'உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer] கூறினார். அவர்தான் அணுகுண்டின் பிதா! யுத்த சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ் இணைத்து, ஆணை யிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு ஆயுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி! ஒப்பற்ற விஞ்ஞான வல்லுநர், ஓப்பன்ஹைமர்! அணுகுண்டு ஓர் புதிய மரண யந்திரம்! வெடிக் கோளம்! விஷக் கோளம்! கதிர்க் கோளம்! கனல் கோளம்! ஒளிக் கோளம்! அழிவுக் கோளம்! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கி மடிவது பாமர மக்கள்! அணுகுண்டு வெடிப்பின் விளைவு, முடிவற்ற முடிவான மரணக் கோலம்! '
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் 1945 ஆகஸ்டு 6, அடுத்து 9 ஆம் தேதிகளில் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகியில் முதன் முதல் அமெரிக்கா மூர்க்கசக்தி பெற்ற அணு ஆயுதக் குண்டுகளைப் போட்டு, யுத்த அழிவுச் சரித்திரத்தில் ஒரு மாபெரும் புரட்சியை உண்டாக்கியது! 'எநோலா கே ' [Enola Gay] என்னும் B-29 வெடி விமானத்திலிருந்து, காலை 9:14 மணிக்கு 'லிட்டில் பாய் ' [Little Boy] என்னும் யுரேனியக் குண்டு [Uranium235] ஹிரோஷிமாவை நோக்கி விழுந்தது. பத்தரை அடி நீளமும், இரண்டரை அடி விட்டமுடன், 9700 பவுண்டு எடையுள்ள 15 கிலோ டன் TNT வெடிச்சக்தி கொண்ட அணுக்குண்டு 2000 அடி உயரத்தில் ஹிரோஷிமா நகரின் மையத்திலே வெடித்தது! சில நிமிடங்கள் கழித்து, பரிதிபோல் ஒரு பேரொளிச் சிவப்புக் கோளம் பொங்கி எழுந்தது! அதைத் தொடர்ந்து பயங்கர வெடிச் சத்தம் வானைப் பிளந்து, ஒரு பிரளயமே உண்டானது! பதினொன்று மைல் தூரத்தில் திரும்பிச் சென்ற எநோலா கே வால் புறத்தை வெடி அதிர்ச்சி அலைகள் தாக்கி விமானத்தை ஆட்டியதாம்! நூறு மைல் தூரம் சென்ற பின்னும், கோள முகில் விமானியின் கண்களுக்குத் தெரிந்ததாம்! பிரம்மாண்டமான முகில் காளான் [Mushroom Cloud] தோற்றத்தில் பொங்கிக் குமுறி எழும் புகை மண்டலம்! நடுவே சிவப்பு நிறக் கோளம்! கோளத்தின் உட்கருவில் பொருட்கள் எரியும் கோரமான அனல் பிழம்பு! எங்கெங்கு பார்க்கினும், குவியல் குவியலாய்த் தீப்பற்றி அழிக்கும் கோரக் காட்சிகள்!
'Little Boy ' யுரேனியக் குண்டு
ஹிரோஷிமாவில் மட்டும் 160,000 பேர் உயிர் இழந்தனர்! அதில் 60,000 பேர் பயங்கரமாகத் தீப்பற்றி எரிந்து கரிந்து போயினர். 130,000 பேர் காய முற்றனர். இதில் 43,500 பேர் படு காயப் பட்டனர். குண்டு வெடிப்புக்குப் பிறகு ஐந்து வருட மரண எண்ணிக்கை மொத்தம் 200,000 ஆக ஏறியது. மரணக் கணக்குப்படி, இரண்டு நகரிலும் 20%-30% அனல் வீச்சில் மாண்டனர். 50%-60% மற்ற அபாயத்தால் செத்தனர். 15%-20% கதிரியக்க நோயால் காலமானார்கள். நான்கு சதுர மைல் பரப்பில் 68% நகரக் கட்டிடங்கள் மற்றும் 24% பகுதிகள் சில நிமிடங்களில் தூள் தூளாகித் தரை மட்டமாயின! எண்ணிக்கையில் 70,000 கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன! நகர மாளிகை, தீயணைப்பு நிலையம், போலீஸ் நிலையம், தபால் நிலையம், ரயில்வே நிலையம், பள்ளிக் கூடங்கள், மருத்துவக் கூடங்கள், தெரு மின்சார வண்டிகள், மின்சக்தி நிலையங்கள் முழுவதும் தரை மட்டமாயின! 13,000 அடித் தொலைவில் இருந்த தொலை பேசிக் கம்பங்கள் கரிந்து போயின! நகரின் மருத்துவ டாக்டர்கள் 200 பேர் [90%] செத்து மாண்டனர்; அல்லது முடமாகிப் போயினர்! நகரில் இருந்த 1780 நர்ஸ்களில் 1654 பேர் கொல்லப் பட்டார்கள்: அல்லது காய மடைந்தார்கள். இருந்த 45 ஆஸ்பத்திரிகளில் 44 முழுமையாகவோ, அன்றிப் பகுதியாகவோ தகர்க்கப் பட்டன.
'Fat Man ' புளுட்டோனியக் குண்டு
ஃபாட் மான் ' [Fat Man] என்னும் 22 கிலோ டன் TNT அழிவுச் சக்தி கொண்ட புளுட்டோனியக் குண்டு [Plutonium239] நாகசக்கியில் விழுந்து, 1945 ஆண்டு முடிவு எண்ணிக்கைப்படி 70,000 பேர் செத்து மடிந்தார்கள்! 33% நகரப் பகுதி தரை மட்டமானது!
வெடி அதிர்விலும், வெடிப்பு அலையிலும், வெப்பக் கனலிலும் அழிந்தவர் போக, மற்றும் ஊடுருவிப் பாய்ந்த அணுக் கதிரியக்கம் தாக்கிப் பல்லாயிரம் பேர் பட்ட தொடர் வேதனைதான் எல்லாவற்றிலும் மிக முக்கியமானது! மூர்க்கமானது! முடிவில்லாதது! ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில் வெடியும், வெப்பக் கனலும் தாக்காமல் கடவுள் புண்ணியத்தில் தப்பியவர்கள், கடைசியில் கதிரியக்கம் தாக்கப்பட்டு, 'கதிர்எமன் ' கையில் மெதுவாகச் செத்து மடிந்தார்கள்!
யுரேனியக் குண்டு - உட்புறப் பாகங்கள்
மாபெரும் நகரம், நிமிடத்தில் மானிட நரகம் ஆனது!
குண்டு வெடித்தபின் உஷ்ணம் 1 மில்லியன் ஏறும் என்றும், ஒளித் தீக்கோளம் 800 அடி விட்டம் விரியும் என்றும், 'முகில் காளான் ' [Mushroom Cloud] 9 மைல் மேலே உயரும் என்றும், பின்பு உஷ்ணம் 15,000 ஊF ஆகக் குறையும் என்றும், அணுகுண்டு விஞ்ஞானிகள் கணக்கிட்டனர். வெடிமையத்தைச் [Hypocenter] சுற்றி 2 மைல் ஆரச் சுற்றளவில் உஷ்ணம் 5400 ஊF ஆகித் தீயில் எரிந்து கூடான மனிதரும், தீப்புண்களில் கரிந்து போனவர்களும் பலர்! வெடி அலைகள் வினாடிக்கு 2 மைல் வேகத்தில் அடித்து மனிதர்களைக் குப்புறத் தள்ளியது! மானிடரின் முகம் தீய்ந்து கருத்து, தலை மயிர் யாவும் எரிந்து பலர் புத்த பிச்சுக்கள் போல் காணப் பட்டனர்! அவர்கள் மேனியில் தோலுரிந்து, கரும் பிசாசுகள் நகர்ந்து செல்வது போல் நடமாடி, பாதையில் செத்துக் கிடந்தார்கள்!
மானிட நரகம் ஹிரோஷிமா
பாடிப் பறந்து கொண்டிருந்த பறவை இனங்கள் அந்தரத்திலே எரிந்து சாம்பலாயின! ஓடிய அணில்கள், வீட்டுப் பூனைகள், நாய்கள் மாயமாய் மறைந்து போயின! நகர் முழுவதும் ஒளி மயத்தில் பளிச் சென்று ஒளிர்ந்து, தீக்கோளம் எழுப்பி அணு ஆயுத மரண யந்திரம் வினை விதைத்தது போல் தோன்றியது! மரங்கள் யாவும் எரிந்து பாலை வனக் கரும் நிழற் படங்களாய் நின்றன! தொலைபேசி, மின்சாரக் கம்பங்கள் யாவும் கரிந்து வளைந்து போயின! காணும் இடமெல்லாம் மயானக் காடுகள் போல் எரியும், மனிதச் சடலங்கள் கணக்கில் அடங்கா!
விமானத்தையும், ஒளிக் கோளத்தையும் உற்று நோக்கியோர் கண்கள் அவிந்து போய்க் குருடாயின! ஒரு குமரிப் பெண் கூறினாள், 'ஒரு பெரும் சுத்தியலால் அடிபட்டு, அதிர்ச்சி அடைந்து, கொதிக்கும் எண்ணையில் தள்ளப் பட்டது போல் உணர்ந்தேன்! எங்கேயோ தூக்கி எறியப்பட்டு திசை யெல்லாம் மாறிப் போனதாய்த் திக்கு முக்காடினேன்! ' ஒரு இளம் பெண்ணின் அவலக் குரல் கேட்டது. அவள் முதுகு பூராவும் எரிந்து, கூனிப் போய்க் கதறிக் கொண்டிருந்தாள். உதவி ஆட்கள் அவளுடைய தாயைத் தூக்கிக் கொண்டு வந்தனர். தாயின் முகமும், உதடுகளும் வீங்கிப் போய், கண்கள் மூடியபடி இருந்தன! இரு கைகளிலும் தோல்கள் உரிந்து, ரப்பர் கையுறைபோல் தொங்கின! அவள் இடுப்புக்கு மேல் உடம்பில் எல்லா இடங்களும் கோரமாய் எரிந்து போயிருந்தன!
மனிதர்களின் உடம்பு பூதம்போல் பயங்கரமாய் வீங்கிப் போயிருந்தது! ஒரு மனிதன் கண்ணில் ஈட்டி போல் ஏதோ குத்தி, உதிரம் கொட்டி அலறிய வண்ணம் குருடனாய் அங்கு மிங்கும் ஓடிக் கொண்டிருந்தான்! எரியும் உடம்போடு ஓடி வந்து, ஒருவன் குளத்தில் குதித்தான்! குளத்தின் நீர் சூடாக இருந்தது. ஏற்கனவே, அந்தக் குளத்தில் எரிந்து போன சடலங்கள் பல மிதந்து கொண்டிருந்தன! அனலில் கரிந்த மாது ஒருத்தி, எரிந்த கைப் பிள்ளையை இறுகக் கட்டிய வண்ணம் சாய்ந்து செத்துக் கிடந்தாள்!
