும் வேதமெலாம் - என்றும்
ஒன்ரு பிரம முள துண்மை யதுன்
உணர்வெனக் கொள்வாயே.
- பாரதியார்
தலைப்பு : கவிதைகள், மகாகவி பாரதி கவிதைகள்
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானா? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே! கேட்பதுவே, கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ? - வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தேபோனதனால்
நானுமோர் கனவோ? - இந்த ஞாலமும் பொய்தானோ?
கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ? - இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே - நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி நித்தியமாம்.
- பாரதியார்
தலைப்பு : கவிதைகள், மகாகவி பாரதி கவிதைகள்
காற்றுக்குக் காது நிலை. சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான். காற்றில்லாவிட்டால் சிவனுக்குக் காது கேட்காது. காற்றுக்குக் காதில்லை. அவன் செவிடன்.
காதுடையவன் இப்படி இரைச்சலிடுவானா? காதுடையவன் மேகங்களை ஒன்றோடொன்று மோதவிட்டு, இடியிடிக்கச் சொல்லி வேடிக்கை பார்ப்பானா? காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா? காற்றை, ஒலியை, வலிமையை வணங்குகின்றோம்.
பாலைவனம். மணல், மணல், மணல். பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல்.
மாலை நேரம். அவ்வனத்தின் வழியே ஒட்டைகளின் மீதேறி ஒரு வியாபாரக் கூட்டத்தார் போகிறார்கள்.
வாயு சண்டனாகி வந்துவிட்டான். பாலைவனத்து மணல்களெல்லாம் இடைவானத்திலே சுழல்கின்றன. ஒரு க்ஷணம் யம வாதனை. வியாபாரக் கூட்டம் முழுதும் மணலிலே அழிந்து போகிறது. வாயு கொடியோன். அவன் ருத்ரன். அவனுடைய ஓசை அச்சந் தருவது. அவனுடைய செயல்கள் கொடியன. காற்றை வாழ்த்துகின்றோம்.
வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும். உயிருடையனவெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம். உயிர் தான் காற்று. உயிர் பொருள். காற்று அதன் செய்கை. பூமித்தாய் உயிரோடிருக்கிறாள். அவளுடைய மூச்சே பூமியிலுள்ள காற்று. காற்றே உயிர்.
அவன் உயிர்களை அழிப்பவன். காற்றே உயிர். எனவே உயிர்கள் அழிவதில்லை. சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது. மரணமில்லை. அகிலவுலகமும் உயிர் நிலையே. தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் - எல்லாம் உயிர்ச் செயல். உயிரை வாழ்த்துகின்றோம்.
காற்றே வா. மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா. இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண - ரசத்தை எங்களுக்குக் கொண்டு கொடு. காற்றே வா. எமது உயிர் - நெருப்பை நீடித்து நின்ற நல்லொளி தருமாறு செய். சக்தி குறைந்து போய், அதனை அவித்துவிடாதே. பேய்போல வீசி, அதனை மடித்துவிடாதே. மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம். உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம். உன்னை வழிபடுகின்றோம். சிற்றெரும்பைப் பார். எத்தனை சிறியது; அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு, எல்லா அவயங்களும் கணக்காக வைத்திருக்கிறது.
யார் வைத்தனர்? மஹாசக்தி. அந்த உறுப்புகளெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன. எறும்பு உண்ணுகின்றது. உறங்குகின்றது. மணம் செய்து கொள்கின்றது. குழந்தை பெறுகிறது. ஓடுகிறது. தேடுகிறது. போர் செய்கிறது. நாடு காக்கிறது. இதற்கெல்லாம் காற்று தான் ஆதாரம்.
மஹா சக்தி காற்றைக் கொண்டுதான் உயிர் விளையாட்டு விளையாடுகின்றாள். காற்றைப் பாடுகிறோம். அஃது அறிவிலே துணிவாக நிற்பது; உள்ளத்திலே விருப்பு வெறுப்புகளாவது. உயிரிலே உயிர் தானாக நிற்பது. வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம். நாம் அறிவதில்லை. காற்றுத் தேவன் வாழ்க.மழைக்காலம். மாலை நேரம். குளிர்ந்த காற்று வருகிறது. நோயாளி உடம்பை மூடிக்கொள்ளுகிறான். பயனில்லை.
காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது. பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வதுண்டா? காற்று நம்மீது வீசுக. அது நம்மை நோயின்றிக் காத்திடுக. மலைக்காற்று நல்லது. வான் காற்று நன்று. ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கி விடுகின்றனர். அவர்கள் காற்றுத் தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை.
அதனால் காற்றுத்தேவன் சினமெய்தி அவர்களை அழிக்கின்றான். காற்றுத் தேவனை வணங்குவோம். அவன் வரும் வழியில் சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது. அழுகின பண்டங்கள் போடலாகாது. புழுதி படிந்திருக்கலாகாது. எவ்விதமான அசுத்தமும் கூடாது. காற்று வருகின்றான். அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து நல்ல நீர் தெளித்து வைத்திடுவோம். அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம். அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களைக் கொளுத்தி வைப்போம். அவன் நல்ல மருந்தாக வருக. அவன் நமக்கு உயிராகி வருக; அமுதமாகி வருக. காற்றை வழிபடுகின்றோம். அவன் சக்தி குமாரன், மஹாராணியின் மைந்தன். அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம். அவன் வாழ்க.
காற்றே வா. மெதுவாக வா. ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே. காயிதங்களையெல்லாம் எடுத்து விசிறி எறியாதே. அலமாரிப் புத்தகங்களைக் கீழே தள்ளிவிடாதே. பார்த்தாயா? இதோ, தள்ளிவிட்டாய். புஸ்தகத்தின் ஏடுகளைக் கிழித்துவிட்டாய். மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய். வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கை பார்ப்பதிலே நீ மஹா சமர்த்தன்.
நொய்ந்த வீடு. நொய்ந்த கதவு. நொய்ந்த கூரை. நொய்ந்த மரம். நொய்ந்த உடல். நொய்ந்த உயிர். நொய்ந்த உள்ளம். இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான். சொன்னாலும் கேட்கமாட்டான். ஆதலால், மானிடரே வாருங்கள். வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம். கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம். உடலை உறுதி கொள்ளப் பழகுவோம். உயிரை வலிமையுற நிறுத்துவோம். உள்ளத்தை உறுதி செய்வோம். இங்ஙனம் செய்தால் காற்று நமக்குத் தோழனாகி விடுவான். காற்று மெலிய தீயை அவித்துவிடுவான். வலிய தீயை வளர்ப்பான். அவன் தோழமை நன்று. அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்.
மழை பெய்கிறது. ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ் மக்கள் எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள். ஈரத்திலேயே உட்காருகிறார்கள். ஈரத்திலேயே நடக்கிறார்கள். ஈரத்திலேயே படுக்கிறார்கள். ஈரத்திலேயே சமையல். ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான்.
ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது. தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்து போகிறார்கள். மிஞ்சியிருக்கும் மூடர் 'விதிவசம்' என்கிறார்கள். ஆமடா, விதிவசந்தான். 'அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை' என்பது ஈசனுடைய விதி.
சாஸ்திரமில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி.
தமிழ் நாட்டிலே சாஸ்திரங்களில்லை. உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடங் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள். குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிறாய்? அது அமிழ்தம். நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால் காற்று நன்று; அதனை வழிபடுகின்றோம்.
காற்றென்று சக்தியைக் கூறுகின்றோம். எற்றுகிற சக்தி. புடைக்கிற சக்தி. மோதுகிற சக்தி. சுழற்றுவது. ஊதுவது. சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று. எல்லாத் தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம். சக்தியின் கலைகளையே தெய்வங்களென்கிறோம். காற்று சக்தி குமாரன். அவனை வழிபடுகின்றோம்.காக்கை பறந்து செல்லுகிறது. காற்றின் அலைகளின் மீது நீந்திக்கொண்டு போகிறது. அலைகள் போலிருந்து, மேலே காக்கை நீந்திச் செல்வதற்கு இடமாகும் பொருள் யாது? காற்று அன்று. அஃதன்று காற்று. அது காற்றின் இடம், வாய் நிலயம். கண்ணுக்குத் தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூதத்தூள்களே (காற்றடிக்கும்போது) நம்மீது வந்து மோதுகின்றன. அத்தூள்களைக் காற்றென்பது உலக வழக்கு. அவை வாயுவல்ல. வாயு ஏறிவரும் தேர். பனிக்கட்டியிலே சூடேறினால் நீராக மாறி விடுகிறது. நீரிலே சூடேற்றினால் 'வாயு'வாகி விடுகிறது. தங்கத்திலே சூடேற்றினால் திரவமாகி உருகிவிடுகிறது. அத்திரவத்திலே சூடேற்றினால் 'வாயு'வாகின்றது.
