"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

காலத்தை வெல்லுதல் மனிதர்களுக்குச் சாத்தியமல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்துதான் வைத்திருக்கிறார்கள். பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் இறக்க வேண்டும் என்பது அறிந்து கொள்ள முடியாத திசையிலிருந்து வருகின்ற உத்தரவு. அந்த உத்தரவின் ரூபம் என்ன?

உள்ளங்கால் தொட்டு உச்சந்தலைவரை வருடிச் செல்லும் அதிகாலைப் பனிக்காற்றா? உரலிலிட்டு இடித்துக் காய்ச்சிய கம்மங்கூழுக்குக் கடித்துக் கொண்ட பச்சை மிளகாயின் உறைப்புச் சுவையா? வெண் பஞ்சுக் கூட்டத்தில் பொன்பரப்பாய்ச் சிதறும் அந்தி நேரத்து மலைமுகட்டுச் சித்திரமா? கைவளையோசையாகவும் கால் கொலுசின் சிணுங்கலாகவும் காதில் நுழைந்து கண் பொத்திக் கட்டி அணைத்துப் பின் கழுத்தில் முத்தமிட்டுக் கலவி செய்துக் காணாமல் போன கனவுப் பிம்பமா? கருக்கிருட்டில் காராம்பசுவின் மடிபிதுக்கிக் கறந்த பாலின் இளஞ்சூடா?

மரணங்கள் ஒருவிதத்தில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தின் பதிவும் கூட. வாழும் காலத்தில் அவர் செய்த செயல்களின் பதிவுகளை மரணத்திற்குப் பின்னும் வாசிக்க முடியும் என்றாலும் அந்த மரணம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதும் கூட. வாழ்ந்த காலத்து இருப்பைச் சொல்லும் உடனடி வெளிப்பாடு என்பதை நாம் மறுக்க முடியாது. இருந்த காலத்தின் பதிவுகள் அவருக்கு அழியாத அடையாளங்களைப் பரப்பிக் காட்டுகின்றன. அந்தப் பரப்பு சார்ந்து குடும்ப மனிதனாகச் சுருங்கிச் சொல்லலாம். இங்கே பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் அப்படிச் சுருங்கிப் போனவர்கள் தான். ஆனால் எல்லா மனிதர்களும் சுருங்கிப் போவதை விரும்புபவர்களும் அல்ல.

தங்கள் வெளியைக் கிழித்து வெளியேறும் போது தான் தத்துவ, அரசியல், சமூக, கலை, அறிவியல்.பண்பாட்டு மனித அடையாளங்கள் உருவாகின்றன. அந்த உருவாக்கத்திற்கு முயலாத மனிதர்கள் இல்லை என்றாலும், எல்லாருக்கும் அந்த அடையாளம் கிடைத்து விடுவதும் இல்லை. வந்த சுவடு தெரியாமல் போவதைப் பற்றிச் சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. வந்தது போலவே சென்று விட வேண்டும் என நினைப்பதும் கூட ஒருவிதத்தில் ஆசை தான். வந்த சுவடு தெரியாது; ஆனால் இருக்கும் போது நான் உண்டாக்கிய சுவடுகள் ஏராளம்; நான் போனாலும் நான் உண்டாக்கிய சுவடுகளை அழிக்கக் கூடாது என நினைப்பது பேராசை. ஆசைகள் விரும்பத்தக்கவை. பேராசைகள் ஆபத்தானவை.

கண் முன்னே விரியும் இந்த உலகம் எனக்கானது; இதனை அனுபவிக்கவும் அடக்கிக் காட்டவும் பிறந்தவன் என நம்பும் ஒருவனிடம் மரணத்தைப் பற்றிக் கேட்டால் அவனுக்கு உண்டாகக் கூடியது கோபம். நான் வாழப்பிறந்தவன்; ஆளப்பிறந்தவன். என்னிடம் ஏன் மரணத்தைப் பற்றிக் கேட்கிறாய்? எனக்கெப்படித் தெரியும்? செத்தவனைத் தான் கேட்க வேண்டும். என வீறாப்பாகச் சொல்லி விட்டுப் போன ஒருவனின் மரணச் செய்தியை தந்தி சுமந்து வந்த போது அதிர்ந்து போன கணங்களை நீங்கள் சந்தித்திருக்கக்கூடும்.

