"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619முட்டாள்தனமான, பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் (OBSESSIONS) அவர் மனத்தை ஆக்கிரமித்துக் கொள்வதாகவும், அப்படி அவரை ஆட்கொள்கிற பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதாகவும் அவர் குறைபட்டுக் கொண்டார். திடாரென்று, கற்பனையான ஓர் உடல்ரீதியான குறைபாட்டைக் குறித்துக் கவலையுறுவார் என்றும் - ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே, வேறொரு நிகழ்ச்சியாலோ, கவலையாலோ, விஷயத்தாலோ - முதல் கவலை போய்விடும் என்றும் அவர் விளக்கினார். பிடிவாதமும் ஆவேசமும் கொண்டு மனத்தை ஆக்கிரமித்துக் கொள்கிற ஒரு பித்திலிருந்து, இன்னொரு பித்திற்கு, தாவித் தொடர்ந்து தவிப்பவராக அவர் காணப்பட்டார். அத்தகைய பித்துக்களிலிருந்து விடுபடவும், வெளிவரவும் - புத்தகங்கள் சொல்லும் வழிமுறைகளை ஆராய்ந்ததாகவும், பிரச்சினைகளை நண்பருடன் பகிர்ந்து கொண்டதாகவும், ஏன் ஒரு மனோதத்துவ நிபுணரைக் கலந்தாலோசித்ததாகவும் கூட அவர் தொடர்ந்தார். ஆனால், அவருக்கு ஏனோ தெளிவும், நிவாரணமும் கிடைக்கவில்லை என்றும் சொன்னார். முக்கியமான, தெளிவுண்டாக்குவதுபோல் தோன்றுகிற கலந்தாலோசனைகளுக்குப் பின் கூட, உடனடியாக அத்தகைய பித்துக்கள் அவரை ஆட்கொள்வதாக அவர் வருந்தினார். பித்துக்கள் பிறப்பதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து விட்டால், அவற்றுக்கு முடிவு கட்டி விட முடியுமா?

காரணத்தைக் கண்டுபிடிப்பது விளைவிலிருந்து விடுதலை கொணர்கிறதா? காரணத்தை அறிகிற கல்வியால் விளைவுகளை விலக்கிவிட முடியுமா? போருக்கான பொருளாதார, உளவியற் காரணங்களை நாம் அறிந்திருக்கிறோம்; ஆனாலும், காட்டுமிராண்டித்தனத்தையும், சுய அழிவையும் ஊக்குவிக்கிறோம். சொல்லப்போனால், காரணத்தைத் தேடுவதில் நமக்குள்ள நோக்கமே அதன் மூலம் விளைவிலிருந்து விடுதலை பெறுகிற விருப்பம்தான். ஆனால், அந்த ஆசை சாத்வீகமான எதிர்ப்பின், தூஷித்தலின், கண்டித்தலின் மறுவடிவமே ஆகும்; எங்கே தூஷித்தலும், கண்டித்தலும் இருக்கிறதோ அங்கே புரிந்து கொள்வதும், அறிவதும் இருப்பதில்லை.

'அப்படியானால், ஒருவர் செய்ய வேண்டியதுதான் என்ன?' என்று அவர் கேட்டார்.

ஏன் மனமானது இத்தகைய அற்பமான, முட்டாள்தனமான பித்துக்களால் ஆளப்படுகிறது? 'ஏன்' என்று இங்கே கேட்பது, எதுவொன்றைப் பற்றியும் - நீங்களே தேடிக் கண்டடைய வேண்டிய - நீங்கள் சார்ந்திருக்கிற வாய்ப்பு இல்லாத - காரணத்தைத் தேடுவதற்காக அல்ல; 'ஏன்' என்று இங்கே கேட்பது, உங்களின் சொந்த சிந்தனையை வெளிக்கொணரவும், பகிரங்கப்படுத்தவுமே. அதனால், ஏன் மனமானது இவ்வாறு ஆக்கிரமிக்கப்படுகிறது? மனமானது மேலோட்டமானதாக, ஆழமில்லாததாக, சிறுமையானதாக இருப்பதாலும், அதனால் தன்னைக் குறித்த கவர்ச்சிகளிலேயே சிரத்தை கொண்டிருப்பதாலும் தானே?

'ஆமாம்' என்று பதலளித்த அவர், 'நீங்கள் சொல்வது உண்மைபோல் தோன்றுகிறது; ஆனால், முழுவதுமாக அல்ல; ஏனெனில், நான் ஒரு விளையாட்டுச் சுபாவமற்ற, வாழ்க்கையை முக்கியமாக எடுத்துக் கொள்கிற மனிதன்'

'இத்தகைய பித்துக்களைத் தவிர, உங்களின் சிந்தனை எதனால் நிரப்பப்பட்டிருக்கிறது?'

'என்னுடைய தொழிலால்' என்று அவர் சொன்னார். 'நான் ஒரு பொறுப்புமிக்க பதவியில் இருக்கிறேன். முழு நாளும், சில நேரங்களில், இரவின் பின்பகுதி வரை, என்னுடைய சிந்தனையை என் தொழில் எடுத்துக் கொள்கிறது. நான் அவ்வப்போது படிப்பதுண்டு, ஆனால், என்னுடைய பெரும்பான்மையான நேரம் என் தொழிலுக்காகவே செலவாகிறது'

'நீங்கள் செய்கிற தொழிலை நீங்கள் விரும்புகிறீர்களா?'

'ஆம்; ஆனால், என்னுடைய தொழில் எனக்கு பூரணமான திருப்தியளிக்கவில்லை. என்னுடைய வாழ்நாள் முழுவதும், நான் ஈடுபட்டுள்ளவற்றில் அதிருப்தியுடையவனாகவே நான் இருந்து வருகிறேன். ஆனால், எனக்கு இப்போது இருக்கிற கடமைகளின் பொருட்டு என்னால் இந்தப் பதவியை விடமுடியாது. மேலும், எனக்கு வயதும் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பித்துக்களும், என் தொழிலின் மீதான மனக்கசப்பும், பிறரின் மீதான வருத்தமுமே என்னை மிகவும் தொந்தரவு செய்கின்றன. நான் இனிமையானவனாக இல்லை. எதிர்காலத்தைப் பற்றி நாளும் வளர்கிற கவலையுறுபவனாக இருக்கிறேன். எனக்குள் அமைதி இருப்பதாகவே தோன்றவில்லை. நான் என் வேலையையும் கடமையையும் நன்றாக செய்கிறேன். ஆனால்...'

ஏன் நீங்கள் 'இது என்ன?' என்கிற நிதர்சனத்தை, உண்மையை எதிர்த்துத் துன்புறுகிறீர்கள்? நான் வாழ்கிற இந்த வீடு சந்தடியும் சத்தமும் மிகுந்ததாகவும் - தூய்மையிழந்து அசுத்தமானதாகவும் - கட்டில், மேஜை, நாற்காலி ஆகியவை புழங்கிப் போய் அழகற்றதாகவும் இருக்கலாம்; மொத்தத்தில் இந்த இடமே அழகும் அமைதியும் இழந்து காணப்படலாம். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக, என்னால் இன்னொரு வீட்டிற்குப் போக இயலாமல், இங்கேயே வாழ வேண்டி வரலாம். எனவே, இங்கே நான் உறைவது - சம்மதம் பற்றிய, ஏற்றுக் கொள்வது பற்றிய விஷயம் அல்ல; யதார்த்தத்தை, நிதர்சனத்தை உணர்கிற, பார்க்கிற விஷயம் ஆகும். 'இது என்ன' என்கிற உண்மையை நான் பார்க்காவிட்டால், அந்த பூ ஜாடி பற்றியோ, நாற்காலி பற்றியோ, சுவரிலே மாட்டப்பட்டிருக்கிற படத்தைப் பற்றியோ நினைத்து வருந்துகிற நோயுற்றவன் ஆகிவிடுவேன். அவை என் மனத்தை ஆக்கிரமிக்கிற, ஆட்டுவிக்கிற பித்துக்களாக மாறிவிடும்; அப்புறம், பிறரை எதிர்த்தும், என் தொழிலை எதிர்த்தும் என்றெல்லாம் எனக்குள் மனக்கசப்புகள் பிறக்கும். இவை எல்லாவற்றையும் அப்படியே இங்கேயே விட்டுவிட்டு, நான் புதிதாகவும் தொடங்கலாம் எனில் அது முற்றிலும் வேறான விஷயம். ஆனால், என்னால் அது முடியாது. 'இது என்ன' என்கிற நிதர்சனத்தை எதிர்த்துக் கலகம் செய்வது நல்லதல்ல. 'இது என்ன' என்கிற உண்மையை அங்கீகரிப்பது கம்பீரமான மனத்திருப்திக்கோ, வலியைக் குறைக்கிற இளைப்பாறலுக்கோ அழைத்துச் செல்வதில்லை. 'இது என்ன' என்கிற நிதர்சனத்திற்கு, உண்மைக்கு நான் இணங்கி வளைந்து கொடுக்கும் போது, அதைப் பற்றிய புரிந்து கொள்ளுதலும் அறிதலும் நிகழ்வது மட்டுமல்ல; மேலோட்டமான புற மனத்திற்கு ஒருவகையான அமைதியும் பிறக்கிறது. மனத்தின் மேற்பகுதியானது - புறமனமானது - அமைதியடையாதபோது, அது - நிஜமான அல்லது கற்பனையான, பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்களுக்கு இடம் கொடுக்கிறது. அது, சில சமூக சீர்திருத்தங்களிலோ, குரு, இரட்சகர், சடங்கு போன்ற மதமுடிவுகளிலோ சிக்கிக் கொள்கிறது. புற மனமானது அமைதியாக இருக்கும்போதே, மறைந்திருக்கிற, ஆழ்மனம் - அக மனம் - தன்னைத் தானே வெளிப்படுத்தும். மறைந்திருக்கிற அக மனம் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆனால், புற மனமானது பித்துக்கள், கவலைகள் ஆகியவற்றால் சுமையேற்றப்படும்போது அகமனம் வெளிப்படுதல் சாத்தியமாகாது. எனவே, அமைதியற்ற சச்சரவுகளிலும், ஆவேசங்களிலும், எழுச்சிகளிலும், புறமனமானது தொடர்ந்து பாதிக்கப்படும்போது, புற மனத்திற்கும், அக மனத்திற்கும் முரண்பாடுகளும் பகையும் தோன்றுவது தவிர்க்க இயலாதது. இந்த முரண்பாடுகள் தொடர்கிற வரை, தீர்க்கப்படாத வரை, பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் வளர்கின்றன. சொல்ல போனால், பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் எல்லாம் நம்முடைய முரண்பாடுகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியே ஆகும். சில வகையான தப்பித்தல்கள் சமுதாயத்திற்கு வெளிப்படையாக அதிகமாய்த் தீங்கிழைக்கின்றன என்றாலும் கூட, எல்லாத் தப்பித்தல்களுமே ஒத்த தன்மையுடையவை, ஒரே மாதிரியானவை தான்.

எப்போது ஒருவர் பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்தின் முழுமையான இயக்கத்தை அல்லது பிரச்சினையின் முழுமையான இயக்கத்தை உணர்ந்து அறிகிறாரோ, அப்போது தான் பிரச்சினையிலிருந்து பூரணமான விடுதலை காண முடியும். முற்றுமுணர, பிரச்சினையைக் கண்டிப்பதோ, நியாயப்படுத்துவதோ கூடாது. உணர்கிற நிலை - அறிவுடைய நிலை - என்பது தேர்ந்தெடுக்கப்படாததாய் இருக்க வேண்டும். அப்படி முழுவதும் உணர்வதற்கும் அறிவதற்கும் மிக்க பொறுமையும், நுண்ணிய உணர்வுகளை அறியும் நுட்பமும் தேவைப்படுகிறது; பேராவலும், தொடர்ந்த கவனமும் தேவைப்படுகிறது. அவற்றினாலேயே, சிந்தனையின் முழுமையான இயக்கத்தைக் கூர்ந்து கவனிக்கவும், புரிந்து கொள்ளவும், அறியவும் முடியும்.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி

மூலம்: Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)


http://www.thinnai.com/?module=displaystory&story_id=20205054&format=htmlவாழ்வுடன் தொடர்புடைய, தங்களை பாதிக்கிற, யோசிக்க வைக்கிற விஷயங்கள் குறித்து - மனப்பூர்வமாகவும், மனம் விட்டும் - பேசவும், கேட்கவும் வந்திருந்த கூட்டத்தில் அந்தப் பெண்ணும் இருந்தார். அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்கிற மன உந்துதலாலோ, தன்னுடைய தோழியால் அழைக்கப்பட்டோ அந்தப் பெண் வந்திருக்கலாம். அவர் நன்றாக, நாகரீகமான உடையணிந்திருந்தார். பிறர் மனதில் அவர் பால் ஒரு கெளரவத்தையும் மரியாதையையும் ஏற்படுத்துகிற தோற்றம் அவருடையது. அதே நேரத்தில், தன் தோற்றத்தின் - மேலான இலட்சணத்தையும், அழகையும் - அவர் தெளிவாக அறிந்திருந்தார். சதாநேரமும், தன்னைப் பற்றிய முழுப் பிரக்ஞையுடனும், சுய நினைவுடனுமே அவர் இருந்தார் - தன்னுடைய உடலழகு, பார்வைகள், சிகையலங்காரம், தன் தோற்றமும், செய்கைகளும் பிறரிடம் ஏற்படுத்தும் பாதிப்புகள், அபிப்பிராயங்கள் பற்றிய பிரக்ஞைகள் அவை. தனிமையிலும், தனக்குள்ளேயும் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டு, தணிக்கைச் செய்யப்பட்டு, மெருகேற்றப்பட்டவை அவரின் தோரணைகளும் செயல்களும், பாவனைகளும். அது, சில நிமிடங்களுக்கு ஒருமுறை, தான் அமர்ந்திருந்த நிலையையும், தன்னுடைய தேக, மனோ பாவங்களையும், தேர்ந்த விதத்தில் அவர் மாற்றிக் கொண்டதிலிருந்து தெரியவந்தது. எது நேர்ந்த போதும், தான் வளர்த்துப் பண்படுத்தி வைத்திருக்கும் ஒரு நிலையிலும் தோற்றத்திலும் தன்னைப் பொருத்திக் கொள்வதில் அவர் உறுதியாய் இருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. கூட்டத்தினர் அனைவரும் தீவிரமாகவும், ஆழ்ந்தும் விவாதித்துக் கொண்டு இருந்த நேரம் எல்லாம் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விதத்திலிருந்து மாறவில்லை. நோக்கங்களுடனும், நோக்கங்களுக்காகவும் தன்னை மறந்து பேசிக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த அந்தக் கூட்டத்திடையே, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்தது போலவும், அதில் தானும் பங்கெடுத்துக் கொள்வது போலவும் காட்டிக் கொள்ள அந்த சுயநினைவு மிக்க பெண் முயன்று கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது. விவாதிக்கப்படுகிற பொருளில் விஷய ஞானம் இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், அவர் ஏதும் பேசவில்லை. ஆனால், அவர் கண்களில் தெரிந்த ஒருவித திகைப்பும் பயமும் அவரால் அந்தத் தீவிர உரையாடலில் கலந்து கொள்ள இயலவில்லை என்பதைக் காட்டியது. தன்னுடைய உண்மையான உணர்வுகளை மறைத்து, தன்னுடைய பண்படுத்தப்பட்ட பாவனைகளைத் தொடர்ந்தபடி, தனக்குள்ளேயே அவர் பின்வாங்குவதையும் உணர முடிந்தது. பிறரால் தூண்டப்படாததும், தன்னிச்சையுமான இயல்பு (SPONTANEITY) அவரின் விடாமுயற்சியால் தொடர்ந்து அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு தோற்றத்தையும், பாவனையையும் தனக்குள்ளே வளர்த்துக் கொள்கிறார்கள்; அதையே வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். தன்னுடைய இலாபகரமான வணிகத்தையும் தன் வாழ்வின் வெற்றியையும் தன் நடையில் காட்டும் உத்யோகஸ்தர், தன்னுடைய இருப்பையும், வருகையையும் தன் புன்முறுவலால் அறிவிக்கும் மனிதர், தேடலும் அழகுணர்வும் நிறைந்த கலைஞன், மரியாதையும் பணிவும் நிறைந்த சீடன், கட்டுப்பாட்டுடன் உலக இன்பங்களை மறுதலித்து ஒழுகும் ரிஷி என்று நாம் வாழ்வில் பலவிதமான தோற்றங்களையும், பாவனைகளையும் பார்க்கிறோம். சுயப்பிரக்ஞை நிறைந்த அந்தப் பெண்ணைப் போலவே, மத கோட்பாடுகளிலும் தவத்திலும் நம்பிக்கை கொண்ட ரிஷியும் சுயக்கட்டுப்பாடு என்கிற தோற்றத்துக்குள்ளூம் பாவனைக்குள்ளும் தன்னைப் புகுத்திக் கொள்கிறார். சுயக்கட்டுப்பாடு என்பது மறுதலிப்பையும் தியாகத்தையும் தற்பயிற்சியினால் பண்படுத்தி வளர்ப்பதிலேயே வருகிறது. பிறர் தன்னைப் பற்றி கொள்ளப் போகும் மதிப்பீடுகளுக்காகவும், அந்த மதிப்பீடுகளினால் தனக்கு விளையப் போகும் பலன்களுக்காகவும் அந்தப் பெண் தன்னிச்சையான இயல்பைத் தியாகம் செய்தார். அதேபோல், ஆன்மீக ரிஷியும் வாழ்வின் எல்லையை, இறுதியைக் காண்பதற்காகவும், கடப்பதற்காகவும் தன்னை பலியிட்டுக் கொள்கிறார். இருவருமே வெவ்வேறு தளங்களில், வெவ்வேறு நிலைகளில், ஆனால் ஒரேவிதமான விளைவைப் பற்றியே சிரத்தை கொண்டுள்ளனர். ரிஷிக்குக் கிடைக்கிற பலன், அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கிற பலனை விட, சமூக அளவில் உயர்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருந்தாலும் கூட, இருவருக்கும் வித்தியாசம் இல்லை. அந்தப் பெண்ணை விட ரிஷியோ, ரிஷியை விட அந்தப் பெண்ணோ மேலானவர் இல்லை. இருவரும் அடிப்படையில் ஒன்றானவர்களே. இருவருமே புத்திசாலிகளோ, நுண்ணறிவாளர்களோ இல்லை. ஏனெனில், இருவரின் தோற்றங்களும், வெளிப்பாடுகளும் அவர்கள் மனதின் சிறுமையையும், தாழ்மையையுமே காட்டுகின்றன. சிறுமையும் தாழ்மையும் கொண்ட மனம் எப்போதும் ஞானமுள்ளதாகவோ, வளமானதாகவோ மாற இயலாது. அது எப்போதும் சிறுமையிலும் தாழ்மையிலும் தான் உழன்று கொண்டிருக்கும். அத்தகைய மனமானது, தன்னை அலங்கரித்துக் கொள்ளவோ, நற்பண்புகளைப் பயிலவோ விழையலாம். ஆனபோதிலும் கூட அது எப்போதும் சிறுமையானதாகவும், ஆழமில்லாததாகவும், அற்பமானதாகவுமே இருக்கிறது. வளர்ச்சி, முதிர்ச்சி, அனுபவம் என்கிற பெயர்களில் எல்லாம் அது தன்னுடையை சிறுமையையே வளர்த்துக் கொள்கிறது. ஓர் அருவருப்பான, அசிங்கமான விஷயத்தை அழகாக்க முடியாது. அதுபோலவே, சிறுமை கொண்ட மனத்தையும் அழகாக்கவோ, வளமாக்கவோ முடியாது. சிறுமை கொண்ட மனம் துதிக்கின்ற கடவுளரும் சிறுமையானவரே. கல்வி கேள்விகளால் பெறுகிற புலமையாலோ, புத்திசாலித்தனமான வார்த்தை விளையாட்டுக்களாலோ, விவேகம் நிறைந்த மேற்கோள்களாலோ, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அலங்காரங்களாலோ, பூஷணங்களாலோ- சிறுமை கொண்ட மனமானது - பூரணமிக்கதாகவோ, ஆழங்காண இயலாத ஞானமுள்ளதாகவோ மாறுவதில்லை. அகாதமான ஆழமுள்ள மனமே அழகாகும். நகைகளும் நாம் தேடிப் பிடித்த நற்பண்புகளூம் அழகாகா. தன்னுடைய சிறுமையையும் தாழ்மையையும் எள்ளளவும் சந்தேகமின்றி உணர்ந்த மனமே, ஒப்பீடுகள் செய்யாத, மதிப்பீடுகளை உதறிய மனமே, அழகாக இயலும். தூண்டப்படாததும் தன்னிச்சையுமான இயல்பும், அதனால் பிறக்கிற தன்னுணர்தலுமே அத்தகைய அழகு ஒருவருள்ளே வந்து தங்கி இருத்தலுக்கு வழி வகுக்கும்.

