"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619புத்தர் ஒரு சுவாரஸ்யமான ஆள்தான். அவரை எனக்கு நல்லாப் பிடிக்கும். யசோதராவை நித்திரையாக்கிப்போட்டு, நைஸா பின் கதவு வழியா எஸ்கேப்பாகும்போது புத்தர் நினைச்சிருப்பார், 'இண்டையோட இந்த அரசியல் சனியனைத் துறக்கிறேன்' என்பதாய். ஆனால், விதி யாரைவிட்டது? புத்தர் அரசியலைவிட்டுப் பேரரசியலை உருவாக்கிவிட்டார்.

ஆனாலும் புத்தர் அறியார், அழகும் சாந்தமும் நிரம்பிய தனது உருவம் வெறும் எல்லைக் கல்லாகச் சுருங்கிவிட்டதை. இன்றைக்குப் புத்தர் சிலை என்பது இலங்கையில் எல்லைக் கல். விகாரை என்பது காவல் கொட்டில். இதை எல்லாம் பார்த்துக்கொண்டு கையாலாகாதவராக புத்தர் சிரித்துக்கொண்டு இருந்தாலும், நான் அவரைப் பெரிதும் விரும்புகிறேன். அவர் அளவுக்குத் தன்னைப் பிறர் இஷ்டத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிற ஆள் வேறு யாரும் கிடையாது.

கிளிநொச்சியில் முன்பு ஒரு சிங்கள மகா வித்தியாலயம் இருந்தது. அதன் அதிபராக ஒரு பிக்கு இருந்தார். அவரைப் பெரியம்மாக்கள் எல்லாம் 'சாது, சாது' எண்டு கூப்பிடுவினம். நான் அவருடைய வீட்டுக்கு இரண்டொரு தடவை போயிருக்கிறேன். அது ஒரு மாந்திரீகக் குகைபோல இருப்பதாய்த் தோன்றும். நான் ஒரு நோஞ்சான் பொடியனாய் இருந்ததால், சளி, காய்ச்சல், இருமல் அது இதெண்டு எல்லா வருத்தங்களுக்கும் என் மேல் பிரியமான பிரியம் இருந்தது. எனக்கு வருத்தம் வந்தால், அம்மா முதல் கூட்டிக்கொண்டு போற இடம் சுப்பையற்ற சாந்தி கிளினிக். வருத்தம் மாறினோண்ண, முதல் கூட்டிக்கொண்டு போறது சாதுவிட்ட. அவர் தகடு, கூடு எல்லாம் இடுப்பில்வைத்துக் கட்டிவிடுவார். அதுக்குப் பிறகு வருத்தங்கள் அண்டாது எண்டது அம்மாவின் பெரு நம்பிக்கை. வருத்தங்கள் அண்டுதோ இல்லையோ, சாது கட்டின கூடுகளும் தகடுகளும், என் இடுப்பில அண்டு அண்டெண்டு அண்டியது.

வட பகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டார்கள். அநேகமாகப் பிற இனத்தவர்கள் அனைவருமே புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறி விட்டார்கள். ஆனால், பிக்குவை அவர்களால் வெளியேற்ற முடியவில்லை (அவர் தமிழ்ப்பௌத்தரும் அல்ல)அல்லது பிக்கு வெளியேற விரும்பவில்லை. அவர் ஓர் அதிசயம்போல அங்கே நடமாடினார். முள்ளிவாய்க்காலில் புலிகளின் இறுதி வீழ்ச்சி வரைக்கும் பிக்கு வன்னியில்தான் இருந்தார். தன்னைப் புலிகள் நாகரிகமாகவும் மரியாதையாகவும் நடத்தினார்கள் என்பதையும் வெளி உலகுக்குச் சொன்னார். கடைசி வரைக்கும் அம்மாவைப்போல பலபேர் பிக்குவிடம் தங்கள் பிள்ளைகளுக்கு மந்திரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். அதைவிட முக்கியமான விசயம்,
பிக்கு வன்னியில் இருக்கும் வரைக்கும் மொட்டைத் தலையும் காவியுமாகத் தன் அடையாளங்களோடேயே உலாவினார். தன் அடையாளங்கள் எதனையும் துறக்கவும் இல்லை, துறக்க நிர்ப்பந்திக்கப்படவும் இல்லை.

வழித் துணையாய் வந்த புத்தர்!

இலங்கைத் தீவில் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் ஏற்படுகிற சீஸன் சமாதானங்களின் கடைசி சீஸனான 2002-2006 பருவகாலத்தில் நான் வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் அடிக்கடி போய் வந்தேன். புலிகளிடம் பாஸ் காட்டாமலும், ராணுவத்திடம் இலங்கை தேசிய அடையாள அட்டையைக் காட்டாமலும் யாரும் அந்த இடங்களைக் கடந்து போக முடியாது. 2006-ல் குலுக்கிய கைகள் குலுக்கியபடியே இருக்க. உள்ளே சனத்துக்கு எலும்புகள் உடைந்துகொண்டு இருந்தன. தேசிய அடையாள அட்டை இல்லாமல் முகமாலை ராணுவச் சோதனைச் சாவடியைக் கடப்பது என்பது சிம்ம சொப்பனம். அந்த நேரம் பார்த்து எனது தேசிய அடையாள அட்டை தொலைந்துபோனது. ஆனால், அவசரமாக யாழ்ப்பாணம் போக வேண்டும் எண்ட ஒரு இக்கட்டான நிலைமையில் நான் புத்தரைத் துணைக்கு அழைத்தேன். மனுசன் அதே புன்னகையுடன் வழித் துணையாய் வந்தார். ஜெயமோகனின் 'நெடுஞ்சாலைப் புத்தரின் நூறு முகங்கள்' என்ற கவிதைத் தொகுதியில் புத்தர்தான் அட்டைப்படம். அதைக் கையில் எடுத்தபடி முகமாலைச் சோதனைச் சாவடிக்குப் போனேன். அடையாள அட்டை கேட்ட ராணுவ வீரனிடம் 'தொலைந்துவிட்டது' என்றேன் தைரியமாக. அவன் புத்தகத்தில் இருந்த புத்தரையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தான். சிங்களத்தில் ஏதோ கேட்டான். நான் சிரித்தேன். விட்டுவிட்டான். பிறகு, அந்தப் புத்தகத்தையும் வன்னியையும்விட்டு வெளியேறுமாறு யுத்தம் என்னை நிர்ப்பந்தித்தது. ஆனாலும், புத்தரை எனக்குப் பிடித்திருந்தது.

புத்தர் என்னைத் துரோகியாக்கின கதை!

கனநாள் கழிச்சு இலங்கை திரும்பினேன். சந்திக்கு சந்தி மறிச்சு அடையாள அட்டை கேட்காத இலங்கை. ஆனாலும், பதற்றம் உள்ளோடிக்கொண்டு இருக்கிறது. ஒளித்துவைக்கப்பட்டு இருக்கும் ரகசிய உறவைப்போல தமிழன் என்கிற நினைப்பே உள்ளுக்குள் உறுத்துகிறது. நான் இருக்கிற ஆற்றங்கரையில் ஒரு புத்தர். போகவும் வரவும் என்னைப் பாத்துச் சிரிச்சுக்கொண்டே இருந்தார் வெள்ளைப் புத்தர். எனக்கு இவரை இப்பவும் பிடிச்சிருந்தது. திடீரென ஒருநாள் பார்த்தால் புத்தரின் அழகிய புன்னகையைப் போத்தி மூடி இருந்தது காவித்துணி.

கொழும்பில் அரசு சார்பிலான கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டு இருந்தன. மே 18 தமிழனை வெண்ட தினம் எண்ட கொண்டாட்டம். நான் அப்பதான் புத்தரைச் சரியா மதிச்சன். 'அட, இந்த மனுசன் அப்பாவிகளைப் படுகொலை செய்த நாட்களைத் தன் மக்கள் வெற்றிநாளாகக் கொண்டாடுகிற அநியாயத்தைக் காணச் சகியா மல் கண்ணைக் கட்டிக்கொண்டு இருக்குதே' எண்டு. 'இதைத்தவற விடக் கூடாது. விட்டா மனுஷன் நாளைக்குத் திரும்பவும் சிரிக்கத் தொடங்கியிரும்' எண்டு நினைச்சு, உடனே என்ர மொபைலால படம் எடுத்தேன். எடுத்து முடிக்கேக்க ஒருத்தர் என்னை 'மல்லி மல்லி' எண்டு கூப்பிட்டார். அவர் சிங்களர். கோபமாக எதையோ கேட்க, இந்தாள் எதுக்குக் கோவப்படுது என எனக்கு விளங்கேல்ல. அந்தாள் திரும்பவும் மறிச்சுப் பேசிச்சிது. அப்பத்தான் எனக்கு விளங்குச்சு, நான் புத்தருக்குக் குண்டு வைக்கத்தான் போட்டோ எடுக்குறன் எண்டு, அந்த ஆள் நினைச்சிருக்குது. நான் பாட்டுக்கும் கெத்தான ஆள் மாதிரி முறைச்சுக்கொண்டு என்ர பாட்டுக்கு நடக்க வெளிக்கிட்டன். ஆனால், அந்தாள் ரோட்டால போன ஒரு ஓட்டோக்காரனை மறிச்சு தன்ர ஆவே சத்தை அவனுக்கும் பற்றவைக்கும் முயற்சியில் இருந்துச்சு. நான் நடையின்ர வேகத்தைக் கூட்டி. பிறகு, வீட்டடிக்கு வரேக்க எப்படி வந்திருப்பன் எண்டதை நினைச்சுப் பாருங்கோ.

இப்புடி எல்லாம் ரிஸ்க் எடுத்து அந்தாளைப் படமெடுத்து, அதை நான் என்ர ஃபேஸ்புக்கில் போட்டன். உடனே, என்ர நண்பர் ஒருத்தர், 'ஓ உங்களுக்கு இப்பப் புத்தரைத்தானே பிடிக்கும்' எண்டு எழுதினார். எனக்குச் சத்தியமா விளங்கேல்ல, எனக்குப் புத்தரைப் பிடிச்சா அவருக்கு என்ன பிரச்னை எண்டு. புத்தரைப் பிடிச்சிருக்கெண்டு சொல்லுறவன் எல்லாம் தமிழ் விரோதியா? எங்களிடம்தான் புத்தர் என்ன மாதிரியான அரசியலாகிப்போனார்? எனக்கு அப்பத்தான் விளங்கிச்சு, முகமாலைச் சோதனைச் சாவடியில் என்னைக் காப்பாத்தின புத்தர், முகப் புத்தகத்தில் என்னைக் கைவிட்டிட்டார் எண்டு. டக்கெண்டு இன்னொண்டும் எனக்குத் தோணிச்சு. எங்களிட்ட இருக்கிறது ஒரு ஒடுக்கப்படும் இனத்தின்ர வலி மாத்திரமல்ல. இனவாதமும்தான். அது சிங்கள இனவாதத்துக்குக் சற்றேறக் குறையச்சமமானது. கருணையற்றதும், கொடுரமானதும், மன்னிக்க முடியாததுமான இனவாதம் யார் பக்கம் இருந்தால் என்ன? கனவில் வந்த புத்தர் கேட்டார், 'இப்பத் தெரியுதா நான் ஏன் இலங்கைத் தீவின் குடிகளைக் கைகழுவிவிட்டேன் எண்டு?'

புத்தர் ஒரு பிரசாரப் பீரங்கி!

தீவு முழுமையையும் ஆளும் சிங்களவர்களின் கனவானது, துட்டகைமுனுவில் தொடங்குகிறது. இந்து மகா சமுத்திரமும் தமிழனும் தன்னை நீட்டி நிமிர்ந்து தூங்கவிடவில்லை எனும் துட்டகைமுனுவின் அங்கலாய்ப்புதான் தீவைச் சிங்களவர்கள் விழுங்கத் தொடங்கியதன் ஆரம்பம். தமிழர்களோடு சமாதானமாகப் போய்விடச் சொன்னமைக்காக அப்பனையே தூக்கி உள்ளே போட்டவன் முனு. அத்தனை தீவிர இனவாதியான துட்டகை முனுவிடம் கூட வீரர்களை மதிக்கிற பண்பு இருந்ததாகச் சொல்கிறது இலங்கைத் தீவின் வரலாறு. தமிழ் மன்னன் எல்லாளனுடனான இறுதிப் போரின்போது அவனை வஞ்சகமாக வீழ்த்திய முனு, அந்த மாபெரும் வீரனின் சமாதியைத் தன் குடிகள் எல்லோரும் வணங்கிச் செல்ல வேண்டும் எனப் பணித்தான். வழி வழியான சிங்களவர்களின் பழக்கங்களில் எல்லாளன் சமாதிக்கான மரியாதை செய்யும் வழக்கம் இப்போதும் தொடர்கிறது. துட்டகை முனுவின் வாரிசு எனப் போற்றப்படுகிற இன்றைய சிங்கள அரசோ, தமிழ் வீரர்களின் கல்லறைகளைத் தோண்டி எடுக்கிறது.

தீவு முழுமையும் வெற்றியின் நினைவுச் சிற்பங்களாகவும், நினைவுத் தூபிகளாகவும் பிரமாண்டமாக நிறுவப்படுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் மாவீரர் துயிலும் இல்லங்கள் எனப் போற்றப்பட்ட இடங்கள் இப்போது காணாமல் போகின்றன. மாறாக, அரச படைகளின் இறந்துபோன வீரர்களின் நினைவிடங்கள் தமிழர் பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. போராளிகளின் கல்லறைகளைக் கலைத்துப் போடுவதற்கு அரசு சொல்கிற காரணம், 'அது ஒரு கெட்ட காலம். அதை நினைவுகொள்ள வைத்திருக்கும் சகலத்தையும் அகற்ற வேண்டும்' என்பதே. ஆனால், அவை வெறும் கல்லறைகள் இல்லை. உள்ளே இருப்பது தமிழ்ச் சனங்களின் பிள்ளைகள். இப்போது அந்தச் சனங்களுக்குப் பிள்ளைகளும் இல்லை, பிள்ளைகளின் கல்லறையும் இல்லை என்றாகியது. புத்தர், பௌத்தர்களின் கடவுளாக இருப்பினும், தமிழர் பகுதிகளில் அவர் ஒரு பிரசாரகரைப் போலவே பயன்படுத்தப்படுகிறார். படையினர் வழிபடுவதற்கு என சொல்லப்பட்டாலும் அரச மரங்களின் கீழெல்லாம் அவரே வீடு கட்டிக்கொள்வதால், வீட்டுச் சொந்தக்காரர்களான பிள்ளையார், வைரவர் போன்றவர்கள் வீடு கிடைக்காமல் திண்டாடுகின்றனர். பௌத்த விகாரைகளும், ஆங்காங்கே நிறுவப்படும் புத்தரின் சிலைகளும் தமிழர்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தி, 'நீங்கள் வெற்றிகொள்ளப்பட்டவர்கள்' என்பதே.

எல்லா நேரமும் ஏ9

தீவின் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலைக்கு ஈழப் போரில் பெரிய பாத்திரம் உண்டு. வெற்றி, தோல்விகள் பல சமயங்களில் இந்தச் சாலையை வைத்தே முடிவாகின. தசாப்தங்களாக நீண்ட ஈழப் போரில் இந்த நெடுஞ்சாலையின் வழியான பயணம் என்பது சனங்களுக்கு இயல்பானதாக இருக்கவில்லை. ஒருவர் கொழும்பில் இருந்து வன்னியை ஊடறுத்து தரை வழியாக யாழ்ப்பாணம் போக வேண்டும் எனில், படையினரின் சோதனைச் சாவடி, பிறகு, புலிகளின் சோதனைச் சாவடி, பிறகு திரும்பவும் புலிகளின் சோதனைச் சாவடி, மறுபடியும் படையினரின் சோதனைச் சாவடி என நான்கு சோதனைகளைக் கடந்தே ஆக வேண்டும். இது தவிர, எங்கு வேண்டுமானாலும் படையினரால் மறிக்கப்பட்டு சோதனையிடப்படலாம். போர்க்காலத்தில் காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரையும்தான் இந்தச் சாலை திறந்திருக்கும். அதற்குதான் இவ்வளவு பாடு. சில தீவிரமான போர்க் காலங்களில் ஏ9 காலவரையறையற்று இழுத்து மூடப்பட்டதும் உண்டு. ஆனால், இப்போது 24 மணி நேரமும் போக்குவரத்துக்காக வீதி திறக்கப்பட்டு இருக்கிறது. ஓமந்தையில் மட்டும் ஒரு சோதனைச் சாவடியைப் படையினர் இன்னமும் வைத்திருக்கின்றனர்.

கொழும்பில் தமிழர்கள் வாழும் வெள்ளவத்தைப் பகுதியில் இரவு 8 மணியானால் யாழ்ப்பாணம் போகும் பேருந்துகளினால் பாதை நிறைகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாகக் காத்திருக்கின்றனர். போர் இரவுகளில் தூங்கிக்கிடந்த வீதி இப்போது எந்நேரமும் விழித்துக்கிடக்கிறது. சோதனைச் சாவடிகளும், சோதனைகளும் குறைந்து இருக்கின்றன. நான் நாடு திரும்பி இருக்கிற இந்த ஒரு வாரத்தில், என்னிடம் யாரும் அடையாள அட்டைகளைக் கேட்கவில்லை. ஆனாலும், நான் பத்திரமாக அட்டையை எடுத்துச் சட்டைப் பையில் வைத்துக்கொள்கிறேன்.

ஏனெனில், எந்தக் கணமும் நான் சந்தேகிக்கப்படலாம். தீவின் யதார்த்த நிலைமை இதுதான். யாரோ எங்களைக் கண்காணிக்கிறார்கள் என்ற பதற்றம் இன்னமும் மிச்சமிருக்கிறது. அது தொடரும் வரையில், தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நிகழ்ந்து கொண்டு இருக்கும் பகடை ஆட்டம் முடியப்போவது இல்லை!

- த.அகிலன்

ஆனந்த விகடன்


நாடுகளை அடிமைப்படுத்த தற்போது அணு ஆயுதங்களோ, ராணுவப்படைகளோ தேவை இல்லை. அடிமைப்படுத்த வேண்டிய நாட்டின் மக்களை உளவியல் ரீதியாக, கலாச்சார பண்பாட்டு ரீதியாக, பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்தி்னாலே போதுமானது.

உதாரணமாக: இங்கிலாந்திடம் அடிமைகளாக இருந்த சுமார் 16 நாடுகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட்டில் "உலகக் கோப்பை" போட்டி நடத்தி அடிமை மனோபாவத்தை வளர்த்தெடுக்கலாம். "அழகிப்போட்டி" என்ற பெயரில் ஆபாச கூத்துகளை நடத்தி பெண்களை பாலியல் சின்னங்களாக வெளிப்படுத்தலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளான கம்ப்யூட்டர், தொலைக்காட்சி உள்ளிட்ட கருவிகள் மூலம் பகுத்தறிவுக்கு எதிரான அனைத்து அம்சங்களையும் பரப்பலாம். இவற்றின் மூலம் எந்த நாட்டு மக்களையும், அவர்களின் கலாச்சார, பண்பாட்டு அம்சங்களுக்கு எதிராக சிந்திக்க, செயல்பட வைக்க முடியும். இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் பொருளாதாரத்தையும் சுரண்டி அந்நாட்டை சீர்குலைக்க முடியும்.

இந்த செயல்திட்டத்தின் அடிப்படையில்தான் நுகர்வு கலாசாரம் இந்தியா போன்ற நாடுகளின் மீது திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. நமக்கு தேவையோ! இல்லையோ, விளம்பரம் செய்யப்படும் அனைத்து பொருட்களையும் வாங்கி குவிக்க வேண்டும் என்ற கருத்து உளவியல் ரீதியாக நம்மீது திணிக்கப்படுகிறது.

நமது இன்றைய வருமானம், இந்த தேவைகளுக்கு ஈடுகொடுப்பதாக இல்லாவிட்டாலும், கடன் பெற்றாவது அந்த பொருட்களை வாங்கி அனுபவிக்க வேண்டும் என்ற வெறி நம்முள் எழுப்பப்படுகிறது. இதற்கான கடனும் பர்சனல் லோன், கிரெடிட் கார்டு என்பது போன்ற கவர்ச்சியான பெயர்களில் நம்மிடம் திணிக்கப்படுகிறது.

விவசாயிகளோ, சிறு வியாபாரிகளோ தங்கள் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் தொழிற்கடன்களை கேட்டால் விரட்டியடிக்கும் வங்கிகள், ஊதாரித்தனமான செலவுகளுக்கு பல்வேறு பெயர்களில் கடன்களை வாரிவாரி வழங்குகின்றன.

எனவே நியாயமான காரணங்களுக்கு பணம் தேவைப்படும் பலரும் நியாயமான வட்டியில் கடன் கிடைக்காத நிலையில், அநியாய வட்டி என்று தெரிந்தும் இத்தகைய பகல் கொள்ளைக்காரர்களின் பிடியில் சிக்க நேரிடுகிறது.

நேர்மையாக வாழ்ந்து வரும்/வாழ விரும்பும் எந்த ஒரு நபரும் இத்தகைய மாய (கடன்) வலையில் சிக்காத வரையில் தங்கள் நேர்மையை காப்பாற்றிக் கொள்ளமுடியும். ஆனால், எந்த காரணத்திற்காகவோ இந்த கடன் பொறியில் சிக்கிவிட்டால் அவர் விரும்பினாலும் நேர்மையுடன் வாழ முடியாது. இதற்கு காரணம், இந்த கடனுக்கு வங்கிகள் விதிக்கும் அநியாய வட்டியே காரணமாகும். வட்டியே அதிகம் என்ற நிலையில், இந்தக் கடன் தவணையை உரிய காலத்தில் கட்டத்தவறும் பொது மக்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை, பகல் கொள்ளை என்ற வார்த்தையில் கூட அடக்க முடியாது.