மரணத்தை எதிர்கொள்ளுதலில் மனிதமனங்களுக்கு ஒரே மனநிலை தான் இருக்கிறது எனவும் சொல்ல முடியாது. மரணம் குறித்து வரும் அந்த உத்தரவை மீற முடியாது என்று தெரிந்த போதும், அதைத் தள்ளிப் போட முடியும் என நம்பாதவர்கள் ஒருவரும் இல்லை. மரணம் எப்படிப் பட்டது எனக் கேட்டு விளங்கிக் கொள்ளலாம் என முயன்றால் அதை அனுபவித்துப் பார்த்துச் சொல்ல ஒருவரும் இங்கே இல்லை. வாழ்ந்து கொண்டே மரணத்தைப் பற்றிச் சொல்பவர்களின் கூற்று அனுபவக் கூற்று அல்லவே. மரணத்தின் வண்ணங்களை, ஒலிநயத்தை, சுவைப் பெருக்கத்தை, உரசுதலை, நாற்றக் கடப்பை விளக்கிச் சொல்லுதல் யாருக்கு முடியும்.? மரணம் விநோதமானது; வேடிக்கையானது எனச் சிலர் சொல்லக் கூடும். எது வேடிக்கை? எது விநோதம்? என விளக்க முடியாதவன் தான் மரணத்தையும் விநோதமானது! வேடிக்கையானது எனச் சொல்லி ஒதுங்கிக் கொள்கிறான்.

சாத்தியமே இல்லை என்ற போதும் கடவுளை விளக்கி விட முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் மனிதர்கள் தானே மரணத்தையும் விளக்கிக் காட்ட முயல்கிறார்கள். விளக்கிச் சொல்ல முடியாத ஒன்றைத் திரும்பத் திரும்பத் தேடிக் கொண்டிருப்பதில் மனிதர்களுக்கு அலுப்பே தோன்றுவதில்லை போலும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் கொள்ளும் உறவைச் சொல்ல நட்பு, பாசம், அன்பு, நேயம், பகை, வன்மம் எனப் பல சொற்களைப் பயன் படுத்தி விளக்கி விட முடியும் என நம்பும் நமது மனம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தோன்றும் உறவை விளக்கப் பயன்படுத்தும் உச்சபட்ச வார்த்தை காதல்.

காதல் என்ற வார்த்தையின் எதிர்ப்பதமாகச் சொல்ல தமிழில் ஒரு வார்த்தை இல்லை என்றே தோன்றுகிறது. காதல் என்னும் சொல்லுக்கு எந்த மொழியும் எதிர்ப்பதம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள விரும்பாது என்றே தோன்றுகிறது. காதல், அனுபவித்துப் பார்த்து விளக்கிக் காட்ட முயலும் ஒரு வினை. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகத் தோன்றும் வினை. எத்தனை மனிதர்கள் தோன்றினார்களோ, எத்தனை பேர் காதலிப்பதாக நினைத்தார்களோ அத்தனை பேருக்கும் அது ஒரு புதுவித அனுபவம் தான்.

மரணமும் காதலைப் போன்றது தான் என்றாலும் நேர் எதிரானது. மரணம் விளக்கிச் சொல்லும் தர்க்கம் அல்ல என்பதை விட அனுபவித்துப் பார்த்துச் சொல்லும் காரணமும் அல்ல என்பதுதான் அதன் சிறப்பு. காதலின் அனுபவித்தைச் சொல்ல ஏராளமானவர்கள் இங்கே இருந்து கொண்டிருக்கிறார்கள். காதலில் வென்றவர்களும், தோற்றவர்களும் எழுதி வைத்த கவிதைகளால் நிரம்பி வழிகிறது இந்த உலகம். ஆனால் மரண அனுபவித்தைச் சொல்ல ஒருவரும் இல்லை என்றாலும் அதனை எதிர் கொள்ளத் தயாரானவர்கள் இருக்கக் கூடும். தென்றலில் மிதந்து வந்து வருடிச் செல்லும் மெல்லிய மயிலிறகைப் போல என்னைப் பிரியட்டும் அந்த உயிர் எனக் காத்திருப்பவர்கள் மரணத்தை ரசிப்பதற்குரியதாகக் கருதக் கூடும். பிரியமானவர்கள் தரும் முத்தத்தை ஏற்றுக் கொள்ளும் ஆதர்சத்துடன் உள் வாங்கிக் கொள்ளக் கூடும். ஆனால் விபத்தும் நிகழ்வும் ஏற்படுத்தும் மரணத்தை அப்படி எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் மனித சமூகத்தின் தவிப்பாக இருக்கிறது.