அந்தப் பெண்ணின் வெளிப்பூச்சும், ஒழுங்கும் ஒருமுகமும் படுத்தப்பட்ட ரிஷியின் தோற்றமும் - அடிப்படையில் ஒருவருக்கு இருக்க வேண்டிய, தன்னிச்சையான இயல்பை - வேண்டாம் என்று மறுதலிக்கிற - அதனால் வதைபடுகிற - சிறுமை கொண்ட மனத்தின் விளைவுகளே ஆகும். பண்படுத்தப்படாத, தன்னிச்சையான இயல்பானது - தங்களின் சரியான அடையாளத்தை, இயல்பான குணாதிசயங்களைத் தங்களுக்கும் பிறருக்கும் காட்டிவிடும் என்று - அந்தப் பெண்ணும், ரிஷியும் பயப்படுகிறார்கள். எனவே, தன்னிச்சையான தன்மையை அழிப்பதற்கு அவர்கள் இடையறாது முயல்கிறார்கள். தாங்கள் தேர்ந்தெடுத்த வெளிப்பாடுகளுக்கும், வெளிப்பூச்சுகளுக்கும், தோற்றங்களுக்கும், தங்களைப் பற்றிய முடிவுகளுக்கும் தாங்கள் எந்த அளவிற்கு இணங்கிப் போகிறோம் என்பதை வைத்து அவர்கள் இருவரும் தங்களின் வெற்றியை மதிப்பிடுகிறார்கள். ஆனால், எது ஒன்று குறித்தும் கேட்கப்படுகிற 'இது என்ன?' என்கிற கேள்விக்கு, விடைதருகிற ஞானச்சுரங்கத்தின் ஒரே சாவி தன்னிச்சையான இயல்புதான். தன்னிச்சையான பிரதிபலிப்பே - மனதை, அதன் சரியான வடிவத்துடன், கண்டுபிடிக்கவும், வெளிக்காட்டவும் முடியும். ஆனால், அப்படி கண்டுபிடிக்கப்படுகிற மனமானது, அலங்கரிக்கப்படும்போது, தன்னை மட்டுமல்ல, கூடவே தன்னிச்சையான இயல்பையும் அழித்துக் கொள்கிறது. தன்னிச்சையான இயல்பைக் கைவிடுவதும், அழித்துக் கொள்வதும் சிறுமை கொண்ட மனத்தின் வழிகளாகும். அப்படி அழித்துக் கொண்ட பின்னர் சிறுமை கொண்ட மனமானது, தேவையான இடங்களிலும், தேவையான நிலைகளிலும் தேவையான அளவுக்கு தன்னை ஜோடித்துக் கொண்டும், அரிதாரம் பூசிக்கொண்டும் அகமகிழ்கிறது. இத்தகு ஜோடனைகள் மற்றும் வேடங்கள் மூலம் சிறுமை கொண்ட மனமானது தன்னைத் தானே வழிபட்டுக் கொள்கிறது. தன்னிச்சையான இயல்பாலும், விடுதலை பெற்ற மனத்தாலுமே, தன்னையுணர்கிற கண்டுபிடிப்பைச் செய்ய இயலும். கட்டுப்படுத்தப்பட்ட மனம் எதையும் கண்டுணர இயலாது. கட்டுப்படுத்தப்பட்ட மனமானது மிகவும் சக்தி வாய்ந்ததாகவோ, தயையற்றதாகவோ கூட இருக்கக் கூடும்; ஆனால், அதற்கு எதையும் கண்டுணர இயலாது என்பதால், ஆழமான ஞானத்தை அதனால் கண்டடைய இயலாது. பயம்தான், கட்டுப்பாடு, ஒழுக்கம் என்கிற தடைகளை உருவாக்குகிறது. தூண்டப்படாமல் தன்னிச்சையான இயல்புடனே பயத்தைக் கண்டறிதலே பயத்திலிருந்து விடுபட வழியாகும். ஓர் ஒழுங்கிற்கும், தோற்றத்திற்கும், உருவமைப்பிற்கும் இணங்கி நடத்தல் - அது எந்த நிலையில் இருப்பினும் - பயத்தின் அடையாளமே. அந்தப் பயமே முரண்பாடுகள், குழப்பம், பகை போன்றவற்றை வளர்க்கிறது. பண்படுத்தப்படாத தன்னிச்சையான இயல்பிலே இயங்குகிற மனமானது, பயமற்ற புரட்சி செய்கிறது; விடுதலை காண்கிறது. பயப்படுகிற எந்த மனமும் தன்னிச்சையான இயல்பையோ, விடுதலையையோ அடைய இயலாது.

தன்னிச்சையான இயல்பின்றி ஆத்ம ஞானம் அடைய இயலாது. ஆத்ம ஞானம் அடையாவிட்டால், மனமானது போகிற, வருகிற காட்சிகளால் வசீகரிக்கப்பட்டு, காட்சிகளின் தாக்க்கங்களூக்கேற்ப - உருமாறிக் கொண்டே இருக்கும். அத்தகைய தாக்கங்கள் - காண்கிற காட்சியின் பரிணாமத்திற்கும் எல்லைக்கும் உட்பட்டு - மனத்தைக் குறுகியதாகவோ, விரிவானதாகவோ ஆக்கலாம்; என்ற போதிலும், மனம் விடுதலை அடையாமல், கண்ட காட்சியின், அதன் தாக்கத்தின் வரையறைக்குளேயே இருக்கும். காட்சிகளின் தாக்கங்கள் மூலம் வடிவமைக்கப் பட்டுக் கொண்டிருக்கிற மனத்தை, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவோ, உருக்குலைக்கவோ இயலாது. எதன் அடிப்படையிலும் தூண்டப்படாத, வடிவமைக்கப்படாத மனத்தை ஆத்ம ஞானம் என்கிற சுய அறிவின் மூலமே பெற இயலும். ஆத்மாவானது காட்சிகள், காட்சிகளின் தாக்கங்கள், பண்படுத்தப்படுதல் என்கிறவற்றால் வடிவமைக்கப்படுகிறது. ஆத்மாவை அறிதல் என்பது, எதன் தாக்கங்களுக்கும் உட்படாத, வடிவமைப்புகளைத் தகர்க்கிற, காரணங்களோ பண்படுத்தலோ இல்லாத, தன்னிச்சையான கண்டுபிடிப்பின் மூலமே சாத்தியமாகும்.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி

மூலம்: Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20204073&format=htmlவர்கள் இருவரும் தொடர்புடைய, அவர்கள் இருவரையுமே பாதிக்கிற பிரச்சினை என்பதால் மனைவியையும் உடன் அழைத்து வந்ததாகக் கணவர் கூறினார். மனைவி, உருவில் சிறியவராகவும், பிரகாசமான கண்களுடன், உற்சாகமானவராகவும் - ஆனால், அமைதியைத் தொலைத்தவராகவும் - காணப்பட்டார். கணவன், மனைவி இருவருமே எளிமையானவர்களாகவும், கபடமற்றவர்களாகவும், சிநேகபாவமுள்ளவர்களாகவும் இருந்தனர். கணவர் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடினார்; மனைவி ஆங்கிலத்தைப் புரிந்து கொண்டு, சுலபமான கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்கும் திறன் பெற்றிருந்தார். உரையாடல் தீவிரமடைந்து, நீண்டு, புரிந்து கொள்ளச் சற்றுக் கடினமானபோதெல்லாம் மனைவி கணவரை ஏறிட்டு நோக்க, அவர் மனைவிக்குத் தன் மொழியில் விவரித்துச் சொன்னார். கால் நூற்றாண்டுக்கும் மேலாக அவர்கள் தம்பதிகளாக இருப்பதையும், அவர்களுக்குப் பல குழந்தைகள் இருப்பதையும் சொன்ன கணவர் - அவர்களின் சிக்கல், குழந்தைகளாலோ அல்லது குழந்தைகள் பற்றியதோ அல்ல என்றும், அவர்களுக்கிடையேயான மனஸ்தாபமும் வருத்தமும் தான் என்றும் சொன்னார். மிதமான வருமானம் தரும் வேலையில் அவர் இருப்பதை விவரித்த கணவர் - இந்த உலகத்திலே ஒருவர் - அதிலும் முக்கியமாகத் திருமணமானவர் - அமைதியுடன் வாழ்வது மிகவும் கடினம் என்றும் தொடர்ந்தார். புலம்பவில்லை என்றும் அதிருப்தியில் முனகவில்லை என்றும் அவர் சொன்ன போதிலும், அவர் சொன்னவிதம் அப்படித்தான் இருந்தது. ஒரு கணவருக்கான கடமைகளிலும் இலக்கணங்களிலும் அவர் ஒருபோதும் தவறவில்லை என்றும் - அல்லது அப்படி நம்புவதாகவும் - சொன்ன கணவர், அப்படி இருப்பது சுலபமான காரியம் அல்ல என்றும் சொன்னார்.

அவர்களின் பிரச்சினையை நேரடியாக அணுகுவதும், விவரிப்பதும் அவர்களுக்கு கடினமானதாக இருந்தது. எனவே, அவர்கள், அவர்களின் குழந்தைகளின் கல்வி, பெண்குழந்தைகளின் திருமணம், கொண்டாட்டங்களில் வீணடித்த பணம், குடும்பத்திலே சமீபத்தில் நிகழ்ந்த மரணம் என்று பலதரப்பட்ட விஷயங்களைப் பேசினார்கள். தாங்கள் சொல்லுவதைக் கவனித்துக் கேட்கிற ஒருவரிடம் பேசுவது நன்றாக இருக்கிறது என்பதாலும், அப்படிக் கேட்கிறவர் தங்கள் பிரச்சினையைப் புரிந்து கொள்ளவும் கூடும் என்கிற வாய்ப்பினாலும், மிகவும் செளகரியமான, சாவதானமான சூழ்நிலையில் தங்களை அவர்கள் உணர்ந்தார்கள்.

மற்றவர் சிக்கல்களை, சிரமங்களைச் செவிமடுத்துக் கேட்க யார் அக்கறை காட்டுகிறார்கள், ஆசைப்படுகிறார்கள்? நம்முடைய சிக்கல்களும், துன்பங்களுமே நமக்குத் தலைக்கு மேலே இருக்கும்போது, அடுத்தவர்களின் பிரச்சினைகளைக் கேட்க நமக்கு நேரம் இல்லை. மற்றவர், நம்முடைய பிரச்சினைகளைக் கேட்பதற்கு, அவருக்கு நாம் பணம், பிராத்தனை, நம்பிக்கை போன்ற 'தட்சணை'களுள் ஒன்றைத் தரவேண்டி இருக்கிறது. தங்களின் தொழில் அதுவாக இருப்பதால், பிரச்சினைகளுக்கு ஆறுதலும் வழியும் சொல்லுகிற தொழிலிலே இருப்போர் பொறுமையாகக் கேட்கலாம். ஆனால், அப்படித் தொழில்ரீதியானவர்களிடம் பேசுவதால், பிரச்சினையிலிருந்து நீடித்த விடுதலையோ, நிம்மதியோ கிடைப்பதில்லை. நம்முடைய சுமைகளை எல்லாம், கட்டுப்பாடுகள் இன்றிச் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும், பின்னர் எண்ணி வருந்தாத மனநிலையுடனும் இறக்கி வைக்கவே நாம் விரும்புகிறோம். குற்றங்களை ஒப்புக் கொள்வதிலும், பாவமன்னிப்புக் கேட்பதிலும் கிடைக்கிற புனிதமானது, அவற்றைச் செவிமடுத்துக் கேட்கிறவரைப் பொறுத்தது அல்ல; தன்னுடைய இதயத்தைத் திறந்து முழுமையாகக் கொட்டுகிறவரைப் பொறுத்தது. ஒருவர் தன் இதயத்தை முழுவதும் திறப்பதே முக்கியமானது; அப்படித் திறக்கிற இதயம், செவிசாய்த்துக் கேட்க ஒருவரை - அப்படிக் கேட்கிறவர் பிச்சைக்காரராகக் கூட இருக்கலாம் - நிச்சயம் கண்டடைந்து, இதயபாரம் இறக்கி சாந்தப்படும். ஒருவர் தனக்குள்ளேயே செய்யும் சுயதரிசன உரையாடலால் ஒருபோதும் இதயத்தைத் திறக்க முடியாது. அத்தகைய சுயதரிசன உரையாடல், ஒரு விசாரமான, உறையிலிடப்பட்ட, முற்றிலும் பலனற்ற நிகழ்வேயாகும். இதயத்தைத் திறக்க - நாம் என்ன பேசுகிறோம் என்பதை மட்டும் அல்லாது, நாம் தொடர்புடைய ஒவ்வொரு தாக்கத்தையும், ஒவ்வொரு அசைவையும் கவனமாகக் கேட்க வேண்டும். நாம் காது கொடுத்துக் கேட்கிறவற்றைப் பற்றி சாத்தியமான, விளைவுகள் தெரிகிற செயல்களை நாம் செய்யவோ, செய்ய இயலாமலோ போகலாம். அது முக்கியமல்ல. ஏனெனில், சொல்கிறவர் தன்னுடைய இதயத்தைத் திறந்து சொல்கிறார் என்கிற அடிப்படை உண்மையே, அதன் நிஜமான விளைவாகும். அப்படிச் செவிசாய்த்தல், மனத்தின் அழுக்குகளிலிருந்து நம் இதயத்தைத் துவைத்துத் தூய்மையாக்குகிறது. இதயத்தின் மூலம் நுகராமல், மனத்தின் மூலம் கேட்டல் என்பது வெறும் வம்பும் வீண்பேச்சுமேயாகும்; அது வெறும் வலியின், வேதனையின், மூடத்தனத்தின் தொடர்ச்சிதான்.

சாவகாசமாக அவர்களின் பிரச்சினைக்கு அவர்கள் வருகிறார்கள்.

'எங்களின் சிக்கலைப் பற்றி பேசவே நாங்கள் வந்தோம். நாங்கள் அவநம்பிக்கையும், சந்தேகமும், பொறாமையும் கொண்டவர்களாக இருக்கிறோம் - நான் இல்லை, ஆனால் என் மனைவி அப்படி இருக்கிறார். இப்போது இருக்கிற மாதிரி, வெளிப்படையான நம்பிக்கையின்மையும் சந்தேகமும் கொண்டவராக அவர் முன்னர் இருந்ததில்லை எனினும், அத்தகைய முணுமுணுப்பு அவரிடம் எப்போதும் இருந்தே வந்திருக்கிறது. அவர் அப்படி நினைக்கிற அளவுக்கு நான் ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை என்றாலும், அவநம்பிக்கையும் சந்தேகமும் கொள்ள அவர் ஏதேனும் ஒரு காரணம் கண்டுபிடிக்கிறார்.'

அவநம்பிக்கை கொள்வதற்கும் சந்தேகப்படுவதற்கும் ஏதேனும் காரணம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவநம்பிக்கைக்கும் சந்தேகத்திற்கும் தூண்டுதல் உண்டா? காரணம் தெரிந்துவிட்டால், சந்தேகம் போய் சந்தோஷமும், அவநம்பிக்கை போய் நம்பிக்கையும் வந்து விடுமா? காரணம் தெரிந்த பிறகும் கூட, நம்பிக்கையின்மையும், சந்தேகமும், பொறாமையும் தொடரவே செய்கிறது என்பதை எப்போதேனும் நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? காரணிகளையும் தூண்டுதல்களையும் தேடாமல், அவநம்பிக்கையையும் சந்தேகத்தையும், அதனால் பிறக்கிற பொறாமையையும் புரிந்து கொள்ள நாம் முயல்வோம். நீங்கள் சொன்னது போல், அவநம்பிக்கை கொள்ள ஒருவர் எத்தகைய காரணம் வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம். பொறாமையையும் அதனால் பிறக்கிற பகையையும் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, அவை எதன்பொருட்டு பிறக்கின்றன என்பதை அல்ல.

'அவநம்பிக்கையும் சந்தேகமும் என்னிடம் நிறைய வருடங்களாகவே இருந்து வருகின்றன. எனக்குத் திருமணமான புதிதில், கணவரைப் பற்றி ஒன்றும் தெரியாததால், பிரச்சினை இல்லை. அப்புறம் இவையெல்லாம் எப்படி வருகின்றன எனபதுதான் உங்களுக்குத் தெரியுமே. மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக, சமையலறையில் புகை விரவுவது போல, அவர் நடத்தை பால் அவநம்பிக்கையும் சந்தேகமும் பொறாமையும் என்னுள் நுழைந்தன.'

ஆணையும் பெண்ணையும் தாங்கிப் பிடிக்கிற வழிகளில் ஒன்றுதானே, சந்தேகமும் பொறாமையும். எந்த அளவிற்கு மேலும் மேலும் பொறாமைப்படுகிறோமோ, அந்த அளவிற்கு மேலும் மேலும் உரிமை கொண்டாடுகிறோம். ஒன்றை உரிமையினால் 'பற்றி'க் கொள்ளுதல் நமக்கு மகிழ்ச்சி தருகிறது. எதுவொன்றையும் - அது நாய் ஆனாலும் கூட - நமக்கு மட்டுமே என்று பிரத்யேகமாக பரிபூரண உரிமையாக்கிக் கொள்வது நமக்கு இதமாகவும், சுகமாகவும் இருக்கிறது. அந்தப் பரிபூரண உரிமை, நம்மைப் பற்றியே நமக்கு ஒரு உறுதியான நிச்சயத்தன்மையைத் தருகிறது. ஒன்றிற்கு உரிமையாளராய் இருப்பது, நம்மை முக்கியமானவர் ஆக்குகிறது. அந்த முக்கியத்துவத்தையே நாம் 'பற்றி'க் கொண்டிருக்கிறோம். ஒரு பென்சிலையோ, வீட்டையோ அல்ல, ஒரு மனிதரை நாம் உரிமை கொண்டாடுகிறோம் என்கிற நினைப்பு, நம்மை வலிமையானவர்களாகவும், ஒருவகையில் திருப்தியுற்றவர்களாகவும் செய்கிறது. அவநம்பிக்கையும் பொறாமையும் மற்றவராலோ, உரிமை கொண்டாடுகிற பொருளாலோ வருவது அல்ல; அது நம்மீது நமக்குள்ள மதிப்பினாலும், முக்கியத்துவத்தினாலுமே வருகிறது.

'ஆனால், எனக்கு நான் முக்கியமில்லை; என் கணவர்தான் எனக்கு எல்லாமே. என் குழந்தைகள் கூட எனக்கு ஒரு பொருட்டோ, நம்பிக்கையோ இல்லை'

நாம் எல்லோருமே ஒரு பொருளைத்தான் - அந்தப் பொருள் பல வடிவமான போதும் - 'பற்றி'க் கொண்டிருக்கிறோம். நீங்கள் உங்கள் கணவரைப் 'பற்றி'க் கொண்டிருக்கிறீர்கள்; இன்னும் சிலர் அவர்கள் குழந்தைகளைப் 'பற்றி'க் கொண்டிருக்கிறார்கள்; அங்ஙனமே, இன்னும் பிறர், நம்பிக்கைகளைப் 'பற்றி'க் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எல்லோருடைய நோக்கமும் ஒன்றுதான். நாம் பற்று வைத்திருக்கிற பொருள் இன்றி, நாம் நம்பிக்கையிழந்தும், தொலைந்தும் போகிறோம்! இல்லையா? நாம் தனிமையைக் கண்டும், தனித்திருக்கவும் அஞ்சுகிறோம். அந்த அச்சம்தான் - பொறாமை, வெறுப்பு, வலி, வேதனை எல்லாம். பொறாமைக்கும் வெறுப்புக்கும் பெரிதாய் ஏதும் வித்தியாசம் இல்லை.