இந்த விவகாரத்தில் அரசு என்ன கடமை ஆற்றுகிறது என்று பார்த்தால், வங்கிகள் அடிக்கும் கொள்ளைக்கும் 4 சதவீத சேவை வரி விதித்து, மத்திய அரசு தனது இறையாண்மையை பாதுகாத்துக் கொள்கிறது. இவ்வாறு அரசு அங்கீகாரத்துடன் மக்களை கொள்ளை அடிக்கும் வங்கிகள், மக்களிடம் கடன் வசூல் நடத்தும் விதம், வெள்ளையர் காலத்தில் நடந்த வரி வசூலே மேல் என்று கூறத்தக்க விதத்தில் உள்ளது. வங்கிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ரிசர்வ் வங்கியோ கிரெடிட் கார்டு வணிகத்தில் வங்கிகள் செய்யும் அனைத்து முறைகேடுகளையும் கண்டறிந்து, அவற்றை தவிர்க்கக் கூடிய விதிமுறைகளையும் வகுத்துவிட்டு, அவற்றை நடைமுறைப் படுத்துவதோ, கண்காணிப்பதோ தனது வேலையில்லை என்று ஒதுங்கி விடுகிறது.

எனவே, இந்த விவகாரங்களை கையாள வேண்டிய பொறுப்பு மக்களிடமே உள்ளது. அதற்கு முன்னதாக அந்த கிரெடிட் கார்டு வணிகத்தின் பின்னுள்ள பொருளாதார அரசியல் விவகாரங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பல வங்கிகள் கிரெடிட் கார்டு வணிகத்தில் ஈடுபட்டாலும். இந்த வணிகத்திற்கான மூலதன நிதி அமெரிக்கா போன்ற நாடுகளின் முதலீடாகவே உள்ளது. எனவே, இந்த முதலீட்டிற்கான (அநியாய) வட்டியும் அந்த நாடுகளுக்கே செல்கிறது.

மேலும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொதுமக்கள் வாங்கிக் குவிக்கும் பெரும்பாலான பொருட்களும் அந்நிய நாட்டுப் பொருட்களே! உலகமயம்! தனியார் மயம்! தாராள மயம்! என்ற பெயரில் உள்ளூர் கோலி சோடாவிலிருந்து, தொலைக்காட்சி/கம்ப்யூட்டர் வரையிலான அனைத்து உயர்நுட்ப தொழில்களையும் இழுத்து மூடிவிட்டு அந்நிய தயாரிப்புகளே இந்திய சந்தையில் விற்கப்படும் நிலையில், கிரெடிட் கார்டு மூலமாவும் அந்நிய தயாரிப்புகளே நமது தலையில் கட்டப்படுகிறது என்பதை சொல்லத் தேவையில்லை.

இதற்கேற்ற வகையிலேயே, செய்தி மற்றும் பொழுதுபோக்கு ஊடகங்களும் இந்திய மூளைகளை முடமாக்கி, இந்திய மக்களையே நுகர்வுப் பொறிகளாக்கி அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றன. உலக வங்கி என்ற பெயரில் வளரும் நாடுகளின் அரசுகளை கொள்ளையடிக்கும் சக்திகளே, அந்நாட்டு மக்களையும் கொள்ளையடிக்கவே இதுபோன்ற நூதன, மோசடித் திட்டங்களை வகுக்கின்றன.

போலிப்பகட்டற்ற எளிமையான வாழ்க்கை, யதாரத்த நிலையை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம், எதையும் தெளிந்தறியும் அறிவியல் மனப்பான்மை உள்ளிட்ட மனநிலையை பெறுவதே இத்தகைய சமூக, பண்பாட்டு, கலாசார, பொருளியல் தாக்குதல்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவும் அம்சங்களாகும். அதன் மூலமே சுயசிந்தனை, உண்மையான பகுத்தறிவு, சமூக நோக்கு உள்ளிட்ட குணாதிசயங்களை நாம் பெற முடியும்.

நம்மை அடிமைப் படுத்தும் சமூக, பண்பாட்டு, கலாசார, பொருளியல் சீரழிவுகளுக்கான நுழைவுச் சீட்டே இந்த "கிரெடிட் கார்டு" என்பதை புரிந்து கொள்வதே இத்தகைய பிரசினைகளை தவிர்க்கும் வழியாகும். இந்த புரிதல் மூலமாகத்தான் கிரெடிட் கார்டை நமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதா? அல்லது கிரெடிட் கார்டின் கட்டுப்பாட்டில் நாம் வாழ்வதா? என்ற கேள்விக்கு விடை காண முடியும். இது தனிநபர் பிரசினை அல்ல என்பதையும், இந்த விவகாரம் இந்திய இறையாண்மைக்கே சவால் விடுவதையும் புரிந்து கொண்டால்தான் இந்த மாயவலையை அறுத்தெரியும் பாதை அமைக்க முடியும்.

- உண்மை


லகின் முன்னேறிய நாடுகள் பலவற்றிலும் சுற்றுச்சூழலியலும், அது சார்ந்த சட்டவியலும் பெரு வளர்ச்சி அடைந்து வருகின்றன. குறிப்பாக சுற்றுச்சூழல் சட்டவியலின் அடிப்படை அம்சங்களாக “முன்னெச்சரிக்கை கோட்பாடு” (Precautionary Principle) மற்றும் “சீரழிப்பவரே இழப்பீடு செலுத்த வேண்டும்” (Polluter Pays) ஆகிய கோட்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகின்றன.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடியதும், சூழலை மாசுபடுத்தக்கூடியதுமான பல தொழில்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அமெரிக்காவில் கடந்த 1973ம் ஆண்டுக்கு பிறகு ஒரு புதிய அணுஉலை கூட அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக அழியா ஆற்றல் மூலங்களான சூரிய சக்தி, காற்றாலை போன்றவற்றை பயன்படுத்தி மின்சக்தி தயாரிக்கும் வழிமுறைகள் அதிகரித்து வருகின்றன.

ஆனால் இந்தியாவில் இதுபோன்ற சூழல் பாதுகாப்புக் கொள்கைகள் நடைமுறையில் பின்பற்றப் படுவதில்லை. இதற்கு உதாரணமாக போபால் விஷவாயு விபத்தைக் கூறலாம். 1984ஆம் ஆண்டில் நடந்த இந்த விபத்தின் காரணமாக சுமார் 15 ஆயிரம் உயிரிழந்துள்ளனர். பல்வேறு விதங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டுகிறது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தனியாக நீதிமன்றத்தை அணுகக்கூடாது என்று கூறிய மத்திய அரசு, பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக அரசே வழக்கு தொடுக்கும் என்று அறிவித்தது. ஆயினும் இம்மக்களுக்கான தீர்வு விபத்து நடந்து 25 ஆண்டுகள் கழிந்த பின்னரும் முழுமையாக கிடைக்கவில்லை. இறையாண்மை மிக்க இந்தியாவின் நாடாளுமன்றமுமம், நீதி மன்றை அமைப்புகளும், பிற அதிகார அமைப்புகளும் போபால் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகமே இழைத்து வருகின்றன. போபால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் வாரிசுகளும் இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்தினால் தடியடிகளும், சிறைத்தண்டனைகளுமே பரிசாக வழங்கப்படுகின்றன.

இந்த விபத்திலிருந்து இதுவரை இந்தியா எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. நாட்டிலுள்ள அணுமின் நிலையங்களும் போபாலுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. ஆபத்து மிகுந்த இந்த அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானவையோ, சிக்கனமானவையோ, ஆற்றல்மிகுந்தவையோ அல்ல என்பதை சூழலியல் நிபுணர்கள் பலமுறை நிரூபணம் செய்துள்ளனர். எனினும் இந்த அணுஉலைகளை தொடர்ந்து இயக்குவதில் அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

இன்றைய நிலையில் அணுமின் நிலையங்களில் விபத்தே ஏற்படாது என அரசு உட்பட யாரும் உறுதி கூற முடியாது. அணுமின் நிலையங்கள் இயங்குவது நிகழ்கால ஆபத்து. அணுமின் நிலையத்தில் வெளியாகும் கழிவுகள் எதிர்காலத்தில் பல்லாயிரம் வருடங்களுக்கான ஆபத்தாக விளங்கும். இதை அணுசக்தி ஆதரவாளர்கள் யாரும் மறுப்பதும் இல்லை. இவ்வளவு ஆபத்தான அணுசக்தி தேவைதானா? என்ற கேள்விக்கு நேரடியான பதில் அளிப்பதும் இல்லை.

இந்நிலையில் அணுமின் உலைகளில் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு அளிப்பது குறித்த சட்டம் ஒன்றை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. மனிதர்களுக்கு பாதிப்பே இல்லாத வகையில் மின்சக்தி தயாரிக்கும் வழியை கண்டுபிடிப்பதைவிட்டு இழப்பீடு தருவதற்காக ஒரு சட்டமா என்று சினம் கொள்ளாதீர்கள். இது நீங்கள் நினைப்பதைப்போல பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான சட்டம் அல்ல.

அதற்கு பதிலாக பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, குறிப்பாக அமெரிக்க அணுசக்தி நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கும் நயவஞ்சக திட்டத்தை, ஒரு சட்டமாக மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது. இந்த சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு இதற்கான தேவை குறித்து பார்ப்போம்.

இந்தியாவில் இயங்கும் அனைத்து அணு உலைகளையும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய அணுசக்திக் கழகம் என்ற அமைப்பே இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்துடன் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் அரசுகளோ, நிறுவனங்களோ இணைந்து செயல்படுகின்றன. இவற்றில் அமெரிக்காவே இந்தியாவில் அதிகம் முதலீடு செய்வதற்கு முனைந்து செயல்படுகிறது. இந்த முதலீட்டுத் தொகையும், அதற்குரிய லாபமும் சிறிதும் குறையாமல் கிடைக்கவேண்டும் என்று அமெரிக்க நிறுவனங்கள் விரும்புகின்றன. விபத்துகள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதன் மூலம் தங்கள் வருவாய்க்கு இழப்பு ஏற்படக்கூடாது என்று இந்த நிறுவனங்கள் கருதுகின்றன. எனவே விபத்துகளுக்கான இழப்பீடு வழங்குவதிலிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நிபந்தனை விதித்தன.

இதையடுத்து, “The Civil Liability for Nuclear Damage Bill, 2010” என்ற பெயரிலான “அணுஉலை விபத்து இழப்பீட்டு வரம்பு நிர்ணயிக்கும் சட்ட” த்தை கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த சட்டத்தின் 6வது அம்சம் அணு உலை விபத்துக்கான இழப்பீட்டிற்கான உச்சவரம்பு அதிகபட்சமாக சுமார் ரூபாய் இரண்டாயிரத்து நூறு கோடி (2100 கோடி ரூபாய்) என்று நிர்ணயம் செய்கிறது. ஆனால் அமெரிக்காவில் இதுபோன்ற விபத்து ஏற்பட்டால் இதைப்போல சுமார் 23 மடங்கு இழப்பீடு வழங்கப்படும். இந்த 2100 கோடி ரூபாயிலும் வெறும் 500 கோடி ரூபாயை மட்டும் அந்த அணுஉலைக்கான தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனங்கள் செலுத்தினால் போதுமானது. (அதையும் அந்த நிறுவனங்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் வசூலித்துவிடும் என்பது வேறு கதை!) மீதித் தொகையான சுமார் 1587 கோடி ரூபாயை இந்திய அணுசக்தி கழகம் என்ற பொதுத்துறையின் பெயரால் இந்திய அரசு வழங்கி விடும். இதற்கான தொகை எங்கிருந்து வரும் என்று கேட்கிறீர்களா இந்திய குடிமக்கள் கட்டும் பல்வேறு வரிகளிலிருந்து திரட்டப்படும் அரசு நிதிதான், இந்தியர்களுக்கு பேரழிவு ஏற்படும்போது வெளிநாட்டு நிறுவனங்களை காப்பாற்றும் நோக்கத்தில் செலவழிக்கப்படும்.

இது போன்ற பேரழிவுகளுக்கு வெளிநாட்டு தனியார் நிறுவனங்களே காரணம் என்று நிரூபிக்கப்பட்டால்கூட அந்த நிறுவனத்துக்கு எதிராக அந்நிறுவனம் அமைந்துள்ள நாட்டின் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் உரிமையும் இந்திய குடிமக்களுக்கு இந்த சட்டத்தின் வாயிலாக மறுக்கப்படுகிறது. (பிரிவு 17)

உண்மையைச் சொல்லப்போனால் இந்த சட்டம், அணு உலை விபத்து ஏற்படும் பட்சத்தில் அது குறித்து விசாரிக்கும் அதிகாரத்தை இந்திய நீதிமன்றங்களிடம் இருந்தே பறித்து விடுகிறது. (பிரிவு 35)

விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிப்பதற்காக அணு உலை பாதிப்பு இழப்பீடு ஆணையம் அமைக்கப்படும். இதன் ஆணையர்கள் மேற்கொள்ளும் முடிவுகளே இறுதியானவை. இதற்கு எதிராக நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது.

ஒரு அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அதன் தீய விளைவுகள் பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கும். இம்மாதிரியான விளைவுகள் குறித்து இதுவரை எந்த முழுமையான ஆய்வும் இதுவரை நிறைவு பெறவில்லை. இந்நிலையில் இந்திய அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு கோருவதற்கு வெறும் பத்தாண்டு காலத்தை மட்டுமே காலக்கெடுவாக விதிக்க இந்த புதிய சட்டம் வழி வகுக்கிறது. அதாவது அணுஉலை விபத்து ஏற்பட்ட தினத்திலிருந்து 10 ஆண்டுகளுக்குள் மட்டுமே இழப்பீடு கோர முடியும் என்று இந்த சட்டம் வரம்பு விதிக்கிறது. (பிரிவு 18) விபத்து ஏற்பட்டு அதன் விளைவான தீய விளைவுகள் 10 ஆண்டுகள் கழித்து தெரியவந்தால் அதற்காக இழப்பீடு கோர முடியாது என்பதுதான் இந்தப் பிரிவின் கருப்பொருள்.

இது போன்று இந்திய மக்களுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றுவதற்கான சர்வதேச கடமைகள் ஏதும் இந்தியாவிற்கு இல்லை என்ற போதிலும் அமெரிக்க எஜமானர்களுக்கு அடிபணிந்து நடக்கும் இந்திய ஆட்சியாளர்களின் பணிவு வேட்கையே இத்தகைய சட்டத்தை இங்கு கொண்டு வரமுயற்சிக்கிறது.

இந்த சட்டத்திற்கான முன்வடிவை பரிசீலனை செய்த பிரபல அரசியல் அமைப்புச் சட்டநிபுணர் சோலி சொராப்ஜி, “இந்திய அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத்தின் பல முன்மாதிரி தீர்ப்புகளுக்கும் எதிரான இந்த சட்டத்திற்கான தேவை எதுவும் இன்று இல்லை. இந்த சட்டம் யாருடைய நிர்பந்தத்தில் கொண்டு வரப்படுகிறது என்பதும் புரியவில்லை!” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகள் அணுசக்தி தொடர்பான பல்வேறு வர்த்தகங்களை செய்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் கொண்டுவர முயற்சிக்கப்படும் இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தைப்போல ஐரோப்பிய நாடுகளிலோ, வேறு வளரும் நாடுகளிலோகூட எந்த சட்டமும் இல்லை.

சாமானியர்களுக்கும் சட்டத்துக்கும் தொடர்பில்லை என்ற தவறான கருத்து சமூகத்தில் உள்ளது. வழக்கறிஞர்கள் சட்டத்தை பயன்படுத்துகின்றனரே தவிர, சட்டத்தை உருவாக்கும் பணி சாமானிய மக்களின் பெயரால், மக்களின் பிரதிநிதிகளால்தான் நடைபெறுகிறது. எனவே சமூக ஆர்வம் கொண்ட எவரும் சட்டத்தை திறனாயும் நோக்கத்தில் படித்தே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம்! மேலும் மக்களுக்கு எதிரான இது போன்ற சட்டங்களை அனைத்து தளங்களிலும் எதிர்ப்பது, நமது சந்ததிகளுக்கு நாம் செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையாகும்!

PEOPLE'S LAW


சிருஷ்டியின் நோக்கம் என்ன?

சிருஷ்டியின் நோக்கத்தை கண்டறிவதிலேயே உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் உள்ளதா?

சிருஷ்டி என்ற சொல்லுக்கு நீங்கள் என்ன பொருள், அர்த்தம் அளிக்கிறீர்கள் நம்முடைய வாழ்வின் பொருள் என்ன? நோக்கம் என்ன? நீங்கள் ஏன் வாழ்கிறீர்கள். பள்ளிக்கு சென்று படித்து தேர்வில் தேர்ச்சி பெறுகிறீர்கள்?

பெற்றோர்களுக்கும்-குழந்தைகளுக்கும் இடையில் உள்ள உறவு மற்றும் கணவன்-மனைவிக்கு இடையில் உள்ள உறவு இவற்றின் பொருள், நோக்கம் என்ன? என்ற கேள்வியை நீங்கள் கேட்கும் போது இங்கு கூறியவைகளை தான் குறிப்பிடுகிறீர்களா? இவை போன்ற கேள்விகளை நீங்கள் எப்போது கேட்கிறீர்கள்? உங்களுக்குள் அதாவது உங்கள் உள்ளத்தில் உண்மைகளை தெளிவாக காண முடியாத போது நீங்கள் குழப்பத்தில் இருக்கும் போது, துன்பப்படும் போது, உங்கள் உள்ளத்தில் இருள் சூழ்ந்திருக்கும் போது. இந்த கேள்விக்கான தீர்வை உங்களால் காணமுடியாத போது, நீங்கள் இது போன்ற கேள்வியை கேட்கிறீர்கள். வாழ்வின் சிருஷ்டியின் நோக்கத்தை பொருளை அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள்.

வாழ்வின் பொருள், நோக்கம் என்ன என்பதை உங்களுக்கு விளக்கி கூறுதவற்கு இங்கு பலர் இருக்கிறார்கள். வாழ்வின் சிருஷ்டியின் நோக்கத்தை பற்றி புனித நூல்கள் கூறுவதை உங்களுக்கு அவர்கள் சொல்வார்கள். புத்தி நுட்பமுள்ள, சாமர்த்தியமுள்ள மனிதர்கள் வாழ்விற்கும், சிருஷ்டிக்கும் பல விதமான அர்த்தங்களையும், நோக்கங்களையும் கண்டு பிடித்துக்கொண்டே இருப்பார்கள். அரசியல் குழுக்களுக்கும், கட்சிகளும் ஒரு வித நோக்கத்தை கொண்டுள்ளன. மத அமைப்புகள் மற்றொரு நோக்கத்தை கொண்டிருக்கிறது. நீங்களே குழப்பத்தில் இருக்கும் போது உங்கள் மனம் குழம்பி இருக்கும் போது வாழ்வின் பொருளை, நோக்கத்தை எவ்வாறு நீங்கள் கண்டறீவீர்கள்? நிச்சயமாக நீங்கள் குழப்பத்தில் இருக்கும் வரையில் உங்கள் கேள்விக்கு நீங்கள் பெறும் விடையும் தெளிவில்லாத குழப்பமான பதிலாகத்தான் இருக்கும்.

உங்கள் மனம் அமைதி இல்லாமல் கலக்கத்திலும், குழப்பத்திலும் சிக்கியிருந்தால், உங்கள் கேள்விக்கு நீங்கள் குழப்பம், கக்கம், அச்சம் என்ற திரையின் மூலமாகவே பதிலை பெறுவீர்கள். ஆகவே உங்கள் கேள்விக்கு நீங்கள் பெறும் பதில் தெளிவான பதிலாக இருக்க முடியாது. ஆகவே வாழ்வின் பொருள் என்ன, நோக்கம் என்ன? என்ற கேள்வி கேட்பதை காட்டிலும், உங்களுக்குள் உங்கள் மனதில் இருக்கும் குழப்பத்தை நீக்குவதே முக்கியமான செயலாகும். மனதில் இருக்கும் குழப்பத்தை தீர்க்காமல் வாழ்வின் சிருஷ்டியின் பொருள் என்ன, நோக்கம் என்ன? என்று கேள்வி கேட்பது ஒரு பார்வையற்றவர் ஒளி என்றால் என்ன? என்று கேட்பதை போன்றதாகும்.

ஒளியின் தன்மையை பார்வையற்ற ஒருவருக்கு நான் விளக்கி கூறுவதை அவருடைய கருத்திற்கு ஏற்றவாறு புரிந்து கொள்வார். ஆனால் அவர் கண்ணில் ஒளிவந்த பிறகு, அவருக்கு பார்வை வந்த தருணத்திலிருந்த அவர் ஒளி என்றால் என்ன? என்ற கேள்வியை எழுப்பவே மாட்டார். ஏனென்றால் எங்கும் ஒளி நிறைந்திருக்கிறது. அவர் ஒளியை காண்கிறார். அதே போல் உங்கள் மனதிற்குள் இருக்கும் குழப்பத்தை உங்களால் தீர்க்க முடிந்தால் வாழ்வின் வாழ்ந்த பொருளை, நோக்கத்தை நீங்கள் தெளிவாக காண்பீர்கள். வாழ்வின் பொருள் என்ன, நோக்கம் என்ன என்று எவரையும் நீங்கள் கேட்க வேண்டி இருக்காது. வாழ்வின் நோக்கத்தை நீங்கள் எங்கும் தேட வேண்டி இருக்காது.

