"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts



முதல் சதுரம்

நம்மை நமக்குக் காட்ட உதவும் உன்னதம்

நமக்கு என்னென்னவோ தெரியும். பொது அறிவிலிருந்து, புது அறிவு வரை எல்லாம் தெரிகிறது. எத்தனையோ இயல்கள் எத்தனையோ இசங்கள் எத்தனையோ புத்திகள் எத்தனையோ தத்துவங்கள் எத்தனையோ மொழிகள் – எல்லாம் அத்துப்படி.

ஆனால் நமக்கு ஒன்று மட்டும் – உறுதியாகப் பிடிபடுவதில்லை. அதென்ன கடவுளா? – இல்லை. நம்மைத் தெரிவதில்லை நமக்கு. நமக்கே நம்மைத் தெரியாத நிலைதான் மிகவும் பரிதாபத்திற்குரியது. நமக்கு உலகத் தலைவர்களைத் தெரியும், உலக விஞ்ஞானிகளைத் தெரியும், உலகக் கலைஞர்களைத் தெரியும், உலக ஞானிகளைத் தெரியும். ஆனால் நம்மிடமே இருக்கும் நம்மை மட்டும் தெரியாது. நமக்கு நம்மைக் காட்டும் கண்ணாடியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை.

நம்மை எப்படி நமக்குத் தெரியாமல் போனது? “எனக்கு நன்றாகத் தெரியும்” – என விவாதிக்க நம்மில் பலர் காத்துக் கொண்டிருக்கலாம். முதலில் அவர்களின் துணிவுக்கும், நம்பிக்கைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். “என்னை எனக்குத் தெரியும்” – என்று சொல்லத் தேவையான துணிவை விட பன்மடங்கு துணிவு என்னை எனக்குத் தெரியவில்லை – என்று ஒத்துக்கொள்ளத் தேவைப்படுகிறது என்பதுதான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அதிசயமாகும்.

நண்பர்களே... நம்மை நாமே அறிய உதவும் ஒரு சதுரத்தை – முதல் சதுரமாய் இப்போது காண்போம். வெறும் சதுரத்தையா காணப்போகிறோம். நம்மையே நாம் காணப்போகிறோம். உங்களுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்கிறதா இல்லையா? உற்சாகமும், ஊக்கமும் பிறக்க வேண்டும். ஏனெனில் நம்மில் பலருக்கும் நம்மைக் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

வாருங்கள்… அந்தச் சதுரத்தைக் காண்போம். இது நான்கு சதுரங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய சதுரம். இது ஒரு ஜன்னல் மாதிரி. நான்கு கதவுகள் இதற்கு உண்டு. இந்த ஜன்னல் வழியாக நாம் புறத்தைக் காணப் போவதில்லை. நம் அகத்தைக் காணப் போகிறோம். ஆமாம். நம் மனதைக் காணப் போகிறோம்.

மனமென்பது உருவமோ அல்லது வடிவமோ இல்லாதது. அதை எப்படி ஒரு ஜன்னலின் வழியாகக் காண்பது என்னும் வியப்பு – ஒரு பெரும் வினாக்குறியாக நம் மனதில் விழக்கூடும்.

சற்றே கீழ்காணும் சதுரத்தை உற்று நோக்குங்களேன்.

மனம்

ஒன்றாம் சதுரம் நம் மனதின் – திறந்த பகுதியை அடையாளங்காட்டுவது.

இரண்டாம் சதுரம் நம் மனதின் – மறைந்த பகுதியை அடையாளங்காட்டுவது.

மூன்றாம் சதுரம் நம் மனதின் – குருட்டுப் பகுதியை அடையாளங்காட்டுவது.

நான்காம் சதுரம் நம் மனதின் – இருண்ட பகுதியை அடையாளங்காட்டுவது.

அதென்ன திறந்த பகுதி, மறைந்த பகுதி, குருட்டுப் பகுதி – என்கிறீர்களா? நல்ல கேள்வி. இவை நான்கும் – நம்மை நமக்குக் காட்டப்போகும் கதவுகளாகும்.

திறந்த பகுதி என்பது – திறந்து கிடக்கும் வீடு மாதிரி, உள்ளிருப்பவை வெளியில் தெரியும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நிலையிலிருக்கும் ஒரு பகுதி. தன்னைப்பற்றித் தனக்கும் தெரிந்திருக்கும் – தன்னோடு பழகும் பிறருக்கும் தெரியும்.

மறைத்த பகுதி என்பது – தன்னைப் பற்றித் தனக்குத் தெரிந்த சில விஷயங்கள் பிறருக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் பகுதி. விரும்பியோ அல்லது விரும்பாமலோ வெளிப்படுத்தப்படாமல் இருக்கும் பகுதி.

குருட்டுப் பகுதி என்பது – தன்னைப்பற்றி பிறருக்கெல்லாம் தெரிந்தாலும் தனக்கு மட்டும் தெரியாதிருக்கும் – பகுதியைக் குறிக்கிறது. (நம் செயல்பாடுகள் பிறருக்குத் தெரியும் ஆனால் நாம் அதனை உணராதவர்களாகவே வாழ்ந்து கொண்டிருப்போம்).

இருண்ட பகுதி என்பது – தன்னைப்பற்றி தனக்கும் தெரியாமல், பிறருக்கும் தெரியாமல் மர்மமாய் இருக்கும் மனப்பகுதி. இங்குதான் வாழ்வின் எதிர்காலம் புதைந்து கிடக்கின்றது. தோண்டித் துருவி எடுத்து மேம்படுத்தப்பட வேண்டிய கற்பக விருட்சமோ, அட்சய பாத்திரமோ இதனுள்தான் இருக்கிறது.

மேற்கண்ட 4 பகுதிகளில் எந்தப் பகுதி சிறந்த பகுதி? எந்தப் பகுதி அதிகமாக இருந்தால் வாழ்க்கை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்? மனதின் திறந்த பகுதி அதிகமாக இருந்தால் மகிழ்ச்சி தானே வரும். மறைந்தும் குருடாகியும் இருண்டும் கிடக்கும் மனதால் எவ்விதப் பயனுமில்லை. எனவே நான்காய் பிரிந்து கிடக்கும் மனதை திறந்து கொண்டு ஒரு பெரிய மனதாய் மாற்றியமைக்க வேண்டும். அதற்கு மற்ற மூன்று பகுதிகளையும் சிறிது சிறிதாய் குறைக்க வேண்டும்.

சரி… அதை எப்படிச் செய்வது எனக் காண்போம். முதலில் மறைத்த பகுதியைக் குறைக்க பிறரோடு நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்க வேண்டும். மிகவும் நெருங்கியவர்களிடமாவது நமது மனதைத் திறந்து “பேச” முற்படவேண்டும். உண்மை பேச வேண்டும். பேசப்பேசத் தான் மறைத்த மனது குறையத் தொடங்கும். மனதின் பாரம் குறைந்து விடும். மனம் லேசாகும்.

அடுத்த பகுதியாகிய குருட்டுப் பகுதியைக் குறைக்க வேண்டுமெனில் நம்மிடம் அக்கறை கொண்ட பிறரைப் பேச அனுமதிக்க வேண்டும். அதுமட்டுமல்ல அவற்றைக் காது கொடுத்தும் கேட்கவும் வேண்டும். பிறர் சொல்லை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் கேட்டுக் கொள்ளவும், கவனிக்கவும் தயக்கம் காட்டக்கூடாது. அப்போதுதான் நம்முடைய குறைபாடுகள் நமக்குத் தெரியவரும். நமது குறைபாடு நமக்குத் தெரிந்து விட்டால் – அவற்றை மாற்றிக்கொள்ள நாம் முயற்சி மேற்கொள்ளலாம். அப்போது நம் வாழ்வில் மேம்பாடு நிகழும்.

அடுத்ததாக இருண்ட பகுதியைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டுவதெல்லாம் “தேடல்” தான். நம்மிடமுள்ள திறமைகள் என்ன? நமது ஆர்வம் அல்லது விருப்பமென்ன? நமது இலக்கு என்ன? நமக்கான வாய்ப்புகள் என்னென்ன? நமக்கான தடைகளை எப்படித் தகர்த்து முன்னேறுவது – எனத் தொடரும் “தேடல்” மூலம் இந்த இருண்ட பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் கொணர முடியும்.

மேற்கண்ட முயற்சிகளால் – நம் மனதை நன்றாகத் திறந்துகொள்ள முடியும். மனம் திறந்து கொண்டால் மற்றவர்கள் நம்மை புரிந்து ஏற்றுக் கொள்வார்கள், நம்மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும். அதனால் நமது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மனம் திறக்க திறக்க நமது வெற்றிக்கான மார்க்கமெல்லாம் புலப்படத் தொடங்கும்.

அதனால் மனதில் நிம்மதியும் ஆனந்தமும் நிரந்தரமாய் தங்கிவிடும்.

விளைவு: நம் சிந்தனையும், முடிவுகளும், செயல்பாடுகளும் சிறப்பாய் அமையும்.

காலத்தின் அருமையை உணர்ததும் உன்னதம்

மூன்றாவது சதுரம் மிகவும் முக்கியமான காலத்தை உணர்த்துவது. காலம் மிகவும் அற்புதமானது. காலம் என்பது கடந்துவிட்டால் மீண்டும் கிடைக்காதது. காலம் என்பது அனைவருக்கும் பொதுவானது. காலம் என்பது ஒவ்வொருவர் கையிலும் கிட்டியிருக்கும் பொக்கிஷமாகும். மனிதவளம் என்பது – இந்தப் பிரபஞ்சத்தின் மூலதனம் என்றால் காலமானது – இந்த மனிதவளத்தின் மூலதனம் என்பது மறுக்க முடியாததாகும். இந்த மூலதனத்தை முறையாகப் பயன்படுத்தும் மார்க்கம் தெரியாததால் நம்மில் பலரும்

வாழ்வின் மிக முக்கியமான அம்சங்களை இழந்து நிற்கிறோம். பலவற்றை இழந்த பிறகே – பலருக்கும் இந்தக் காலத்தின் அற்புதம் புரிய வருகிறது. இந்நிலை ஏற்படாமல் தடுத்து இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் பொருட்டு நாம் இந்த சதுரத்தைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டியிருக்கிறது.

உற்று நோக்கினால் மேற்கண்ட நான்கு சதுரங்களில் காலம் சதுரங்கம் ஆடுவதைக் காணலாம். மேற்கண்ட பெரிய சதுரத்தின் மீது கவனத்தைக் குவியுங்கள்.

சதுரம் – 4 ல் குறிப்பிட்டுள்ள காரியங்கள் யாவும் எந்தவித அவசரமோ, அவசியமோ அற்றவையாகும். இவை குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையே இல்லை. ஆனால் நமது அன்றாடச் செயல்பாடுகளில் பலவும் இத்தகைய வகையைச் சேர்ந்ததே ஆகும். எடுத்துக்காட்டாக கூறவேண்டுமெனில் எந்தவித தேவையுமற்ற தொலைபேசி உரையாடல்கள், வெற்று அரட்டைகள், வெறும் கேளிக்கைகள், எந்த நோக்கமுமற்ற பொழுதுபோக்குகள் இவையாவும் – அவசரமோ, அவசியமோ அற்ற செயல்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும், இவற்றை நாம் அடையாளம் காண வேண்டும். அடையாளம் கண்டு அவற்றைத் தவிர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும். முனைப்புடன் செயல்பட வேண்டும்.

சதுரம் – 3 : இதில் அவசியமற்ற ஆனால் அவசரமான செயல்களை உள்ளடக்கிய சதுரமாக இது விளங்குகிறது. நம்மைத் தொந்தரவு செய்யும் வேண்டாத சில தொலைபேசி அழைப்புகள், எதிர்பாராத சில விருந்தாளிகளின் வருகை, சில கூட்டங்கள், சில மனுக்கள் தயாரித்தல், சில கடிதங்கள் எழுதுதல் போன்றவை அவசியமாய் இருக்க மாட்டா. ஆனால் அவசரமாய் செய்தாக வேண்டியவையாய் இருக்கும். இவை பெரும்பாலும், பிறருக்காகச் செய்யப்படும் செயல்களாக இருக்குமே அன்றி, நமது குறிக்கோளை அடைவதற்கான காரியங்களாக இருக்கமாட்டா என்பதை உணர்தல் அவசியமாகும்.

மேற்கண்ட சதுரம் – 4 மற்றும் சதுரம் – 3 – இவை இரண்டையும் ஊன்றி நோக்கினால் ஒன்றை உணரலாம். இவை இரண்டிலும் அதிக நேரத்தைச் செலவிடுபவர்கள் எதற்கும் அதிகமாக அலட்டிக் கொள்ளாதவர்களாகவும், பெரும் பொறுப்பு எதையும் ஏற்றுச் செய்யாதவர்களாகவும் இருப்பார்கள். பொழுதுபோக்கும் முகமாக – பிறரின் காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர்களாகவும் காணப்படுவார்கள். இவர்கள்.

செயல்திறனும், செய்நேர்த்தியும் மிக்கவர்கள் இந்த இரண்டு சதுரங்களுக்குள் சிக்கிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில், அவசரமாய் இருந்தாலும் அவசியமில்லை என்பதால் அவசியமற்றதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள். எனவே நாமும் செய்நேர்த்தி மிக்கவர்களாக வாழ வேண்டுமெனில் அவசியமற்றவற்றை ஒதுக்கிவிட்டு நேரத்தை முறையாகப் பயன்படுத்தப் பழக வேண்டும்.

இப்போது, முதல் சதுரத்தைப் பாருங்கள். அங்கே குவிந்து கிடக்கும் காரியங்கள் யாவும் அவசரமாகச் செய்து முடிக்கப்பட வேண்டிய நிலையிலும், அவசியம் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருப்பதை நம்மால் உணர முடியும். பெரும்பாலான சமயங்களில் நமது செயல்பாடுகள் இப்படித்தான் உள்ளன.

எல்லாச் செயல்பாடுகளையுமே, இப்படி ஒரு நெருக்கடி காலச் செயல்களாக மாற்றிக்கொண்டு அவதிப்படுகிறோம். அவற்றை எப்போது செய்து முடித்திருக்க வேண்டுமோ அப்போது அவற்றைச் செய்து முடிக்க முனைவதில்லை. ஒத்திப் போடுதல் என்னும் மனோபாவம் நம்மை உதறிப் போட்டு விடுகிறது.

“வேலை இல்லை வேலை இல்லை” – என அங்கலாய்க்கும் இளவட்டங்கள் கூட தங்கள் வேலைக்கான மனுவை உரிய நேரத்தில் அஞ்சலில் சேர்க்காமல், இறுதி நாளில் அதை எடுத்துக்கொண்டு, அடுத்த நாளே சேர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டுமெனப் பலரிடமும் கேட்டுத் திரிவதைக் காண முடியும். “ஏன்? இத்தனை நாளாய் என்ன செய்தாய் என்று கேட்டுப் பார்த்தால்; இன்னும் நாள் இருக்கிறதே என்று தள்ளிப் போட்டேன். கடைசியாய் பார்த்தால், தாசில்தார் ஊரில் இல்லாமல் போய், சாதிச்சான்றிதழுக்காக ஒரு வாரம் காத்திருக்க வேண்டியதாயிற்று” – என்பார் அந்த இளைஞர்.

ஏன் இந்த நிலைமை? காலத்தின் அருமையை உணராமைதான் காரணம். சோம்பலும், எது முக்கியம் அல்லது எது அவசரம் எனப் புரியாமையுமே – இதற்குக் காரணம். ஒரு நொடி தாமதிப்பதால் ஏற்படும் இழப்பை – முதலாவதாய் வந்து தன் முத்திரையைப் பதிக்க முடியாமற்போகும் ஒரு விளையாட்டு வீரன் உணர்வான்! இழந்தபின் அழுது என்ன பயன்? ஆகவே காலத்தின் அருமையை அறிந்து உணர்தல் அவசியம். நேரத்தின் அவசியத்தை உணர வேண்டுமெனில் நமது அன்றாடப் பணிகளைப் பட்டியலிட வேண்டும். பிறகு அவசியமானவற்றையும் அவசரமானவற்றையும் அடையாளம் காண வேண்டும்.

மாறாக சதுரம் – 2 ஐக் கவனியுங்கள். அங்கே “அவசரமற்ற ஆனால் அவசியமான” – காரியங்கள் மட்டுமே மிஞ்சும். இந்தச் செயல்களை உடனடியாக முடிக்க வேண்டிய அவசரமில்லை. ஆனால் அவசியம் முடித்தாக வேண்டும் என்பவை இவை. இவற்றில்தான் நாம் நமது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால் நமக்கும் அவசரமோ, ஆத்திரமோ இல்லாமல் நிதானமாகத் திட்டமிட்டு தீர்க்கமாக வெற்றிகரமாக நமது காரியங்களைச் செய்து முடிக்க முடியும். அத்தகைய காரியங்களே நம்மை செய்நேர்த்தி மிக்கவர்களாக உலகுக்கு அடையாளம் காட்டும்.

வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால் அவர்களெல்லாம் சதுரம் – 4 மற்றும் சதுரம் 3 இரண்டையும் புறக்கணித்து விட்டவர்களாகவும், சதுரம் – 1ஐ ஏறிட்டும் பார்க்க வேண்டிய அவசியமில்லாத வர்களாகவும் திகழ்வார்கள்.

காரணம் என்னவெனில் அவர்களின் கவனமும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் சதுரம் -2 லேயே குவிந்திருக்கும்.

அவர்களுக்கு “எது அவசியம்” – என்பது புரிந்திருக்கும். அதுமட்டுமல்ல அவசரமானாலும் கூட அவசியமற்றதென்றால் அவர்கள் அதனைப் புறக்கணித்துவிடத் தயங்காத உறுதியான உள்ளம் படைத்தவர்களாகவும் திகழ்வார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் எல்லாம் தங்களுக்கென சில இலக்குகளை முன்வைத்து இயங்கிக் கொண்டிருப்பதால் அவசியமில்லாமல் பிறரின் செயல்பாடுகளில் மூக்கை நுழைத்து தமது காலத்தை வீணடிக்கும் தவறான காரியத்தைச் செய்யமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

என்ன? – இனி நாமும் நமது அன்றாடச் செயல்களை மேற்கண்ட நான்கு சதுரங்களாக வரையறுத்து – இரண்டாம் சதுரத்தில் நமது மனதை ஒருமுகப்படுத்தி வெற்றி காண்போமா?

அணியணியாய் இணைய உதவும் அழகிய சதுரங்கம்

நான்காவது சதுரம் நம்மைப் பிணைக்கும் சதுரம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுதலின் அவசியத்தை நமக்கு உணர்த்தும் ஒற்றுமைச் சதுரம்.

கீழ்காணும் சதுரத்தை உற்று நோக்கிடுங்கள். அது என்ன சொல்கிறது என்பது நமக்குப் பிடிபடும். அந்தச் சதுரத்தின் கிடைக்கோடு நமது தைரியத்தைக் குறிப்பதாகக் கொள்வோம். செங்குத்துக் கோடு நமது கருணையைக் குறிப்பதாக கொள்வோம். இந்த இரண்டு கோடுகளை அடிப்படையாகக் கொண்டுஅமையும் நான்கு சதுரங்களை நன்கு கவனிப்போம்.

முதலில் “வெல்ல …. தோற்க….” – என்னும் முதலாம் சதுரத்தை எடுத்துக்கொள்வோம். இதன் பொருள் என்னவெனில் “நான் வெல்வேன்…. நீ தோற்பாய்” -என்கிற அடிப்படையில் தொடங்கப்படும் முயற்சியை அல்லது நடவடிக்கையைக் குறிக்கும். இத்தகைய மனோபாவம் – விளையாட்டின் போதும், போரின் போதும் காணப்படக் கூடியதாகும். வாழ்க்கைக்கோ, வர்த்தகத்துக்கோ, உறவுமுறைக்கோ ஒத்துவராததாகும். “நான் வெல்ல வேண்டும் நீ தோற்க வேண்டும்” – என்று முனைகிறபோது, அவரிடம் தைரியம் அதிகமாகவும் கருணை மிகவும் குறைவாகவும் உள்ளதென்று பொருள். அதாவது முரட்டுத் தனம் மிகுந்து காணப்படும். வேகம் இருக்கும். ஆனால் விவேகம் இருக்காது. – இத்தகைய நிலை வாழ்க்கையை வசப்படுத்தவும் தலைமை தாங்கவும் உதவாது. “வெட்டு ஒன்று துண்டு ரெண்டு” என நடந்து கொள்ளும் இவர்களைப் பெரும்பாலானோர்க்குப் பிடிக்காமற்போகும். அவரது பேச்சில் பக்குவம் இருக்காது. இவர்களது செயலில் நிதானம் இருக்காது.. இதனால் உறவுகள் இனிமையாய் இருக்காது. இது அதிகாரம் தொனிக்கும் நிலைமையைக் குறிக்கும். “தானே முக்கியமானவன்” – என்னும் தன்மை தொனிக்கும்.