'ஆனால், நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம்'

அப்படியென்றால், நீங்கள் எப்படி அவநம்பிக்கையும் சந்தேகமும் பொறாமையும் கொள்ள இயலும்? நாம் நேசிப்பதில்லை; அதுதான், நேசம் என்று நாம் அழைப்பதில், இருக்கிற துரதிர்ஷ்டமே. சந்தோஷத்தின் பொருட்டும், துணையின் பொருட்டும், தனிமை என்னும் எண்ணத்தை விரட்டும் பொருட்டும், நீங்கள் உங்கள் கணவரைப் பயன்படுத்திக் கொள்ளுகிறீர்கள்; அதே காரணங்களுக்காக, உங்கள் கணவர் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளுகிற மாதிரி. நீங்கள் அவர்மீது ஆதிக்கம் செலுத்தாதமலும், அவரை மிகவும் 'பற்றா'மலும் கூட இருக்கலாம். ஆனாலும், உங்கள் துணையாக அவர் உங்களுடன் எப்போதும் இருக்கிறார். இந்தப் பரஸ்பர தேவையையும், பயன்படுத்திக் கொள்ளலையுமே நான் அன்பு என்று அழைக்கிறோம்.

'ஓ... இது மிகவும் அச்சமூட்டுகிற பயங்கரமானது'

அது அச்சமூட்டுகிற பயங்கரமானது அல்ல; நாம் அதை எப்போதும் பொருட்படுத்துவதோ, கூர்ந்து நோக்குவதோ இல்லை. அச்சமூட்டுவது, பயங்கரமானது என்று அவற்றிற்கு பெயர் சூட்டி விட்டு, நாம் விரைவாக விலகிவிடவே விரும்புகிறோம் - நீங்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறீகள்.

'எனக்குத் தெரிகிறது. நான் அதை கூர்ந்து நோக்கவோ, ஆராயவோ விரும்பவில்லை. இப்போது இருப்பதைப் போலவே - அவநம்பிக்கையுடனும் பொறாமையுடனும் - இந்த வாழ்க்கையைத் தொடரவே விரும்புகிறேன். ஏனெனில், வாழ்க்கையில் என்னால் வேறெதையும் தேடவோ, நாடிப் போகவோ இயலாது'

நீங்கள் வேறு ஏதேனும் ஒன்றைப் பார்த்தாலோ, அதனால் ஈர்க்கப்பட்டாலோ, உங்கள் கணவர் மீது சந்தேகமும் அவநம்பிக்கையும் கொள்ள மாட்டார்கள்! கொள்வீர்களா? ஆனால், உங்கள் கணவரைப் 'பற்றி'க் கொண்டிருந்தது போல, அந்த மற்றொன்றைப் 'பற்றி'க் கொண்டுவிடுவீர்கள். அதனாலேயே, பின்னர் அந்தப் புதிய பொருளின் மீதும் அவநம்பிக்கையும் சந்தேகமும் பொறாமையும் கொள்வீர்கள். அப்போது - நீங்கள் உங்கள் கணவருக்கு மாற்று தேடுகிறீர்களே தவிர, பொறாமையிலிருந்து விடுதலை பெற வழி தேடவில்லை. நாம் எல்லோருமே அப்படித்தான். ஒன்றை விட்டு விடும் முன்னர், மற்றொன்றை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். நீங்கள் முழுவதும் நிர்ணயமற்றத் தன்மையுடையவராய் இருக்கும்போது, அங்கே அவநம்பிக்கையோ பொறாமையோ இல்லை. நிர்ணயமான நிலையிலேயே, உங்களுக்கே இறுதியாக உரியது என்னும் நிலையிலேயே, பொறாமையும் பகையும் பிறக்கிறது. பரிபூரணமான உரிமை என்பது இத்தகைய நிச்சயத்தன்மையே ஆகும். ஒன்றை உரிமை கொள்ள விரும்புவதும், கொள்வதுமே பொறாமையுடையவராக இருத்தல் ஆகும். உரிமையே வெறுப்பை உருவாக்குகிறது. நமக்கு உரிமையானதை, நாம் உண்மையிலேயே வெறுக்கிறோம்; அந்த வெறுப்பே அவநம்பிக்கை, பொறாமை ஆகியவற்றால் வெளிப்படுகிறது. எங்கே பற்றும் உரிமையும் இருக்கிறதோ அங்கே அன்பு இல்லை; ஒன்றின் மீது உரிமை கொண்டாடுவது, அன்பினை அழிப்பதாகும்.

'எனக்கு புலப்பட ஆரம்பிக்கிறது. நான் எப்போதும் என் கணவரை நேசிக்கவே இல்லை, அப்படித்தானே! எனக்கு புரிய ஆரம்பிக்கிறது'

அந்த மனைவி தலை குனிந்து அழ ஆரம்பித்தார்.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி

மூலம்: Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20204213&format=htm


வானம் நிர்மலமாகத் திறந்தும், விசாலமாக விரிந்து நிறைந்தும் காட்சியளித்தது. விரிந்தகன்ற இறக்கைகளுடன் ஒரு பள்ளத்தாக்கிலிருந்து மற்றொரு பள்ளத்தாக்கிற்குச் சுலபமாய் மிதந்து செல்லும் பெரும் பறவைகளோ, கடந்து போகிற மேகங்களோகூட தென்படவில்லை. மரங்கள் நிசப்தத்தில் நின்றன. வளைந்து செல்கிற மலையின் மடிப்புகள் நிழலில் செழுமையாகத் தெரிந்தன. ஓர் ஆர்வமிக்க மான், அதன் துறுதுறுப்பால் உந்தப்பட்டு எங்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தது. பின், நாங்கள் நெருங்க நெருங்க திடாரென்று துள்ளிக் குதித்தோடியது. புதருக்குக் கீழே, பூமியின் நிறத்தில், தட்டையான வடிவத்தில் ஒரு தேரை தன் பிரகாசமான கண்களுடன் அசைவற்று நின்றிருந்தது. மேற்கே, மறைகின்ற சூரியனின் ஒளியில் மலைகள் எடுப்பாகவும் தெளிவாகவும் தெரிந்தன. மலைக்கு வெகு கீழே ஒரு பெரிய வீடு நின்றது. அதனுள் ஒரு நீச்சல் குளமும், நீச்சல் குளத்தில் ஆட்களும் இருந்தார்கள். வீட்டைச் சுற்றி ரசிக்கத்தக்க அழகான தோட்டமிருந்தது. அந்த இடம் வளமானதாகவும், தனித்து விலக்கி வைக்கப்பட்டதாகவும், பணக்காரர்களுக்கே உரிய விநோதமான சூழ்நிலை கொண்டதாகவும் இருந்தது. புழுதி கிளப்புகிற சாலையில் - மேலும் கீழே - வறண்ட நிலத்தில் அரைகுறையாகக் கட்டப்பட்ட குடிசை ஒன்று தெரிந்தது. ஏழ்மை, அழுக்கு மற்றும் கடும் உழைப்பாலான ஜீவனம் ஆகியவை இவ்வளவு தூரத்திலிருந்தே புலப்பட்டன. இவ்வளவு உயரத்திலிருந்து பார்க்கும்போது, இரண்டு வீடுகளுக்குமிடையே தூரம் அதிகமில்லை; அருவருப்பும் அழகும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருந்தன.

இதயத்தின் எளிமையானது - உடைமைகளின் எளிமையை விடவும் - மிகவும் முக்கியத்துவம் உடையதும், பெரிதும் குறிப்பிடத்தக்கதும் ஆகும். ஒப்பிடும்போது, போதுமென்ற மனத்துடன் - குறைவான தேவைகளுடன் நிறைவுற்று வாழ்வது - ஒரு சுலபமான விஷயமே. வசதிகளை உதறுவதும், புகைப்பிடித்தலையும் மற்ற பழக்கங்களையும் கைவிடுதலும், இதயத்தின் எளிமையைச் சுட்டவில்லை. உடைகள், வசதிகள், திசைதிருப்பல்கள் (DISTRACTIONS) ஆகியவை நிரம்பியுள்ள உலகிலே - இடுப்பிற்கு மட்டுமே தேவையான அரையாடையை அணிவது - விடுதலை பெற்ற ஜீவனின் அடையாளத்தைச் சொல்லவில்லை. உலகத்தையும், லோகாயுத வழிகளையும் கைவிட்டுவிட்ட ஒரு மனிதர் இருந்தார்; ஆனால், அவரது வேட்கைகளும், பெருங்கனவுணர்வுகளும் அவரை விழுங்கிக் கொண்டிருந்தன; அவர் ஒரு சன்னியாசியின் உடை தரித்திருந்தார், ஆனால் அவருக்கு அமைதியென்றால் என்னவென்று தெரிந்திருக்கவில்லை. அவர் கண்கள் முடிவற்று தேடி அலைந்து கொண்டிருந்தன; அவர் மனம் எப்போதும் சந்தேகங்களிலும் நம்பிக்கைகளிலும் பிளவுண்டும் இருந்தது. புறவயமாக - நீங்கள் கட்டுப்படுகிறீர்கள்; உதறுகிறீர்கள்; படிப்படியாக இறுதி முடிவை அடைவதற்காக உங்கள் வழியை கட்டமைக்கிறீர்கள். நீங்கள் எப்படி இதை அல்லது அதைக் கைவிட்டுள்ளீர்கள், நீங்கள் எப்படி உங்கள் நடத்தையைச் கட்டுப்படுத்திச் செப்பனிடுகிறீர்கள், நீங்கள் எவ்வளவு சகிப்புத்தன்மையும், அன்பும் நிறைந்தவர் மற்றும் இன்னபிற என்றெல்லாம் - உங்கள் சாதனையின் வளர்ச்சியை - நற்பண்பினை அடைப்படையாகக் கொண்டு அளவிடுகிறீர்கள். நீங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தும் கலையில் தேர்கிறீர்கள்; அப்புறம் - காட்டிற்குள் அல்லது மடாலயத்திற்குள் அல்லது இருள் நிறைந்த ஓர் அறைக்குள் தியானிக்கப் பின்வாங்குகிறீர்கள். உங்கள் நாட்களை பிரார்த்தனைகளிலும், கண்காணிப்பிலும் செலவிடுகிறீர்கள். புறவயமாக - உங்கள் வாழ்க்கையை இவ்வாறு எளிமையாக்கிக் கொள்கிறீர்கள். இத்தகைய முன்யோசனைமிக்க மற்றும் திட்டமிடப்பட்ட ஏற்பாட்டின் மூலம் நீங்கள் இவ்வுலகைச் சாராத ஒரு பேரின்பத்தை அடையலாம் என்று நம்புகிறீர்கள்.

ஆனால், புறவயமான கட்டுப்பாடு மற்றும் தணிக்கை செய்யப்பட்ட இசைவு ஆகியவற்றால், உண்மைநிலையை (REALITY) அடைய இயலுமா? புறவயமான எளிமை - வசதிகளைத் தள்ளி வைக்கிற தன்மை - தேவையென்பது தெளிவென்றாலும் - இத்தகைய சைகைகள் (GESTURES) - உண்மைநிலையின் கதவுகளைத் திறக்குமா? வசதிகளிலும் வெற்றிகளிலும் நிரப்பப்பட்டிருக்கும்போது மனமும் இதயமும் பாரம் சுமக்கின்றன. எனவே, பயணிப்பதற்கு சுதந்திரம் தேவை. ஆனால், நாம் ஏன் இத்தகைய புறவயமான சைகைகள் குறித்து மிகவும் சிரத்தை கொண்டிருக்கிறோம்? நாம் ஏன் நமது நோக்கங்களைப் புறவயமான சைகைகளால் சொல்வதற்கு இவ்வளவு ஆர்வமாக உறுதிபூண்டிருக்கிறோம்? இவையெல்லாம் - தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறோமோ (SELF-DECEPTION) என்னும் பயத்தாலா அல்லது மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்னும் எண்ணத்தாலா? நாம் ஏன் நம்முடைய நேர்மை பற்றி நமக்கே நம்பிக்கை ஊட்டிக் கொள்ள விரும்புகிறோம்? மொத்தப் பிரச்னையுமே - 'ஒன்றை' உறுதிப்படுத்துவதிலும், 'ஒன்றாக ஆக வேண்டும்' என்று நமக்குத் தருகிற முக்கியத்துவத்தில் நம்பிக்கை கொள்வதிலுமே இருக்கிறது இல்லையா?

'ஒன்றாக ஆகவேண்டும்' என்கிற வேட்கையே பெருஞ்சிக்கலின் ஆரம்பம் ஆகும். 'ஒன்றாக ஆகவேண்டும்' என்று எப்போதும் நம்மை ஆட்கொள்கிற வேட்கையே - அது அகவயமானது ஆனாலும் சரி அல்லது புறவயமானது ஆனாலும் சரி - நம்மை ஒன்றைக் கொள்ளவும் அல்லது உதறித்தள்ளவும், பண்படுத்தி வளர்க்கவும் அல்லது தடுக்கவும் செய்கிறது. காலம் எல்லாவற்றையும் திருடிக் கொள்கிறது என்பதைப் பார்ப்பதால், நாம் காலமற்ற நிலையைப் பற்றிக் கொள்ள விரும்புகிறோம். பற்றுதல் (ATTACHMENT) அல்லது விலக்குதல் (DETACHMENT) மூலமாக நடக்கிற - 'ஒன்றாக ஆகவேண்டும்' என்கிற இந்தப் போராட்டத்தை - அது நேர்மறையாக இருந்தாலும் சரி அல்லது எதிர்மறையாக இருந்தாலும் சரி - புறவயமான சைகைகள், கட்டுப்பாடுகள் அல்லது பயிற்சிகள் முலம் ஒருபோதும் தீர்க்க முடியாது. ஆனால், இந்தப் போராட்டத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளூதல் - அகவயமான மற்றும் புறவயமான சேகரிப்புகள் மற்றும் அவற்றின் முரண்பாடுகளிலிருந்து - இயற்கையாகவும் தன்னிச்சையாகவும் விடுதலையைக் கொணரும். ஒன்றை விலக்குதலின் மூலம், உண்மை நிலையை அடைய இயலாது; எந்த வழியின் மூலமும் அடைய முடியாத விஷயம் அது. எல்லா வழிகளும், எல்லா முடிவுகளும் பற்றுதலின் ஒரு வடிவமே; உண்மைநிலை பிறக்க அவை யாவும் நிறுத்தப்பட வேண்டும்.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி

மூலம்: Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20208053&format=html


ரு நாள் - 'நான்' என்னும் தன்னுணர்ச்சியிலும், 'எனது' என்னும் தன்னகங்காரத்திலும் பீடிக்கப்பட்ட மூவர் - என்னைச் சந்திக்க வந்தனர். முதலாமவர், உலகின் பந்தங்களையெல்லாம் உதறித் தள்ளிய சன்னியாசி. அடுத்தவர், சகோதரத்துவத்தில் மீளா நம்பிக்கையுடைய, கீழைநாட்டுச் (ஆசியா) சாத்திரங்களில் தேர்ந்த அறிஞர். மூன்றாமவர், அதிசயமான ஆனால் உண்மையான, பரிபூரணமான ஆனால் கற்பனைக் கனவேயன்றி, சாத்தியமே படாத ஒரு மனோராஜ்யத்தை மண்ணிலே மலரச்செய்ய தன்னை 'அர்ப்பணித்துக் கொண்ட' உழைப்பாளர். மூவருமே தங்கள் இலட்சியங்களிலும், அதற்கான பணிகளிலும் விடாமுயற்சியுடையவர்கள். தங்கள் பாதைகளை மறுப்போரைப் பொருட்படுத்தாத, ஏளனமாய் ஏறிடுகிற கண்ணோட்டம் உடையவர்கள். தங்களின் திட நம்பிக்கைகளால் வலுப்பெற்றவர்கள். தங்களின் நம்பிக்கைகளுடன் தங்களை ஆர்வத்துடன் பிணைத்துக் கொண்ட அவர்கள் ஒவ்வொருவரும், ஒருவகையில் தயவு தாட்சண்யம் பார்க்காதவர்கள்.

அந்த மூவரும் - முக்கியமாக மனோராஜ்யத்தை மண்ணிலே சமைக்கப் போகிறவர் - எதையும் இழக்கவும், மறுதலிக்கவும், தங்களையும் தங்கள் நண்பர்களையும் தங்களின் இலட்சியங்களுக்காகக் களப்பலி தரவும் தயாராக இருந்தனர். அவர்கள் - குறிப்பாக சகோதரத்துவத்திலே நம்பிக்கையுடையவர் - பார்ப்பதற்கு அன்பானவர்களாகவும், சாந்த சொரூபிகளாகவும் காட்சியளித்தனர். ஆனால், அவர்கள், எதையும் தாங்கும் இதயமும், 'மற்றவரைக் காட்டிலும் தன் நம்பிக்கையும் தானும் மேலானவர்கள்' என்னும் குணநலனைக் குறிக்கின்ற ஒரு வினோதமான சகிப்புத்தன்மையின்மையும் கொண்டிருந்தனர். தங்களின் இலட்சியங்களுக்காகத் தாங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாகவும், தங்களை அந்த இலட்சியங்களைக் கொண்டு செல்கிற தூதுவர்களாகவும், பரப்புகிற செய்தியாளர்களாகவும் அவர்கள் உணர்ந்தார்கள்; தீர்க்கமாக நம்பினார்கள்.

அடுத்த வாழ்க்கைக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருப்பதாக, சற்று ஆழமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது, சன்னியாசி சொன்னார். உலகின் எல்லா மாயைகளையும் கண்டுணர்ந்தும், லெளகீக வாழ்வினைக் கைவிட்டும் இருப்பதால், இந்த வாழ்க்கை தனக்கு அளிக்கப் பெரிதாய் ஏதுமில்லை என்றும் அவர் பிரகடனம் செய்தார். இந்த வாழ்க்கையில், தன்னிடம் சில தனிமனித பலவீனங்களும், மனத்தை ஒருமுகப்படுத்துவதிலே சில சிரமங்களும் இருப்பதாகவும் தொடர்ந்த அவர், அடுத்த வாழ்க்கையிலே தான் நிர்ணயித்துக்கொண்ட மேலான தவசி ஆகப் போவதாகவும் விவரித்தார்.

அடுத்த வாழ்க்கையில், வேறு ஒருவராக ஆகப் போகிறோம் என்கிற நம்பிக்கையிலேயே அவருடைய ஆர்வமும், உயிர்ப்பும் இருந்தன. நாங்கள் பேசிக்கொண்டிருந்த நேரம் எல்லாம், நாளையப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியுமே அவருடைய வலியுறுத்தல் இருந்தது. எதிர்காலத்தைச் சார்ந்தே எப்போதும் இறந்த காலம் இருக்க முடியும் என்றும், எதிர்காலத்தை வைத்தே இறந்த காலத்தை அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் சொன்னார். நிகழ்காலம் என்பது, எதிர்காலத்திற்கு இட்டுச் செல்லும் வழி மட்டுமே எனவும், நாளையின் பொருட்டே, இன்றின் ஆர்வமும் முக்கியவத்துவமும் என்றும் அவர் சொன்னார். நாளை என்று ஒன்று இல்லையென்றால், முயற்சிக்க வேண்டியதன் அவசியம் என்ன? வெந்ததைத் தின்று விதி வந்தால் மாள்கிற ஜந்துவாகவோ, மென்று தின்று - பின் அதை அசைபோட்டு - பின் மடிகிற பசுவாகவோ இருக்கலாமே?

வாழ்க்கை என்பது இறந்த காலத்திலிருந்து, தோன்றியவுடன் மறைகிற நிகழ்காலம் வழியே, எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும் தொடர்ந்த இயக்கம். எதிர்காலத்தில் நாம் விரும்பியவண்ணம் - ஞானதிருஷ்டியுடனும், வலிமையுடனும், கருணையுடனும் - ஆவதற்கு நிகழ்காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிகழ்காலமும் எதிர்காலமும் தற்காலிகமானவையே எனினும், எதிர்காலமே விடைகள் கொணரக் கூடியது. இன்று என்பது நாளைக்கான ஒரு படிக்கட்டே. எனவே, நிகழ்காலம் குறித்து நாம் பெரிதும் கவலைப்படவோ, பொருட்படுத்தவோ கூடாது. நாளை என்கிற இலக்கில் எப்போதும் தெளிவாக இருந்து, அதற்கான பயணத்தை வெற்றிகரமாக்கிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவர் தொடர்ந்தார். மொத்தத்தில், நிகழ்காலத்தைப் பற்றி அவர் பொறுமையிழந்திருந்தார்.