ஒரு மின்சார வண்டி எரிந்து போய் வெறும் கூடாரம் போல் நின்று கொண்டிருந்தது! உள்ளிருந்த மாந்தர் அத்தனை பேரும் உருவம் தெரியாமல் கரிக் கூடுகளாய் உயிரற்றுக் கிடந்தனர்! ஓரிடத்தில், கரிந்து போன தாய் முலைக் காம்பிலிருந்து, பால் பருகக் குழந்தை வாய் வைத்துக் கொண்டிருந்தது! அணு ஆயுதம் ஹிரோஷி மாவில் நடத்திய அவல நாடகக் காட்சிகள் எல்லாவற்றையும் எழுத இங்கே இடம் போதாது!
வெடியின் விளைவை நேரில் கண்ட இரு ஜப்பானியரின் நிஜக் கதை!
Dr. மிச்சிஹிகோ ஹசியா [Dr. Michihiko Hachiya]: 'பொழுது புலர்ந்து எழிலுடன் இலைகள் சலசலக்க, காலை இளம் பரிதி முகிலற்ற கீழ் வானில் மெதுவாய் எழுந்தது. மருத்துவக் கூடத்திற்குப் போக உடை அணிந்து கொண்டு புறப்படும் சமயம், யுத்த அபாயச் சங்கு ஊதியது! பறக்கும் விமானச் சத்தம் கேட்டது. திடாரென மாபெரும் மின்னல் ஒளிமயம் வெட்டிக் கண்ணொளியைப் பறித்தது! அடுத்து ஓர் பேரொளி! தோட்டத்தில் இருந்த லாந்தல் உலோக விளக்கு என்று மில்லாத பிரகாசத்தில் ஓளிர்ந்தது! வெளிச்ச மயமாய் இருந்த வானத்தில் விரைவில் இருள் கவ்வியது. சட்டென அருகில் நின்ற தூண் ஒன்று சாய்ந்து, வீட்டுக் கூரை சரிந்து அபாய நிலையில் தொய்ந்தது! வீட்டிலிருந்து தப்பி ஓட முயலும் போது, மரக் கம்பங்களும், இடிந்த கட்டிடக் குப்பைகளும் வீதியில் நிறைந்து, பாதையில் தடையாயின! எப்படியோ தாண்டிப் போய் தோட்டத்தினுள் நுழைந்தேன். ஏதோ தாங்க முடியாத ஓர் பெருங் களைப்பு என்னை ஆட்கொண்டது! திடாரென நான் அமணமாய்ப் போனது எனக்குத் தெரிந்தது! என் கோட்டும், சூட்டும் என்ன வாயின ? என்ன நடந்து கொண்டிருக்கிறது ? என்னுடலின் வலது புறம் யாவும் வெட்டுப் பட்டு, உதிரம் பீரிட்டது! கூரிய ஒரு நீண்ட இரும்பு ஆணி என் தொடையைக் குத்தி வலியை உண்டாக்கியது! என் கன்னம் கிழிந்து வாயில் இரத்தக் குளமானது! கழுத்தில் குத்திய ஓர் உடைந்த கண்ணாடி பீங்கானைக் கையால் எடுக்க, மேனி முழுதும் இரத்தக் குளிப்பில் நான் நடுங்கினேன்! முதல் அணு குண்டால் தாக்கப் பட்ட இந்த டாக்டர்தான், தன் காயத்துடன் காயம் பட்ட நூற்றுக் கணக்கான ஜப்பானியர் களுக்குச் சிகிட்சை செய்திருக்கிறார்!
சுடோமு யமகூச்சி [Tsutomu Yamaguchi]: திடாரென மெக்னீஷியம் தீப்பிழம்பு போல் ஓர் ஒளிமயமான மின்னல் வெட்டியது! தொடர்ந்தது ஒரு பேரிடிச் சத்தம்! பூமிக்கு மேல் 2 அடி தூக்கப் பட்டேன்! அடுத்து பயங்கரக் காற்று என் மீது வீசிச் சென்றது. பேயடித்தது போல் வீதியில் எவ்வளவு நேரம் கிடந்தேன் என்று எனக்கே தெரியாது! எழுந்த போது, இருள் சூழ்ந்து, கண்ணுக்கு எதுவும் தென் படவில்லை. வெக்கை யுள்ள பட்டப் பகல் திடாரென நள்ளிராப் பொழுது போல் ஆனது. என் கண்கள் இருட்டுக்கு இணங்கிப் போனபின், தூசிக் குப்பைகள் தொடர்ந்து வேகமாய் வீசின! தூசி குறைந்த பின், சூழ்வெளி தெரிந்தது. எங்கெங்கு நோக்கினும், உடைந்த பொருட்களின் குவியல்! எரியும் தீமயம்! நகர்ப் புறம் பார்த்தால், பிரம்மாண்டமான ஒரு ராட்சதக் காளான் [Mushroom] தோற்றத்தில் வானுயர்ந்த முகில் பூதம்! அந்த முகில் கோளம் பார்ப்பதற்கு பயமூட்டும் ஒரு பேயுருத் தூணாகத் தோன்றியது! அது சுற்றியுள்ள எல்லா பொருட்களின் நிறத்தையும் மாற்றிக் கொண்டே இருந்தது. மிக்க வலுவில்லாமல், முகத்திலும் கையிலும் பற்றிய நெருப்புடன், தீராத வேதனையோடு அருகே இருந்த உருளைக் கிழங்கு வயலை நோக்கித் தடுமாறிக் கொண்டு சென்றேன். சில சமயம் என்னால் ஊர்ந்து செல்லத்தான் முடிந்தது! பிறகு எனக்குப் பயங்கரத் தாகம் உண்டானது. எதிரே ஐந்து வாலிபப் பையன்கள் அமணமாகக் கிழிந்த துணிகளு டன் இருந்தனர். அருகில் வந்ததும் அவர்கள் யாவரும் வெளுத்துப் போய், நடுங்கிக் கொண்டிருந்தார்கள். நான் இத்தகையக் கோரக் காட்சியை இதுவரைக் கண்டதில்லை! மேனி எங்கும் வெட்டுக் காயத்தால் உதிரம் ஆறாக ஓடிக் கொண்டி ருந்தது! கொதிக்கும் எண்ணெயில் வெந்தது போல் சிவந்து, தோலுரிந்து வேர்வை சொட்டச் சொட்ட வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார்கள்! வெடி அதிர்வால் தீய்ந்த புண்களில் பச்சைப் புல் கொத்தாய் ஒட்டிக் கொண்டிருந்தது. முதுகில் எல்லா இடங்களிலும் சாட்டையால் அடித்தபோல் காயங்கள்!
உயிர் பிழைத்தோர் பெற்ற கதிரியக்க நோய்கள்
உயிர் தப்பியவர்கள் பலர் புதுவிதக் கதிர் நோய்கள் [Radiation Sickness] தம்மைத் தாக்குவதை உணர்ந்தார்கள். தலைச்சுற்று, மயக்கம், வயிற்று வலி, வாந்தி, பசியில்லாமை, வயிற்றாலை, மலத்தில் இரத்தம், கடுஞ் சுரம், வலுவின்மை, தோலில் சிவப்புப் பொட்டுகள், மேனியில் வீக்கம், வாய் கழுத்து பல்லணை [Gum] இவற்றில் அல்ஸர், இரத்தக் கசிவு, மலத் துவாரம், சிறுநீர்த் துவரங்களில் இரத்தக் கசிவு, தலை மயிர் உதிர்ப்பு போன்ற உடற் பழுது அறிகுறிகள் தோன்றி, நோய் வருகையை முன்னறி வித்தன! மிகையான கதிரடி [Radiation Dose] வாங்கியோர் உதிரத்தில், வெள்ளை செல் [White Blood Cells] எண்ணிக்கை, மிகக் கீழாக குறைந்தது! அதிகமான 'மரண அடிக் ' [Lethal Dose] கதிரியக்கம் தாக்கப் பட்டோர் சில மணி நேரத்தில், அல்லது சில நாட்களுக்குள் செத்து மடிந்தனர். மரண அடிக்கும் குறைந்த அளவு கதிரடி பட்டோர், சிறுகச் சிறுகச் சாவை அண்டி வந்தனர்.
வெடிப்பிளவின் நேரடிக் காமாக் கதிரடி [Direct Gamma Radiation] பட்டோர், பட்ட இடத்தில் தசைகள் சமைக்கப்பட்டு ஆறாத கதிர்ப் புண்களாகி வேதனையில் துடித்தனர். இவ்விதத் தாக்குதலால், இறுதியில் ஆழமான தசை அழிவு ஏற்பட்டு, மாபெரும் இரத்தக் கசிவு [Hemorrhage] தொடர்ந்து, அவர்கள் யாவரும் மரணத்தைப் போய்த் தழுவிக் கொண்டார்கள்!
போர் முடிந்த பின்பு, ஹிரோஷிமா, நாகசாகியில் தப்பினோர்களின் மார்பு எக்ஸ்ரேயைச் சோதித்த போது, ஆயிரக் கணக்கான பேர் புற்றுநோயிலும் [Cancer], லுக்கீமியாவிலும் [Leukemia], முலைப் புற்றுநோயிலும் சாகப் போகி றார்கள் என்று அறியப் பட்டது. டாக்டர் நார்மன் கென்ட்நர் [Dr. Norman Gentner, Senior Scientist, Health and Environmental Sciences, Atomic Energy of Canada Ltd] விஞ்ஞானி வெளியிட்ட 1997 கணக்கிதழ் அறிக்கைப்படி, இரண்டு நகரிலும் மொத்தம் 15405 பேர் [1950-1990] புற்றுநோயில் செத்திருக்கிறார்கள். லுக்கீமியாவில் இறந்தவர் எண்ணிகை இதுவரை 249 பேர். புற்றுநோய் மரணங்கள் இன்னும் பல்லாண்டுகள் தொடரும்!
கதிரடிக் காயம் [Radiation Injury] பெறும் கர்ப்பிணிப் பெண்களின் கருவைக் காமாக் கதிர்கள் பாதித்துப் பெருமளவில் முரண்பாடுகளை உண்டு பண்ணுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணு ஆயுதக் கதிரியக்கம் தாக்கிய கர்ப்பிணிப் பெண்கள் பெற்ற பிள்ளைகள், நரம்பு அமைப்பாட்டில் பழுதுகள் ஏற்பட்டு, சிறிய தலைவுடன் மூளை சிறுத்துப் போய், கண்கள் குறுகி வளர்ச்சி அடையாது, அங்க ஈனமுடன், மனக் கோளாறுகள் [Mental Retardation] நிரம்பிப் பிறந்ததாக அறியப்படுகிறது!