இரண்டாம் சதுரம்: “நான் தோற்கிறேன் நீ வெல்ல” என்பதாகும். அதாவது, “நான் விட்டுக் கொடுக்கிறேன் நீ வெல்ல” – என்னும் மனோபாவத்தைக் குறிக்கும் சதுரமாகும். இப்படிப்பட்ட மனோபாவம் யாருக்கு வாய்க்கும் எனப் பார்த்தால் – யாரிடம் தைரியம் குறைவாகவும் கருணை அதிகமாகவும் இருக்குமோ – அவர்களால் மட்டுமே இப்படித் தன்னைத்தானே விட்டுக்கொடுத்து பிறர் வெல்ல – ஏதுவாக இருக்க முடியும். இது ஒருவரது பலவீனத்தைக் காட்டும் தன்மையாகும். இந்த நிலையில் உறவு ஆரம்பத்தில் இனிப்பது போலத் தோன்றினாலும், நாளாக ஆக, இப்படிப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுவர். இவர்களின் மதிப்புக் குறைய நேரும். பிறகு யாருமே கவனிக்கவில்லை, எனக்கென்று யாருமில்லை, என்னால் முன்னேற முடியவில்லை எனப் புலம்ப நேரிடும்.

மேற்கண்ட இரண்டு சதுரங்களையும் சற்றே உற்று நோக்கினால் ஒரு விபரீதம் புரியும். உறவில் சம்பந்தப்பட்ட இருவருள் ஒருவர் – முதல் சதுரத்துக்குச் சொந்தக்காரராகவும், மற்றவர் இரண்டாம் சதுரத்திற்குச் சொந்தக்காரராகவும் இருந்தால் – நடப்பதை யூகித்துப் பாருங்கள்….. அவர், “நான் வெல்வேன்…. நீ தோற்பாய்” என்று களத்தில் இறங்குவார். இவர், “நான் தோற்பேன்…. நீ வெல்வாய்” என்று களத்தில் இருப்பார்.விளைவு என்னாகும்? எந்த வித சுவாரசியமும் இல்லாமல் ஒருவர் வெல்ல மற்றவர் தோற்றுக்கொண்டே இருப்பார். இது ஒருவித (துஷ்பிரயோக நிலைக்குச் சமமாகும்) மிகைப்படுத்துதலுக்குச் சமம்.

மூன்றாவது சதுரம்: “நானும் தோற்பேன் நீயும் தோற்க வேண்டும்” – என்னும் மிகவும் மோசமான மனோபாவத்தைக் குறிக்கிறது. “தனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை. அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும்” – என்னும் பழிவாங்கும் மனோநிலையைக் குறிக்கிறது.

இந்த நிலையை யார் அடைவர் என்றால், இந்த உறவில் சம்பந்தப்பட்ட இருவரும் சதுரம் – 1ல் கூறப்பட்டிருக்கும் “நான் வெல்வேன் நீ தோற்கவேண்டும்” என்னும் நிலையில் இயங்குபவராய் இருப்பர். இறுதியில் இருவருமே தோற்றுப்போகக் கூடும். இவர்களிடம் ஆணவமும், அதிகாரமும், ஆதிக்க மனோபாவமும் மிகுந்து காணப்படும். இவர்களைப் பொறுத்தவரை – எதிரியின் தோல்வியே முக்கியமானது. இவர்களின் தோல்வி என்பது வெகு சாதாரணமாகிப் போகும். இந்த நிலையின் கொடுமையைக் கொஞ்சம் யூகித்துப் பாருங்கள். இந்த நிலை தேவையா என்று எண்ணிப்பாருங்கள்.

நான்காவது சதுரமானது: “நானும் வெல்வேன் நீயும் வெல்வாய்”-என்னும் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருக்கும் உன்னதமான உறவுநிலை. இந்நிலை – ஒத்துழைப்பு நிலையைக் குறிப்பதாகும். இந்நிலை வாழ்வை ஒரு போட்டியாகக் கருதாமல், உடன்பாடாகவும், கூட்டுறவாகவும் கருதும் நிலையாகும். மேற்கண்ட மற்ற நிலைகளெல்லாம் அந்தஸ்து மற்றும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஆனால் இந்த நிலை “எல்லோர்க்கும் எல்லாமும் பொது” என்னும் பரந்த மனப்பான்மையின் அடிப்படையிலமைந்த பொது உடைமையைக் குறிக்கும் நிலையாகும்.

ஒருவர் வெற்றிபெற வேண்டுமானால் மற்றவர் தோற்றாக வேண்டும் என்னும் எண்ணமற்ற நிலை இது. இது உனது வழியோ எனது வழியோ அல்ல. “இது நமது வழி” என்னும் சமத்துவத்தை சகோதரத்துவத்தை நிலைநாட்டும் உன்னத நிலை!

கூடிவாழ்தல் என்பது சமூக நிலையில் உயர்ந்த நிலை. யாரையும் சார்ந்து வாழும் அடிமை நிலையிலிருந்து விடுபட்டு – இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து, ஒருவரின் திறமையை ஒருவர் மதித்து ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையையோ வர்த்தகத்தையோ இணைந்து நடத்தும் மகத்தான நிலை. இந்நிலையில் ஈடுபட்டிருக்கும் யார்க்கும் ஆனந்தமே மிஞ்சும்.

இவர்களுக்கு தைரியமும் அதிகமாய் இருக்கும். கருணையும் அதிகமாய் காணப்படும். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாது. இவர்களின் மனம் பக்குவப்பட்டதாய் இருக்கும். ஒருவரால் எப்பொழுது, தனது உணர்வுகளையும், எண்ணங்களையும் தைரியமாக வெளிப்படுத்தும் அதே நேரத்தில் பிறரின் உணர்வுகளையும், மன உறுதியையும் கேட்டுப்புரிந்து கொள்ளும் கருணை உணர்வும் கொண்டிருந்தால் அதுவே பக்குவநிலை எனப்படும். அதுவே மிக உயர்ந்த நிலையும் ஆகும்.

இதில் காணப்படும் “தைரியம்” – என்பது பொன்முட்டைக்கு உத்திரவாதம் தருவதெனினும், “கருணை” – என்பது தொலைநோக்குப் பார்வையில், சம்பந்தப்பட்ட அனைவருக்குமான வளத்துக்கும் வழிவகுக்கும் குணமாகும். இந்த இரண்டின் அடிப்படையில் அமையும் தலைமையானது – அனைவரின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தவல்லது என்பதில் ஐயமேதுமில்லை.

ஆகவே நாமெல்லோருமே “நானும் வெல்வேன் நீயும் வெல்வாய்” – என்னும் பொது வெற்றியை நோக்கிப் புறப்படுவோம். விரைவில் நம் தேசத்தை வல்லரசாக்கும் இந்த வழியில் நடந்து நம் கனவை நாமே நனவாக்குவோம்.

முரண்பாடுகளைத் தீர்த்து வைக்கும் உடன்பாட்டு உன்னதம்

கீழ்காணும் சதுரத்தைக் கூர்ந்து நோக்குங்கள்

(நான்) நெருங்க
(நீ) விலக
(1) (நான்) நெருங்க
(நீயும்) நெருங்க
(2)
(நான்) விலக
(நீயும்) விலக
(3) (நான்) விலக
(நீ) நெருங்க
(4)

வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் ஒருவருக்கு மேற்பட்ட நபர் இணைந்து செயல்படும் எந்தச் சூழ்நிலையானாலும் சரி. (அது குடும்பமாக இருக்கலாம், அலுவலகமாக இருக்கலாம், பொது இடமாக இருக்கலாம், சமூகமாக இருக்கலாம், நிறுவனமாக இருக்கலாம், தொழிற்கூடமாக இருக்கலாம்) அங்கெல்லாம் இருவருக்கிடையிலோ, பலருக்கிடையிலோ கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். கருத்து வேறுபாடுகளுக்கான காரணங்கள் பற்பல. வயது வேறுபடலாம், அனுபவம் வேறுபடலாம், விருப்பம் வேறுபடலாம், தேவையும் இலக்கும் வேறுபடலாம். மொழி, மதிப்பீடு, நம்பிக்கை வேறுபடலாம். அணியாக இயங்கும்போது அப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகள் தோன்றுதல் தீர்க்கப்படாவிடில் அந்தக் கருத்து வேறுபாடு விசுவரூபம் எடுத்து – அணியின் செயல்பாடுகளுக்கே பங்கம் விளைப்பதாக ஆகி விடும்.

கருத்து வேறுபாடுகள் நீடிக்குமானால் நாளடைவில் அது பூதாகாரமாக வெடித்து – குடும்ப உறவுகள் சிதைந்து போகவோ, நிர்வாக உறவு சீர்கேடு அடையவோ, ஒரு விளையாட்டு அணியின் செயல்வேகம் பாதிக்கப்படவோ, ஒரு இசைக்குழுவின் திறமை வெளிப்படாமல் போகவோ வாய்ப்புகள் உண்டு. அது மட்டுமல்ல – இவர்களின் இலக்குகளை எட்ட முடியாமலும் இலட்சியத்தை அடைய முடியாமலும் போவதோடு – மனித உறவுகளும் சின்னா பின்னமாகிப் போய்விடக் கூடும்.

இப்படிப்பட்ட நிலை வருமுன்னர் காப்பதுதான் – மனிதவளத்தின் மேம்பாட்டுக்கு உதவும் உயரிய செயலாகும். அதுவே நமது வாழ்நிலை மேம்பாட்டுக்கான அடிப்படைத் தேவையுமாகும்.

முதல் சதுரத்தைக் காண்போம்: கருத்து வேறுபாடு கொண்ட இருவரோ அல்லது இரு குழுவோ இப்படி செயல்படக்கூடும். ஒரு சாரார் (ஒருவர்) இணக்கத்தை நாடி வரும்போது மறுசாரார் (மற்றொருவர்) பிணக்கம் கொண்டு உறவை மறுக்கும் சூழ்நிலையை – இது குறிக்கிறது. ஒருவர் அனுசரிக்கும்போது மற்றவர் வீம்பு செய்து விலகிச் செல்லும் நிலை. இதைத்தான் தமிழில் “கெஞ்சினால் மிஞ்சுவது” – என்பார்கள். ஒருவர் அனுசரிக்க மற்றவர் ஆணவத்தோடு விலகும் நிலை – கருத்து வேறுபாட்டை வளர்த்து உறவின் முறிவுக்கு இட்டுச்செல்லும். இந்த அவலநிலை தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

இரண்டாம் சதுரம்: ஒருவர் விலகிச் செல்லச் செல்ல மற்றவர் நெருங்கி நெருங்கி வந்து இணக்கத்தை உருவாக்க முயலும் நிலை. ஒருவர் விட்டுக்கொடுக்கும் இந்நிலை நல்லது என்றாலும் இதுவும் நிலைபெறாது. பிறரை வசப்படுத்துவதுதான் சிரமமான காரியம். நாமே வம்பு செய்து கொண்டிருந்தால் – நமது கருத்து வேறுபாட்டை வேறு யார் வந்து தீர்ப்பர்? எனவே கருத்து வேறுபாட்டால் ஏற்படவிருக்கும் அவல நிலையை உணர்ந்து நாம் நமது அபரிதமான தன் முனைப்பை , ஆணவத்தை சற்றே ஒதுக்கிவிட்டுப் பிறரின் கருத்துக்குக் காது கொடுக்கத் தயாராகி விட்டாலே மனதை ஆட்டுவிக்கும் கருத்து வேறுபாடு குறையவும் – உறவுநிலை மேம்படவும் வாய்ப்பு பிரகாசமாகும். அதை விடுத்து – நமது ஆணவத்தின் காரணமாய்ப் பிறருக்குப் புத்திபுகட்ட நினைத்தால் – இழப்பு நமக்குத்தான். மாறாக விட்டுக் கொடுத்து உறவாடினால் பலன் இருவருக்கும் ஏற்படும் என்பதை மறக்கக்கூடாது. இருவருக்கும் இன்பம் உண்டாகும் நிலையே உயர்நிலை.

மூன்றாம் சதுரம்: “ஒருவர் விலகிச் செல்ல, அடுத்தவரும் விலகி செல்வது!” இந்தச் சதுரத்தில் குறிப்பிடப்படுகிறது. இருவருமே விலகிச் செல்லும் மனோபாவம் – இணக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அடியோடு தகர்த்துவிடும். இந்த நிலை ஒரு அணியில் முழுவதும் விரும்பத் தகாத நிலை. சம்பந்தப்பட்ட இருவரில் யாரேனும் ஒருவருக்காவது நெருங்கும் விருப்பம் இருந்தால் மூன்றாம் நபரின் தலையீட்டால் இணக்கம் ஏற்படும் சூழலை உருவாக்க முடியும். ஆனால் இருவரும் விலகிச் செல்ல முற்படும்போது அதுவே முரண்பாட்டின் மொத்தமாகக் காட்சியளிக்கும். உடன்படுவதற்கான வாய்ப்பை இது முழுவதுமாகக் கெடுத்துவிடும். எனவே இந்நிலை தவிர்க்கப்பட வேண்டியதாகும். இன்னும் சொல்லப் போனால் இத்தகைய நிலையே ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதுதான் உகந்தது.

நான்காம் சதுரமாகிய “நெருங்க….. நெருங்க….” – என்றும் நிலை மிகவும் மேம்பட்ட நிலை, உன்னத நிலை. இது இருவரின் பக்குவ நிலையைப் பறை சாற்றும் நிலையாகும். ஏதோ ஒரு சூழலால் அல்லது சந்தர்ப்பத்தால் – மனதளவில் – முரண்பாட்டுக்கு ஆளான இருவரும், பிறகு சிறு கால அவகாசத்தில், அதற்கும் மேலே ஒரு படிபோய்… “நான் நெருங்கி வருகிறேன்…” என்று இருவரும் இணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு உறவுப் பிணைப்புக்கான – பாலத்தை உருவாக்குதலில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வர். இத்தகையவர்களால் ஒரு குடும்பமோ, நிர்வாகமோ, இயக்கமோ – தனது இலக்கை அடையும் திசையில் பீடு நடைபோட்டு மகத்தான வெற்றியடையும். அந்த அணியில் எப்போதும் உள்ளார்ந்த மகிழ்ச்சியும் ஊக்கமும் உற்சாகமும் நிலைத்திருக்கும்.

எனவே வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் முன்னர் குறிப்பிட்ட 1, 2, 3 என்னும் மற்ற மூன்று சதுரங்களும் ஒத்துழையாமைக்கும், ஒற்றுமையின்மைக்கும் வழி வகுத்து – தனது நோக்கத்திலிருந்து ஓர் இயக்கம் வழுவி விடுவதற்கான கூறுகளை உள்ளடக்கிக் கொண்டிருப்பவை. விரும்பத்தகாதவை.

மாறாக, நான்காம் சதுரமாகிய “நெருங்க…. நெருங்க….” – என்னும் சதுரமோ – அனைவரும் ஒருங்கிணைந்து – ஒட்டுமொத்த சக்தியையும் பிணைத்து – பொது இலக்கை நோக்கி – ஒருமனதாக இயங்கி, குறித்த காலத்தில், குறித்த செலவில், பயணித்து வெற்றிக் குறியீட்டை எட்டுவதோடு – அனைவரின் ஒட்டுமொத்த தன்னம்பிக்கைக்கும் – உயர்வுக்கும், மனிதகுல மேம்பாட்டுக்கும் உதவிடும் ஒப்பற்ற- உயரிய – பக்குவ நிலையாகும்.

இந்நிலையே இனிய நிலையாகும். இதுவே கூடிவாழும் – குடும்பமும், நிறுவனமும், தொழிலகமும், எந்த அணியும் – வெற்றிபெறப் பேருதவி புரியும் அற்புதமான நிலையாகும்! முயன்று – இந்நிலை பெற்று இனிமை காணலாமே!

எழுச்சிமயமான நிலையை எடுத்தியம்பும் சதுரம்

நம் குடும்பத்திலோ, நிறுவனத்திலோ, இயக்கத்திலோ – நம்மோடு இணைந்து இயங்கும் நபர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து – அவர்களின் செயல்திறன் முழுமையாக வெளிப்படவும், செய்நேர்த்தி மேம்படவும் – நாம் புரிந்துகொள்ள வேண்டிய கூறுகளை இந்த ஆறாம் சதுரம் எடுத்து முன்வைக்கிறது.

பெரிய சதுரத்தின் உள்ளே நான்கு சிறிய சதுரங்களைக் காண்கிறீர்கள் அல்லவா…. அவற்றை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துகிறேன்.

சதுரம்:

1 திறமை இருந்து – அதனை வெளிப்படுத்தும் விருப்பமும் கொண்டு, செயலாற்றும் நபர்களை உள்ளடக்கிய சதுரம் இது. இப்படிப்பட்டவர்கள் நிறைந்த சூழல்தான் செய்நேர்த்தி மிக்கதாக அமைந்திருக்கும். இவர்களின் உற்பத்தித் திறன் முழுமையாக வெளிப்படும். இவர்கள் நிறைந்த இடத்தில் வேலைகள் எளிதில் நிறைவேறும். குழப்பமோ குதர்க்கமோ இருக்காது. மனித உறவுகள் மேம்பட்டு மகிழ்ச்சி நிறைந்த இடமாக இது காட்சியளிக்கும். இன்னும் சொல்லப் போனால் மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொள்ளும் இடமாக இது ஒளிரும்.

இதை “ஆக்கநிலை” என்பேன். இது மயக்கமோ, தயக்கமோ, தேக்கமோ இல்லாத நிலையே ஆகும். இதுவே அனைவராலும் விரும்பத்தகுந்த உன்னத நிலையாகும்!

சதுரம்: 2

இந்த சதுரத்திற்குள் இடம் பிடிப்பவர்கள் விருப்பமுள்ளவர்கள். ஆனால் திறமைக் குறைபாடுள்ளவர்கள். இவர்கள் கவலைக் கிடமானவர்கள் அல்ல. காரணம் – இவர்களின் மனோபாவம் தயார் நிலையில் உள்ளது. தடையாக இருப்பது போதுமான பயிற்சியின்மைதான். இவர்களின் திறமை பளிச்சிட வேண்டுமெனில், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை முறையாகக் கொடுக்க வேண்டும்.

இவர்கள் விருப்பமுள்ளவர்களாக விளங்குவதால், பயிற்சி பெற்றுத் தேர்வதில் வேறு எந்தச் சிக்கலும் இருக்காது. இவர்கள் போதிய பயிற்சி எடுத்துக் கொண்டால் தேக்கநிலை மாறி – உற்பத்தித்திறன் உயரும்.

ஊக்கம் மிகுந்த இவர்களுக்கு – உரிய பயிற்சிகளை மட்டும் முறையாகக் கொடுத்து விட்டால் – அவ்விடத்தின், அத்தொழிலின், அவ்வுறவின் மதிப்பு உயரும்.

சதுரம்: 3

இந்தக் குட்டிச் சதுரத்தில் குவிந்திருப்பவர்கள் திறமையுள்ளவர்களாக இருப்பார்கள், திறமைக்கான போதிய பயிற்சியைப் பெற்றிருப்பார்கள். அந்தத் திறமையில் தேர்ச்சியும் பெற்றிருப்பார்கள் இருந்தும் அதனை வெளிப்படுத்தி – பயன் விளைக்கத் தயாராய் இருக்க மாட்டார்கள். காரணம் என்னவெனப் பார்த்தால் அவர்கள் மனதில் செயலாற்றும் விருப்பம் இருக்காது. விருப்பமின்மை ஏன் ஏற்படுகிறது என்பது பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய விஷயமாகும். போதிய சம்பளமோ, போதிய பாராட்டோ, போதிய அங்கீகாரமோ, போதிய இட வசதியோ, போதிய வெளிச்சமோ, போதிய காற்றோட்டமோ போதிய உபகரணமோ – பல நாட்களாக சரிசெய்யப்படாத மனித உறவோ ஒருவரின் விருப்பமின்மைக்குக் காரணிகளாக அமையலாம். அவற்றை அறிந்து, பட்டியலிட்டுப் பகுத்துப் பார்த்து ஆய்ந்து – நிவர்த்திசெய்ய முற்பட்டால் அத்தகைய நபர்களின் மனக்குறையை நீக்கி, அவர்களை பயன்மிக்க உற்பத்தியாளர்களாக மேம்படுத்திக் காட்டமுடியும். அவர்கள் பயன்பாடு மிக்கவர்களாக மாறுகிறபோது அவர்களின் மதிப்பு மட்டுமல்ல அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மதிப்பும், சமூக மதிப்பும் கூடி விடுகிறது என்பதுதான் உண்மை.

விருப்பம் இல்லையென்றால் செயலில் மனம் வைக்க மாட்டார்கள். இந்நிலை உயர்வுக்கு உதவாது. இந்தத் தயக்க நிலையை உணர்ந்து தீர்வு காண முயல வேண்டும். நமது கவனம் அந்தச் சதுரத்தில் குவிய வேண்டும். ஏனெனில் இப்படிப்பட்டவர்களால் மற்ற நபர்களின் மனமும் பாதிக்கப்படும். விளைவு அனைவரின் செயல்பாடும் குறைந்து – நோக்கம் வீழ்த்தப்படும்… விளைவுகள் விபரீதமானவையாய் மாறும்.

