"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனிதனின் வளர்நிலைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. தொழில் நுட்பம் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் தொடங்குகின்றது. இதனை மேற்கொள்ளும் அறிவியலார் குழந்தையைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண்ணைப் போன்றவர்கள்; நிறைய எதிர்பார்ப்பும் அதைவிட நிறையக் கவலையையும் சுமக்கின்றார்கள். குழந்தை எப்பொழுது பிறக்கும்? அது என்ன பண்புகளைக் கொண்டிருக்கும், அதன் நிறம் என்னவாயிருக்கும் - என்பதைப் போன்ற ஆர்வமும் அதனையும் விழுங்குமளவிற்கு அக்குழந்தை நல்லபடியாகப் பிறக்குமா என்பதைப் போன்ற கவலைகளும் அவர்கள் உள்ளத்தை நிறைத்திருக்கும். புதுக்குழந்தையாக அறிவியல் கண்டுபிடிப்பு வெளிவந்தவுடன் எல்லார் கவனமும் அதன் மேல். அதற்குப் பெயரிடுதலும் காண்பவர் எல்லாரிடமும் தன் கண்டுபிடிப்பைக் காட்டி மகிழ்தலுமாக ஒரே மகிழ்ச்சி வெள்ளந்தான். சில நாட்களில் பள்ளிக் குழந்தையைப் போல் அறிவியல் கண்டுபிடிப்பும் பத்தோடு ஒன்றாகி மறக்கப்படுகின்றது. பின்னர் தொடர்ச்சியான அறிவியல் ஆராய்ச்சியால் அது மெல்ல வளரத் தொடங்குகின்றது. மனித வாழ்வைப்போலவே அறிவியலிலும் விடலைப் பருவம் உண்டு, அது சிறுவனாயிருக்கும் அறிவியல் பிறருக்குப் பயனளிக்கக் கூடிய மனிதனாய் - தொழில்நுட்பமாய் - முதிர்ச்சியடையும் தருனம். அக்கட்டத்தில் அது வளர்ச்சிக்கான வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து நல்ல தொழில்நுட்பமாக, இளைஞர்களைப் போல சமுதாயத்திற்கு பயன்படும் துடிப்புகொண்டாதாக மாறுகின்றது. பின்னர், வயோதிகனாகப் பரிணமிக்கிறது, முதிர்காலத்தில் தன் அனுபவத்தால் பிறருக்கு அறிவூட்டும் மூதறிஞன் போல இன்றைக்கு கணிதத்தைக் கூறலாம். இளைஞனாகத் திகழ்பவை நிறைய நம்மில் உண்டு - உதாரணமாக குறைகடத்தித் தொழில்நுட்பம் (SEMICONDUCTOR TECHNOLOGY), நோய்த்தடுப்புத் தொழில்நுட்பம் (IMMUNIZATION) , அறுவை சிகிச்சை (SURGERY), இவற்றைக் காட்டலாம்.

இவை எல்லாவற்றையும் விட சுவையான பருவம் - விடலை. இக்கால கட்டத்தில்தான் எத்தனை விரைவான மாற்றங்கள் - தன்னைத் தானே நிலை நிறுத்திக்கொள்ள வேண்டியமை, பிறரிலிருந்து தன்னை மாறுபட்டவனாகக் காட்டிக்கொள்ளுதல், மற்ற வளர்வனவற்றுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் ஆர்வம் - அப்பப்பா, அதுதான் எத்தனைச் சுவையானது. இன்று இத்தகைய நிலையில் இருப்பவையாக நிறைய உள்ளன - மரபு மருத்துவம் (GENE THERAPY), மின்வணிகம் (E-COMMERCE), வானிலை ஆராய்ச்சி (WEATHER PREDICTION), சூழியல் (ECONLOGY) ஆய்வுகள். இவை தங்களுக்கே உரித்தான விரைவில் மாறும், முதிர்ச்சியடையும் திறனால் பலரது கவனத்தை எளிதில் ஈர்க்கின்றன. இத்தகைய விடலைத் தொழில்நுட்பங்களுள் ஒன்று மரபு மாற்றப்பட்ட உணவுகள் (GENETICALLY MODIFIED FOODS, GM FOODS), இதற்குத்தான் எத்தனை எதிர்ப்பு. இது வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள வகுத்துவரும் இன்னொரு ஆயுதமா? இது சூழலுடன் இயைந்து மாறாமல் தன்னிலையாக மாறுவதால் சூழலைச் சிதைக்கவல்லதா? இது பணமுதலைகளான பன்னாட்டு நிறுவனங்களின் முற்றிலுமான வியாபார தந்திரமா? இதற்குத்தான் எத்தனை ஆதரவும் எதிர்பார்ப்பும் - நாம் உண்ணும் உணவுகளையும் அதன் சுவையையும் திறனையும் உயர்த்த வந்ததா? கட்டுக்கடங்காத மக்கள் பெருக்கத்திற்கு உணவளிக்க வல்ல ஒரே வரப்பிரசாதமா?

தாவரங்களின் தன்மை மாற்றுதல் இன்று நேற்றாக நடந்துவரும் செயலல்ல. இது எப்பொழுது தோன்றியது என்று யாராலும் அறுதியிடமுடியாது. ஒட்டுமாங்கன்றுகளும், பலவண்ண ரோஜாச் செடிகளும் மனிதனால் வடிவமைக்கப்பட்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். உணவு அறிவியலாளர் டாக்டர் மா. சாம்பசிவம் சுவாமிநாதனின் அயராத முயற்சியால் இந்தியாவிலும் அதைத் தொடர்ந்து CHINA முதல் பிலிப்பைன்ஸ் வரை நிகழ்ந்த பசுமைப்புரட்சி அற்புதங்களையும் நாம் அறிவோம். இது எல்லோராலும் எளிதில் உணரப்பட்டது - ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தாவர ஒட்டு வளர்ச்சி எனப்படுவது. உயர்குணங்களைக் கொண்ட, சுவையான மாம்பழத்தை அதன் உற்பத்தித் திறனைப் பெருக்க, சுவையற்ற நாரைக்கொண்ட ஆனால் அதிக அளவில் காய்க்கவல்ல நாட்டுப்பழங்களுடன் ஒட்டுப் போட்டு அதன்மூலம் தரமான பழங்களின் உற்பத்தியைப் பெருக்குதல் என்பது நாம் நன்றாக அறிந்ததே.

உயிரிகளின் குணங்களும் தன்மைகளும் அதன் மரபுக்கூறான டி.என்.ஏ எனும் மூலக்கூறினால் நிர்வகிக்கப்படுகின்றது. டி.என்.ஏ, ஒரு நீளமான வாக்கியத்தைப் போன்றது. உதாரணமாக, நெல்மணியின் நீளம் அதன் டி.என்.ஏயின் ஒரு குறிப்பிட்ட சொற்றொடரால் நிர்வகிக்கப்படுகின்றது. இந்த சொற்றொடரை மாற்றி மணிநீளத்தைத் திருத்தியமைக்க இயலும். முன் பத்தியில் சொன்ன தாவர ஒட்டுப் பெருக்கத்திலும் இதுதான் நடைபெறுகின்றது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மிக எளிதானது, ஒட்டுப் பெருக்கத்தில் விளையும் செடியின் பிற பண்புகளை நம்மால் ஊகிக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது. மரபு மாற்றத்தில் ஒரு குறிப்பிட்ட பண்பைக் குறியாகக் கொண்டு அதற்கான டி.என்.ஏ பகுதியை மாற்றியமைக்க இயலும். உயிர்தொழில்நுட்ப (BIOTECHNOLOGY) வளர்ச்சியாலும் மூலக்கூறு உயிரியல் (MOLECULAR BIOLOGY) முன்னேற்றங்களாலும் இத்தகையை அடிப்படை ஆய்வுகள் இப்பொழுது ஏதுவாகியுள்ளன.

அறிவியல் முறை

இது எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றது? முதலில் தொழில்நுட்பவியலார் ஒரு குறிப்பிட்ட பண்பினை இலக்காக கொள்வார்கள். உதாரணமாக நோய் எதிர்ப்பு சக்தி எனக் கொள்வோம். இதனை நிர்வகிக்கும் டி.என்.ஏ பகுதியை ஆராய்ந்து தெளிவர், இதன் பின் என்ஸைம்கள் எனப்படும் வேதிக்கலவையால் இப்பகுதியை 'வெட்டி' எடுப்பார்கள். பின்னர் வேறு சில வேதிப்பொருள்களால் பிற உயிரியிலிருந்து (தாவரமோ, விலங்கோ) எடுக்கப்பட்ட உயர்குண டி.என்.ஏ பகுதியை (இதுவும் ஒரு வேதிக்கலவையே) 'ஒட்டுவார்கள்'. பொதுவில் சேர்க்கப்படும் கலவை, சேருமிடத்திற்கு வேதியிணையாக (CHEMICAL PAIR) இருக்கும், இதனால் இவற்றின் சேர்க்கை உறுதியாகும். இதனை மேலும் நிச்சயிக்க சில என்ஸைம்களைச் சேர்ப்பார்கள்.