உலக அணு ஆயுத வல்லரசுகளுக்கு ஓர் வேண்டுகோள்!
ஓர் அணுகுண்டு ஆயிரம், ஆயிரம் உயிர் இனங்களைத் தாக்கிச் சித்திரவதை செய்து அழிக்கும் ஓர் அபாய ஆயுதம்! அதன் கோரக் கொடுமைகள் தப்பியோ ரையும், தப்பினோர் சந்ததிகளையும் விடாது பற்றிக் கொண்டு, பல்லாண்டு காலம் நிழல் போலத் தொடர்ந்து பாதிப்பவை! ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, 1955 ஏப்ரல் மாதம் பிரிட்டிஷ் மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் [Bertrand Russell] தயாரித்த 'அணு ஆயுதப் போர்த் தடுப்பு ' விண்ணப்பத்தில் தானும் கையெழுத்திட்டு மற்ற உலக விஞ்ஞானிகளோடு சேர்ந்து கொண்டு ஒன்றாகக் குரல் எழுப்பினார்! 'எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகிறது! அதை அகில நாடுகள் உணர வேண்டும்! பிறகு அபாயங்களை அனைவரும் அறிய வெளிப்படுத்த வேண்டும்! அப்பணியை உடனே செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை விரைவு படுத்துகிறோம். நாடுகளின் தீராச் சச்சரவுகள் உலகப் போர்களால் ஒருபோதும் தீரப் போவதில்லை! தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் '.
அணு ஆயுத வல்லரசுகளே! உங்கள் அறிவுக் கண்கள் திறக்கட்டும்! ஜப்பானில் முதன் முதல் போட்ட அணுகுண்டுகளே, உலகின் இறுதியான முடிவு அணுகுண்டுகளாக இருக்கட்டும்!
- சி. ஜெயபாரதன், கனடா.
ஆதாரம்:
1. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes
2. Oppenheimer, By: James Kunetka
3. HandBook of World War II, Abbeydale Press
4. The Deadly Element, By: Lennard Bickel
5. Canadian Nuclear Society Bulletin, June 1997
http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203245&format=print
Hiroshima - Nagasaki - Original 1945 Documentary 1/5
Hiroshima - Nagasaki - Original 1945 Documentary 2/5
தலைப்பு : Who is Wrong? Who is Right?, அந்த நாள், வரலாறு, வீடியோ
தற்போது இந்த பூவுலகில் மனிதர்கள் எண்ணற்ற அதிசயங்களையும், வெற்றிகளையும் கண்டு வருகின்றனர். முன்பிருந்த காலத்தோடு ஒப்பிடுகையில் தற்போது மனிதர்கள் பல் விதமான முன்னேற்றங்களைக் கண்டு விட்டனர், கண்டும் கொண்டிருக்கின்றனர். இந்த மனிதன் எங்கிருந்து தோன்றினான்? இந்த பூமி எப்போது தோன்றியது? எங்கிருந்து மனிதனுக்கு இவ்வளவு ஆற்றல் கிடைத்தது என்பது இன்றும், இவையெல்லாம் நம் சிந்தனைக்கு எட்டாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. இதற்கான தேடல்களும், ஆராய்ச்சிகளும் பல மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இவை எப்போது தோன்றின என்பதற்கான விடைகள் இன்னும் சரியாக கணக்கிடப்படவில்லை. இருப்பினும் அறிவியல் ஆய்வாளர்கள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டிருந்த பல ஆய்வுகளின் முடிவின்படி இந்தப் பூவுலகம் எப்போது தோன்றியது என்பது ஓரளவு கணிக்கப்பட்டிருக்கிறது. பூமியில் மனிதனின் தோற்றம், அவன் மொழியைக் கற்றுக்கொண்ட விதம் பற்றிய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.
வற்றாத நீரும், வளமான நிலமும், வாயு மண்டலமும் சூழ்ந்த உயிரினமும், பயிரினமும் கொண்ட அண்டகோளமானது நாம் வசிக்கும் இந்த பூகோளம். இந்த கோளம் சுற்றிவரும் சூரியன் ஒரு சுய ஒளி விண்மீன். அவ்வாறாக கோடான கோடி விண்மீன்களைக் கொண்டது ஒளிமய மந்தை எனப்படும் "கேலக்ஸி" (Galaxy). இந்த "கேலக்ஸியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் கிரகமானது நம் பூமி. அறிவியலாளர்கள் பல மூலங்களைப் பயன்படுத்தி பூமி தோன்றிய காலத்தை பல வகையாக கணித்திருக்கின்றனர். பெரிய பாறைகள், பூமியில் விழுந்த விண்கற்கள் ஆகியவற்றைக் கொண்டு பல ஆய்வுகளை நடத்தி, பூமி இப்பொழுதுதான் தோன்றிய காலத்தை பற்றிய சில முடிவுகளை நமக்குக் கொடுத்திருக்கின்றனர்.
பூமி சுமார் 4.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்பது விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்து. பூமி தோன்றிய நாள் முதலாக, பூமியின் தளவடிவம் தொடர்ந்து மாறுபட்டு வந்திருக்கிறது என்று வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பூமியிலிருக்கும் மிக்க முதுமையான பாறையைக் கொண்டு அறிவியலாளர்கள் ஓர் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். அந்த ஆய்வின்போது அப்பாறையின் மூலத்தின் கதிரியக்கத் தேய்வை (Radioactive Decay of Elemets) ஆராய்ந்து, பூமியின் வயது 3.8 மில்லியன் என்று கணிக்கிட்டிருக்கிறார்கள். ஆனால், பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் (Meteorites) மூலக் கதிரியக்கத் தேய்வை ஆராய்ந்த போது, மீண்டும் சூரியக் குடும்பத்தில் பூமியின் வயது 4.6 மில்லியன் என்று கணித்திருக்கின்றனர். விண்வெளி விஞ்ஞானம் பேரளவில் விருத்தி அடைந்து கொண்டிருக்கும் இந்த மகத்தான யுகத்திலே, வானியல் நிபுணர்கள் பிரபஞ்சத்தின் வயதைக்கூட கணக்கிட பல்வேறு முறைகளையும் ஆய்வுகளையும் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். இருப்பினும் பிரபஞ்சத்தின் உண்மையான வயதை தெரிந்து கொள்ள இன்றும் முடியவில்லை. பூமிக்கடியில் புதைந்திருக்கும் புராதனப் பாறைகளில் உள்ள மூலங்களின் கதிரியக்கத் தேய்வை கணக்கிட்டு பூமியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என்று அறியப்பட்டது.
வான்மண்டலத்தில் ஒளிமிக்க விண்மீன்களின் ஒளித்திரட்சியையும் அதன் உஷ்ணத்தையும் பல மாதங்களுக்குப் பதிவு செய்து விண்மீனின் தூரத்தோடு ஒப்பிட்டு பிரபஞ்சத்தின் வயதை 12 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டது. இதைத் தவிர, சூரியன் தோற்றுவித்த காலத்தையும் சில ஆய்வுகளின் மூலம் தெளிவு செய்துள்ளனர். சூரிய பரிதியின் பிளாஸ்மா (Plasma) எனப்படும் ஒளிப்பிழம்பின் வெப்பத்தையும், அதன் வாயுக்களையும் கொண்டு செய்த ஓர் ஆய்வில் சூரியன் 10 பில்லியன் வயது கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.
பூமி தோன்றிய காலத்தைப் பற்றிய ஆய்வுகளின் முடிவுகள், குத்துமதிப்பாக பூமி மேற்குறிப்பிட்ட காலத்தில் தோன்றியிருக்கும் என்றுதான் கூறுகின்றன. ஆனால் மனிதன் எப்போது தோன்றினான், அவனின் மொழி எப்படி தோன்றியது என்பதனைப் பற்றிய ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொள்வதை விடவில்லை. இதற்கும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இறுதியில் இதற்கான பதிலையும் அறிவியலாளர்கள் கணித்தனர். மனிதன் தோன்றிய காலத்தில் அவன் தனது இனத்தோடு தொடர்பு கொள்ள தற்போது இருக்கும் தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம், கிரேக்கம், அரபு மொழிகள் அல்லது இதர மொழிகளைப் பயன்படுத்தவில்லை. இவைகளெல்லாம் மனிதன் தோற்றுவித்து பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டவை என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி மனிதர்கள், விலங்கினக் கூட்டத்தில் சேர்ந்த ஒரு இனமே. ஆறாவது அறிவு எனக்கூறப்படும் பகுத்தறிவு கொண்டவன் என்பதே அவனை மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டு காட்டுகிறது. விலங்குகள் மனிதர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை.
ஏறக்குறைய மனிதனை ஒட்டிய குணாம்சங்கள் அவைகளுக்கு உண்டு. பரிணாம வளர்ச்சியின் போக்கில் குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் என்று சொல்கிறது அறிவியல். மனிதர்களின் ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
வாய் வழி ஒலி எழுப்பி மற்றவர்களோடு தொடர்பு கொண்ட மனிதன், காலப்போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கலாம் என்பது தெளிவு. ஆனால் மனிதன் முதலில் சைகைகளையும், உடல் அசைவுகளையும் மூலமாகக் கொண்டு செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருப்பார்கள் என்பதனை ஆதாரப்பூர்வமாகக் கூறுகின்றனர் நம் அறிவியலாளர்கள்.
மனிதர்கள் இயல்பாகவே அதிகமாக அங்க அசைவுகள் சைகைகள் மூலம் தொடர்பு கொள்ளக் கூடியவர்கள். மனித மொழி இத்தகைய அங்க அசைவுகளை முக்கியமாகக் கொண்ட சைகை மொழியாகவே முதலில் தோன்றியது. பிறகு பரிணாம வளர்ச்சிக்கிணங்க மனித மூளையின் மொழியைச் சார்ந்த பகுதிகள் நன்றாக வளர்ச்சியடைந்த பின், பேச்சு மொழியானது உருவாகியிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மேலும் மனிதன் சைகைகளுக்கு வலது கைகளையே அதிகம் பயன்படுத்துகிறான். வலது கையைக் கட்டுப்படுத்துவது இடது பக்க மூளையாகும். மனித மொழிக் கட்டுப்பாட்டு மையம் அமைந்திருப்பதும் இடது பக்க மூளையில்தான் என்பதன் மூலம் மனித இனத்தின் மொழி சைகைகளில் உருவாகியது என்பதில் சந்தேகமில்லை.
www.mykathiravan.com
தலைப்பு : அந்த நாள், அறிவியல், உங்களுக்கு தெரியுமா?, கட்டுரைகள், வரலாறு
1947
கொண்டாட்டங்கள்... கொடியேற்றம்... என்று தேசம் விடுதலையை கொண்டாடிய ஆண்டு. இருட்டிலே வாங்கினோம் என்று பின்னர் நம்மில் பலரும் கேலி பேசினாலும்; வாஸ்கோடகாமா 1498-ஆம் ஆண்டு கால் வைத்த நாள் துவங்கிய கொடுமைகளும் வேதனைகளும், போராட்டங்களும் அரசியல் அரங்கிலேனும் ஒரு முடிவுக்கு வந்ததே என மக்கள் கொண்டாடினர்.
