"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


ஸென் துறவி ஒருவர், போகும் இடமெல்லாம் தன்னுடன் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி எடுத்துச் சென்றார். துறவியின் இந்தச்செயலைக்கண்ட மடாதிபதி. துறவி எதற்காகத் தன்னுடைய புற அழகைப் பற்றி கவலைப் படவேண்டும். அக அழகே சாதுக்களுக்கு அழகு. எந்த நேரமும் துறவியானவன் தன்னைப் பற்றிய சிந்தனையிருந்தால் எப்பொழுது ஞானத்தை அடைவது?" என மனதில் கேள்வி தோன்றியது?

மடாதிபதி, நீ எதற்காக கண்ணாடியினை கையில் எடுத்துக் கொண்டு அலைகிறாய்? எனத் துறவியிடம் கேட்டார். துறவி கண்ணாடியை கைப்பைலிருந்து வெளியே எடுத்து மடாதிபதியின் முகத்திற்கு நேராகக் காட்டியவர், "எனக்கு எதாவது பிரச்சனை வரும் போது இந்தக் கண்ணாடியில் என் முகம் பார்ப்பேன். அது என்னுடைய இன்னலுக்கான காரணம் யார் என்பதையும், எப்படி அதற்கு விடை காண்பது என்பதையும் காட்டும்" எனக் கூறியவுடன் மடாதிபதி வாயடைத்து போனார்.

புகை நடுவினில் தீ இருப்பதைப்
பூமியில் கண்டோமே - நன்னெஞ்சே
பூமியில் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான் (பகை)

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ? - நன்னெஞ்சே
செய்தி அறியாயோ?
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக்
கொடி வளராதோ? - நன்னெஞ்சே
கொடி வளராதோ? (பகை)

உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? - நன்னெஞ்சே
உள்ளம் நிறைவாமோ?
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும்
சேர்த்த பின் தேனாமோ? - நன்னெஞ்சே
சேர்த்த பின் தேனாமோ? (பகை)

வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? - நன்னெஞ்சே
வாழ்வுக்கு நேராமோ?
தாழ்வு பிறர்க்கு எண்ணத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ? - நன்னெஞ்சே
சாத்திரம் கேளாயோ? (பகை)

போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர்
போல வந்தானும் அவன் - நன்னெஞ்சே
போல வந்தானும் அவன்
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு
நின்றதும் கண்ணன் அன்றோ? - நன்னெஞ்சே
நின்றதும் கண்ணன் அன்றோ? (பகை)

தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு
சிந்தையில் போற்றிடுவாய் - நன்னெஞ்சே
சிந்தையில் போற்றிடுவாய்
அன்னை பராசக்தி அவ்வுரு ஆயினள்
அவளைக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே
அவளைக் கும்பிடுவாய் (பகை)

- மகாகவி பாரதி


ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டிவருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று-என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். சூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். சூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

(திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை வருடம்:1951)

நன்றி : tamilnation.org

செல்லம்மாள் பாரதி
1922 Foreword to Publication of 80 Bharathy Songs

தமிழ்நாட்டு மக்களே!

நான் படித்தவளல்ல. இந்த நூலுக்கு முகவுரை எழுத நான் முன் வரவில்லை. அதற்கு எனக்கு சக்தியுமில்லை. என்னைப் போல இந்தத் தமிழ் நாட்டில் லக்ஷ்க்கணக்காக ஆணும் பெண்ணும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன்.

என் புருஷன் ஸ்ரீமான் சுப்ரமணிய பாரதி இந்த நாட்டில் பிறந்தார்; வளர்ந்தார்; வாழ்ந்தார்; இறந்தார். அவருடைய ஸ்தூல தேகத்திற்கு முடிவு நேரிட்டு ஆத்மா விண்ணுலகம் சென்றுவிட்டது. கடவுளின் திருவிளையாடலில் இப்படி ஒரு ஆத்மா இவ்வுலகில் ஜனித்து சொற்ப காலந்தங்கி, சிற்சில காரியங்களை செய்துவிட்டு, திரும்பப் போய்விட வேண்டுமென்ற கட்டளையின்படி என் புருஷனும் ஜனித்து, செய்ய வேண்டிய காரியங்களை அவசர அவசரமாக செய்து விட்டு காலம் சமீபத்தவுடன் இறப்பதுவும் ஓர் அவசரமான கடமையாகக் கொண்டு அதனையும் செய்து மடிந்தார்.

1904-ஆம் வருஷத்தில் சுதேசமித்திரன் உப பத்திராதிபராக அமரு முன்பே நம் நாட்டைப் பற்றிய கவலை அவருக்கு அதிகம் ஏற்பட்டு விட்டது. எட்டையபுரம் சமஸ்தானாதிபதியின் கீழ் தான் ஏற்றுக் கொண்ட வேலையைத் திரணமாக நினைத்துத் தள்ளினார்; மதுரை சேதுபதி வித்யாசாலையில் தமிழப் பண்டிதர் வேலையையும் அற்பமாக எண்ணித் தள்ளினார். சுதேசமித்திரன் பத்திரிகைக்கு உழைக்க ஆரம்பித்ததும் அவரது உள்ளம் மலர்ச்சியடைய ஆரம்பித்தது. சுமார் இரண்டு வருஷம் கழிந்த பின் 'இந்தியா' என்னும் வாரப் பத்திரிகையை ஆரம்பித்தார்.

உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கரியத்திற்கு முழுமனதுடன் அர்ப்பணம் செய்தார். ஸரஸ்வதி தேவி அவர் வாக்கில் நிர்த்தனஞ் செய்ய ஆரம்பித்தாள். "வந்தேமாதரம்" என்ற சப்தம் அவரது ஹிருதயத்திலிருந்து முழுத் தொனியுடன் கிளம்பிற்று; தமிழ்நாடெங்கும் பரவிற்று. வீடு, வாசல், மனைவி, பிள்ளை, குட்டி, ஜாதி வித்தியாசம், அகந்தை முதலியவை முற்றும் மனதின்று விட்டு அகன்றன. தேசப் பிரஷ்டமானார். புதுவையில் தேசபக்தி விரதத்தை பலவிதமாக அநுஷ்டித்தார். திரும்ப வந்து தன் நாட்டை ஒரு முறை பார்க்க வேண்டுமென்ற அவா அதிகரித்தது. அதற்காகச் சில நிபந்தனைகளை ஒப்புக் கொண்டார். மறுபடியும் சுதேசமித்திரனில் ஒரு வருஷம் உழைத்தார். தான் வந்த காரியம் முடிவடையவே விண்ணுலகம் சென்ற தேசபக்தர் கூட்டத்தில் தானும் போய்ச் சேர்ந்து கொண்டார்.

நமது நாடு இன்னது; நமது ஜனங்கள் யாவர்; நமது பூர்வோத்திரம் எத்தகையது; இன்று நமது நிலையென்ன; நமது சக்தி எம்மட்டு; நமது உணர்ச்சி எத்தன்மையது - இவைகளைப் பற்றிய விவகாரங்களும் சண்டைகளும், தீர்மானங்களும் அவருடைய ஜீவனுக்கு ஆதாரமாயிருந்தன. எதுவும் யோசித்தாக வேண்டியதில்லை. திடீர் திடீர் என்று எண்ணங்கள், புதிய புதிய கொள்கைகள், புதிய புதிய பாட்டுக்கள், அப் பாட்டுக்களுக்குப் புதிய புதிய மெட்டுக்கள் - எனது இரு காதுகளும், மனமும், ஹிருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன். இம்மாதிரி பாக்கியம் பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் திரும்பத் திரும்பப் பெறத் தயாராக இருக்கிறேன்.

அவரது தேகத்தின் ஜீவன் போய்விட்டது. அவரது ஜீவனுக்காதரமாக இருந்த பாரதமாதாவின் ஜீவசக்தி என்றென்றும் அழியாதது. தமிழ்நாடு உள்ளளவும், தமிழ் நாட்டில் ஒரு மனிதனோ அல்லது ஒரு சிறு குழந்தையோ தமிழ் பேசிக் கொண்டிருக்குமளவும் பாரதியின் மூலமாக நமக்குக் கிடைத்த ஜீவசக்தி நிலைத்திருக்குமென்று என் ஹிருதயம் சொல்கிறது. இதனை நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள். இஃதொன்றுதான் நான் உங்களுக்கு சொல்ல முன் வந்தேன். நீங்கள் நீடுழி வாழ்க!

பாரதியாரின் நூல்கள் முழுமையும் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை என் ஜீவன் இருக்கும் வரை நான் வகித்து பிற்பாடு தமிழ்நாட்டிற்குத் தத்தம் செய்து விட்டுப் போகத் தீர்மானித்திருக்கிறேன்.

வந்தே மாதரம்

பாரதி ஆச்ரமம்

திருவல்லிக்கேணி,
சென்னை (பாரதம்).

அச்சந் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்த லிகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை யுறுதிசெய்
ஊண்மிக விரும்பு
எண்ணுவ துயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி யாட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்
ஓய்த லொழி
ஓளடதங் குறை கற்ற தொழுகு
கால மழியேல்
கிளைபல தாங்கேல்
கீழோர்க் கஞ்சேல்
குன்றென நிமிர்ந்துநில்
கூடித் தொழில்செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலுந் துணிந்துநில்
கைத்தொழில் போற்று
கொடுமையை யெதிர்த்துநில்
கோல்கைக்கொண்டுவாழ்
கவ்வியதை விடேல்

புதிய ஆத்திசூடி
காப்பு
ஆத்தி சூடி யிளம்பிறை யணிந்து
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன்,
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்,
ஏசுவின் தந்தை யெனப்பல மதத்தினர்
உருவகத் தாலே யுணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே , அதனியல் ஒளியுறு மறிவாம்,
அதனிலை கண்டார் அல்லலை யகற்றினார்,
அதனருள் வாழ்த்தி யமரவாழ் வெய்துவோம்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையார் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது முச்சினிலே (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ் நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ் நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போலிளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ் நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ் நாடு (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உல கினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
யாரம் படைத்த தமிழ் நாடு (செந்தமிழ்)

ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ் சொல்ல லாகாது பாப்பா
தெய்வ நமக்குத் துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

தமிழ்த் திரு நாடு தன்னைப் பெற்ற
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தி லினியதடி பாப்பா - எங்கள்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சாதிக ளில்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம், ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.