குழப்பத்திலிருந்து விடுபட குழப்பத்தை ஏற்படுத்தும் மூலக்காரணத்தை நீங்கள் காண வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். மனக்குழப்பத்தின் மூலகாரணத்தை நாம் அறிவோம். சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்ற உந்துதல், ஏதோ ஒன்றாக ஆக வேண்டும் என்ற பேரவா, வெற்றி அடைய ஆசை, மற்றவரை போல் இருக்க நினைப்பது போன்றவைகளால் தன்னை பெரிதாக்கி கொள்ளும் நான் என்ற உணர்வில் தான் குழப்பத்தின் மூல காரணம் வேரூன்றி இருக்கிறது. பொறாமை, பேராசை, அச்சம் போன்றவை இதன் விளைவாகும். உங்கள் மனதில் குழப்பம் இருக்கும் வரையில் நீங்கள் உங்களுக்கு வெளியில் வாழ்வின் பொருள் என்ன? என்ற கேள்விக்கான விடையை தேடுகிறீர்கள். ஆனால், உங்கள் மனதில் குழப்பம் நீங்கியவுடன் வாழ்வின் பொருளை, ஆழ்ந்த அர்த்தத்தை நீங்கள் அறிவீர்கள்.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி


துன்பம் என்பது, தன்னுணர்வற்ற மனதின் ஒரு நிலை. நாம் என்ன செய்கிறோம், நாம் என்ன நினைக்கிறோம், நாம் என்ன உணர்கிறோம் என்கின்ற விழிப்புணர்வு இல்லாததால், நாம் துன்பம் அடைகிறோம். அதனால்தான் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் நம்முடனேயே முரண்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமது செயல் ஒரு திசையில் செல்கிறது, சிந்தனை மற்றொரு திசையில் செல்கிறது, உணர்வுகள் வேறு எங்கோ செல்கிறது. நாம் பிரிந்து பிரிந்து செல்கிறோம். நாம் மேலும் மேலும் பிளவுபட்டுச் செல்கிறோம். அதுதான் துன்பம் ஆகும். நாம் நமக்குள் ஒருங்கிணைந்து இருப்பதில்லை. நாம் நமக்குள் ஒற்றுமையை இழந்து விட்டோம். நாம் முற்றிலுமாக மையத்தில் இல்லாமலும், வெறுமனே வெளிவட்டத்திலுமாக இருக்கிறோம். எனவே, இயல்பாகவே ஒத்திசைவு இல்லாததொரு வாழ்க்கை துன்பம் நிறைந்ததாகவும், துக்கமானதாகவும், ஏதோ ஒருவித சுமை போன்றும், ஒரு கஷ்டமாகவும் இருக்கிறது. அதிகபட்சமாக, ஒருவர் இந்த துன்பத்தை கொஞ்சம் வேதனை குறைந்ததாக ஆக்கிக் கொள்ளலாம். மேலும், வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான வலி நிவாரணிகள் கிடைக்கின்றன.

வெறும் போதைப் பொருளும், மது வகைகளும் மட்டுமல்ல; இந்த மதங்களும் கூட ஒருவிதத்தில் போதை தரக்கூடிய அபின் போன்றதுதான். மேலும், இயல்பாகவே எல்லா மதங்களும் போதைப் பொருட்களுக்கு எதிராக உள்ளன. ஏனெனில் அவைகளும் அதே சந்தையில்தான் தங்கள் பொருட்களை விற்கின்றனர். எனவே, அவர்கள் தங்களின் போட்டியாளர்களுக்கு எதிராக உள்ளனர். மக்கள் அபின் போன்ற போதைபொருட்களை எடுக்க ஆரம்பித்தால், அவர்கள் சமயவாதிகளாக இருக்க மாட்டார்கள். அவர்கள், சமயவாதிகளாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள், தங்களின் போதைப் பொருளைக் கண்டு கொண்டுவிட்டனர். மேலும், அபின் போன்ற போதைப்பொருட்கள் விலை மலிவானவை. அதில் நமது ஈடுபாடு கொஞ்சம் இருந்தால் போதுமானது. மக்கள் மரிஜூவானா, எல்.எஸ்.டி போன்ற மிகவும் நேர்த்தி செய்யப்பட்ட போதைப்பொருட்களை உபயோகிக்கும்போது, இயல்பாகவே அவர்கள் சமயவாதிகளாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் சமயம் என்பது மிகவும் ஆதிகாலத்து போதை மருந்து. எனவேதான் எல்லா மதங்களும் போதைப் பொருட்களுக்கு எதிராக உள்ளன. அதற்குக் காரணம், உண்மையிலேயே அவைகள் போதைப்பொருட்களுக்கு எதிரானதாக இல்லை. அதற்குக் காரணம், போதைப் பொருட்கள், மதங்களின் போட்டியாளர்கள் என்பதுதான்; எனவே மக்கள், போதைப் பொருட்களை உபயோகிப்பதற்கு தடை ஏற்படுத்திவிட்டால், அவர்கள் நிச்சயமாக இந்த மதகுருக்களின் வலையில் விழுந்துதான் தீர வேண்டும். ஏனெனில், அப்போது மதங்களை விட்டால், வேறுவழி கிடையாது. அது ஒருவித ஏகபோகத்தின் வழி. அதாவது அவர்களின் மதம் என்னும் போதைப் பொருள் மட்டுமே சந்தையில் இருக்க வேண்டும் என்பதும், மற்றவை யெல்லாம் சட்டவிரோதமானவை என்பதுமாகும்.

மக்கள் துன்பத்தில் வாழ்கிறார்கள். அதில் இருந்து விடுபட இரண்டு வழிகள்தான் உள்ளன. அவர்கள் தியானம் செய்பவர்களாக, உஷாரானவர்களாக, விழிப்புணர்வு உள்ளவர்களாக, தன்னுணர்வு பெற்றவர்களாக ஆக முடியும். ஆனால், அது மிகவும் கடினமான வேலை. அதற்கு தைரியம் தேவை. அல்லது இன்னொரு மலிவான வழி என்னவென்றால், நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்களோ, அதைவிட இன்னும் அதிகமான தன்னுணர்வு இழந்த நிலைக்கு நீங்கள் சென்றுவிட்டு, அந்த நிலையில் நீங்கள் அந்த துன்பத்தை உணராமல் இருக்க முடியும். உங்களை முற்றிலும் புலன்நுகர்ச்சி அற்றவர்களாக ஆக்குகின்ற ஒரே ஒரு பொருளை, ஏதோ ஒரு மயக்க மருந்தை, ஏதோ ஒரு வலி நிவாரணியை எடுத்துக் கொள்வதால், அது உங்களை தன்னுணர்வு இழந்த நிலைக்கு கொண்டு சென்றுவிடுவதால், நீங்கள் அந்த தன்னுணர்வு அற்ற நிலையில் உங்களது கோபம், துன்பம், அர்த்தமற்ற தன்மை இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இந்த இரண்டாவது வழி, உண்மையான வழி அல்ல. இந்த இரண்டாம் வழி, உங்களது துன்பத்தை கொஞ்சம் சௌகரியமானதாகவும், கொஞ்சம் தாங்கக்கூடியதாகவும், கொஞ்சம் வசதியானதாகவும் மட்டுமே ஆக்கக் கூடியது. ஆனால் இது உங்களுக்கு உதவிகரமாக இருக்காது. இது, உங்களை மாற்றியமைக்காது. உங்களுக்குள் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால், அது தியானத்தால் மட்டுமே முடியும். ஏனெனில் தியானம் ஒன்றுதான் உங்களை விழிப்புணர்வு உள்ளவர்களாக ஆக்குகின்ற வழி. என்னைப் பொருத்தவரையில், தியானம் ஒன்று மட்டுமே உண்மையான மதமாகும். மற்றவை யெல்லாம் ஏமாற்று வித்தை. மேலும், கிறிஸ்துவம், இந்து, முகமதியர், சமணம், பௌத்தம் என வெவ்வேறு பெயர்களில் அபின் உள்ளது. ஆனால் அவைகள், வெறும் தொழிற் சின்னங்கள் மட்டுமே. பாத்திரங்கள் தான் வேறு வேறானவை. ஆனால் அவற்றில் உள்ள பொருட்கள் ஒன்றுதான். அவைகள் எல்லாம், நீங்கள் உங்கள் துன்பத்தில் எப்படியோ உங்களை சரி செய்து கொண்டு செல்கின்ற தொரு வழிக்கு உதவுகின்றன.

இங்கு, என்னுடைய முயற்சி என்னவென்றால், உங்களை இந்த துன்பத்தைக் கடந்து அதற்கு அப்பால் கொண்டு செல்வதுதான். நீங்கள் துன்பத்தை நீங்கள் விரும்பிய வகையில் மாற்றி அமைத்துக் கொள்ள மட்டுமே முடியும் என்பது கிடையாது. நீங்கள் இந்த துன்பத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெறுகின்ற ஒரு சாத்தியம் உள்ளது. ஆனால், அந்தப் பாதை கொஞ்சம் கடினமானது. ஆனால் அந்தப் பாதை சவாலானது. அதில் நீங்கள், உங்களது உடல் குறித்த விழிப்புணர்வுடன் மட்டுமல்ல; அதனால் நீங்கள் செய்கின்ற காரியங்கள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

ஒரு நாள் புத்தர் தனது காலை சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அந்த நாட்டின் அரசரும் அதைக் கேட்பதற்கு வந்திருந்தார். அவர், புத்தரின் முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தார். மேலும் அவர், தனது பெருவிரலை ஆட்டிக் கொண்டே இருந்தார். புத்தர், பேசுவதை நிறுத்திவிட்டு, அரசரின் பெருவிரலைப் பார்த்தார். புத்தர் தனது பெருவிரலைப் பார்ப்பதைக் கண்டவுடன், அரசர் தனது பெருவிரல் அசைப்பதை நிறுத்திவிட்டார். புத்தர் தனது பேச்சை தொடர்ந்தார். அரசரும் மீண்டும் தனது பெருவிரலை அசைக்க ஆரம்பித்தார். உடனே புத்தர் அவரிடம், “ நீங்கள் ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அரசர், “நீங்கள் பேசுவதை நிறுத்திவிட்டு, எனது பெருவிரலை பார்க்கும் போதுதான் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்கின்ற விழிப்புணர்வு எனக்கு வருகிறது. மற்றபடி நான் எனது தன்னுணர்வுடன் இருப்பதே இல்லை.” என்று பதில் கூறினார். அதைக் கேட்ட புத்தர், “அது உங்களது பெருவிரல்தானே! அப்படியிருக்கும்போது, அது அசைவதைக் கூட உங்களால் தன்னுணர்வுடன் கவனிக்க முடியாதா? இப்படியிருந்தால், நீங்கள் ஒருவரைக் கொலை செய்துவிட்டும் கூட அதைப் பற்றி எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லாமலும்கூட இருக்கலாமே!” என்றார்.

மேலும், இது போன்றதொரு வழியில் தான் மக்கள் கொலை செய்யப் படுகின்றனர். மேலும், கொலைகாரர்களும், தாங்கள் என்ன செய்கிறோம் என்கின்ற தன்னுணர்வு இல்லாமல் செய்கின்றனர். நீதிமன்றங்களில் அநேகமுறை கொலை செய்தவர்கள் தாங்கள் கொலை செய்ததை முழுமையாக மறுத்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்கள் நீதிமன்றத்தை ஏமாற்றுவதாகத் தான் எண்ணப் பட்டது. ஆனால் சமீபகால கணடுபிடிப்புகள் மூலம், அவர்கள் ஏமாற்றவில்லை என்றும், அவர்கள் அதை தங்களது சுயநினைவு இழந்த நிலையில் செய்து விடுகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. அந்த நொடிப் பொழுதில், அவர்கள் அந்த அளவுக்கு ஆக்ரோஷத்துடனும், அந்த அளவுக்கு கோபத்துடனும் இருந்துவிட்டதால், அவர்கள் அந்த ஆக்ரோஷத்தின் பிடியில் அகப்பட்டுக் கொள்கின்றனர். மேலும் நீங்கள் ஆக்ரோஷம் அடையும்போது உங்களது உடலில் சில வெறியூட்டும் விஷங்கள் சுரக்கின்றன. அதனால் உங்களது இரத்தம் வெறியூட்டப் படுகிறது. ஆக்ரோஷத்தில் இருப்பது என்பது தற்காலிகமாக புத்தி சுவாதீனம் இல்லாமல் இருப்பதைப் போன்றது. இதனால் அந்த மனிதர் அந்த சம்பவத்தைப் பற்றி முழுமையாக மறந்துப் போய்விடுவார். ஏனெனில் அவருக்கு அந்த சம்பவம் எப்படி நடந்தது என்கின்ற விழிப்புணர்வு இருக்காது. இப்படித்தான் மக்கள் காதல் வசப்படுவதும், ஒருவரை ஒருவர் கொலை செய்வதும், தற்கொலை செய்து கொள்வதும், இது போன்ற காரியங்களைச் செய்வதும் நடக்கிறது.

எனவே, நீங்கள் உங்களது உடல்குறித்து நிறைகவனத்துடன், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது தான் முதல்படி. கொஞ்சம் கொஞ்சமாக ஒருவர் தனது ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு நகர்வையும் குறித்து விழிப்புணர்வு கொள்ள முடியும். மேலும் இப்படி நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பித்துவிட்டால், ஒரு அதிசயம் நடக்கும்; இதற்கு முன்புவரை நீங்கள் செய்துவந்த அநேக காரியங்கள் வெறுமனே மறைந்து போகும். உங்களது உடல் ஓய்வுடன் இருக்கும். உங்களது உடல் ஒத்திசைந்துவிடும், உங்களது உடலில் ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும், உங்களது உடலில் ஒரு மெல்லிய சங்கீதம் துடிக்கும்.

அதன்பின்னர், உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பியுங்கள். நீங்கள், உங்களது உடல் மீது செலுத்திய விழிப்புணர்வை இப்போது அப்படியே உங்களது எண்ணங்களின் மீது செலுத்த வேண்டும். உங்களது எண்ணங்கள், உங்களது உடலைவிட மிகவும் கண்ணுக்கு புலப்படாதவை. மேலும், அவை அபாயகரமானதும்கூட. மேலும், நீங்கள் உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வு பெற்றுவிட்டால், அதன்பின்னர் உங்களுக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து, நீங்கள் ஆச்சரியமடைவீர்கள். எந்த நேரத்திலும் உங்கள் மனதினில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களை எழுத ஆரம்பித்தால், உங்களுக்கு அது மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கும். “இதுதான் எனக்குள் நடந்து கொண்டிருக்கிறதா?” என்று நீங்கள் அதை நம்ப மாட்டீர்கள். வெறும் பத்து நிமிடங்கள் வரை உங்களுக்குள் என்னென்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்று வெறுமனே குறித்து வைத்துப் பாருங்கள். அப்போது வேண்டுமானால், யாரும் உள்ளே வராதபடிக்கு கதவை மூடி தாழிட்டுக் கொள்ளுங்கள். எனவே, அப்போது நீங்கள் நேர்மையுடன் உங்களுக்குள் ஓடுகின்ற எண்ணங்களை எழுத முடியும். மேலும் எழுதி முடித்து அதை படித்த பின்னர், அதை தீயிட்டுக் கொளுத்துவதற்கு ஒரு தீப்பெட்டியையும் தயாராக வைத்திருங்கள். எனவே உங்களைத் தவிர வேறு யாரும் அதில் உள்ளதை அறிய முடியாது. அதனால் அப்போது நீங்கள் நேர்மையுடன் இருந்து, உங்களுக்குள் என்னென்ன எண்ணங்கள் வருகின்றனவோ, அதையெல்லாம் எழுதி விட வேண்டும். அதை திரித்துக் கூறாதீர்கள், அதை மாற்றி விடாதீர்கள், அதை வெட்டிச் சுருக்கிவிடாதீர்கள். அதை அப்படியே நிர்வாணமானதாக காகிதத்தில் எழுதுங்கள். சரியாக அப்படியே எழுதுங்கள்.

அதன்பிறகு, பத்து நிமிடங்கள் கழித்து அதைப் படித்துப் பாருங்கள். அப்போது நீங்கள் உங்களுக்குள் ஒரு பைத்தியக்கார மனம் இருப்பதைக் காண்பீர்கள். இப்படிப்பட்ட முழு பைத்தியக்காரத்தனம் ஒன்று நமக்குள் ஒரு அடி நீரோட்டம் போல் ஓடிக் கொண்டிருப்பதை நாம் ஒருபோதும் கவனிப்பதில்லை. உங்களது வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களை அது பாதிக்கும். அது எல்லாவற்றையும் பாதிக்கும். ஆனால், இதுதான் உங்களது ஒட்டுமொத்த வாழ்வாகவும் இருந்துவருகிறது!

ஆகவே, இந்த பைத்தியக்காரத்தனம் மாற்றப்பட வேண்டும். மேலும், விழிப்புணர்வின் அற்புதம் என்னவென்றால், நீங்கள் விழிப்புணர்வுடன் இருப்பதைத் தவிர வேறு எதுவும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்பதுதான். நீங்கள் அதை கவனிக்கின்ற விஷயமே அதை மாற்றிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக உங்களது எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட வகைக்குள் விழ ஆரம்பித்து விடும். அதன் பின்னர், அவைகளில் குழப்பம் இருக்காது. அவைகள் குழப்பங்கள் இல்லாத இந்த பிரபஞ்சம் போல ஆகிவிடும். எனவே அதன்பிறகு மீண்டும் அங்கே ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும்.

மேலும், இவ்வாறு உங்களது உடலும், உங்களது மனமும் அமைதியடைந்து விட்டால், அப்போது அவைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்திசைந்து செல்வதையும் நீங்கள் காண்பீர்கள். அங்கே ஒரு பாலம் அமைந்து விடும். இப்போது உங்களது உடலும் மனமும் வெவ்வேறு திசையில் ஓடாது. அவைகள் வெவ்வேறு குதிரைகளில் சவாரி செய்யாது. முதல் முறையாக அவைகள் இரண்டும் ஒத்துப் போகும். மேலும், அவைகளின் இந்த ஒத்து போகும் செயலானது நீங்கள் அதற்கடுத்த மூன்றாவது படிக்கு செல்வதற்கு மிகவும் உதவும். அதாவது, மூன்றாவதாக நீங்கள் உங்களது உணர்வுகள், மனக் கிளர்ச்சிகள், மனநிலைகள் ஆகியவைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதற்கு ஏதுவாக இருக்கும். இந்த உணர்வுகள்தான் உங்களுக்குள் உள்ள கண்களுக்குப் புலப்படாத, அதே சமயம் மிகவும் கடினமானதொரு அடுக்கு. ஆனால் நீங்கள் உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க முடியுமெனில், அதன்பின்னர் இது இன்னும் ஒரே ஒரு படிதான் அதிகம். உங்களது மனநிலையை, உங்களது மனக்கிளர்ச்சியை, உங்களது உணர்வுகளை பிரதிபலிக்கும்போது, நீங்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும்.

இப்படி நீங்கள் இந்த மூன்று நிலைகளிலும் விழிப்புணர்வுடன் இருந்துவிட்டால், அவைகள் எல்லாம் ஒரே விஷயமாக ஒன்று சேர்ந்துவிடும். மேலும், இவைகள் மூன்றும் இப்படி ஒன்றாக ஆகிவிட்டால், முற்றிலும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டால், உங்களால் இந்த மூன்றின் சங்கீதத்தையும் உணரமுடியும். அவைகள் ஒரு இசைக்குழு போல ஆகிவிடும். அதன்பின்னர்தான் நான்காவது விஷயம் நடக்கும். இந்த நான்காவது விஷயத்தை, நீங்கள் ஏதாவது செய்வதால் கொண்டு வரமுடியாது. அது தானாகவே நிகழ்வது. அது பூரணத்தின் வரமாகும். இந்த மூன்றையும் செய்தவர்களுக்கு கிடைக்கின்ற வெகுமதியாகும்.

மேலும் இப்படி நான்காவதாக எழுகின்ற அந்த விழிப்புணர்வுதான் உங்களை ஞானமடைந்த ஒருவராக ஆக்கும். அப்போது ஒருவர் தனது விழிப்புணர்வு குறித்தே விழிப்புணர்வுடன் இருப்பார். இதுதான் நான்காவது படி. அது ஒருவரை புத்தராக ஆக்கிவிடும். ஞானமடைந்தவராக ஆக்கிவிடும். மேலும் இப்படி ஒருவர் விழிப்படைந்தால் மட்டுமே ஒருவர் பேரானந்தம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள முடியும். உடல் அறிவது சுகம், மனம் அறிவது சந்தோஷம், உள்ளம் அறிவது மகிழ்ச்சி, நான்காவதாக அறியப்படுவது பேரானந்தம். எனவே பேரானந்தம்தான் நமது லட்சியம்; விழிப்புணர்வு தான் அதற்கான பாதையாகும்.

- ஓஷோ

மூலம்: விழிப்புணர்வு

காலநிலை மாற்றத்தால் உலக சுகாதாரம் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக ஏழைகளுக்கு நெருக்கடி அதிகரிக்கும், ஊட்டச்சத்து குறைவு பரவலாகும்.