இதன்பின்னர் நடைபெற வேண்டியவை எல்லாம் வழக்கமான ஆய்வக மற்றும் நடைமுறை சோதனைகள். உருவாகும் தாவரத்தினைப் பெருக்குவார்கள், அதன் பல்வேறு குணங்களை ஆராய்வார்கள்; குறிப்பாக இலக்காக்கப்பட்ட பண்பின் மாற்றத்தை நன்றாக சோதிப்பார்கள். பின்னர் இச்சோதனையால் பிற பண்புகள் மாற்றமடைந்திருந்தால் அவற்றினை உணர்வார்கள். அதன்மூலம் ஏற்படக்கூடிய குறுகியகால மற்றும் நீண்ட கால விளைவுகளை ஆராய்வார்கள்.

ஏற்கனவே விற்பனையாகும் மாற்றப்பட்ட உணவுகள்

நீங்கள் அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ வசிப்பவரென்றால் உங்களை அறியாமலேயே இந்த உணவு வகைகளை நீங்கள் முன்னரே உட்கொண்டிருக்க 80% சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ வசிப்பவரென்றால் இந்த சதவிதம் மிகவும் குறைவு; ஆனால் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

உணவுப் பொருள் - மாற்றப்பட்ட குணாதிசயங்கள்

தக்காளி - கெட்டியான தன்மை, அதிக சத்துப் பொருட்கள், நாட்பட சேமிக்கும் திறன்

உருளைக்கிழங்கு - நோய் எதிர்ப்புத்தன்மை

சோளம் - பூச்சிக்கொல்லியால் பாதிக்கப்படாமை

சோயா மொச்சை - களைக்கொல்லி எதிர்ப்புத்திறன்

கனோலா - நோய் தடுப்புத் திறன்

அமெரிக்க அரசாங்கத்தின் உணவுக் கட்டுப்பாட்டுத் துறையின் பரிந்துரைகளின்படி இத்தகையப் பொருட்களின் விற்பனைப் பெட்டியில் இவை 'மரபு மாற்றப்பட்ட உணவுகள்' எனப் பொறிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகள் இத்தொழில்நுட்பத்திற்கு எதிர்ப்புமிகுந்த ஐரோப்பிய சமுதாய நாடுகளில், குறிப்பாக, பிரிட்டனில் இன்னும் கடுமையானவை. ஆனால் நாளொரு மேனியும், பொழுதொரு தாவரமுமாக வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்பத்தினால் விரைவில் இவைகளுக்கும் வழக்கமான உணவுப் பொருட்களுக்கும் வித்தியாசமில்லாமல் போகக்கூடும். தக்காளியில் வேண்டுமானால் பொறிக்கலாம், தக்காளி கொண்டு தயாரிக்கப்படும் பழச்சாறுகளிலும், பாஸ்டா கலவைகளிலும் சற்றே கவனமாக இருந்து இவ்விதி கடைபிடிக்கப்படுகின்றதா என நோட்டமிடலாம். ஆனால், ஆயத்த உணவுக் கடைகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு வறுவலிலும், அதனுடன் வினியோகிக்கப்படும் தக்காளிக் கலவையிலும் எந்தவகையான தாவரம் பயன்படுத்தப்பட்டது எனக் கண்காணிப்பது மிகவும் கடினம். இதற்கான விதிமுறைகளை அரசாங்கங்கள் வகுக்கும்பொழுது, மொன்ஸான்டோ, கால்ஜீன் போன்ற பன்னாட்டு உயிர்தொழில் நுட்ப நிறுவனங்களும், அதனை பெருமளவில் பயன்படுத்தும் கெல்லாக்ஸ், நெஸ்லே, மக்டொனால்ட் போன்ற உணவுத் தயாரிப்பாளர்களிடமிருந்தும் அவர்களின் வணிக சாத்தியக்கூறுகளைப் பாதிப்பதாக பெரும் கூக்குரல் எழுகின்றது. ஒருவிதத்தில் இதற்கும் நியாயம் உள்ளது, இன்றைக்கு நாம் பயன்படுத்தும் தாவர மற்றும் விலங்கு உணவுகளில் 95% க்கும் மேற்பட்டவை ஒட்டுப்போடுதல், மட்டும் தீவிர இனக்கலப்பு செய்தலால் மாற்றப்பட்டவையே, இவற்றைப்பற்றி நாம் கவலைப் படுவதில்லை. நம்மூர் பொன்னி அரிசி மூட்டையில் 'இது பல்வேறு அரிசித்தாவரங்களை செயற்கை முறையில் ஒட்டி, இனப்பெருக்கம் செய்து உருவாக்கப்பட்டது' - என ஒருக்காலும் பொறிக்கப்படுதில்லை.

இதற்கு எதிர்ப்பு ஏன்?

இந்தத் தொழில்நுட்பத்தை எதிர்ப்பவர்கள் பின்வரும் காரணங்களை முன்வைக்கின்றார்கள்:

1. சூழலிலின் ஒரு கூறினை அதற்கு முற்றிலும் ஒவ்வாதவகையில் உடனடிமாற்றம் செய்வதால் சூழல் பாதிக்கப்படுகின்றது.

உதாரணமாக, பூச்சிக்கொல்லி எதிர்ப்பு சக்தி மிகுந்ததாக உருவாக்கப்படும் சூரியகாந்திப்பூவில் வழக்கமாக அதில் தேனருந்தும் வண்டு அதற்குப் போதிய தேன் கிடைக்காததாலோ, அத்தேனின் சுவை குறைவாலோ அதனை விரும்பாமல் போகக்கூடும். நாளடைவில் போதிய உணவின்றி அவ்வண்டினம் அழியக்கூடும். அவ்வண்டின் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கை கொள்ளும் வேறு தாவரங்களும் அழியக்கூடும். இச்சங்கிலி தொடர்ந்து சூழல் பெரிதும் மாற்றியமைக்கப்படக் கூடும். இத்தகைய மாற்றங்கள் தட்பவெப்ப மாறுபாடுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும்.

2. சூழல் பன்முகம் பாதிக்கப்படும். உதாரணமாக: களைக்கொல்லி எதிர்ப்பு சக்தி மிக்க கோதுமை பயிரிடப்படுவதால் விவசாயிகள் அளவுக்கு அதிகமான களைக்கொல்லிகளை பயன்படுத்தத் துவங்குவார்கள். இது களைகளை முற்றிலுமாக அழிக்கும். எல்லா களைகளும் உபயோகமற்றவை எனக் கருதுவது தவறு. உதாரணமாக கிளைபோஸேட் எனும் களைக்கொல்லி அழிக்கும் களைகளில் சில மண்ணில் நுண்ணுயிரிகள் வளர உதவி செய்கின்றன. இந் நுண்ணுயிரிகள் நைட்ரஜன் எனும் வளியை மண்ணில் நிலைப்படுத்துகின்றன; மண்ணில் நைட்ரஜன் இருத்தல் பல வழிகளில் தாவரங்களுக்கு இன்றியமையாதது. களைகளை முற்றிலுமாக அழித்தலின் மூலம், களைகள் மற்றுமின்றி இதர தாவர வளர்ச்சியையும் பாதிக்கின்றது.

இது தவிர, உயர் இரகத் தாவரங்களை மாத்திரமே பயிரிடுவதால் ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் பல்வேறு இனங்கள் அருகிவிட வாய்ப்பிருக்கின்றது. பூவன், தேன்கதளி, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, சிறுமலைப்பழம், செவ்வாழை, மொந்தன், பேயன் என்று ஒருகாலத்தில் விதவிதமாக விளைந்த காவிரிக் கரைகளில் இன்று மொரிஷியஸ் ரொபஸ்டா எனும் பச்சைப் பழம் ஒன்றே பயிரிடப்படுகின்றது, இது நோய் எதிர்ப்புமிக்க, குறுகிய காலத்தில் முதிரக்கூடிய தீவிர ஒட்டு இனமாகும். இதுமாத்திரமே ஆதாயம் கருதி விளைக்கப்படுவதால் வாழையின் பல்வேறு சுவைமிகுந்த இரகங்களை நாம் இழந்து வருவது கண்கூடு. இதைவிட உயிர்தொழில் நுட்பத்தில் கண்டுபிடிக்கக்கூடிய ஒருசில தானியங்களும் தாவரங்களும் பன்மடங்கு விரைவில் மற்றவற்றை நாம் முற்றிலுமாக மறந்துவிடச் செய்யக்கூடிவை

3. மனிதர்களுக்கு உயிரிகளை மாற்றும் உரிமையில்லை - இது சமூக, சமயம் சார்ந்த கொள்கையாகும். இத்தகைய குற்றச்சாட்டைப் பொதுவில் அனைத்து அறிவியல் முன்னேற்றங்களுக்கும் முன்வைக்கலாம்.