சகோதரத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தவரோ மெத்தப் படித்தவர். அவர் பேச்சே கவிதைபோல் ஜொலித்தது. அவருடைய அறிவும், அந்த அறிவை வெளிப்படுத்த அவர் தேர்ந்தெடுக்கும் நுட்பமான வார்த்தைகளூம், கேட்போரை ஆகர்ஷித்து மயக்குவன. அவரும் தன் எதிர்காலம் குறித்து, அதன் தெய்வீக அமைப்பு குறித்து, திட்டம் வைத்திருந்தார். தனிமனித விடுதலையே அவருடைய வேட்கை. அந்த வேட்கையும் அதற்கான தெய்வீக திட்டமும் அவர் இதயத்தை நிறைத்தன. அதன் பொருட்டு தன்னுடைய மாணாக்கர்களையெல்லாம் அவர் திரட்டிக் கொண்டிருந்தார். மரணம், அவர் நம்புகிற தெய்வீக அமைப்பின் அருகே ஒருவரைக் கொண்டு செல்கிறது என்பதால், மரணம் ஓர் அழகான விஷயம் என்றார் அவர். தன்னுடைய எதிர்கால தெய்வீக அமைப்பின் மீதான நம்பிக்கையே, அவலங்களும், துயரங்களும் நிறைந்த இந்த நிகழ்கால வாழ்வை சகித்துக் கொள்ள வைக்கிறது என்றும் அவர் சொன்னார்.

உலகை மாற்றுவதும், அழகாக்குவதுமே அவர் நோக்கம். சகோதரத்துவத்தின் மூலமே அது சாத்தியாகும் என்று, அதற்காக அவர் அயராது உழைத்து வந்தார். சகோதரத்துவம் என்கிற நோக்கம் - கொடுமைகள், ஊழல், தூய்மையற்ற தன்மை என்னும் பக்க விளைவுகள் கொண்டுவரக் கூடும் என்றாலும் - செய்ய வேண்டியவை நிறைய மீதமிருக்கிற உலகத்தில், அவை தவிர்க்க இயலாதவை என்றார் அவர். துரதிர்ஷ்டவசமாக, சில எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்த, சில கடினமான வழிகளையும் விளைவுகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். சிரமேற் கொண்டுள்ள பணியே தலையானது. ஏனெனில், அதுவே மனிதகுலத்திற்கு உதவக் கூடியது. அந்தப் பணியை எதிர்ப்போரையும், அதற்கு உதவாதவரையும் நாசூக்காகவும், கடுமையில்லாமலும் அப்புறப்படுத்த வேண்டும். அந்தப் பணியில் ஈடுபடுகிற அமைப்பே தலையானது; அதற்கு இடையூறுகள் வராவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு வேறு பாதைகள் உள்ளன என்று தொடர்ந்த அவர், தானும் தன் அமைப்பும் பின்பற்றுகிற வழியே அத்யாவசியமானது என்றும், அதற்கு தடையாய் இருப்போர் அவர்களுள் ஒருவர் ஆக முடியாது என்றும் சொன்னார்.

மனோராஜ்யத்தை பூமியிலே பிறக்கச் செய்யப் போகிறவரோ, இலட்சியவாதமும் நடைமுறைவாதமும் வினோதமான விகிதங்களிலே கலந்த கலவையாய் இருந்தார். அவருடைய வேதமும் விவிலியமும் பழையவை அல்ல, புதியன. அவர் பேசுகிற புதிய வேதத்திலே அவர் மனப்பூர்வமான நம்பிக்கை கொண்டிருந்தார். புதிய வேதத்தின் வரையறைபடி, எதிர்காலமும், எதிர்காலத்தின் விளைவும் எப்படி இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவருடைய திட்டம், குழப்பம் உண்டாக்குவதும், அமைப்பியல் ரீதியாக ஆயத்தப்படுத்துவதும், பின்னர் செயல்படுத்துவதுமேயாகும். ஊழல் நிறைந்ததும், தூய்மையற்றதுமான தற்போதைய உலகமும், நிகழ்காலமும் அழிக்கப்பட வேண்டியன; அந்த அழிவிலிருந்து புதியதோர் உலகம் படைக்கப்பட வேண்டும். தற்போதைய உலகம், எதிர்கால நல்லுலகிற்காகத் தியாகம் செய்யப்பட வேண்டும். நிகழ்கால மனிதரை விட, எதிர்கால மனிதரே முக்கியமானவர்.

எதிர்கால மனிதரை எப்படிச் செதுக்குவது என்று எங்களுக்குத் தெரியும். அந்த மனிதரின் அறிவையும், மனத்தையும், இதயத்தையும் செழுமையாக வடிவமைக்க எங்களால் முடியும். ஆனால், எந்த நல்லதை செயல்படுத்தவும், நாங்கள் அதிகார பீடத்தை அவசியம் கைப்பற்றியாக வேண்டும். எங்களையும் மற்றவர்களையும் வேள்வித் தீயாக்கி, புதியதோர் உலகத்தை மண்ணிலே படைப்போம். அதற்கு இடையூறாக இருப்பவர்களைக் கொல்வோம். ஏனெனில், எங்களுக்கு வழிகளும் பாதைகளும் முக்கியம் அல்ல. அடையப்போகிற இலக்கும், முடிவும் - எந்த வழியையும், எந்தப் பாதையையும் நியாயப்படுத்துகின்றன என்று தொடர்ந்தார் அவர்.

இறுதியான, நீடித்து நிலைக்கப் போகும் அமைதிக்காக, எந்த வன்முறையையும் பயன்படுத்தலாம். மேன்மையான, நிலைக்கின்ற தனிமனித விடுதலைக்காக, நிகழ்காலத்தில் கொடுங்கோல் ஆட்சியைத் தவிர்க்க இயலாது. எங்கள் கைகளுக்கு அதிகாரம் கிடைக்கும்போது, எல்லாவிதமான சட்டங்களையும், அடக்குமுறைகளையும் பயன்படுத்தி, வகுப்பு பேதங்களோ, வர்ணாசிரம தர்மங்களோ, மதப் பிரிவினைகளோ, மத குருமார்களோ இல்லாத உலகத்தைக் கொண்டு வருவோம் என்று அவர் அறிவித்தார். எங்களின் மையக் கருத்திலிருந்தும், மைய திட்டத்திலிருந்தும் நாங்கள் பிறழ மாட்டோம். ஆனால், எங்களின் செயல்பாடுகளும், பாதைகளும், சூட்சுமங்களும் நடைமுறைச் சிக்கல்களுக்கேற்ப மாறலாம். நாங்கள் திட்டமிட்டு, காய் நகர்த்தி, செயல்பட்டு, எதிர்கால மனிதருக்காக நிகழ்கால மனிதரை பலி கொடுப்போம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார் அவர்.

சன்னியாசி, சகோதரத்துவ மனிதர், மனோராஜ்யத்தின் சேவகர் ஆகிய மூவருமே நாளைக்காகவும், எதிர்காலத்திற்காகவும் வாழ்கின்றனர். உலகின் பொதுப் பார்வையில் அவர்கள் பெரும் பேராசைக்காரர்கள் அல்ல. அவர்களுக்கு பெரும் பட்டங்களோ, செல்வமோ, பதவிகளோ, அங்கீகாரமோ தேவையில்லை. ஆனாலும், ஒரு நுட்பமான, சாதுரியமான வழியிலே அவர்கள் பேராசைக் கொண்டவர்களே. உலகை மாற்றி அமைக்கப் போகிற ஒரு குழுவோடு தன்னை இணைத்துக் கொண்டு தன்னை அடையாளம் காண்பவர் மனோராஜ்யத்தின் மைந்தர். தனிமனித மேன்மையின் அபேஷகர் சகோதரத்துவத்தில் நம்பிக்கை உடையவர். அடுத்த வாழ்க்கையில், தன்னுடைய ஆன்மீக இலக்கை அடைய விரும்புபவர் சன்னியாசி. மூவருமே தாங்கள் எப்படி ஆக வேண்டும் என்பது பற்றியும், தங்களின் சாதனைகள், இலக்குகள் பற்றியும், தங்களின் விரிவாக்கம் குறித்துமே மூழ்கிப் போய் இருக்கிறார்கள். அவர்களது பேராசை - அமைதியையும், சகோதரத்துவத்தையும், மேலான இன்பத்தையும் தடுக்கிறது என்பதை அவர்கள் அறியவோ, உணரவோ இல்லை.

ஆசையும், ஆதிக்கமும் - அது எந்த வடிவில் இருப்பினும் - குழுவிற்காக, அமைப்பிற்காக, தனிமனித மோட்சத்திற்காக, ஆன்மீக சாதனைக்காக என்று எதன் பொருட்டு இருப்பினும் - அவை நிஜமான செயலைத் தாமதப்படுத்துகின்றன. ஆசை என்பது எப்போதும் எதிர்காலத்தைச் சேர்ந்தது. ஒன்றுக்காக ஆசைப்படுவது என்பது நிகழ்காலத்தில் செயலற்றுப் போவதே. நாளையை விட இன்றும், இப்போதும் பெரிதும் முக்கியத்துவம் உடையது. இன்றிலும் இப்போதிலும் எல்லாக் காலங்களும் உள்ளடங்கி உள்ளன. நிகழ்காலத்தைப் புரிந்து கொள்வதே, காலங்களிலிருந்து விடுபட வழியாகும். ஒன்றாக ஆகுதல் என்பதே காலத்தின், துயரத்தின் தொடர்ச்சி. ஒன்றாக ஆகுதல் என்பது ஒன்றாக இருத்தலை உள்ளடக்கியதல்ல. ஒன்றாக இருத்தல் என்பது நிகழ்காலத்தில் இருக்கிறது. ஒன்றாக இருத்தலே மாற்றத்தின் மாபெரும் வடிவம் ஆகும். ஒன்றாக ஆகுதல் என்பது வெறும் முரண்படுகிற தொடர்ச்சிதான். எனவே, அடிப்படையான மாபெரும் மாற்றம் என்பது நிகழ்காலத்திலும், ஒன்றாக இருத்தலிலுமே இருக்கிறது.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி 

மூலம்: Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20203307&format=html


ரு வினோதமான விதத்திலே வம்பு பேச்சுக்கும் (GOSSIP) கவலைக்கும் எவ்வளவு ஒற்றுமையிருக்கிறது! இரண்டுமே சஞ்சலமான - அமைதியற்ற - மனத்தின் விளைவுகள் ஆகும். அமைதியைத் தொலைத்து சஞ்சலத்திலே சிக்கிக் கொண்ட மனத்திற்கு தொடர்ந்து மாறுகிற தோற்றங்களும் வெளிப்பாடுகளும் செயல்களும் தேவைப்படுகின்றன; அது தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்க வேண்டும்; ஆக்ரமிக்கப்பட்டிருக்க வேண்டும்; நாள்தோறும் வளர்கிற கிளுகிளுப்பான கிளர்ச்சிகளையும், நிலைக்காத ஈடுபாடுகளையும் கொண்டிருக்க வேண்டும். வம்பு பேச்சானது மேற்சொன்ன எல்லாவற்றையும் உட்கொண்டிருக்கிறது.

செறிவின் (INTENSITY), கருமமே கண்ணான கருத்துடைமையின் (EARNESTNESS) நேரெதிர்க் கோட்பாடு வம்பு பேச்சாகும். தன்னிடமிருந்து தான் தப்பிக்கும் பொருட்டே ஒருவர் அடுத்தவரைப் பற்றி இனிமையாகவோ வன்மமாகவோ பேசுகிறார்; தப்பித்தல், அமைதியற்ற தன்மைக்குக் காரணமாகும். தப்பித்தல் - அதன் அடிப்படை இயல்பிலேயே அமைதியற்றதுதான். அடுத்தவர் விஷயங்களைப் பற்றிய சிரத்தையும் ஈடுபாடும் பெரும்பாலோர் மனங்களை ஆக்ரமிக்கிறது. அத்தகைய ஈடுபாடே - விதவிதமான பத்திரிகைகளையும், எண்ணற்ற நாளேடுகளையும் - அவற்றின் மலிவான கிசுகிசுக்களோடும், கொலைகள் பற்றிய வர்ணனைகளோடும், விவாகரத்துகள் பற்றிய விவரங்களோடும் என்றெல்லாம் அவர்களைத் தேடிப் பிடித்துப் படிக்க வைக்கிறது.

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றறிய நாம் ஆர்வமும் முனைப்பும் காட்டுவது போல, மற்றவர்களைப் பற்றிய எல்லா விஷயங்களையும் முழுமையாக அறிய நாம் ஆவலுறுகிறோம். இதனால் - பகட்டில் இச்சை கொள்கிற தன்மையும், வெளித்தோற்றம் கண்டு மற்றவரை மதிப்பிடுகிற குணமும், அதிகாரத்தை வழிபடுகிற போக்கும் - மெல்லிய நுண்ணிய வடிவிலோ அல்லது மோசமான அநாகரிகமான வடிவிலோ - உண்டாகிறது. அதனால், நாம் மேலும் மேலும் புறவயப்படுத்தப்பட்டு, புறத்தோற்றங்களுக்கு மயங்கி, அகத்திலே வெறுமையும் சூன்யமுமாகிப் போகிறோம். எந்த அளவிற்குப் புறவயப்படுத்தப் படுகிறோமோ அந்த அளவிற்கு கிளுகிளுப்பான கிளர்ச்சிகளும், மனத்தடுமாற்றங்களும் எழுகின்றன. இதனால் - மனமானது ஒருபோதும் அமைதியடையாமல் அலைகிறது. அமைதியற்ற மனமானது பெரிதினும் பெரிதைத் தேடவோ, கண்டுபிடிக்கவோ வலுவற்றதாகும்.

வம்பு பேச்சு அமைதியற்ற மனத்தின் மொழியே ஆகும். ஆனால், வெறுமனே மெளனமாக இருப்பது மனச்சாந்தியின் அடையாளமும் இல்லை. சலனமற்ற அமைதியானது (TRANQUILLITY) இச்சையை அடக்குகிற உபவாசமான புலனடக்கத்தாலோ, மறுதலிப்பினாலோ வருவதில்லை; அது, ஒவ்வொன்றைப் பற்றியும் 'இது என்ன' என்று புரிந்து அறிந்து கொள்வதால் வருகிறது. 'இது என்ன' என்பதனை அறியவும் புரிந்து கொள்ளவும் துரிதமான விழிப்பு நிலை தேவை. ஏனெனில், 'இது என்ன' என்பது மாறாத அசைவற்ற ஒன்றல்ல.

கவலைப்பட வில்லையென்றால், நம்மில் பெரும்பாலோர் தாம் உயிருடன் இல்லையென்று உணர்கிறார்கள்; ஒரு பிரச்சினையாலோ, ஒரு பிரச்சினையுடனோ வதைபடுவது நம்மில் பெரும்பாலோர்க்கு உயிர்த்தன்மையின் அடையாளம் ஆகும். பிரச்சினை இல்லாத வாழ்க்கையை நம்மால் கற்பனை செய்ய இயலாது. எந்த அளவிற்கு ஒரு பிரச்சினையால் ஆக்கிரமிக்கப்பட்டு அல்லலுறுகிறோமோ, அந்த அளவிற்கு விழிப்புடனும் எச்சரிக்கையாகவும் இருப்பதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். பிரச்சினையைக் குறித்து, எண்ணம் உருவாக்குகிற நிலையான இறுக்கமும் படபடப்பும் - மனத்தை மங்கச் செய்து - உணர்ச்சிகளை உணராது மரத்துப் போனதாகவும், களைப்புற்றுத் தளர்ச்சியடைந்ததாகவும் மாற்றுகிறது.

ஏன் இடைவிடாத முன்யோசனையிலும், கவலையிலும் மூழ்கித் தவிக்கிறோம் ? கவலை பிரச்சினையைத் தீர்த்து விடுமா? அல்லது, மனமானது அமைதியாக இருக்கும்போது, பிரச்சினைக்கான தீர்வு பிறக்குமா? சொல்லப்போனால், பெரும்பாலோர்க்கு அமைதியான மனம் என்பது அவர்களைப் பயமுறுத்துகிற விஷயமாகும்; அவர்கள் அமைதியாக இருப்பதற்கு அஞ்சுகிறார்கள். ஏனெனில், அமைதியாக இருந்தால், அவர்களால் அவர்களுக்குள்ளே என்னென்ன தேடி கண்டடைய இயலும் என்பதை அந்த வானமே அறியும்! எனவே, கவலை தடுக்கிறது. கண்டுபிடிக்கத் தயங்குகிற - கண்டுணரத் தயங்குகிற - மனமானது எப்போதும் தற்காப்பு என்கிற நிலையிலேயே நீடிக்கிறது. அமைதியற்றத் தன்மையே அதன் தற்காப்பாகும்.

நிலையான பிரயாசையாலும், தொடர்ந்த பழக்கத்தாலும், சூழ்நிலைகளின் தாக்கத்தாலும் - மனத்தின் சுயநினைவுமிக்க படலங்கள் - சலனத்தால் கிளர்ச்சியுற்றும், அமைதியற்றும் உழல்கின்றன. தற்காப்பின் இன்னொரு வடிவமான - இத்தகைய மேலெழுந்தவாரியான ஆழமற்ற செயல்களையும், தடுமாற்றங்களையும் - நவீன வாழ்க்கை மேலும் ஊக்குவிக்கிறது. தற்காப்பு என்பது புரிந்து கொள்வதையும், அறிவதையும் தடுக்கிற எதிர்ப்பு விசை ஆகும்.

கவலையானது, வம்பு பேச்சைப் போலவே, செறிவான, கண்ணும் கருத்துமான வெளித் தோற்றமுடையது. ஆனால், கூர்ந்து நெருக்கமாக கவனித்தால், கவலையானது கவர்ச்சியினால் பிறக்கிறது என்பதையும், கண்ணுங் கருத்துமுடைமையால் அல்ல என்பதையும் ஒருவர் அறியலாம். கவர்ச்சியானது தினமும் மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால்தான், வம்பு பேசுகிற, கவலை கொள்கிற விஷயங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. மாறுதல் என்பது வெறும் முரண்பட்ட தொடர்ச்சிதான். மனத்தின் அமைதியற்ற தன்மையைப் புரிந்து கொள்ளும்போதே, வம்பு பேச்சும் கவலையும் கைவிட்டுப் போகும். வெறும் புலனடக்கமோ, கட்டுப்பாடோ, ஒழுக்கமோ சலனமற்ற அமைதியைக் கொணர்வதில்லை. அவை, மனத்தை மேலும் சோர்வடையச் செய்து, மனத்தை உணர்வுகள் மரத்துப் போனதாகவும், குறுகிய வரையறைகளுக்குள் அடைக்கப்பட்டதாகவும் ஆக்கிவிடுகிறது.