நில மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதற்கு ஏற்ப மாரடைப்பு, சுவாசக் கோளாறுகளால் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்கிறார் விஞ்ஞானி அந்தோனி மெக்மைக்கேல். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை சுகாதார மையத்தின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார் மெக்மைக்கேல். அத்துடன் காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் இடம்பெற்றுள்ள முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். உலக சுற்றுச்சூழல் மாற்றங்களால் ஏற்படும் சுகாதார ஆபத்துகள் பற்றி பேசுகிறார்:

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளால் உருவாகி வரும் நோய்களைப் பற்றி. கடந்த இருபது ஆண்டுகளில், உலகம் முழுவதும் நோய்களின் தோற்றத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இவற்றின் வேர் அமைந்திருப்பது தெரிகிறது. உலகின் வெப்பமான பகுதிகளில் மட்டுமே பரவி வந்த மலேரியா தற்போது கிழக்கு ஆப்பிரிக்க மேட்டுப்பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சிஸ்டோசோமியாசிஸ் (Schistosomiasis) என்ற தண்ணீர் நத்தைகளால் தொற்றும் நோய் சீனாவின் வடக்குப் பகுதிக்கு பரவிவிட்டது. இந்த நத்தைகளை முன்பு இந்தப் பகுதியில் பார்க்க முடியாமல் இருந்தது.

உணவாகப் பயன்படும் சிப்பிமீன் நச்சாவது தொடர்பாகவும் தகவல்கள் வருகின்றன. அலாஸ்கா கடற்கரைப் பகுதியில் அவ்வப்போது தென்பட்டுக் கொண்டிருந்த இந்த சிப்பிமீன், தற்போது அப்பகுதியில் மிகச் சாதாரணமாக பார்க்கக் கிடைக்கிறது. அலாஸ்கா பகுதி கடல்நீரின் வெப்பநிலை கோடை காலத்தில் 15 டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டால், சிப்பிமீன் வளரும் தளங்களில் நோய்த்தொற்று நீடித்திருப்பதற்கான உகந்த சூழ்நிலையை உருவாகும். வங்கதேசத்தில் சமீபத்தில் பரவிய காலரா நோய் தாக்குதலுக்கும், எல்நினோ சுழற்சியால் அந்த நாட்டின் கடற்கரை நீர் வெப்பமடைவதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் வெப்பஅலைகள் காரணமாக நெருக்குதல்கள் அதிகரிக்குமா? வளர்ந்த நாடுகளில் இப்பிரச்சினை தொடர்பாக அதிகம் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரித்தால், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அன்றாட வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக, மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாறுகளின் தாக்கம் உயர்வதன் காரணமாகவே இந்த இறப்புகள் பெருமளவு ஏற்படுகின்றன. வளரும் நாடுகளில் இப்பிரச்சினை தொடர்பாக இன்னும் அதிக ஆராய்ச்சிகள் நடக்கவில்லை.

இது போன்ற பிரச்சினைகளால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்? முதியவர்கள், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள், குறைந்த தரமுள்ள வீடுகளில் வாழும் ஏழைகள் ஆகியோர் வெப்பஅலைகளால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 1995ம் ஆண்டு ஏற்பட்ட சிகாகோ வெப்பஅலையால் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஏழைகள், சிறிய-காற்றோட்ட வசதிகள் இல்லாத அடுக்குமாடிகளில் வாழ்ந்தவர்கள்தான். கடுமையான வெப்பத்தால் சமூக அமைதி கெடும் என்பதாலும் மேலும் சிலர் இறந்ததாக தகவல்கள் வந்தன. வெப்பநிலை அதிகரிப்பால் பெரும்பாலோர் அடுக்குமாடிகளில் குடியிருப்பு வீடுகளுக்குள் அடைந்து கொண்டதால், நடத்தை சார்ந்த மனநோய் பாதிப்புகள் ஏற்பட்டது தொடர்பாகவும் தகவல்கள் வந்தன.

வேறு என்ன சுகாதார பிரச்சினைகள் ஏற்படும்? ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் வாழும் இனுயிட் மக்களிடம் ஏற்படும் உடல் பருத்தல் மற்றும் காலநிலை மாற்றம் இடையிலான சுவாரசியமான தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. வெப்பநிலை அதிகரிப்பால் ஆர்டிக் பகுதியில் உறைபனி, மிதக்கும் பனிப்பாறைகள் கண்மூடித்தனமாக உருகி வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல்வேறு உயிரினங்கள் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் இனுயிட் மக்கள் தங்கள் பாரம்பரிய உணவு ஆதாரங்களைச் சார்ந்திருக்க முடியாமல் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை அவர்கள் அதிகம் உண்ண ஆரம்பித்துள்ளனர். இதிலிருந்து காலநிலை மாற்றம் நமது உணவு சங்கலியையும் சீர்குலைக்கிறது என்பது தெரியவருகிறது.

இந்தியா எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும்? இந்தியாவின் பெருநகரங்களில் வெப்பஅலை வீசுவதன் கடுமையும், தாக்குதல் எண்ணிக்கையும் அதிகரிக்கும். கோடை காலங்களில் சுற்றியுள்ள கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் இரவு நேர வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். இதனால் சேரிகள் மற்றும் தரமற்ற வீடுகளில் குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்படுவர். காலநிலை மாற்றம் பயிர் மகசூலை குறைக்கும், நீர்நிலைகள் வறண்டு போகும். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கிழக்கு மகாராஷ்டிராவில் வாழும் 20-30 லட்சம் மக்கள் வறட்சியால் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு, காலரா, சிக்குன்குன்யா, டெங்கு போன்ற நோய்களின் தாக்குதல் பெருகிவிடும்.

காலநிலை மாற்றத்துக்கு தகவமைத்துக் கொள்ள எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? 10 ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்டதைவிட மாற்றங்கள் தற்போது அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. எதிர்கால ஆபத்துகள் தொடர்பாக நமக்கு முழுமையான புரிதல் இல்லை என்றாலும்கூட, ஆபத்துகளின் தாக்கத்தை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற நெருக்கடி அதிகரித்து வருகிறது. அனைத்து ஆராய்ச்சிகளையும் நடத்துவதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று நெருக்கடியை உருவாக்குவது சாதகமான ஒரு சூழ்நிலை அல்ல.

குறிப்பாக தெற்கு ஆசியாவின் உணவுதானிய மகசூலில் காலநிலை மாற்றம் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மக்கள்தொகை அதிகரிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டால், நிலைமை இன்னும் மோசமாகி விடும். மண்வளம் அதிகமாக சுரண்டப்படும், நீர்நிலைகள், நன்னீர் ஆதாரங்கள் வறண்டு போகும். இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கெனவே பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலை நிலவுகிறது. காலநிலை மாற்றம் இப்பிரச்சினையை இன்னும் தீவிரமாக்கும். எனவே, ஊட்டச்சத்து குறைவு பிரச்சினையில் தகவமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களின் நிலை என்ன?

பொருளாதார வளர்ச்சி பிரச்சினைகள் தொடர்பாக மட்டுமே உலக வங்கி முதன்மை அக்கறை செலுத்தி வந்தது. மனிதர்கள் வாழும் சூழ்நிலைகள் மேம்பட வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம் போன்ற விஷயங்களும் அதற்கு ஈடான முக்கியத்துவம் கொண்டவை என்று தற்போதுதான் உணர ஆரம்பித்திருக்கிறது. காலநிலை மாற்றத்தை உலக சுகாதார நிறுவனம் பழைமை மனப்பான்மையுடனே அணுகுகிறது. இந்த ஆண்டுதான் அதிலிருந்து விடுபட்டு வெளியே வந்து, காலநிலை மாற்றம் முக்கிய பிரச்சினை என்று முதன்முறையாக கூறியுள்ளது. இது மிகப் பெரிய முன்னெடுப்பு.

டவுன் டு எர்த்
தமிழில்: ஆதி வள்ளியப்பன்

பூவுலகின் நண்பர்கள்


புவி வெப்பமடைதலுக்கு காரணம் இயற்கை நிகழ்வுகள் அல்ல!

பூமி வெப்பமயமாதல் மனிதகுல ஆரோக்கியத்தை நேரடியாக பாதித்து, வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாகும்


பாரம்பரிய குடும்பம் ஏற்கனவே காலாவதியாகி விட்டது. அது அதன் தேவையை பூர்த்தி செய்து விட்டது. அதற்கு எதிர்காலம் இல்லை. இரு பெற்றோர்களுக்குள் மட்டுமே அடைபடுவது குழந்தைக்கு மனோரீதியாக ஆபத்தானது.

இரு பெற்றோர்களும் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே, ஒருவரையொருவர் நச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர். ஒருவரையொருவர் ஆளுமைக்குள்ளாக்க முயற்சிக்கின்றனர். குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். ஏனெனில் வேறு வழியில்லை. இதுதான் அவர்களின் முதல் பள்ளி. இது கணிதத்தையோ, பூகோளத்தையோ, வரலாற்றையோ பற்றிய கேள்வி அல்ல. இது வாழ்க்கையை பற்றிய கேள்வி. அவர்கள் வாழ்க்கையின் ABC யை கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் தாய் தொடர்ந்து தந்தையை நச்சரித்து கொண்டிருப்பதை பார்க்கிறார்கள். தந்தை தொடர்ந்து ஆளுமைக்கு உட்படுத்த, அடிமைபடுத்த முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்.

குழந்தைகள் மிகவும் கவனிக்கும் தன்மை கொண்டவை. ஏனெனில் அவர்கள் இந்த உலகத்திற்கு புதியவர்கள். அவர்களுடைய கண்கள் தெளிவாக உள்ளன. அவர்களுடைய பார்வையில் அனுபவத்தின் அழுக்கு படவில்லை. அவர்கள் அதன் போலிதனத்தை முழுவதும் பார்க்கமுடியும். ஏனெனில் யாராவது பக்கத்து வீட்டுக்காரர் இவர்கள் சண்டை போட்டுக் கொள்ளும்போது வந்தால் இவர்கள் உடனடியாக சண்டையை நிறுத்திவிட்டு ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொள்கின்றனர். அழகான விஷயங்களை பேசத் தொடங்கி விடுகின்றனர். பக்கத்து வீட்டுக்காரரை உள்ளே அழைக்கின்றனர். அவர்கள் சண்டை போடுவதேயில்லை போன்ற தோற்றத்தை பக்கத்து வீட்டுக்காரரிடம் உருவாக்குகின்றனர்.

குழந்தையும் போலித்தனத்தை கற்றுக் கொள்கிறது. நீ என்ன என்பது வேறு விஷயம். நீ எப்படி இருக்கவேண்டும் என சமுதாயம் எதிர்பார்க்கிறதோ அப்படி நீ சமுதாயத்திடம் இருக்கவேண்டும். நீ தேவையில்லை. ஆனால் சமுதாயம் நீ என்னவாகவேண்டும் என விரும்புகிறதோ அப்படி நீ மாற வேண்டும்.

மிகச் சிறிய குழந்தை பருவத்திலிருந்தே நாம் ஒரு பிளவுபட்ட குணாதிசியத்தை, இருமையை, இரு இருப்புகளை உருவாக்குகிறோம்.

அவர்கள் வழிகளை கற்றுக் கொள்கிறார்கள். பெண்குழந்தை மனைவி எவ்வாறு இருக்கவேண்டும் என தாய் தந்தையிடம் நடந்துக்கொள்வதை வைத்து கற்றுக் கொள்கிறாள். பையன் தந்தை நடந்துக்கொள்வதை வைத்து கணவன் எவ்வாறு இருக்கவேண்டும் என கற்றுக்கொள்கிறான்.

இதனால்தான் பரம்பரை பரம்பரையாக அதே முட்டாள்தனங்கள் திரும்ப திரும்ப செயல் படுகின்றன. முழு உலகமும் துன்பத்தில் வாழ்கிறது, போலித்தனத்தில் வாழ்கிறது. அடிப்படை காரணம் பாரம்பரிய குடும்பம். குழந்தை தாய் தந்தையை மட்டுமே இருவரை மட்டுமே பார்க்கிறது.

எதிர்காலத்தில் இது மாற்றப்பட வேண்டும். ஏனெனில் கிட்டதட்ட தொண்ணூறு சதவிகித மனோவியாதிகள் இந்த குடும்பத்தின் காரணமாகவே ஏற்படுகின்றன. நாம் பெரிய குடும்பத்தை உருவாக்க வேண்டும். நான் அதை கம்யூன் என அழைக்கிறேன். அங்கு பலர் ஒன்று கூடி வாழ்வர்.

அமெரிக்காவில் நம்முடைய கம்யூனில் ஐயாயிரம் மக்கள் ஒன்றாக வாழ்ந்தனர். ஒன்றாக வேலை செய்தனர். ஒரே ஒரு சமையலறையில் ஐயாயிரம் மக்கள் ஒன்றாக உணவு உண்டனர். அவர்களுடைய குழந்தைகள் பல மக்களுடன் பழகினர். தந்தையின் வயதுடைய அனைவரும் மாமன்கள். தாயின் வயதுடைய அனைவரும் அத்தைகள். அவர்கள் அனைவரிடம் இருந்தும் கற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அனுபவத்திற்கு பரந்த வாய்ப்பு இருந்தது. இதுதான் ஆண், அதுதான் பெண் என வரையறுக்கப் பட்ட கருத்து அவர்களிடம் ஏற்பட வழியில்லை. ஏனெனில் அவர்கள் பல பெண்களிடம் பழகினர். அவர்கள் அனைவரும் இவர்களிடம் அன்புடன் இருந்தனர். பல ஆண்களும் இவர்களிடம் அன்புடன் இருந்தனர். அவர்கள் அவர்களுடைய பெற்றோருடன் வாழவில்லை. அவர்களுக்கென ஒரு பகுதி இருந்தது. பெற்றோர் அங்கு சென்று அவர்களை சந்தித்தனர். அவர்கள் பெற்றோரிடம் வந்து ஒருநாள் இரண்டு நாள் தங்கலாம். அவர்கள் விரும்பினால் மற்றவர்களுடன் தங்கலாம். குழந்தை இல்லாதவர்கள் அவர்களை அழைத்தனர். அவர்கள் கம்யூன் முழுவதும் சுற்றினர். முழு கம்யூனும் அவர்களுடைய குடும்பமாக இருந்தது.

மனோரீதியாக இது பெண்ணை பற்றிய லேசான தோற்றத்தை மட்டுமே பையனின் மனதில் ஏற்படுத்தியது. ஆணைப் பற்றிய லேசான தோற்றத்தை மட்டுமே சிறுமியின் மனதில் ஏற்படுத்தியது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் பல பெண்களின் பல குணங்களால் பிம்பம் மெலிதாக உருவாக்கப் பட்டதால், நீ சுலபமாக உனக்கு பொருத்தமான பெண்ணை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் உன்னிடம் வரையறுக்கப் பட்ட கருத்து இல்லாத காரணத்தால், உன்னிடம் மெலிதான பிம்பம் மட்டுமே இருப்பதால், ஏதாவது ஒரு பெண் அல்லது ஏதாவது ஒரு ஆண் அதனை நிறைவேற்ற முடியும்.

நீ பெற்றோருடன் வாழாவிட்டால், உனக்கு மனைவி எப்படி நடந்துகொள்ள வேண்டும், கணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரியாது. நீ வெகுளித்தனமாக, அன்புடன் தொடங்குவாய். நீ ஆணை காதலித்தாய் அதனால்தான் அவனை திருமணம் செய்துகொண்டாய். நீ பெண்ணை காதலித்தாய் பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற குறிப்பிட்ட கருத்து உன்னிடம் இல்லை.

இந்துகளால் துறவி என அழைக்கப்படும் துளசிதாஸ், இந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற இந்து துறவி. அவருடைய புத்தகம் படிக்கப் பட்ட அளவு வேறு எந்த புத்தகமும் படிக்கப்படவில்லை. அவருடைய புத்தகம் இந்துக்களின் பைபிள். அவருடைய புத்தகத்தில் அவர், “நீ மனைவியை அடிக்காவிட்டால், தொடர்ந்து அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்” என்கிறார்.

உன்னுடைய ஆண்மை பெண்மையை அடிப்பதன் மூலமே நிரூபிக்கப்படுகிறது. ஆனால் நீ பெண்ணை அடித்தால், பெண்ணும் உன்னை சித்ரவதை செய்ய ஆயிரம் வழிகளை கண்டுபிடிப்பாள். நீ அவளுடன் உடலுறவு கொள்ள விரும்பும்போதெல்லாம் அவள் தனக்கு தலையை வலிப்பதாக கூறுவாள். உங்கள் இருவருக்கும் இடையில் தொடர்பே இல்லை. எப்படி இருக்க முடியும் நீ அவளை அடிமைப் படுத்தியுள்ளாய். எந்த அடிமையாலும் தன்னுடைய சுதந்திரத்தை அழித்தவனை மன்னிக்க முடியாது. எந்த பெண்ணாலும் அவளுடைய சுதந்திரத்தை பறித்த எந்த ஆணையும் மன்னிக்க முடியாது. ஆனால் இந்துகள் இந்த துறவியின் அறிவுரையை பின்பற்றி வருகின்றனர். இது புதிதல்ல. ஐயாயிரம் வருடங்கள் பழமையான மனுநீதி, இந்துக்களின் ஒழுக்க சாஸ்திரம், இதையே கூறுகிறது. மனோவியலாலர்களால் ஆண் - பெண் உறவை பற்றி எழுதப்பட்ட புத்தகம் ஒன்று உள்ளது. அந்த புத்தகத்தின் தலைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நெருக்கமான எதிரி அப்படித்தான் நெருக்கமான எதிரிகளாக ஆணும் பெண்ணும் இதுவரை வாழ்ந்து வந்துள்ளனர். குழந்தைகள் கற்றுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அதனை மறுபடியும் செய்வார்கள். அவர்களுக்கு வேறுவழி தெரியாது.

குடும்பம் ஒரு கம்யூனாக மாறவேண்டும். ஐயாயிரம், பத்தாயிரம் மக்கள் ஒன்றாக வாழ்வது, ஐயாயிரம் குடும்பங்கள் தனியாக வாழ்வதை விட பொருளாதார அடிப்படையில் சிறப்பானது. நம்முடைய கம்யூனில் பதினைந்துபேர் ஐயாயிரம் பேருக்கான சமையலை கவனித்துக் கொண்டனர். இல்லாவிடில், இரண்டாயிரத்தி ஐநூறு பெண்கள் அவர்களுடைய சமையலறையில் அமுக்கப்பட்டு, அழிக்கப்பட்டிருப்பர்.

யாரும் குழந்தையின் உள்ளார்ந்த திறமையைப் பற்றி கவலைப் படுவதேயில்லை. எல்லோரும் தன்னுடைய இலட்சியத்தைப் பற்றியே யோசிக்கின்றனர். தன்னுடைய மகன் முதலமைச்சர் ஆவதையோ, பிரதமர் ஆவதையோ காண ஆசைப்படுகின்றனர்.

அந்த பையன் தனது உள்ளார்ந்த திறமையால் இசைக்கலைஞன் ஆகவோ, ஒரு ஓவியன் ஆகவோ, ஒரு கணிதமேதை ஆகவோ, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகவோ மாறக்கூடும் என்பது குறித்து யாரும் கவலைப்படுவதேயில்லை. குழந்தை குறித்து யாரும் அக்கறைபடுவதில்லை. அவனை பொருட்படுத்துவதேயில்லை.

வாழ்க்கையில் ஒரே ஒரு ஆனந்தம் மட்டுமே உள்ளது. அது உனக்குள் நீ எதை சுமந்து கொண்டிருக்கிறாயோ அதுவாகவே நீ மாறுவது. உள்ளார்ந்த தன்மை அதனை முழுமையாக மலரச்செய்வது. ஒரு ரோஜா மொட்டு ரோஜாவாக வேண்டும். அதுவே அதன் மகிழ்ச்சி.

ஓய்வு பெறப் போகும் ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரின் வழியனுப்பு விழாவை கொண்டாடுவதற்க்காக அவருடைய நண்பர்கள் அவரை அழைத்தனர். அவர் நாட்டின் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக திகழ்ந்தார். மக்கள் அவரை கொண்டாடினர். ஆனால் அவர் மிகவும் சோகமாக காணப்பட்டார். ஒரு நண்பர் “ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள்” எனக் கேட்டார். அவர், “நான் சோகமாக இருக்கக் காரணம், நான் அறுவை சிகிச்சை நிபுணராக ஒருபோதும் விரும்பியதே இல்லை. நான் ஒரு இசைக் கலைஞனாக விரும்பினேன். நான் என்னுடைய சித்தார் எனது கைகளில் இருக்கும்போது தெருக்களில் பிச்சைகாரனாக இறக்க நேர்ந்திருந்தாலும்கூட நாட்டின் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பதை விட அதிக மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஏனெனில் இது என்னுடைய தாகமாக இருந்ததில்லை, இது என்னுடைய குறிக்கோள் அல்ல” என்றார்.

உலகம் மிகவும் துன்பமயமாக உள்ளது. அடிப்படைக்காரணம் மக்கள் தங்களுடைய குறிக்கோளை நோக்கி நகர அனுமதிக்கப்படுவதில்லை. எல்லோரும் திசைதிருப்பப் படுகின்றனர். குடும்பம் இனிமேல் தேவையில்லை என்பது மிகவும் ஆசீர்வாதமாக இருக்கப்போகிறது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும்கூட. இப்போது பெற்றோர்களிடையே அன்பில்லை என்றாலும் கூட குழந்தைகளுக்காக இணைந்திருக்கிறார்கள்.

மனைவியை காதலிக்காத கணவனும் கணவனை காதலிக்காத மனைவியும்... அவர்கள் காதலிப்பதைப்போல நடித்துக் கொண்டிருக்கின்றனர். இது விபசாரத்தை தவிர வேறில்லை, நிலையான விபச்சாரம். குழந்தைகள்தான் காரணம். இல்லாவிடில் குடும்பம் உடைந்துவிட்டால், குழந்தைகள் என்ன ஆவார்கள் கம்யூனில் பிரச்னை இல்லை. நீ அன்பு செலுத்தும்வரை ஒரு பெண்ணுடன் இருக்கலாம். அன்பு மறைந்து விட்டது என நீ அறிந்த கணத்தில்...