ஆனால் 1947 என்பது விடுதலையின் ஆண்டு மட்டுமல்ல.
இந்தியா என்கிற ஒரு தேசம் இந்தியா-பாகிஸ்தான் என இரண்டாக்கப்பட்டது. மத்தியும் தெற்கும் கொண்டாட்டத்திலிருந்த நாட்களில் மேற்கிலும் கிழக்கிலும் வடக்கின் பல பகுதிகளிலும் பிரிவினையின் அர்த்தத்தை கோடான கோடி மக்கள் வர்ணிக்க முடியாத துயரங்களுடனும் இழப்புகளுடனும் உள்வாங்கிக் கொண்டிருந்தனர். பிரிவினைக்குக் காரணம் முஸ்லீம்லீக் தான் என்று ஒரு சாரரும் ஜின்னாதான் என்று சிலரும்; காங்கிரஸ்தான் என்று ஒரு சாராரும் காலம் காலமாக சாதி இந்துக்கள் இஸ்லாமியரை தீண்டத்தகாதவராக நடத்தியதுதான் காரணம் என்று பலரும் - இதெல்லாம் தவறு, விடுதலைக்குப் பிறகு வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரத்தில் பங்கு பற்றிய அச்சம் கொண்டிருந்த இஸ்லாமிய உயர் மத்தியவர்க்கமும்; செல்வந்தரும்தான் பிரிவினைக்கு வித்திட்டனர் என்று ஒரு வாதமும் எல்லாவற்றுக்கும் மேலாக பிரிட்டிஷ் ஆட்சியாளன் பின்த்தாளும் சூழ்ச்சியும் தாங்கள் போன பிறகு இந்தியர்கள் தமக்குள் வெட்டிக்கொண்டு சாகட்டும் என்கிற அவர்களின் நல்லெண்ணமும் தான் காரணம் என ஒரு வாதமும் - என தேசமெங்கும் வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்தது.
ஆனால் மக்களில் ஒரு பகுதியினர் வேறு விதமாகவும் நினைத்தனர். இந்து - முஸ்லீம் கலவரங்கள் இத்தோடு ஒழிந்துவிடுமல்லவா? முஸ்லீம்களுக்கே தனியாக ஒரு நாடு என்று கொடுத்துவிட்டோம். இத்தோடு பகைமையின் கதை முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
ஆனால் பகைமையின் வேர்கள் இன்னமும் ஆழமாக இரு நாட்டு மண்ணிலும் ஊடுருவி நின்று வருங்காலத்திலும் தொடர தேசப்பிரிவினை மேலும் ஒரு காரணமாகி விட்டதை அவர்கள் அன்று அறிந்திருக்கவில்லை.
இன்றுவரை தொடர்ந்து நம் மீது கருநிழல் கவிழ்க்கும் மிகப்பெரிய சரித்திர நிகழ்வாக பிரிவினை இருந்து வருகிறது.
தமிழர்களாகிய நம்மால் - அதிலும் இன்று வாழ்கிற நம்மால் - தேசப்பிரிவினை உணர்ந்து கொள்ளப்படவில்லை. இன்றைய வகுப்புவாதப் பிரச்சினைகளை புரிந்து கொள்ள தேசப்பிரிவினை பற்றிய ஒரு மீள்பார்வை நமக்கு அவசியம்.
1947 ஜூன் 3 அன்று இரண்டு நாடுகளாக இந்தியாவைப் பிரிக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. அப்போது இந்தியாவில் இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தது. அந்த அரசு ஒரு பிரிவினை கமிட்டி-யை நியமித்தது. கவர்னர் ஜெனரல் தலைமையில் சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், திரு.லியாகத் அலிகான் மற்றும் சர்தார் அப்துர் ரப் நிஷ்தர் ஆகியோரைக் கொண்டு அக்குழு இயங்கியது.
ஜூன் 18, 1947-ல் பிரிட்டிஷ் பாராளுமன்றம் இந்திய விடுதலை மசோதாவையும் பிரிவினை மசோதாவையும் நிறைவேற்றியது. மூன்றே அனுபந்தங்களையும் பிரிவினைகளையும் மட்டுமே கொண்ட அந்த மசோதா தேசப் பிரிவினையை அமுல்படுத்த பத்து நிபுணர் குழுக்களை நியமித்தது.
அவை:
1. அமைப்பு, ஆவணங்கள், அரசு அலுவலர்
2. சொத்துக்கள் மற்றும் கடன்கள்
3. மத்திய வருவாய்
4. ஒப்பந்தங்கள்
5. கரன்சி, நாணயம் மற்றும் பரிவர்த்தனை
6. பொருளாதார உறவுகள் - குழு - 1
7. பொருளாதார உறவுகள் - குழு - 2
8. வாழுமிடம்
9. வெளியுறவு
10.ராணுவம்
இந்த நிபுணர்குழு எதுவும் இடம் பெயர்ந்த மக்களின் துயரத்தையோ நடைபெற்ற கலவரங்களையோ பற்றி கவனிக்கவேயில்லை.
1947 ஜூன் 30 அன்று 'எல்லைக் குழு' ( Boundry Commission ) நியமிக்கப்பட்டது. பஞ்சாப் பவுண்டன் கமிஷன், பெங்கால் பவுண்டன் கமிஷன் என இரு குழுக்கள்.
இரண்டு குழுக்களுக்கும் தலைவராக சர்.சின்ல் ரேட்கிளிஃப் (Sir Cyril Radcliff) பிரிட்டிஷ் சட்ட வல்லுநர் நியமிக்கப்பட்டார்.
பஞ்சாப் பவுண்டன் கமிஷன்
1. சர்சின்ல் ரேட்கிளிஃப்
2. ஜஸ்டிஸ் தின் மொகம்மது
3. ஜஸ்டிஸ் முகமது முனிர்
4. ஜஸ்டிஸ் மெகர்சந்த் மகாஜன்
5. ஜஸ்டிஸ் தேஜாசிங்
வங்காள பவுண்டன் கமிஷன்
1. சர் சின்ல் ரேட் கிளிஃப்
2. ஜஸ்டிஸ் பி.கே. முகர்ஜி
3. ஜஸ்டிஸ் சி.சி. பிஸ்பாஸ்
4. ஜஸ்டிஸ் அபு சலேஷ் முகமது அக்ரம்
5. ஜஸ்டிஸ் எஸ். ஏ. ரஹ்மான்
ஒவ்வொரு குழுவிலும் இரண்டு இந்துக்கள் இரண்டு முஸ்லீம்கள் ஆனால் எல்லோரும் நீதிபதிகள். சாதாரண மக்களிலிருந்தோ இயக்கங்களிலிருந்தோ எவருமில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
பொதுமக்களிடமிருந்து பிரிவினை குறித்த மனுக்களை இக்கமிஷன்கள் வரவேற்றன. காங்கிரஸ் கட்சி, முஸ்லீம் லீக், இந்து மகாசபை, மற்றும் சீக்கிய அமைப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வாதங்களை இக்கமிஷன்களிடம் முன்வைத்தன. ஆனால் பெரும்பான்மையினரான படிப்பறிவற்ற இந்திய மக்களிடம் எவரும் கருத்து கேட்கவில்லை.
இரண்டு கமிஷன்களில் இருந்த உறுப்பினர்களுக்கு இடையிலும் தீர்க்கவே முடியாத கருத்து முரண்பாடுகள் நிலவின. வேறுவழியின்றி சட்டப்படி எது சரியோ அதைச் செய்ய கமிஷனின் தலைவர் சர் சின்ல் ரேட்கிளிப்புக்கு கமிஷன் உறுப்பினர்கள் அதிகாரம் வழங்கினர்.
1947 ஆகஸ்டு 17 அன்று சர்சின்ல் ரேட்கிளிஃப் தனது தீர்ப்பை வழங்கினார்.
இரண்டு தரப்புக்கும் திருப்தி தராத தீர்ப்பாக அது அமைந்தது.
ஆகஸ்டு 17 அன்று இருநாட்டு பிரதமர்களும் அம்பாலாவில் சந்தித்து மக்களை (இந்துக்களையும் சீக்கியர்களையும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் முஸ்லீம்களை இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும்) பரிமாறிக்கொள்ள ஒப்புக்கொண்டனர்.
ஆனால் அந்தத் தேதிக்கு முன்பாகவே இங்கிருந்து 5 லட்சம் மக்களும் அங்கிருந்து 5 லட்சத்துக்கு மேலான மக்களும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தபடி இடம் பெயர்ந்துவிட்டிருந்தனர் என்பதுதான் சரித்திரத்தின் குரூர நகைச்சுவையாகும்.
இடம்பெயர்தல்:
நடுவில் கோடு கிழித்து இரண்டு தேசமாக்கிவிட்டால் வகுப்புவாத அரசியல் அன்றோடு முடிவுக்கு வந்துவிடும் என்று நியாய உணர்வுள்ள பலரும் கருதினர். லட்சோப லட்சம் மக்கள் இப்படி இடம் பெயர நேரிடும் என காந்திஜி கூட நினைக்கவில்லை. ஆனால் நவகாளியிலும்; ராவல்பிண்டியிலும் 1946 இறுதியிலிருந்து நடைபெற்று வந்த கலவரங்கள் மக்களை வேறு விதமாக நினைக்கச் செய்தன.
ஆனால் பிரிவினை பற்றிய பேச்சு மக்களிடம் புழங்க ஆரம்பித்த காலத்தில் மக்களும் அப்படித்தான் நினைத்தனர்.
ராஜேந்திரசிங் (மூன்று சக்கரவாகன ஓட்டுநர், டெல்லி) அளித்த பேட்டியில் கூறினார்.
"அரசர்களும், அரசியல்வாதிகளும் தலைவர்களும் எப்பவுமே அதிகாரத்துக்காக போராடுவது வழக்கம் தான். அரசர்களும் தலைவர்களும் மாறிக்கொண்டே இருந்ததுதானே நமது சரித்திரம். ஆனால், மக்கள் எப்போது மாறினார்கள்? (ராஜே மகராஜே பதல்தே ரஹத்தே ஹை பர் ப்ரஜா கப் பத்லி ஹை?)"