சதுரம்: 4

இந்தச் சதுரம் ஒரு சதுப்பு நிலம் மாதிரி. இவர்களிடம் திறமையும் இருக்காது. திறமையை வளர்த்துக் கொள்ளவோ, வெளிப்படுத்தவோ மனதில் விருப்பமும் இருக்காது. திறமையோ, விருப்பமோ – இரண்டும் இல்லாது போனால் ஒருவனால் எப்படி இயங்க முடியும்? அவனது வாழ்க்கை எப்படி இனிக்கும்? – இந்த நிலை மயக்க நிலையாகும். இவர்களின் மயக்க நிலை நீங்க வேண்டுமெனில் நாம் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

நேர்மறையான எண்ணங்களை இவர்களின் நெஞ்சில் வளர்த்து போதுமான ஊக்க உணர்வுகளைப் புகட்டி தேவையான பயிற்சிகளை முறையாகக் கொடுக்கத் திட்டமிட்டால் இவர்களும் பயன்பாடுமிக்கவர்களாக, நிறுவனத்தின் மதிப்பை மேலும் உயர்த்துபவர்களாக மாறுவார்கள். மனிதவளமென்பதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட இனிமையான அனுபவமும் நமக்குக் கிடைக்கும். அல்லது இவர்கள் பட்ட மரங்களாகவும் இவர்கள் வாழும் இடம் சதுப்பு நிலங்களாகவும் மாறிவிடக் கூடும். அன்பு காட்டிப் பயிற்சி கொடுத்தால் நாளடைவில் நலம் விளையும்.

மேற்கண்ட சதுரங்களில் – எந்த சதுரத்திற்குள் இடம் பிடித்தால் மனிதர்கள் மேன்மை மிகு சூழலுக்கு உதவுவார்கள் என்பது உற்றுநோக்கத்தக்கது.

முதல் சதுரமே முத்தாய்ப்பான சதுரம். ஏனெனில் அது ஆக்கும் வல்லமை பொறுத்தது.

இரண்டாவது சதுரமோ ஊக்கமிருந்தும் தேக்க நிலையிலிருப்பது. பொருத்தமான பயிற்சியின் மூலம் இந்தத் தேக்க நிலையை மாற்றி ஆக்க நிலைக்குக் கொணர முடியும். கொணரவும் வேண்டும்.

மூன்றாவது சதுரமோ திறமையிருந்தும் விருப்பமின்மையால் இது தயக்க நிலைக்கு வித்திடும். இந்நிலை தவிர்க்கப்பட வேண்டுமெனில், போதுமான ஊக்க சக்தி புகட்டப்பட வேண்டும். உளவியல் ரீதியான அணுகுமுறைகளின் மூலம் மனோபாவ மாற்றத்திற்கு அடிகோல வேண்டும்.

நான்காவது சதுரமோ இயக்கமற்ற மயக்கநிலையைக் குறிப்பதாகும். இவர்களுக்குத் தேவை விழிப்புணர்வு. முறைப்படியான உளவியல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளின் மூலம் மட்டுமே இவர்களைக் கடைத்தேறச் செய்ய முடியும்.

இப்படி வகைப்படுத்திப் பார்த்தால் – மனித வளத்தைப் பொருத்தமாக, துரிதமாக, துல்லியமாகப் பயன்படச் செய்து மானுட மதிப்பை மேம்படுத்தப் பெரிதும் துணைபுரிவதாய் இருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமில்லை.

இலக்கை அடைய வைக்கும் எளிய சதுரம்

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கனவிருக்கிறது. அல்லது இருப்பது அவசியம். கனவென்பது வேறல்ல அது ஒரு தொலைநோக்கு. ஆமாம் அது ஒரு தொலைக்காட்சி. நாளை நடக்க இருப்பதை இன்றே மனதில் காணும் காட்சி. இதைத்தான் ஆங்கிலத்தில் “ Vision “ என்றும் “Picture” என்றும் “Dream” என்றும் குறிப்பிடுகிறார்கள்.

“ Begin with the end in mind “ என்று ஒரு மேலாண்மை கோட்பாடு கூறுகிறது. “முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை மனதில் நிலைநிறுத்திக் கொண்டு ஒரு செயலை தொடங்க வேண்டும்” என்பது இதன் பொருள். அந்த இறுதிக்கட்டத்திற்குப் பெயர் தான் “ Vision”. இந்த “ Vision” ஐ அடைவதற்கு ஒருவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், பல்வேறு படிநிலைகளைக் கடக்க வேண்டும், பல நாட்கள் காத்திருக்க வேண்டும்.

கனவை நினைவாக்குதல் என்பது கடைசி நிலை. அந்த கடைசி நிலையை அடைய வேண்டுமென்றால் பல இடைநிலைகளைக் கடந்தாக வேண்டும். அந்த இடைநிலைகளை மைல்கற்களால் அடையாளம் காட்டலாம். அந்த மைல்கற்களே “இலக்குகள்” எனப்படும்.

“இலக்கில்லா வாழ்க்கை கிழக்கில்லா வானுக்குச் சமம்” – என்பேன். இலக்குகள் தான் மனிதனை சிறிது சிறிதாக முன்னேறச் சொல்வது. இலக்கு இருக்கும் போதுதான் மனித மனம் ஓரிடத்தில் குவிகிறது. இல்லையென்றால் அது சிதறிப் போகிறது. கவனம் சிதறிவிட்டால் மனிதனால் உயரங்களை எட்ட முடியாது. இலக்கே இல்லாமல் இருவரால் தான் இருக்க முடியும். ஒருவர் மெய்ஞானி மற்றொருவர் அஞ்ஞானி. எல்லாம் அறிந்த ஞானியருக்கு இலக்குகள் எதுவும் தேவையில்லை, அவர்கள் இலக்குகளை கடந்த நிலையை எய்தியிருப்பார்கள். அவர்கள் மனமற்றதன்மையை அடைந்திருப்பார்கள். அதே போன்று ஏதும் அறியாது அறியாமையில் முடங்கி கிடப்போரிடமும் இலக்குகள் இருக்காது. இந்த இரண்டு நிலைக்கும் இடையில் ஆட்பட்டு மனித நிலையில் வாழ்வோர்க்கு இலக்குகள் தான் ஏணிப்படிகள். அப்படிப்பட்ட இலக்குகளை அடைவதற்கு நான்கு முறைகொண்ட ஒரு சுழற்சி வட்டத்தை இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

மேலிருக்கும் சதுரத்தை உற்று கவனியுங்கள்

குறித்த இலக்கை குறித்த நேரத்தில் அடைவதற்கு முறையான ஒரு வழிமுறையை கடை பிடித்தல் அவசியம். இல்லையென்றால் அந்த இலக்கை அடைவது கடினம்.

அந்த வழிமுறைநான்கு நிலைகளைக் கொண்டது

1. திட்டமிடுதல் - Plan
2. செயல்படுதல் - Do
3. சரிபார்த்தல் - Check
4. சரிசெய்தல் - Act

முதலாவதாக “திட்டமிடுதலை” பார்ப்போம். நம்மில் எத்தனைபேர் திட்டமிடுகிறோம்? நம்மில் எத்தனைபேரிடம் இலக்கிருக்கிறது? நம்மில் எத்தனை பேரிடம் கனவிருக்கிறது? (சற்றே உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இவை). ஒருவரிடம் உள்ள கனவுதான் அவர்கள் வாழ்க்கைக்கு பொருள் சேர்க்கிறது. கனவுகளே இல்லாத இலக்குகள் முழுமை பெறாது. அதேபோன்று இலக்குகள் ஈடேற வேண்டுமென்றால் திட்டம் அவசியம்.

எது திட்டம்?

எது - அது?
எவர் - அவர்?
எப்பொருள் - அப்பொருள்?
எவ்விடம் - அவ்விடம்?
எப்பொழுது - அப்பொழுது?
எம்முறை - அம்முறை?
எவ்வளவு - அவ்வளவு?

- என்று தீர்மானித்துக் கொள்வதையே “திட்டம்” என்கிறோம். செய்யவிருக்கும் செயல் எது? அந்தச் செயலை யார்யாரைக் கொண்டு செய்யப் போகிறோம்? அந்தச் செயலைச் செய்து முடிக்க எவ்வளவு பொருள் தேவைப்படுகிறது? அந்தச் செயல் செய்வதற்கு பொருத்தமான இடம் எது? அந்தச் செயலை மேற்கொள்வதற்கு உரிய நேரம் எது? அந்தச் செயலை எந்த முறையில் செய்ய விரும்புகிறோம்? செய்ய விரும்பும் அந்தச் செயலின் அளவு (Size of the project) எவ்வளவு? – என்பதையெல்லாம் தீர்மானிப்பதற்குப் பெயர்தான் திட்டமிடுதல் ஆகும்.

வீட்டின் வரவு செலவுத் திட்டம், ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பதற்கான திட்டம், ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதற்கான திட்டம், ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்கான திட்டம் – என செய்ய விரும்பும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் திட்டமிடமுடியும். அதை காலத்தின் அடிப்படையிலும் வரையறைசெய்யலாம். ஒரு வாரத்திட்டம், ஒரு மாத கால திட்டம், ஓர் ஆண்டுத் திட்டம், மூவாண்டுத் திட்டம், ஐந்தாண்டு திட்டம், பத்தாண்டு திட்டம், 20 ஆண்டு காலத் திட்டம் என குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களாகவும் செயலுக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.

இரண்டாவதாக நாம் மேற்கொள்ள வேண்டியது “செயல்படுதல்”. செயல்படுதல் என்பது நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல எளிதானது அல்ல. முதலில் அதற்கொரு திட்டம் தேவை. திட்டமற்றசெயல்பாடு பெரும்பாலும் தோல்வியில் முடியக்கூடும். அது மட்டும் அல்ல நேரமும், பொருளும், மனித ஆற்றலும் விரையமாகக் கூடும். அப்படிப்பட்ட செயல்களால் ஏற்படும் பயனைவிட இழப்புக்களே அதிகம். எனவே எந்த ஒரு செயலையும் திட்டமிட்டுத் தொடங்கினால் வெற்றி நிச்சயம். திட்டமிட்டு தொடங்கும் செயல் 50 விழுக்காடு வெற்றி பெற்றதாகவே பொருள் படும்.

திட்டமிடுதலுக்கும் செயல்படுத்தலுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. திட்டமிடுதலும் ஒரு செயல் தான் என்றாலும் அது மனம் சார்ந்தது. ஆனால் செயல் என்று வரும்போது அது உடல் உழைப்பையும் பிறரோடு உறவாடும் திறமைகளையும் சார்ந்து இருக்கிறது. மேலும் ஒவ்வொரு செயலையும் செய்வதற்கென்று ஒரு செய்முறைஉண்டு. அதன்படி செய்தால் தான் அந்த செயல் முழுமை பெறும்.

“வெல்டிங்” செய்வதற்கென ஒரு முறைஉண்டு. சமையலுக்கென ஒரு முறைஉண்டு. ஓவியம் வரைவதற்கென்று ஒரு முறை, கட்டிடம் கட்டுவதற்கென்று ஒரு முறை. விமானம் ஓட்டுவதற்கென ஒரு முறைஉண்டு. விவசாயம் செய்வதற்கென்று ஒரு முறைஉண்டு. இப்படிச் செய்தொழில் ஒவ்வொன்றும் வெவ்வேறு முறைகளை கொண்டிருக்கிறது. ஒன்றைச் சிறப்பாகச் செய்பவரால் மற்றொன்றைச் சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம். இது இயற்கையானது. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள அஷ்டாவதானிகளும், தஸாவதானிகளும் – பல செயல்களை ஒரே நேரத்தில் சரியாகச் செய்ய பழகியிருப்பர்.

எனவே ஒரு முறையாகச் செயல்பட வேண்டுமெனில், சோம்பல் கூடாது. அலட்சியம் கூடாது; அவசரம் கூடாது. ஒருவரைப் பார்க்க உகந்த நேரம் எது? முடியாது எனச் சொல்லும் ஒருவரிடம் சம்மதம் பெறுவது எப்படி? ஒருவரைச் சந்திக்கச் செல்லும் போது அவர் அங்கு இல்லையென்றால் அடுத்து என்ன செய்வது? நேரத்தை எப்படி முறையாகப் பயன்படுத்துவது? – போன்றபற்பல கலைகளிலும் தேர்ச்சிபெற்றால்தான் செயல்பாட்டில் வெல்ல முடியும். பலரின் முயற்சிகள் தோற்பதன் காரணம் – இந்தக் கலைகளில் தேர்ச்சி இன்மையே.

கூடுதல் உழைப்பு, நேர்மை, பிறரைப் புரிந்துகொள்ளுதல், பொறுமை – போன்றபல நற்பண்புகள் இருந்தால் செயல்பாட்டில் சிறக்க முடியும்.

மூன்றாம் நிலை “சரிபார்க்கும்” நிலையாகும். சரி பார்ப்பதற்கென நேரம் ஒதுக்க வேண்டும். திட்டமும் செயலும் ஒத்துப்போகிறதா எனப் பார்க்க வேண்டும். வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ சரிபார்க்க வேண்டும். தினமும் கூட அதைச் செய்யலாம். திட்டத்தின்படி செயல் நடைபெறவில்லையென்றால் காரணங்களை ஆய்ந்து அறிய வேண்டும். ஒரு செயல் – குறித்த நேரத்தில் முடியாவிட்டால் – அது எதனால் நேர்ந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் நாம் எங்கே பின்தங்கியிருக்கிறோம் என்பதை அறிய முடியும். அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட பரிசீலனைதான் நமது முன்னேற்றத்தைத் துரிதப்படத்த உதவும்.

நாம் தற்சோதனை செய்து கொள்ளாவிட்டால், நம்மை நாமே தணிக்கை செய்து கொள்ளாவிட்டால், நாம் எங்கிருக்கிறோம்! என்னும் நிலையே தெரியாமல் போய்விடும். விளைவு, நம்மை பாதாளத்தில் தள்ளிவிடும். எனவே… நம்மை நாம் அறிந்து கொள்ள உதவும் கட்டம் தான் “சரிபார்க்கும்” கட்டம்.

திட்டத்திற்கும் – செயலுக்கும் இடையில் உள்ள இடைவெளிகளை, நிறைகுறைகளைக் கண்டறிந்துவிட்டால் அவற்றைப் பட்டியலிட்டு, ஒவ்வொன்றாகச் சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய முயற்சிகளை உடனுக்குடன் மேற்கொண்டுவிட்டால் பெரிய தாமதங்களையும் – அதனால் ஏற்படும் இழப்புக்களையும் தவிர்த்துவிடலாம்.

இப்படிச் சரிபார்க்கும்போதுதான் – நாம் இட்ட திட்டத்தின் குறைபாடுகளும் நமக்குப் புரியும். அனுபவக் குறைவால் ஏற்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகளும் நமக்குத் தெரிய வரும். எனவே இந்தப் புள்ளிவிபர அடிப்படையில் – நமது திட்டத்தையே மறுபரிசீலனைக்குட்படுத்தி உரிய மாற்றத்தைச் செய்து கொள்ளலாம். திட்டத்தில் உரிய மாற்றம் செய்து கொண்டால் – அதனை நிறைவேற்றுவதில் முரண்பாடு இல்லாமல் முறையாக , முழுமையாக நிறைவேற்றமுடியும்!

இப்படியாக இந்த நான்கு நிலைகளைக் கொண்ட வட்டத்தை, நாம் எடுத்துக்கொண்ட இலக்கு நிறைவேறும் வரை அடிக்கடி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் சரிபார்த்து, நிலைமை சரிசெய்யப்பட வேண்டும். அப்படி இடைவிடாமல் பரிசோதனை செய்து கொண்டால் திட்டத்திற்கும் – செயல்பாட்டிற்கும் இடைவெளி நேராமல். குறித்தபடி இலக்குகளை எட்ட முடியும்…. அது தானே நமது நோக்கமும் கூட.

ஊக்கத்திலிருந்து ஞானத்திற்கு

டீக்கடை பெஞ்ச்சிலும் சரி பாராளுமன்றத்திலும் சரி பேசப்படும் செய்திகளை கூர்ந்து நோக்கினால் ஒன்று தெளிவாகப் புலப்படும். நம் நாட்டின் நிலவரம் சரியில்லை என்பதுதான் அது! ஒரு புறம் அரசியல்வாதிகளின் போக்கு சரியில்லை என்கிறார்கள். மறுபுறம் அதிகாரிகளின் நடவடிக்கைகள் சரியில்லை என்கிறார்கள். மற்றொருபுறம் பொதுமக்கள் விழிப்புணர்வின்றி செயல்படுவதாக குற்றம் சுமத்துகிறார்கள். மேலும் பல விவாத மேடைகளில் பெற்றோர்களும் பிள்ளைகளும் குற்றம் சுமத்தப்படுகிறார்கள். இளைஞர்களும் யுவதிகளும் பழிக்கப்படுகிறார்கள்.

ஒட்டு மொத்தமாகச் சொல்வதென்றால் நம்மை நாமே குறைகூறிக் கொண்டிருக்கின்றோம்! என்னுடைய கேள்வி என்னவென்றால் “நாம் எல்லோருக்குமே குறைகள் தெளிவாகத் தென்படுகின்ற போதும் நம்மால் ஏன் அவற்றை நிறை செய்ய முடியவில்லை?” என்பதுதான்!

மகான்களும் பெரிய தலைவர்களும் காலம்காலமாக சரியான செய்திகளை நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இருந்தும் நம் மக்களின் வாழ்வில் ஏன் விரும்பத்தகுந்த மாற்றங்கள் விரைவாக நிகழவில்லை என்பது நியாயமான ஆதங்கமாகவே இருந்து வருகிறது.

இதற்கான காரணத்தையும், நாம் செய்ய வேண்டிய காரியத்தையும் இந்த படிநிலைகள் தெளிவாக்கவிருக்கின்றன. வாசித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றம் காண்பீர்கள்.

மாற்றத்தை விரும்பும் யாரும் கீழ்க்காணும் நான்கு நிலைகளை கடந்தே ஆகவேண்டும். இந்த நிலைகளை காணாதவர்களால் – கடக்காதவர்களால், மாற்றத்தை காண முடியாது. ஆனால் ஒருவர் எவ்வளவு விரைவில் இந்த நான்கு நிலைகளுக்கு ஆட்படுகிறாரோ, அத்தனை விரைவில் அவரது ஏற்றம் தரும் மாற்றம் நிகழ்ந்தே தீரும்.

அந்த நான்கு நிலைகள்:

1. அறிதல் 2. புரிதல் 3. உணர்தல் 4. தெளிதல்

முதலில் அறிதலைப் பார்ப்போம்

எந்த ஒரு புதிய தகவலோ கருத்தோ செய்தியோ பொருளோ ஒருவருக்கு வெளியிலிருந்துதான் முதலில் அறிமுகமாகின்றது. ஒரு மனிதர் மூலமாகவோ. காட்சி மூலமாகவோ. சம்பவத்தின் முலமாகவோ. செய்தித்தாள், புத்தகம், தொலைக்காட்சி, கடிதம், இணையதளம், வானொலி, கருத்தரங்கம் என எண்ணற்ற ஊடகங்களின் வாயிலாகவே ஒன்றை நாம் அறிய நேருகிறது. சுருக்கமாகச் சொன்னால் அறிதல் என்பது வெளியிலிருந்து பெறப்படுவது. இப்படி வெளியிலிருந்து பெறப்படும் ஒன்றால் மனித மனதில் மாறுதல் உடனடியாக நிகழ்ந்துவிடுவதில்லை. ஏனென்றால் யாரோ சொன்னதலிருந்தும் எங்கோ கேட்டதிலிருந்தும் நமக்குள் ஏற்படும் தாக்கங்கள் அழுத்தமாகவோ ஆழமாகவோ பதிவதில்லை. எனவே இந்நிலையில் மாற்றங்கள் நிகழ்வது அரிதுÐ

இரண்டாம் படியாகிய “புரிதலை” எடுத்துக் கொள்வோம்.

மேற்கண்ட பல வழிகளின் மூலம் நாம் பெற்ற அறிவை நமக்குள் சுழலவிட்டுச் சிந்தித்துப் பார்ப்பதையே நாம் “புரிதல்” என்கிறோம். “எண்ணிப் பார்த்தல்” என்றும், “யோசித்தல்” என்றும், “அலசி ஆராய்தல்” என்றும், நடைமுறையில் கூறப்படுவதையே “சிந்தித்தல்” என்கிறோம். ஒரு கணிப்பொறியைப் பற்றி நாம் அறிந்து கொண்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த கணிப்பொறி எனக்கு எந்தெந்த வகையில் பயன்படும்? அது இப்போது எனக்கு தேவையா? அதை வாங்கிக் கொள்ள எவ்வளவு பணம் தேவை? அதை வாங்குவதால் உடனடி இலாபம் உண்டா? என சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவதையே “புரிதல்” என்கிறோம்.