வாழ்வில் எதுவும் நிரந்தரமல்ல. நிரந்தரமாக எதுவும் இருக்கமுடியாது. எதையும் நிரந்தரமாக்குவது உன் கையில் இல்லை. இறந்த விஷயங்கள் மட்டுமே நிலையாக இருக்கமுடியும். எந்தஅளவு ஒரு விஷயம் உயிர்துடிப்போடு இருக்கிறதோ அந்தஅளவிற்கு மாற்றமடையும். கற்கள் நிலையாக இருக்கக் கூடும். மலர்கள் நிலையாக இருக்க முடியாது. அன்பு ஒரு கல் அல்ல, அது ஒரு மலர். அதுவும் அபூர்வ தன்மை கொண்டது.

அன்பை நிலையான விஷயமாக்கியது மனித குலத்தின் மிகப் பெரிய தவறு. காதல் திருமணமாக முடியாது. திருமணம் என்பது சட்டம். அன்பை எந்த சட்டத்திற்க்குள்ளும் அடக்க முடியாது. அது காட்டுத்தனமானது. அது வந்துபோகும் தென்றலை போன்றது. அது போய்விடும் என பயந்துகொண்டு நீ எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டாய். ஆனால் பிறகு தென்றல் இல்லை, வெறும் காற்று. திருமணம் வெறும் காற்று வேறு ஒன்றுமில்லை. உணரப்பட்ட தென்றல் உன்னை திருமணத்திற்கு கொண்டுவந்தது. இனிமேல் அது அங்கு இல்லை. ஆனால் குழந்தைகளின் காரணமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீ நடிக்க வேண்டும் துன்பப்படு, நடி. அது எல்லா விதமான அடக்குதல்களையும் உருவாக்குகிறது.

கணவன் மனைவியை காதலிக்கவில்லை எனில் அவன் வேறு பெண்ணுடன் பழக தொடங்குவான். அலுவலகத்தில் அவனுடைய காரியதரிசி. பெண் கணவனை காதலிக்கவில்லை எனில் இயற்கையாகவே அவள் வேறு யாரையாவது கண்டு பிடிப்பாள். ஓட்டுனர். தயாராக இருக்கும் மக்கள் காரியதரிசி, ஓட்டுனர். வேறு என்ன செய்வது? எங்கு செல்வது? இது தேவையில்லாத பிரச்னைகளை, அசிங்கமான சண்டைகளை உருவாக்குகிறது. முழு குடும்பமும் இறுக்கமடைகிறது. அலைகள் அமைதியாகவும் மெளனமாகவும் சமமாகவும் இல்லை. நீ உன்னுடைய பெண்ணோடு திருப்தியாக இல்லாத காரணத்தால் நீ விபசாரிகளை உருவாக்கியுள்ளாய். மனிதன் செய்த மிகவும் அசிங்கமான செயல்களில் ஒன்று அது. வெறும் பணத்திற்காக அவர்களின் உடலை விற்கும்படி பெண்ணை கட்டாயப்படுத்துவது. நன்றாக நினைவில் கொள். நீ பணத்திற்காக உடலை பெறலாம். ஆனால் நீ பணத்திற்காக காதலை பெற முடியாது.

அன்பு விற்பனைக்கானதல்ல!...

இதுவரை பெண் விபசாரிகள் மட்டுமே இருந்தனர். ஏனெனில் பல ஆயிரம் வருடங்களாக இது ஆண் ஆதிக்க சமுதாயம். ஆனால் இப்போது பெண் விடுதலை இயக்கம் உள்ளது. இந்த விடுதலை இயக்கம் மேலும் பல முட்டாள்தனங்களை உருவாக்கியுள்ளது. ஏனெனில் அது ஆணை பிரதிபலிக்க முயற்சிக்கிறது. அது பெண்களின் உணர்வை உயர்த்த முயற்சிக்கவில்லை. அது ஆணை போலவே ஆக முயற்சிக்கிறது. ஆணை வெறுப்பாக பார்க்கிறது. அது வெறுப்பை உண்டாக்கிவிட்டது.

இப்போது இலண்டன் அல்லது நியூயார்க் அல்லது சான் பிரான்சிஸ்கோ போன்ற பெரு நகரங்களில் நீ ஆண் விபசாரிகளை காணலாம். இயர்கையாக பெண்ணும் சம உரிமை கொண்டவள். பெண் விபசாரிகள் இருந்தால் பிறகு ஆண் விபசாரிகளும் இருக்க வேண்டும்.

பெண் விடுதலை இயக்கம் மிக அதிக வெறுப்பை ஆண்கள் மீது ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. அந்த இயக்கத்தில் சில தலைவர்கள் லெஸ்பியன் முறையை வலியுறுத்தி வருகின்றனர். பெண் பெண்ணின் மீது மட்டுமே காதல் கொள்ள வேண்டும். ஆணை முழுவதுமாக வெட்டிவிட வேண்டும். அது நடந்து வருகிறது. ஓரினச் சேர்க்கை நடைபெறுகிறது. ஆண்கள் பெண்களிடம் ஓய்ந்துவிட்டனர். பெண்களால் நச்சரிக்கப் பட்டு, தொந்தரவடைந்து, அவர்கள் ஏதாவது ஒரு மாற்றை தேடத் தொடங்கி விட்டனர். அவர்கள் ஆண் ஆணை அன்பு செலுத்துவது சிறந்தது என கண்டறிந்துள்ளனர். குறைந்தபட்சமாக அது துன்பமயமானதல்ல. ஓரின சேர்க்கையாளர்கள் (GUY) கே என அழைக்கப்படுவது விபத்தல்ல. அவர்கள் (GUY) கே தான். ஆனால் இது முழு சமுதாயத்தையும் பைத்தியகார விடுதியாக மாற்றுகிறது. இந்த உடலுறவின் அடக்குதல் மிகப்பெரிய தொந்தரவுகளை அளிக்கப்போகிறது. ஓமோசெக்ஸ் ஏற்கனவே பயங்கர வியாதி எய்ட்ஸ்சை கொண்டுவந்துவிட்டது. அது குணமடைவதற்கு வழியே இல்லை போல தெரிகிறது.

லெஸ்பினிசம்கூட! அது புதிதாக இருக்கும் காரணத்தால் அதற்கு சிறிது காலம் ஆகலாம், ஆனால் அதுவும் ஏதாவது ஒன்றை ஏற்படுத்தும். அவர்கள் ஏதாவது ஒன்றை ஏற்படுத்தவேண்டும். இல்லாவிடில் பெண்கள் விடுதலை இயக்கம் ஆணிடம் இருக்கும் ஏதோ ஒன்று நம்மிடம் இல்லை, அவர்களிடம் எய்ட்ஸ் உள்ளது நம்மிடம் எதுவுமில்லை என உணரத் தொடங்கும். பெண் விடுதலை இயக்கம் பெண்ணை அசிங்கப் படுத்துகிறது. அவர்கள் புகை பிடிக்கிறார்கள். ஏனெனில் ஆண் புகை பிடிக்கிறான். கெட்ட வார்த்தை பேசுகிறார்கள். ஏனெனில் ஆண் கெட்ட வார்த்தை பேசுகிறான். ஆண்கள் உபயோகப் படுத்தும் அதே விதமான உடைகளை அவர்களும் உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் யாராவது இந்த பெண்களுக்கு இது பெண் விடுதலையல்ல, நீங்கள் வெறும் இரண்டாம் ரக ஆணாகிறீர்கள், இது மிகவும் தரம் தாழ்த்துவதாக அவமானபடுத்துவதாக உள்ளது என்பதை சொல்லவேண்டும். இவை அனைத்தும் குடும்பத்தின் காரணமாகவே நடக்கின்றன. குடும்பத்தை விட பெரியதொரு விஷயத்தில் குடும்பத்தை நாம் கரைக்காவிட்டால் இந்த விஷயங்கள் மறையாது. அன்பு மறைந்துவிட்ட பிறகு ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ வாழ வேண்டிய கட்டாயம் இல்லாவிட்டால் விபச்சாரம் என்பதே மறைந்துவிடும்.

சண்டையிட்டுக் கொண்டு நெருக்கமான எதிரிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நெருக்கமான நண்பர்களாக இருக்க முடியாவிட்டால், நெருக்கமான எதிரிகளாக இருக்கவேண்டிய தேவை இல்லை. அதைவிட விலகிவிட்டு தெரியாதவர்களாக ஆகிவிடுவது சிறந்தது.

வாழ்க்கை மிகவும் சிறியது. தேவையற்ற முட்டாள்தனங்களால் அது வீணடிக்கப்படக்கூடாது.

வாழு; அன்பு செய்; முழுமையாகவும் ஆழமாகவும் அன்பு செலுத்து. ஆனால் ஒருபோதும் சுதந்திரத்திற்கு எதிராக அல்ல. சுதந்திரம்தான் உயர்ந்த மதிப்புடையதாக இருக்கவேண்டும். குடும்பம் அந்த சுதந்திரத்தை அழித்துவிட்டது. என்னுடைய பார்வையில் எதிர்காலம் குடும்பத்திற்கானதல்ல. எதிர்காலம் கம்யூன்களுக்கானது. கம்யூன் சீரமைக்கப்பட்ட பெரிய குடும்பம். சிறிய குடும்பம் உருவாக்கிக் கொண்டிருந்த அழுத்தங்கள் எதையும் கம்யூன் உருவாக்காத அளவு மிகப் பெரியது. குழந்தைகள் கம்யூனால், வல்லுநர்களால் கவனித்துக் கொள்ளப்பட வேண்டும். முதலில்,உனக்கு மனைவி இருப்பதால் தந்தை,தாய் ஆகும் உரிமை உனக்கு உள்ளது என்று பொருள் இல்லை. கம்யூனில் பயிற்சி இருக்க வேண்டும். தந்தை தாயாக விரும்பும் யாராக இருந்தாலும் கண்டிப்பாக அந்த பயிற்சியை எடுத்துக் கொள்ளவேண்டும். நீ திருமணம் செய்து கொண்டிருக்கலாம், நீங்கள் சேர்ந்திருக்கலாம். அது உங்கள் இருவர் சம்பந்தப்பட்ட விஷயம் ஆனால் அதற்காக நீ மூன்றாவது நபரின் வாழ்க்கையில் விளையாடக் கூடாது. குழந்தையை வளர்ப்பதற்கு சரியான பயிற்சி இல்லாவிட்டால் உனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள உரிமை கிடையாது. அவன் ஆனந்தமான மனிதனாக மலர நீ உதவ வேண்டும். மனோவியலாளர்கள் கண்டறிவர். மருத்துவர்கள் யோசிப்பார்கள், மரபியலாளர்கள் விவாதிப்பர். இந்த வல்லுநர்களிடமிருந்து அனுமதி பெறும்வரை நீ குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது.

மனிதன் சிரமமின்றி குழந்தை பெற்றுக்கொள்ளலாம். அதன் பொருள் நீ தாய் தந்தை ஆகலாம் என்பதல்ல. இவை திறமைகள், கலைகள். ஒரு வாழும் உயிரை வளர்ப்பதற்கு சில திறமைகள் (வல்லமைகள்) தேவை.

எவ்வளவு குழந்தைகள் தேவை என்பதை சமுதாயம் கம்யூன் முடிவு செய்யும். எனவே குழந்தைகள் சக்தி உள்ளவர்களாக நன்றாக படித்தவர்களாக ஆக முடியும். எனவே அதிக மக்கள் தொகை தொந்தரவு செய்யாது. எனவே வேலையற்றவர் யாரும் இல்லை. ஏழ்மையானவர்கள் யாரும் இல்லை. படிக்காதவர்கள் யாரும் இல்லை. இப்போது குழந்தை உருவாவதைப் பற்றி கர்ப்பகாலத்தை குறித்து பல விஷயங்கள் தெரிந்து விட்டன. அந்த அறிவியல் அறிவை பயன்படுத்தாமல் இருப்பது வெறும் முட்டாள்தனமாக இருக்கும். நாம் அதனை விலங்குகளில் பயன்படுத்துகிறோம். ஆனால் அதனை நாம் மனிதர்களில் பயன்படுத்துவதில்லை. நாம் இன்னும் விபத்து போன்ற வழிகளிலேயே குழந்தை பெற்றுக் கொள்வதை தொடர்கிறோம்.

இந்தியாவின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான இரவீந்திர நாத் தாகூர் அவருடைய பெற்றோருக்கு பதிமூன்றாவது குழந்தை. அந்த சமயத்தில் குடும்ப கட்டுபாட்டு முறை இல்லாமல் இருந்தது நல்லதே. இல்லாவிடில் உலகம் இரவீந்திரநாத் தாகூரை தவற விட்டிருக்கும். இன்னும் எவ்வளவு பேரை நாம் தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம் என நமக்கு தெரியாது. ஏனெனில் மனிதர்களை பொறுத்தவரை நாம் மூடநம்பிக்கை கொண்டவர்களாகவே நடந்து வருகிறோம்.

ஒரு உடலுறவில் மனிதன் கோடிக்கணக்கான விந்துகளை வெளியிடுகிறான். அந்த நொடியில் அரசியல் தொடங்குகிறது. ஒரு பெரிய ஓட்ட பந்தயம் ஒரு போட்டி பெண்ணின் கருமுட்டையை அடைய நடக்கிறது. நமக்கு அந்த தூரம் மிகவும் சிறியதாக தெரிகிறது. ஆனால் ஒரு வித்திற்கு, அதன் அளவிற்கு அது இரண்டு மைல் தூரம் போன்றது. அதன் வாழ்நாள் இரண்டு மணி நேரம் மட்டுமே. இரண்டு மணி நேரத்தில் கோடிக்கணக்கான விந்துகள் பெண் முட்டையை அடைய ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒன்றே ஒன்றுதான் வெற்றி பெறும். எப்போதும் சிறந்த மக்கள் ஒதுங்கி நின்றுவிடுவர் என்பதை நீ உறுதியாக எடுத்துக் கொள்ளலாம். ரொனால்ட் ரீகன்கள் முதலில் சென்றடைவர். சிறந்த மக்கள் முதலிலிருந்தே சிறந்த மக்கள்தான். அவர்கள் மற்றவர்களுக்கு வழி விட்டு விடுவர். இப்போது உன்னுடைய விந்தை மருத்துவமனைக்கு கொடுப்பது சாத்தியம். அவர்கள் எந்த விந்து அறிவுஜீவிகளாகும், எவ்வளவு விந்துகள் சாதாரண மனிதர்களாகும் இந்துகள், கிறிஸ்துவர்கள், முகமதியர்கள், யூதர்கள் எந்த விதமான மனிதர்கள் என கண்டறிய முடியும். அவர்களை முதலிலிருந்தே களைய முடியும். சிறந்ததை தேர்ந்தெடுக்க முடியும். நீ அவர்களை கண்டறிய முடியும். அந்த கூட்டத்தில் மிதப்பவர்களில் சாக்ரடீஸ், பித்தாகோரஸ், மோசஸ், ஜீஸஸ், ஹராகளட்டஸ் போன்றவர்கள் இருப்பார்கள். எதற்கு சாதாரண மக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? அறிவியல் உண்மைகள் தெளிவாக அறியப்பட்டு, நிருபிக்கபட்ட பிறகு, எதற்கு அது விபத்தாகவே இருக்க வேண்டும்?

ஏனெனில் இந்த கூட்டம் இது சிறிய கூட்டம் அல்ல நகர தொடங்கும்போது அவர்கள் முன்னால் சென்று அடைந்துவிட்டனர் என்ற காரணம் ஒன்றை தவிர வேறு காரணம் ஏதுமின்றி அவர்கள் அடால்ப் ஹிட்லர்களாகவும் முசோலினியாகவும் ஜோசப் ஸ்டாலினாகவும் இருக்கக் கூடும். ஏன் இந்த மக்களை உருவாக்க வேண்டும்? நீ சரித்திரம் திரும்ப திரும்ப நடக்கிறது என கூறிக் கொண்டே இருக்கிறாய். நீ விபத்தாகவே இருந்துகொண்டே இருக்கும் காரணத்தால்தான் அது திரும்ப திரும்ப நடக்கிறது. காரணம் நீதான். சரித்திரம் முழுமையாக, திரும்ப எதுவும் நடக்காதபடி மாற்றப் பட முடியும். ஒருவர் சிறிதளவு அறிவை பயன்படுத்த வேண்டும், அவ்வளவே.

கோடிக்கணக்கான மக்களால் பூமியை நிரப்புவதை விட சிறந்தவர்களை தேர்ந்தெடுங்கள். இப்போது ஐம்பது கோடி மக்கள் உள்ளனர். அதைவிட பத்து கோடிபேர் மட்டும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்க முடியும். அப்போது நாம் ஒரு சூப்பர் மனிதனை உருவாக்க முடியும். நாம் நமது பழைய முறையிலான யோசனைகளை மட்டும் மாற்ற வேண்டும். நாம் அறிவியலை மனிதனுக்கு வேலை செய்ய பயன்படுத்த வேண்டும். அறிவியல் குழந்தைகளுக்காக பயன்படுத்தப் படவேண்டும்.

குடும்பங்கள் மிகவும் தளர்வானவைகளாக, ஓய்வானதாக, பெரிதாக மாற வேண்டும். நாம் பூமியில் ஒரு சொர்க்கத்தை உருவாக்க முடியும்.

- ஓஷோ

மூலம்: The Transimission of the lamp

வ்வொருவரும் தான் முக்கியமானவராக இருக்கும்படிதான் வளர்க்கப்பட்டிருக்கிறார். இங்கு யாரும் உண்மையானவராக இருக்க முடியாது. முக்கியமானவராக மாறுவது மனித இனத்தின் பொதுவான வியாதியாக இருக்கிறது.

ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் எங்காவது, எதாவதொன்றில் முக்கியமானவராக ஆக வேண்டும் என்பதற்காக அதன்படிதான் வளர்க்கப்படுகிறார்கள். ஒரு மாடல் கொடுக்கப்படுகிறது, நீ அதுபோல மாற வேண்டும். அது உனக்கு ஒரு இறுக்கத்தைக் கொடுக்கிறது, ஏனெனில் நீ அதுபோல இல்லை. நீ வேறுமாதிரி இருக்கிறாய், இருப்பினும் நீ அதுபோல ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறாய்.

அதற்காக உண்மையானதை உண்மையற்றதற்க்காக கண்டனம் செய்கிறாய் – உண்மையற்றது உண்மையற்றதுதான். எதிர்காலத்திற்கான வடிவமைப்பு உன்னை நிகழ்காலத்திலிருந்து வெளியே இழுக்கிறது.

மாடல் ஒரு பயங்கர கனவாக துரத்துகிறது, அது தொடர்ந்து உன்னைத் துரத்துகிறது. நீ எதை செய்தாலும் அது சரியானதாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் சரியானது என்பதை குறித்து உனக்கு ஏற்கனவே ஒரு கருத்து உள்ளது. நீ ஏற்படுத்துவது எதுவாக இருந்தாலும் அது நிறைவாக இருக்கப் போவதில்லை, ஏனெனில் நிறைவடைய முடியாத ஒரு மடத்தனமான எதிர்பார்ப்பை நீ கொண்டிருக்கிறாய்.

நீ ஒரு மனிதன். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலநிலையில் ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருக்கிறாய். அவற்றை ஒத்துக் கொள். மிகச்சரியாக செயல்களை செய்ய வேண்டுமென நினைப்பவர்கள் பைத்தியகாரத்தனத்தின் எல்லையில் இருக்கிறார்கள். அவர்கள் மடத்தனமானவர்கள் – அவர்கள் செய்வது எதுவாக இருந்தாலும் அது நல்லதல்ல. எதையும் மிகச்சரியாக செய்வதற்கு வழியேயில்லை. மிகச்சரியானது மனித இனத்திற்கு சாத்தியமில்லை. உண்மையில் சரியில்லாமல் இருப்பதுதான் ஒரே வழி. அதனால் நான் சொல்வது என்னவென்றால், நான் உனக்கு மிகச்சரியானதை சொல்லித்தரப் போவதில்லை. நான் உனக்கு முழுமையை சொல்லித் தருகிறேன். அது முற்றிலும் வேறு விதமான ஒரு விஷயம். முழுமையாக இரு. சரியாக இருப்பதை பற்றி கவலைப்படாதே.

நான் முழுமை என்று கூறும்போது, நான் உண்மையானதைத்தான், நிகழ்காலத்தைத்தான் கூறுகிறேன். நீ எதைச் செய்தாலும் முழுமையாக செய். நீ மிகச்சரியானவனாக இருக்கமுடியாது, ஆனால் உன் சரியற்ற தன்மை முற்றிலும் அழகானதாக, அது உனது முழுமையில் நிரம்பி இருக்க முடியும்.

மிகச்சரியானவனாக இருக்க ஒருபோதும் முயற்சி செய்யாதே, இல்லாவிடில் நீ மேலும் மேலும் வேதனையைதான் உருவாக்குகிறாய். இங்கு ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன. மேலும் உனக்கு பிரச்னைகளை உருவாக்கிக் கொள்ளாதே. முழுமையாக இரு. நீ எங்கே இருந்தாலும் என்ன செய்தாலும் முழுமையாக செய். அதனுள் செல். அது உனது தியானமாகட்டும். அது சரியானதா இல்லையா என்று கவலை படாதே. அது சரியானதாக இருக்காது. அது முழுமையானதாக இருந்தால் போதுமானது. அது முழுமையானதாக இருந்தால் நீ அதை செய்யும்போது விருப்பபட்டு செய்யலாம். நீ அதன்மூலம் ஒரு நிறைவை உணரலாம், நீ அதனுள் செல்லலாம். நீ அதனுள் ஆழ்ந்து விடலாம், நீ அதிலிருந்து வெளியே வரும்போது புதிதாக இளமையாக புத்துணர்வோடு வரலாம்.