4. எல்லா விளைபொருட்களும் போதுமான அளவிற்கு ஆய்வக மற்றும் களச்சோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும். இவற்றால் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் எந்த ஒரு தீங்கும் இல்லை என்பது அறுதியிடப்பட வேண்டும் - இதில் போதுமான என்பதன் வரையறை அவ்வளவு எளிதான காரியமல்ல. இதுதவிர இன்றைக்கு தாவர உயிர்த்தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள முன்னனி அறிவியலாளர்களில் 80 சதவீதத்தினர் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் மானியம் பெற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்கள். இவர்களின் ஆய்வகச் சோதனைகள் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை கொண்டனவாக இருக்கும் என்பதிலும் ஐயப்பாடுள்ளது.

5. இதனால் விளையக்கூடிய சமூக, பொருளாதார மாறுபாடுகள் நிச்சயிக்கப் படவில்லை - பெரும்பாலான தொழில்நுட்பங்கள் முன்னேறிய நாடுகளிலேயே உருவாக்கப் படுகின்றன. இவற்றுடன் அவற்றின் வணிக, மற்றும் அரசியல் ஆதிக்கச் சாத்தியக்கூறுகள் இணைந்தே உள்ளன.

உதாரணமாக: மொன்ஸான்டோ நிறுவனத்தின் ஒரு கண்டுபிடிப்பின்படி, மரபு மாற்றப்பட்ட, உயர்குணங்கள் கொண்ட, தானிய வகைகளின் விதைமணிகளை அவர்கள் விற்கின்றார்கள். இவற்றில் 'இறுக்கும் மரபணுக்கள்' (TERMINATOR GENES) அடங்கியுள்ளன. இதன்படி ஒருமுறை விதைத்து விளைந்ததும் அப்பயிரின் உயர்குணங்கள் அடுத்த பட்டத்திற்கும் தொடர்ந்து வருவதில்லை. வேறு வகையில் சொன்னால், உங்கள் வயலில் விளைந்த நெல்லிலிருந்து நீங்கள் விதைநெல் திரட்ட முடியாது; அவ்வாறு திரட்டப்பட்ட விதைகள் விளையாது அல்லது அவற்றின் தரம் முதல் தலைமுறை (விதை நேரடியாக வாங்கப்பட்டது) பயிரைப்போல உயர்ந்ததாக இருக்காது. இந்த இறுக்கும் மரபணுக்கள் முதல் விளைச்சலிலேய அவற்றின் பண்புகளை மாற்றிக்கொள்ளத் தெரிந்தவை. இதன்மூலம் தொடர்ச்சியாக நீங்கள் மொன்ஸான்டோவிடமே விதை வாங்குவது உறுதி செய்யப்படும்.

6. அறிவியல் கண்டுபிடிப்புகள் காப்புரிமை பெற்றவை. இதன்மூலம் நிறுவனங்கள் 'உயிருக்கு உரிமை' பெறும் அபாயம் இருக்கின்றது.

இதனால் என்ன பயன்கள்?

உலகின் மக்கள்தொகையில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஏழை நாடுகளில் வசிப்பவர்களே. இதில் கனிசமான பங்கினர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ளனர். இந்நாடுகளின் நிலங்களில் பெரும்பங்கு பயிரிடப்படுவதில்லை அல்லது பயிரிடுவதற்கு ஏற்றதல்ல. தரமான உணவுப்பயிர்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்யமுடியுமென்றால் இவற்றின் பஞ்சம் தீருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இன்னும் தீவிரமாகச் சொல்லப்போனால் உயிர்தொழில்நுட்பம் போன்ற முற்றிலும் புரட்சிகரமான கருவிகள் இல்லாமல், மக்கள் வெள்ளத்தின் இந்த பெரும்பங்கிற்குப் பசி தீர்ப்பதென்பது முற்றிலும் இயலாத காரியம். கடந்த சில ஆண்டுகளாக உலகில் சிசுச்சாக்காடு (INFACT MORTALITY) அதிகரித்து வருகின்றது (குறிப்பாக மத்திய ஆப்பிரிக்கா), இது அரைநூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியான ஆரோக்கிய நிலைக்குத் தலைகீழாக உள்ளது - பெரிதும் கவலையைத் தரக்கூடியது. சமீபத்திய ஐக்கிய நாடுகளின் ஆய்வறிக்கை ஒன்று இந்தியாவை தர்மசங்கடமான நிலையில் காட்டுகின்றது - இந்தியக் குழந்தைகளில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கீகரிக்கப்பட்ட சத்துணவு அளவினைப் பெறுவதில்லை. இது தவிர பெருகிவரும் இயற்கையின் சீற்றத்தாலும் வழக்கமான பயிர்முறைகள் பலனில்லாமல் போய்வருகின்றன. இந்நிலையில் வளர்ந்துவரும் நாடுகளுக்கு உயிர்த்தொழில் நுட்பம் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை.

பன்னாட்டு நிறுவனங்கள் காட்டும் நிலவரம் மிகவும் அற்புதமாக உள்ளது. உலகில் நீரும், விளைநிலமும் உயரப்போவதில்லை, இந்நிலையில் மும்மடங்கு விளைச்சளைத் தரவல்ல புதிய இரகங்கள் உலகின் பசிதீர்க்க இன்றியமையாததாகின்றன. இருக்கும் விளைநிலத்தை முற்றிலுமாகப் பயன்படுத்துவதன் மூலம் காடுகளை அழித்து விளைநிலமாக்களைத் தடுக்கலாம். இது உயிர்பன்முகத்தை (BIODIVERSITY) நிலைசெய்யும். குறுகியகால அறுவடையை உறுதிசெய்வதன் மூலம் கட்டுக்கடங்காது தப்பிவரும் பருவங்களைப் பற்றிய கவலையைக் குறைத்துக் கொள்ளலாம். வளரும் பயிர்களை மேலும் சுவையானதாகவும் சத்துள்ளதாகவும் மாற்றுவதன் மூலம் உலகின் உணவுத்தேவையை எளிதில் நிறைவேற்றலாம். சேமிப்புத்திறனைப் பெருக்குதல் மூலம் தேவையான நாடுகளுக்கு எளிதில் ஏற்றுமதி செய்யலாம். குறைந்த பூச்சிகொல்லி மற்றும் களைக்கொல்லியைப் பயன்படுத்துவதன் மூலம் இயற்கையான விவசாய முறைகளுக்கு மாறாலாம். தங்கள் முன் வைக்கப்படும் எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் இந்நிறுவனங்கள் அநேகமாகச் சரிவர பதிலளிக்கின்றன, முடியாத இடங்களில் பதிலற்ற எதிர்கேள்விகளை எழுப்புகின்றன. உதாரணமாக: 'உயிரிகளை மாற்றும் உரிமை மனிதனுக்குக் கிடையாது' எனும் சமயநெறி சார்ந்த கடுமையான வாதத்திற்கு, 'நீங்கள் உட்கொள்ளும் உணவுவகையில் மனிதானால் ஒருபொழுதும் மாற்றியமைக்கப்படாத தானியங்களோ, பழவகைகளோ என்னவிருக்கிறது எனக்காட்டுங்கள்' என்று கேட்கின்றார்கள்.

உண்மை நிலை

ஆனால் உண்மை நிலை வேறுவிதமாகக் காட்சியளிக்கின்றது. களைக்கொல்லி எதிர்ப்புதிறன் தம் தாவரங்களுக்கு உண்டென்பதால் அதிகக் களைக்கொல்லியைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்க முயலுகின்றனர். உலகின் பெரும்பகுதிக் காடுகளும், பன்முகம் கொண்ட சூழலும் பெரிதும் வளரும் நாடுகளிலேயே உள்ளன (உதாரணத்திற்கு பரப்பளவில் குறைந்த இந்தியாவின் தாவர மற்றும் விலங்குப் பன்முகத்தை அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கிரீன்பீஸ் எனும் தன்னார்வ சூழியல் பாதுகாப்புக் குழுவின் அறிக்கைப்படி இந்தியாவில் 50,000 க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் பயிரிடப்படுகின்றன, அல்லது ஒருகாலத்தில் பயிரிடப்பட்டன). பன்முகப் பாதுகாப்பு எனும் பெயரில் பயிரிடும் உரிமையையும் திறமையையும் தமக்குள்ளே பங்கிட்டு குழுவுரிமையாக்க முயற்சி செய்கின்றன. மாற்றியமைக்கப்பட்ட தாவரங்கள் முற்றிலும் எக்காலத்திலும் சிறந்ததாக விளங்கும் எனச் சொல்லுவதற்கில்லை. உதாரணமாக பசுமைப்புரட்சி காலத்தில் நெல்லைப் பாதிக்கும் எட்டு முக்கியமான வியாதிகளுக்கும், கிருமிகளுக்கும் எதிர்ப்பு கொண்டதாக அறிவிக்கப்பட்டு ஐ.ஆர்-36 எனும் நெல் வெளியிடப்பட்டது. விரைவிலேயே இதுவரை நெல்லைத் தாக்காத இரண்டு கிருமிகளால் பாதிக்கப்பட்டு அது குட்டையாகின்றது எனத் தெரியவந்தது.