சுருக்கமாக சொன்னால் “புரிதல்” என்பது உள்ளுக்குள் நிகழ்வது. ஒரு நபரின் மனதுக்குள் நிகழ்வது. ஒரு மாற்றத்தை உருவாக்குவதில் புரிதல் என்பது இரண்டாம் நிலையை வகிக்கிறது. ஒன்றை அறிந்த நிலையைக் கடந்து, புரிந்த நிலைக்கு வரும் போது ஓரளவு மாற்றங்கள் நிகழக்கூடும். ஆனாலும் மாற்றம் கட்டாயம் நிகழ்ந்துவிடும் என்று சொல்வதற்கு இல்லை. ஏனென்றால் அன்றாட வாழ்வில் எத்தனையோ கருத்துக்களை புரிந்து கொண்டவர்கள் கூட நடைமுறையில் மாறுவதில்லை!

புகைப்பது தவறு புகைப்பதால் புற்று நோய் வரும் சாத்தியக் கூறு அதிகம் என்பதை புரிந்து ஏற்றுக் கொள்பவர்களால் கூட புகைப்பதை நிறுத்த முடிவதில்லை என்பது கண்கூடு. எனவேதான் புரிதலையும் கடந்து, அதற்கு நாம் அடுத்த நிலையை நோக்கி நகர வேண்டும்.

மூன்றாம் படியாகிய “உணர்தல்” பற்றி அறிவோம்.

ஒன்றை அறிந்து கொண்டு அதைப் புரிந்து கொண்ட பின்னர் அதைச் செயல் வடிவில் செய்து பார்த்து, அதனால் கிடைக்கும் அனுபவத்திலிருந்து பெறப்படுவதையே உணர்தல் என்கிறோம்.

சர்க்கரை என்று பிறர் சொல்லக் கேட்பது “அறிதல்” ஆகும். இதை உண்டால் இனிய சுவை கிடைக்கும் என்று சிந்தித்தால் அதை “புரிதல்” என்கிறோம்.

அந்த சர்க்கரையை எடுத்து நாவில் வைத்து ருசித்துப் பார்த்தால் கிடைக்கும் அனுபவத்தையே “உணர்தல்” என்கிறோம். அதே போன்று ஒரு கருத்தை (அ) கோட்பாட்டை நடைமுறைப் படுத்திட அதனால் கிடைக்கும் அனுபவம் நமக்குள் அழுத்தமான பதிவை ஏற்படுத்தும். ஒரு சிலரால் நடைமுறைப்படுத்தி பார்க்காமலே கூட கற்பனையாலேயே அடுத்து வரவிருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

ஒரு கணிப்பொறியை அறிந்து கொள்வதோடு விட்டுவிடாமல் அதனைப் பற்றிய புரிதலோடு அதை இயக்கத்தைப் பார்த்து அதன் முழுப் பரிமாணத்தையும் அனுபவித்து உணர்ந்து கொள்ளும் போது அது ஏற்படுத்தும் தாக்கம் நிரந்தரமாக இருக்கும். எனவே நமக்குள் உணர்தல் ஏற்பட்டுவிட்டால் அதுவே மிகப்பெரிய உந்துசக்தியாகிவிடும். எனவே மாற்றமானது எளிதில் நடந்துவிடும்.

நான்காவது படியாகிய “தெளிதல்” என்பது ஞானத்தைக் குறிப்பதாகும்.

ஒன்றை மீண்டும் மீண்டும் கற்பனையில் ஆழ்ந்தோ நடைமுறைப் படுத்தியோ நம் அனுபவம் முழுமையானதாகும். இத்தகைய தெளிவு ஏற்படும் போது யானை நமக்கு யானையாகவே தெரியும். அப்படியில்லாமல் ஒருமுறை உணர்ந்த நிலையிலோ (அ) புரிந்த நிலையிலோ (அ) அறிந்து கொண்ட நிலையிலோ நின்றுவிட்டால் யானையின் சில பகுதிகளை மட்டும் பார்த்தவர்களாக இருப்போம். அதுமட்டுமல்ல... வாழ்நாள் முழுவதும் அந்தப் பகுதி மட்டுமே யானை என்றும் அடம் பிடிப்போம். முழுமையைக் காணும் முயற்சியின்றி உண்மையை உணராமலே வாழ்ந்து முடித்துவிடக் கூடும்.

முழுமைபெறாத இத்தகைய நிலையில் மாற்றங்கள் நிகழ்வதில்லை. திருவள்ளுவர், புத்தர், விவேகானந்தர், ஏசுநாதர், நபிகள்நாயகம் போன்ற சான்றோர்களும் காந்தி, ஆப்ரகாம்லிங்கன், மார்டின் லூதர்கிங், காரல் மார்க்ஸ், லெனின், சர்ச்சில் போன்ற உலகம் போற்றும் அரசியல் தலைவர்களும், தாகூர், பாரதியார், வேர்ட்ஸ் வொர்த், ஷெல்லி, கீட்ஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா போன்ற இலக்கிய – தத்துவஞானிகளும், ஐன்ஸ்டீன், நியூட்டன், எடிசன், ஆர்க்கிமிடிஸ், சர்.சி.வி.ராமன், மேரிகியூரி, இராமானுஜம் போன்ற அறிவியல் – கணித மேதைகளும் கொலம்பஸ், வாஸ்கோட காமா போன்ற புவியியல் கண்டுப்பிடிப்பாளர்களும். ஹென்றி போர்டு, ஜி.டி நாயுடு போன்ற தொழில்நுட்ப வர்த்தக மேதைகளும் இத்தகைய தெளிவைப் பெற்றிருந்தார்கள். இன்றும் சிலர் இந்நிலையை (தெளிவு பெற்ற நிலையை) அடைந்திருக்கிறார்கள் என்றாலும் நம்மில் பலர் அறிந்தும், ஆனால் புரியாமலும், புரிந்தும் ஆனால் உணராமலும், உணர்ந்தும் ஆனால் தெளிவு பெறாமலும் பல்வேறு நிலைகளில் இருந்து வருகிறார்கள். எல்லோருமே உயர்ந்த நிலையாகிய தெளிவினை அடைய வேண்டும். அப்போதுதான் மாற்றங்கள் உடனுக்குடன் நிகழும்! உன்னதம் நிலை பெறும்! இந்த நான்கு நிலைகளும் ஒருவரை அறியாமையிலிருந்து ஞானத்தை நோக்கி இட்டுச் செல்வதற்கான நான்கு படிக்கட்டுகள். இதனை உணர்வோம், தெளிவோம், ஏற்றமிகு மாற்றத்தை விரைவில் காண்போம்!

- தேவகோட்டை ம.திருவள்ளுவர் (நமது நம்பிக்கை)







உற்சாகம் என்னும் ஊக்கி

வெற்றிகரமான மனிதர்களின் செயல்களைக் கவனித்துப் பார்த்தால் ஒரு முக்கிய விஷயம் புலப்படும். அவர்களது திடமான குறிக்கோளை செயல்களாக மாற்றுவது ஒரு ஊக்கியாக இருக்கும்.

அந்த ஊக்கிதான் உற்சாகம். உற்சாகமே அவர்களது உயிர்.

கடவுள் மயம்

உற்சாகம் என்பதை ஆங்கிலத்தில் ENTHUSIASM என்கிறோம்.

ENTHUSIASM என்ற ஆங்கில வார்த்தை ENTHEOS என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து பிறந்தது. இதன் பொருள் கடவுள் உன்னுடன் இருக்கிறார் அல்லது 'கடவுள் மயம்' என்பதாகும்.

ஆகவே 'உற்சாகத்துடன் இயங்குகிறார்கள் வெற்றியாளர்கள்' என்று சொல்லும்போது கடவுளே அவர்களுக்கு தைரியம், செயல்படும் உத்தி, ஞானம் இன்னும் அனைத்தையும் தருகிறார் என்று ஆகிறது.

சாதனையாளர்கள் அனைவரையும் இந்த உற்சாகம் 'கள்வெறி' போன்ற போதையைத் தந்து அவர்களைக் குறிக்கோளை நோக்கி இட்டுச் செல்கிறது.

'உற்சாகத்தை நினையுங்கள், உற்சாகம் பற்றிப் பேசுங்கள், உற்சாகமாகச் செயல்படுங்கள்'. நீங்கள் உற்சாக புருஷராகவே ஆகிவிடுவீர்கள்.

வாழ்வில் ஒரு புதிய மலர்ச்சி, அழுத்தமான ஈடுபாடு, மகத்தான அர்த்தம் தென்படும்.

நீங்கள் விரும்பினால் சோம்பலை நினைத்து, பேசி, சோம்பேறியாகி துயரத்துடன் ஆழ் இருளில் இருக்கவும் இருக்கலாம். இல்லை, அதே முறையில் ஊக்கம் உற்சாகம் பெற்று மகிழ்ச்சி ஊற்று ததும்பி வழியும் புது வாழ்வையும் அமைத்துக் கொள்ளலாம்

நார்மன் வின்சென்ட் பீல் டிக்கன்ஸின் வெற்றி

பிரபல ஆங்கில நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸ் தனது கதையில் வரும் நாயக, நாயகியர் இதர கதாபாத்திரங்கள் அனைவரும் தம்மைப் பிடித்து ஆட்டுவதாகவும் விரட்டுவதாகவும் கூறுவார். அவர்களைப் பேப்பரில் உரிய முறையில் ‘இறக்கி வைக்கும் வரை’ அந்தப் பாத்திரங்கள் அவரை விட மாட்டார்களாம். ஒருமுறை, ஒரு மாதம் வரை தன் அறையிலே அடைப்படுக் கிடந்து பிறகு வெளியே வந்தபோது கொலையாளி போலத் தெரிந்தாராம். அவரது பாத்திரங்கள் அவரை அப்படி ஆக்கிவிட்டிருந்தன!

உலகில் சரித்திர முக்கியத்துவம் பெறும் பெரிய தருணங்கள் உற்சாகத்தின் வெற்றியையே அறிவிக்கிறது என்கிறார் எமர்ஸன்.

நெப்போலியன் உற்சாகம்

ஒரு வருடத்தில் முடிக்கும் போரை நெப்போலியன் இரண்டே வாரத்தில் முடித்துவிட்டான் என்றால் அதன் மூல காரணம் அவனது உற்சாகம்தான்!

"பிரெஞ்சு வீரர்கள் ஆண்மையாளர்கள் அல்ல; அவர்கள் பறந்தோடிவிடுவர்" என்றனர் ஆஸ்திரியர்கள்.

இத்தாலிப் படையெடுப்பில் முதல் பதினைந்தே நாட்களில் ஆறு பெரும் வெற்றிகளை அடைந்து 1500 பேரை சிறைக் கைதிகளாக்கி மாபெரும் வெற்றி பெற்றான் அவன்.

நெப்போலியனைப் பார்த்த ஆஸ்திரிய ஜெனரல் வியந்து கூவினான். "இந்த இளம் தலைவனுக்குப் போர்க்கலை என்றால் என்னவென்றே தெரியாது" என்று.

ஆனாலும் அந்தக் குள்ளமான தலைவனைப் பின்பற்றி உற்சாகத்துடன் நடைபோட்ட வீரருக்குத் தோல்வியும் தெரியவில்லை; இருளடைந்த எதிர்காலமும் இல்லை!

மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியம்

மைக்கேல் ஏஞ்சலோ ஓவியம் வரைவதற்கு முன்னால் 12 வருட காலம் உடலியலைப் (ANATOMY) படித்தார். இதுவே அவரது ஓவியப் படைப்பை உயிருள்ளதாக்கியது. உடல் எலும்பு அமைப்பு, உடல் தசை, சதை, தோல் எனப் படிப்படியாக தனது படைப்புகளை உருவாக்க அவரது அடிப்படை உற்சாகமே காரணம். தனது வண்ணங்களைத் தாமே கலப்பது அவர் வழக்கம். வேலையாட்களையோ, தமது மாணாக்கர்களையோ வண்ணங்களைத் தொடக்கூட அவர் அனுமதிக்கவில்லை.

மொசார்ட்டிடம் கேட்ட கேள்வி

இசை அமைக்க விரும்பிய ஒரு 12 வயதுச் சிறுவன், மேதை மொசார்ட்டை அணுகி, "ஐயா! இசை அமைக்க விரும்புகிறேன். எப்படி ஆரம்பிப்பது?" என்று கேட்டான்.

"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்" என்றார் மொசார்ட்.

"ஆனால் நீங்கள் என்னைவிட இளம் வயதில் ஆரம்பித்து விட்டீர்களே?" என்றான் அந்தச் சிறுவன்.

"ஆம், உண்மைதான்! ஆனால் உன்னைப்போல் யாரையும் அணுகி எப்படி ஆரம்பிப்பது என்று நான் கேட்கவில்லையே. இசை அமைக்க ஊக்கமும், உற்சாகமும் வந்தவுடன் அமைக்க வேண்டியதுதான்" என்றார் மொசார்ட்.

இளமை உற்சாகம்

இளமையில் உற்சாகத் துள்ளல் அதிகம் இருக்கும். இளம் வயதிலேயே அலெக்ஸாண்டர் உலகை வென்றான். நெப்போலியன் 25-ம் வயதிலேயே இத்தாலியை வெற்றி கொண்டான். பைரன் 37 வயதிலேயே புகழேணியில் இறந்தார். பாரதியார் 39 வயதில் அருட்கவியைக் கொட்டி தேசத்தைத் தட்டி எழுப்பி புகழுடம்பு எய்தினார். 39 வருடங்கள் வாழ்ந்தே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த பாரதத்தை ஆன்மீக விழிப்படையச் செய்தார் சுவாமி விவேகானந்தர். ஆறு மதங்களை நிறுவி இந்து மதத்தை புனருத்தாரணம் செய்ய பாரதமெங்கும் கால்நடையாகவே சென்று நான்கு இடங்களில் மடங்களை நிறுவி உலகின் குருவாக - ஜகத் குருவாக 33 வயதிலேயே திகழ்ந்தார் ஜகத்குரு சங்கரர்.

முதுமையிலும் உற்சாகம்

இளமையில் உற்சாகம் இயல்பே என்றால், முதுமையிலும் விடாப்பிடியாக அதைப் பிடித்தால் எப்படி இருக்கும்? வயதான ஹோமர் படைத்த உலக மகா காவியம் தான் ஓடிஸி.

'கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு' என்ற புத்தகத்தை டாக்டர் ஜான்சன் எழுதும்போது அவருக்கு வயது 71.

ராபின்சன் குரூஸோ எனும் உலகப் புகழ்பெற்ற நாவலை வெளியிடும்போது (DEFOE) டீபோவின் வயது 58. தனது "பிரின்சிபியா" என்ற நூலுக்கு விளக்கவுரை அளித்தார் நியூட்டன் தனது 83-ம் வயதில்.

ஆங்கில அகராதியைத் தொகுத்த வெப்ஸ்டர் ஐம்பது வயதிற்குப் பின்னர் 17 மொழிகளைக் கற்றார்.

பிராங்க் பெட்கரின் வெற்றி

பிராங்க் பெட்கர் உலகின் புகழ் பெற்ற சேல்ஸ்மேன் நம்பர் ஒன். அவர் ஆரம்பத்தில் பேஸ்பால் விளையாடுபவராக இருந்தார். எல்லாத் திறமைகளும் இருந்தும் கூட அவரை டீமிலிருந்து விலக்கி விட்டனர் - அவரிடம் உற்சாகம் இல்லை என்ற ஒரு காரணத்தால்.

அதே துறையில் வல்லுநரான ஒருவர் அவரிடம் அக்கறை கொண்டு, "பிராங்க் உன்னிடம் உற்சாகம் வேண்டும். வெற்றிக்கு அதுவே அடிப்படைத் தேவை" என்றார்.

"நான் என்ன செய்வது? அது என்னிடம் இல்லையே! கடையிலா வாங்க முடியும் அதை? என்னிடம் இல்லை என்றால் அது இல்லைதானே?" என்றார் பிராங்க்.

"அப்படி இல்லை பிராங்க், உற்சாகமுள்ளவனாக உன்னை ஆக்கிக் கொள். உற்சாகமுடன் விளையாடு. உற்சாகமுடன் இருப்பதுபோல் நட, விளையாடு. உற்சாகம் தானாக உன்னை வந்து அடையும். உறுதியான முனைப்புடன், உற்சாகத்துடன் நீ விளையாடினால் உனது இயல்பான திறமைகள் உன்னை சிகரத்தில் ஏற்றிவிடும்" என்றார் அவர்.

அப்படியே நடந்தது. பேஸ்பாலில் மட்டும் வெற்றி பெறவில்லை பிராங்க். பின்னர் சேல்ஸ்மேனாக ஆகி, உலகின் நம்பர் ஒன் சேல்ஸ்மேனாக உயர்ந்தார்.

உலகின் தலைசிறந்த சேல்ஸ்மேனாகத் தான் ஆனதற்கான காரணம் உற்சாகம் என்கிறார் பிராங்க் பெட்கர்.

"HOW I RAISED MYSELF FROM FAILURE TO SUCCESS IN SELLING" என்ற அவரது புத்தகம் படிப்பதற்குரியது.

இருப்பது போல

"இருப்பது போல" (AS IF) என்னும் இயற்கை விதி ஒன்று உண்டு.

உங்களிடம் இல்லாவிட்டாலும் கூட தேவையான குணம் இருப்பது போல நீங்கள் நடக்க ஆரம்பித்தால் நீங்கள் விரும்பும் குணம் தாமாக உங்களை வந்தடையும்.

ஜலதோஷம் போல எளிதில் தொற்றிக் கொள்ளக் கூடியது உற்சாகம். ஆனால் ஜலதோஷம் போலக் கெடுதலைச் செய்யாமல் நல்லதைச் செய்கிறது என்கிறார் நார்மன் வின்சென்ட் பீல்.

உற்சாகம் இருப்பது போலச் செயல்படுங்கள். தானே உற்சாகம் வந்து சேரும்.

தோரோ காட்டும் வழி

அமெரிக்கா தத்துவஞானி தோரோ காலை துயிலெழும் போது படுக்கையில் ஒரு 5 நிமிடம் இருந்தவாறே தன்னிடம் உள்ள நல்ல அம்சங்களை எல்லாம் எண்ணிப் பார்ப்பார். ஆரோக்கியமான உடல், விழிப்பான மனம், வேலையில் ஆர்வம், பிரகாசமான எதிர்காலம் தன்னை நம்பி உள்ள மக்கள் இவற்றை எண்ணிப் பார்த்து இந்த "நல்ல செய்திகளை" முதலில் மனதில் போட்டு எழுந்திருப்பார். இந்த உத்தியைக் கடைப்பிடிப்பதால் வெளி உலகம் தரும் கெட்ட செய்திகள் அவரைப் பாதிக்காத அளவில் அவரது மனம் பண்பட்டது. ஆனால், நாளடைவில் நல்ல செய்திகள் மட்டுமே நிறைந்த நாட்களே அவருக்கு உருவாகத் தொடங்கின.

கெட்டவற்றைத் தூக்கி எறியுங்கள்

உற்சாகம் எப்போதும் தவழ ஒரு சிறிய உத்தி உண்டு. மனசாளரத்தைத் திறந்து கெட்ட எண்ணங்களை, கெட்ட செய்திகளை, கெட்டவை அனைத்தையும் ஒவ்வொன்றாகத் தூக்கி எறிவதுதான் அது.

சஞ்சலம் மிக்க சம்பவங்கள், தூக்கி எறிந்து பேசப்பட்ட வினாடிகள், துயரமான வார்த்தைகள், மனதை நோகச் செய்யும் செயல்கள், சிந்தனைகள் இவற்றால் நல்ல "மூடை" இழந்து எல்லாமே பாழாகிவிட்டது போல வரும் உணர்ச்சியை மாற்ற வல்லது இந்த உத்தி.

அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்தோ, படுத்தோ அன்று நடந்த ஒவ்வொரு உற்சாகமற்ற, வெறுப்பூட்டும் செயலை, சிந்தனையை "சம்பவத்தை மனதிலிருந்து எடுத்து, வெளியே போடுவது போல" பாவனையுடன் நினையுங்கள்.

அந்தச் செயல்களுக்கும் உங்களுக்கும் இனி சம்பந்தம் இல்லை. இப்போது வெற்றிடமாக இருக்கும் உங்கள் மனதில் உங்களுக்குப் பிடித்த வெற்றிகரமான, உற்சாகமாக செய்திகளை, சிந்தனைகளை நிரப்பி "நாளை நமதே", "நாளை வெற்றி நிச்சயம்" என்ற உணர்வுடன் உறங்கச் செல்லுங்கள்.

இந்த உத்தி தரும் அமைதியும், ஆனந்தமும் அனுபவித்தால் மட்டுமே புரியும்.

உற்சாகம் என்ற எரிபொருள், ராக்கெட்டான உங்களை வெற்றி விண்வெளியில் ஏற்றிவிடும்.