புத்துணர்வோடு முழுமையாக செய்யப்படும் எல்லா செயல்களும் முழுமையோடு செய்யப்படும் எந்த செயலும் தளைகளை கொண்டு வருவதில்லை. முழுமையாக அன்பு செய்யும்போது அங்கு பந்தம் எழுவதில்லை. அன்பு அரைகுறையாகும் போதுதான் அங்கு பந்தம் உருவாகிறது. முழுமையாக வாழ், சாவைக் கண்டு பயப்பட மாட்டாய். வாழ்வை பிளந்தால் அங்கே சாவை கண்டு பயம் வரும். ஆகவே மிகச்சரியாக என்ற சொல்லை மறந்து விடு. அது மிகவும் வன்முறையான சொற்களில் ஒன்று. இந்த சொல் உலகத்திலுள்ள அத்தனை மொழிகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டிய ஒன்று. இது மனித மனத்திலிருந்து எடுக்கப்பட வேண்டிய ஒரு சொல். இதுவரை யாரும் அப்படி இருக்க முடிந்ததில்லை, அப்படி யாரும் இருக்கவும் முடியாது.

எல்லாமும் சரியானதாக இருக்கும் ஒரு ஓமாகா பாயிண்ட் உண்டு என்று டெலிஹார்ட் டீ சார்ட்டின் கூறுவார். அப்படி ஒரு ஓமாகா பாயிண்ட் கிடையாது. அப்படி இருக்கவே முடியாது. உலகம் நகர்ந்து கொண்டே இருக்கிறது, பரிணாம வளர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் நெருங்கிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் நாம் அடையவேயில்லை. ஏனெனில் நாம் அடைந்து விட்டால் முடிந்தது. ஆனால் கடவுள் இன்னும் வேறுபட்ட விதங்களில் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

ஒரு விஷயம் உறுதி. அவர் தனது வேலையில் சந்தோஷமாக இருக்கிறார். இல்லாவிடில் அவர் இதை எப்போதோ கைகழுவி விட்டிருப்பார். அவர் இன்னும் தனது சக்தியை இதில் செலுத்திக் கொண்டே இருக்கிறார். கடவுள் உன்னால் மகிழ்ச்சி அடையும்போது நீ உன்னைப் பற்றி மகிழ்ச்சியற்று இருப்பது மடத்தனமானது. நீ மகிழ்வோடு இரு. மகிழ்ச்சியே நிறைவான எல்லையாக இருக்கட்டும். நான் புலன் உணர்ச்சியை ஆதரிப்பவன். அதுதான் மகிழ்ச்சியின் வெளிப்பாடு என்பதை நினைவில் கொள். நீ என்ன செய்தாலும் மகிழ்வோடு இரு. அவ்வளவுதான். அது சரியானதா இல்லையா என்பதைப்பற்றி கவலைப்படாதே!

சரியானதாக இருக்க வேண்டும் என்ற முனைப்பு எதற்கு? அந்த முனைப்பினால் நீ இறுக்கமாக, வேதனையோடு, தவிப்போடு இருக்கிறாய். அதனால் நீ எப்போதும் பிளவுபட்டவனாக, தளர்வாக இல்லாமல் சிக்கலில் சிக்கி தவிக்கிறாய்.

வேதனை என்ற பொருள் தரும் ஆங்கில வார்த்தை ஆகோனி (Agony) பிளவுபட்டிருப்பது என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். எப்போதும் தொடர்ந்து தன்னுடன் மல்யுத்தம் செய்துகொண்டே இருப்பது. இதுதான் ஆகோனி என்ற ஆங்கில வார்த்தையின் பொருள். நீ உன்னில் திருப்தியாக இல்லையென்றால் நீ வேதனையில்தான் இருப்பாய் – நடக்க முடியாததை கேட்காதே. உன்னை நேசி. அடுத்தவர்களையும் நேசி, இயல்பாக இரு. ஓய்வாக இரு.

மிகச்சரியாக செயலை செய்ய நினைப்பவன் ஒரு பைத்தியக்காரன். அவன் தன்னை சுற்றிலும் அந்த பைத்தியக்காரத்தனத்தை உருவாக்குவான். அதனால் மிகச்சரியான முறையை கடை பிடிப்பவனாக இருக்காதே. யாராவது உன்னைச் சுற்றி அப்படி இருந்தால், அவர்கள் உனது மனதையும் கெடுப்பதற்கு முன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர்களிடமிருந்து தப்பி போய் விடு.

எல்லோரும் ஒருவிதமான ஆழமான ஆணவத்தில் சிக்கி விடுகின்றனர். உனது கருத்துகளும் உனது செயல்கள் சரியானவை எனக் கூறுவதும் நீதான் சிறந்தவன் எனக் கூறும் ஒரு வகையான ஆணவம்தான். ஒரு தாழ்மையான மனிதன், தன் வாழ்க்கை மிகச்சரியானதாக இருக்காது என்பதை ஏற்றுக் கொள்வான். ஒரு உண்மையான ஆன்மீகவாதி நாம் எல்லைகுட்பட்டவர்கள், நமக்கு வரையறைகள் உண்டு என்பதை உணர்ந்து கொள்வான்.

மிகச்சரியானவனாக இருக்க முயற்சி செய்யாதவனே அடக்கமானவன் என்பதே என்னுடைய வரையறை. ஒரு அடக்கமானவன் மேலும் மேலும் முழுமையானவனாக மாறுவான். ஏனெனில் மறுப்பதற்க்கோ, தவிர்ப்பதற்க்கோ எதுவும் இல்லை. அவன் எப்படியோ அதை அப்படியே அவன் ஏற்றுக் கொள்வான். நல்லதோ, கெட்டதோ... ஒரு அடக்கமான மனிதன் மிகவும் செழிப்பானவன், ஏனெனில் அவன் அவனை முழுமையாக ஏற்றுக் கொண்டவன். அவனது கோபம், செக்ஸ், பேராசை, எல்லாமும் ஒத்துக் கொள்ளப்படுகிறது. அந்த ஆழ்ந்த ஏற்றுக் கொள்தலில் ஒரு ரசாயன மாறுதல் நிகழ்கிறது. எல்லா அசிங்கங்ளும் தானாகவே மறையத் தொடங்கும். மேலும் மேலும் முழுமையாக, மேலும் மேலும் லயப்படுதல் நிகழ்கிறது.

உன்னுடைய கருத்துக்களால் உன்னுடைய துயரத்தை நீயே உற்பத்தி செய்து கொள்கிறாய் என்பதை நீ புரிந்து கொள்ளும் நாளில் எல்லா கருத்துக்களையும் உடைத்து விடுவாய். அப்போது நீ அது என்னவாக இருந்தாலும் அதன்படியே உண்மையாகவும் இயல்பானவனாகவும் இருக்க ஆரம்பிப்பாய் – அதுதான் மிகச் சிறந்த நிலைமாறுதலாகும்.

- ஓஷோ
DANG DANG DOKO DANG

ற்போது நாம் சந்தித்து வரும் தட்ப வெப்ப நிலை மாறுபாடு என்பது நாம் எப்போதும் சந்தித்திராத ஒன்று என்ற விழிப்புணர்வு அனைத்து மக்களிடமும், அனைத்து மட்டங்களிலும், உலகளாவிய அளவில், அனைத்து துறைகளையும் கடந்து, அரசு மற்றும் தனியார் அமைப்புகளிடையேயும், ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்த தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை, தொழிற்புரட்சி ஏற்பட்டதிலிருந்தே (18ஆம் நூற்றாண்டின் பின்பகுதி மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் முன்பகுதி) உலகம் சந்தித்து வருகிறது என்பது இன்று பரந்து பட்ட அளவில் உணரப்பட்டிருப்பதே ஒரு எச்சரிக்கை செய்தியாகும். மேலும், இத்தகைய தட்ப வெப்பநிலை மாறுபாடானது, உண்மையானதே, பொய்யான சமிக்கை அல்ல என்பதற்கு ஆதாரமாக பல அறிவியல் உண்மைகள் கண்டறியப்பட்டு வருகின்றன. அவற்றில் சில உலக அளவிலான உதாரணங்கள் கடந்த 100 ஆண்டுகளில், புவி மேற்பரப்பின் வெப்ப நிலை 0.74 டிகிரி செல்சியசாக உயர்ந்துள்ளதாம். 1850ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டவைகளிலேயே கடந்த 11 வருடங்கள் தான் அதிக (1995-2006) வெப்பமயமான வருடங்கள்.

அனல் பரவலாக்கம் மற்றும் பனிப் பாறைகள், பனிக்கட்டிக் கூம்புகள் மற்றும் போலார் பனித் தட்டுக்கள் உருகுதல் ஆகியவற்றால் வெப்பநிலை அதிகரிப்பதுடன் கடல் மட்டமும் உயர்ந்து வருகிறது. (1993லிருந்து வருடத்திற்கு 3 மி.மீ உயரம் வரை); உலகின் பல பகுதிகளில் மழைப் பொழிவுத்தன்மைகளில் மாறுபாடுகள் காணப்படுதல்; அடிக்கடி நிகழும் சூடான காற்றலைகள், அதீத வெப்பமான பகல் மற்றும் இரவு நேரங்கள்; பருவ நிலை மாற்றங்களால், வெப்ப மண்டல சூறாவளி, புயல் அலையெழுச்சி, வெள்ளப் பெருக்கு மற்றும் வறட்சி ஆகியவை தொடர்ந்து தீவிரத்துடன் நிகழ்வது அதிகரித்து கடலோரப் பகுதிகளில் பேரிழப்பினை உண்டாக்குகிறது. கடந்த 15 ஆண்டுகளில் (1991-2005) பதிவான பேரிழப்புகளின் 76%மான, 5210 நிகழ்வுகள் நீர்நிலைக் காரணிகளால் உண்டான பேரிழப்புகளே. புள்ளிவிவரங்களின்படி, இது மேலும் எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கும் முகமாகவே தெரிகிறது.

குறிப்பாக, கடலை விட நிலப்பகுதியில் அதிக வெப்பநிலை பதிவாகியிருந்தாலும், பெருங்கடல்களே, அதீத வெப்பத்தின் 80%ஐ கிரகித்துக் கொள்கின்றன. இது சாதாரணமான புவி தட்ப வெப்ப நிலைக்கும் மேல் கூடுதலானதாகும். இதனால் கடல் நீரில் அனல் பரவுதல் நிகழ்கிறது. அனல் பரவலாக்கத்துடன் சேர்ந்து பனிப்பாறை உருகி கடலில் வந்து சேருவதால், கடல் மட்டம் உயர்கிறது. 1961-2003க்கும் இடையே உணரப்பட்ட உயர்வு வருடத்திற்க்கு 1.8மி.மீ ஆகவும், 1993-2003க்கும் இடையே வருடத்திற்கு 3.1 மி.மீ ஆகவும் இருந்தது. ஆனால் 20ஆம் நூற்றாண்டின் மொத்த கடல் மட்ட உயர்வு 0.17 மீட்டர்கள். கடல் மட்ட உயர்வினால் பெரிய ஆறுகளில், பெரும் வடிநிலப்பகுதிகளில்,கடலோரப் பகுதிகளில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படுதல், தாழ்வாக உள்ளப் பகுதி மூழ்குதல்; கடலரிப்பு; மண் உவர்ப்பு அதிகரித்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும், வெப்ப நிலை அதிகரிப்பு குறைந்தது 0.2 டிகிரி செல்சியஸ் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 2100 க்குள், வெப்ப நிலை அதிகரிப்பு 2 டிகிரி செல்சியசிலிருந்து 4.5 டிகிரி செல்சியசாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. அதே கால இடைவெளியில், கடல் மட்ட உயர்வு 0.1 லிருந்து 0.9 மீட்டராக இருக்கும். இந்தக் கணிப்புகள் உண்மையானால், உயிர்ச் சூழல் மண்டலம் மிகப் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு, குறைந்தது 20 முதல் 30% உயிர் இனங்கள் அழியும் ஆபத்து உள்ளது. அதிக எண்ணிக்கயிலான மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாகும் நிலை ஏற்படும். இந்தியாவைப் பொறுத்த வரை, உலக வெப்பம் வெறும் 2 டிகிரி செல்சியஸ் உயர்வதாலேயே, மும்பை,சென்னை நகரங்களின் பகுதிகள் கடலில் மூழ்கி, சுமார் 7 மில்லியன் மக்கள் இடம் பெயர்க்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக புவிச் சுற்றுச் சூழலுக்குள்ளும் வெளியிலும் நிகழும் இயற்கை நடைமுறைகளே தட்ப வெப்பநிலை மாறுபாட்டினை தோற்றுவிக்கின்றன. உதாரணமாக, புவி அமைப்பின் வேறுபாடுகள் - வளிமண்டலத்தில் பசுமைக்குடில் வாயுச் சேர்மத்தின் அதிகரிப்பு; கடலியல் சுழற்சி; பனிப்பாறை மாற்றம்; புவித் தட்டு நகர்வுகள்; எரிமலைச்சீற்றங்கள் போன்ற செயல்கள் தட்ப வெப்ப நிலை மாறுபாடுகளை ஏற்படுத்தலாம். கதிரியக்க வேறுபாடுகள் - புவிச் சுற்றுச்சூழலுக்கு வெளியில் உள்ள காரணிகளான ஒளிச்செறிவு, சூரிய சுழற்சி; புவி மைய வேறுபாடுகள் போன்றவையும் தட்பவெப்ப நிலை மாறுபாடுகளுக்கு காரணமாகலாம். இருப்பினும் இது போன்ற இயற்கை நடவடிக்கைகளால் ஏற்படுத்தப்படும் தட்ப வெப்பநிலை மாற்றம் மிக மெதுவாகவும், பல நூற்றாண்டுகளும் பிடிக்கும். ஆனால், சமீப ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ள எச்சரிக்கை சமிக்கைகள் தெரிவிப்பது. வேகமான புவி வெப்பமடைதலுக்கு காரணம் இயற்கை நிகழ்வுகள் அல்ல இவை மனித நடவடிக்கைகளால் நிகழ்பவை என்பதாகும்.

1980களில் தான், அறிவியல் சான்றுகள், மனித செயல்களால் ஏற்படும் பசுமைக் குடில் வாயுக்களின் வெப்ப உமிழ்வை, புவியின் தட்ப வெப்ப மாறுதல் குறித்த ஆபத்துடன் இணைத்து ஒரு பொதுப் பிரச்சனையாகப் தொடர்புபடுத்த ஆரம்பித்தது. 1988-ல், உலக வானிலை மையமும் (WMO) ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் திட்டமும் (UNEP) இணைந்து மனித செயல்களினால் உண்டாக்கப்படும், தட்ப வெப்ப நிலை மாறுபாடுகள் குறித்த ஆபத்தினை ஆய்வு செய்வதற்கு தட்ப வெப்ப நிலை மாற்றம் மீதான அரசாங்கங்களுக் கிடையேயான குழுமத்தை ஏற்படுத்தியது. 1990-ல், ஐக்கிய நாடுகள் சபை, தட்ப வெப்ப நிலை மாறுபாடு குறித்த உடன்படிக்கை வடிவத்திற்கான சர்வதேச குழுவை (UNFCCC) உருவாக்கியது. இந்த உடன்படிக்கைக்கான வரையறையானது, தட்ப வெப்ப நிலை மாறுபாட்டுக்கு மனிதனால் ஏற்படும் மாற்றமே காரணம் என்று விளக்குகிறது.

இதில், பெருகி வரும் தொழில்மய நடவடிக்கைகளும் அதனால் விளையும் பெருங்கழிவுகளும் (அணு மற்றும் அனல் மின் திட்டங்கள்,துறைமுகங்கள், சுரங்க நடவடிக்கைகள், உரக்கழிவுகளை அதிகரிக்கும் விவசாயத் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் திட்டங்கள், நகர்மயமாதலால் விளையும் கழிவுகள், போன்றவை) வெப்ப நிலை அதிகரிப்பிற்குக் காரணாமாக உள்ளன. நகராட்சிக் கழிவு நீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் 80%க்கும் மேல் நச்சு இரசாயனங்கள், கனஉலோகங்கள், திட உயிர்க் கழிவுகள், கதிரியக்கக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டது. சூடான தொழிற்சாலைக் கழிவுகளும் கடல் நீரில் கலக்கப்படுகிறது. இந்த அனைத்து கழிவுகளும், கடற்கரை நீரோட்டத்தின் மூலம் பரவலாக்கப்படுகிறது. இந்த மாசுபாடுகள் கடல் உணவுச் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி, கடல் உணவை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் ஆரோக்கியக் கேட்டினை ஏற்படுத்துகிறது. இத்தகைய அழிவினைத் தரும் தொழில் நுட்ப நடவடிக்கைகளில் வளர்ந்த நாடுகளே இவ்வளவு காலம் முன்னணியில் இருந்து வந்தன. தற்போது, வளரும் நாடுகள் இந்த் அழிவினை முன்னின்று நடத்துவதற்கான திட்டங்களை வளர்ச்சி என்ற பெயரில் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. இதில் இந்தியாவின் நிலையைப் பார்போமானால், ஒரு புறம் அதிகரித்து வரும் வெள்ளப் பெருக்கு நிகழ்வுகள், மறுபுறம் கடும் வறட்சி என மாறுபாடான சூழலே நிகழ்ந்து வருவதைக் காண்கிறோம்.

உலகம் முழுவதும், கடற்கரைப் பகுதிகளே மக்கள் குடியிருக்க விரும்பும் பகுதியாகும். இந்தியா அதிலிருந்து மாறுபட்டதல்ல. இந்தியாவின் கடலோர மாவட்டங்களில், ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 455 நபர்கள் குடியிருக்கின்றனர். இது தேசிய சராசரியான, 324ஐவிட (2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி) 1.5 மடங்கு அதிகமானது. அனைத்துப் பெரு நகரங்களும் கடலோரப் பகுதிகளிலேயே அமைந்துள்ளன. இந்தியாவின் 8118 கிலோமீட்டர் தொலைவுள்ள கடற்கரை எல்லை பலவகையான வாழிடங்களைக் கொண்டது. மேற்கு கடற்கரைப் பகுதி பரந்த நிலத்தட்டினைக் கொண்டு, பின் நீர் இணைப்புகளாலும், சேறு, சகதி கொண்ட சமதளத்துடனும் உள்ளது. கிழக்கு கடற்கரை, தாழ்ந்த நிலப் பகுதியைக் கொண்ட காயல்கள், சதுப்பு நிலங்கள், கடற்கரைகள் மற்றும் மாங்குரோவ் அதிகமுள்ள டெல்டாப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள சிறு தீவுகளிலும், தமிழகத்தின் மன்னார் வளைகுடா மற்றும் லட்சத் தீவுகள், அந்தமான், நிக்கோபார் தீவுகளிலும் பவளப் பாறைகள் நிறைந்து காணப்படுகிறது. மன்னார் வளைகுடாப் பகுதி, கடல் பன்முகத்தன்மை பாதுகாப்பு பகுதியாகும். இந்தியாவில் 31 கடல் பாதுகாப்பு பகுதிகள் சுமார் 2,305,413 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள கடல் பகுதி தனித்த பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள கடல் வளங்களை கண்டறியவும் பயன் படுத்தவுமான சிறப்பு உரிமைகளை இந்தியா கொண்டிருக்கிறது.

இத்தகைய உயிர்ச் சூழல் தன்மை மிகுந்த நம் நாட்டில், தொழில் வளர்ச்சியைப் பொறுத்தவரை இரட்டை நிலையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒருபுறம், 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நிலைத்த வளர்ச்சிக்கும், அனைத்துத் துறைகளிலும் பேரழிவின் ஆபத்தினைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தாலும், திட்டச் செயல்பாடுகள் அனைத்திலும் அவை கடைபிடிக்கப்படவில்லை. உதாரணமாக, 1990 களில் மேற்கொள்ளப்பட்ட புதுப்பிக்கும் தன்மையுடைய மின்ஆற்றல் தொழில் நுட்பத்தினை மேம்படுத்துவதற்கான திட்டங்களும், கொள்கைகளும் 111 மில்லியன் டன் வெப்ப உமிழ்வுகள் குறைப்பதற்கு பேருதவியாக இருந்தது. இதனடிப்படையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட 7300 க்கும் மேற்பட்ட காற்றாலைகள் மூலம், 3600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படுகின்றது (உச்சபட்சத் தேவையில் 40%) ஆனால், இதே கடலோரப் பகுதிகளில், அணு மற்றும் அனல் மின் நிலையத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு, மேற்படி சேமித்த வெப்ப உமிழ்வு அளவை விட பல மடங்கு அதிகமான அளவை வெளியேற்றி வருகின்றன. வட சென்னை அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணு உலை, கூடங்குளம் அதிவேக அணு உலைகள், வரவிருக்கும் தூத்துக்குடி அனல் மின் நிலையம், உடன்குடி அனல் மின் நிலையம் மற்றும் இவற்றின் நிலக்கரி, எரிபொருள் போக்குவரத்துத் தேவைகளுக்காக விரிவாக்கப்படவுள்ள அல்லது புதிதாக அமைக்கப்படவுள்ள துறைமுகங்கள் ஆகியவை எந்த விதத்திலும் இந்தியாவின் கொள்கை என்றழைக்கப்படும் நிலைத்த வளர்ச்சிக்கான திட்டங்களல்ல.