மனிதனால் மாற்றப்படாத உணவுப்பொருளைக் காட்டச் சொல்லிக் கேட்கும் நிறுவனங்களின் வாதத்தில் ஒரு அடிப்படை முரண் பொதிந்துள்ளது. இதுவரை செயற்கையாகச் செய்யப்பட்டவை எல்லாம் மரபுத்தொடரில் மேலிருந்து கீழாகச் செய்யப்பட்டவை. இரண்டு பயிர்களை ஒட்டுவதன் பலன் அடுத்த தலைமுறையில் கிடைக்கும், அதன்பின் தலைமுறைகளில் அவை மரபுவிதிகளுக்குக் கட்டுப்பட்டுத் தொடரும். உயிர்தொழில் நுட்ப மாற்றங்கள் இவ்வாறில்லை. இது இணைக்கப்பட்ட உயிர் அந்த தலைமுறையிலேயே மாற்றம் காணும். இறுக்கும் மரபணு தொழில்நுட்பம் போன்றனவற்றால் அது அடுத்த தலைமுறைக்குத் தொடராது - ஆனால் நம்மால் ஊகிக்க முடியாத பிற பக்கவிளைவுகள் தொடரக்கூடும் - அவை சில தலைமுறைகளுக்குப் பின் முற்றிலும் அபாயகரமானவையாக மாறக்கூடும்.

இன்னமொரு முற்றிலும் புரட்சிகரமான, அபாயகரமான வேறுபாடும் உள்ளது. இதுவரைப் புழக்கத்திலிருக்கும் ஒட்டுதல் முறையில் மரபு சம்பந்தமுள்ள இரண்டு உயிரிகளையே இணைக்க முடியும் - உதாரணமா நெற்பயிருடன் மாங்கன்றை ஒட்டிட முடியாது. ஆனால் உயிர்தொழில் நுட்பத்தில் இது சாத்தியம், ஏன், இதற்கு ஒருபடி மேலேயே போய் தாவரங்களின் டி.என்.ஏ-வைப் பிளந்து அதில் மனித டி.என்.ஏ துண்டை ஒட்டிட இயலும். இதன்மூலம் எண்ணிப்பார்க்கவியலாத சாத்தியங்கள் புலப்படுகின்றன. விளையும் தாவரம் பலதலைமுறை இயற்கை மரபு மாற்றங்களுக்குப் பிறகு என்னவாக மாறும் என்பது யாராலும் ஊகிக்க முடியாதது.

கட்டுரைத் தொடக்கத்தில் குறிப்பிட விடலைத் தொழில்நுட்பம் எனும் தொடருக்கு இப்பொழுது விளக்கம் கிடைத்திருக்கும் என நம்புகின்றேன். உயிர்தொழில் நுட்ப வளர்ச்சியில் இது முக்கியமான கட்டமாகும் - நல்லனவாகவும் தீயனவாகவும் மாறுவது இந்தப் நிலையில்தான். இதில் நாளொரு வளர்ச்சியும், பொழுதொரு வேதனையும் தவிர்க்க முடியாதவை. எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் ஆக்கமும் உண்டு அழிவும் உண்டு. பலசமயங்களில் நாம் ஆபத்தைத் தெளிந்து தவிர்க்கின்றோம். சிலசமயங்களில் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற விலைகளைக் கொடுத்து உண்மைகளை அறிந்து கொள்கின்றோம். எனினும் இயற்கையை அறியும் மனிதனின் அடிப்படை உணர்வுக்கு எப்பொழுது அழிவு கிடையாது. இது மனிதனுக்கும் இயற்கைக்குமான ஓட்டப்பந்தயம் எனக்கருதுவதைவிட மனிதனும் இயற்கையுமாக கால்களைப் பிணைத்துக்கொண்டு மூன்றுகால் ஓட்டம் ஓடுவதாகவே கொள்ளவேண்டும், மனிதன் வேகமாக ஓடினால் இயற்கை அவனைப் பின்னுக்கிழுக்கின்றது. சக்திமிக்க இயற்கை இழுக்கும் திசையில் அவன் செல்லாவிடில் அவனுக்கு கால்வலி நிச்சயம். எல்லா கட்டங்களிலும் இயற்கைக்கு எதிராக ஓடத்துவங்கினால் கால்வலி ஏற்பட்டு ஓட்டம் மட்டுப்படுத்தப்படுவது உறுதி.

- வெங்கடரமணன் 


திண்ணை.காம்

தொடர்புள்ள இணையப் பக்கங்கள்:

கலியோர்னிய பல்கலை (டேவிஸ்) தாவர உயிர்த் தொழில்நுட்பம் குறித்த தகவல் பக்கங்கள்

மரபுமாற்றப்பட்ட உணவுகள் - உண்மைகள்

மரபுமாற்றப்பட்ட உணவுகள் குறித்த ஒரு பன்னாட்டுத் தன்னார்வ முனைப்பின் நிலையறிக்கை

உயிர்த் தொழில்நுட்பம்குறித்த அணைத்து விபரங்களுக்கும்

பன்னாட்டு உயிர்த் தொழில்நுட்ப நிறுவனம் - மொன்ஸான்டோ



HIV (வைரஸ்) எப்படி செயல்படுகிறது?

வைரசே "எய்ட்ஸ்" நோய்க்குக் காரணமாகும்

பொதுவாக HIV மனித உடலில் உள்ள எல்லா திரவங்களிலும் படிந்திருக்கிறது என்றாலும் கூட, இரத்தம், விந்து, பெண்ணுருப்புகளில் உருவாகும் திரவம், தாய்ப்பால் ஆகியவற்றின் வாயிலாகத்தான்பரவுகின்றது.

இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை சிறிது சிறிதாக அழித்து விடுகின்றன. அதன் விளைவாக "எய்ட்ஸ்" தோன்றுகிறது.

பரவும் முறைகள்

HIV பின்வரும் நான்கு வழிகளில் ஒருவரைத் தொற்றிக் கொள்கிறது.

1. பாதுகாப்பற்ற உடலுறவு
ஆணுறையைப் பயன்படுத்தாமல் மேற்கொள்ளும் பெண்ணுறுப்புப் புணர்ச்சி, ஆசன வாய்ப்புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி ஆகியவற்றின் மூலம் ஒருவருக்கு HIV தொற்றிக் கொள்கிறது. எனவே எந்தப் பாதுகாப்பற்ற உடலுறவும் HIV தொற்றைப் பரப்புகிறது.

2. சுத்திகரிக்கப்படாத ஊசியைப் பயன்படுத்துதல்
போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாலோ சுத்தம் செய்யாத ஊசியை ஒருவருக்கொருவர் செலுத்திக் கொள்வதன் மூலம் HIV பரவுகிறது. இதே போல் அறுவை சிகிச்சையிலும் சுத்திகரிக்கப்படாத ஆயுதங்களைப் பயன்படுத்துவதனாலும், HIV பரவுகிறது.

3. பாதுகாப்பற்ற இரத்த பரிமாற்றம்
HIV உள்ள இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்களின் மூலம் எளிதாக பரவுகிறது.

4. பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுதல்
கர்ப்பகாலம், பேறு காலம், தாய்ப்பால் புகட்டும் காலம் ஆகிய காலங்களில் தாய் மூலம் குழந்தைக்கு HIV பரவுகிறது.

HIV பின்வரும் முறைகளினால் பரவுவதில்லை

1. கைகுலுக்குதல்
2. முத்தம்
3. தும்முதல், இருமுதல்
4. உணவு மற்றும் பொருட்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
5. கட்டித் தழுவுதல்
6. விளையாடுதல்
7. புகை வண்டி மற்றும் பேருந்தில் பயணம் செய்தல்
8. ஒரே அறையில் தங்குதல்
9. பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்துதல்
10. கொசுக்கடி மற்றும் பூச்சிகள்
11. பிமிக்ஷி மற்றும் "எய்ட்ஸ்" நோயாளிகளைக் காப்பாற்றுவோரிடமிருந்து
12. இரத்த தானம்
13. வியர்வை, கண்ணீர, சிறுநீர் ஆகியவற்றின் மூலம்

அறிகுறிகள்

HIV பாதிப்புக்குள்ளான பலரிடம் ஆரம்பநிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை. இருந்தபோதிலும் சிலரிடம் இது "ஃப்லு ஜீரமாக" (காய்ச்சல்) வெளிப்படுகிறது. அதுவும் இந்த வைரஸ் மூன்று முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகே தெரிகிறது.