க.செல்லப்பாண்டியன்
நூல்: பயங்கரவாதம் - ஓர் உளவியல் பார்வை

ரு மகாராஜா தன் அரண்மனையில் மிகச் சிறந்த சேவல் ஓவியத்தை வைக்க நினைத்தார். மன்னனின் ஆசை காட்டுத் தீ போல் எல்லா ஊரிலும் பரவியது. ஏத்தனையோ ஓவியங்கள் வந்தும் அவற்றில் மன்னனுக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. மற்ற நாடுகளில் உள்ள ஓவியர்களுக்காக ஒரு போட்டி வைத்தார் மன்னர்.

அவரது ஆசை போல், மற்ற நாட்டு ஓவியர்கள் வரைந்த படங்கள் மன்னரின் பார்வைக்காக வைக்கப்பட்டன. மன்னர் தான் குழந்தையாக இருந்த போது தனக்கு ஓவியம் கற்றுக் கொடுத்த அந்த வயதான ஓவிய ஆசிரியரை இப்போட்டியின் நீதிபதியாக நியமித்தார்.

எல்லா ஓவியங்களையும் பார்த்த அந்த வயதான ஆசிரியர் மீண்டும் ஒருமுறை ஓவியங்களைப் பார்த்தார். கன்னத்தைத் தடவிய படியே நடந்த அவரிடம், மன்னர்.

"என்ன சிறந்த சேவல் ஓவியத்தைத் தேர்வு செய்து விட்டீர்களா?" என ஆசையாகக் கேட்டார். "இந்தப் போட்டிக்கு இதில் எந்த ஓவியமும் தகுதி ஆனது இல்லை" என்றார். ஆசிரியர் அமைதியாக, எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு, "இந்த ஓவியங்கள் வைத்த அறையில், சேவல்களை விடுவோம். ஒரே இனத்தைச் சேர்ந்த மற்ற சேவலைப் பார்த்ததும், சேவலுக்குச் சண்டை போடத் தோன்றும். அப்படி எந்தச் சேவல், எந்த ஓவியத்தைப் பார்த்துச் சண்டை போடத் துவங்குகிறதோ, அந்த ஓவியம்தான் மிகச் சிறந்த ஓவியம் என்று முடிவு செய்வோம்" என்றார் அந்த ஓவிய ஆசிரியர்.

அவரது வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாமல், மன்னர் அந்த அறையில் நிறைய சேவல்களைக் கொண்டு வந்து விட கட்டளை பிறப்பித்தார். ஆனால் வந்த சேவல்கள் எந்த ஓவியத்தையும் பார்த்துச் சண்டை போடாமல், நேரே வெளியே வந்தன.

மன்னர் மனம் தளராமல், "சேவல்களைச் சண்டை போடத் தூண்டும் அந்த ஓவியத்தை நீங்கள் ஏன் வரையக்கூடாது?" என ஓவிய ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார்.

"மன்னர் உங்கள் சித்தம். ஆனால் எனக்கு ஆறு மாத கால அவகாசம் தேவை" என்றார் முதியவர். மன்னரும் சரி என்று "ஆறு மாதம் கழித்து, இதே அறையில் இப்போட்டி நடக்கட்டும்" என்று கட்டளை பிறப்பித்தார். காலம் சுற்றியது. சரியாக ஆறு மாதம் ஆனதும், அதே அறையில் எல்லா ஓவியர்களும் மீண்டும் கூடினார்கள். ஆனால் அந்த முதியவர் கையில் எந்த ஓவியத்தையும் கொண்டு வரவில்லை. மன்னர் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