இதனுடன் கூட, 1999ல் இந்திய அரசினால் கொண்டுவரப்பட்ட புதிய கண்டறிதல்களுக்கான அனுமதிக் கொள்கை (Exploration Licensing Policy) இந்தியக் கடல் பகுதியில் குறிப்பாக கிழக்கு கடலோரப் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் திட்டங்களை தனியார் பெரு நிறுவனங்கள் மூலம் ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒருபுறம் தேசிய சுற்றுச் சூழல் கொள்கையில் (2006) கடலோர வளங்கள், உயிர்ச்சூழலைப் பாதுகாக்கும் ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மையை அறிவித்துவிட்டு, மறுபுறம் அதனை அழிக்கும் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது என்பது இந்திய அரசின் இரட்டை வேடக் கொள்கையையே காட்டுகிறது. இதில் பலியாவது நமது இயற்கை வளங்களும் அதன் விளைவாக நிகழும் வெப்ப நிலை மாறுபாடுகளும் தான். மேலும், இத்தகைய திட்டங்களின் நெருக்கடியால், பேரழிவுகள் நிகழும் போது 2% அளவிற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைகிறது. இதில் அதிகம் பாதிப்படைவது கடலோரப் பகுதிகளிலில் வாழும் மக்களே.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் பல திட்ட ஆய்வுகளின் படியும், இந்திய அறிவியலாளர்களின் ஆய்வின்படியும், புவி வெப்பமடைதலால், இந்தியாவிற்கு எதிர்வரும் காலத்தில் 2100க்குள் வெப்ப நிலை 4 செல்சியஸ் அதிகரிக்கும். ஆண்டிற்கு 1 மி.மீ கடல் மட்டம் உயரும். மழை மற்றும் பனிப் பொழிவு 11% அதிகரிக்கும். தட்ப வெப்பம் சார்ந்த காரணிகளால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9%வரை வீழ்ந்து அனைத்து வளர்ச்சி நோக்கங்களையும் அடித்துச் செல்லும்; 35% க்கும் மேற்பட்ட ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கும் குறைவான வருவாயில் வாழும் மக்கள் தற்போது அதிக ஆபத்தில் உள்ளனர்.