இந்தத் தீவிர HIV பாதிப்பினால் ஏற்படும் உடல் நலக்குறைவு, காய்ச்சல், தலைவலி, உடல்ச்சோர்வு, குமட்டல், வயிற்றுப்போக்கு, நெறிகட்டுதல் (அக்குள், கழுத்துகவட்டி) போன்றவற்றினைத் தோற்றுவிக்கின்றது. இந்த அறிகுறிகள் கூட HIV தொற்றிய ஒரு சில நாட்களில் தெரிவதில்லை. மேலும் இது, ஆரம்பநிலையில் வேறு ஏதோ ஒரு வைரஸ் என்று தவறாகவே இனங் காணப்படுகிறது. எனவே ஆரம்ப நிலையில் HIV தொற்றைக் கண்டுபிடிப்பது கடினமாகும்.

தொற்று ஏற்பட்ட முதல் மூன்று மாதங்களில் வைரசின் எண்ணிக்கை கணக்கற்றுப் பெருகி, உடலின் பல பாகங்களிலும் பரவுகின்றன. குறிப்பாக மூட்டுக்களில் உள்ள திசுக்கள் இதனால் பாதிக்கின்றன. இந்நிலையில் அத்தொற்று, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவிவிடுகின்றது.

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் (வெள்ளை அணுக்கள்) அனைத்தும் ஒன்று திரண்டு போராடத் தொடங்கும் போதுதான் HIV யின் வேகம் சற்று குறைகிறது.

HIV தொற்றின் தீவிரமான அறிகுறிகள் தெரிய பல வருடங்கள் ஆகின்றன. பெரியவர்களுக்கு HIV தொற்றிய பிறகு அது வெளித் தெரிவதற்கு 10 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. HIV தொற்றோடு பிறக்கும் குழந்தைகளுக்கு அது தெரிய இரண்டு வருடங்கள் ஆகின்றன. இவ்வாறு அறிகுறிகள் தெரியாத நிலை மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

"எய்ட்ஸ்" வெளியில் தெரிய ஆரம்பித்த உடன் பாதிக்கப்பட்டவர் அடிக்கடி நோய் வாய்ப்படுவர். உடல் எடை குறைவு, தொடர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியன எய்ட்ஸின் முக்கியமான அறிகுறிகளாகும். மேலும் எய்ட்ஸ் நோயாளிகள், காசநோய், பூஞ்சான் நோய் தொற்று, சில வகைப்புற்று நோய்கள், நிமோனியா போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

எய்ட்ஸ் பாதுகாப்பு

HIV தொற்றுவராமல் இருக்க தடுப்பூசிகளோ அதனை குணப்படுத்துவதற்கு மருந்துகளே இல்லை. HIV தொற்று வராமல் இருக்க ஒரே வழி பாதுகாப்பான நடத்தைகளே ஆகும்.

உடலுறவின் மூலம் பரவுவதைத் தடுத்தல்

பாதுகாப்பான உடலுறவுக்குப் பின்வரும் வழிகாட்டு நெறிகள் உதவும்.
ஒருவருக்கொருவர் உண்மையாக இருத்தல் வேண்டும். பாலுறவு நடத்தைகள் நபருக்கு நபர் வேறுபடுவதால் ஒருவருக்கொருவர் நம்பிக்கையோடு இருத்தல் வேண்டும். இருப்பினும் ஒருவர் மற்றொருவரை உண்மையாக இருக்க வலியுறுத்த வேண்டும்.

புணர்ச்சியில் கவனம் :- ஆணுறை கிடைக்கவில்லை என்றோ, ஆணுறை அணிந்து புணர்வது பிடிக்கவில்லை என்றோ கூறி, பெண்ணுறுப்புப் புணர்ச்சி, ஆசன வாய்ப் புணர்ச்சி, வாய்ப் புணர்ச்சி ஆகிய எதையும் மேற்கொள்ளக் கூடாது.

உடலுறவு கொள்வோரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். எண்ணற்ற நபர்களிடம் உடலுறவு கொள்வதை மாற்ற வேண்டும். இதே போல் அடிக்கடி உடலுறவு கொள்வோரை மாற்றுவதையும் குறைத்துக் கொள்ள வேணடும்

பிற பாதுகாப்பு முறைகள்

ஒரே முறை பயன்படுத்தக் கூடிய ஊசியை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக நரம்புகளில் செலுத்தும் ஊசியைப் பயன்படுத்தும் போது இதை கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்.
இது முடியாமல் பல முறை பயன்படுத்தக் கூடிய ஊசியை ஏற்க வேண்டியிருந்தால் அது நன்கு சுத்திகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

அறுவை சிகிச்சையின் போதும் சுத்திகரிக்கப்பட்ட ஆயுதங்களையே பயன்படுத்த வேண்டும்.

கருவுற்ற பெண்கள், "தாய் சேய் தொற்றுத் தடுப்பு மையத்தை" அணுக வேண்டும். அங்கு பரிசோதனை செய்து கொண்டு HIV இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றி குழந்தைகளுக்கு இத்தொற்று பரவாமல் இருக்க முயற்ச்சிக்க வேண்டும்.

இரத்தம் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட இரத்த வங்கிகளை அணுக வேண்டும். HIV தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் கூடிய இரத்தத்தைப் பெறுவது அவசியமாகும்.

ஒருவர் பால்வினை நோயைப் பெற்றிருந்தால், அவர் உடலுறவு கொள்ளும் போது அந்நோய் அதிகரித்து பல்வேறு மாற்றங்களை அடைந்து HIV தொற்றாக மாறிவிடும். எனவே பால்வினை நோய் உள்ளவர்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தகுந்த சிகிச்சையினை மேற்கொண்டு இந்நோயை குணப்படுத்த வேண்டும்.

சிகிச்சை

HIV தொற்றை அழிக்க மருந்துகள் கிடையாது. எனவே எய்ட்ஸை குணப்படுத்த முடியாது. இருந்த போதிலும் HIV யின் வேகத்தைக் குறைக்கக் கூடிய மருந்துகள் இப்போது கிடைக்கின்றன. சந்தர்ப்பவாத தொற்றுக்களுக்கான சிகிச்சையுடன் இந்த மருந்துகளையும் எடுத்துக்கொண்டால் HIV பாதிப்பு உள்ளவர்கள் கூட ஆரோக்கியத்துடன் பல வருடங்கள் உயிர் வாழலாம்.
HIV கட்டுப்படுத்தம் மருந்துகள் "ஆண்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகள்" என்று அழைக்கப் படுகின்றன. இம்மருந்துகள் பல்வேறு நிறுவனங்களின் மூலம் மூன்று நிலைகளில் கிடைக்கின்றன. இவை இரத்தத்தில் கலந்துள்ள வைரசின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. மருந்துகளில் ஏற்படும் ஒவ்வாமையைக் குறைக்க பொதுவாக "ஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை கலப்பு சிகிச்சை முறையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை எடுத்துக் கொள்பவர் முறையாகவும் தொடர்ச்சியாகவும் சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும். இது மருந்தின் ஆற்றலை அறிந்து கொள்ளவும் அல்லது அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து விரைவாக அவற்றைப் போக்கவும் முடியும். ஒரு முறை "ஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை எடுத்துக்கொள்ள தொடங்கிவிட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அம்மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மருந்துகளின் விலை மிக அதிகமாகும். தற்போது இம்மருந்துகளின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது.

HIV தொற்றுகளுக்கும் பால்வினை தொற்றுகளுக்குமான தொடர்பு

பால்வினை தொற்றுகளும் HIV தொற்றுகளும் உடலுறவின் மூலமே பரவுகின்றன.

பால்வினைத் தொற்றுகள் HIV தொற்றுக்கு வழிவகுக்கின்றன. பிறப்புறுப்பில் ஏற்படும் புண் வழியே HIV தொற்று எளிதாக உடம்பில் புகுந்து விடுகின்றன. இது சாதாரணப் புணர்ச்சியை விட 10 மடங்கு வேகத்தோடு பரவுகின்றன. இதே போல் பிறப்புறுப்பில் உருவாகும் திரவம் மற்றும் விந்து வெளிபாடு ஆகியவற்றின் மூலம் 5 மடங்கு வேகமாக பரவுகிறது.

உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள்

பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரணமாகும். இவ்வகையில் குறைந்தபட்சம் 25 வேறுபட்ட பால்வினை நோய்கள் உள்ளன. இவை எல்லாமே 5 விதமான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன.

1. பிறப்புறுப்புப் புண்:- இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லாமலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டியாகவோ நீருடன் கூடிய சிறு சிறு கொப்புளங்களாகவோ காணப்படும். இவை ஆண், பெண் இருவருக்கும் வரும்.

2. பிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் அசாதாரணப்போக்கும்:- ஒரு மனிதனின் சிறுநீர் துவாரத்தின் வழி சீழ் வெளிப்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியாகும். இது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடனோ வலியுடனோ வெளிப்படும். பெண்களுக்குத் துர்நாற்றத்தோடு ஒழுக்கு வெளிப்பட்டு துணிகள்கறைபடியுமானால் அது பால்வினை நோயின் அறிகுறியாகும்.