"மன்னா ! இப்போது இங்கேயே அரை மணியில் வரைகிறேன். எனக்கு அதற்கான உபகரணங்கள் தேவை" என்று முதியவர் கூறியதும், அனைத்தும் வந்து சேர்ந்தன. ஓவியர் கடகடவென ஓவியத்தை வரைந்தார். பிறகு அதை மற்ற ஓவியங்களோடு வைத்தார். மீண்டும் அந்த அறைக்குச் சேவல்கள் அனுப்பப்பட்டன. எல்லோரும் மிக ஆவலாகக் காத்திருக்க, அவரது ஓவியத்தைப் பார்த்து ஒரு சேவல் அதில் வரையப்பட்டிருந்த சேவலை நிஜ சேவலாக நினைத்துச் சண்டைக்குப் போனது ! அப்போட்டியில் வெற்றி பெற்றது இவரது ஓவியம்தான் !

மன்னனுக்கு ரொம்ப சந்தோஷம். "உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? ஏன் ஆறு மாத காலம் உங்களுக்குத் தேவைப்பட்டது? இருப்பினும், நீங்கள் அப்போது எதுவும் வரையாமல், கடைசியில் வரைய அரைமணி நேரம் ஏன் கேட்டீர்களா?" என மன்னர் அந்த முதியவரிடம் கேட்டார்.

"மன்னா, கடந்த ஆறு மாதமாக நான் கோழி, சேவல்களோடு வாழ்ந்தேன் . அவை எப்படி உணவு உண்கிறதோ, அதுபோன்றே நானும் உணவு உட்கொண்டேன். அவை எப்படி நடக்கிறதோ அது போலவே நானும் நடந்தேன். அவை எப்படி தூங்குகிறதோ அது போலவே நானும் தூங்கினேன். நானே கோழியாக ஒன்றிப்போய் கோழியாகவே மாறி விட்டேன். அதற்குப் பிறகுதான் நான் அந்த சேவல் படத்தை வரைந்தேன்" என்று அந்த முதியவர் கூறினார்.

ஆகவே ஒரு காரியத்தில் ஒன்றிப் போதல் என்பது மிகவும் அவசியம். வெற்றியின் ரகசியம் ஈடுபட்ட காரியத்தில் ஒன்றிப் போவதுதான். அது எந்தக் காரியமாக இருந்தாலும் முழு ஈடுபாடும், ஒன்றிப் போவதும் முக்கியம்.

அலுவலக வேலையாக இருந்தாலும், வீட்டு வேலையாக இருந்தாலும் படிப்பாக இருந்தாலும் எடுத்த காரியத்தோடு நாம் ஒன்றிப் போனால், வெற்றி நிச்சயம்.

- இனிய திசைகள்


லிமையான கரையே என் காதலன்; நான் அவனது காதலி.

காதலால் கட்டுண்டவர்கள் நாங்கள். நிலவுதான் என்னை அவனிடமிருந்து இழுக்கிறது.

அவசரமாய் அவனை நோக்கி நான் செல்கிறேன்; சட்டென பிரிகிறேன்; பலமுறை சின்னச் சின்ன விடைபெறல்கள்.

நீலவானத்திற்கு அப்பாலிருந்து வெள்ளி நுரைகளை நான் சட்டென திருடி வந்து, அவனது பொன்மணல் மேல் பரப்பி வைக்கிறேன்.

ஒளிமயமாய் நாங்கள் கூடிக் கலக்கிறோம்.

நான் அவனது தாகத்தைத் தணிக்கிறேன். அவனது இதயத்திற்குள் செல்கிறேன்.

அவன் என் குரலை மென்மையாக்குகிறான்; என் சினத்தை அடக்குகிறான்.

விடியற்காலையில் நான் அவன் காதில் காதலின் விதிகளை ஓதுகிறேன். அவன் ஆசையோடு என்னைத் தழுவிக் கொள்கிறான்.

ஏற்றவற்ற அலைகளின்போது நான் நம்பிக்கையின் பாடல் பாடுகிறேன். அவன் முகத்தின்மேல் இனிய முத்தங்கள் பதிக்கிறேன்.

எனக்கு பயம். எனக்கு வேகம்.

ஆனால் அவன் அமைதி; பொறுமை;சிந்தனை.