குறுகுறுப்பான ஆர்வம் (CURIOSITY) புரிந்து கொள்வதற்கான வழி அல்ல. புரிந்து கொள்ளுதல் சுய-அறிவினால் பிறக்கிறது. எவர் துன்புறுகிறாரோ அவர் குறுகுறுப்பான ஆர்வமுடையவர் அல்ல. மேலும், யூகிக்கத் தூண்டும் அதனின் உட்குறிப்போடு வெறும் குறுகுறுப்பான ஆர்வமானது சுயஅறிவிற்கான தடைக்கல்லே ஆகும். யூகித்தலும் - குறுகுறுப்பான ஆர்வத்தைப் போலவே - அமைதியற்ற தன்மையின் அடையாளம் தான். எனவே, அமைதியற்ற மனமானது, அது என்னதான் வரமும் திறமும் பெற்றிருந்த போதிலும், புரிந்து கொள்வதையும், அறிவதையும், அதனால் பிறக்கிற பேரின்பத்தையும் அழித்துவிடுகிறது.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி

மூலம்: Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20205123&format=htmlநாங்கள் இரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். இரயில் தாமதமாக வந்து கொண்டிருந்தது. பிளாட்பாரம் அசுத்தமாகவும், இரைச்சலாகவும் காட்சியளித்தது. சீதோஷ்ணம் எரிச்சலூட்டக் கூடியதாக இருந்தது. நிறைய பேர், எங்களைப் போலவே, வரப் போகும் இரயிலுக்காகக் காத்துக் கிடந்தார்கள். குழந்தைகள் அழுத வண்ணமிருந்தன. ஒரு தாய் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டிக் கொண்டிருந்தார். பிளாட்பாரக் கடைக்காரர்கள் தங்கள் பொருட்களையும், டா, காபி போன்றவற்றையும் கூவி விற்றவாறிருந்தனர். மொத்தத்தில் அந்த இடம், சுறுசுறுப்பும், கூச்சலும், பரபரப்பும் மிக்கதாக இருந்தது. நாங்கள், எங்கள் காலடிகள் எழுப்பும் ஓசையைக் கேட்டபடியும், எங்களைச் சுற்றிய வாழ்க்கையின் வேகமான அசைவைக் கவனித்தபடியும் பிளாட்பாரத்தில் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தோம். ஒரு மனிதர் எங்களை நோக்கி வந்து, உடைந்து போன ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். எங்களை அவர் கவனித்தபடி இருந்ததாகவும், எங்களிடம் ஏதேனும் பேசுவதற்குத் தான் உந்தப்பட்டதாகவும் அவர் சொன்னார். ஓர் உன்னதமான உணர்வுடன், இனிமேல் தான் ஒரு தூய்மையான வாழ்வைத் தொடரப் போவதாகவும், அந்தக் கணத்திலிருந்து ஒருபோதும் புகை பிடிக்கப் போவதில்லை என்றும் அவர் உறுதியளித்தார். ரிக்க்ஷாக்காரக் குடும்பத்தைச் சார்ந்ததால், தான் படிக்கவில்லை என்றும் அவர் சொன்னார். ஒளி படைத்தக் கண்களும், இனிமையான புன்னகையும் கொண்டிருந்தார் அவர்.

சீக்கிரத்திலேயே இரயில் வந்தது. எங்கள் பெட்டியில் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் ஒரு நன்கறியப்பட்ட அறிஞர். அவருக்குப் பலமொழிகள் அத்துப்படியாயிருந்தன. அந்த மொழிகளிலிருந்து அவர் எளிதாக மேற்கோள்கள் காட்ட முடிந்தது. அவர் ஆண்டாண்டு கால அனுபவமும், புலமையும், வசதியும், பேரவா நிறைந்த நோக்கங்களும் கொண்டவராயிருந்தார். அவர் தியானத்தைப் பற்றிப் பேசினார். ஆனால், அவர் தன் சொந்த அனுபவத்திலிருந்து பேசவில்லை என்கிற எண்ணத்தை அவர் பேச்சு உண்டாக்கியது. அவர் கடவுள் புத்தகங்கள் போதிக்கும் கடவுள். வாழ்க்கையைப் பற்றிய அவர் மனோபாவம் மரபார்ந்ததாகவும், ஓர் அமைப்பிற்கு இசைந்து நடக்கக் கூடியதாகவும் இருந்தது. இளமையில் நடக்கிற, நிச்சயிக்கப்பட்ட திருமணத்திலும், கறாரான ஒழுக்க விதிகளைப் பின்பற்றும் வாழ்க்கையிலும் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். தன்னுடைய ஜாதி மற்றும் அந்தஸ்து குறித்தும், ஜாதிகளுக்கிடையேயான அறிவின் திறம் குறித்தும் பிரக்ஞை மிக்கவராய் அவர் பேசினார். ஒரு வினோதமான முறையிலே தன்னுடைய புலமையிலும், அந்தஸ்திலும் ஜம்பமும், ஆடம்பரமும் கொள்பவராக இருந்தார் அவர்.

சூரியன் மறைய ஆரம்பித்திருந்த அந்தி நேரம். இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது. கால்நடைகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தன. அதனால் கிளம்புகிற பொன்னிற தூசித் துகள்கள். தொடுவானத்தில் கருத்த பெருமேகங்கள் திரண்டிருந்தன. தூரத்தே ஓர் இடிமுழக்கம் கேட்டது. பச்சை வயல்கள் பார்ப்பதற்கு எவ்வளவு பரவசமானவை! வளைந்து நெளிந்து போகிற மலையின் மடிப்பிலே நிற்கிற அந்தக் கிராமம்தான் எவ்வளவு அழகாய் இருக்கிறது! இருள் கவிந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய நீல மான் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. கர்ஜித்தபடி செல்கிற இரயிலை அது ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அறிவு என்பது இரண்டு இருள்களுக்கிடையே பாயும் ஓர் ஒளிக்கீற்று ஆகும். ஆனால், அறிவானது அந்த இருளுக்கு மேலேயோ, அந்த இருளைக் கடந்தோ போக இயலாது. அறிவு நிபுணத்துவத்திற்கு அத்யாவசியமானது - எஞ்சினுக்குக் கரியைப் போல. ஆனால், அது அறிவுக்கெட்டாத நிலையை (UNKNOWN) எட்டித் தொட இயலாது. அறிவுக்கெட்டாத நிலையை, அறிவென்னும் வலை வீசிப் பிடிக்க இயலாது. அறிவுக்கெட்டாத நிலை உண்டாக, அறிவு புறந்தள்ளி வைக்கப்பட வேண்டும். ஆனால், அறிவை அப்படிப் புறந்தள்ளி வைப்பது எவ்வளவு கடினமானது!

நாம் இறந்த காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய எண்ணம் இறந்த காலத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கப் படுகிறது. இறந்த காலம், அறிந்த நிலை (KNOWN) ஆகும். இறந்த காலத்தின் பிரதிபலிப்பு, எப்போதும் நிகழ்காலத்தை - அறிவுக் கெட்டாத நிலையை - முழுமையாக மறைத்துக் கொண்டிருக்கிறது. எதிர்காலம் என்பது, இறந்த காலமானது தன்னை நிச்சயமற்ற நிகழ்காலத்தின் வழியே உந்திச் செல்வது ஆகும். இந்தப் பிளவு, இந்த இடைவெளி - தொடர்ச்சியாக இல்லாமல், விட்டு விட்டு எரிகிற, அறிவு என்கிற விளக்கினால் நிறைக்கப்பட்டு, நிகழ்காலத்தின் வெறுமை மூடப்படுகிறது. ஆனால், அந்த வெறுமையே வாழ்வின் அதிசயத்தைத் தாங்கி நிற்கிறது.

அறிவு என்கிற போதைக்கு அடிமையாவது, மற்றவற்றிற்கு அடிமையாவது போலத்தான். அது வெறுமை, தனிமை, ஏமாற்றம் என்கிற பயத்திலிருந்தும், உபயோகமற்றவராகி விடுவோமோ என்கிற பயத்திலிருந்தும் தப்பிக்கச் செய்கிறது. அறிவின் வெளிச்சமென்னும் நுண்ணிய மூடியின் கீழ் உறையும் இருளை மனம் ஊடுருவ முடியாது. மனமானது இந்த அறிவுக்கெட்டாத நிலை குறித்துக் கலங்கி அஞ்சுகிறது. எனவே, அது அறிவு, கோட்பாடுகள், எதிர்பார்ப்பு, கற்பனை ஆகியவற்றுள் தன்னை நுழைத்துத் தப்பித்துக் கொள்கிறது. ஆகவே, இந்த அறிவானது, அறிவுக்கெட்டாத நிலையை அறியவும் புரிந்து கொள்ளவும் உதவாத தடைக்கல்லே ஆகும். அறிவைப் புறந்தள்ளி வைப்பது, பயத்தை வரவேற்பது போலாகும். அதே போல், அறிவுணர்வின் உபகரணமாகத் திகழும் மனத்தை மறுதலிப்பது, துயரத்திற்கும், உணர்வுகள் பொங்குகிற மகிழ்விற்கும் இடம் கொடுப்பதாகும். ஆனால், அறிவைப் புறந்தள்ளி வைப்பது அவ்வளவு சுலபமல்ல. அறிவிலியாக (IGNORANT) இருத்தல், அறிவிலிருந்து விடுதலை பெற்ற நிலை அல்ல. அஞ்ஞானம் (IGNORANCE) என்பது சுய-விழிப்புணர்வு நிலையின் பற்றாக்குறையாகும். சுயத்தை - நான் என்கிற நிலையை - புரிந்து கொள்கிற வழிகள் சொல்லவில்லையெனில், அறிவும் கூட அஞ்ஞானமே. சுயத்தை - நான் என்கிற நிலையைப் - புரிந்து கொள்வதே அறிவிலிருந்து விடுதலை ஆகும்.

சேகரிக்கிற இயக்கத்தை, ஒன்று திரட்டுகிற - அறிவை விருத்தி செய்கிற நோக்கத்தைப் புரிந்து கொள்ளும்போதே அறிவிலிருந்து விடுதலை கிடைக்கும். ஒன்றைக் குவித்துச் சேகரித்து வைக்கிற ஆசை, பாதுகாப்பான நிலைக்கு, நிச்சயமான நிலைக்கு ஆசைப்படுவதாகும். அடையாளம் மூலமாகவும், கண்டித்தல் மற்றும் நியாயப்படுத்துதல் மூலமாகவும் 'நிச்சயமானத் தன்மை 'க்காக நாம் கொள்கிற ஆசையானது பயத்தின் விளைவாகும். அது எல்லா ஒத்திசைவையும் அழித்து விடுகிறது. எந்த இடத்தில் ஒத்திசைவு இருக்கிறதோ, அதற்கு சேகரித்து வைக்கிற, குவித்து வைக்கிற இயக்கம் தேவையில்லை. ஒன்று திரட்டுதல் - சேகரித்தல் - ஒரு சுய-உறையிலிடப்பட்டத் தடையேயாகும். அறிவு இத்தடையை மேலும் வலுவுள்ளதாக்குகிறது. அறிவை வழிபடுவது ஒருவகையான ஆராதனையே. அது வாழ்வின் முரண்பாடுகளையும், துயரங்களையும் கழுவிக் களையாது. அறிவு என்கிற பாசாங்கு அவற்றை மறைக்கலாம். ஆனால், ஒருபோதும் அது என்றும் வளர்ந்து கொண்டிருக்கும் குழப்பம் மற்றும் துயரத்திலிருந்து விடுதலை அளிக்காது. மனத்தின் வழிகள் உண்மைக்கும், மகிழ்விற்கும் அழைத்துச் செல்வதில்லை. அறிவுடையவராய் ஆகுதல் என்பது அறிவுக்கெட்டாத நிலையை மறுதலிப்பதாகும்.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி மூலம்: Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20206022&format=htmlயரே - மலைகளின் மீது நாள் முழுதும் மழை பொழிந்து கொண்டிருந்தது. மழையென்றால் தூவானமோ, இதமும் மிருதுவுமான மழையோ அல்ல. வெள்ளம் பிரவகித்து ஓட - சாலைகளைக் கழுவிச் செல்கிற, மண்ணரித்து ஓடுவதால் மலைச்சரிவின் மரங்களை வேருடன் பெயர்க்கிற, நிலச் சரிவுகளை உண்டாக்குகிற, திடிரெண்டு 'கிறீச்'சிட்டு நுரைபுரண்டோடி சில மணி நேரங்களில் மெளனமாகிப் போகிற நீரோடைகளை உண்டாக்குகிற - 'சோ'வெனக் கொட்டுகிற அடைமழை. ஒரு சிறு பையன் - மேனி முழுவதும் ஈரத்தில் அமிழ்ந்து போகிற அளவிற்கு நனைந்த பின்னும் - மழைநீர் தேங்கி ஓடுகிற ஒரு சிறு குட்டையில் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் - தன் தாயின் உரத்த மற்றும் கோபம் மிகுந்த கட்டளைகளுக்குச் சற்றும் செவி சாய்க்கவில்லை. அந்த மண் ரோடிலே நாங்கள் மேலேறி கொண்டிருந்தபோது, ஒரு பசு கீழிறங்கிக் கொண்டிருந்தது. மேகங்கள் மடை திறந்து கொட்டி, நிலத்தை நீரால் மூடுவது போலிருந்தது. நாங்கள் முற்றிலும் நனைந்து போயிருந்தோம். ஆதலால், எங்கள் ஆடைகளின் பெரும்பகுதியைக் கழற்றி விட்டோம். வெற்று மேனிக்கு மழை பரவசமாக இருந்தது. இன்னும் உயரே, மலை உச்சிக்கருகில் அந்த வீடு இருந்தது; நகரம் கீழே விழுந்து கிடந்தது. மேற்திசையிலிருந்து வீசிய பலத்த காற்று, மேலும் கருமையையும், வெகுண்ட மேகங்களையும் கொணர்ந்தது.

அறையினுள்ளே தீ எரிந்து கொண்டிருந்தது. நிறைய பேர் விவாதிப்பதற்காகக் காத்திருந்தார்கள். ஜன்னல்களின் மீது அறைந்து மோதிய பின் விழுந்த மழை நீர், நிலத்தில் ஒரு பெரிய குழியை உண்டாக்கியிருந்தது. புகைபோக்கியின் வழியாகக் கூட கீழே விழுந்த மழைநீர் - தீயை அங்குமிங்கும் அலைக்கழித்து, தெறித்து தெறித்து எரிய வைத்தது.

அவர் ஒரு புகழ்பெற்ற அரசியல்வாதி; சொல்வதைச் செய்பவர்; மிகவும் நேர்மையானவர்; பழுத்த தேசபக்தர். குறுகிய மனப்பான்மையோ சுயநலமோ இல்லாத அவரின் குறிக்கோள்கள் அவருக்காக அல்ல - அவரின் கொள்கைகளுக்காகவும், மக்களுக்காகவுமே. அவர் கேட்போரை மயக்குகிற வெறும் வார்த்தைச் சித்தரோ, வாக்கு வங்கியோ அல்ல. அவருடைய இலட்சியங்களுக்காக அவர் துன்புற்றிருக்கிறார்; ஆனால், அரிதான வகையில், அவர் மனத்திலே கசப்போ வஞ்சமோ இல்லை. பார்ப்பதற்கு ஓர் அரசியல்வாதி என்பதை விட, அவர் ஓர் அறிஞராக அதிகம் தெரிந்தார். ஆனால், அரசியல் அவர் உயிர்மூச்சாக இருந்தது. அவர் கட்சி - அவர் கட்டளைக்கு ஒருவிதமான பயத்துடன் கீழ்படிந்தது. அவர் கனவுகள் காண்பவர். ஆனால், அரசியலுக்காக அவர் அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டார். புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான அவர் நண்பரும் அவருடன் இருந்தார். அரசாங்கத்தின் கணக்கற்ற வருமானத்தைப் பகிர்ந்தளிப்பது, செலவளிப்பது குறித்து அந்த நண்பர் சிக்கலானக் கோட்பாடுகளையும், விவரங்களையும் கொண்டிருந்தார். அவர் இடதுசாரி மற்றும் வலதுசாரிப் பொருளாதார சிந்தனைகளுடன் பரிச்சயம் கொண்டவராகக் காட்சியளித்த போதிலும், மனிதகுலத்தின் பொருளாதார விடுதலைக்கு அவருக்கென்று சொந்தக் கோட்பாடுகள் இருந்தன. அவர் 'திறனறிந்து சொல்லுக சொல்லை' என்பது போல சரளமாகவும், தயக்கமின்றியும், தெளிவாகவும் பேசினார். இருவரும், கேட்பார்ப் பிணிக்கும் தகையவராய், கேளாரும் வேட்ப மொழிந்து - பெருங்கூட்டத்தை வசீகரப்படுத்தினர்.

செய்தித்தாள்களிலும், பத்திரிகைகளிலும் - அரசியலுக்கும், அரசியல்வாதிகளின் பேச்சிற்கும், அவர்களின் செயல்களுக்கும் - கொடுக்கப்படுகிற இடத்தை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? நிச்சயமாக, மற்ற செய்திகளும் இடம் பெறுகின்றன. ஆனால், அரசியல் தொடர்புடைய செய்திகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கை எல்லா முக்கியத்துவமும் பெற்றதாக மாறிவிட்டது. புறவயமான வெளிச் சூழ்நிலைகள் - வசதி, பணம், பதவி மற்றும் அதிகாரம் ஆகியவை - நம்மை ஆள்வதாகவும், நம் இருத்தலை நிர்ணயிப்பனவாகவும் மாறிவிட்டன. புறவயமான வெளிக் காட்சிகள் - பட்டங்கள், பிரத்யேக ஆடைகள், மரியாதைகள், கொடிகள் ஆகியவை - மேலும் மேலும் முக்கியத்துவம் பெற்றவையாக மாறி, வாழ்வின் மொத்த இயக்கம் (TOTAL PROCESS OF LIFE) மறக்கப்பட்டு அல்லது வேண்டுமென்றே வேண்டாமென்று தள்ளி வைக்கப்பட்டு விட்டது. சமூக அல்லது அரசியல் செயல்பாடுகளில் ஒருவர் விழுவதும் அல்லது ஒருவரை தள்ளுவதும் வாழ்க்கையை அதன் மொத்தத்தில் முழுமையாகப் புரிந்து கொள்வதைவிடவும் மிகவும் சுலபமானது. ஒழுங்குபடுத்தப்பட்ட எண்ணத்துடன் - அரசியல் அல்லது மதரீதியான செயல்பாடுகளுடன் இணைந்திருத்தல் - அற்பமும் இழிவும் நிறைந்த தினசரி வாழ்விலிருந்து ஒரு மரியாதைக்குரிய தப்பித்தல் அளிக்கிறது. சிறிய இதயத்துடன் நீங்கள் பெரிய விஷயங்களைப் பற்றியும், பிரசித்திப் பெற்ற தலைவர்களைப் பற்றியும் பேசலாம். நீங்கள் உங்களின் ஆழமற்றத்தன்மையை, உலக வாழ்க்கை குறித்த எதுகை-மோனைகளுடன் மறைத்துக் கொள்ளலாம். உங்களின் அமைதியற்ற மனம் - சந்தோஷத்துடனும் உலகம் தருகிற உற்சாகத்துடனும் நிலை கொண்டு - புதிய அல்லது பழைய மத சாஸ்திரங்களின் கொள்கைகளைப் பரப்பலாம்.

அரசியல் என்பது விளைவுகளின் சமரசம் ஆகும். நம்மில் பெரும்பாலோர் விளைவுகள் குறித்து கவலை கொண்டிருக்கிறோம். புறமானது ஆதிக்கம் செலுத்தக் கூடிய முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. விளைவுகளைச் சாதுரியமாகக் கையாளுவதன் மூலம் (BY MANIPULATING EFFECTS), சட்டத்தையும் அமைதியையும் கொணர நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. வாழ்க்கை என்பது ஒரு முழுமையான இயக்கம் - அகமும் அதேபோல் புறமும். புறம் நிச்சயம் அகத்தைப் பாதிக்கிறது. ஆனால், அகமானது எப்போதும் புறத்தைப் புறந்தள்ளி மேற்செல்கிறது. நீங்கள் யார் என்பதை, நீங்கள் புறத்தின் வழி வெளிக் கொணர்கிறீர்கள். புறத்தையும் அகத்தையும் தனித்தனியே பிரித்து சீலிடப்பட்ட அறைகளுக்குள் அடைத்துவிட முடியாது. ஏனெனில், அவையிரண்டும் எப்போதும் நிலையாக ஒன்றுடன் ஒன்று உறவாடி வருபவை. ஆனால், அகவயமான தாகங்கள், ஒளிந்துள்ள நோக்கங்கள், தேடல்கள் - எப்போதும் மற்றவற்றைவிடவும் மிகவும் வலிமையானவை. வாழ்க்கையானது அரசியல் அல்லது பொருளாதாரச் செயல்களைச் சார்ந்து அமைவதில்லை. மரமானது இலையும் கிளையும் மட்டுமே அல்ல என்பது போல், வாழ்க்கை என்பது வெறும் புறவயமான வெளிக்காட்சி அல்ல. வாழ்க்கை என்பது ஒரு முழுமையான இயக்கம் - அதன் அழகானது அதன் ஒருமைப்பாட்டில் (INTEGRATION) கண்டடையப்பட வேண்டும். இந்த ஒருமைப்பாடு அரசியல் மற்றும் பொருளாதார சமரசங்கள் என்னும் மேலோட்டமான நிலையிலே நிகழ்வதில்லை. அது காரணங்களுக்கும், விளைவுகளுக்கும் அப்பால் காணப்பட வேண்டும்.