பஞ்சாப் மக்களும் இப்படித்தான் பேசிக்கொண்டார்கள். ராஜா ரஞ்சித்சிங் ஆட்சிக்கு வந்தார். மக்கள் இடம் பெயரவில்லை. சீக்கியர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தனர். அப்போதும் மக்கள் இடம் பெயரவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தனர். அப்போதும் மக்கள் எங்கும் துரத்தப்படவில்லையே. எனவே அப்படி ஒன்றும் நடக்காது என்றுதான் சாதாரண மக்களும் நம்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிப் போக்குகளை கவனித்த படித்தவர்க்கம் இதை முன்கூட்டியே உணர்ந்தது. காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு எண்ணற்ற கடிதங்கள் வந்து குவிந்தன. அன்று காங்கிரசிலிருந்த 14-5-1947 தேதியிட்டு கிருபளானி அவர்களுக்கு வந்த ஒரு கடிதம்:
"பஞ்சாபில் இருக்கும் சிறுபான்மையினரான எங்களை (இந்துக்கள், சீக்கியர்களை) பார்த்து நீங்கள் கூறுகிறீர்கள். எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளமுடியாவிட்டால் புலம்பெயர்ந்து வந்துவிடுங்கள் என்று. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது உங்கள் அறிக்கை. மாபெரும் காங்கிரஸ் இயக்கம் எங்களை அனாதரவாக நட்டாற்றில் கைவிட்டு விட்டது.
காலம் காலமாக அஹிம்சையை போதித்து போதித்தே பாதுகாக்க தைரியமற்றவராக்கிய எங்களை நிராயுதபாணியாக்கி; காங்கிரஸ் கட்சி இப்போது தப்பி ஓடிவரும்படி ஆலோசனை கூறுகிறது.
நான் கேட்கிறேன். ஓடிவரும் எங்களுக்கு அங்கே எந்த ஏரியாவை ஒதுக்கியிருக்கிறீர்கள்? நாங்கள் மானத்தோடு குடியமர என்ன ஏற்பாடு? நாங்கள் எத்தனை பேர் வருவது? எப்படி வருவது? எங்கள் அசையாச் சொத்துக்களை நாங்கள் என்ன செய்வது? எங்கள் ஒவ்வொருவருக்கும் வேலை தருவீர்களா? உங்கள் நிவாரண முகாம்களில் பிச்சைக்காரர்களைப் போல நீங்கள் வீசியெறியும் ரொட்டித்துண்டுகளுக்காக காத்துக்கிடக்க அழைக்கிறீர்களா?
ஐந்து நதிகள் பாயும் எங்கள் பஞ்சாப் பூமியில் நாங்கள் கவுரவமாக தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் பிகான்களையும் மதராசிகளையும் உ.பி.வாலாக்களையும போலவே. நீங்கள் எங்களையும் வங்காளிகளையும் காவு கொடுத்து உங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு விடுதலை வாங்கித் தந்துள்ளனர்கள்.
பைத்தியங்களைப் போலவும் நாடோடிகளைப் போலவும் எங்கள் மண்ணைவிட்டு ஓடி வர முடியாது. ராவல்பிண்டியில் நடந்தது போல இங்கும் நடக்கும் என்றால் நாங்கள் இந்துக்களாக இருப்பதற்காக ஓடிவந்து உங்களிடம் கையேந்தி நிற்கமாட்டோம். நாங்கள் முஸ்லீம்களாக மாறி விடுவோம்.
உங்கள் வார்த்தை ஜாலங்கள் எங்களுக்குத் தேவையில்லை. நேரடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை. அதற்கு உங்களால் முடியாது என்றால் இந்த பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள். எங்கள் விதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
"கோழைகளே! கோழைத்தனமான உங்கள் தத்துவங்களுக்கும் சொற்பொழிவுகளுக்கும் பெரிய கும்பிடு. நாங்கள் வாழ்கிறோம் அல்லது சாகிறோம். இந்துக்களாக இருக்கிறோம் அல்லது எப்படியோ மாறுகிறோம். உங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் உங்கள் திருவாய்களை பொத்திக் கொண்டு ஓடிவிடுங்கள். எங்கள் கொதிக்கும் பூமியில் கால் வைக்காதீர்கள்" (அகில இந்திய காங்கிரஸ் கட்சி முவணங்கள் கோப்பு எண் இஃ-9 பகுதி-1,1947 பஞ்சாப்) இக்கடிதத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு எவரிடத்திலும் விடைகள் இல்லை.
அவரவர் வாழ்க்கையை அவரவர் தீர்மானித்துக் கொள்ளும் பதட்டமான சூழல் நிலவியது.
வசதிபடைத்தவர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். "ராவல்பிண்டியில் 14 அறைகள் கொண்ட இரண்டடுக்கு மாளிகையும் நகரை அடுத்து அறுபது ஏக்கர் விளைச்சல் நிலமும் சொந்தமாகக் கொண்ட ஒருவர் இந்தியாவில் கான்பூர் அல்லது லக்னோவை ஒட்டிய நகர்ப் பகுதியில் இதற்கு ஈடான சொத்துக்கள் உடைய ஒருவருடன் அப்படியே பரிமாற்றம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
இது போன்ற எண்ணற்ற விளம்பரங்கள் தினசரிகளில் வரத் துவங்கின. ஆலை முதலாளிகள் இதுபோல சொத்துக்கள் ஆங்காங்கே இருக்க குடும்பங்கள் மட்டும் இடம் பெயர்ந்து தங்கள் நிலைகளை காப்பாற்றிக் கொண்டனர். ஆகஸ்ட் 15-க்கு முன்பே இந்தப் பரிமாற்றங்கள் நிகழத் துவங்கி விட்டன.
எனினும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை விட்டு விட்டு உயிரைச் காப்பாற்றிக் கொள்ள பூர்வீக ஊர்களை நிரந்தரமாக துறந்து இருபக்கமும் மக்கள் புலம்பெயர்ந்தனர்.
எப்படி நிகழ்ந்தது? எப்படியெல்லாம் நிகழ்ந்தது?
ஒரு கிராமத்தில் திடீரென ஒரு வதந்தி வேகமாகப்பரவும். "முஸ்லீம் குண்டர்கள் (அது முஸ்லீம் கிராமமாக இருந்தால் இந்து குண்டர்கள்) நம் ஊரை நோக்கி ஆயுதங்களோடு வந்து கொண்டிருக்கிறார்கள், வதந்தி பரவியதும் உடனே ஊரே பதறி எழும். பெண்கள் குழந்தைகள் எல்லோரும் ஒரே வீட்டில் பாதுகாப்பாக கூடுவார்கள். ஆண்கள் ஆயுதபாரியாகி எதிர்த்தாக்குதலுக்குத் தயாராவார்கள். பல இடங்களில் மோதல்கள் நடந்தன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மக்கள் கொல்லப்பட்டார்கள். கட்டாய மதமாற்றத்துக்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.
இது போன்ற சம்பவங்கள் நடக்க நடக்க நாளுக்கு நாள் பீதி அதிகரித்தது. பல கிராமங்கள் ஊரைக் காலி செய்துவிட்டு கால்நடைகளுடனும் தட்டுமுட்டுச் சாமான்களுடனும் இந்தியாவை (அல்லது பாகிஸ்தானை) நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வழியில் உள்ள கிராம மக்களும் சேர்ந்து கொள்வார்கள். சாலைப்பயணம் நீள நீள நடக்கின்ற கூட்டமும் பத்தாயிரம் பேர் இருபதாயிரம் பேர் எனப் பெருகும். இந்த ஊர்ந்து போகும் மக்கள் திரளை 'கஃபிலா' (Kafila) என்று அழைத்தனர். மிகப் பெ ரிய கஃபிலாவில் ஒரு சமயம் 4 லட்சம் பேர் நடந்து வந்தனர். இந்த அனாதரவான கஃபிலா ஒரு இடத்தைக் கடக்க எட்டு நாள் ஆனது.
இடையில் மதவெறியர்களின் தாக்குதலுக்கு இந்த கஃபிலா ஆளாகும். பெண்கள் கடத்திச் செல்லப்படுவார்கள். ஒன்றும் செய்ய முடியாது. கதறி அழுதபடி 'கஃபிலா' வின் பயணம் தொடரும். எதிரெதிர் திசைகளில் கஃபிலாக்களின் நகர்தல் - குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, செத்துச் செத்து விழுந்த மக்கள் ஏராளம்.
பின்னர் பல கிராமங்களில் "தாக்குதலுக்குப் படைவருகிறது" என்ற வதந்தி பரவியதுமே கற்பழிக்கப்படலாம் என்ற அச்சத்தின் விளைவாக படை எதுவும் வருவதற்கு முன்னே பெண்கள் தீக்குளித்தும் வீட்டுக்கிணறுகளில் விழுந்தும் தற்கொலை செய்து தங்கள் மானம் காத்துக் கொண்டனர். அல்லது தங்கள் வீட்டு ஆண்களால் முன்கூட்டியே கொல்லப்பட்டனர். இந்த (தற்)கொலைகள் முடிந்த பிறகு எந்த தாக்குதலும் நடக்காமலே வீண் வதந்தியாகப் போன சம்பவங்களும் உண்டு.
குறைந்தது 10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பஞ்சாபில் மட்டும் ஒரு கோடிப்பேருக்கு மேல் எல்லையை கடந்தனர். 75000 பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.
கடத்தப்பட்ட தங்கள் பெண்கள், குழந்தைகள் பற்றி முறையாக புகார் தந்தவர்கள் பலர். விபரம் தெரியாமல் கண்ணீருடன் காலத்தில் புதைந்து போனவர்கள் பலர். புகார்களின் எண்ணிக்கை பெருகப் பெருக 1949ல் இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. "கடத்தப்பட்டவர்களின் மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம் 1949" கடத்தப்பட்டவர் யார் என்பதை அந்தச் சட்டம் விளக்கியது.
1-3-1947-க்குப் பிறகும் 1-1-1949-க்கு முன்பும் தங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்ட 16 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண் மற்றும் எல்லா வயது பெண்களும் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்த குழந்தைகளும் கடத்தப்பட்டவராக கருதப்படுவர்.
இந்திய மற்றும் பாகிஸ்தானியர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு புகார்களின் அடிப்படையில் இரு நாடுகளிலும் தேடும்பணி நடைபெற்றது. பலர் மீட்கப்பட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
1957 வரை தேடும்பணி தொடர்ந்தது. 1957 உடன் இச்சட்டம் காலாவதியானது. அதற்கு மேல் தேடுவதற்கு இரு நாடுகளிலும் அனுமதி இல்லை.