அவனது நிம்மதியின்மையை அவனது பரந்த மார்பு அமைதிப்படுத்துகின்றது.

அலையடிக்க நாங்கள் தொட்டுக் கொள்கிறோம். அலை பின்வாங்க நான் அவனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்.

கடற்கன்னிகளைச் சுற்றி பல முறை நான் நடனமாடியிருக்கிறேன். அவர்கள் என் அடியாழத்திலிருந்து எழுந்து அலை நுனியில் நின்று விண்மீன் பார்ப்பார்கள்.

காதலர்கள் பலமுறை என்னிடம் வந்து முறையிடுவது வழக்கம். நான் அவர்கள் பெருமூச்சு விட உதவுவேன்.

பலமுறை நான் பாறைகளை சீண்டிவிட்டு பார்த்திருக்கிறேன். அவற்றை கிச்சுகிச்சு மூட்டியும் பார்த்திருக்கிறேன். அவை ஒரு முறை கூட சிரிக்கவே இல்லை.

என்னில் மூழ்கிப் போகிற உயிர்களை மென்மையாய் ஏந்தி கரை சேர்த்திருக்கிறேன்.

கரைக்காதலன் என் வலிமை எடுத்தது போல அவர்களுக்கு வலிமை தந்திருக்கிறான்.

பலமுறை நான் அடியாழத்திலிருந்து வைரமணிகளைத் திருடி வந்து என் காதலனுக்குப் பரிசளித்திருக்கிறேன். அவன் மெளனமாய் அவற்றை ஏற்றான். என்னை அவன் வரவேற்பான் என்று இன்னமும் தந்து கொண்டிருக்கிறேன்.

கனத்த இரவில் எல்லாம் உறங்க நான் அமர்ந்து ஒரு்முறை பாடுகிறேன். ஒரு முறை பெருமூச்சு விடுகிறேன். நான் என்றும் விழித்திருக்கிறேன்.

அந்தோ! உறக்கமின்மை என்னை பலவீனப்படுத்திவிட்டது. என்றாலும் நான் காதலியாயிற்றே? காதலின் உண்மை கனத்தது அல்லவா?

நான் களைத்துப் போனாலும் எனக்கு மரணமில்லை!

அலையின் பாடல் - கலீல் ஜிப்ரான்
நூல்: பொன்மணிப் புதையல்


ந்த மாருதத் தாலாட்டில் உறங்குதற்கு
மாட மாளிகை கட்டி வாழ்கின்ற பெரியீர் !

பணம் பணம் பணமென்று பாட்டாளியின் வியர்வையிலே
தினம் தினம் குளியல் நடத்திக் குவிக்கின்றீர் செல்வத்தை !

பிணம் தின்னும் கழுகு போல நீவிர்;
பெருக்க வைக்கின்றீர் உமது வயிற்றை !

இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஏழைகளைத் தள்ளிவிட்டு
பொருள் தேடி அலைகின்றீர்: போதுமென்ற மனதின்றி!

வாழ்வில் பெருக்கல் ஒன்றையேக் குறிக்கோளாய்க் கொண்டோரே ;
வார்த்தையொன்று கேட்கின்றேன் பதில் சொல்வீர்!!

மாணிக்கப் பொரியலும் மரகதக் கூட்டுமா இலையிலிட்டு உண்கின்றீர்?
வைரத்தால் வறுவல் செய்து வைடூர்ய அவியலுடன்
முத்துப் பவளமெனும் மணிகளால் செய்திட்ட அரிசியையா
குத்தி உலையிலிட்டுக் குடற்பையை நிரப்புகின்றீர்?

என்றதொரு கருத்தமைந்த கேள்வியினைக்
குன்றமெனச் செல்வன் குவிக்கின்ற மனிதரிடம்;
மன்றமேறி அறிஞ்ர் அண்ணா கேட்டார் - அதனை
மறவாமல் என்றும் நாம் கேட்கின்றோம் !

உண்பது நாழி; உடுப்பவை இரண்டேயெனும்
உண்மைதனை உணர்ந்த பின்னும்,
வறுமையில் பலர் வாட; வளமிகு செல்வப்
பெருமையில் சிலர் ஆடல் நீதிதானோ?