3. கவட்டியில் நெறிகட்டுதல் :- ஆண், பெண் இருபாலருக்கும் கவட்டியில் நெறிகட்டுதல். இது மிகவும் வலியினை ஏற்படுத்தும்.

4. விதைப்பை வீக்கம் :- மனிதனுக்கு விதைப்பை வீக்கமும் வலியும் பால் வினை நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

5. அடிவயிற்றில் தொடர்ச்சியான வலி :- பெண்களுக்கு தொடர்ச்சியான அடிவயிற்று வலி பால்வினை நோயாக இருக்கலாம். உடலுறவின் போது எப்போதும் மிகுந்த வலி ஏற்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியே ஆகும்.

பால்வினை நோய்க்கான சிகிச்சை

1. அறிகுறிகள் தென்படவில்லை என்றாலும் கூட சிகிச்சையை முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அறிகுறிகள் மறைந்துவிட்டன என்பதனால் நோய் முழுதும் குணமாகி விட்டது என்று கருதிவிட முடியாது.

2. உடலுறவில் ஈடுபடும் இருவரும் ஒரே சமயத்தில் இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் மீண்டும் தொற்று ஏற்படாமல் இருக்கும்.

பால்வினை நோய்களிடமிருந்து பாதுகாப்பு


சுகாதாரம்

1. மாதவிலக்குக் காலங்களில் நன்கு துவைக்கப்பட்டு வெயிலில் காய வைத்தத் துணிகளைப் பயன்படுத்த வேண்டும். அல்லது கடைகளில் விற்கும் பஞ்சு (அ) நாப்கின்கள் பயன்படுத்த வேண்டும்.

2. மாதவிலக்கு காலங்களில் வெளிப்பாடு குறைவாக இருந்தாலும் கூட 6 லிருந்து 8 மணி நேரத்திற்கு ஒரு முறை துணி அல்லது பஞ்சு (அ) நாப்கின்களை மாற்ற வேண்டும்.

3. சிறுநீர் மற்றும் மலம் கழிந்த பின்பு பாலுறுப்புகளை நன்கு நீரால் சுத்தம் செய்து உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

4. மலம் கழித்த பின்பு பிறப்புறுப்பிலிருந்து ஆசனவாய் நோக்கி நன்கு சுத்தம் செய்ய வேண்டும். மாறாக ஆசன வாயிலிருந்து பிறப்புறுப்பு நோக்கி சுத்தம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் கிருமிகளால் தொற்று ஏற்படும், மேலும் வயிற்றில் சீரணத்திற்கு உதவும் பாக்டீரியா வெளிவந்து பிறப்புறுப்பில் தொற்றினை ஏற்படுத்தும்.

5. காட்டன் உள்ளாடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேகமாகப் பீச்சியடித்து உடலைக் கழுவும் சாதனங்கள் வாசனை சோப்புகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்

6. பால்வினை நோய்களுக்கு சிகிச்சை அளிக்காமை அல்லது அறைகுறை சிகிச்சை ஆகியவற்றின் விளைவுகள் சிகிச்சை அளிக்கப்படாத பால்வினை நோய் ஆண்களை விட பெண்களைக் கடுமையாக பாதிக்கிறது. அது பின்வருமாறு அமைகிறது

அது HIV பரவுதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது
மலட்டுத்தன்மை
அடிக்கடி கருக்கலைதல்
இயல்பான உடல் நலனில் மாறுதல்கள்
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தொற்று நோய்கள் பாதித்தல்

கருப்பை வாயில் புற்று நோய் வருவதற்கான ஆபத்து.

புணர்ச்சி உறை, அல்லது பாதுகாப்பு உறை

உடல்உறவின் போது பயன்படுத்தும் உறைகள் இருவகைப்படும். 1. ஆண்களுக்கானது, 2. பெண்களுக்கானது. ஆண்களுக்கான ஆணுறை எளிதாகக் கிடைக்கிறது. அது உடல் உறவின் போது மிகமுக்கியமான பாதுகாப்பாக அமைகிறது. பெண்களுக்கான உடல் உறவின் உறை சமீபத்தில்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எளிதாகக் கிடைப்பதில்லை. ஆணுறையை ஒப்பிடும் போது பெண்களுக்கான உடல் உறவு உறையின் விலை மிக அதிகமானதாகும். இதை உடல் உறவுக்கு முன்பே அணிய வேண்டும். மேலும் இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு 2 அல்லது 3 முறை பெண்ணுறுப்பினை நன்கு கழுவ வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஆணுறைகள் லேடக்ஸ் இரப்பரால் செய்யப்பட்டவை. உடல் உறவின் போது ஆண்குறி விறைப்படைந்த உடன் ஆணுறையை அணிய வேண்டும். இது பாலுறுப்புகளிலிருந்தும் அவை வெளிப்படுத்தும் திரவங்களிலிருந்தும் பாதுகாக்கிறது. தொடர்ந்து ஆணுறையை பயன்படுத்துவது என்பது ஒவ்வொரு முறை உடல் உறவின் போதும் அதனைப் பயன்படுத்துவதாகும். இது HIV தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பை அளிக்கும்.

ஆணுறை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிகள்

1.ஆணுறை காலாவதியாகும் தேதியைப் பார்த்து வாங்க வேண்டும்

2. ஆணுறையைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். சூரிய ஒளி, வெப்பம், ஈரம் ஆகியவைபடாமலும்
எலி போன்றவை கடித்துவிடாமலும், ஆணுறையின் மீது அழுத்தம் கொடுக்கக் கூடிய பொருட்களை வைக்காமலும் பாதுகாக்க வேண்டும். பேண்டினுடைய பின் பையில் வைக்கக்கூடாது, பேனா போன்ற கூர்மையான ஆயுதங்கள் அதன் மீது பட்டுவிடாமலும் பாதுகாக்க வேண்டும்.

3. ஆணுறை ஒன்றை ஒரு முறைதான் பயன்படுத்த வேண்டும். உராய்வினைப் போக்கக் கூடிய எந்த பொருளையும் ஆணுறையின் மீது தடவக்கூடாது. ஆசன வாய்ப்புணர்ச்சியில் ஈடுபட்டால் அப்போது உராய்வினைப் போக்க வேண்டும் என்று விருப்பினால் மட்டும் "K-Y ஜெல்" என்பன போன்ற நீர்மப் பொருளை அடிப்படையாகக் கொண்ட உராய்வு நீக்கியைப் பயன்படுத்த வேண்டும்.

4. உடல் உறவில் ஈடுபடுவதற்கு முன்பு ஆணுறையை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்துப் பயிற்சி எடுத்துக் கொள்வது நல்லது. இப்பயிற்சியானது உடலுறவுக் காலத்தில் ஆணுறையை சரியாகவும், திறமையாகவும் பயன்படுத்த உதவும்.

5.ஆணுறையைப் பயன்படுத்தவதற்கு முன்பு பாலுறுப்புகள் ஒன்றோடு ஒன்று இணைவதைத் தவிர்க்க வேண்டும்.

6. ஆணுறை அடங்கிய பையானது கிழியாமல் உள்ளதா ? பையிள் ஆணுறை ஒட்டிக் கொள்ளாமல் உள்ளதா ? எண்ணெய் பசையுடன் வழவழப்பாக உள்ளதா குறிப்பிட்ட தேதி முடிவடைந்து உள்ளதா என்பவற்றைச் சோதித்த பிறகே, ஆணுறையைப் பயன்படுத்த வேண்டும்.

7. பையைத் திறந்து ஆணுறையை மிக எச்சரிக்கையுடன் எடுக்க வேண்டும். ஆணுறை அடங்கிய பையைத் திறப்பதற்கு நகத்தையோ வேறுக் கூர்மையான பொருட்களையோ பயன்படுத்தக் கூடாது.

8. ஆண்குறி விரைப்படைந்த நிலையில் ஆணுறை அணிந்து கொள்ள வேண்டும். ஆண்குறி முழுவதும் கடைசிவரை பொறுத்தி உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

9. உடல் உறவின் போது விந்து வெளிப்பட்ட உடன் ஆணுறை அணிந்த நிலையிலேயே குறியினைப் பெண்ணுறுப்பு அல்லது ஆசன வாயிலிருந்து விடுவிக்க வேண்டும்.

10. விந்து வெளியில் சிந்தாத வண்ணம் ஆணுறையை வெளியில் எடுத்து ஒரு முடிச்சு போட்டு குழந்தைகள் மற்றும் மற்றவர்கள் கண்களில் படாத வண்ணம் பேப்பரில் மடித்து குப்பை கூடையில் போட வேண்டும்.