இங்ஙனமே, உலகத்துப் பொருள்களனைத்தையும் 'வாயு' நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம். இந்த 'வாயு' பௌதிகத் தூள். இதனை ஊர்ந்துவரும் சக்தியையே நாம் காற்றுத் தேவனென்று வணங்குகிறோம்.
காக்கை பறந்து செல்லும் வழி காற்றன்று. அந்த வழியை இயக்குபவன் காற்று. அதனை அவ்வழியிலே தூண்டிச் செல்பவன் காற்று. அவனை வணங்குகின்றோம். உயிரைச் சரணடைகின்றோம்.
அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம். இரைகின்ற கடல் நீர் உயிரால் அசைகின்றதா? ஆம். கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது. அதன் சலனம் எதனால் நிகழ்வது? உயிருடைமையால். ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது? உயிர் நிலையில். ஊமையாக இருந்த காற்று ஊதத் தொடங்கிவிட்டதே! அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது? உயிர் நேரிட்டிருக்கிறது.
வண்டியை மாடு இழுத்துச் செல்கிறது. அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது. வண்டி செல்லும் போது உயிருடனேதான் செல்கிறது. காற்றாடி? உயிருள்ளது. நீராவி வண்டி உயிருள்ளது; பெரிய உயிர். யந்திரங்களெல்லாம் உயிருடையன.
பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது. அவள் தீராத உயிருடையவள். பூமித்தாய். எனவே அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும் உயிர் கொண்டதேயாம்.
அகில முழுதும் சுழலுகிறது. சந்திரன் சுழல்கின்றது. ஞாயிறு சுழல்கின்றது. கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கப்பாலும், அதற்கப்பாலும், அதற்கப்பாலும், சிதறிக் கிடக்கும் வானத்து மீன்களெல்லாம் ஓயாது சுழன்று கொண்டே தானிருக்கின்றன. எனவே இவ்வையகம் உயிருடையது. வையகத்தின் 'உயிரையே' காற்றென்கின்றோம். அதனை முப்போதும் போற்றி வாழ்த்துதல் செய்கின்றோம்.
காற்றைப் புகழ நம்மால் முடியாது. அவன் புகழ் தீராது. அவனை ரிஷிகள் 'ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம' என்று போற்றுகிறார்கள்.
ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக. அபாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க. வ்யாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க. உதாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க. சமாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க. காற்றின் செயல்களையெல்லாம் பரவுகின்றோம். உயிரை வணங்குகின்றோம். உயிர் வாழ்க.
உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும்? நீ கண்கண்ட தெய்வம். எல்லா விதிகளும் நின்னால் அமைவன. எல்லா விதிகளும் நின்னால் அழிவன. உயிரே, நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், வானம். தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ. மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில். பறக்கின்ற பூச்சி, கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு, இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள், எண்ணற்ற உலகங்களிலுள்ள எண்ணேயில்லாத உயிர்த்தொகைகள் - இவையெல்லாம் நினது விளக்கம்.
மண்ணிலும், நீரிலும், காற்றிலும் நிரம்பிக் கிடக்கும் உயிர்களைக் கருதுகின்றோம். காற்றிலே ஒரு சதுர அடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்குத் தெரியாமல் வாழ்கின்றன.
ஒரு பெரிய ஜந்து; அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள்; அவற்றுள் அவற்றிலுஞ் சிறிய பல ஜந்துக்கள்; அவற்றுள் இன்னுஞ் சிறியவை - இங்ஙனம் இவ்வையக முழுதிலும் உயிர்களைப் பொதிந்து வைத்திருக்கிறது.