உலகில் பிறந்தார் அனைவருக்கும்;
உடல், உள்ளத் தேவையெல்லாம்
ஒன்றாக இருக்கும் போது - இதனை
நன்றாகச் சிந்திக்காமல்
வெள்ளம் போல் பொருள் எதற்கு ஒருவன் சேர்த்தல் வேண்டும்?
பள்ளம் போல் வாழ்வினிலே பலர் எதற்குச் சாதல் வேண்டும்?

தனக்கே எலாம் எனும் தனியுடமை தகர்த்துத்
தரித்திரத்தை விரட்டுவதற்குத் தக்க வழி காண
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொதுமைக் கொள்கையினை
வகுத்தளித்து வையத்தில் இன்பம் காண்பது தன் வாழ்வெடுத்த பயனாகும்...!

- கலைஞர் கருணாநிதி எழுதிய "சங்கத் தமிழ்" புத்தகத்திலிருந்து (பக்கம் 288)

கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல
உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது
நீ ஒரு கருவியே
இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை
இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே
இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை
தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்
நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே
உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்
ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம்.

- கவிக்கோ அப்துல் ரகுமான்

மது (ஆல்கஹால்) என்றால் என்ன?

ஆல்கஹால் அல்லது சாராயம் சாதாரணமாக மக்களால் உட்கொள்ளப்படும் போதைப்பொருட்களில் ஒன்று. இது பெரும்பாலான சமுதாயங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எளிதில் கிடைக்கக் கூடியதுமாகும். ஆல்கஹால் பல்வேறு விதங்களில் தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களால் போதைப்பொருளாகக் குடிக்கப்படுவது (ஈதல் ஆல்கஹால்) எனும் வகையாகும். இது தெளிந்த, நீர்த்த நிலையில் உள்ள ஒருவித எரியும் சுவையுடன் கூடிய திரவம். புளிக்க வைத்தல் மற்றும் காய்ச்சி வடிகட்டும் முறைகளில் இது தயாரிக்கப்படுகிறது.

குடிநோய் (ஆல்கஹாலிசம்) என்றால் என்ன?

குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும். அதன் முக்கிய அடையாளங்கள்:

1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது.

2. கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாமல் மேலும் மேலும் குடிப்பது.

3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம், தேவையற்ற பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது.

4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது.

குடிநோய் எந்தளவுக்கு அபாயமானது?

இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் முக்கிய காரணங்களில் குடிநோயும் ஒன்று. நம் நாட்டில் உள்ள மனநல சிகிச்சை மையங்களில் சேர்க்கப்படும் குடிதொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இளம் பருவத்தினரிடையே, முக்கியமாக மாணவர்களிடையே குடிப்பழக்கம் பெருகிவருவது கவலையளிப்பதாக உள்ளது. போதை காரணமாக ஏற்படும் பல்வேறு உடல் பாதிப்புக்கள், படிப்பில் ஆர்வமின்மை போன்றவை இதன் உடனடி விளைவுகள். இது இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக அமைந்துவிடுவதால் பல குடும்பங்களும் சமுதாயமும் வெகுவாகப் பாதிப்படைகின்றன.

ஒருவருக்கு குடிநோய் இருப்பதை எவ்வாறு அறியலாம்?

பின்வரும் நான்கு கேள்விகளில் ஒன்றுக்கேனும் உங்கள் பதில் “ஆம்” என்றிருந்தால், நீங்களோ அல்லது சம்பந்தப்பட்டவரோ குடிநோயின் ஆதிக்கத்திற்குட்படும் வருகிறீர்கள் என்றறியலாம்.

1. நீங்கள் எப்போதாவது குடிப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும் என்று எண்ணியதுண்டா?

2. உங்களது குடிப்பழக்கத்தின் காரணமாக மற்றவர்கள் உங்களை விமர்சித்து அதனால் நீங்கள் கோபமடைந்ததுண்டா?

3. நீங்கள் எப்போதாவது குடிப்பது தவறு என்று எண்ணி அதனால் குற்றவுணர்வு அடைந்ததுண்டோ?