இந்தியாவில் HIV மற்றும் எய்ட்ஸின் நிலை

இன்று எய்ட்ஸ் நோயானது நாட்டின் வளர்ச்சி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு எதிரான மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. நாகோவின் (NACO) கணக்கெடுப்பின் படி இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2004 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி எய்ட்ஸ் நோயாளிகளில் பெண்கள் 39 % சதவீதத்தினர், கிராமப்புறத்தில் மட்டும் 58 % சதவீதத்தினர் இந்நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். அந்நோயாளிகளுக்கான சேவையும் குறைவாகவே உள்ளது.
"நாகோ" ஆய்வின் படி கி.பி. 2005 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் 1, 16, 905 எய்ட்ஸ் நோயாளிகள் என்றும் இதில் 34,177 பேர் பெண்கள் என்றும் கூறுகிறது. இந்தப் புள்ளி விவரம் தெரிவிக்கும் மற்றொரு செய்தி இவைகளில் 30 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் மூன்றில் ஒரு பங்கு உள்ளனர் என்பதே. இதில் பல எய்ட்ஸ் நோயாளிகள் கணக்கெடுப்பிற்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டு டிசம்பரில் எடுத்த ஆய்வின்படி இறந்தவர்களின் எண்ணிக்கை (எய்ட்ஸால்) 8097.

நாட்டின் எல்லா இடங்களிலும் HIV பரவியுள்ளது. பொதுவாக எல்லா இடங்களிலும் 85.7 % உடல் புணர்ச்சியின் மூலம் பரவியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் போதை ஊசிகள் மூலம் HIV பரவியுள்ளது. HIV பரவும் மற்ற விதங்களைப் பார்த்தால் பின்வரும் சதவிகிதத்தில் அமைகிறது.

3.6% பெற்றோர்களின் மூலம் பரவியுள்ளது.
பயன்படுத்திய ஊசியையே மீண்டும் பயன்படுத்துவதால் 24 % பரவியுள்ளது.
2.0 % பாதுகாப்பற்ற இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்களைப் பயன்படுத்துவதனால்
8 % காரணம் கண்டு பிடிக்க முடியாத வகையில் HIV பரவியுள்ளது.
அதிமான எய்ட்ஸ் நோயாளிகள் உள்ள மாநிலங்களுள் தமிழ்நாடே முதலிடம் வகிக்கிறது. அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ஆந்திரபிரதேசம் ஆகியன இரண்டாம், மூன்றாம் இடங்களில் வருகின்றன.

எய்ட்ஸ்சுக்கான அரசின் நடவடிக்கை

கி.பி. 1986 ஆம் ஆண்டு சில HIV மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் குறித்த ஆய்வறிக்கையைக் கண்டவுடன் இதன் ஆபத்தினை உணர்ந்து இந்திய அரசு இந்நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது.

1986 ஆம் ஆண்டு "தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்குழு" அமைத்தது. இக்குழுவானது எய்ட்ஸ் குறித்த விழிப்புண்ர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. இக்குழுவானது 1987 ஆம் ஆண்டு பாலியல் தொழிலாளர்களிடம் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ள தொடங்கியது.

உலக சுகாதார மையத்துடன் இந்திய அரசு இணைந்து இடைக்காலத் திட்டம் ஒன்றைத் தயாரித்தது (1990-1992). இத்திட்டம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மணிப்பூர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களையும், குறிப்பாக மும்பை, சென்னை, கல்கத்தா, டில்லி ஆகிய நகரங்களை மையப்படுத்தி அமைந்தது. ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துதல், செய்திகளை கொண்டு செல்லுதல், கல்வி, பிரச்சாரம், கடுமையான மேற்பார்வை ஆகியவற்றின் மூலம் இந்நோய்க்கு எதிரான செயல்திட்டத்தில் இறங்கியது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஒரு சார்பு நிலையிலான தன்னாட்சி அமைப்பாகும். இதனை குடும்பநலம் மற்றும் சுகாதார அமைச்சகமும் உலக வங்கியும் இணைந்து 1992 ஆம் ஆண்டு நிறுவியது. இந்திய அரசின் அங்கீகாரத்துடன் ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்கியது. கி.பி. 1992 முதல் 1999 வரையிலான காலத்தை முதல் பகுதியாக எடுத்துக் கொண்டது. இது, இரத்தப் பாதுகாப்பு மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வினை ஊக்குவித்தல் ஆகியவற்றை முதன்மையாகக் கடமையாக கொண்டது. இந்த திட்டத்தின் மூலம் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சில இலக்குகளை அடைந்தது. இரத்ததானம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்களை சட்டபூர்வமாகத் தடுத்து நிறுத்தியது. இத்திட்டத்தின் முதல் பகுதியின் முடிவில் பரிசோதனைக்குப்பின் தான் இரத்த தானம் என்ற நிலையை உலகப் பொதுமை ஆக்கியது. 1996 முதல் மார்ச் 2006 வரையிலான காலம் இரண்டாவது பகுதிக்கான செயல் திட்ட காலமாக அறிவிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவடைந்தது. அரசு ஊழியர்களும் பிற அமைப்பாளரும் இத்திட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டனர். இதன் முக்கிய இலக்கு பாலியல் தொழிலாளர்களிடமும் பொது மக்களிடம் எய்ட்ஸ் பாதுகாப்பு வழிமுறைகளை வலியுறுத்துதல் ஆகியனவாகும். எய்ட்ஸ் நோய்க்கான நேரடியான மற்றும் மறைமுகமான காரணங்களை ஆராந்து அவற்றை நீக்குதல் மூன்றாம் பகுதியின் முக்கிய இலக்காகும் மேலும் இரண்டாம் பகுதியின் செயல் திட்டத்தை ஆராய்ந்து தேவையான ஆலோசனைகளை மேற்கொள்ளுதல் ஆகும்.

பிரதம மந்திரியைத் தலைவராகக் கொண்ட தேசிய எய்ட்ஸ் ஆலோசனை மையம், எய்ட்ஸ் தொடர்பான மையக்கருத்துகளை அரசுத் துறைகளிலும், பிற அமைப்புகளிலும் பரப்புகின்றது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், மாநில அளவில் நிகழ்ச்சிகளை விரிவுபடுத்தியுள்ளது. 35 மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகங்கள், 3 மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கங்கள் 10 மண்டல பிமிக்ஷி பரிசோதனை மையங்கள், 800 பாலியல் சிகிச்சை மையங்கள், 750 பொதுத்துறை பாதுகாப்பிடங்கள், 800 தன்னார்வ ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் ஆகியவற்றை நாடு முழுதும் உள்ள 604 மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளது.

2001 ஆம் ஆண்டு ஜீன் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இந்தியா உறுப்பு நாடுகளுடன் இணைந்து பிமிக்ஷி மற்றும் எய்ட்ஸ்சுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியது. பிமிக்ஷி மற்றும் எய்ட்ஸ் ஆகியவற்றை இந்த நூற்றாண்டின் இலக்காகக் கொண்டு, 2015 ஆம் ஆண்டுக்குள் இந்நோயினை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற செய்தியை அத்தீர்மானம் வெளிப்படுத்துகிறது.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டிற்கு பொது மக்களின் பங்களிப்பு அவசியம் என்பதை 2003 ஆம் ஆண்டு இந்தியா உணர்ந்து கொண்டது. மத்திய மாநில அரசு ஊழியர்கள் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களாக உள்ளனர். எனவே தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு நேரடியாக அவர்களை அணுகுவதைவிட, இந்திய மத்திய, மாநில அரசு ஊழியர்களின் மூலம் பொதுமக்களை அணுகுவது எளிதானது என்று கருதி செயல்படத் தொடங்கியது. எனவே தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புக் கழகங்களின் வாயிலாக அரசு ஊழியர்களைத் தொடர்பு கொண்டது. இதனால் நாடு முழுதும் 933 இலக்குகளை அடைய முடிந்தது. மேலும் இவர்களைக் கொண்டே பள்ளிகளில் எய்ட்ஸ் கல்வி குறித்த நிகழ்ச்சிகளையும் நடத்தின.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பினையும் தாண்டி அரசு ஊழியர்களின் அமைப்புகள் எய்ட்ஸ் குறித்த நெறிகாட்டுதல்களைச் செய்து வருகின்றன. அரசு ஊழியர்களின் அமைப்புகள் எய்ட்ஸ் குறித்த நெறிகாட்டுதல்களைச் செய்து வருகின்றன. அரசு ஊழியர்களின் மற்றுமொரு குறிக்கத்தக்க சாதனை எய்ட்ஸ் குறித்த அரசுடன் இணைந்து ஒரு சட்ட வரைவினைக் கொண்டு வந்ததாகும். 2003 லிருந்து 2005 ஆம் ஆண்டுகள் இச்சாதனை நடைபெற்றது. சமூக நல அமைப்புகள் மனித உரிமைக் குழுக்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பெண்கள் குழந்தைகள் கொண்ட குழுக்கள், நலப்பணியாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைக் கொண்டு இந்தச் சட்ட வரைவு உருவாக்கப்பட்டது.