நாம் காரணங்களுடனும், விளைவுகளுடனும் விளையாடுகிற காரணத்தால் - நாம் அவற்றை ஒருபோதும் தாண்டிச் செல்வதில்லை - வாய் வார்த்தைகளில் தவிர; அதனால், நமது வாழ்க்கை ஒன்றுமற்ற வெறுமையாய், முக்கியத்துவம் ஏதுமற்றதாய் இருக்கிறது. இந்தக் காரணத்தினாலேயே, நாம் அரசியல் உத்வேகங்களுக்கும், மதரீதியான உணர்வுகளுக்கும் அடிமைகளாக மாறிப்போய் இருக்கிறோம். நம்மை உண்டாக்குகிற பல்வேறு இயக்கங்களின் பரிபூரண ஒருமைப்பாட்டில்தான் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. இந்த ஒருமைப்பாடு எந்தக் கொள்கையின் மூலமாகவோ, அரசியல் அல்லது மதரீதியான என்று எந்த ஒரு தலைமையைப் பின்பற்றுவதன் மூலமாகவோ வருவதில்லை. அது பரந்த மற்றும் ஆழமான விழிப்புணர்வு நிலையின் மூலமே வருகிறது. இந்த விழிப்புணர்வு நிலை - மனத்தின் மேலோட்டமான மறுமொழிகளில் மயங்கி நின்று விடாமல், அதன் ஆழமானப் படலங்களுக்கிடையே நிச்சயம் ஊடுருவி உள்செல்ல வேண்டும்.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி 


மூலம்: Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20207073&format=html


திரேயிருந்த வெள்ளைச் சுவரின் மீது வெயில் விழுந்து பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் கண் கூசுகிற வெளிச்சத்தில், அங்கே இருந்தவர்களின் முகங்கள் தெளிவற்றும் மங்கலாகவும் தெரிந்தன. தாயின் அனுமதியோ, வழிகாட்டலோ இல்லாமல், ஒரு சிறு பெண் குழந்தை என் அருகே வந்து அமர்ந்து கொண்டார். பின், அக்குழந்தை விரிந்த கண்களுடன், 'இங்கே என்ன நடக்கிறது' என்கிற வினா கலந்த ஆச்சரியத்துடனும் சுற்றுமுற்றும் பார்த்தார். அவர், புதிதாய் நீராடி, நல்லுடையுடுத்தி, சிகையில் மலர்கள் சூடி, மிகவும் அழகாய் இருந்தார். எல்லாக் குழந்தைகளையும் போலவே, சுற்றி நடப்பதையெல்லாம் உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டும், ஆனால் எதையும் மனதில் பதிய வைத்துக் கொள்ளாமலும் இருந்தார். ஒளி படைத்த அவர் கண்கள் - அழுவதா, சிரிப்பதா, மகிழ்வுடனும் விளையாட்டுணர்வுடனும் குதிப்பதா என்று - என்ன செய்வது என்பதறியாமல் யோசித்தன. மாறாக, அவர் என் கையை எடுத்து, உள்ளங்கையையும் விரல்களையும் சுவாரஸ்யமான ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில், தன்னைச் சுற்றி இருந்தவர்களையும், தன்னையும் மறந்தவராய், ஓய்வாக என் மடியில் தலைவைத்துத் தூங்க ஆரம்பித்தார். அவர் சிரம் அழகான வடிவுடனும், நேர்த்தியாகவும் இருந்தது. குறையேதும் இல்லாத தூய்மையும், அழகும் கொண்டவராய் இருந்தார் அப்பெண் குழந்தை. ஆனால், அந்த அறையிலிருந்த மற்றவர்களைப் போலவே, அக்குழந்தையின் எதிர்காலமும், குழப்பமானதாகவும், துன்பமயமானதாகவும் இருக்கும். அக்குழந்தைக்கு நேரப்போகும் முரண்பாடுகளும், துயர்களும் - எதிரே இருந்த சுவரின் மீது விழுந்து கொண்டிருந்த வெயில் போல - தவிர்க்க இயலாதவை. ஏனெனில், அவர் பெறப்போகும் கல்வியும், அவரை ஆட்கொள்ளப் போகும் தாக்கங்களும் - வேதனையிலிருந்தும், வலியிலிருந்தும், துயர்களிலிருந்தும் விடுதலைப் பெறத் தேவையான நுண்ணறிவு அவருக்குக் கிடைக்காவண்ணம் தடுத்துவிடும். புகையில்லாத தீயின் சுடர் போன்ற அன்பு, இவ்வுலகில் மிகவும் அரிதானது. அன்பு என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிற புகையே - நாம் மூச்சடைத்துத் திணறும்படி, சர்வசக்தியுடன் - எங்கும் கவலையையும், கண்ணீரையும் கொண்டுவருகிறது. அந்தப் புகையினூடே தீச்சுடர் தெரிவதில்லை. புகையானது எங்கும் விரவி வியாபிக்கும்போது, தீயின் சுடர் அணைந்து போகிறது. அன்பு என்கிற தீச்சுடர் இன்றி வாழ்க்கை மழுங்கியும் சோர்ந்தும் போகிறது. அன்பெனும் சுடரின்றி, வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை. ஆனால், இருள் சூழ்ந்த புகையினூடே, தீயின் சுடர் இருக்கவோ, நிலைக்கவோ இயலாது. புகையும் சுடரும் இணைந்தும் பிணைந்தும் வாழ இயலாது. தெளிந்த தீச்சுடர் ஒளியுமிழ, புகை நிறுத்தபப்ட வேண்டும். இப்படிச் சொல்கிற காரணத்தால், தீச்சுடரானது புகைக்கு எதிரி இல்லை. தீச்சுடருக்கு எதிரிகள் இல்லை. புகையானது தீச்சுடர் அல்ல; அங்ஙனமே, புகையானது சுடரின் இருப்பைச் சொல்கிற அடையாளமும் அல்ல. ஏனெனில், புகையிலிருந்து முற்றிலும் விடுபட்டதே சுடராகும்.

'அன்பும் வெறுப்பும் இணைந்திருக்க இயலாதா? பொறாமையானது அன்பினைச் சொல்லுகிற அடையாளம் தானே! நாம் கைகோத்து மகிழ்கிறோம்; அடுத்த நிமிடமே வசவுகள் பகிர்கிறோம்; கடுமொழிகளால் பரஸ்பரம் சுட்டுக் கொள்கிறோம்; ஆனால், விரைவிலேயே எல்லாம் மறந்து, ஆரத் தழுவி ஆலிங்கனம் செய்து கொள்கிறோம். நாம் சண்டையிடுகிறோம்; பின்னர் முத்தமிட்டு சமரசமும் சமாதானமும் ஆகிவிடுகிறோம். இவையெல்லாம் அன்பும், அன்பின் சமிக்ஞைகளூம் இல்லையா! பொறாமை என்பதே அன்பினை வெளிப்படுத்தப் பிறக்கிற ஒரு மொழிதானே! இருளும் ஒளியும் போல, பொறாமையும் அன்பும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்ததுதானே! துரிதமான கோபமும், இச்சை மொழிகள் நிறைந்த கொஞ்சலும் அன்பின் முழுமை இல்லையா? வெள்ளம் பெருக்கெடுத்து, முரட்டுத்தனமாய்ப் பாய்கின்ற ஆறுதான், சலனமின்றி நடக்கின்ற நதியாகவும் இருக்கிறது. இரவில், நிழலில், ஒளியில் என்று எந்தச் சூழலில் பாய்ந்தாலும், நடந்தாலும் அது நதிதானே! இவையெல்லாம் தானே நதியின் இயல்பும் அழகும் ஆகும்!'

அன்பு என்றும் நேசம் என்றும் நாம் அழைக்கிறோமே, அதுதான் என்ன? இந்தப் பொறாமையும், காமமும், கடுமொழிகளும், கொஞ்சலும், கைகோத்துக் கொள்ளுவதும், பிணங்கிச் சண்டையிடுவதும், பின்னர் இணங்கிச் சமரசம் ஆகுவதும் நிறைந்த தளமும் புலமும் தானா அன்பு? அன்பு என்கிற பெயரால், நாம் செய்கிற நிஜங்களும், செய்கைகளும் இவை. கோபமும், கொஞ்சலும் - அன்பு என்கிற புலத்தில் - நிதந்தோறும் நாம் காணுகிற நிதர்சனங்கள். கோபமும் கொஞ்சலும் சார்ந்த பல்வேறு வகைப்பட்ட செய்கைகளுக்கிடையே ஓர் உறவையும் தொடர்பையும் உருவாக்க நாம் விரும்புகிறோம். அல்லது, இத்தகைய செய்கைகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பொருள் காண முயல்கிறோம். ஒரு தளத்தில் நிகழ்கிற ஒரு செய்கையை வைத்து, அதே தளத்தில் நிகழ்கிற மற்றொரு செய்கையை கண்டிக்கவோ, நியாயப்படுத்தவோ முயல்கிறோம். அல்லது, ஒரு தளத்தில் நாம் காணுகிற நிதர்சனத்தோடு, அதே தளத்திலோ, அத்தளத்திற்கு அப்பாற்பட்டோ இருக்கிற மற்றொரு நிதர்சனத்தைத் தொடர்புறுத்தி இரண்டுக்குமிடையே ஒரு பொது உறவினை உண்டாக்க முயற்சிக்கிறோம். ஒவ்வொரு செய்கையையும், ஒவ்வொரு நிஜத்தையும் தனித்தனியே எடுத்து ஆராயாமல், அவற்றுக்கிடையே ஒரு பரஸ்பர உறவினையே நாம் உருவாக்க விரும்புகிறோம். நாம் ஏன் அப்படிச் செய்கிறோம்? அதே தளத்திலோ, அத்தளத்திற்கு அப்பாற்பட்டோ உள்ள மற்றொரு செய்கையை ஊடகமாகப் பயன்படுத்தாத போதே, ஒரு செய்கையை, அந்தச் செய்கையின் நிஜப் பொருளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதே புலத்திலோ, அதற்கு அப்பாற்பட்டோ உள்ள மற்றொரு செய்கையை, புரிந்து கொள்வதற்கான ஊடகமாகப் பயன்படுத்தும்போது, அது முரண்பாடுகளையும், குழப்பத்தையுமே உருவாக்குகிறது. ஆனாலும், நாம் ஏன் ஒரு தளத்தின் பெயரால், பல்வேறு செய்கைகளையும் அவற்றின் நிஜத்தையும் ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்? ஒரு செய்கையின் முக்கியத்துவத்தை வைத்து, மற்றொரு செய்கையை விளக்கவோ, ஈடு செய்யவோ ஏன் முயல்கிறோம்?

'நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைக் கிரகித்துக் கொள்ளத் தொடங்குகிறேன். ஆனால், நாம் ஏன் அப்படிச் செய்கிறோம்?'

நாம் ஒரு செய்கையை, அதன் உண்மையை, எண்ணம் என்கிற திரைமூலமாகவோ, நினைவு என்கிற வடிகட்டி மூலமாகவோ புரிந்து கொள்கிறோமா? உங்களுடன் கைகோத்துக் கொண்டிருந்த காரணத்தால், நான் பொறாமையைப் புரிந்து கொள்கிறேனா? பொறாமை நிஜமானது என்பது போல, உங்களுடன் கைகோத்துக் கொண்டிருந்ததும் நிஜம். ஆனால், பொறாமையையும், அதன் இயக்கத்தையும் உங்களுடன் கைகோத்துக் கொண்டிருந்ததை நினைவில் வைத்திருக்கிற காரணத்தால் நான் புரிந்து கொள்கிறேனா? நினைவானது புரிந்து கொள்வதற்கான உபகரணமா? நினைவு ஒப்பிடுகிறது; நினைவு மாறுகிறது; நினைவு மாற்றுகிறது; நினைவு கண்டிக்கிறது; நினைவு நியாயப்படுத்துகிறது; நினைவு அடையாளம் காணுகிறது; ஆனால், நினைவு எதையும் புரிந்துகொள்வதற்கு உதவ முடியாது. அன்பு என்கிற தளத்தில் நம்முடைய செய்கைகளையும், அவற்றின் நிஜத்தையும் முன்னறுதியிட்ட எண்ணங்களுடனும், முடிவுகளுடனுமே நாம் அணுகுகிறோம். பொறாமையை, எந்த முன்முடிவும் இன்றி, அதன் இயல்பில் எடுத்துக் கொண்டு நாம் அமைதியாகக் கூர்ந்து கவனிப்பதில்லை. ஆனால், பொறாமையை, பொறாமை சார்ந்த செய்கையை, நம்முடைய வசதிக்கும், முடிவுக்கும் ஏற்ப திரித்துப் பொருள் காண விரும்புகிறோம். பொறாமையை, அதன் இயக்கத்தை, நிஜத்தை நாம் புரிந்து கொள்ள விரும்பாததே, நம்மின் இந்த அணுகுமுறைக்குக் காரணம் ஆகும். ஏனெனில், பொறாமை உண்டாக்குகிற கிளர்ச்சியும், எழுச்சியும் கூட கொஞ்சலால் பிறக்கின்ற கிளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் சமம்; ஆனால், பொறாமையினால் பிறக்கின்ற கிளர்ச்சியானது, பொறாமை கொண்டுவருகிற வலியும், அசெளகரியமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் நாம் விரும்புகிறோம். அதனால், அன்பு என்கிற தளத்திலே, முரண்பாடுகளூம், குழப்பமும், பகையும் பிறக்கிறது. எனவே, அன்பானது என்ன ?அன்பானது ஓர் எண்ணமா, பாவனையா, கிளர்ச்சியா, தூண்டுதலா அல்லது பொறாமையா?

'உண்மையானது மாயையையும் சேர்த்தது தானே! இருளானது தன்னுள்ளே ஒளியை உள்ளடக்கியதுதானே! நம்முடைய கடவுளர்கள் கூட இத்தகைய செய்கைகளால்தானே தளைக்கப்பட்டுள்ளனர்?'

இவையெல்லாம், செல்லத்தகாத, வெறும் எண்ணங்களும், அபிப்ராயங்களூம், தீர்மானங்களுமே ஆகும். இத்தகைய எண்ணங்கள், உண்மைநிலையை உள்ளடக்குவதோ, வெளிப்படுத்துவதோ இல்லையாதலால், பகையையே வளர்க்கின்றன. வெளிச்சம் இருக்கிற இடத்திலே இருள் இல்லை. இருளானது ஒளியை ஒளித்து வைக்க இயலாது. இருளானது ஒளியை உள்ளடக்கியது என்று சொன்னால், அங்கே வெளிச்சமே இல்லை என்று பொருள். பொறாமை இருக்கிற இடத்திலே அன்பு இல்லை. முனஅறுதியிட்ட என்ணங்களும், அபிப்ராயங்களூம், அதனால் பிறக்கிற செய்கைகளும், அன்பினை உள்ளடக்கவோ, வெளிப்படுத்தவோ முடியாது. பகிர்ந்து கொள்வதற்கு உறவு மிக அவசியமாகிறது. அன்பானது எந்த எண்ணத்தையும், அபிப்ராயத்தையும் சார்ந்தது அல்ல; எனவே, முன்னறுதியிட்ட எண்ணங்களோ, அபிப்ராயங்களோ அன்பைப் பரிமாறிக்கொள்ளவோ, பகிர்ந்து கொள்ளவோ உதவாது. புகையற்ற, தெளிந்த தீச்சுடரே அன்பாகும்.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி 
மூலம்: Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20204145&format=htmlனல் வீசுகிற, ஈரப்பதம் பிசுபிசுக்கிற மாலைப் பொழுது. பெரிய நகரத்தின் இரைச்சல் காற்றை நிறைத்தது. கடற்காற்று வெதுவெதுப்பாக வீசிக் கொண்டிருந்தது. எங்கும் பெட்ரோல் மற்றும் தாரின் வாசம். தூரத்தில், கடலுக்கடியில் செஞ்சூரியன் இறங்கிக் கொண்டிருந்தது. ஆனால், இன்னமும் தணிய மறுக்கிற வெப்பம். அறையை நிரப்பியிருந்த பெருங்குழு சீக்கிரத்திலேயே அகன்றது. அப்புறம், நாங்கள் வீதிக்கு வந்தோம்.

கிளிகள் - பிரகாசமான, பச்சைநிற ஒளிக்கீற்றுகளைப் போல - இரவில் அடங்க, வீடு திரும்பி கொண்டிருந்தன. அதிகாலையில், அவை - பழத்தோட்டங்களும், பசுமையான வயல்களும், திறந்தவெளிகளும் கொண்ட - வடதிசை நோக்கிப் பறந்து சென்றன. மாலை நேரத்திலே, நகரத்து மரங்களிலே இரவைக் கழிக்க அவை திரும்பி வந்தன. அவற்றின் பயணம் சமச்சீராக இல்லாமல், மேலும் கீழுமாகவும், அஜாக்கிரதையாகவும், இரைச்சல் நிறைந்ததாகவும், ஆனால் பொலிவாகவும் இருந்தது. மற்றப் பறவைகளைப் போல அவை நேராக ஒரே கோட்டில் பறக்கவில்லை. மாறாக - அவற்றின் பயணம், எப்போதும் இடமும் வலமும் மாறி மாறித் திரும்புவதாகவும், திடாரென ஒரு மரத்தில் அமர்வதாகவும் இருந்தது. பறக்கிறபோது, அவைதான் மிகவும் அமைதியற்ற பறவைகள். ஆனால், சிவந்த அலகுகளுடனும், ஒளியின் புகழைச் சொல்லும் மின்னுகிற பச்சை நிறத்துடனும், அவை எவ்வளவு அழகாய் இருக்கின்றன! விகாரமான, உருவில் பெருத்த கழுகுகள் வட்டமிட்டுப் - பின்னர் - கிளையற்று, உயர்ந்து நின்ற பனைமரங்களிலே இரவிற்காக குடிகொண்டன.

புல்லாங்குழலை வாசித்தபடி ஒருவர் நடந்து போனார்; அவர் எங்கோ, ஏதோ செய்கிற ஒரு பணியாள். புல்லாங்குழலை வாசித்தபடியே அவர் மேட்டுபாங்கான பகுதியை நோக்கி நடந்தார். நாங்கள் அவரைப் பின் தொடர்ந்தோம். பக்கத்திலே இருந்த ஒரு தெருவை நோக்கி அவர் திரும்பினார் - வாசிப்பை நிறுத்தாமலேயே. இரைச்சலும் சந்தடியும் மிகுந்த நகரத்திலே, புல்லாங்குழலின் நாதம் கேட்பது வித்தியாசமாக இருந்தது; அதன் ஒலி இதயத்தை ஊடுருவி ஆழ உள்சென்றது. அது மிகவும் ரசிக்கத்தக்க அழகுடையதாக இருந்தது. நாங்கள் புல்லாங்குழல் வாசிப்பவரைப் பின்தொடர்ந்து இன்னும் சற்று சென்றோம். நாங்கள் பல தெருக்களைக் கடந்து - கடந்த தெருக்களை விட அளவில் பெரிய, விளக்குகளின் வெளிச்சத்தில் நிறைந்த - ஒரு தெருவில் நுழைந்தோம். தூரத்தில், ஒரு குழுவினர், சப்பணமிட்டுச் சாலையின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்தனர். புல்லாங்குழல் வாசிப்பவர் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். அதனால் நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டோம். அவர் வாசித்துக் கொண்டிருக்கும்போது நாங்கள் சுற்றி அமர்ந்து கொண்டிருந்தோம். அவர்களில் பெரும்பாலோர் டிரைவர்கள், வேலைக்காரர்கள், வாட்ச்மேன் உத்தியோகம் பார்ப்பவர்கள். அவர்களுடன் நிறைய குழந்தைகளும் ஒன்றிரண்டு நாய்களும். கார்கள் கடந்து சென்றன. அவற்றுள் ஒன்றை டிரைவர் ஓட்டிச் சென்றார். உள்ளே ஒரு பெண்மணி, அழகான உடையணிந்து ஆனால் தனிமையாக, உள்விளக்கை எரிய விட்டபடி அமர்ந்திருந்தார். இன்னொரு கார் எங்களை நோக்கி வந்தது. அதிலிருந்து டிரைவர் கீழிறங்கி, எங்களுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டார். அவர்கள் எல்லோரும் பேசியும், சிரித்தும், அபிநயம் செய்தும் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்கள். ஆனால், புல்லாங்குழலின் இசை - ஒருபோதும் சுருதி குறையவில்லை, தடம் மாறவில்லை. அங்கே பரவசம் நிறைந்திருந்தது.