4. நீங்கள் காலையில் எழுந்த உடன் முதல் காரியமாக உங்கள் நடுக்கத்தைக் குறைக்கவோ முந்தைய தினம் குடித்ததன் விளைவை அகற்றவோ குடிப்பதுண்டா?

இந்நிலையில் உடனடியாக இந்தக் கொடிய அடிமைப் பழக்கத்திலிருந்து விடுபட இதற்கென உள்ள மையங்களில் உள்ள மருத்துவர்களைச் சந்தித்தல் அவசியம். அவர்கள் உங்களுக்குத் தக்க ஆலோசனைகளையும் செயற்திட்டத்தையும் அளித்து உங்களை மீட்பது உறுதி.

ஏன் குடிக்கிறார்கள்?

சிறிதளவு மதுவை உட்கொள்ளும் போது ஏற்படும் பின்வரும் “குறுகியகால விளைவுகள்” மக்களை வெகுவாக ஈர்த்துவிடுவதால் குடிப்பதை விரும்புகின்றனர்.

1. மன இறுக்கம் அகன்று ஒருவித தசைத்தளர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

2. சுணக்கத்தை அகற்றி சுதந்திரமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.

3. பசி உண்டாகிறது.

4. வேதனை தரும் விஷயங்களை மறக்க உதவுகிறது.

இவையனைத்தும் அப்போதைக்கு மட்டுமே என்பதை அறியத் தவறிவிடுகின்றனர்.

குடிப்பது தொடர்பாக மக்களிடையே பரவலாக இருந்துவரும் “தவறான கருத்துக்கள்” எவை?

1. தினசரி சிறிதளவு மது அருந்துவது நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும். இந்த சிறிதளவு என்பது வரையறுக்கப்படாத ஒரு அளவு.

2. ஆல்கஹாலை அருந்தியவர் மாமிச உணவை உட்கொண்டு விட்டால் எந்த வித உடல் பாதிப்பும் ஏற்படாது.

3. பீர் மற்றும் திராட்சை மது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.

4. சிறிதளவு ஆல்கஹால் உடலுக்கு நல்லது.

5. ஆல்கஹால் பாலியல் உறவை மேலும் இன்பகரமானதாக ஆக்கும்.

6. குடிப்பதால் ஒருவர் தனது மனச்சோர்விலிருந்து விடுபட முடியும்.

7. குடித்துவிட்டால் மற்றவர்களுடன் நட்புடனும் தயக்கமின்றியும் பழகமுடியும்.

8. குடித்தால் இரவில் நன்கு உறக்கம் வரும்.

9. அலுவலக நேரங்களில் குடிப்பதால் நன்கு வேலை செய்ய முடியும்.

10. மன அழுத்தம் மற்றும் கவலைகள் காரணமாக ஏற்படும் பரபரப்பை அகற்றும்.

11. ஜலதோஷம் மற்றும் இருமலை, விக்ஸ் களிம்பு போன்று போக்கிவிடும்.

12. குடிப்பதால் மனத்திடமும் தைரியமும் ஏற்படும்.

13. தீவிர உடலுழைப்பில் ஈடுபடுவர்களுக்குத் தேவையான சக்தியை அளிக்கும்.

14. உடற்களைப்பைப் போக்கும்.

15. பிரசவித்த பெண்களுக்கு நல்லது.

16. உணவிற்கு முன்பு குடிப்பது பசியைத் தூண்டும்.

17. குடித்தால் மசாலா சேர்த்த மாமிச உணவு மேலும் ருசியுடையதாக இருக்கும்.

18. நண்பர்களை வருத்தமடையச் செய்வதைக் காட்டிலும் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குடிப்பதே மேல்.

ஒருவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டான் என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் எவை?

1. உடல் ஆரோக்கியம் நலிவடைதல் சிவப்பேறிய கண்கள், சருமம், வெளிறிய தோற்றம், எடை மாற்றங்கள் போன்றவை.

2. உடலில் ஒருவித துர்நாற்றம்.

3. பள்ளிக்குச் செல்லாமை, படிப்பதில் ஆர்வமின்மை, பள்ளி வேலைகளை சரிவர செய்யாதிருப்பது, கடைநிலைக்குச் சென்றுவிடுவது.