தொலைந்தவர்கள் தொலைந்து போனவர்கள்தான். ஆகஸ்டு 1956-ல் கராச்சியிலிருந்து வெளிவந்த (Dauhn) டான் என்ற பத்தின்கை ஒரு தந்தையின் சோகத்தை எழுதியிருந்தது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு துரத்தப்பட்ட குவா மருத்தீன் அகமத் என்பவர் வழியில் தன் பெண் குழந்தை கடத்தப்பட்டதை பற்றி பாகிஸ்தான் அரசுக்கு புகார் செய்தார். அரசு எதுவுமே செய்யாததால் அவரே தன் மகளைத் தேடி இந்தியாவுக்கு தன்சொந்த நகருக்கு வந்தார்.
அவர் பல சில்லறைக் காரணங்களைக் காட்டி கைது செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு திருப்பப்பட்டார். மீண்டும் மகளைத் தேடி இந்தியா வந்த அவர் " பாகிஸ்தான் உளவாளி " என குற்றம் சாட்டப்பட்டு 1951ல் சிறையிலடைக்கப்பட்டார். விடுதலையான பிறகு பாகிஸ்தான் சென்று மீண்டும் அரசுக்கு விண்ணப்பித்தார். இந்திய அரசு அவருக்கு உதவாதது பற்றிகூட அவர் வருத்தப்படவில்லை. பாகிஸ்தான் அரசு எதுவுமே செய்யவில்லையே என வருந்தி கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார். அதற்குள் 1957 வந்துவிட்டது. கடத்தப்பட்டவர்களை மீட்கும் சட்டமும் காலாவதி ஆனது. இரு நாடுகளிலும் வாழ்ந்த எத்தனையோ தந்தையரைப்போல அவரும் அவரது மகளை நிரந்தரமாக இழந்த சோகத்துடன் உறைந்து போயிருப்பார். இதுபோல கற்பழிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறந்து அனாதையான குழந்தைகளை என்ன செய்வது என்பது இரு நாடுகளிலும் பிரச்சினை ஆனது. ஒரு இந்து தகப்பனுக்கும் முஸ்லீம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை எந்த மதத்தை சேரும்? அல்லது முஸ்லீம் தகப்பனுக்கும் இந்து தாய்க்கும் பிறந்த குழந்தையை எங்கே வைத்திருப்பது? இந்தியாவிலா?பாகிஸ்தானிலா? அது எந்த நாட்டுப் பிரஜையாக இருக்கும்?
நாடாளுமன்ற அவைகளில் அமைச்சர் பெருமக்கள் அறிஞர்கள் விவாதித்தனர். தகப்பனின் மதம் தான் குழந்தைக்கும் பொருந்தும் என பெரும்பாலோனோர் பேசினர். ஆனால் இந்த குழந்தைகளைப் பொறுத்தவரை பாலியல் பலாத்காரம் செய்த கயவர்களல்லவா தகப்பன்கள்? தகப்பன் என்ற வார்த்தை அவர்களுக்குப் பொருந்துமா?
அதிர்ச்சியூட்டும் கருத்துக்களை அறிஞர்கள் அவைகளில் அள்ளி வீசிக் கொண்டிருக்க அனாதைக் குழந்தைகள் இந்திய பாகிஸ்தான் தெருக்களில் குழந்தை உழைப்பாளிகளாக பிச்சைக்காரர்களாக சில்லறைத் திருடர்களாக தங்கள் பால்ய காலத்தை கரைக்கத் துவங்கி விட்டிருந்தனர். ஆசிரமங்களில் இருந்த அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்துச் சென்றவர்களும் ஆண் குழந்தைகளையே எடுத்துச் சென்றனர். பெண் குழந்தைகளை வேறு நோக்கங்களுக்காக தத்து எடுத்துச் சென்றனர். பலர் தத்து எடுத்துச் சென்ற பெண் குழந்தைகளை ரொம்ப சேட்டை செய்வதாகக் கூறி மீண்டும் ஆசிரமத்திலேயே கொண்டுவிட்டனர்.
நாங்கள் யார்
இதற்கிடையே 50,000 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் பாகிஸ்தானிலிருந்து தப்பி இந்தியா வந்து சேர்ந்திருந்தனர். நிவாரண முகாம்களில் அவர்களுக்கு அடைக்கலம் தராமல் அதிகாரிகள் தட்டிக் கழித்தனர். எல்லைப்பகுதியில் இரண்டு வகையான நிவாரண முகாம்கள் அப்போது இயங்கின. பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்துக்கள் சீக்கியர்களுக்கான முகாம் ஒன்று. பாகிஸ்தான் செல்வதற்காக காத்திருக்கும் முஸ்லீம்களுக்கான முகாம் ஒன்று. சாதி இந்துக்களை முகாம்களில் சேர்க்க முழு முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எதிலும் சேர்க்க மறுத்தனர். முகாம்களில் இருப்பவர்களுக்குத்தான் ரேஷன் கிடைக்கும்.
1947 டிசம்பர் வாக்கில் டாக்டர் அம்பேத்கார் இது குறித்து நேருவுக்கு கடிதம் எழுதினார். ஒன்றும் நடக்கவில்லை. பாகிஸ்தானில் நிலபுலன் வைத்திருந்தவர்கள் அதற்கான சான்றுகளை இந்திய அதிகாரிகளிடம் காட்டினால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக இங்கு முஸ்லீம்கள் விட்டுச் சென்ற நிலபுலன்கள் ஈடாகத் தரப்பட்டன. இதே நடைமுறை பாகிஸ்தானிலும் இருந்தது.
ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலங்களில் காலம் காலமாய் பாடுபட்டார்களே ஒழிய உடமையாளர்களாக இருக்கவில்லை. எனவே சட்டப்படி இந்திய அதிகாரிகளிடம் விவசாயிகள் என்று நிரூபிக்க அவர்களிடம் எந்த சான்றும் இருக்கவில்லை. ஈடாகப்பெற நிலமும் கிட்டவில்லை. நிவாரண முகாம்களில் ரேஷனும் கிட்டவில்லை.
பொறுப்புக்கு வந்ததும் முதல்காரியமாக பாகிஸ்தான் அரசு தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாத மக்கள் இந்தியாவுக்கு புலம் பெயர்வதை உடனடியாக தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. எல்லா தாழ்த்தப்பட்டோரும் இந்தியா சென்று விட்டால் கக்கூஸ் அள்ளுவது யார்? சாக்கடை அள்ளுவது யார்?அத்தியாவசியப் பணி பராமரிப்பு சட்டத்தின் (ESMA)கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு கக்கூஸ்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்தியாவிலும் இது தான் நடந்தது.
தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களும் அல்லர். இந்துக்களும் அல்லர் என்றால் நாங்கள் யார்? நாங்கள் தீண்டத்தகாதவர்கள் உங்கள் பார்வையில் அசுத்தமானவர்கள் எங்களுக்கு "அசுத்தஸ்தான்" என்று தனி நாடு கொடுங்கள் என்றெல்லாம் குரல்களும் இயக்கங்களும் கிளம்பின.
திரு. பியாலால் (Mr.Beah Lall) 1946 நவம்பரில் "அகில இந்திய அசுத்தஸ்தான் இயக்கத்தை" நிறுவினார். "இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களின் எண்முக்கையை உயர்த்திக் கொள்வதற்காக இப்போது தீண்டத்தகாத எங்களை தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். ஆனால் இந்துஸ்தான், பாகிஸ்தான், இங்கிலீஸ்தான் ஆகிய இந்த மூன்று ஸ்தானவாதிகளும் எங்களை காலம் காலமாக கசக்கிப் பிழிந்ததை நாங்கள் மறக்க முடியுமா? நாங்கள் இந்தியாவில்தான் பிறந்தோம் எனவே இந்தியாவின் ஒரு பகுதியை "அசுத்தஸ்தான்" ஆக்கித்தாருங்கள் எங்கள் வழியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்ற திரு பியாலால் பிரகடனம் செய்தார்.
1947 மார்ச் 6 - இல் நடைபெற்ற உத்திரபிரதேச தாழ்த்தப்பட்டோர் சம்மேளன மாநாட்டில் பேசிய இடைக்கால அரசின் சட்ட உறுப்பினர் ஜே.என்.மண்டல், "எனக்கு காந்திஜியின் மீது பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஹரிஜனங்களுக்கு கோயில் கதவுகளை திறந்து விட்டு சமபந்தி போஜனம் செய்தால் போதுமா? எனவே நான் லீக்குடன் கை கோர்க்க தயாராகி விட்டேன். முஸ்லீம்கள் நம்மைப்போல ஏழைகள். பின்தங்கியவர்கள். தீண்டத்தகாதவர்கள் " என முழங்கினார்.
இன்னும் சிலர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதிய வசதிகளும் சலுகைகளும் செய்து தராவிட்டால் அவர்கள் முஸ்லீம்களாக மதம் மாறிவிடுவார்கள். அது பிறகு காங்கிரசுக்கும் இந்துக்களுக்கும் பெரிய இடைஞ்சலாக வந்து சேரும் என்று நியந்தும் மிரட்டியும் பேசிப்பார்த்தனர்.
எவ்வாறாயினும் தாழ்த்தப்பட்டவரின் குரல்களை எந்த நாடும் (விசேஷமாக கவனிப்பது இருக்கட்டும்) கண்டு கொள்ளவே இல்லை. தலைவர்கள் உடனடியாக கவனிக்க வேறு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தன.
ஆனால் தேசப்பிரிவினையை ஒட்டி கலவரங்களின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படவில்லை. துன்புறுத்தப்படவில்லை. 1947 மார்ச் மாதத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ராவல்பிண்டி பகுதியில் சுற்றுப்பயணம் செய்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளன பொதுச் செயலாளர் பி.என். ராஜ்போஜ எழுதினார். நான் சுற்றுப்பயணம் செய்த எந்தப்பகுதியிலும் தாழ்த்தப்பட்டவர் எவரும் கலவரத்தால் பாதிக்கப்படவில்லை என்பதை கண்டேன். இந்துக்களை போல தோற்றமளித்த தாழ்த்தப்பட்டவர் சிலர் ஒரு சில இடங்களில் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர். மற்றபடி வேறு எங்கும் இல்லை.
ஆனால் தாழ்த்தப்பட்ட பெண்களும் மற்ற இந்து, முஸ்லீம் பெண்களைப் போல கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு.
பெண்ணின் உடம்பின் மீது எழுதப்படும் சரித்திரம்:
வகுப்புவாதம் தலைவிரித்தாடிய அந்த நாட்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதங்களை வகைப்படுத்திப் பார்ப்பது அவசியம்.
"அவர்களு"டைய பெண்களை இழிவுபடுத்துவது அவர்களுடைய மதத்தை -நம்பிக்கைகளை - அவர்களுடைய தன்மானத்தை ஆழமாக, கிழிக்கும் செயல் என்பதாக பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லீம்களும் புரிந்து கொண்டிருந்தனர்.