உரிமைகள்

இந்தியாவில் சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான உரிமைகள் உண்டு. பிறப்பு, பால், இனம், மதம் முதலிய வேறுபாடுகள் இன்றி உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை. பிமிக்ஷி யால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்காக அவர்களுக்கு இந்த உரிமைகள் மறுக்கப்படக் கூடாது.
தெரிந்து தெளிவடைதல்

ஒப்புக் கொள்ளுதல் என்பது ஒரு விஷயத்தையும் அதற்கு உட்பட்டவர், அதனைப் புரிந்து கொண்டு சுயமாக முடிவெடுப்பதாக இருக்க வேண்டும். மருத்துவர் மற்றும் நோயாளியின் உறவு நிலை புரிதலின் அடிப்படையில் அமைய வேண்டும். எனவே மருத்துவர், ஒரு நோயாளியிடம் பரிசோதனை மேற்கொள்கிறார் என்றால் அதன் உண்மையான நிலையினை அந்த நோயாளியிடம் தெரிவித்துவிட வேண்டும். அவருடைய முழுமையான சம்மதத்தை தெரிந்த பிறகே அந்தப் பரிசோதனையைத் தொடருவதோ, விடுவதோ செய்ய வேண்டும். பிமிக்ஷி பாதிப்பானது மற்ற நோய்களிலிருந்து மிகபெரிய வித்தியாசத்தை உடையது. எனவே இது குறித்து பரிசோதனை என்றால் சம்பந்தப்பட்டவருக்குத் தெளிவாக இப்பரிசோதனை குறித்துத் தெரிவித்துவிட வேண்டும். வேறு ஏதோ ஒரு பரிசோதனையை செய்யக் கூடாது. இது உங்களுடைய உரிமையாகும். அப்படி ஏதேனும் தவறு நேர்ந்தால் அது குறித்து நீங்கள் நீதி மன்றத்தை அணுக முடியும்.

இரகசியம் பேணும் உரிமை

இரண்டு பேருக்கு இடையில் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அமைவதே இரகசியமாகும். நீங்கள் உங்களுக்கும் நம்பிக்கையான ஒருவரிடம் ஒரு இரகசியத்தைக் கூறினால், அதனை அவர் பேண வேண்டும். அப்படி அவர் அந்த இரகசியத்தைக் காப்பாற்றத் தவறினால் அது நம்பிக்கை துரோகமாகும். ஒரு மருத்துவரின் அடிப்படைக் கடமை, தன்னுடைய நோயாளியின் இரகசியத்தைக் காப்பாற்றத் தவறினால், நீங்கள் நீதி மன்றம் செல்லலாம். உங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுக்காக அந்த மருத்துவர் மீது வழக்கு தொடுக்கலாம். ஆனால் பிமிக்ஷி மற்றும் எய்ட்சுடன் வாழும் மக்கள் நீதி மன்றம் செல்ல அஞ்சுகின்றனர். ஏனெனில் வெளி உலகத்திற்குத் தங்களின் நிலைமை தெரிந்துவிடும் என்று பயப்படுகின்றனர். இது ஓரளவு உண்மையென்றாலும் கூட எய்ட்ஸ் நோயாளிகள் தங்களின் உண்மையான பெயரைப் பயன்படுத்தாமல், வேறு புனைப் பெயரின் மூலம் வழக்கு மேற்கொள்ளலாம். அவர்களுக்கு எந்த வேறுபாடும் இன்றி நீதி கிடைக்கும்.

வேறுபடுத்திப் பார்க்கும் போக்கிற்கு எதிரான உரிமை

எல்லோரையும் சமமாக நடத்த வேண்டியது அடிப்படை உரிமையாகும். இதனை அரசாங்கம் போற்றுகிறது. ஆனால் தனியாரிடம் இது காணப்படவில்லை. இது குறித்து சட்டம் தெரிவிக்கும் கருத்து, அரசுத்துறையோ அல்லது அரசு சார்புடைய நிறுவனங்களோ, தங்களிடம் பணிபுரிந்தவர்கள் இடையே வேறுபாடு காட்டக்கூடாது என்பதாகும். தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுதல் என்பது ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை உரிமையாகும். எனவே பிமிக்ஷி நோயாளிகள் பரிசோதனைக்காக மருத்துவமனையை அணுகும் போது, அவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க மறுப்பதோ, சிகிச்சைஅளிக்க மறுப்பதோ கூடாது. அப்படி நடந்தால் அதற்கு எதிராக சட்டத்தை நாடலாம்.

அதே போல் பணிபுரியும் இடங்களில் HIV நோயாளிகளை வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது. உடல் நலக் குறைவின் காரணமாக, ஒருவர் தொடர்ந்து வெகுநாள் பணிக்கு வரவில்லை என்றால் அவர்களை வேலையை விட்டு நீக்கலாம். ஆனால் பிமிக்ஷி உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக ஒருவரை வேலையை விட்டு நீக்க கூடாது. அப்படிச் செய்தால், அவர்கள் (பிமிக்ஷி நோயாளிகள்) சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். எனவே சாதாரண மனிதர்களைப் போலவே பிமிக்ஷி எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. அந்த உரிமைகள் மறுக்கப்படும்போது அவர்கள் நீதி மன்றத்தை நாடலாம்.

HIV மற்றும் எய்ட்ஸ் - சில கட்டுக்கதைகளும் உண்மைகளும்

க.கதை :- நான் திருமணமானவன், எனக்கு பிமிக்ஷி பற்றி நினைக்க வேண்டிய அவசியமில்லை.
உண்மை :- திருமணம் என்பது பிமிக்ஷி யிலிருந்து பாதுகாப்பு தருவது கிடையாது. உண்மையில் எய்ட்ஸ் நோயாளிகளில் 80% சதவீதம் பேர் திருமணம் ஆனவர்கள்.

க.கதை :- நான் என் கணவர் மீது முழு நம்பிக்கை உள்ளவள். அவர் என் மீது அக்கறை உள்ளவர். எனவே அவர் ஆணுறை அணிய வேண்டிய அவசியம் இல்லை.
உண்மை :- அக்கறையானவர் என்பது HIV யிலிருந்து பாதுகாப்பு தருவது அல்ல. நம்பிக்கை என்பது இருவரிடமும் இருக்க வேண்டும்.

க.கதை :- நான் ஆரோக்கியமானவன், எனக்கு HIV இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.
உண்மை :- HIV தொற்று என்பது உடனடியாக அறிகுறிகளை வெளிப்படுத்தக் கூடியது அல்ல. ஒருவரைப் பார்த்த உடன் அவர் HIV ஆல் பாதிக்கப்பட்டவரா என்று கண்டறிய முடியாது. பரிசோதனை மூலமே தெரிந்து கொள்ளலாம். அப்படி பரிசோதனையில் HIV இல்லை என்று வந்தாலும் மூன்று மாதம் கழிந்து மீண்டும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் அந்த இடைப்பட்ட காலத்தில் பாதுகாப்பான நடத்தையை மேற்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் பிமிக்ஷி வருவதற்கான வாய்ப்பு இல்லை.

க.கதை :- பாலுறவுத் தொழிலாளிகளுக்கும், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோருக்கும், போதை ஊசியைப் பயன்படுதுவோருக்கும் மட்டுமே HIV தொற்று வரும் இதில் எந்தப் பழக்கமும் எனக்கு இல்லை. எனவே எனக்கு பிமிக்ஷி வராது.
உண்மை :- இது வெறும் நடத்தை பற்றி விஷயமே அல்ல. பாதுகாப்பான நடத்தையை நாம் பின்பற்றினால் பாலுறவுத் தொழிலாளர்களுக்கும், போதைப் பொருளைப் பயன்படுத்துவோருக்கும் கூட HIV வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதற்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு அவசியம்.
க.கதை :- ஒரு பெண்ணிற்கு HIV இருக்கிறது என்றால் அவரள் நடத்தை கெட்டவள் என்று பொருளா?
உண்மை :- இது ஒருவருக்குத் தெரியாமலேயே கூட தொற்றிக் கொள்ள வாய்ப்பு உண்டு. எனவே பிமிக்ஷி உள்ளது என்பதற்காக அந்தப் பெண்ணை நடத்தை கெட்டவள் என்று கூறுவதும் கேலி செய்வதும் தவறு.

க.கதை :- எனக்கு HIV உள்ளதால் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறார்கள்.
உண்மை :- குழந்தை பெற்றுக் கொள்வதா ? வேண்டாமா ? என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். மருத்துவரின் அறிவுரைப்படி நடந்தால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

க.கதை :- எனக்கு HIV இருக்கிறது, எனவே நான் இறக்கப் போகிறேன்.
உண்மை :- HIV தொற்று ஏற்பட்ட பிறகும் கூட நீண்ட நாள் உயிர்வாழ முடியும். தகுந்த உணவு, ஓய்வு, சிகிச்சை, பாதுகாப்பான உடலுறவு, ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் நீண்ட நாள் உயிர் வாழலாம்.

INDIA DEVELOPMENT GATEWAY