சிரி: உலகம் உன்னுடன் சிரிக்கும்!

உற்சாகமே உயிர் மூச்சாக இருக்கும்போது, இயல்பாகவே மகிழ்ச்சியும், மலர்ந்த முகமும் கூடவே இருக்கும். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் உள்ள மலர்ந்த முகத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள்? அழுமூஞ்சியாக, உலத்தின் இறுதியை அறிவிக்கும் சாகுருவியாக இருப்பவனை யார்தான் விரும்புவார்கள்?

"அழு நீ தனியாக அழுவாய்! சிரி உலகமே உன்னுடன் சேர்ந்து சிரிக்கும்" என்பது முதுமொழி

லிங்கனின் வழி!

"சிரிக்க மட்டும் தெரியாதிருந்தால் எப்பொழுதோ நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்" என்றார் மகாத்மா காந்தி.

அவருக்கு முன்னதாகவே இதே வார்த்தைகளை "IF IT WERE NOT FOR THIS, I SHOULD DIE" என்று சிரிப்பைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் சொன்னார்.

சொன்னதோடு நிற்கவில்லை, தம் வாழ்க்கை நெடுக தேசத்தைக் கஷ்டமான பாதையிலிருந்து விடுவிக்க நடத்திய பெரும் போராட்டமான நாட்களில் சிரிக்க வைக்கும் துணுக்குகளைப் பேசினார். இருள் சூழ்ந்த நேரங்களில் நகைச்சுவை மூலம் ஒளி ஏற்றினார். தனது மேஜையின் ஒரு மூலையில் புதிதாக வெளியிடப்பட்ட ஜோக் புத்தகம் ஒன்றை எப்போதும் அவர் வைத்திருந்தார். கோபம் வந்தாலோ, வருத்தம், துயரம் ஏற்பட்டாலோ மனச்சோர்வு ஏற்பட்டாலோ அதை எடுத்துப் படித்து வாய்விட்டுச் சிரிப்பார். பிறகு எப்போதும் போல சிரித்த முகத்துடன் வேலையை ஆரம்பிப்பார்.

கவலை அற்ற மனம்!

உலகப் பெரும் கவிஞன் ஷேக்ஸ்பியர் கூறினான் "LIGHT HEART LIVES LONG" என்று! நமது அரச சபைகளில் அரசனின் மனோபாவத்தை சமநிலைபடுத்தவென்றே விகடகவிகள் இருந்துள்ளார்கள். அரசனின் கோபத்தை மாற்றி அவனது மனச்சோர்வை போக்கி சரியான அணுகுமுறை மூலம் பிரச்சினைக்குத் தீர்வைத் தரும் பாங்கினில் அவனது மூளையைக் கூர்மையாக வைக்க இவர்கள் பெரும் உதவியாக இருந்தார்கள். கோபம் நம்மைச் சிதறடிக்கிறது. மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஒரு முனைப்படுத்துகிறது. கவலை நமது மூளையில் உள்ள செல்களை அழிக்கிறது என விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது.

வேலையில் பாட்டு! வேலையில் பாடிக் கொண்டே இருப்பவனை தாமஸ் கார்லைல் பாராட்டுகிறார்.

"கொடுக்கப்பட்ட நேரத்தில் அவன் அதிகமாக வேலையைச் செய்வான், நேர்த்தியாகச் செய்வான், நீடித்து நிலைக்கும்படி செய்வான் என்கிறார் அவர்.

"கவலைப்படுதலே கரு நரகம்மா" என்கிறார் பாரதியார்.

ஒரு நிறுவனத்தில் நல்ல அதிகாரி எப்படி இருப்பார்?

தனது மலர்ந்த மகிழ்ச்சியான முகத்துடன் எங்கு சென்றாலும் கவலையை விரட்டி மலர்ச்சி ஊட்டுவார். மன இறுக்கத்தை, சோர்வை, கவலையைப் போக்கும் டானிக்காக இருக்கும் அவரது வருகை. அவருடன் பேசுவதே கவலை போக்கும் மருந்தாக தனி ஒரு அனுபவமாக இருக்கும்.

சிட்னி ஸ்மித்தின் யோசனை!

சிட்னி ஸ்மித் ஒரு சிறிய யோசனையைக் கூறுகிறார். "ஒரு நாளைக்கு ஒரு மனிதரையாவது மகிழ்ச்சி அடையச் செய்வது என்ற கொள்கையைக் கடைப்பிடியுங்கள்" என்பதே அது.

"பத்து வருடங்களில் 3650 பேரை நீங்கள் மகிழ்ச்சியுறச் செய்திருப்பீர்கள். அதாவது ஒரு சிறிய டவுனையே உங்கள் மகிழ்ச்சி-நிதி மூலம் ஒளியுறச் செய்திருப்பீர்கள்" என்கிறார் அவர்.

உலகின் சிறந்த சிந்தனை!

உலகின் மிகச் சிறந்த சிந்தனைக்கு 500 டாலர்கள் பரிசு அளிப்பதாக ட்வைட் எல்.மூடி என்பவர் அறிவித்தார். பரிசு பெற்ற சிந்தனை வாக்கியம் எது தெரியுமா?

"முட்களை ரோஜாக்களுடன் படைத்ததற்காகக் கடவுள் மீது மனிதன் பொருமுகிறான். ரோஜாக்களை முள்ளுடன் படைத்திருக்கிறான் என்பதால் அவனுக்கு நன்றி செலுத்துவதே சரியாக இருக்கும், இல்லையா?" என்பதே அது!

மகிழ்ச்சி என்னும் மொசைக்!

மகிழ்ச்சி பல வண்ணச் சிறு துண்டுக்கற்களால் மொசைக் போல ஆன ஒன்றாகும்.சின்னச் சின்ன அன்பான வார்த்தைகள், சிறுசிறு நல்ல செயல்கள், ஆதரவு தரும் வார்த்தை, இரக்கமூட்டும் செயல், உதவும் மனப்பான்மை, மற்றவர் மனதைப் புண்படுத்தாமை, சுயநலமின்மை, மற்றவரின் அந்தரங்கமான வாழ்க்கைப் பகுதிகளைக் குத்திக் காட்டாதிருப்பது, மற்றவரின் பலவீனங்கள் மீது இரக்கம், பரிவான பார்வை இவையே இரவைத் தொடர்ந்து வரும் பகல் போல் வாழ்க்கைத் துயரத்தை ஓட்டி மகிழ்ச்சியைத் தரும் சிறுசிறு செயல்களாகும்.

கவலையை வளர்க்காதே!

குழந்தையை வளர்ப்பதுபோலக் கவலையை வளர்க்கக் கூடாது. தொந்தரவுகளை மனதில் பத்திரமாகப் பாதுகாத்து வருவதன் மூலம் அவை பெரிதாக வளர்ந்து விடுகின்றன. (TROUBLES GROW LARGER BY NURSING) மகிழ்ச்சியான மனோபாவம் மூலம் அதை அகற்றிவிட்டால் வாழ்க்கை மூலம் இன்பம் தான்!

புன்னகைக்கு ஈடேது?

நல்ல ஒரு சிரிப்பை எனக்குத் தாருங்கள் என்கிறார் சர் வால்டர் ஸ்காட். மலர்ந்த முகத்தில் தோன்றும் புன்னகைக்கு ஈடு இணை இல்லை. இதை அடிஸன் (ADDISON) என்னும் பெருமானார் அழகாகக் கூறுகிறார்: "பூக்களுக்குச் சூரிய ஒளி எப்படியோ, அப்படியே மனித குலத்திற்குப் புன்சிரிப்பாகும். புன்னகைப் பூக்கள் நிச்சயமாக சிறியவைதாம். ஆனால், வாழ்க்கைப் பாதை நெடுக அங்குமிங்குமாக சிதறிக் கிடந்தவாறே அவை பரப்பும் நறுமணத்திற்கு ஈடு இணை இல்லை".

அனைவரது அந்தரங்கத்தையும் தொடும் உன்னதம் புன்னகைக்கு மட்டுமே உண்டு. மலர்ச்சிப் புன்னகை உங்கள் இடரை விரட்டும், யாரோ சொல்லவில்லை இதை, உலகின் தலை சிறந்த சிந்தனைப் பெட்டகம்-வான் புகழ் வள்ளுவரே கூறி இருக்கிறார்.  "இடுக்கண் வருங்கால் நகுக" என்று "இடரை வெல்ல அதை ஒப்புவது வேறொன்றுமில்லை" என்பது அவர் வாக்கு. இந்த மகிழ்ச்சி மனப்பான்மையை வளர்ப்பதே வெற்றி பெற விரும்புவோர் செய்ய வேண்டிய அவசியக் கடமைகளில் ஒன்று.

கதேயின் கீதை!

இந்த மனப்பான்மையை வளர்ப்பது எப்படி?

வழி சொல்கிறான் உலகப்பெரும் கவிஞன் கதே. "ஒரு மனிதன் நிச்சயம் ஒரு நாளில் செய்ய வேண்டியது இதுதான்!

குறைந்தபட்சம் ஒரு சின்னப் பாடலையாவது கேளுங்கள். ஒரு நல்ல கவிதையையாவது படியுங்கள். அழகிய ஒரு ஓவியத்தையாவது பாருங்கள். முடியுமானால், அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒரு சில வார்த்தைகளைப் பேசுங்கள்"  உற்சாகம், மகிழ்ச்சி, மலர்ச்சி இவையே வெற்றி பெறத் துடிப்பவர் அடைய வேண்டிய மூன்றாவது குணாதிசயமாகும்.

மகிழ்ச்சியான மனிதன் இந்த உலகில் ஒரு சிறிய இடத்தையாவது மற்றவர்கள் வாழ்வதற்காக சுமையை நீக்கி, பிரகாசமாக்கி, இதமாக்குகிறான். காலையில் அவனைப் பார்ப்பதே விஷயங்களை லேசாக்கி அன்றைய போராட்டங்களை எளிதில் எதிர்கொள்ள உத்வேக மூட்டுவதாகும்.

வேறுபடுவதைக் குறை :

நம் வாழ்நாளில் வாழ்க்கை முழுவதும் ஆயிரக்கணக்கானோரை சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர்களிடம் நம் காரியத்தைச் சதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் முக்கியமாக நாம் நினைவிலிறுத்த வேண்டிய ஒன்று :

"எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக மற்றவரிடமிருந்து வேறுபடுகிறோமோ, எவ்வளவுக்கெவ்வளவு குறைவாகப் பூசலிடுகிறோமோ, உரசுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. மிகமிகக் குறைவாக இவற்றை ஆக்க ஆக்க வெற்றியின் விகிதாச்சாரம் அதிகரித்துக் கொண்டே போகும்".

எஃகு மன்னரின் அறிவுரை :

எஃகு மன்னன் என்று புகழ் பெற்ற ஆண்ட்ரூ கார்னீகி தனது வெற்றிக்கான காரணத்தைக் குறிப்பிடும்போது இனிமையான ஆளுமைக்கே முதலிடத்தைக் கொடுக்கிறார். இதை வைத்தே மனிதர்களை நிர்வகிக்கும் முறையை அவர் நன்றாகத் தெரிந்திருந்து வெற்றி பெற்றார். 'மூளைக்குப் பதிலாக இனிமையான ஆளுமையே போதும்' என்ற அவரது கூற்றே அவர் எவ்வளவு முக்கியத்துவத்தை இதற்குத் தந்துள்ளார் என்பதைப் புலப்படுத்தும்.

மின்சாரம் போன்ற சக்தி ஆளுமை :

இனிமையான ஆளுமை உள்ளவர்கள் ஒரு இடத்திற்கு வந்தாலே அந்த இடம் மின்சாரம் வந்தாற்போல ஒளிவெள்ளம் பெறும் மற்றவர்களைத் தன்வயப்படுத்துவதில் இவர்களுக்கு ஈடு இணை இல்லை.

சார்லஸ் டிக்கன்ஸ் ஒரு அறைக்குள் நுழைந்தார் என்றால் கணகணப்பூட்டும் அடுப்பைக் கிளறுவதன் மூலம் குளிரைப் போக்க வரும் இதமான வெப்பம் வருவது போல இருக்கும் என்கிறார் நண்பர் ஒருவர்.

பிரபல கவிஞன் கதே, ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தாரென்றால் கையிலுள்ள கத்தி, ஃபோர்க், உணவை அப்படியே வைத்துவிட்டு வைத்த விழி மாறாமல் அவரையே அனைவரும் பார்த்திருப்பார்களாம். அவ்வளவு இனிய ஆளுமை அவருக்கு.

நெப்போலியன் மனைவி ஜோசஃபைனின் ஆளுமைக்கு அடிமை ஆகாதவரே இல்லை. பிரான்ஸ் நாட்டில் மட்டுமல்ல, நெப்போலியன் வென்ற நாடுகளில் உள்ளவர்கள் எல்லாம் கூட ஜோசபைன் வசமானார்கள்! தனது இனிய ஆளுமையின் வெற்றியின் ரகசியத்தை அவளே ஒரு முறை கூறிவிட்டாள். "எனது விருப்பம் என்ற வார்த்தைகள் என் வாயிலிருந்து ஒரே ஒருமுறை தான் வரும், அது எப்போதென்றால் என்னைச் சூழ்ந்துள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே என்று நான் சொல்லும்போது! அது மனப் பூர்வமாக நான் கூறும் உண்மைதான்!". இனிமையான ஆளுமை உள்ளவர்களைச் சூழ்ந்துள்ளவர்கள் மகிழ்ச்சிப் பரவசத்தில் திளைப்பவர்களே.

புற அழகு அழகல்ல :

இரண்டு முறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் வெகுஜன கவர்ச்சியாளர், சிறந்த பேச்சாளர், சக்தியும் உற்சாகமும் துள்ளும் மனிதர். அமெரிக்காவையே தன் கவர்ச்சி மூலம் வசப்படுத்தியவர். கவர்ச்சி என்று கூறும்போது புறஅழகை கூறுவதாக எண்ணக்கூடாது.

புற அழகு சிறிது அனைவரையும் கவரவே செய்யும். ஆனால் அக அழகு, உள் அழகு, பலவித நல்ல குணங்களால் விகசித்து மலரும் உள்ளழகு மட்டுமே நிலைத்து நிற்கும் பயனைத் தரும். பொக்கை வாய்க் கிழவரான மகாத்மாவிற்கு உலகமே அடிபணியவில்லையா? உலகிலேயே குள்ளமான படைத் தலைவனான நெப்போலியன் காலில் உலகமே விழவில்லையா?

ஆளுமையின் அடிப்படை :

ஆளுமை என்பது பல நல்ல நடத்தைகளைக் கொண்டிருப்பது. நெப்போலியன் ஹில் இவற்றைப் பட்டியலிட்டுத் தருகிறார்.

1. வெகுஜன கவர்ச்சி : மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் ஆசை அபிலாஷையை நிறைவேற்ற முன்வரும் தன்மை.

2. மனோலயம் : தன் மனத்தை வசப்படுத்துபவனே பிறரை வசப்படுத்த முடியும்.

3. திடக்குறிக்கோள் : தனக்கெனக் கொண்டுள்ள குறிக்கோள்.

4. நல்ல உடை : இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற உடை.

5. உடல் அசைவு, இருக்கை பாவனை : நடை, உடை, பாவனையில் ஒரு தனித்துவம்.

6. குரல் : தொனி, கம்பீரம், ஏற்ற இறக்கம், தெளிவான உணர்ச்சி கொண்ட குரல்வளம்.

7. கொள்கையில் தீவிர பற்று : இது இல்லாமல் யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்.

8. மொழியை இடம் அறிந்து பயன்படுத்தல் : தகுந்த பொருத்தமான சொற்களை இனிய நடையில் பயன்படுத்துதல்.

9. நிதானம் : தன்னம்பிக்கை, தன்னடக்கம் இவற்றுடன் கூடிய நிதானம்.

10. நகைச்சுவை உணர்வு : முக்கியத் தேவையானை இது இல்லாவிடில் வாழ்க்கை தாழ்ந்து கொண்டே இருக்கும்.

11. சுயநலமின்மை : சுயநலமும் இனிய ஆளுமையும் நேர் எதிரானவை, ஒத்துவராதவை.

12. முகபாவம் : அகத்தின் அழகு முகத்திலே! தெளிவான சிந்தனையைக் குறிக்கும் முகபாவம்.

13. ஆக்கப்பூர்வமான சிந்தனை : நல்லதே நடக்கும் என்னும் ஆக்கப்பூர்வமான சிந்தனை.

14. உற்சாகம் : இது இல்லவிடில் மற்றவரை எப்படி உற்சாகப் படுத்தமுடியும்?

15. நல்ல உடல்நலம் : சுவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும். நல்ல உடல்நலமே நினைத்ததை முடிக்க அடிப்படைத் தேவை.

16. கற்பனை வளம் : இனிய ஆளுமைக்கான முக்கிய குணங்களுள் ஒன்று.

17. தந்திரம் : நாசுக்காக பல இடங்களில் நடக்காவிட்டால் வீண் சச்சரவு தோன்றும்.

18. பல்துறை ஞானம் : நாட்டு நடப்புகளை அறிவதோடு, பல துறைகளில் ஆர்வமும், அறிவும், அக்கறையும் கொண்டிருத்தல்.

19. கேட்கும் செவியைக் கொண்டிருப்பது : அனைவர் சொல்வதையும் பொறுமையுடன் கேட்கும் செவி. அதற்கான மனோபக்குவம்.

20. பேச்சுக்கலை : தன் மனதில் உள்ளதை ஆற்றலுடன் சரியாக வெளிப்படுத்தும் பேச்சுத்திறன்.

21. தனிப்பட்ட கவர்ச்சி : கட்டுப்படுத்தப்பட்ட "செக்ஸ்" சக்தி. இயல்பாகப் பிறப்புடன் வரும் குணம் இது ஒன்றுதான். மற்ற அனைத்து குணங்களும் பயிற்சி மூலம் பெற்று விடலாம்.

புற அழகு இல்லாது அக அழகு வளர வளர ஆளுமையின் இனிமையும், கவர்ச்சியும் அதிகரிக்கும்.

அபெல்லஸ் படைத்த ஓவியம் :

கிரேக்க நாட்டைச் சேர்ந்த அபெல்லஸ், எழில் தேவதையை ஓவியமாகத் தீட்டுமுன்னர் கிரீஸ் முழுவது பல வருடங்கள் சுற்றி அலைந்து அழகிய பெண்களை உற்றுக் கவனித்தானாம். அவர்களது எழில், நடை, உடை, பாவனை, சாயல், நளினம் இவற்றைக் கவனித்து, தான் கண்ட சிறப்புகளையெல்லாம் ஒருங்கிணைத்து வீனஸ் தேவதைக்கு உருக்கொடுத்தானாம்!

நாகரீகமுள்ள கிரேக்கப் பெண்களின் பண்பாட்டின் வெளிப்பாடே அவன் படைத்த வீனஸ்ஓவியம் ஆயிற்று அழகுடன் பிறக்கவில்லையே என்ற ஏக்கத்தை விட்டு விட்டு அகஒளியை வளர்க்கும் வழியைப் பார்த்தாலே போதும். அதற்காக ஆடை அணிகலன்கள் வேண்டாம் என்று அர்த்தம் இல்லை. "ஆடைபாதி ஆள்பாதி" என்பது முதுமொழி. குண்டா, ஒல்லியா, உயரமா, குட்டையா, கறுப்பா, சிவப்பா, தன்னிடம் உள்ள சிறப்பு அம்சம் என்ன என்று இவற்றை எல்லாம் கவனித்து, உடையை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அணியத்தக்க ஆடை எது என்பதை நல்ல டெய்லரோ, அழகு நிலையப் பணியாளரோ சுலபமாகக் கூறிவிடுவர்.

நாசம் விளைவிக்கும் நச்சு குணங்கள் :

நல்ல குணங்களைக் கூட்டுவதோடு, தன்னிடமுள்ள எதிர்மறைக் குணங்களைப் பட்டியலிட்டு அவற்றைக் களையவும் வேண்டும். நாசம் விளைவிக்கும் நச்சுக்களாக விளங்கும் இவைகளைப் பட்டியலிட்டுப் பார்க்கலாமா?