மாற்று மதத்தவரின் இளம் பெண்களை கடத்திச் சென்றனர். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினர். அவர்களை கெடுத்ததன் மூலம் தங்கள் மதத்துக் குழந்தை அவர்களின் வயிற்றில் வளர வித்திட்டனர். பெண்முன் உடம்பின் மீது செய்யும் ஆக்கிரமிப்பு பிற மதத்தவர் மீது நாட்டிய வெற்றிக்கொடியானது.
"அவர்களது" பெண்களை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடச்செய்வது.
பெண்களை நிர்வாணமாக்கி அவர்களது மார்பகங்களை அறுத்து எறிவது (இதனால் இறந்தவர்கள் ஏராளம்).
பெண் உறுப்பு மற்றும் மார்பகங்களில் பிறைச்சந்திரன் திரிசூலம் சின்னத்தை சூட்டுகோலால் வரைவது என்றும் அழியாத கேவலமாக பெண்முன் அந்தரங்க உறுப்பில் மாற்று மதத்தின் சின்னம்.
"அவர்கள்" தாக்க வருகிறார்கள் என்று அறிந்தும் தாங்கள் வீட்டுப் பெண்களை கொன்று விட்டு தப்பிச் செல்வது அல்லது தம் வீட்டுப் பெண்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுவது - நிர்ப்பந்திப்பது - வழிகாட்டுவது.
தங்கள் உயிரை பலியாகக் கொடுத்த தம்வீட்டுப் பெண்களை குல தெய்வாக்கி இன்றும் வணங்கிவருவது தற்கொலை செய்ய மறுத்து இன்றும் உயிர்வாழும் தம்வீட்டுப் பெண்களை மாற்றுக் குறைவாக மதிப்பது.
முடிவற்று நீண்டு செல்லும் துயர்மிக்க கதைகளை தேசப்பின்வினை நமக்குப்பரிசாகத் தந்துவிட்டது.
தேசப்பின்வினையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து உயிர் தப்பி "நம்ம தேசம்" இந்தியாவுக்கு வந்து நிம்மதியாக பெருமூச்சு விட்ட ஆயிரக்கணக்கான சீக்கியக் குடும்பங்கள் 1984-ல் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது மீண்டும் அதே 1947-ஐ அனுபவித்தனர். டெல்லியிலும் மீரட்டிலும் கான்பூரிலும் என காங்கிரஸ் குண்டர்களும் இந்து வெறியர்களும் சீக்கிய மக்கள் மீது தொடுத்த தாக்குதல் அதிர்ச்சி மிக்க பல கேள்விகளை எழுப்புகின்றது.
1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து பம்பாயில் முஸ்லீம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களை அகதிகளாக்கி பம்பாயை விட்டு ஓடவைத்தது.
தமிழக தென்மாவட்ட சாதிக்கலவரங்களின் போது பல கிராமங்களில் மக்கள் ஊரைக்காலி செய்து விட்டு மறைந்து திரிந்தார்கள் - அகதிகளாக.
ஒரு வார்த்தையில் சொல்வதானால் "1947'' திரும்பத் திரும்ப நம் நாட்டில் நடந்து கொண்டே இருக்கிறது.
1947 - ஐ மீண்டும் மறுவாசிப்பு செய்வதும் கட்டுடைத்துப் பார்ப்பதும் இன்றைய வகுப்புவாதத்தின் வேர்களை அடையாளம் காண உதவக்கூடும்.
ஒரு நூற்றாண்டு விடைபெறும் புள்ளியில் 1947 நமக்கு முன் வைக்கும் கேள்விகள் பல.
லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டது தீவிரவாதிகளால் அல்ல. சாதாரணமாக - இணக்கமாக -இயல்பாக - வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் பரஸ்பரம் கொலையாளிகளாகவும் பெண்களை கடத்துபவர்களாகவும் கற்பழிக்கிறவர்களாகவும் மாறியது எப்படி? சமாதான காலங்களில் தூவப்படும் வகுப்புவாத விதைகள் கொழுந்து விட்டெரிய சந்தர்ப்பங்கள்தான் தேவைப்படுகின்றன. நாம் சமாதானமான நேரங்களில் சும்மா இருந்துவிட்டு கலவரம் முடிந்த பிறகு மட்டும் தீவிரமாக வகுப்புவாத எதிர்ப்பு இயக்கம் நடத்துவதால் என்ன பயன் விளையும்?
கலவர நேரங்களில் மனிதர்கள் தங்கள் எல்லா அடையாளங்களும் மறக்கடிக்கப்பட்டு இந்து, முஸ்லீம் அல்லது தம் சாதி என்ற ஒற்றை அடையாளத்துடன் மோதுகிறார்கள். எப்போதும் தங்கள் பன்முக அடையாளங்களை இழக்காதிருக்க இடைவிடாத கருத்துலக இயக்கம் தேவை அல்லவா? பெண்முன் உடம்பு இலகுவான ஆக்கிரமிப்புக்கான நிலப்பரப்பாக தொடர்வதை எந்த நூற்றாண்டில் நாம் முடிவுக்குக் கொண்டு வரப்போகிறோம்?குடும்ப மானம் என்பது என்ன? மதத்தின் மானம் தேசத்தின் மானம் என்பதெல்லாம் என்ன? பாலியல் பலாத்காரத்தை வெறும் உடல் மீதான வன்முறையைப் போல பாவிக்க நமது புரையோடிப்போன கலாச்சாரத்தை எப்படி ஒழிக்கப்போகிறோம்? வக்கிரங்கள் ஒழியும் நாள் எது? பெண்ணுக்கு நாம் சொல்லப்போகும் பதில் என்ன?
தாழ்த்தப்பட்ட - தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்ட - மக்களுக்கு நம் தேசமும் நம் சரித்திரமும் முட்டிக் கொள்ளும் மதங்களும் என்ன பதில் சொல்லப் போகின்றன?
கலவரங்களின்போது அனாதையாக்கப்படுகிற குழந்தைகளின் பால்யம் அதிர்ச்சியில் குன்றிப்போவதை நாம் எப்படி சரி செய்யப்போகிறோம்?
1947 என்பது ஒரு ஆண்டு அல்ல. 1947 என்பது இந்திய விடுதலை மட்டுமல்ல. மேலே நீளமாக பேசப்பட்டுள்ள அத்தனை துயரங்கள் அவலங்கள மனிதக் கேவலங்கள் இவற்றின் ஒட்டு மொத்தமான குறியீடுதான் - 1947.
http://thatstamil.oneindia.in/art-culture/visai/aug05/tamilselvan.html
India Gains Independence
1947 PARTITION OF INDIA
ஏன் இந்த சண்டை ? - காஷ்மிர்
Parition of India 1947
http://en.wikipedia.org/wiki/Partition_of_India#The_Partition_Factor_In_The_Status_Of_Indian_Muslims_.5B21.5D_.5B22.5D
தீண்டதகாத நாடு?
தலைப்பு : Who is Wrong? Who is Right?, அந்த நாள், அன்றும் இன்றும், இந்தியா, கட்டுரைகள், வரலாறு, வீடியோ
"உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு சம்மதிப்பதும் பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண், பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விட கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்துச் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்"
நாகரீகம் வளர்வதற்கு முந்தைய கற்காலத்தில், மனிதன் கால்நடைகளைப் போன்று வாழ்ந்தான் என்பதை வரலாற்றுப் பாடங்களில் படித்துள்ளோம். அத்தகைய காலகட்டங்களில் அச்சமூகத்திற்குத் தலைமையேற்ற ஏதோ ஒரு நல்ல பண்பாட்டுப் பழக்கவழக்கங்களைக் கொண்ட மன்னன் மேற்கண்டக் கட்டளையை இட்டுள்ளான் என நினைத்தால்.... அது தவறு!
இது நாகரீகம் வளர்ந்து உச்சியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்த 17 - 18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு மன்னன் பிறப்பித்தக் கட்டளையாகும். 17 - 18 ஆம் நூற்றாண்டிலும் மக்கள் கால்நடைகளைப் போன்று காணும் ஆடவர், பெண்டிருடன் உறவு வைத்து நடந்தனர் என்பதை நம்பமுடியவில்லை தானே?. ஆனால் அது தான் உண்மை!
சரி, யார் இந்த மன்னன்?. எங்கு, எதற்காக, எந்தத் தருணத்தில் இந்தக் கட்டளையை அந்த மன்னன் பிறப்பித்தான்? என்பதை அறிய ஆவலாக உள்ளதா?.
இவ்வாறு கட்டளையிட்டது, இந்தியாவைப் பலகூறாகப் பிரித்து ஆண்டு கொண்டிருந்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ, இராஜபுத்திர இன்னபிற மன்னர்களில் எவராவது ஒருவராக இருப்பார் எனக் கருதுவீர்களானால்....... அதுவும் தவறானதே.
இவ்வாறான அதிரடி உத்தரவைப் பிறப்பித்தவர் வேறு யாரும் அல்ல - இந்தியாவை அடக்கியாண்டுக் கொண்டிருந்தப் பரங்கியர்களுக்குச் சிம்மச்சொப்பனமாகத் திகழ்ந்து வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வீரத்துடன் வாழ்ந்த தீரர் திப்பு சுல்தானே தான்.
கேரள நம்பூதிரிகளின் அக்ரஹார அலங்கோல ஆச்சாரங்களை ஒரே கட்டளையின் மூலம் தகர்த்தெறிந்தத் திப்புவின் இந்தக் கட்டளைக்கான காரணம் என்ன? தனது ஆட்சிபரப்பை விரிவாக்கும் எண்ணத்தில் கேரளத்தில் அடியெடுத்து வைத்தத் திப்புவின் வாயிலிருந்து வெளியான இந்தக் கட்டளைக்கும் அன்றையக் கேரள அரசவைக் கூட்டத்தையும் அடிதட்டு மக்களையும் ஒருங்கே கைகளில் அடக்கி ஆட்சி செய்துகொண்டிருந்த நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம்?
திப்புவைக் குறித்துப் பேசப்படும் வரலாற்று நூல்களில் பெரும்பாலானவைகளிலெல்லாம் காணப்படும் பிரசித்தமான இந்தத் திப்புவின் கட்டளைக்குக் காரணம் தான் என்ன?. அதனை அறிந்துக் கொள்ள வேண்டுமெனில், திப்பு கேரளத்தில் கால்பதித்த வேளை கேரள மக்கள் எந்நிலையில் வாழ்ந்து வந்தனர் என்பதைக் குறித்துத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
சிறிது வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்....
விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின் மைசூரில் பிரபல சக்தியாக வளர்ந்து வந்த ஹைதர் அலியின் படை, அக்காலத்தில் மலபார் என அறியப்பட்டிருந்தக் கேரளத்தினுள் நுழைந்துத் தெற்கு மலபாரை ஆட்சி செய்துக் கொண்டிருந்த கேரள வரலாற்றில் மிகப்பெரிய மஹாராஜாவாக அறியப்பட்டிருந்த சாமிரி ராஜாவை அடக்கி அடிபணியவைத்ததோடு ஹைதர் அலியின் மைசூர் ஆட்சி மலபாருக்கும் விரிவடைந்தது. அதனைத் தொடர்ந்து 1773 ல் மைசூர் ஆட்சியின் மலபார் கவர்னராக ச்ரீநிவாச ராவ் பதவியேற்றது முதல் 1790 வரையுள்ள 16 ஆண்டு காலம் மலபார், மைசூர் ஆட்சியின் கீழ் இருந்தது.
இதில் 9 ஆண்டுகள் ஹைதர் அலியும் 7 ஆண்டுகள் திப்புவும் ஆட்சி செலுத்தினர். மிகக் குறுகிய இந்தக் காலயளவில் மலபார் மக்களின் வாழ்க்கை முறையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்த திப்பு முனைந்திருந்தாலும் இஸ்லாமிய பெயர் கொண்ட ஒரு நவீனத்துவ முகம் கொண்டிருந்ததால் அவரின் சீர்திருத்தங்கள் மூட பழக்க வழக்கங்களிலும் கீழ்த்தர ஆச்சாரமுறைகளிலும் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்த அச்சமூகத்தில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தாமல் போனது.
அக்காலகட்டத்தில், சமூகத்தின் எல்லாப் பகுதி மக்களையும் தம் கைகளில் அடக்கி வைத்திருந்த நம்பூதிரிமார்கள், தாழ்த்தப்பட்ட பெண்களையும் ஆண்களையும் அடக்கியாண்டு மோசம் செய்து கொண்டிருந்தனர். தங்களைத் தெய்வத்தின் பிரதிநிதிகளாகவும் பூஜிக்கப்பட வேண்டியவர்களாகவும் அவர்கள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த எண்ணத்தைச் சமூகத்தில் விதைப்பதிலும் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
"அவரின் - நம்பூதிரியின் - உடல் பவித்ரமானதாகும். சலனம் தெய்வீகக் காட்சியாகும். அவர் உண்டு மீந்த உணவு அமிர்தமாகும். மனித உயிர்களில் ஏற்றவும் உயர்ந்த நிலையில் பூஜிக்கப்பட வேண்டியவர்களாவர்; பூமியில் தெய்வத்தின் பிரதிநிதிகளாவர். இக்காரணங்களால் அவர்களுடன் எந்தப் பெண்ணிற்கு உறவு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றதோ அவள் பாக்கியம் பெற்றவள்" என்று அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நம்பிக்கை ஊட்டப்பட்டிருந்தது.
"நம்பூதிரியை மகிழ்ச்சியடைய வைப்பது தெய்வத்தைத் திருப்திபடுத்துவதற்குச் சமமானதாகும். நாயர் பெண்களுடன் சயனிப்பதற்கான உரிமை கடவுள் அவர்களுக்கு வழங்கியதாகும். அதனை நிராகரிப்பவர்கள் - எதிர்ப்பவர்கள் - தெய்வக்குற்றத்திற்கு ஆளாவர்". இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் பரவியிருந்தக் காரணத்தால், அழகான பெண் குழந்தைகளைப் பெற்றிருந்த நாயர் குடும்பங்கள் தங்கள் பெண்களை ஏதாவது ஒரு நம்பூதிரியுடன் சயனிக்க வைக்க மனப்பூர்வமாக விரும்பியிருந்தனர்.
"சூத்திரப் பெண்கள் பத்தினித்தன்மையைப் பேண வேண்டிய அவசியம் இல்லை எனவும் நம்பூதிரிகளின் ஆசாபாசங்களை நிறைவேற்றி வைக்க சுயம் சமர்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் இது கேரளத்திற்கு ஆச்சாரங்களைப் பரிசளித்தப் பரசுராமன் போட்டக் கட்டளையாகும் என ஆச்சாரங்களைக் கற்பித்துப் போற்றும் பிராமணர்கள் தெரிவிக்கின்றனர்". (சி. அச்சுதமேனோன் - கொச்சின் மாநில கையேடு - 1910. பக்கம் 193. C. ACHCHUTHA MENON - Cochin State Manual - 1910 Page No: 193)
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=995&Itemid=363
தலைப்பு : அந்த நாள், படித்ததில் பிடித்தது, வரலாறு
ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.
கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டிவருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?
கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று-என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?
கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.
காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். சூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். சூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.
அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!
இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.
புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.
புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.
புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.
மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
(திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை வருடம்:1951)
நன்றி : tamilnation.org
தலைப்பு : அந்த நாள்
செல்லம்மாள் பாரதி
1922 Foreword to Publication of 80 Bharathy Songs
தமிழ்நாட்டு மக்களே!
நான் படித்தவளல்ல. இந்த நூலுக்கு முகவுரை எழுத நான் முன் வரவில்லை. அதற்கு எனக்கு சக்தியுமில்லை. என்னைப் போல இந்தத் தமிழ் நாட்டில் லக்ஷ்க்கணக்காக ஆணும் பெண்ணும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன்.
என் புருஷன் ஸ்ரீமான் சுப்ரமணிய பாரதி இந்த நாட்டில் பிறந்தார்; வளர்ந்தார்; வாழ்ந்தார்; இறந்தார். அவருடைய ஸ்தூல தேகத்திற்கு முடிவு நேரிட்டு ஆத்மா விண்ணுலகம் சென்றுவிட்டது. கடவுளின் திருவிளையாடலில் இப்படி ஒரு ஆத்மா இவ்வுலகில் ஜனித்து சொற்ப காலந்தங்கி, சிற்சில காரியங்களை செய்துவிட்டு, திரும்பப் போய்விட வேண்டுமென்ற கட்டளையின்படி என் புருஷனும் ஜனித்து, செய்ய வேண்டிய காரியங்களை அவசர அவசரமாக செய்து விட்டு காலம் சமீபத்தவுடன் இறப்பதுவும் ஓர் அவசரமான கடமையாகக் கொண்டு அதனையும் செய்து மடிந்தார்.
1904-ஆம் வருஷத்தில் சுதேசமித்திரன் உப பத்திராதிபராக அமரு முன்பே நம் நாட்டைப் பற்றிய கவலை அவருக்கு அதிகம் ஏற்பட்டு விட்டது. எட்டையபுரம் சமஸ்தானாதிபதியின் கீழ் தான் ஏற்றுக் கொண்ட வேலையைத் திரணமாக நினைத்துத் தள்ளினார்; மதுரை சேதுபதி வித்யாசாலையில் தமிழப் பண்டிதர் வேலையையும் அற்பமாக எண்ணித் தள்ளினார். சுதேசமித்திரன் பத்திரிகைக்கு உழைக்க ஆரம்பித்ததும் அவரது உள்ளம் மலர்ச்சியடைய ஆரம்பித்தது. சுமார் இரண்டு வருஷம் கழிந்த பின் 'இந்தியா' என்னும் வாரப் பத்திரிகையை ஆரம்பித்தார்.
உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கரியத்திற்கு முழுமனதுடன் அர்ப்பணம் செய்தார். ஸரஸ்வதி தேவி அவர் வாக்கில் நிர்த்தனஞ் செய்ய ஆரம்பித்தாள். "வந்தேமாதரம்" என்ற சப்தம் அவரது ஹிருதயத்திலிருந்து முழுத் தொனியுடன் கிளம்பிற்று; தமிழ்நாடெங்கும் பரவிற்று. வீடு, வாசல், மனைவி, பிள்ளை, குட்டி, ஜாதி வித்தியாசம், அகந்தை முதலியவை முற்றும் மனதின்று விட்டு அகன்றன. தேசப் பிரஷ்டமானார். புதுவையில் தேசபக்தி விரதத்தை பலவிதமாக அநுஷ்டித்தார். திரும்ப வந்து தன் நாட்டை ஒரு முறை பார்க்க வேண்டுமென்ற அவா அதிகரித்தது. அதற்காகச் சில நிபந்தனைகளை ஒப்புக் கொண்டார். மறுபடியும் சுதேசமித்திரனில் ஒரு வருஷம் உழைத்தார். தான் வந்த காரியம் முடிவடையவே விண்ணுலகம் சென்ற தேசபக்தர் கூட்டத்தில் தானும் போய்ச் சேர்ந்து கொண்டார்.
நமது நாடு இன்னது; நமது ஜனங்கள் யாவர்; நமது பூர்வோத்திரம் எத்தகையது; இன்று நமது நிலையென்ன; நமது சக்தி எம்மட்டு; நமது உணர்ச்சி எத்தன்மையது - இவைகளைப் பற்றிய விவகாரங்களும் சண்டைகளும், தீர்மானங்களும் அவருடைய ஜீவனுக்கு ஆதாரமாயிருந்தன. எதுவும் யோசித்தாக வேண்டியதில்லை. திடீர் திடீர் என்று எண்ணங்கள், புதிய புதிய கொள்கைகள், புதிய புதிய பாட்டுக்கள், அப் பாட்டுக்களுக்குப் புதிய புதிய மெட்டுக்கள் - எனது இரு காதுகளும், மனமும், ஹிருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன். இம்மாதிரி பாக்கியம் பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் திரும்பத் திரும்பப் பெறத் தயாராக இருக்கிறேன்.
அவரது தேகத்தின் ஜீவன் போய்விட்டது. அவரது ஜீவனுக்காதரமாக இருந்த பாரதமாதாவின் ஜீவசக்தி என்றென்றும் அழியாதது. தமிழ்நாடு உள்ளளவும், தமிழ் நாட்டில் ஒரு மனிதனோ அல்லது ஒரு சிறு குழந்தையோ தமிழ் பேசிக் கொண்டிருக்குமளவும் பாரதியின் மூலமாக நமக்குக் கிடைத்த ஜீவசக்தி நிலைத்திருக்குமென்று என் ஹிருதயம் சொல்கிறது. இதனை நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள். இஃதொன்றுதான் நான் உங்களுக்கு சொல்ல முன் வந்தேன். நீங்கள் நீடுழி வாழ்க!
பாரதியாரின் நூல்கள் முழுமையும் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை என் ஜீவன் இருக்கும் வரை நான் வகித்து பிற்பாடு தமிழ்நாட்டிற்குத் தத்தம் செய்து விட்டுப் போகத் தீர்மானித்திருக்கிறேன்.
வந்தே மாதரம்
பாரதி ஆச்ரமம்
திருவல்லிக்கேணி,
சென்னை (பாரதம்).
தலைப்பு : அந்த நாள்