விரைவிலேயே நாங்கள் அங்கிருந்து கிளம்பி - கடலை நோக்கி எங்களை அழைத்துச் செல்கிற, நன்கு ஒளியூட்டப்பட்ட பணக்காரர்களின் வீடுகளைக் கடந்து செல்கிற - சாலையில் நடக்க ஆரம்பித்தோம். பணக்காரர்கள் அவர்களுக்கே உரித்தான ஒரு விசித்திரமான சூழ்நிலை கொண்டிருக்கிறார்கள். எவ்வளவுதான் நாகரிகமும், தலையிடாத் தன்மை கொண்ட விநயமும், தொன்மையும், மெருகும் கொண்டிருந்த போதிலும் - பணக்காரர்கள், ஓர் ஊடுருவ இயலாத மற்றும் நிச்சயமான, அந்நியத்தன்மை நிறைந்த ஏகாந்தத்தில் ஆழ்ந்தவர்களாய் இருக்கிறார்கள். அந்த ஏகாந்தமென்கிற தீட்டுப்படாத நிச்சயத் தன்மை - கடினத்தன்மை - உடைக்க இயலாதது. அவர்கள் செல்வத்தை ஆள்பவர்களோ அனுபவிப்பவர்களோ அல்ல, செல்வத்தால் அனுபவிக்கப்படுபவர்கள்; ஆளப்படுபவர்கள். அது மரணத்தை விடவும் கொடுமையானது. தயாள குணமும், பரோபகாரமும் அவர்களின் அகந்தையாக இருக்கிறது. அவர்களுடைய செல்வத்தின் தர்மகர்த்தாவாக அவர்கள் தங்களை நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தர்ம ஸ்தாபனங்களும், அறக்கட்டளைகளும் உருவாக்குகிறார்கள். அவர்கள் தான் ஆக்குபவர்கள், கட்டுபவர்கள், கொடுப்பவர்கள். அவர்கள் தேவாலயங்கள் கட்டுகிறார்கள்; கோயில்கள் புனரமைக்கிறார்கள். அவர்களின் கடவுள், அவர்கள் வைத்திருக்கிற தங்கம் சொல்கிற கடவுள் ஆவார். இவ்வளவு வறுமையும், தாழ்வும் நிறைந்த உலகிலே, ஒருவர் பணக்காரராக இருப்பதற்கு, அவர் உணர்ச்சியற்றவராக இருக்க வேண்டும். அவர்களில் சிலர் கேள்வி கேட்கவும், தர்க்கம் செய்யவும், உண்மைநிலையை அறியவும் விழைகிறார்கள். பணக்காரர்களுக்கு, ஏழைகளைப் போலவே, உண்மை நிலையை அறிவது மிகவும் கடினமாகும். ஏழைகள் - பணக்காரர்களாகவும், அதிகாரம் படைத்தவர்களாகவும் ஆவதற்கு யாசிக்கிறார்கள். ஆனால், பணக்காரர்கள், ஏற்கனவே, தங்களின் செல்வமழைத்துச் செல்கிற செயல்கள் என்னும் வலையில் அடைபட்டிருக்கிறார்கள்; ஆனாலும், அவர்கள் பாசாங்கு செய்கிறார்கள், சாகசம் செய்கிறார்கள். அவர்கள் அனுமானிக்கிறார்கள் - சந்தையை மட்டுமல்ல, இறுதிமுடிவையும் கூட. அவர்கள் இரண்டுடனும் விளையாடுகிறார்கள். ஆனால், அவர்கள் இதயத்தில் என்ன உள்ளதோ அதிலே மட்டுமே வெற்றியடைகிறார்கள். அவர்களின் இதயங்கள் வெறுமையாக இருக்கிற காரணத்தால் - அவர்களின் நம்பிக்கைகள், சடங்குகள் - அவர்களின் எதிர்பார்ப்புகள், பயங்கள் - எதுவுமே உண்மை நிலையுடன் கிஞ்சித்தும் தொடர்புடையது அல்ல. எந்த அளவுக்கு புறவயமான பகட்டும் ஆடம்பரமும் தெரிகிறதோ, அந்த அளவுக்கு அகவயமான ஏழ்மை அதிகமாக இருக்கிறது.

ஒப்பிடப் போனால், செல்வம், வசதி, மற்றும் அந்தஸ்து நிறைந்த உலகத்தை உதறித் தள்ளுவது ஓர் எளிய விஷயமே. ஆனால் - ஒன்றாக ஆகிற, ஒன்றாக மாறுகிற ஆவலைப் புறந்தள்ளி வைப்பதற்கு - பெரிதான அறிவு நுட்பமும், புரிந்து கொள்ளும் தன்மையும் தேவைப்படுகின்றன. செல்வம் கொடுக்கிற அதிகாரமும், சக்தியும் உண்மை நிலையைப் புரிந்து கொள்வதற்கான தடைக்கற்கள் ஆகும். அங்ஙனமே - வெகுமதியும், ஆற்றலும் கூட உண்மை நிலையை அடைவதற்கான தடைக்கற்களே. இந்த வடிவங்களினாலே வருகிற நம்பிக்கையானது, சுயத்தின் - நான் என்கிற நிலையின் - தெளிவான செயற்பாடே ஆகும். அடைவதற்குக் கடினமானது என்றாலும் கூட, இத்தகைய உத்திரவாதங்களையும், அதிகாரங்களையும், சக்திகளையும் புறந்தள்ளி வைக்கிற நிலை, அடையக் கூடியதே ஆகும். ஆனால், எது மேலும் நுண்மையானது, எது மேலும் மறைந்துறைவது என்றால், 'ஒன்றாக ஆகவேண்டும் ' என்கிற எண்ணத்தில் இருக்கிற சக்தியும், ஆற்றலும், நோக்கமுமே ஆகும். சுய-விரிவாக்கம் - அது, செல்வத்தின் வழியாக, நற்பண்புகளின் வழியாக என்று - எந்த வழியில் ஏற்பட்டாலும் - அது, எதிர்ப்பினையும் குழப்பத்தையும் உருவாக்குகிற முரண்பாட்டின் இயக்கமே ஆகும். ஒன்றாக மாறவேண்டும் என்கிற சுமையேற்றப்பட்ட மனம் எப்போதும் சலனமற்ற அமைதியடைய முடியாது. சலனமற்ற அமைதியானது (TRANQUILITY), புரிந்து கொள்கிற நிலையாகும். ஆனால், ஒன்றாக ஆவது புரிந்து கொள்வதைத் தடுக்கிறது. ஒன்றாக ஆவது, காலம் குறித்த உணர்வை உருவாக்குகிறது; அது நிஜத்தில் புரிந்து கொள்வதை ஒத்திப் போடுவதே ஆகும். 'நான் இப்படி ஆக வேண்டும்' என்கிற எண்ணமே, சுய - முக்கியத்துவத்தால் பிறக்கிற மாயை ஆகும்.

நகரத்தைப் போலவே கடலும் அமைதியற்று இரைந்து கொண்டிருந்தது; ஆனால் கடலின் இரைச்சலுக்குள்ளே ஆழமும், பொருளூம் இருந்தது. நிலவு தொடுவானத்தில் தெரிய ஆரம்பித்தது. நாங்கள் பஸ்கள், கார்கள் மற்றும் ஜனங்களின் நெரிசல் மிகுந்த சாலையின் வழியாகத் திரும்பி நடக்க ஆரம்பித்தோம். சாலையோர பிளாட்பாரத்தில் ஒரு மனிதர் நிர்வாணமாகக் கிடந்து, உறங்கிக் கொண்டிருந்தார். அவர் ஒரு பிச்சைக்காரர். களைப்புற்று, போஷாக்கான உணவின்மையால் மோசமாக பலவீனமுற்றுக் கிடந்த அவரை எழுப்புவது கடினம். அவருக்குப் பின்னால், தொலைவில், பூங்காவின் - விரிந்த புல்வெளிகளும், பொலிவுமிக்கப் பூக்களும் கிடந்தன.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி


மூலம்: Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20206103&format=html

'ங்களுக்குத் தெரியுமா? நான் 'அந்தக் குரு'வின் சீடனாக ஏற்றுக் கொள்ளப்பட்டேன் என்று சொல்கிறார்கள்' என்று அவர் ஆரம்பித்தார். 'நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா? நான் 'அந்தக் குரு' சார்ந்த நிறுவனத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியும். அந்த நிறுவனத்திற்காகத் தன்னார்வ பணிகள் செய்கிறேன். அதனைப் பார்த்து என்னைச் சீடனாக ஏற்றுக் கொண்டார்களாம். எதிர்காலத்தில் முதல்நிலை தீட்சை பெறுவதற்கான வாய்ப்பும் எனக்கு இருக்கிறதாம். அந்த நிறுவனத்தை உள்ளார்ந்து அகவழி நடத்தும் 'அந்தக் குருவை', புறவயமாக வெளியுலகிற்கு பிரதிநிதித்துவப் படுத்துகிற தலைவர்கள்தான் எனக்கு இதைச் சொன்னார்கள். நிஜமாகவே நீங்கள் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்' என்று தொடர்ந்தார் அவர். அதையெல்லாம் அவர் மனப்பூர்வமாக நம்பிக் கொண்டிருக்கிறார் என்று அவர் பேச்சில் புரிந்தது. நாங்கள் அதுபற்றி சற்று ஆழமாகப் பேசினோம்.

வெகுமதி எந்த வடிவில் வந்தாலும் அது மிகவும் சந்தோஷமும் திருப்தியும் தருகிறது. அதுவும், வாழ்வின் மற்ற கீர்த்திகளைப் பெரிதும் பொருட்படுத்தாதவர்க்கும், திரஸ்கரித்தவர்க்கும், ஆன்மீகத்தால் வருகிற வெகுமதி நிச்சயம் உவகை சேர்க்கிறது. அல்லது, இந்த உலகில் வெற்றிகள் ஈட்ட முடியாத ஒருவர், ஆன்மீகத்தில் 'கரைகண்டவர்கள்' நடத்துகிற அமைப்பில் அனுமதிக்கப்பட்டு, தானும் அந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்கிற பிடிப்போடு, அந்த அமைப்பின் தோழர்களோடு அதன் இலட்சியங்களுக்காக உழைத்து, பணிவுடனும் தியாகத்துடனும் தன் பணியைச் செய்யும் போது, ஒருவர்க்கு வெகுமதி தரப்படத்தான் வேண்டும். இது வெகுமதி என்கிற வரையறைக்குள் வராது எனில், ஒருவரின் ஆன்மீகத் தேடலுக்கு, ஆன்மீக வளர்ச்சிக்குக் கிடைக்கிற அங்கீகாரம் எனக் கொள்ளலாம். அல்லது, லாபத்தின் பொருட்டு செம்மையாக நிர்வகிக்கப்படுகிற நிறுவனங்களில், ஒருவரின் சிறப்பான பணிக்குக் கிடைக்கிற உயர்வும் வெகுமானமும் அவரை மேலும் எப்படி ஊக்குவிக்கின்றனவோ அதுமாதிரி என்றும் சொல்லலாம்.

வெற்றிகள் துதிக்கப்படுகிற உலகத்தில், இத்தகு சுயமுன்னேற்றம் புரிந்து கொள்ளவும் ஊக்குவிக்கவும் படுகிறது. ஆனால், ஒருவர் தன்னை இன்னாருடைய சீடன் என்று மற்றவர் சொல்ல அனுமதிப்பதும், அல்லது அப்படித் தன்னைத் தானே நினைத்துக் கொள்வதும், ஒருவர் தான் மிகவும் மோசமாக சுரண்டப்படுவதற்கு வழிவகுக்கும். துரதிர்ஷ்டவசமாக, இந்த 'சீட - குரு' உறவிலே, சுரண்டப்படுபவர், சுரண்டுபவர் இருவரும் பரஸ்பரம் பெருமையே கொள்கிறார்கள். இப்படி விரிவடைகிற சுய சந்தோஷமும் பெருமையும் ஆன்மீக வளர்ச்சி என்று அடையாளம் காணப்படுகிறது. இதிலே, குருவானவர் வெளிநாட்டிலோ, நேரடியாகத் தொடர்பு கொள்ள இயலாதவராகவோ, நேரடியாகத் தரிசிக்க முடியாதவராகவோ இருந்து, சீடனுக்கும் குருவுக்கும் நடுவிலே 'இடைத் தரகர்கள்' இருப்பார்களேயானால், அந்தச் சுரண்டல், மிக விரும்பத் தகாததும், கொடுமையானதும் ஆகும். இத்தகைய நேரடித் தொடர்பில்லாத நிலை, சீடன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதற்கும், சிறுபிள்ளைத்தனமான மாயைகளில் சிக்கிக் கொள்வதற்கும் வழி வகுக்கிறது. இத்தகு மாயைகளை, புகழுக்கும் பதவிக்கும் ஆசைப்படுகிற சாமர்த்தியசாலிகள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, மேலும் சுரண்டுகிறார்கள்.

அடக்கம் இல்லாத இடத்திலேயே வெகுமதிக்கும் தண்டனைக்கும் இடம் உண்டு. ஆன்மீக வழிமுறைகளைப் பின்பற்றுவதாலோ, மறுதலிப்பதாலோ வருவதல்ல அடக்கம். அடக்கம் ஒரு சாதனையும் அல்ல. உரமிட்டால் வளரக்கூடிய நற்பண்பின் வகைகளுள் ஒன்றுமல்ல, அடக்கம். ஏனெனில், எந்த நற்பண்பும் போதனை என்கிற முயற்சியால் வளர்க்கப்படும்போது, நற்பண்பு என்கிற இயல்பை இழந்து விடுகிறது. அதற்குக் காரணம், போதிக்கப்படும்போது, அது சாதனையின் ஒரு வடிவமாகவும், அடையப்பட வேண்டிய ஒரு மைல் கல்லாகவும் மாறிவிடுகிறது. போதனையால் வளர்க்கப்படுகிற பண்பு எதுவும், அந்தப் பண்பினைப் பெற ஒருவர் செய்யும் தியாகத்தின் அடையாளமோ, அந்த ஒருவரைப் பற்றிய குணாதிசயமோ அல்ல; அது அந்த ஒருவரைப் பற்றிய எதிர்மறையான வலியுறுத்தலும், பிரேமையுமே ஆகும்.

அடக்கத்திற்கு மேலோர் கீழோர் என்கிற பாகுபாடு இல்லை. குரு சீடன் என்கிற வித்தியாசம் இல்லை. குரு சீடன் என்கிற வித்தியாசம் இருக்கிற வரை, உண்மைக்கும் ஒருவர்க்கும் இடைவெளிகள் இருக்கும் வரை, புரிந்து கொள்ளுதல் சாத்தியப் படாது. உண்மையைப் புரிந்து கொள்ளுவதில் குரு சீடன் என்கிற வரையறைகள் இல்லை. அங்ஙனமே, அறிந்தவர் அறியாதவர் என்பதும் இல்லை.

உண்மை என்பது, கணம் தோறும், 'இது என்ன' என்பதை உணர்ந்து புரிந்து கொள்வதாகும். அந்தப் புரிந்து கொள்ளல், கடந்து போன கணங்களின் எச்சங்கள் என்கிற சுமை இல்லாமல் அமைதல் வேண்டும்.

வெகுமதியும் தண்டனையும் ஒருவரைப் பலப்படுத்தலாம். ஆனால் அது அடக்கத்தைத் தடுக்கிறது. அடக்கம் நிகழ்காலத்தில் இருக்கிறது; எதிர்காலத்தில் இல்லை. ஒருவர் அடக்கமுடையவராக ஆகுதல் என்பது இயலாது. ஒன்றாக ஆகுதல் - ஒன்றாக மாறுதல் - என்பதே கர்வத்தின் தொடர்ச்சியாகும். நற்பண்புகளைப் பயில்வதில் கூட கர்வமே ஒளிந்துள்ளது. வெற்றியடைவதில் ஒருவருக்கு உள்ள உறுதியே, ஒன்றாக ஆகுதலும், ஒன்றாக மாறுதலும். எனவே எளிமையான அடக்கத்தையும், வெற்றியையும் எப்படி ஒன்றாகச் சேர்க்க முடியும்? ஆனாலும், ஆன்மீக சுரண்டல்வாதிகளும், சுரண்டப்படுவோரும் இதையே செய்வதால், முரண்பாடுகளும், துன்பங்களுமே மிஞ்சுகின்றன.

'குரு என்று எவரும் இல்லை. குருவுக்கான அவசியமோ தேவையோ இல்லை. சீடனாக என்னை பாவித்துக் கொள்ளுவதே ஒரு மாயை, நம்ப வைக்க ஏற்படுத்தப்பட்ட தோற்றம் என்று சொல்கிறீர்களா ?' என்று அவர் கேட்டார்.

குரு என்று ஒருவர் அவசியமா, தேவையா என்பது ஓர் அற்பமான விவாதம். குரு என்கிற படிமம், இங்கே சுரண்டுபவர்க்கும், பள்ளிகளுக்கும், நிறுவனங்களுக்கும் முக்கியமானது. ஆனால், மேன்மையான இன்பத்தைக் கொணரும் உண்மையைத் தேடும் மனிதர்க்கு, குரு என்று ஒருவர் தேவையா, அவசியமா என்கிற கேள்வி அநாவசியமானது. பணம் படைத்தவனும், அவனுக்கு வெகுமானம் வாங்கிக் கொண்டு பணிவிடை செய்யும் கூலிக்காரனும் போன்ற முக்கியத்துவம் உடையதே, குரு சீடன் உறவும். குரு என்று ஒருவர் தேவையா, குரு என்று ஒருவர் இருக்கிறாரா, தீட்சைகளும் பதவிகளும் கிடைக்குமா, எத்தனை சீடர்கள் இருக்கிறார்கள் என்பவை எல்லாம் ஒருவர்க்கு முக்கியம் அல்ல. ஒருவர் தன்னைத்தான் அறிவதே முக்கியம். சுய அறிவு இல்லாமல், காரணிப்படுத்துகிற எண்ணங்களுக்கு அடிப்படை இல்லை. உங்களைப் பற்றியே அறிந்து கொள்ளாமல், 'இது சரி, இது தவறு' என்று எப்படி உங்களால் சொல்ல முடியும்? சுய அறிவு இல்லாவிட்டால், மாயைகளில் சிக்கிக் கொள்வதையும் தவிர்க்க இயலாது. 'நீ இப்படி, நீ அப்படி' என்று மற்றவர் சொல்வதும், அதை ஒருவர் ஏற்றுக் கொள்வதும் சிறுபிள்ளைத்தனமாகும். இந்தப் பிறவியிலோ அடுத்தப் பிறவியிலோ உங்களுக்கு ஆன்ம ஞான வெகுமதி அளிக்கப் போவதாகச் சொல்கிற மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!