பொய் புரட்டு செய்தல், நாணயமின்மை, பேராசை, வெறுப்பு, பொறாமை, கோபம், பயம், பழிவாங்கும் மனப்பான்மை, அடுத்தவரைக் குறை கூறுதல், கிசுகிசுக்களைப் பரப்புவது, தேவையற்ற அதிக உற்சாகம், நழுவும் மனப்பான்மை, எதையும் அளவுக்கு மீறி கூட்டி உரைத்தல், தன் தவறுகளை அடுத்தவர் மீது சுமத்தல், நான் என்ற அகம்பாவம், வறட்டுப் பிடிவாதம், சுயநலம்.உங்களின் நல்ல பண்புகளை உங்கள் நடத்தை மூலம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கணமும் கவனித்து கொண்டே இருக்கிறார்கள். இல்லத்தில் கணவன், மனைவி, குழந்தைகள், தெருவில் அண்டை அயலார், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், இவர்கள் அனைவரும் இடைவிடாது உங்களை எடைபோட்டுக் கொண்டே இருப்பதை மறக்க வேண்டாம்.
ஒவ்வொரு செய்கையும் ஒரு மனிதனின் நிழலின் நீட்டிப்பே.-எமர்ஸன்


ராணிக்கு மூடப்பட்ட கதவு :

விக்டோரியா மகாராணிக்கும் அவரது கணவர் பிரின்ஸ் ஆல்பர்ட்டுக்கும் ஒருமுறை விவாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ராணியாரின் பேச்சினால் மனம் புண்பட்ட ஆல்பர்ட், தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். ஐந்து நிமிடம் கழித்து அறையைத் தட்டும் சத்தம் கேட்டது. "யார் அது?" வினவினார் ஆல்பர்ட். "நாந்தான் மகாராணி வந்திருக்கிறேன்" கதவு திறக்கப் படவில்லை. சற்று நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டினார் விக்டோரியா. "நாந்தான் உங்கள் மனைவி விக்டோரியா வந்திருக்கிறேன்" உடனே கதவைத் திறந்தார் ஆல்பர்ட், சமாதானம் ஏற்பட்டது.

"நான்" என்ற அகம்பாவமும், பெண்மைக்கு ஒவ்வாத சொற்களும் இனிய ஆளுமைக்கு எதிரானவை.

வெப்ஸ்டரின் எளிமை :

வாஷிங்டன் நகரிலிருந்து ஒரு அரசியல்வாதி டேனியல் வெப்ஸ்டரைப் பார்க்க அவரின் இருப்பிடமான மார்ஷ்பீல்டு என்னும் இடத்திற்கு வந்தார். வழியிலே ஒரு நீரோடை. அதைத்தாண்ட அவரால் முடியவில்லை. அருகே கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட ஒரு விவசாயி வேலை செய்வதைப் பார்த்த அவர் "அப்பா, என்னை அக்கரை சேர்த்துவிடு. உனக்கு கொஞ்சம் மதுபானம் தருகிறேன்" என்றார். அந்த விவசாயி அரசியல்வாதியைத் தன் தோள்மீது தூக்கி வைத்துக் கொண்டு அனயாசமாக அக்கரை வந்தார். வெகுமதியாகத் தரப்பட்ட மதுபானத்தையும் வாங்கவில்லை. வெப்ஸ்டரின் வீட்டையும் சுட்டிக் காட்டினார். சற்று நேரம் கழித்து வெப்ஸ்டர் வீட்டுக் கதவைத் தட்டியவுடன் கதவை திறந்து கொண்டு வந்தவரைப் பார்த்தவுடன் "விருந்தாளி" திகைத்தார். கதவைத் திறந்தது வேறு யாருமில்லை, விவசாயியாக இருந்த வெப்ஸ்டர்தான்!

ஜெபர்சனின் பாடம் :

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜெபர்சன் ஒரு முறை தன் பேரனுடன் குதிரை சவாரி செய்யும்போது வழியிலே ஒரு நீக்ரோ அடிமை அவர்களைப் பார்த்தவுடன் தனது தொப்பியை மரியாதை நிமித்தம் எடுத்துத் தலைகுனிந்து வணங்கினான். ஜனாதிபதி உடனே பதில் மரியாதை தெரிவிக்கத் தன் தொப்பியை எடுத்தார். ஆனால் பேரனோ அந்த அடிமையை அலட்சியமாக நோக்கினான். 'தாமஸ்'! என்று பேரனைக் கூப்பிட்ட ஜெபர்ஸன் "அந்த அடிமை உன்னைவிடச் சிறந்த கனவானாக இருக்க நீ அனுமதிக்கலாமா?" என்று கேட்டார். வெட்கிய பேரன் தன் தொப்பியை எடுத்து பதில் வணக்கம் கூறி தானும் ஒரு கனவானே என நிரூபித்தான். நல்ல பண்புகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

அரிஸ்டாட்டிலின் விளக்கம் :

அரிஸ்டாட்டில் கனவான் ‘GENTLEMAN’ என யாரைக் குறிப்பிடுகிறார் தெரியுமா?

"நல்லது கெட்டது எது வந்தபோதிலும் நடுநிலையில் பெருந்தன்மையுடன் நடப்பவனே கனவான். தன்னை உயர்த்தவோ, தாழ்த்தவோ அவன் அனுமதிப்பதில்லை. வெற்றியில் மகிழ்ச்சியோ, தோல்வியில் வருத்தமோ அவன் அடைவதில்லை. அபாயத்தை அவன் தேர்ந்தெடுப்பதுமில்லை. அணுகுவதுமில்லை. தன்னைப் பற்றித் தானாக பேசுவதுமில்லை. மற்றவரைப் பேச விடுவதுமில்லை. தன்னைமட்டும் புகழ வேண்டும், மற்றவரை இகழ வேண்டும்" என்று அவன் நினைப்பதில்லை.

ஒரு கனவான் கனவான்தான். இதற்கு மேல் எதற்கு விளக்கம்? ஆம், A GENTLEMAN IS A GENTLEMAN அவ்வளவுதான்.

ஒவ்வொருவரும் தன்னுடன் தனது ஆளுமையைச் சூழ்ந்து சுமந்து செல்கிறான். ஒரு சூழ்நிலையை உருவாக்கியவாறே இருக்கிறான். இதில் அவனது ஆளுமையின் நல்ல, கெட்ட குணங்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நல்லதைப் பெருக்குங்கள், நச்சுகளை அகற்றுங்கள்.

உங்களின் சங்கேத மொழி என்ன?

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் மெக்ஸிகோவில் ஜெர்மன் அரசு ஒரு ஒற்றர் படையை அமைத்திருந்தது. ஒற்றர்கள், ரகசியமாகத் தங்கள் செய்திகளை பெர்லினுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சங்கேத மொழி (CODED MESSAGE) இருந்தது.

அமெரிக்க நிபுணர்களுக்கு அந்த சங்கேதமொழி ஒரு சவாலாக இருந்தது. தீவிரமான ஆராய்ச்சிக்குப் பின்னர் அந்த சங்கேத மொழிக்கு ஆதாரம் ஏதோ ஒரு அகராதி தான் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது.

எந்த அகராதியாக இருக்கக்கூடும் அது? கடைசியாக அதை கண்டே பிடித்துவிட்டனர். அவர்கள் மேஜையின் மீது இருந்த அகராதிதான் அது! அது ஜெர்மனியின் ராணுவ ரகசியங்களை அமெரிக்காவிற்கு விளக்கிவிட்டது.
நான் விரும்பாத ஒரு மனிதனை இதுவரை நான் சந்திக்கவே இல்லை                                                                                                                              - யாரோ
நாம் நமது ஆளுமையை உயர்த்த நமக்குத் தடையாக இருக்கும் சங்கேத மொழியை உடைத்து சிக்கலை அவிழ்க்க வேண்டும். நாம் வெற்றி பெறாமல் இருக்க எந்த சங்கேத மொழியை நம்மை அறியாமல் அனுப்புகிறோம்? இதை அறிந்து தவறைத் திருத்தினால் சரியான செய்தியை அனுப்பினால் வெற்றிபெறுவது எளிது.

இன்னும் அதிகப்படுத்துங்கள் :

இரண்டே வார்த்தைகளில் நமது ஆளுமையை உயர்த்திவிடலாம் "இன்னும் அதிகப்படுத்துங்கள்" ஆம்! நல்லவற்றை "இன்னும் அதிகப்படுத்துங்கள்" நல்ல நண்பர்களை இன்னும் அதிகப்படுத்துங்கள். தீய குணங்களை ஒழிப்பதை இன்னும் அதிகப்படுத்துங்கள். இந்த ஒரே ஒரு உத்திமட்டும் போதும். உங்களுக்கு அளப்பரிய முன்னேற்றத்தைத் தர!

இன்றே ஆரம்பியுங்கள் :

ஒரு விளக்கு அதன் ஒளியின் தீவிரத்தைப் பொறுத்தே தனது பிரகாசத்தைத் தரும்!! அதுபோலவே ஒரு மனிதனின் மனோசக்தியே அவனது சூழ்நிலையில், வாழ்க்கையில் பிரகாசத்தைத் தரும். அவனது செல்வ நிலைக்கும் சேர்த்து! இந்த பிரகாசத்தை உயர்த்தி வெளிப்படுத்த இனிய ஆளுமை இன்றியமையாத தேவையாகும். இதை என்றிலிருந்து உயர்த்த ஆரம்பிப்பது? இன்றே! இப்பொழுதே! இக்கணமே!

உங்கள் குழந்தையிடம், மனைவியிடம் அல்லது கணவரிடம் இதை ஆரம்பிக்கலாம். அட நன்றாகச் சமைத்திருக்கிறாயே என்று மனைவியிடமோ அழகாகப் படிக்கிறாயே என்று குழந்தையிடமோ கூறினால் ஏற்படும் சூழ்நிலையே தனிதான்!

நல்ல ஒரு வழிகாட்டி :

இனிமையாக எப்படி மற்றவருடன் பழகுவது, அனைவரையும் வயப்படுத்துவது எப்படி என்பதைக் கற்று உணர நல்ல புத்தகம் ஒன்று இருக்கிறது.

ஆண்டாண்டு காலமாக லட்சக்கணக்கானவகளுக்கு வழி காட்டிய இந்தப் புத்தகம் இன்று உங்களுக்கும் வழியைக் கற்றுக் கொடுக்கக் காத்திருக்கிறது.

டேல் கார்னிகி எழுதிய HOW TO WIN FRIENDS AND INFLUENCE PEOPLE என்ற புத்தகம் அது.

இனிமையான ஆளுமையை வெற்றி பெறத் துடிப்பவர் அடைய வேண்டிய நான்காவது குணாதிசயமாகும்.

- ச.நாகராஜன் (வெற்றிக்கலை நூலிலிருந்து)

ச.நாகராஜன் அவர்களின் இதர படைப்புகள்



முட்டாள்தனமான, பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் (OBSESSIONS) அவர் மனத்தை ஆக்கிரமித்துக் கொள்வதாகவும், அப்படி அவரை ஆட்கொள்கிற பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதாகவும் அவர் குறைபட்டுக் கொண்டார். திடாரென்று, கற்பனையான ஓர் உடல்ரீதியான குறைபாட்டைக் குறித்துக் கவலையுறுவார் என்றும் - ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே, வேறொரு நிகழ்ச்சியாலோ, கவலையாலோ, விஷயத்தாலோ - முதல் கவலை போய்விடும் என்றும் அவர் விளக்கினார். பிடிவாதமும் ஆவேசமும் கொண்டு மனத்தை ஆக்கிரமித்துக் கொள்கிற ஒரு பித்திலிருந்து, இன்னொரு பித்திற்கு, தாவித் தொடர்ந்து தவிப்பவராக அவர் காணப்பட்டார். அத்தகைய பித்துக்களிலிருந்து விடுபடவும், வெளிவரவும் - புத்தகங்கள் சொல்லும் வழிமுறைகளை ஆராய்ந்ததாகவும், பிரச்சினைகளை நண்பருடன் பகிர்ந்து கொண்டதாகவும், ஏன் ஒரு மனோதத்துவ நிபுணரைக் கலந்தாலோசித்ததாகவும் கூட அவர் தொடர்ந்தார். ஆனால், அவருக்கு ஏனோ தெளிவும், நிவாரணமும் கிடைக்கவில்லை என்றும் சொன்னார். முக்கியமான, தெளிவுண்டாக்குவதுபோல் தோன்றுகிற கலந்தாலோசனைகளுக்குப் பின் கூட, உடனடியாக அத்தகைய பித்துக்கள் அவரை ஆட்கொள்வதாக அவர் வருந்தினார். பித்துக்கள் பிறப்பதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து விட்டால், அவற்றுக்கு முடிவு கட்டி விட முடியுமா?

காரணத்தைக் கண்டுபிடிப்பது விளைவிலிருந்து விடுதலை கொணர்கிறதா? காரணத்தை அறிகிற கல்வியால் விளைவுகளை விலக்கிவிட முடியுமா? போருக்கான பொருளாதார, உளவியற் காரணங்களை நாம் அறிந்திருக்கிறோம்; ஆனாலும், காட்டுமிராண்டித்தனத்தையும், சுய அழிவையும் ஊக்குவிக்கிறோம். சொல்லப்போனால், காரணத்தைத் தேடுவதில் நமக்குள்ள நோக்கமே அதன் மூலம் விளைவிலிருந்து விடுதலை பெறுகிற விருப்பம்தான். ஆனால், அந்த ஆசை சாத்வீகமான எதிர்ப்பின், தூஷித்தலின், கண்டித்தலின் மறுவடிவமே ஆகும்; எங்கே தூஷித்தலும், கண்டித்தலும் இருக்கிறதோ அங்கே புரிந்து கொள்வதும், அறிவதும் இருப்பதில்லை.

'அப்படியானால், ஒருவர் செய்ய வேண்டியதுதான் என்ன?' என்று அவர் கேட்டார்.

ஏன் மனமானது இத்தகைய அற்பமான, முட்டாள்தனமான பித்துக்களால் ஆளப்படுகிறது? 'ஏன்' என்று இங்கே கேட்பது, எதுவொன்றைப் பற்றியும் - நீங்களே தேடிக் கண்டடைய வேண்டிய - நீங்கள் சார்ந்திருக்கிற வாய்ப்பு இல்லாத - காரணத்தைத் தேடுவதற்காக அல்ல; 'ஏன்' என்று இங்கே கேட்பது, உங்களின் சொந்த சிந்தனையை வெளிக்கொணரவும், பகிரங்கப்படுத்தவுமே. அதனால், ஏன் மனமானது இவ்வாறு ஆக்கிரமிக்கப்படுகிறது? மனமானது மேலோட்டமானதாக, ஆழமில்லாததாக, சிறுமையானதாக இருப்பதாலும், அதனால் தன்னைக் குறித்த கவர்ச்சிகளிலேயே சிரத்தை கொண்டிருப்பதாலும் தானே?

'ஆமாம்' என்று பதலளித்த அவர், 'நீங்கள் சொல்வது உண்மைபோல் தோன்றுகிறது; ஆனால், முழுவதுமாக அல்ல; ஏனெனில், நான் ஒரு விளையாட்டுச் சுபாவமற்ற, வாழ்க்கையை முக்கியமாக எடுத்துக் கொள்கிற மனிதன்'

'இத்தகைய பித்துக்களைத் தவிர, உங்களின் சிந்தனை எதனால் நிரப்பப்பட்டிருக்கிறது?'

'என்னுடைய தொழிலால்' என்று அவர் சொன்னார். 'நான் ஒரு பொறுப்புமிக்க பதவியில் இருக்கிறேன். முழு நாளும், சில நேரங்களில், இரவின் பின்பகுதி வரை, என்னுடைய சிந்தனையை என் தொழில் எடுத்துக் கொள்கிறது. நான் அவ்வப்போது படிப்பதுண்டு, ஆனால், என்னுடைய பெரும்பான்மையான நேரம் என் தொழிலுக்காகவே செலவாகிறது'

'நீங்கள் செய்கிற தொழிலை நீங்கள் விரும்புகிறீர்களா?'

'ஆம்; ஆனால், என்னுடைய தொழில் எனக்கு பூரணமான திருப்தியளிக்கவில்லை. என்னுடைய வாழ்நாள் முழுவதும், நான் ஈடுபட்டுள்ளவற்றில் அதிருப்தியுடையவனாகவே நான் இருந்து வருகிறேன். ஆனால், எனக்கு இப்போது இருக்கிற கடமைகளின் பொருட்டு என்னால் இந்தப் பதவியை விடமுடியாது. மேலும், எனக்கு வயதும் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பித்துக்களும், என் தொழிலின் மீதான மனக்கசப்பும், பிறரின் மீதான வருத்தமுமே என்னை மிகவும் தொந்தரவு செய்கின்றன. நான் இனிமையானவனாக இல்லை. எதிர்காலத்தைப் பற்றி நாளும் வளர்கிற கவலையுறுபவனாக இருக்கிறேன். எனக்குள் அமைதி இருப்பதாகவே தோன்றவில்லை. நான் என் வேலையையும் கடமையையும் நன்றாக செய்கிறேன். ஆனால்...'

ஏன் நீங்கள் 'இது என்ன?' என்கிற நிதர்சனத்தை, உண்மையை எதிர்த்துத் துன்புறுகிறீர்கள்? நான் வாழ்கிற இந்த வீடு சந்தடியும் சத்தமும் மிகுந்ததாகவும் - தூய்மையிழந்து அசுத்தமானதாகவும் - கட்டில், மேஜை, நாற்காலி ஆகியவை புழங்கிப் போய் அழகற்றதாகவும் இருக்கலாம்; மொத்தத்தில் இந்த இடமே அழகும் அமைதியும் இழந்து காணப்படலாம். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக, என்னால் இன்னொரு வீட்டிற்குப் போக இயலாமல், இங்கேயே வாழ வேண்டி வரலாம். எனவே, இங்கே நான் உறைவது - சம்மதம் பற்றிய, ஏற்றுக் கொள்வது பற்றிய விஷயம் அல்ல; யதார்த்தத்தை, நிதர்சனத்தை உணர்கிற, பார்க்கிற விஷயம் ஆகும். 'இது என்ன' என்கிற உண்மையை நான் பார்க்காவிட்டால், அந்த பூ ஜாடி பற்றியோ, நாற்காலி பற்றியோ, சுவரிலே மாட்டப்பட்டிருக்கிற படத்தைப் பற்றியோ நினைத்து வருந்துகிற நோயுற்றவன் ஆகிவிடுவேன். அவை என் மனத்தை ஆக்கிரமிக்கிற, ஆட்டுவிக்கிற பித்துக்களாக மாறிவிடும்; அப்புறம், பிறரை எதிர்த்தும், என் தொழிலை எதிர்த்தும் என்றெல்லாம் எனக்குள் மனக்கசப்புகள் பிறக்கும். இவை எல்லாவற்றையும் அப்படியே இங்கேயே விட்டுவிட்டு, நான் புதிதாகவும் தொடங்கலாம் எனில் அது முற்றிலும் வேறான விஷயம். ஆனால், என்னால் அது முடியாது. 'இது என்ன' என்கிற நிதர்சனத்தை எதிர்த்துக் கலகம் செய்வது நல்லதல்ல. 'இது என்ன' என்கிற உண்மையை அங்கீகரிப்பது கம்பீரமான மனத்திருப்திக்கோ, வலியைக் குறைக்கிற இளைப்பாறலுக்கோ அழைத்துச் செல்வதில்லை. 'இது என்ன' என்கிற நிதர்சனத்திற்கு, உண்மைக்கு நான் இணங்கி வளைந்து கொடுக்கும் போது, அதைப் பற்றிய புரிந்து கொள்ளுதலும் அறிதலும் நிகழ்வது மட்டுமல்ல; மேலோட்டமான புற மனத்திற்கு ஒருவகையான அமைதியும் பிறக்கிறது. மனத்தின் மேற்பகுதியானது - புறமனமானது - அமைதியடையாதபோது, அது - நிஜமான அல்லது கற்பனையான, பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்களுக்கு இடம் கொடுக்கிறது. அது, சில சமூக சீர்திருத்தங்களிலோ, குரு, இரட்சகர், சடங்கு போன்ற மதமுடிவுகளிலோ சிக்கிக் கொள்கிறது. புற மனமானது அமைதியாக இருக்கும்போதே, மறைந்திருக்கிற, ஆழ்மனம் - அக மனம் - தன்னைத் தானே வெளிப்படுத்தும். மறைந்திருக்கிற அக மனம் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆனால், புற மனமானது பித்துக்கள், கவலைகள் ஆகியவற்றால் சுமையேற்றப்படும்போது அகமனம் வெளிப்படுதல் சாத்தியமாகாது. எனவே, அமைதியற்ற சச்சரவுகளிலும், ஆவேசங்களிலும், எழுச்சிகளிலும், புறமனமானது தொடர்ந்து பாதிக்கப்படும்போது, புற மனத்திற்கும், அக மனத்திற்கும் முரண்பாடுகளும் பகையும் தோன்றுவது தவிர்க்க இயலாதது. இந்த முரண்பாடுகள் தொடர்கிற வரை, தீர்க்கப்படாத வரை, பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் வளர்கின்றன. சொல்ல போனால், பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் எல்லாம் நம்முடைய முரண்பாடுகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியே ஆகும். சில வகையான தப்பித்தல்கள் சமுதாயத்திற்கு வெளிப்படையாக அதிகமாய்த் தீங்கிழைக்கின்றன என்றாலும் கூட, எல்லாத் தப்பித்தல்களுமே ஒத்த தன்மையுடையவை, ஒரே மாதிரியானவை தான்.