மஹத் - அதனிலும் பெரிய மஹத் - அதனிலும் பெரிது - அதனிலும் பெரிது.
அணு - அதனிலும் சிறிய அணு - அதனிலும் சிறிது - அதனிலும் சிறிது.
இரு வழியிலும் முடிவில்லை. இருபுறத்திலும் அநந்தம். புலவர்களே, காலையில் எழுந்தவுடன் உயிர்களையெல்லாம் போற்றுவோம். 'நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி'.
தலைப்பு : கவிதைகள், படித்ததில் பிடித்தது, மகாகவி பாரதி கவிதைகள்
பூமியில் கண்டோமே - நன்னெஞ்சே
பூமியில் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான் (பகை)
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ? - நன்னெஞ்சே
செய்தி அறியாயோ?
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக்
கொடி வளராதோ? - நன்னெஞ்சே
கொடி வளராதோ? (பகை)
உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? - நன்னெஞ்சே
உள்ளம் நிறைவாமோ?
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும்
சேர்த்த பின் தேனாமோ? - நன்னெஞ்சே
சேர்த்த பின் தேனாமோ? (பகை)
வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? - நன்னெஞ்சே
வாழ்வுக்கு நேராமோ?
தாழ்வு பிறர்க்கு எண்ணத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ? - நன்னெஞ்சே
சாத்திரம் கேளாயோ? (பகை)
போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர்
போல வந்தானும் அவன் - நன்னெஞ்சே
போல வந்தானும் அவன்
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு
நின்றதும் கண்ணன் அன்றோ? - நன்னெஞ்சே
நின்றதும் கண்ணன் அன்றோ? (பகை)
தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு
சிந்தையில் போற்றிடுவாய் - நன்னெஞ்சே
சிந்தையில் போற்றிடுவாய்
அன்னை பராசக்தி அவ்வுரு ஆயினள்
அவளைக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே
அவளைக் கும்பிடுவாய் (பகை)
- மகாகவி பாரதி
தலைப்பு : மகாகவி பாரதி கவிதைகள்
அச்சந் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்த லிகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை யுறுதிசெய்
ஊண்மிக விரும்பு
எண்ணுவ துயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி யாட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்
ஓய்த லொழி
ஓளடதங் குறை கற்ற தொழுகு
கால மழியேல்
கிளைபல தாங்கேல்
கீழோர்க் கஞ்சேல்
குன்றென நிமிர்ந்துநில்
கூடித் தொழில்செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலுந் துணிந்துநில்
கைத்தொழில் போற்று
கொடுமையை யெதிர்த்துநில்
கோல்கைக்கொண்டுவாழ்
கவ்வியதை விடேல்
தலைப்பு : மகாகவி பாரதி கவிதைகள்
புதிய ஆத்திசூடி
காப்பு
ஆத்தி சூடி யிளம்பிறை யணிந்து
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன்,
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்,
ஏசுவின் தந்தை யெனப்பல மதத்தினர்
உருவகத் தாலே யுணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே , அதனியல் ஒளியுறு மறிவாம்,
அதனிலை கண்டார் அல்லலை யகற்றினார்,
அதனருள் வாழ்த்தி யமரவாழ் வெய்துவோம்.
தலைப்பு : மகாகவி பாரதி கவிதைகள்
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையார் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது முச்சினிலே (செந்தமிழ்)
வேதம் நிறைந்த தமிழ் நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ் நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போலிளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு (செந்தமிழ்)
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ் நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ் நாடு (செந்தமிழ்)
வள்ளுவன் தன்னை உல கினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
யாரம் படைத்த தமிழ் நாடு (செந்தமிழ்)
தலைப்பு : மகாகவி பாரதி கவிதைகள்
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ் சொல்ல லாகாது பாப்பா
தெய்வ நமக்குத் துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.
தமிழ்த் திரு நாடு தன்னைப் பெற்ற
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தி லினியதடி பாப்பா - எங்கள்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.
சாதிக ளில்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
தலைப்பு : மகாகவி பாரதி கவிதைகள்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம், ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.
தலைப்பு : மகாகவி பாரதி கவிதைகள்