- கல்பனா

கீற்று.காம்
காலந்தோறும் போர்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. தேசியப் பெருமிதம், இனமானம், வீரம், எல்லை விரிவாக்கம், கௌரவப்பிரச்சினை என்று போருக்கான காரணங்களை ஆட்சியாளர்களும் ஆள விரும்புவோருமே உருவாக்குகின்றனர். உன்னத இலட்சியம் அல்லது அற்பமான கற்பிதம் என்ற இருபுள்ளிகளுக்கிடையே அலைவுறும் எதுவொன்றையும் போருக்கான காரணமாக கட்டமைத்து விட முடிகிறது அவர்களால். உண்மையில் அவர்கள் இருவேறு முகங்கள் கொண்ட ஒருவரே தான். சுண்டிவிடப்படும் நாணயத்தில் பூவோ தலையோ எது விழுந்தாலும் அது போரை தொடங்குவது அல்லது தொடர்வதற்குரிய சமிக்ஞையாகவே அவர்களது அகராதியில் பொருள் விளக்கம் உள்ளது. எனவே காலமும் களமும்தான் மாறுகிறதேயன்றி போரை அவர்கள் கைவிடுவதாயில்லை. ஆயுதங்களின் மீதான ஈர்ப்பு தவிர்க்கவியலாதபடி தம்மை மனிதவுயிர்கள் மீதான வெறுப்புக்குள் நெட்டித்தள்ளுவதை ஒருபோதும் அவர்கள் உணர்ந்தாரில்லை. முகமும் இருதயமுமற்ற ஆயுதங்களின் முனையில் வழியும் ரத்தத்தால் நிறைகிறது அவர்களது கோப்பை.
சொந்தமக்களின் நாவும் குரலுமே போர்க்கடவுள் கோரும் முதற்படையல். எனவே போரின் நோக்கம் எதுவாயினும் அதன்பொருட்டு நோவதும் சாவதும் யாரென்ற கேள்வி எழாது ஒடுக்குவதிலிருந்தே போர் தொடங்கிவிடுகிறது. அதற்கு பிறகு நடப்பதெல்லாம் தத்தமது படைக்கலத்தில் அணிவகுத்து நிற்கும் ஆயுதங்களின் மேன்மையை சோதித்துப் பார்ப்பதும் வீழ்ந்தத் தலைகளின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதும்தான். இங்கு யுத்ததர்மம் என்று பேசுவதெல்லாம் வியர்த்தம். யுத்தமே தர்மமல்ல என்கிறபோது அதிலென்ன வெங்காயத்துக்கு தர்மமும் இன்னொன்றும்?
எதிரெதிர் முனைகளைப் போல் மேலுக்குத் தோன்றும் வெற்றியும் தோல்வியும் ஒன்றையொன்று ஒட்டியேயிருக்கின்றன. ஒன்றின் இருப்பிலேயே மற்றது மேலெழுகிறது. அரூபமாய் இருக்கிற கருத்தை திடப்படுத்துவது / நிர்மூலமாக்குவது என்ற வெறி இறுதியில் ராணுவத்தின் வழியே நடைமுறைக்கு வருகிறது. எப்படியாயினும் யாரோ ஒரு ஆட்சியாளனுக்காக ஒரு ராணுவமே வெற்றியடைகிறது. தோற்பதென்னவோ இருதரப்பின் மக்களாய் இருப்பதுவே வரலாறாய் நெளிகிறது. இரண்டாம் உலகப்போரிலும் இதுவே நிகழ்ந்தது.
ஜெர்மனியின் பெயரால் ஹிட்லர் தொடங்கி வைத்தப் போர் எல்லையற்றுப் பரவி உலகையே கிடுகிடுங்க வைத்ததை சொல்லிச் செல்ல இதுவல்ல இடம். ஆசிய நாடுகளை ஜப்பானும், ஆப்பிரிக்க நாடுகளை இத்தாலியும் ஐரோப்பிய நாடுகளை ஜெர்மனியும் காலனிகளாக பங்கிட்டுக் கொள்ளும் பேராசையில் டோஜோவும் முசோலினியும் ஹிட்லருடன் கூட்டு சேர்ந்தார்கள். இவர்களது போர்வெறிக்கு முன்னே தாக்குபிடிக்க முடியாமல் சடசட வென சரிந்து விழுந்தன சாம்ராஜ்யங்கள்.
தடையற்றப்பாதையில் கிடைத்த வெற்றிகளின் கிறக்கத்தில் மேலும்மேலும் முன்னேறிச் சென்ற ஹிட்லரின் படைகள் சோவியத் யூனியனில் தன் உச்சபட்ச மூர்க்கத்தை வெளிக்காட்டின. எட்டே எட்டு வாரங்களில் சோவியத்தை வீழ்த்தி விடும் திட்டத்தோடு களமிறங்கியதால் அங்கு ஏற்படுத்திய அழிமானங்கள் போர் வரலாற்றில் இதுவரை உலகம் அறியாதது. நிலை குலைந்திருக்கும் நாடுகளது மனிதவுயிர்களின் எண்ணிக்கையில் அர்த்தம் ஒன்று மில்லை. வழக்கத்திலில்லாத கடுமையான வழிமுறைகள் தாக்குதல்கள் மூலம் மட்டுமே பிறரை அச்சுறுத்தக்கூடிய அளவிலானதொரு பயங்கர வெற்றியை ஈட்ட வேண்டும் என்றும் சரணடையும் ரஷ்யர்களைப் பாதுகாக்க உணவுக்கும் மருந்துக்கும் செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதால் தனிநபர் எவரொருவரின் சரணாகதியையும் ஏற்றுக்கொள்ளாமல் கொல்லப்பட வேண்டும் என்றும் தன்படையினருக்கு உத்தரவிட்டிருந்தான் ஹிட்லர். எனவே சிறைபிடிக்கப்பட்ட 1981000 ரஷ்யர்களின் பேரின் கதி என்னவாகியிருக்கும் என்பதில் மர்மத்துக்கு இடமில்லை. இரவும் மூடுபனியும் என்ற சங்கேதப் பெயரால் அழைக்கப்பட்டகாணாமல் போக்கடித்தல் என்ற கொடூர தண்டனையை நிறைவேற்ற தன் தனிப்படையை ஏவிவிட்டிருந்தான் ஹிட்லர். லெனின், ஸ்டாலின் என்ற பெயர்கள் மீது அவனுக்கிருந்த ஆத்திரத்தால் லெனின் கிராட் மற்றும் ஸ்டாலின் கிராட் நகரங்களையே குண்டுமாரிப் பொழிந்து நிர்மூலமாக்கிவிட வேண்டுமென்று வெறிகொண்டிருந்தான்.
ஆனால் நிலைமை அப்படியே ஏறுமுகமாய் நீடித்துவிடவில்லை ஹிட்லருக்கு. 164 டிவிஷன்களைக் கொண்டிருந்த ரஷ்யப்படைகள் சரிபாதியாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையிலும், சாவதற்கு முன் பற்களைக் கொண்டாவது ஒரு ஜெர்மானிய ராணுவத்தானின் குரல்வளையைக் கடித்துத் துப்புமளவுக்கு ரஷ்யர்களின் பதிலடி உக்கிரமாகவே இருந்தது. கடும் பனிப்பொழிவு வேறு. -28டிகிரி பாரன்ஹீட் அளவுக்கான குளிர். ஈடுகொடுக்க முடியாத ஹிட்லரின் ராணுவத்தினர் ஒவ்வொரு 7 விநாடிக்கும் சராசரியாக ஒருவர் வீதம் செத்தொழிந்ததாக ஒரு கணக்கிருக்கிறது. உலகையே தன் காலுக்கு கீழிருக்கும் ஒரு பந்தென எண்ணி உதைத்தாடிக் கொண்டிருந்த ஹிட்லரின் தோல்வி அப்போதே தீர்மானமாகிவிட்டது.
உலகம் அதுவரை கண்டறியாத வகையில் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சியை நடத்தி மார்க்சிய லெனினிய அடிப்படையில் சோசலிச நிர்மாணத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த சோவியத் யூனியன் மீது ஹிட்லரின் படையெடுப்பு உலக முதலாளித்துவவாதிகளுக்கு உள்ளூர மகிழ்ச்சியையே தந்தது. சோசலிசக் கட்டுமானத்தில் குவிந்திருந்த கவனத்தை வழி மாற்றித் திருப்பிவிட முடிந்ததற்காக அவர்கள் மானசீகமாய் ஹிட்லரைப் பாராட்டினர். ஆனால் சோவியத்தின் இறுதி அத்தியாயம் ஹிட்லரால் எழுதப்படவிருக்கிறது என்ற அவர்களின் கணிப்பும் விருப்பும் பொய்த்துப்போயின. சோவியத் படைகள் தமது நாட்டை மட்டுமல்லாது ஹிட்லரிடமிருந்து உலகத்தையும் காப்பாற்றியது. ஹிட்லரின் படைகளை அவை புறப்பட்ட இடத்திற்கே விரட்டிச் சென்ற சோவியத் படைகள், இறுதியாக ஜெர்மனியையும், ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றையும் விடுவித்தன.
இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட சோவியத் மக்கள் மற்றும் படையினர் ஒவ்வொருவருக்கும் ஒருநிமிடம் அஞ்சலி செலுத்த விரும்புகிற ஒருவருக்கு தொடர்ந்து 38 ஆண்டுகள் தேவைப்படுமாம். போரின் மொத்த உயிரிழப்பு சுமார் ஐந்து கோடிப்பேர். அவர்களில் 3 கோடிப்பேர் சோவியத் யூனியனைச் சேர்ந்தவர்கள். இது வெறும் உயிரிழப்பு பற்றிய தோராயமான கணக்குதான். பொருளிழப்பு, உளவியல் பாதிப்பு, அங்கவீனம் குறித்து யாதொரு கணக்கீடும் இதுகாறும் இறுதிப்படுத்தப்படவில்லை.
அனோனிமா இந்த போர்ச்சூழலுக்கிடையே வாழ்ந்த ஒரு ஜெர்மானியள். 12 ஐரோப்பிய நாடுகளில் சுற்றித் திரிந்திருந்தாலும் பெர்லின் நகரத்தில் வாழ்வதே அவளுக்கு உவப்பானதாய் இருக்கிறது. அனாதைச்சிறுமி தெருவிலே அலைவதுதான் நியதி என்பதை தன்னளவில் மறுத்து சுயமரியாதையோடு வாழ்ந்து கொண்டிருந்தவள். ஹிட்லரின் படைகளை விரட்டி வந்த ரஷ்யப் படைகள் ஜெர்மனிக்குள்ளேயே நுழைந்துவிட்டதையடுத்து நடந்த குண்டுவெடிப்பில் அவளது மூச்சுக்காற்றாலும் புத்தகங்கள் ஓவியங்களாலும் நிரம்பியிருந்த அவளது வீடு சிதறிப்போனது. அவளுக்கு சொந்தமென்று இருந்த எல்லாவற்றையுமே இழந்துவிட்டதால் கண்ணுக்குத் தெரிந்த எல்லாவற்றையுமே தனக்கு சொந்தமானவையென்று வரித்துக் கொண்டு ஒரு அன்னிய வீட்டின் நிலவறையில் பதுங்கி வாழும் சாமானியர்களில் ஒருத்தியாக அனோனிமா அறிமுகமாகிறாள் நமக்கு. இடையறாத குண்டுமழைக்கூடாக போர்ச்சூழலின் பதற்றங்களை, கவலைப்படுவதால் ஆகக்கூடியது எதுவுமில்லை என்பதால் ஒரு வேடிக்கை மனோபாவத்துடன் குறிப்பெழுதத் தொடங்குகிறாள். அவளது குறிப்புகள் யார் மீதுமான புகார்ப்பட்டியலாகவுமின்றி அன்றையச் சூழலை அதன் முழுப்பரிமாணத்தோடு ஒவ்வொரு தனிமனிதரும் எவ்வாறு எதிர் கொண்டனர் என்பதன் மனவோட்டமாக உருப்பெற்றுள்ளன.
யாருடைய அனுதாபத்தையும் கோரி நிற்காமல் மனதிற்குப்பட்டதை எழுதிச் செல்கிறாள். பின்னாளில் இக்குறிப்புகள் புத்தகமாக வெளியானபோது அது அவளது வாழ்க்கை மட்டுமல்ல, போர்ச்சூழலுக்குள் வாழநேரும் எவரொருவருக்குமானதுதான் என்கிற எளிய உண்மை அதில் பொதிந்திருப்பதைக் கண்டது உலகம். எனவே அவள் தனது தனித்தப் பெயரையும் அடையாளத்தையும் துறந்து அனோனிமா ( முகம் மறைத்தவள்) என்று புத்தகத்துக்குத் தலைப்பிட்டது கவித்துவ உணர்விலல்ல.
சகமனிதர் மீதான வெறுப்பும் ஆயுதங்களையும் போரையும் கொண்டாடும் முனைப்பும் கொண்ட ஒரு ஆட்சியாளனின் கீழ் வாழ நேர்ந்த குடிமக்கள், அந்த ஒரு காரணத்திற்காகவே அனுபவிக்க நேரும் துயரங்களின் தொகுப்பான இந்நூல் இன்றைய காலத்திற்கான கேள்விகள் பலவற்றை தன்போக்கில் எழுப்பிச் செல்கிறது. தனது தனித்த அனுபவங்களைச் சொல்லிச் செல்லும் போக்கில் தன்னொத்தப் பெண்களுக்கு நேர்ந்த அவலங்களையும் விவரித்துப்போகிறாள். பெண் என்றான பிறகு அவள் எந்த நாட்டிலிருந்தாலும் அவளது அனுபவங்கள் ஒன்றெனவே இருப்பதை தன்னியல்பில் அம்பலப்படுத்துகிறாள். இதன் பொருட்டு அவள் தன்னை ஜெர்மானியள் என்று பெருமிதம் கொள்வதிலிருந்தும் ரஷ்யர்களையோ மற்றவர்களையோ வெறுத்தொதுக்குவதிலிருந்தும் வெகு இயல்பாகவே விலகி நின்றுவிடுகிறாள்.
இரண்டு ராணுவங்கள் தமக்கிடையே போரிட்டுக் கொள்ளும் போது அது வெறுமனே குறிப்பிட்ட யுத்தக்களங்களில் நடந்து முடிந்துவிடுவதில்லை. தவிர்க்கவியலாத வகையில் எந்த வொரு போரும் குடிமக்களையே தாக்கெல்லையாக மையப்படுத்துகிறது. ராணுவங்கள் குடிமக்களின் வாழ்வுரிமைகளை எந்தளவிற்கு பொருட்படுத்துகின்றன / உதாசீனப்படுத்துகின்றன என்பதும், ராணுவத்தின் பார்வையில் ஒரு பெண்ணின் பெறுமதி என்னவென்பதுவுமே அனோனிமாவின் பேசு புள்ளிகளாக மேலெழுகின்றன. எனவே அவள் ஜெர்மன் ராணுவம் சோவியத்யூனியனில் நிகழ்த்திய அத்துமீறல்களையும் அவற்றுக்கு எதிர்வினையாக ரஷ்யராணுவம் ஜெர்மனியில் நிகழ்த்திய அத்துமீறல்களையும் அருகருகாக வைத்துப் பார்க்கிறாள். சோவியத்தின் குழந்தைகளை சுட்டுக்கொன்றதும், குழந்தைகளின் கால்களை கயிற்றால் கட்டி குழந்தைகள் மண்டையை சுவரில் மோதி சிதறடித்ததுமான ஜெர்மானியப் படையினரின் அட்டூழியங்களுக்கான விலையை யாராவதொருவர் கொடுத்துத்தானேயாக வேண்டும் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்கிறாள்.
தேசியவாதம் / இனப்பெருமிதத்தின் பெயரால் தன் தரப்பை விமர்சனமின்றி மொன்னையாக ஆதரிக்கும் நிலையை ஒரு போதும் அவளால் எடுக்கவே முடியவில்லை. ஆடுகளத்தின் மையத்தில் நின்றாட வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருந்த போதிலும் அவள் ஆட்டத்துக்கு வெளியே நின்று எல்லா நிகழ்வுகளையும் ஒரு மூன்றாவது கண்ணைப்போல பார்த்து பதிவு செய்திருக்கிறாள். இதன் வழியே வெளிப்படும் கசப்பான உண்மைகள் ஈராக்கில், ஆப்கனில், காஷ்மீரில், மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், இலங்கையில் அந்த மக்களின் வெகு அடிப்படையான உயிர் வாழும் உரிமைக்கும் சுயமரியாதைக்கும் எதிராக ராணுவங்கள் எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை சுளீரென சொடுக்கி நினைவூட்டி அலைக்கழிக்கின்றன. ராணுவம் / ஆயுதங்களின் கண்காணிப்புக்குக் கீழே வாழநேர்வதன் கொடுமைகளை வரலாற்றிலிருந்து கற்றறிவதற்கு இன்றைய உலகம் இனியும் தயங்கக்கூடாது என்ற பதற்றத்திலிருந்தே, குழந்தைப் போராளியை மொழிபெயர்த்த தேவா, இந்த அனோனிமாவையும் மொழி பெயர்க்கத் தெரிவு செய்திருக்கக்கூடும்.
கொடுங்கோலாட்சியாளர்களிடமிருந்து மக்களைக் காக்கவென ஆரம்பிக்கப்பட்ட ஒரு விடுதலை இயக்கம், தன் கையிலிருக்கும் ஆயுதங்களையும் அவ்வாயுதங்களின் வழியே உருவாகும் அதிகாரங்களையும் எப்படி தன் சகபோராளிகளுக்கும் சொந்த மக்களுக்கும் எதிராகவே பயன்படுத்தியது என்பது குழந்தைப் போராளியின் மையம். ஒரு நாட்டை ஆளும் கட்சி / தத்துவம் எதுவாக இருப்பினும் அதன் ராணுவம் எப்போதும் ஒரு மரபான ராணுவத்திற்கேயுரிய குணநலன்கள் / குணக்கேடுகளுடன் தான் மக்களை அணுகும் என்பது அனோனிமாவின் மையம். இவ்விரண்டு எதிரெதிர் துருவ அமைப்புகளிடமுள்ள ஆயுதங்களும் அதிகாரமும் சாமானிய மக்களை என்ன பாடுபடுத்தும் என்கிற கொடிய அனுபவங்களைப் பெற்றிருக்கும் இலங்கைத் தமிழர்களிலிருந்து ஒருவர் இந்த இரண்டு நூல்களையும் மொழி பெயர்த்திருப்பது இலக்கிய ஆர்வத்திலிருந்து அல்ல என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
குழந்தைப்போராளி சைனா கெய்ட்ரஸியும் அனோனிமாவும் இருவேறு பெண்களல்ல. ஒரேவகையான கொடுமைகளை வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு முகாம்களிலிருந்து பெற்றுக்கொள்ள நேரிட்டப் பெண்களின் மாதிரிப் படிமங்கள்.
ஸீக்ரிப்ட் லென்ஸ் எழுதிய நிரபராதிகளின் காலம் நாடகத்தின் கதாபாத்திரங்கள், ஒரு குற்றம் நிகழ்கிறபோது அதில் தனக்கு உடன்பாடில்லை என்று மறுப்புரைக்கவோ எதிர்க்கவோ முன் வராதவர்கள் அந்தக் குற்றத்தின் இயல்பான பங்குதாரிகளா இல்லையா என்று ஓயாது வாதிட்டுக்கொள்வதைப் போலத்தான் அனோனிமாவும் அவளுடன் தங்கியிருப்பவர்களும் தர்க்கித்துக் கிடக்கிறார்கள். ஹிட்லர் என்ற போர்வெறியன் கையில் அதிகாரத்தைக் கொண்டு சேர்த்ததன் மூலம் அவனது எல்லா பழிபாவங்களிலும் தமக்கும் பங்கிருக்கிறது என்று உறுத்துகிற குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபடும் முயற்சியாகத்தான் ஹிட்லரின் சுயசரிதையான எனது போராட்டம் நூலை எரித்து வென்னீர் காய்ச்சுவதையும், ஹிட்லர் மீது நன்மதிப்பு கொண்டிருக்கிற சீகிஸ்முண்ட் என்பவரை பைத்தியக்காரன் என விளிப்பதையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
ஹிட்லரும் கோயபல்சும் வெற்றி அல்லது வீரமரணம் என்று ராணுவத்தை உசுப்பேற்றிக்கொண்டிருக்கும்போது எங்களுக்கு இறந்த வீரர்கள் தேவையில்லை உயிரோடிருக்கும் ஆண்களைத்தான் தேடுகிறோம். என்று அனோனிமா எதிர்நிலை எடுப்பதற்கும் இந்த மனநிலையே காரணமாய் இருக்கும். வீரம்தியாகம் என்று தூண்டிவிடப்படும் உணர்ச்சிகளுக்கு பொருளேதுமிருக்கிறதா? எல்லோரையும் சாகக்கொடுத்து தியாகிகளாக்கிவிட்டு யாருக்கு எதை பெற்றுத்தரப் போகிறாய் என்று அவள் உள்ளுறையாய் வைக்கும் கேள்வி எல்லை கடந்து எங்கெங்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டியதாயிருக்கிறது. போர்முனைகளில் பின்வாங்கி தளர்நடையில் முகாம் திரும்புகிற ஜவான்கள் மீது அவளுக்கு பரிதாபமே மிஞ்சுகிறது. யாரோ ஒருவனது விருப்பம் / கனவுக்காக போரிட்டு மாள்வதற்கென்று தயாரிக்கப்பட்ட பொம்மைகள் / இயந்திரங்கள் என்று தம்மையுணராத ஜெர்மனி ராணுவத்தினரைப் பார்த்து ஆட்டம் முடிந்து விட்டது, இப்போது நீங்களும் தெரு நாய்கள்தான் என்று  பரிகசித்து ஒரு பெண் கூச்சலிடுவதை அனோனிமா தன் குறிப்பில் இடம்பெறச் செய்திருக்கிறாள்.
இந்தப் போரின் முடிவில் பல தோல்விகளோடு ஆண் என்ற பாலினத்தின் தோல்வியும் சேர்ந்தே இருக்கும் என்ற அனோனிமாவின் தீர்க்கவசனம் காலத்தை மீறி இன்றும் நிற்கிறது மடங்காமல். மற்றவர்களுக்காவது தமது பாரத்தை இறக்கிவைக்க கடவுள் என்ற கற்பிதம் இருந்தது. அதுவுற்றவள் அனோனிமா. அவள் ஒருபோதும் ஜெபித்தவள் இல்லை. மகிழ்ச்சியான தருணங்க ளில் ஜெபிக்காமல் இருந்துவிட்டு துன்பவேளையில் ஜெபிப்பது பிச்சைக் கேட்பது போலாகும் என்ற சுயமரியாதையின் உந்துதலில் அவள் இனியும்கூட கடவுளிடம் மன்றாடுவதில்லை என்ற தெளிவுடன் இருந்தாள். அன்னிய ராணுவத்திடம் அகப்பட்டுக் கொண்டோமே என்று அழுதுபுரண்டு ஆகப்போவது எதுவுமில்லை என்பதையும் அவளுக்கு சூழல் விளக்கி விட்டிருந்தது. இடையறாத குண்டுமழைக்கிடையில் வாழும் ஒவ்வொரு நாளும் மரணத்தை வெற்றி கொண்ட நாள் என்றே கருதுகிறாள். அடுத்தநாள் என்பது நிச்சயமற்றிருந்த நிலையில் நாளை நடக்கப்போவது பற்றி கவலைப்படுவதைவிட இன்று முடிந்தமட்டிலும் வாழ்ந்து பார்த்துவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தவிட்டிருந்ததால், வருவது எதுவோ அதற்கு காத்திருப்பதே உசிதம் என்ற எளிய எல்லையை தனக்கானதாய் வரித்துக் கொண்டிருந்தாள். அதற்காக அவள் தன் முன்னே நிகழ்ந்தவற்றை எல்லாம் உணர்வுத் துடிப்பற்ற கண்ணாடி போல் பளபளக்கும் கண்களால் வெறுமனே வேடிக்கை பார்த்துவிட்டு நகர்ந்தாள் என்று குறுக்கிப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை.
எதுவும் செய்யவியலாத கையறு நிலையிலுள்ள மக்கள் சூழலையும் அதற்கு காரணமானவர்களையும் பகடி செய்து கடக்க முயற்சிப்பது உலகளாவிய நியதிபோலும். அனோனிமா அதைத்தான் செய்கிறாள். தங்களில் இன்னும் (ரஷ்ய ராணுவத்தினரால்) கன்னி கழிக்கப்படாதவளாய் இருப்பது யார் என்று பெண்களுக்குள் நடக்கும் விவாதங்கள் அவளுக்கு சிரிப்பையே வரவழைக்கிறது. கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருத்தி 24முறை வல்லுறவுக்காளானாள் என்ற பத்திரிகைச் செய்தியைக் கேள்விப்பட்டதும், இதையெல்லாம் அருகிலிருந்து யார்தான் சிரமமாக எண்ணுகின்றார்களோ என்று கேலி செய்கிறாள்.
பேரக்குழந்தைகளைக் கொண்ட மூதாட்டியைக்கூட வேட்டையாடும் வக்கிரம் தலைவிரித்தாடிய நிலையில் மாதவிலக்கடைந்தவள் போல பஞ்சுத்தக்கையை எப்போதும் பிறப்புறுப்பில் அடைத்துக்கொண்டு திரிவது, சமையலறையின் மேற்கூரைக்கும் சீலிங்குக்கும் இடைப்பட்ட பொந்தில் இரவும் பகலும் ஒளிந்து கிடந்து கன்னியாகவே நீடிக்க முயற்சிப்பது போன்ற தற்காப்பு முயற்சிகளால் பயனேதும் கிட்டப்போவதில்லை என்பதே அனோனிமாவின் கணிப்பு. உண்மையும்கூட அது தான். இரண்டு பெண்கள் சந்தித்துக்கொண்டால் நீ எத்தனை முறை (வல்லுறவுக்காளானாய்) என்று பரஸ்பரம் விசாரித்து ஆறுதல்படுத்திக் கொள்ளுமளவுக்கு நிலை மட்டுமீறி போய்க்கொண்டிருந்தது. அனோனிமாவும் தப்பவில்லை.
பெர்லினுக்குள் நிலைகொள்ளும் ரஷ்யப்படைகள் மக்களின் வீடுகளை ராணுவக்குடியிருப்புகளாக ஆக்கிரமித்ததிலிருந்தே எல்லாப் பிரச்னைகளும் தொடங்கியதாக அனோனிமா பழி போட வரவில்லை. அல்லது, பாசிசத்தை வீழ்த்தி மனித குலத்தை காப்பாற்றிய செஞ்சேனையின் வரலாற்றுப் பாத்திரத்தை அவதூறுகளால் நிரப்பி சிறுமைப்படுத்தவும் அவள் முயற்சிக்கவில்லை.தொடக்கத்தில் கேள்விப்பட்டிருந்ததைவிடவும் நற்தன்மை கொண்டவர்களாக, சினேகப்பூர்வமாக உரையாடக் கூடியவர்களாகவே ரஷ்யப்படையினரைக் காண்கிறாள். அத்துமீறி நடக்கத் துணிகிறவர்களை எச்சரித்தும் மிரட்டியும் பெர்லின் பெண்களைப் பாதுகாத்து அனுப்பியவர்களும் ரஷ்ய ராணுவத்தில் இருப்பதை அவள் கவனமாக பதிவு செய்திருக்கிறாள். பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடாது என்பதற்காக ஸ்டாலின் விதித்திருந்த ஆணை திரும்பத்திரும்ப நினைவூட்டப்படுகிறது. ஆனால் தம் வீட்டுப்பெண்களுக்கு ஜெர்மனி ராணுவம் இழைத்தக் கொடுமைகளுக்கு பழிதீர்த்தேயாக வேண்டும் என்ற வன்மத்தில் அந்த ஆணை தொடர்ந்து மீறப்பட்டுக் கொண்டேயிருந்தது. அனோனிமாவை மூவர் சூறையாடிக் கொண்டிருக்கும்போது அங்குவந்த ரஷ்ய ராணுவப் பெண்ணொருத்தி ஒரு கேளிக்கையை கண்டு களிப்பது போல் ரசித்துப்போகுமளவுக்கு பழியுணர்ச்சி தளும்பிக் கொண்டிருந்தது அவர்களிடம்.
ஒவ்வொரு வீட்டின் பின்புறக்கதவையும் இரவுபகல் பாராமல் இடித்துத் திறந்து உள்ளே நுழையும் முயற்சிகள் தொடர்கதையாகிப் போனது. அவமானம், வெட்கம், பாலியல் பலாத்காரம், அருவருப்பு என்பவையெல்லாம் பொருளற்ற வெறுஞ்சொற் களாக இழிந்துகிடந்தன. அவள் விரைத்துக் கிடந்தாள். மனரீதி யான இறுக்கம் உடல் இறுக்கத்தையும் கொண்டு வந்து சேர்த்ததாக ஓரிடத்தில் குமுறுகிறாள்.
திரும்பத்திரும்ப தன்மீது கூட்டங்கூட்டமாக வந்து மொய்க்கிறவர்களைப் பார்த்து பதறிப்போன அனோனிமா எல்லோரும் வேண்டாம், ஒரு ஆள் - நீ மட்டும் என்று இரந்து நிற்கும் நிலைக்குத் தாழ வேண்டியிருக்கிறது. அவளது வேண்டுதலுக்கு இரங்குவார் யாருமில்லை அங்கு. அடுத்தடுத்த நாட்களும் இதேநிலைதான். ராணுவ பூட்சின் அடியில் ஒட்டியிருக்கும் அழுக்கு போலாகிவிட்ட அவளிடம் கர்ப்பந்தரித்து விடுவாயோ என்று ஒருத்தி கேட்ட போது பலர் நடமாடும் பாதையில் புல் முளைக்காது.  என்று பதிலிறுத்து தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறாள். ஆனாலும் ராணுவத்தினரின் வல்லுறவால் தங்கிய கர்ப்பத்தை கலைப்பதற்கும் பால்வினை நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் தனியாக வைத்தியசாலைகளை நிறுவத்தான் வேண்டியிருந்தது அங்கு. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது வன்புணர்வுக்கு ஆளாகி கர்ப்பந்தரித்தவர்கள் எல்லைப்புறங்களிலும் இருநாட்டின் தலைநகரங்களிலும் மனநிலை சிதைந்து அனாதைகளாக உழன்று திரிந்ததை நினைவூட்டும் கொடூரங்கள் அனோனிமாவிலும் துருத்திக் கொண்டு பதற்றமடையவைக்கின்றன.
பாதுகாப்பற்ற இரையாக இனி நீடிக்கமுடியாது எனப் புரிந்து கொண்ட அனோனிமா பலம் பொருந்திய ஓநாயை அடக்கிப் பழக்கப்படுத்தி மற்றைய ஓநாய்களை விரட்டியடிக்கும் தற்காப்பு உத்தியைக் கையாள்கிறாள். இதற்காக தன்னிடம் வரும் ரஷ்ய ராணுவத்தினரில் உயர் அதிகாரத்தில் இருக்கும் லெப்டினன்ட், மேஜர் போன்றவர்களுக்கு மட்டுமே உரிமையுள்ளவளாக அவள் தன்னை மாற்றிக் கொள்கிறாள். அதிகாரமிக்கவர்களுக்கு அணுக்கமானவள் என்பதால் நிலவும் உணவுத் தட்டுப்பாட்டிலிருந்து அவளால் தப்பித்துக் கொள்ள முடிகிறது. ஒரு அதிகாரி வேறிடத்திற்கு பெயர்ந்து சென்று விடுகிறபோது வேறொரு புதிய மேஜரை தன்  பாதுகாப்புக்காகவும் உணவுத் தேவைக்காகவும் எதிர்பார்க்க வேண்டியவளாகிறாள்.
அனோனிமாவைப்போலவே ஒவ்வொரு பெண்ணும் சூழலுக்குப் பணிந்து பிழைத்திருக்க விதிக்கப்பட்டவர்களாயிருந்தனர். அமைதிக்காலத்தில் யாரோ ஒரு பொறுக்கி ஒரு பெண்ணை வன்புணர்வு செய்திருந்தால் ஆர்ப்பாட்டம் - காவல் நிலையத்தில் புகார் - கைது - விசாரணை - தண்டனை என்று என்னென்னவோ நடந்திருக்கும். ஆனால் போர்க்காலம் என்ற ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு. ம்... எல்லா அத்துமீறல்களும் அட்டூழியங்களும் போரின் ஒருபகுதியென கணக்குத் தீர்ப்பதைத்தான் உலகம் கண்டது. சண்டைக்கு சிங்காரமில்லை என்று நம்மூரில் சொல்வதைப்போல எல்லா கொலைகளும் வன்புணர்வுகளும் கருச்சிதைப்புகளும் பாலியல் வக்கிரங்களும் கொள்ளையடிப்புகளும் யுத்தமென்றால் இதெல்லாம் நடக்கும் தானே என்று உதட்டைப் பிதுக்கி கடந்துபோக உலகம் பழக்கியிருக்கிறது. ஆனால் அனோனிமா இந்த பொதுப்புத்திக்கு எதிர்த்திசையில் மறித்து நிற்கிறாள். ஏனெனில் அவள் யுத்தத்தின் பார்வையாளராகவோ பங்கெடுப்பாளராகவோ இருந்திருக்கவில்லை. யுத்தம் அவள்மீதேதான் நடந்து முடிந்திருக்கிறது. கைப்பற்றப்படும் நாடுகளின் பெண்களது யோனிக்குள்  நுழைந்த வெளியேறும் ஆணுறுப்புகளின் எண்ணிக்கையினால் அளவிடப்படுகிற யுத்தங்களின் வெற்றியை பரிகாசம் செய்தபடி மருகிக்கிடக்கும் கோடானகோடி பெண்களின் ஒற்றைப் படிமமாக அவள் வரலாற்றின் நெடுகிலும் காட்சியளிக்கிறாள்.
தூயஇனம், கலப்பில்லாத ரத்தம், இனமானம், ஆளப்பிறந்தவர் கள் என்று முன்பு அலட்டிக் கொண்டிருந்த ஜெர்மானிய ஆண்களுக்கு தம்வீட்டுப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளை யாருக்கோ நடப்பதுபோல அமைதியுடன் பார்த்துக் கொண்டிருப்பதன்றி வேறொரு வாய்ப்பும் அங்கு இருந்திருக்கவில்லை. பெண்கள் குழந்தை பெற்றுத்தள்ளும் வேலையை மட்டுமே செய்துகொண்டிருந்தால் போதும், தேவைப்பட்டால் அதற்காக தமது படையினரில் வலுவாக உள்ளவர்களை பொலிகாளையாக அனுப்பிவைக்கத் தயார் என்ற ஹிட்லரின் தளபதிகளது ஆணவத்தை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசாதிருந்த அவர்கள் அப்போதே தம்வீட்டுப் பெண்களை ஏறிட்டுப் பார்ப்பதற்கான யோக்யதாம்சத்தை இழந்துவிட்டிருந்தார்கள்.
ஆனாலும் இவ்வளவுக்குப் பிறகும் தம்வீட்டுப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளானதை, தற்காத்துக் கொள்ளத் தெரியாததால் பெண்கள் தமக்குத்தாமே வருவித்துக்கொண்ட கேடாகத்தான் அவர்களால் பார்க்க முடிந்ததேயன்றி யுத்தத்தின் தண்டனையாக பார்க்க முடியவில்லை. அந்த தண்டனையை வலிந்து ரஷ்யாவுக்குப் போய் இழுத்துவந்த ஹிட்லரின் குற்றமாகப் பார்க்க முடியாதளவுக்கு ஜெர்மானிய ஆண்கள் அவரவர் பங்கிற்கு கொஞ்சங்கொஞ்சம் ஹிட்லராக இருந்தனர். அனோனிமாவின் காதலன் கெயர்ட்டும் இதற்கு விதி விலக்கானவல்ல. எப்பேர்ப்பட்ட நிலையிலும் தற்காத்து - புனிதம்(?) கெடாமல் தனக்காக காத்திருக்க வேண்டிய அனோனிமா இப்படி ரஷ்ய ராணுவத்தினரிடம் சிக்கி சீரழிந்திருப்பதை அறிந்து அவளைவிட்டு வெளியேறிப் போகிறான் அந்த மூடன். மானஸ்தி என்று அவன் வைத்திருக்கும் எல்லா மதிப்பீடுகளையும் புறந்தள்ளி அடுத்த நொடியின் வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறாள் அனோனிமா.
அனோனிமா இப்படி தன்பாடுகளை மட்டுமே புலம்பியவிக்கிறவளாக இல்லை என்பதுதான் அவளை ஒரு முன்மாதிரிப் பெண்ணாக நம்மை உணரவைக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் எதுவும் பொதுவில்லை என்பதே அவள் பார்வையாய் இருக்கிறது. எதிரிப்படையினர் வந்தால் குடித்து மயங்கி பல வீனமாகிச் சாகட்டும் என்பதற்காக மதுவடிச்சாலைகளை அழிக்காமல் விட்டுச் செல்கிறது ஜெர்மனி ராணுவம். இது ஆண்களைப் பற்றிய ஆண்களின் பார்வை என்கிறாள் அனோனிமா. உண்மையில் அவ்வாறு விட்டுச் செல்லப்படும் மதுவைக் குடித்து மூர்க்கமேறி வன்முறை இயந்திரமாக பெண்களின் மீது பாய்வதற்கே வழிவகுக்கிறது என்பது இந்த ஆண்களுக்குப் புரிவதேயில்லை என்று குற்றம்சாட்டுகிறாள். பிரிதொரு இடத்தில் உணவுத் தட்டுப்பாடு பற்றி பேசுகிறாள். கணவன் சாப்பிட்ட பிறகு எஞ்சியதை சாப்பிடுகிற நம்மூர் பதிவிரதாத்தனம் அங்கும் வேறு வடிவிலிருக்கிறதோ என்னவோ அனோனிமா எரிச்சலடைந்து இப்படிச் சொல்கிறாள் - கர்ப்பத்திலிருக்கும் குழந்தை தமக்கான போஷாக்கை தாயிடமிருந்தே பெறுகிறது. தந்தையைப் பற்றி அது அறிந்திருப்பதில்லை. ஆனாலும் பாருங்கள் அந்த நாடு தந்தையர் நாடு என்றே ஆரவாரத்தோடு சொல்லப்பட்டு வந்தது.
எஸ்டேட் தொழிலாளர்களை இழிவாக விளித்து கட்டளை பிறப்பிக்கவும்அவர்கள் எதைக்கேட்டாலும் முரட்டடியாக மறுப்பதற்கும் தேவையான சொற்களைக் கொண்ட கூலித் தமிழ் கையேடு ஒன்றை வெள்ளைக்கார துரைமார்களுக்கு  புலவர் பெருமக்கள் தொகுத்தளித்தனர். தோற்கடிக்கப்பட்டவர்களை கட்டளைகள் வழியாகவே கையாளும் இந்த மனப் பாங்கு நுட்பமானது. ரஷ்ய ராணுவத்தினருக்கும் வழங்கப்படும் டச் மொழிக் கையேட்டில் உள்ள பதங்கள் அவ்வளவும் மக்களை நோக்கி பிறப்பிப்பதற்குரிய ராணுவக்கட்டளைகள். மக்களின் இரைஞ்சுதல்களையும் தேவைகளையும் விளங்கவைப்பதற்கான ஒரு சொல்லும் அதிலில்லை. ஆயுதத்தின் ஒருபகுதியாக அங்கு மொழியும் செயல்படுவதை மிகுந்த எள்ளலுடன் அம்பலப்படுத்துகிறாள் அனோனிமா.
இப்படியாக அனோனிமாவின் குறிப்புகள் பாவனையான நமது நிம்மதியைச் சிதறடிக்கிறது. முகம் காட்ட விரும்பாத அவளது முகத்தைத் தேடி கண்டடையும்போது அது நம்வீட்டுப் பெண்ணொருத்தியின் முகமாகவும் இருப்பதற்கான சாத்தியங்களை உணரச் செய்கிறது. கற்பு, ஒழுக்கம், புனிதம் பற்றிய கவரிமான் கப்ஸாவில் திளைத்திருக்கும் நம் வீட்டிலும் மனதிலும் அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படவுள்ள இடம் எது என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆண்மை, வீரம் போன்ற கற்பிதங்ககளின் உள்ளீடற்ற பொக்கைத்தனங்களை இரக்கமற்ற மொழியில் குத்திக் காட்டுகிறது. கண்ணுக்குள் பெண்ணை வைத்து காத்து வளர்க்கத் துடிக்கும் ஆணின் கட்டுப்பெட்டித்தனம் மீது காறி உமிழ்கிறது. தன்னளவில் சுயமாய் வாழ்வதற்கான பெண்ணின் விழைவுகளை முன்மொழிகிறது.  மான அவமான மயக்கங்களில் சிக்கி வாழ்வைத் தொலைக்கிற கோழைத்தனத்திலிருந்து விடுபட்டு ஒவ்வொரு நொடியையும் வாழ்ந்து பார்ர்ப்பதற்கான வேட்கையை மூட்டுகிறது.
- ஆதவன் தீட்சண்யா (புதுவிசை)