எப்போது ஒருவர் பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்தின் முழுமையான இயக்கத்தை அல்லது பிரச்சினையின் முழுமையான இயக்கத்தை உணர்ந்து அறிகிறாரோ, அப்போது தான் பிரச்சினையிலிருந்து பூரணமான விடுதலை காண முடியும். முற்றுமுணர, பிரச்சினையைக் கண்டிப்பதோ, நியாயப்படுத்துவதோ கூடாது. உணர்கிற நிலை - அறிவுடைய நிலை - என்பது தேர்ந்தெடுக்கப்படாததாய் இருக்க வேண்டும். அப்படி முழுவதும் உணர்வதற்கும் அறிவதற்கும் மிக்க பொறுமையும், நுண்ணிய உணர்வுகளை அறியும் நுட்பமும் தேவைப்படுகிறது; பேராவலும், தொடர்ந்த கவனமும் தேவைப்படுகிறது. அவற்றினாலேயே, சிந்தனையின் முழுமையான இயக்கத்தைக் கூர்ந்து கவனிக்கவும், புரிந்து கொள்ளவும், அறியவும் முடியும்.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி

மூலம்: Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)


http://www.thinnai.com/?module=displaystory&story_id=20205054&format=html



வாழ்வுடன் தொடர்புடைய, தங்களை பாதிக்கிற, யோசிக்க வைக்கிற விஷயங்கள் குறித்து - மனப்பூர்வமாகவும், மனம் விட்டும் - பேசவும், கேட்கவும் வந்திருந்த கூட்டத்தில் அந்தப் பெண்ணும் இருந்தார். அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்கிற மன உந்துதலாலோ, தன்னுடைய தோழியால் அழைக்கப்பட்டோ அந்தப் பெண் வந்திருக்கலாம். அவர் நன்றாக, நாகரீகமான உடையணிந்திருந்தார். பிறர் மனதில் அவர் பால் ஒரு கெளரவத்தையும் மரியாதையையும் ஏற்படுத்துகிற தோற்றம் அவருடையது. அதே நேரத்தில், தன் தோற்றத்தின் - மேலான இலட்சணத்தையும், அழகையும் - அவர் தெளிவாக அறிந்திருந்தார். சதாநேரமும், தன்னைப் பற்றிய முழுப் பிரக்ஞையுடனும், சுய நினைவுடனுமே அவர் இருந்தார் - தன்னுடைய உடலழகு, பார்வைகள், சிகையலங்காரம், தன் தோற்றமும், செய்கைகளும் பிறரிடம் ஏற்படுத்தும் பாதிப்புகள், அபிப்பிராயங்கள் பற்றிய பிரக்ஞைகள் அவை. தனிமையிலும், தனக்குள்ளேயும் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டு, தணிக்கைச் செய்யப்பட்டு, மெருகேற்றப்பட்டவை அவரின் தோரணைகளும் செயல்களும், பாவனைகளும். அது, சில நிமிடங்களுக்கு ஒருமுறை, தான் அமர்ந்திருந்த நிலையையும், தன்னுடைய தேக, மனோ பாவங்களையும், தேர்ந்த விதத்தில் அவர் மாற்றிக் கொண்டதிலிருந்து தெரியவந்தது. எது நேர்ந்த போதும், தான் வளர்த்துப் பண்படுத்தி வைத்திருக்கும் ஒரு நிலையிலும் தோற்றத்திலும் தன்னைப் பொருத்திக் கொள்வதில் அவர் உறுதியாய் இருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. கூட்டத்தினர் அனைவரும் தீவிரமாகவும், ஆழ்ந்தும் விவாதித்துக் கொண்டு இருந்த நேரம் எல்லாம் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விதத்திலிருந்து மாறவில்லை. நோக்கங்களுடனும், நோக்கங்களுக்காகவும் தன்னை மறந்து பேசிக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த அந்தக் கூட்டத்திடையே, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்தது போலவும், அதில் தானும் பங்கெடுத்துக் கொள்வது போலவும் காட்டிக் கொள்ள அந்த சுயநினைவு மிக்க பெண் முயன்று கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது. விவாதிக்கப்படுகிற பொருளில் விஷய ஞானம் இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், அவர் ஏதும் பேசவில்லை. ஆனால், அவர் கண்களில் தெரிந்த ஒருவித திகைப்பும் பயமும் அவரால் அந்தத் தீவிர உரையாடலில் கலந்து கொள்ள இயலவில்லை என்பதைக் காட்டியது. தன்னுடைய உண்மையான உணர்வுகளை மறைத்து, தன்னுடைய பண்படுத்தப்பட்ட பாவனைகளைத் தொடர்ந்தபடி, தனக்குள்ளேயே அவர் பின்வாங்குவதையும் உணர முடிந்தது. பிறரால் தூண்டப்படாததும், தன்னிச்சையுமான இயல்பு (SPONTANEITY) அவரின் விடாமுயற்சியால் தொடர்ந்து அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு தோற்றத்தையும், பாவனையையும் தனக்குள்ளே வளர்த்துக் கொள்கிறார்கள்; அதையே வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். தன்னுடைய இலாபகரமான வணிகத்தையும் தன் வாழ்வின் வெற்றியையும் தன் நடையில் காட்டும் உத்யோகஸ்தர், தன்னுடைய இருப்பையும், வருகையையும் தன் புன்முறுவலால் அறிவிக்கும் மனிதர், தேடலும் அழகுணர்வும் நிறைந்த கலைஞன், மரியாதையும் பணிவும் நிறைந்த சீடன், கட்டுப்பாட்டுடன் உலக இன்பங்களை மறுதலித்து ஒழுகும் ரிஷி என்று நாம் வாழ்வில் பலவிதமான தோற்றங்களையும், பாவனைகளையும் பார்க்கிறோம். சுயப்பிரக்ஞை நிறைந்த அந்தப் பெண்ணைப் போலவே, மத கோட்பாடுகளிலும் தவத்திலும் நம்பிக்கை கொண்ட ரிஷியும் சுயக்கட்டுப்பாடு என்கிற தோற்றத்துக்குள்ளூம் பாவனைக்குள்ளும் தன்னைப் புகுத்திக் கொள்கிறார். சுயக்கட்டுப்பாடு என்பது மறுதலிப்பையும் தியாகத்தையும் தற்பயிற்சியினால் பண்படுத்தி வளர்ப்பதிலேயே வருகிறது. பிறர் தன்னைப் பற்றி கொள்ளப் போகும் மதிப்பீடுகளுக்காகவும், அந்த மதிப்பீடுகளினால் தனக்கு விளையப் போகும் பலன்களுக்காகவும் அந்தப் பெண் தன்னிச்சையான இயல்பைத் தியாகம் செய்தார். அதேபோல், ஆன்மீக ரிஷியும் வாழ்வின் எல்லையை, இறுதியைக் காண்பதற்காகவும், கடப்பதற்காகவும் தன்னை பலியிட்டுக் கொள்கிறார். இருவருமே வெவ்வேறு தளங்களில், வெவ்வேறு நிலைகளில், ஆனால் ஒரேவிதமான விளைவைப் பற்றியே சிரத்தை கொண்டுள்ளனர். ரிஷிக்குக் கிடைக்கிற பலன், அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கிற பலனை விட, சமூக அளவில் உயர்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருந்தாலும் கூட, இருவருக்கும் வித்தியாசம் இல்லை. அந்தப் பெண்ணை விட ரிஷியோ, ரிஷியை விட அந்தப் பெண்ணோ மேலானவர் இல்லை. இருவரும் அடிப்படையில் ஒன்றானவர்களே. இருவருமே புத்திசாலிகளோ, நுண்ணறிவாளர்களோ இல்லை. ஏனெனில், இருவரின் தோற்றங்களும், வெளிப்பாடுகளும் அவர்கள் மனதின் சிறுமையையும், தாழ்மையையுமே காட்டுகின்றன. சிறுமையும் தாழ்மையும் கொண்ட மனம் எப்போதும் ஞானமுள்ளதாகவோ, வளமானதாகவோ மாற இயலாது. அது எப்போதும் சிறுமையிலும் தாழ்மையிலும் தான் உழன்று கொண்டிருக்கும். அத்தகைய மனமானது, தன்னை அலங்கரித்துக் கொள்ளவோ, நற்பண்புகளைப் பயிலவோ விழையலாம். ஆனபோதிலும் கூட அது எப்போதும் சிறுமையானதாகவும், ஆழமில்லாததாகவும், அற்பமானதாகவுமே இருக்கிறது. வளர்ச்சி, முதிர்ச்சி, அனுபவம் என்கிற பெயர்களில் எல்லாம் அது தன்னுடையை சிறுமையையே வளர்த்துக் கொள்கிறது. ஓர் அருவருப்பான, அசிங்கமான விஷயத்தை அழகாக்க முடியாது. அதுபோலவே, சிறுமை கொண்ட மனத்தையும் அழகாக்கவோ, வளமாக்கவோ முடியாது. சிறுமை கொண்ட மனம் துதிக்கின்ற கடவுளரும் சிறுமையானவரே. கல்வி கேள்விகளால் பெறுகிற புலமையாலோ, புத்திசாலித்தனமான வார்த்தை விளையாட்டுக்களாலோ, விவேகம் நிறைந்த மேற்கோள்களாலோ, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அலங்காரங்களாலோ, பூஷணங்களாலோ- சிறுமை கொண்ட மனமானது - பூரணமிக்கதாகவோ, ஆழங்காண இயலாத ஞானமுள்ளதாகவோ மாறுவதில்லை. அகாதமான ஆழமுள்ள மனமே அழகாகும். நகைகளும் நாம் தேடிப் பிடித்த நற்பண்புகளூம் அழகாகா. தன்னுடைய சிறுமையையும் தாழ்மையையும் எள்ளளவும் சந்தேகமின்றி உணர்ந்த மனமே, ஒப்பீடுகள் செய்யாத, மதிப்பீடுகளை உதறிய மனமே, அழகாக இயலும். தூண்டப்படாததும் தன்னிச்சையுமான இயல்பும், அதனால் பிறக்கிற தன்னுணர்தலுமே அத்தகைய அழகு ஒருவருள்ளே வந்து தங்கி இருத்தலுக்கு வழி வகுக்கும்.

அந்தப் பெண்ணின் வெளிப்பூச்சும், ஒழுங்கும் ஒருமுகமும் படுத்தப்பட்ட ரிஷியின் தோற்றமும் - அடிப்படையில் ஒருவருக்கு இருக்க வேண்டிய, தன்னிச்சையான இயல்பை - வேண்டாம் என்று மறுதலிக்கிற - அதனால் வதைபடுகிற - சிறுமை கொண்ட மனத்தின் விளைவுகளே ஆகும். பண்படுத்தப்படாத, தன்னிச்சையான இயல்பானது - தங்களின் சரியான அடையாளத்தை, இயல்பான குணாதிசயங்களைத் தங்களுக்கும் பிறருக்கும் காட்டிவிடும் என்று - அந்தப் பெண்ணும், ரிஷியும் பயப்படுகிறார்கள். எனவே, தன்னிச்சையான தன்மையை அழிப்பதற்கு அவர்கள் இடையறாது முயல்கிறார்கள். தாங்கள் தேர்ந்தெடுத்த வெளிப்பாடுகளுக்கும், வெளிப்பூச்சுகளுக்கும், தோற்றங்களுக்கும், தங்களைப் பற்றிய முடிவுகளுக்கும் தாங்கள் எந்த அளவிற்கு இணங்கிப் போகிறோம் என்பதை வைத்து அவர்கள் இருவரும் தங்களின் வெற்றியை மதிப்பிடுகிறார்கள். ஆனால், எது ஒன்று குறித்தும் கேட்கப்படுகிற 'இது என்ன?' என்கிற கேள்விக்கு, விடைதருகிற ஞானச்சுரங்கத்தின் ஒரே சாவி தன்னிச்சையான இயல்புதான். தன்னிச்சையான பிரதிபலிப்பே - மனதை, அதன் சரியான வடிவத்துடன், கண்டுபிடிக்கவும், வெளிக்காட்டவும் முடியும். ஆனால், அப்படி கண்டுபிடிக்கப்படுகிற மனமானது, அலங்கரிக்கப்படும்போது, தன்னை மட்டுமல்ல, கூடவே தன்னிச்சையான இயல்பையும் அழித்துக் கொள்கிறது. தன்னிச்சையான இயல்பைக் கைவிடுவதும், அழித்துக் கொள்வதும் சிறுமை கொண்ட மனத்தின் வழிகளாகும். அப்படி அழித்துக் கொண்ட பின்னர் சிறுமை கொண்ட மனமானது, தேவையான இடங்களிலும், தேவையான நிலைகளிலும் தேவையான அளவுக்கு தன்னை ஜோடித்துக் கொண்டும், அரிதாரம் பூசிக்கொண்டும் அகமகிழ்கிறது. இத்தகு ஜோடனைகள் மற்றும் வேடங்கள் மூலம் சிறுமை கொண்ட மனமானது தன்னைத் தானே வழிபட்டுக் கொள்கிறது. தன்னிச்சையான இயல்பாலும், விடுதலை பெற்ற மனத்தாலுமே, தன்னையுணர்கிற கண்டுபிடிப்பைச் செய்ய இயலும். கட்டுப்படுத்தப்பட்ட மனம் எதையும் கண்டுணர இயலாது. கட்டுப்படுத்தப்பட்ட மனமானது மிகவும் சக்தி வாய்ந்ததாகவோ, தயையற்றதாகவோ கூட இருக்கக் கூடும்; ஆனால், அதற்கு எதையும் கண்டுணர இயலாது என்பதால், ஆழமான ஞானத்தை அதனால் கண்டடைய இயலாது. பயம்தான், கட்டுப்பாடு, ஒழுக்கம் என்கிற தடைகளை உருவாக்குகிறது. தூண்டப்படாமல் தன்னிச்சையான இயல்புடனே பயத்தைக் கண்டறிதலே பயத்திலிருந்து விடுபட வழியாகும். ஓர் ஒழுங்கிற்கும், தோற்றத்திற்கும், உருவமைப்பிற்கும் இணங்கி நடத்தல் - அது எந்த நிலையில் இருப்பினும் - பயத்தின் அடையாளமே. அந்தப் பயமே முரண்பாடுகள், குழப்பம், பகை போன்றவற்றை வளர்க்கிறது. பண்படுத்தப்படாத தன்னிச்சையான இயல்பிலே இயங்குகிற மனமானது, பயமற்ற புரட்சி செய்கிறது; விடுதலை காண்கிறது. பயப்படுகிற எந்த மனமும் தன்னிச்சையான இயல்பையோ, விடுதலையையோ அடைய இயலாது.

தன்னிச்சையான இயல்பின்றி ஆத்ம ஞானம் அடைய இயலாது. ஆத்ம ஞானம் அடையாவிட்டால், மனமானது போகிற, வருகிற காட்சிகளால் வசீகரிக்கப்பட்டு, காட்சிகளின் தாக்க்கங்களூக்கேற்ப - உருமாறிக் கொண்டே இருக்கும். அத்தகைய தாக்கங்கள் - காண்கிற காட்சியின் பரிணாமத்திற்கும் எல்லைக்கும் உட்பட்டு - மனத்தைக் குறுகியதாகவோ, விரிவானதாகவோ ஆக்கலாம்; என்ற போதிலும், மனம் விடுதலை அடையாமல், கண்ட காட்சியின், அதன் தாக்கத்தின் வரையறைக்குளேயே இருக்கும். காட்சிகளின் தாக்கங்கள் மூலம் வடிவமைக்கப் பட்டுக் கொண்டிருக்கிற மனத்தை, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவோ, உருக்குலைக்கவோ இயலாது. எதன் அடிப்படையிலும் தூண்டப்படாத, வடிவமைக்கப்படாத மனத்தை ஆத்ம ஞானம் என்கிற சுய அறிவின் மூலமே பெற இயலும். ஆத்மாவானது காட்சிகள், காட்சிகளின் தாக்கங்கள், பண்படுத்தப்படுதல் என்கிறவற்றால் வடிவமைக்கப்படுகிறது. ஆத்மாவை அறிதல் என்பது, எதன் தாக்கங்களுக்கும் உட்படாத, வடிவமைப்புகளைத் தகர்க்கிற, காரணங்களோ பண்படுத்தலோ இல்லாத, தன்னிச்சையான கண்டுபிடிப்பின் மூலமே சாத்தியமாகும்.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி

மூலம்: Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20204073&format=html


வானம் நிர்மலமாகத் திறந்தும், விசாலமாக விரிந்து நிறைந்தும் காட்சியளித்தது. விரிந்தகன்ற இறக்கைகளுடன் ஒரு பள்ளத்தாக்கிலிருந்து மற்றொரு பள்ளத்தாக்கிற்குச் சுலபமாய் மிதந்து செல்லும் பெரும் பறவைகளோ, கடந்து போகிற மேகங்களோகூட தென்படவில்லை. மரங்கள் நிசப்தத்தில் நின்றன. வளைந்து செல்கிற மலையின் மடிப்புகள் நிழலில் செழுமையாகத் தெரிந்தன. ஓர் ஆர்வமிக்க மான், அதன் துறுதுறுப்பால் உந்தப்பட்டு எங்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தது. பின், நாங்கள் நெருங்க நெருங்க திடாரென்று துள்ளிக் குதித்தோடியது. புதருக்குக் கீழே, பூமியின் நிறத்தில், தட்டையான வடிவத்தில் ஒரு தேரை தன் பிரகாசமான கண்களுடன் அசைவற்று நின்றிருந்தது. மேற்கே, மறைகின்ற சூரியனின் ஒளியில் மலைகள் எடுப்பாகவும் தெளிவாகவும் தெரிந்தன. மலைக்கு வெகு கீழே ஒரு பெரிய வீடு நின்றது. அதனுள் ஒரு நீச்சல் குளமும், நீச்சல் குளத்தில் ஆட்களும் இருந்தார்கள். வீட்டைச் சுற்றி ரசிக்கத்தக்க அழகான தோட்டமிருந்தது. அந்த இடம் வளமானதாகவும், தனித்து விலக்கி வைக்கப்பட்டதாகவும், பணக்காரர்களுக்கே உரிய விநோதமான சூழ்நிலை கொண்டதாகவும் இருந்தது. புழுதி கிளப்புகிற சாலையில் - மேலும் கீழே - வறண்ட நிலத்தில் அரைகுறையாகக் கட்டப்பட்ட குடிசை ஒன்று தெரிந்தது. ஏழ்மை, அழுக்கு மற்றும் கடும் உழைப்பாலான ஜீவனம் ஆகியவை இவ்வளவு தூரத்திலிருந்தே புலப்பட்டன. இவ்வளவு உயரத்திலிருந்து பார்க்கும்போது, இரண்டு வீடுகளுக்குமிடையே தூரம் அதிகமில்லை; அருவருப்பும் அழகும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருந்தன.

இதயத்தின் எளிமையானது - உடைமைகளின் எளிமையை விடவும் - மிகவும் முக்கியத்துவம் உடையதும், பெரிதும் குறிப்பிடத்தக்கதும் ஆகும். ஒப்பிடும்போது, போதுமென்ற மனத்துடன் - குறைவான தேவைகளுடன் நிறைவுற்று வாழ்வது - ஒரு சுலபமான விஷயமே. வசதிகளை உதறுவதும், புகைப்பிடித்தலையும் மற்ற பழக்கங்களையும் கைவிடுதலும், இதயத்தின் எளிமையைச் சுட்டவில்லை. உடைகள், வசதிகள், திசைதிருப்பல்கள் (DISTRACTIONS) ஆகியவை நிரம்பியுள்ள உலகிலே - இடுப்பிற்கு மட்டுமே தேவையான அரையாடையை அணிவது - விடுதலை பெற்ற ஜீவனின் அடையாளத்தைச் சொல்லவில்லை. உலகத்தையும், லோகாயுத வழிகளையும் கைவிட்டுவிட்ட ஒரு மனிதர் இருந்தார்; ஆனால், அவரது வேட்கைகளும், பெருங்கனவுணர்வுகளும் அவரை விழுங்கிக் கொண்டிருந்தன; அவர் ஒரு சன்னியாசியின் உடை தரித்திருந்தார், ஆனால் அவருக்கு அமைதியென்றால் என்னவென்று தெரிந்திருக்கவில்லை. அவர் கண்கள் முடிவற்று தேடி அலைந்து கொண்டிருந்தன; அவர் மனம் எப்போதும் சந்தேகங்களிலும் நம்பிக்கைகளிலும் பிளவுண்டும் இருந்தது. புறவயமாக - நீங்கள் கட்டுப்படுகிறீர்கள்; உதறுகிறீர்கள்; படிப்படியாக இறுதி முடிவை அடைவதற்காக உங்கள் வழியை கட்டமைக்கிறீர்கள். நீங்கள் எப்படி இதை அல்லது அதைக் கைவிட்டுள்ளீர்கள், நீங்கள் எப்படி உங்கள் நடத்தையைச் கட்டுப்படுத்திச் செப்பனிடுகிறீர்கள், நீங்கள் எவ்வளவு சகிப்புத்தன்மையும், அன்பும் நிறைந்தவர் மற்றும் இன்னபிற என்றெல்லாம் - உங்கள் சாதனையின் வளர்ச்சியை - நற்பண்பினை அடைப்படையாகக் கொண்டு அளவிடுகிறீர்கள். நீங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தும் கலையில் தேர்கிறீர்கள்; அப்புறம் - காட்டிற்குள் அல்லது மடாலயத்திற்குள் அல்லது இருள் நிறைந்த ஓர் அறைக்குள் தியானிக்கப் பின்வாங்குகிறீர்கள். உங்கள் நாட்களை பிரார்த்தனைகளிலும், கண்காணிப்பிலும் செலவிடுகிறீர்கள். புறவயமாக - உங்கள் வாழ்க்கையை இவ்வாறு எளிமையாக்கிக் கொள்கிறீர்கள். இத்தகைய முன்யோசனைமிக்க மற்றும் திட்டமிடப்பட்ட ஏற்பாட்டின் மூலம் நீங்கள் இவ்வுலகைச் சாராத ஒரு பேரின்பத்தை அடையலாம் என்று நம்புகிறீர்கள்.