4. வீடுகளில் கூறப்படும் புத்திமதிகள் பள்ளி வீதிகள் ஆகியவற்றை எதிர்ப்புணர்வுடன் மீறத் தலைப்படுவது.

5. பள்ளி மற்றும் வீட்டருகே தகாத செயல்களில் ஈடுபடுவது.

6. காரணமின்றி பள்ளி மற்றும் வேலைக்குச் செல்லாமல் திரிவது.

7. வழக்கமான நண்பர்களை விட்டகலுதல்

8. புதிய நண்பர்களைப் பற்றி ரகசியமாக வைத்திருப்பது.

9. வீட்டு விவகாரங்களிலிருந்து விலகியிருப்பது, தனது செயல்களை யாருமறியாது ரகசியமாகச் செய்வது.

10. எதிலும் ஈடுபாடு குறைவு; சோர்வாகவும் வழக்கத்திற்கு அதிகமாக தூங்கிக் கொண்டும் இருப்பது.

11. உடல் சுத்தத்தில் கவனமின்மை. சரியாக தினசரி குளிக்காமலும் அழுக்கமான ஆடைகளைத் தொடர்ந்து அணிந்தும் இருப்பது.

12. இரவில் தாமதமாக வருதல். அதற்கு பல கட்டுக் கதைகளைக் கூறுதல்.

13. வீட்டில் யாருடனும் பேசாமல் இருப்பது அல்லது தவிர்ப்பது.

14. பணம் காணாமல் போவது, தனது சொந்த உடமைகளை விற்று விடுவது

15. கடைகளில் திருடுவது.

குடிநோயின் உச்சம்:

1. மிகவும் அதிகமாகக் குடிப்பது.

2. ஒரே மூச்சில் குடிப்பது.

3. கடுமையான நடத்தை கோபப்பட்டு கண்டபடி கத்துவது, சண்டையிடுவது.

4. எரிச்சலூட்டும் நடத்தை தூக்கமின்மை, உணவை உட்கொள்ளாமல் இருப்பது.

5. குடிப்பதை நிறுத்த முயற்சித்தாலும் தோல்வியடைதல்.

6. திடீரென மாறும் மனநிலை.

7. இடையறாது குடித்தல்

8. தனிமையில் குடித்தல்

9. ஏற்க முடியாத காரணங்களைக் கூறி மேலும் குடித்தல்.

10. மயங்கி விழும்வரை குடிப்பது.

11. உடல் பிரச்னைகள் அதிகரிப்பது.

12. முற்றிலுமாக மறந்து போதல்.

13. மது பாட்டில்களை பிறர் அறியாவண்ணம் மறைத்துப் பாதுகாத்தல்.

14. மன எழுச்சி, குடும்பம் மற்றும் நிதிப் பிரச்சனைகள்.

மேற்கூறியவற்றில் சில பிரச்னைகள் இருந்தாலே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதை அறிய வேண்டும்.

குடிப்பதற்கு ஆரம்பித்து குடிநோயாளியாக மாறுவதற்குகிடையில் உள்ள நிலைகள் எவை?

1. சோதித்துப் பார்க்கும் நிலை:

ஆல்கஹாலை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை அறிய ஆவலால் சிலர் குடித்துப் பார்க்க முயல்கின்றனர்.

2. சமூக நிகழ்ச்சிகள் நிலை:

நண்பர்களைச் சந்திப்பது விருந்துக் கூட்டங்கள் போன்ற சமூக நிகழ்ச்சிகளின் போது மது அருந்துவது.

3. சார்பு நிலை:

குடிக்காமல் இருக்க முடியாது எனும் நிலை. தொடர்ந்து தனியாகக் குடிக்கும் நிலை.

4. தீவிரமடைந்த நிலை:

குடிப்பவர் எப்போதும் உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். மேலும், குடித்தால் மட்டுமே இதிலிருந்து தப்ப முடியும் எனக் கருதுகிறார்.

ஆல்கஹால் ஒரு போதைப் பொருளா?

இதில் சந்தேகத்திற்கிடமே இல்லை. ஆல்கஹால் குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கமழித்துச் சோர்வை ஏற்படுத்தும் போதை மருந்தாகும்.

- மீனாட்சி மருத்துவ மலர்

Alcohol and the Human Body