- ஜே. கிருஷ்ணமூர்த்தி

மூலம்: Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20203243&format=html

வர் பேராசை கொண்டவர் இல்லை என்பதை வலியுறுத்தி, போதும் என்கிற பொன்செய்யும் மனத்திலே அவர் திருப்தியடைவதாகவும், மனித வாழ்விற்கே பொதுவான வழக்கமான துயரங்களில் அவர் துன்புற்றபோதும், வாழ்க்கை அவருக்கு நல்முகமே காட்டி வந்துள்ளதாகவும் அவர் விளக்கினார். அவர் ஒரு சாந்தமான, பிறர் விஷயத்தில் தலையிடாத, அவருடைய சுலபமான வழிகளிலிருந்து தொந்தரவு செய்யப்பட விரும்பாத மனிதர். தனக்குப் பேரவா நிறைந்த இலட்சியங்கள் இல்லை என்று சொன்ன அவர், ஆனால், தன்னிடம் இருப்பனவற்றிற்காகவும், தன்னுடைய குடும்பத்திற்காகவும், தன் வாழ்வின் சுமூகமான ஓட்டத்திற்காகவும் கடவுளைப் பிரார்த்திப்பதாகவும் சொன்னார். அவருடைய உறவினர்களைப் போலவும், நண்பர்களைப் போலவும் பிரச்னைகளிலும் முரண்பாடுகளிலும் மூழ்கித் தவிக்காததற்காக, அவர் நன்றியுடையவராக இருந்தார். வெகுவேகமாக சமூகத்தில் கெளரவமிக்கவராகவும், வாழ்வின் மிக உயர்ந்த மனிதர்களுள் ஒருவராகவும் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்கிற மகிழ்வில் திளைப்பவராக அவர் இருந்தார். பிற பெண்களின்பால் அவர் மனம் ஈர்க்கப்படவில்லை என்றும், கணவன்-மனைவிக்கிடையேயான வழக்கமான பிணக்குகள் நேர்ந்தாலும், அவர் குடும்ப வாழ்க்கை நிறைவானது என்றும் அவர் தொடர்ந்தார். அவரிடம் தீய பழக்கங்கள் ஏதும் இல்லை என்றும், அடிக்கடி பிரார்த்திப்பதாகவும், கடவுளை வழிபடுவதாகவும் அவர் சொன்னார்.' என்னுடைய விஷயம்தான் என்ன ?' என்று கேட்ட அவர், 'என்னிடம் பிரச்னைகளே இல்லையா ?' என்றும் வினவினார். அவர் பதிலுக்காகக் காத்திருக்கவில்லை. மாறாக, நிறைவான புன்னகையுடனும் ஆனால் ஒருவிதமான விசனத்துடனும் அவர் இறந்த காலம் பற்றியும், அவர் என்ன செய்தார் என்பது குறித்தும், குழந்தைகளுக்கு அவர் கொடுக்கிற கல்வி குறித்தும் எல்லாம் தொடர்ந்து விவரித்தார். தான் ஒரு வள்ளல் அல்ல என்றும் ஆனால் அங்கும் இங்கும் ஏதோ தர்மம் செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். உலகத்தில் தனக்குரிய அந்தஸ்தை அடைய ஒவ்வொருவரும் கடினமாக உழைக்க வேண்டும் என்று அவர் உறுதியாக நம்பினார்.

கெளரவம் ஒரு சாபம் ஆகும்; அது மனத்தையும் இதயத்தையும் துருப்பிடிக்கச் செய்கிற தீங்காகும். அது சப்தமின்றி ஒருவர் மீது படர்கிறது; அதனால், அன்பினை அழித்து விடுகிறது. கெளரவத்திற்குரியவராக இருக்க, வெற்றிக்குரியவராக உணர வேண்டும்; உலகில் தனக்கான அந்தஸ்தைச் செதுக்க வேண்டும்; தன்னைச் சுற்றிலும் நிச்சயத்தன்மை நிறைந்த உறுதியானச் சுவர்களைக் கட்ட வேண்டும். இத்தகைய கெளரவம் என்கிற உத்திரவாதம் பணம், அதிகாரம், வெற்றி, சக்தி அல்லது நற்பண்பு ஆகியவற்றால் வருகிறது. இந்த உத்திரவாதத்தின் தனித்தன்மை- வெறுப்பையும், விரோதத்தையும் வளர்க்கிறது; அதுவே சமூகம் என்றழைக்கப்படுகிறது. கெளரவமிக்கவரே சமூகத்தின் புடம்போட்ட புத்திரர்கள். அதனாலேயே, அவர்கள் சச்சரவிற்கும், துயரத்திற்கும் காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள். கெளரவம் மிக்கவர்கள்- நிந்திக்கப்பட்டவர்களைப் போலவே-எப்போதும் சூழ்நிலைகளின் கருணையில் வாழ்கிறார்கள். சுற்றுப்புறத்தின் தாக்கமும், மரபுகளின் ஆற்றலும் அவர்களுக்குப் பெரிதும் முக்கியமானவையாகும்; ஏனெனில், அவையே அவர்களின் அகவயமான ஏழ்மையை மறைக்கின்றன. கெளரவமிக்கவர்கள், தற்காப்பிலும், பயத்திலும், சந்தேகத்திலும் வாழ்கிறார்கள். பயம் அவர்கள் இதயத்தில் குடிகொண்டுள்ளது. அதனால், கோபம் அவர்கள் நேர்மையாக இருக்கிறது. அவர்களின் நற்பண்புகளும், தெய்வ பக்தியுமே அவர்களின் தற்காப்பு. அவர்கள்-உள்ளே வெறுமையாகி, அடிக்கப்படும்போது வெளியே ஒலி எழுப்புகின்ற-மத்தளத்தைப் போன்றவர்கள். கெளரவம் மிக்கவர்கள் எப்போதும் உண்மைநிலைக்கு தங்களை அனுமதிக்க இயலாது. ஏனெனில், நிந்திக்கப்பட்டவர்களைப் போல, அவர்களும் தங்களின் சுய முன்னேற்றம் என்னும் கவலையுறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பேரானந்தம் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஏனெனில், அவர்கள் உண்மையைத் தவிர்க்கிறார்கள்.

பேராசை கொள்ளாமல் இருப்பதும், தரும சிந்தனை (GENEROUS) அற்று இருத்தலும் நெருங்கிய தொடர்புடையது. இரண்டுமே தனக்குள்ளே சுருங்கிப் போகிற சுய உறையிலிடப்பட்ட இயக்கங்கள்- தன்வயமான தன்மையின் (SELF-CENTEREDNESS) எதிர்மறை வடிவங்கள். பேராசை கொண்டவராக இருக்க நீங்கள் செயல்திறம் மிக்கவராக, மற்றவருடன் வெளிப்படையாக-சுலபமாகப்-பழகுபவராக (OUTGOING) இருக்க வேண்டும்; நீங்கள் பாடுபட்டு உழைப்பவராக, போட்டியிடுபவராக, ஆக்ரமிப்பவராக இருக்க வேண்டும். உங்களுக்கு இத்தகைய ஆற்றல் இல்லாவிட்டால், நீங்கள் பேராசையிலிருந்து விடுபட்டவர் இல்லை; மாறாக, வெறும் சுய உறையிலிடப்பட்டவர். மற்றவருடன் வெளிப்படையாக-சுலபமாகப்-பழகுதல் என்பது ஒரு தொந்தரவு; வலிமிக்கப் போராட்டம். எனவே, தன்வயமான தன்மையானது (SELF-CENTEREDNESS), பேராசையின்மை என்கிற வார்த்தையால் மறைக்கப்படுகிறது. கைகள் ஈகிற தரும சிந்தனை கொண்டவராக இருப்பது ஒரு விஷயம்; ஆனால், இதயத்தில் தயாளத்துடன் இருப்பது மற்றொரு விஷயம். கலாச்சார அமைப்பினைப் பொறுத்தும் மற்றும் அது சார்ந்த விஷயங்களைப் பொறுத்தும் பார்க்கும்போது, கைகளின் ஈகைத்திறன் ஓர் எளிய விஷயமே. ஆனால், இதயத்தின் தயாளகுணமானது பெரிதும் முக்கியத்துவம் நிறைந்தது. அதற்கு நீடிக்கப்பட்ட விழிப்புணர்வும் புரிந்து கொள்ளுதலும் தேவைப்படுகிறது.

தயாள குணமற்று இருத்தல், ஓர் இனிமையான ஆனால் குருட்டுத்தனமான, சுய-உட்கிரகித்தல் (SELF-ABSORPTION); அதிலே வெளிப்படையாக, சுலபமாக மற்றவருடன் பழகுதல் இல்லை. இந்தத் தன்னுள்ளே மூழ்கிப் போகிற நிலைக்கு, அதற்கேற்ற செயல்கள் இருக்கின்றன-ஒரு கனவு காண்கிற மனிதரின் செய்கைகளைப் போல. ஆனால் அவை என்றும் உங்களைத் துயிலெழுப்பா. விழித்தெழுதல் ஒரு வலிமிக்க இயக்கம். ஆதலால், இளமையோ அல்லது முதுமையோ, நீங்கள் கெளரவமிக்கவராக மாற, மரித்துப் போக-நீங்கள் தனியாக விடப்படலாம்.

இதயத்தின் தயாளகுணத்தைப் போல, கைகளின் தரும சிந்தனையும், உலகத்துடன் சுலபமாகப் பழகுகிற இயக்கமே. ஆனால், நிறைய நேரங்களில் அது வலிமிக்க, ஏமாற்றுத்தன்மை கொண்ட, சுயம் எனப்படும் நான் என்கிற நிலையைச் சொல்கிற-இயக்கமாகும். கைகளின் தயாள குணம் வரவைப்பதற்கு சுலபமானதாகும். ஆனால், இதயத்தின் தயாள குணத்தை உரமிட்டு வளர்க்க இயலாது. அது, எல்லாச் சேமிப்பிலிருந்தும் விடுதலையாகும். மன்னிப்பதற்கு, கண்டிப்பாக காயம் பட்டிருக்க வேண்டும். காயப்படுவதற்கு, கண்டிப்பாக பெருமையின் சேகரிப்புகள் இருக்க வேண்டும். 'நான்' மற்றும் 'என்னுடைய' என்று தொடர்புப்படுத்துகிற, சுட்டிக் காட்டுகிற நிலை தொடர்கிற வரை, அங்கே இதயத்தின் தயாள குணம் இருப்பதில்லை.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி

மூலம்: Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20206296&format=html


ன் நீங்கள் உங்களை இன்னொருவருடன் அல்லது ஒரு குழுவுடன், இயக்கத்துடன் அல்லது ஒரு தேசத்துடன் இணைத்து அடையாளம் காண்கிறீர்கள், அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள் ? ஏன் நீங்கள் உங்களை கிறிஸ்துவர் என்றோ, இந்து என்றோ, பெளத்த மதத்தவர் என்றோ, எண்ணிக்கையில் அடங்காத மதப்பிரிவுகளின் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவர் என்றோ அழைத்துக் கொள்கிறீர்கள் ? அங்ஙனம் அவற்றுள் ஒன்றுக்குச் சொந்தம் கொண்டாடுகிறீர்கள் ? பாரம்பரியத்தாலோ, பழக்கத்தாலோ, உத்வேகத்தாலோ (IMPULSE), பாரபட்சத்தாலோ (PREJUDICE), மற்றவரைப் பார்த்து போலியாகவோ, சோம்பலாலோ - 'அதைச் சார்ந்தவர்' என்றும் 'இதைச் சார்ந்தவர்' என்றும் - மதப்பூர்வமாகவும், அரசியல்பூர்வமாகவும் - ஒருவர் தன்னை அடையாளம் காண்கிறார். அத்தகைய அடையாளம், ஆக்கபூர்வமான புரிந்து கொள்ளலுக்கும், விவேகத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. அதற்கப்புறம், ஒருவர், தன்னுடைய இயக்கத்தின் தலைமைக்கோ, மதகுருவுக்கோ, ஆஸ்தான தலைவருக்கோ, வெறும் கைப்பாவை ஆகிவிடுகிறார்.

அன்றொரு நாள் - ஒருவர் தன்னைக் 'கிருஷ்ணமூர்த்தியைப் பின்பற்றுபவர்' என்றும் - மற்றொருவரைக் குறிப்பிட்டு, அவர் - 'வேறொருவரை'ப் பின்பற்றுகிற குழுவைச் சார்ந்தவர் என்றும் - சொன்னார். அப்படிக் குறிப்பிடும்போது, இவ்வாறெல்லாம் ஒருவரை அடையாளம் காண்பதில், அடையாளப்படுத்திக் கொள்வதில் இருக்கிற நோக்கத்தை, பொருளை, கஷ்டத்தை, சிக்கலை அவர் உணர்ந்திருக்கவில்லை. அவர் ஒரு தற்குறியோ அசடோ அல்ல; அவர் நிறையப் படித்தவர்; நாகரிகமும் நற்பண்புகளும் நிறைந்தவர். எனவே, முன்யோசனையில்லாமலோ, படிப்பறிவின்மையின் காரணமாகவோ அவர் அப்படிச் சொல்லவில்லை. உணர்வுவயப்பட்டோ, மனவெழுச்சியின் காரணமாகவோ கூட அவர் அப்படிச் சொல்லவில்லை. மாறாக, தெளிவாகவும் தீர்மானமாகவும் அவர் அப்படிச் சொன்னார்.

ஏன் அவர் 'கிருஷ்ணமூர்த்தியைப் பின்பற்றுவராக மாறினார்? மற்றவர்களையும், சோர்வுண்டாக்குகிற குழுக்களையும், சலிப்புண்டாக்குகிற இயக்கங்களையும் அவர் ஏற்கனவே பின்தொடந்துப் பார்த்திருக்கிறார். கடைசியில் கிருஷ்ணமூர்த்தி என்கிற மனிதருடன் அவர் தன்னை அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார். அவர் சொன்ன விதத்திலிருந்து, அவருடைய தேடலும், பயணமும் முடிந்ததெனத் தோன்றியது. அவர், ஒரு முடிவெடுத்து அந்த முடிவைச் 'சிக்'கெனப் பிடித்துக் கொண்டதால், அந்த விஷயம் அவருக்கு முடிந்துபோன ஒன்றாகும். தன்னுடைய இடத்தை, தன்னுடைய அடையாளத்தை அவர் தேடிப் பிடித்து விட்டதால், வேறெதுவும் அவரை அவர் நிலையிலிருந்து மாற்ற முடியாது. இப்போது அவர் ஆற அமர ஒரு செளகரியமான செளந்தர்ய நிலையில் தன்னை இருத்திக் கொண்டு, இதுவரையில் சொல்லப்பட்டவைகளையும், இனி சொல்லப்படுபவற்றையும் ஆர்வத்துடன் பின்பற்றுவார்.

நாம் மற்றவருடன் இணைத்து நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் போது, அது அன்பினைச் சுட்டுகிறதா? சொல்கிறதா? அடையாளம் காண்பது சோதனையின் குறியீடா? அன்பிற்கும் சோதனைக்கும், அடையாளம் முடிவு கட்டுவதில்லையா? அடையாளம் காண்பது என்பது நிச்சயமாக - உடைமையை, சொந்தத்தை வலியுறுத்துகிற - சுவாதீனமே ஆகும். ஆனால், உரிமையானது அன்பினை திரஸ்கரிக்கிறது. இல்லையா? உரிமை கொள்வது என்பது பாதுகாப்பின் பொருட்டும் உத்திரவாதத்தின் பொருட்டும் தானே. எனவே உரிமை கொள்வது ஒரு தற்காப்பின் வெளிப்பாடு - ஒருவர் காயப்படாமல் தடுக்க உதவுகிற வழிமுறை. ஆகவே, அடையாளம் காண்பதிலே - நுண்ணியதான அல்லது முரட்டுத்தனமான - ஓர் எதிர்ப்பு விசை இருக்கிறது. அன்பானது, தற்காத்துக் கொள்ள உதவுகிற எதிர்ப்பின் ஒரு வடிவமா? பாதுகாப்பும், தற்காப்பும் இருக்கிற இடத்திலே அன்பு இருக்கிறதா?

அன்பு மென்மையானது; பலவீனமானது; சுலபமாக வளையக் கூடியது; எளிதாக ஏற்றுக் கொள்கிற இயல்புடையது. அது நுட்பமான, எளிதில் உணரக்கூடிய உணர்வுகளின் மிக உன்னதமான வடிவமாகும். ஆனால், அடையாளம் காண்பது, ஓர் உணர்ச்சியற்ற, உணர்வுகளை மறுதலிக்கிற தன்மையே. ஒன்று மற்றொன்றை அழிக்கவல்லது என்பதால், அன்பும் அடையாளமும் இணைந்து இருக்கவோ, இயங்கவோ இயலாது. அடையாளம் காண்பது என்பது அடிப்படையில் எண்ணத்தின், சிந்தனையின் இயக்கமே. அதனால், மனமானது தன்னைப் பாதுகாத்துக் கொண்டு, அந்தப் பாதுகாப்பினால் விரிவடைகிறது. தான் விரும்பிய வண்ணம் ஆவதற்கு மனமானது கட்டாயம் எதிர்க்கவும், தற்காத்துக் கொள்ளவும் வேண்டும்; நிச்சயம், உரிமை கொள்ளவும், ஒதுக்கி விலக்கவும் வேண்டும். ஒன்றாக ஆகிற அந்த இயக்கத்திலே - மனம் அல்லது மனத்தால் சுட்டப்படும் 'தான்' என்கிற சுயநிலை - வலிமையாகவும், உறுதியாகவும், திறமிக்கதாகவும் ஆகிறது. ஆனால், இது அன்பு இல்லை. அடையாளம், சுதந்திரத்தை அழிக்கிறது. சுதந்திரத்திலேயே, நுட்பமான, எளிதில் உணரக்கூடிய உணர்வுகளின் உன்னத வடிவம் (அன்பு) இருக்க இயலும்.

சோதனை செய்ய, அடையாளம் காண்கிற இயக்கம் தேவையா? அடையாளம் காண்கிற செய்கை, விசாரணையையும், கண்டுபிடிப்பையும் முற்றிலும் நிறுத்திவிடுவதில்லையா? உண்மை கொணர்கிற இன்பமானது, தன்னைக் கண்டுபிடிக்கிற சோதனையின்றி வர இயலாது. அடையாளம் கண்டுபிடிப்பை நிறுத்திவிடுகிறது. அடையாளம் காண்பது சோம்பலின் மற்றொரு வடிவமே. அது நம்மை நாம் அறியாமல், நம்மில் பிறரைக் காண்கிற அல்லது பிறரில் நம்மைக் காண்கிற செய்கையே ஆதலால் - பிறரின் பொருட்டு நாம் அனுபவிக்கிற அனுபவமே ஆகும். ஆகவே அது முற்றிலும் பொய்யானது, போலியானது.

உண்மையான அனுபவத்திற்கு, எல்லா அடையாளங்களும் களையப்பட வேண்டும். சோதனை செய்ய, சோதனைக்கு உட்பட, பயம் என்பதே இருக்கக் கூடாது. பயம் அனுபவத்தைத் தடுக்கிறது. பயம்தான் - மற்றவருடன், ஒரு குழுவுடன், இயக்கத்துடன், ஒரு கொள்கையுடன் என்றெல்லாம் - நம்மை அடையாளம் காண வைக்கிறது. பயம் எதிர்க்கப்பட வேண்டும்; நசுக்கப்பட வேண்டும். தற்காப்பு என்கிற நிலையிலே, எங்ஙனம், காற்றிலேறி விண்ணைச் சாடுகிற, கடல்கள் வென்று கால்கள் பதிக்கிற சாகசங்கள் செய்ய இயலும்? உண்மையோ, சந்தோஷமோ தன்னையறிகிற, தன்னுள் நீள்கிற பயணங்கள் மேற்கொள்ளாமல் கிடைக்காது. நீங்கள் நங்கூரம் பாய்ச்சப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தால், உங்களால் எங்கும் போக இயலாது. அடையாளம் என்பது ஒரு புகலிடம். புகலிடத்திற்குப் பாதுகாப்பு தேவை. எது பாதுகாக்கப்படுகிறதோ அது விரைவில் அழிக்கப்படுகிறது. அடையாளம் சுய அழிவைக் கொண்டு வருகிறது. அதனாலேயே பல்வேறு அடையாளங்களுக்கிடையே நிலையான மோதல் நிகழ்ந்த வண்ணமிருக்கிறது.

எந்த அளவிற்கு ஓர் அடையாளம் கொண்டும் அல்லது ஓர் அடையாளம் மறுத்தும் நாம் துன்புறுகிறோமோ, அந்த அளவிற்கு புரிந்து கொள்வதற்கும், விவேகத்திற்கும் தடையேற்படுகிறது. அடையாளம் காண்கிற இயக்கத்தை - அது அகம் சார்ந்ததாயினும் சரி, புறம் சார்ந்ததாயினும் சரி - ஒருவர் உணர்ந்திருந்தால், புறத் தோற்றமும், வெளிப்பாடும் அகத் தேவைகளால் திட்டமிடப்படுகின்றன என்பதை அறிந்திருந்தால், உண்மையைக் கண்டுபிடிப்பதற்கும் அதனால் மகிழ்வுக்கும் வாய்ப்பிருக்கிறது. தன்னை மற்றொன்றுடன் அடையாளம் காண்பவர் - எல்லா உண்மைகளையும் கொணர்கிற - சுதந்திரத்தை ஒருபோதும் அறியவோ, காணவோ முடியாது.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி

மூலம்: Commentaries on living - J. Krishnamurthi (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20204281&format=html