ஆனால், புறவயமான கட்டுப்பாடு மற்றும் தணிக்கை செய்யப்பட்ட இசைவு ஆகியவற்றால், உண்மைநிலையை (REALITY) அடைய இயலுமா? புறவயமான எளிமை - வசதிகளைத் தள்ளி வைக்கிற தன்மை - தேவையென்பது தெளிவென்றாலும் - இத்தகைய சைகைகள் (GESTURES) - உண்மைநிலையின் கதவுகளைத் திறக்குமா? வசதிகளிலும் வெற்றிகளிலும் நிரப்பப்பட்டிருக்கும்போது மனமும் இதயமும் பாரம் சுமக்கின்றன. எனவே, பயணிப்பதற்கு சுதந்திரம் தேவை. ஆனால், நாம் ஏன் இத்தகைய புறவயமான சைகைகள் குறித்து மிகவும் சிரத்தை கொண்டிருக்கிறோம்? நாம் ஏன் நமது நோக்கங்களைப் புறவயமான சைகைகளால் சொல்வதற்கு இவ்வளவு ஆர்வமாக உறுதிபூண்டிருக்கிறோம்? இவையெல்லாம் - தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறோமோ (SELF-DECEPTION) என்னும் பயத்தாலா அல்லது மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்னும் எண்ணத்தாலா? நாம் ஏன் நம்முடைய நேர்மை பற்றி நமக்கே நம்பிக்கை ஊட்டிக் கொள்ள விரும்புகிறோம்? மொத்தப் பிரச்னையுமே - 'ஒன்றை' உறுதிப்படுத்துவதிலும், 'ஒன்றாக ஆக வேண்டும்' என்று நமக்குத் தருகிற முக்கியத்துவத்தில் நம்பிக்கை கொள்வதிலுமே இருக்கிறது இல்லையா?

'ஒன்றாக ஆகவேண்டும்' என்கிற வேட்கையே பெருஞ்சிக்கலின் ஆரம்பம் ஆகும். 'ஒன்றாக ஆகவேண்டும்' என்று எப்போதும் நம்மை ஆட்கொள்கிற வேட்கையே - அது அகவயமானது ஆனாலும் சரி அல்லது புறவயமானது ஆனாலும் சரி - நம்மை ஒன்றைக் கொள்ளவும் அல்லது உதறித்தள்ளவும், பண்படுத்தி வளர்க்கவும் அல்லது தடுக்கவும் செய்கிறது. காலம் எல்லாவற்றையும் திருடிக் கொள்கிறது என்பதைப் பார்ப்பதால், நாம் காலமற்ற நிலையைப் பற்றிக் கொள்ள விரும்புகிறோம். பற்றுதல் (ATTACHMENT) அல்லது விலக்குதல் (DETACHMENT) மூலமாக நடக்கிற - 'ஒன்றாக ஆகவேண்டும்' என்கிற இந்தப் போராட்டத்தை - அது நேர்மறையாக இருந்தாலும் சரி அல்லது எதிர்மறையாக இருந்தாலும் சரி - புறவயமான சைகைகள், கட்டுப்பாடுகள் அல்லது பயிற்சிகள் முலம் ஒருபோதும் தீர்க்க முடியாது. ஆனால், இந்தப் போராட்டத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளூதல் - அகவயமான மற்றும் புறவயமான சேகரிப்புகள் மற்றும் அவற்றின் முரண்பாடுகளிலிருந்து - இயற்கையாகவும் தன்னிச்சையாகவும் விடுதலையைக் கொணரும். ஒன்றை விலக்குதலின் மூலம், உண்மை நிலையை அடைய இயலாது; எந்த வழியின் மூலமும் அடைய முடியாத விஷயம் அது. எல்லா வழிகளும், எல்லா முடிவுகளும் பற்றுதலின் ஒரு வடிவமே; உண்மைநிலை பிறக்க அவை யாவும் நிறுத்தப்பட வேண்டும்.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி

மூலம்: Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20208053&format=html






ரு நாள் - 'நான்' என்னும் தன்னுணர்ச்சியிலும், 'எனது' என்னும் தன்னகங்காரத்திலும் பீடிக்கப்பட்ட மூவர் - என்னைச் சந்திக்க வந்தனர். முதலாமவர், உலகின் பந்தங்களையெல்லாம் உதறித் தள்ளிய சன்னியாசி. அடுத்தவர், சகோதரத்துவத்தில் மீளா நம்பிக்கையுடைய, கீழைநாட்டுச் (ஆசியா) சாத்திரங்களில் தேர்ந்த அறிஞர். மூன்றாமவர், அதிசயமான ஆனால் உண்மையான, பரிபூரணமான ஆனால் கற்பனைக் கனவேயன்றி, சாத்தியமே படாத ஒரு மனோராஜ்யத்தை மண்ணிலே மலரச்செய்ய தன்னை 'அர்ப்பணித்துக் கொண்ட' உழைப்பாளர். மூவருமே தங்கள் இலட்சியங்களிலும், அதற்கான பணிகளிலும் விடாமுயற்சியுடையவர்கள். தங்கள் பாதைகளை மறுப்போரைப் பொருட்படுத்தாத, ஏளனமாய் ஏறிடுகிற கண்ணோட்டம் உடையவர்கள். தங்களின் திட நம்பிக்கைகளால் வலுப்பெற்றவர்கள். தங்களின் நம்பிக்கைகளுடன் தங்களை ஆர்வத்துடன் பிணைத்துக் கொண்ட அவர்கள் ஒவ்வொருவரும், ஒருவகையில் தயவு தாட்சண்யம் பார்க்காதவர்கள்.

அந்த மூவரும் - முக்கியமாக மனோராஜ்யத்தை மண்ணிலே சமைக்கப் போகிறவர் - எதையும் இழக்கவும், மறுதலிக்கவும், தங்களையும் தங்கள் நண்பர்களையும் தங்களின் இலட்சியங்களுக்காகக் களப்பலி தரவும் தயாராக இருந்தனர். அவர்கள் - குறிப்பாக சகோதரத்துவத்திலே நம்பிக்கையுடையவர் - பார்ப்பதற்கு அன்பானவர்களாகவும், சாந்த சொரூபிகளாகவும் காட்சியளித்தனர். ஆனால், அவர்கள், எதையும் தாங்கும் இதயமும், 'மற்றவரைக் காட்டிலும் தன் நம்பிக்கையும் தானும் மேலானவர்கள்' என்னும் குணநலனைக் குறிக்கின்ற ஒரு வினோதமான சகிப்புத்தன்மையின்மையும் கொண்டிருந்தனர். தங்களின் இலட்சியங்களுக்காகத் தாங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாகவும், தங்களை அந்த இலட்சியங்களைக் கொண்டு செல்கிற தூதுவர்களாகவும், பரப்புகிற செய்தியாளர்களாகவும் அவர்கள் உணர்ந்தார்கள்; தீர்க்கமாக நம்பினார்கள்.

அடுத்த வாழ்க்கைக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருப்பதாக, சற்று ஆழமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது, சன்னியாசி சொன்னார். உலகின் எல்லா மாயைகளையும் கண்டுணர்ந்தும், லெளகீக வாழ்வினைக் கைவிட்டும் இருப்பதால், இந்த வாழ்க்கை தனக்கு அளிக்கப் பெரிதாய் ஏதுமில்லை என்றும் அவர் பிரகடனம் செய்தார். இந்த வாழ்க்கையில், தன்னிடம் சில தனிமனித பலவீனங்களும், மனத்தை ஒருமுகப்படுத்துவதிலே சில சிரமங்களும் இருப்பதாகவும் தொடர்ந்த அவர், அடுத்த வாழ்க்கையிலே தான் நிர்ணயித்துக்கொண்ட மேலான தவசி ஆகப் போவதாகவும் விவரித்தார்.

அடுத்த வாழ்க்கையில், வேறு ஒருவராக ஆகப் போகிறோம் என்கிற நம்பிக்கையிலேயே அவருடைய ஆர்வமும், உயிர்ப்பும் இருந்தன. நாங்கள் பேசிக்கொண்டிருந்த நேரம் எல்லாம், நாளையப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியுமே அவருடைய வலியுறுத்தல் இருந்தது. எதிர்காலத்தைச் சார்ந்தே எப்போதும் இறந்த காலம் இருக்க முடியும் என்றும், எதிர்காலத்தை வைத்தே இறந்த காலத்தை அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் சொன்னார். நிகழ்காலம் என்பது, எதிர்காலத்திற்கு இட்டுச் செல்லும் வழி மட்டுமே எனவும், நாளையின் பொருட்டே, இன்றின் ஆர்வமும் முக்கியவத்துவமும் என்றும் அவர் சொன்னார். நாளை என்று ஒன்று இல்லையென்றால், முயற்சிக்க வேண்டியதன் அவசியம் என்ன? வெந்ததைத் தின்று விதி வந்தால் மாள்கிற ஜந்துவாகவோ, மென்று தின்று - பின் அதை அசைபோட்டு - பின் மடிகிற பசுவாகவோ இருக்கலாமே?

வாழ்க்கை என்பது இறந்த காலத்திலிருந்து, தோன்றியவுடன் மறைகிற நிகழ்காலம் வழியே, எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும் தொடர்ந்த இயக்கம். எதிர்காலத்தில் நாம் விரும்பியவண்ணம் - ஞானதிருஷ்டியுடனும், வலிமையுடனும், கருணையுடனும் - ஆவதற்கு நிகழ்காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிகழ்காலமும் எதிர்காலமும் தற்காலிகமானவையே எனினும், எதிர்காலமே விடைகள் கொணரக் கூடியது. இன்று என்பது நாளைக்கான ஒரு படிக்கட்டே. எனவே, நிகழ்காலம் குறித்து நாம் பெரிதும் கவலைப்படவோ, பொருட்படுத்தவோ கூடாது. நாளை என்கிற இலக்கில் எப்போதும் தெளிவாக இருந்து, அதற்கான பயணத்தை வெற்றிகரமாக்கிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவர் தொடர்ந்தார். மொத்தத்தில், நிகழ்காலத்தைப் பற்றி அவர் பொறுமையிழந்திருந்தார்.

சகோதரத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தவரோ மெத்தப் படித்தவர். அவர் பேச்சே கவிதைபோல் ஜொலித்தது. அவருடைய அறிவும், அந்த அறிவை வெளிப்படுத்த அவர் தேர்ந்தெடுக்கும் நுட்பமான வார்த்தைகளூம், கேட்போரை ஆகர்ஷித்து மயக்குவன. அவரும் தன் எதிர்காலம் குறித்து, அதன் தெய்வீக அமைப்பு குறித்து, திட்டம் வைத்திருந்தார். தனிமனித விடுதலையே அவருடைய வேட்கை. அந்த வேட்கையும் அதற்கான தெய்வீக திட்டமும் அவர் இதயத்தை நிறைத்தன. அதன் பொருட்டு தன்னுடைய மாணாக்கர்களையெல்லாம் அவர் திரட்டிக் கொண்டிருந்தார். மரணம், அவர் நம்புகிற தெய்வீக அமைப்பின் அருகே ஒருவரைக் கொண்டு செல்கிறது என்பதால், மரணம் ஓர் அழகான விஷயம் என்றார் அவர். தன்னுடைய எதிர்கால தெய்வீக அமைப்பின் மீதான நம்பிக்கையே, அவலங்களும், துயரங்களும் நிறைந்த இந்த நிகழ்கால வாழ்வை சகித்துக் கொள்ள வைக்கிறது என்றும் அவர் சொன்னார்.

உலகை மாற்றுவதும், அழகாக்குவதுமே அவர் நோக்கம். சகோதரத்துவத்தின் மூலமே அது சாத்தியாகும் என்று, அதற்காக அவர் அயராது உழைத்து வந்தார். சகோதரத்துவம் என்கிற நோக்கம் - கொடுமைகள், ஊழல், தூய்மையற்ற தன்மை என்னும் பக்க விளைவுகள் கொண்டுவரக் கூடும் என்றாலும் - செய்ய வேண்டியவை நிறைய மீதமிருக்கிற உலகத்தில், அவை தவிர்க்க இயலாதவை என்றார் அவர். துரதிர்ஷ்டவசமாக, சில எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்த, சில கடினமான வழிகளையும் விளைவுகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். சிரமேற் கொண்டுள்ள பணியே தலையானது. ஏனெனில், அதுவே மனிதகுலத்திற்கு உதவக் கூடியது. அந்தப் பணியை எதிர்ப்போரையும், அதற்கு உதவாதவரையும் நாசூக்காகவும், கடுமையில்லாமலும் அப்புறப்படுத்த வேண்டும். அந்தப் பணியில் ஈடுபடுகிற அமைப்பே தலையானது; அதற்கு இடையூறுகள் வராவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு வேறு பாதைகள் உள்ளன என்று தொடர்ந்த அவர், தானும் தன் அமைப்பும் பின்பற்றுகிற வழியே அத்யாவசியமானது என்றும், அதற்கு தடையாய் இருப்போர் அவர்களுள் ஒருவர் ஆக முடியாது என்றும் சொன்னார்.

மனோராஜ்யத்தை பூமியிலே பிறக்கச் செய்யப் போகிறவரோ, இலட்சியவாதமும் நடைமுறைவாதமும் வினோதமான விகிதங்களிலே கலந்த கலவையாய் இருந்தார். அவருடைய வேதமும் விவிலியமும் பழையவை அல்ல, புதியன. அவர் பேசுகிற புதிய வேதத்திலே அவர் மனப்பூர்வமான நம்பிக்கை கொண்டிருந்தார். புதிய வேதத்தின் வரையறைபடி, எதிர்காலமும், எதிர்காலத்தின் விளைவும் எப்படி இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவருடைய திட்டம், குழப்பம் உண்டாக்குவதும், அமைப்பியல் ரீதியாக ஆயத்தப்படுத்துவதும், பின்னர் செயல்படுத்துவதுமேயாகும். ஊழல் நிறைந்ததும், தூய்மையற்றதுமான தற்போதைய உலகமும், நிகழ்காலமும் அழிக்கப்பட வேண்டியன; அந்த அழிவிலிருந்து புதியதோர் உலகம் படைக்கப்பட வேண்டும். தற்போதைய உலகம், எதிர்கால நல்லுலகிற்காகத் தியாகம் செய்யப்பட வேண்டும். நிகழ்கால மனிதரை விட, எதிர்கால மனிதரே முக்கியமானவர்.

எதிர்கால மனிதரை எப்படிச் செதுக்குவது என்று எங்களுக்குத் தெரியும். அந்த மனிதரின் அறிவையும், மனத்தையும், இதயத்தையும் செழுமையாக வடிவமைக்க எங்களால் முடியும். ஆனால், எந்த நல்லதை செயல்படுத்தவும், நாங்கள் அதிகார பீடத்தை அவசியம் கைப்பற்றியாக வேண்டும். எங்களையும் மற்றவர்களையும் வேள்வித் தீயாக்கி, புதியதோர் உலகத்தை மண்ணிலே படைப்போம். அதற்கு இடையூறாக இருப்பவர்களைக் கொல்வோம். ஏனெனில், எங்களுக்கு வழிகளும் பாதைகளும் முக்கியம் அல்ல. அடையப்போகிற இலக்கும், முடிவும் - எந்த வழியையும், எந்தப் பாதையையும் நியாயப்படுத்துகின்றன என்று தொடர்ந்தார் அவர்.

இறுதியான, நீடித்து நிலைக்கப் போகும் அமைதிக்காக, எந்த வன்முறையையும் பயன்படுத்தலாம். மேன்மையான, நிலைக்கின்ற தனிமனித விடுதலைக்காக, நிகழ்காலத்தில் கொடுங்கோல் ஆட்சியைத் தவிர்க்க இயலாது. எங்கள் கைகளுக்கு அதிகாரம் கிடைக்கும்போது, எல்லாவிதமான சட்டங்களையும், அடக்குமுறைகளையும் பயன்படுத்தி, வகுப்பு பேதங்களோ, வர்ணாசிரம தர்மங்களோ, மதப் பிரிவினைகளோ, மத குருமார்களோ இல்லாத உலகத்தைக் கொண்டு வருவோம் என்று அவர் அறிவித்தார். எங்களின் மையக் கருத்திலிருந்தும், மைய திட்டத்திலிருந்தும் நாங்கள் பிறழ மாட்டோம். ஆனால், எங்களின் செயல்பாடுகளும், பாதைகளும், சூட்சுமங்களும் நடைமுறைச் சிக்கல்களுக்கேற்ப மாறலாம். நாங்கள் திட்டமிட்டு, காய் நகர்த்தி, செயல்பட்டு, எதிர்கால மனிதருக்காக நிகழ்கால மனிதரை பலி கொடுப்போம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார் அவர்.

சன்னியாசி, சகோதரத்துவ மனிதர், மனோராஜ்யத்தின் சேவகர் ஆகிய மூவருமே நாளைக்காகவும், எதிர்காலத்திற்காகவும் வாழ்கின்றனர். உலகின் பொதுப் பார்வையில் அவர்கள் பெரும் பேராசைக்காரர்கள் அல்ல. அவர்களுக்கு பெரும் பட்டங்களோ, செல்வமோ, பதவிகளோ, அங்கீகாரமோ தேவையில்லை. ஆனாலும், ஒரு நுட்பமான, சாதுரியமான வழியிலே அவர்கள் பேராசைக் கொண்டவர்களே. உலகை மாற்றி அமைக்கப் போகிற ஒரு குழுவோடு தன்னை இணைத்துக் கொண்டு தன்னை அடையாளம் காண்பவர் மனோராஜ்யத்தின் மைந்தர். தனிமனித மேன்மையின் அபேஷகர் சகோதரத்துவத்தில் நம்பிக்கை உடையவர். அடுத்த வாழ்க்கையில், தன்னுடைய ஆன்மீக இலக்கை அடைய விரும்புபவர் சன்னியாசி. மூவருமே தாங்கள் எப்படி ஆக வேண்டும் என்பது பற்றியும், தங்களின் சாதனைகள், இலக்குகள் பற்றியும், தங்களின் விரிவாக்கம் குறித்துமே மூழ்கிப் போய் இருக்கிறார்கள். அவர்களது பேராசை - அமைதியையும், சகோதரத்துவத்தையும், மேலான இன்பத்தையும் தடுக்கிறது என்பதை அவர்கள் அறியவோ, உணரவோ இல்லை.

ஆசையும், ஆதிக்கமும் - அது எந்த வடிவில் இருப்பினும் - குழுவிற்காக, அமைப்பிற்காக, தனிமனித மோட்சத்திற்காக, ஆன்மீக சாதனைக்காக என்று எதன் பொருட்டு இருப்பினும் - அவை நிஜமான செயலைத் தாமதப்படுத்துகின்றன. ஆசை என்பது எப்போதும் எதிர்காலத்தைச் சேர்ந்தது. ஒன்றுக்காக ஆசைப்படுவது என்பது நிகழ்காலத்தில் செயலற்றுப் போவதே. நாளையை விட இன்றும், இப்போதும் பெரிதும் முக்கியத்துவம் உடையது. இன்றிலும் இப்போதிலும் எல்லாக் காலங்களும் உள்ளடங்கி உள்ளன. நிகழ்காலத்தைப் புரிந்து கொள்வதே, காலங்களிலிருந்து விடுபட வழியாகும். ஒன்றாக ஆகுதல் என்பதே காலத்தின், துயரத்தின் தொடர்ச்சி. ஒன்றாக ஆகுதல் என்பது ஒன்றாக இருத்தலை உள்ளடக்கியதல்ல. ஒன்றாக இருத்தல் என்பது நிகழ்காலத்தில் இருக்கிறது. ஒன்றாக இருத்தலே மாற்றத்தின் மாபெரும் வடிவம் ஆகும். ஒன்றாக ஆகுதல் என்பது வெறும் முரண்படுகிற தொடர்ச்சிதான். எனவே, அடிப்படையான மாபெரும் மாற்றம் என்பது நிகழ்காலத்திலும், ஒன்றாக இருத்தலிலுமே இருக்கிறது.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி 

மூலம்: Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20203307&format=html