"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


ந்த மாருதத் தாலாட்டில் உறங்குதற்கு
மாட மாளிகை கட்டி வாழ்கின்ற பெரியீர் !

பணம் பணம் பணமென்று பாட்டாளியின் வியர்வையிலே
தினம் தினம் குளியல் நடத்திக் குவிக்கின்றீர் செல்வத்தை !

பிணம் தின்னும் கழுகு போல நீவிர்;
பெருக்க வைக்கின்றீர் உமது வயிற்றை !

இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஏழைகளைத் தள்ளிவிட்டு
பொருள் தேடி அலைகின்றீர்: போதுமென்ற மனதின்றி!

வாழ்வில் பெருக்கல் ஒன்றையேக் குறிக்கோளாய்க் கொண்டோரே ;
வார்த்தையொன்று கேட்கின்றேன் பதில் சொல்வீர்!!

மாணிக்கப் பொரியலும் மரகதக் கூட்டுமா இலையிலிட்டு உண்கின்றீர்?
வைரத்தால் வறுவல் செய்து வைடூர்ய அவியலுடன்
முத்துப் பவளமெனும் மணிகளால் செய்திட்ட அரிசியையா
குத்தி உலையிலிட்டுக் குடற்பையை நிரப்புகின்றீர்?

என்றதொரு கருத்தமைந்த கேள்வியினைக்
குன்றமெனச் செல்வன் குவிக்கின்ற மனிதரிடம்;
மன்றமேறி அறிஞ்ர் அண்ணா கேட்டார் - அதனை
மறவாமல் என்றும் நாம் கேட்கின்றோம் !

உண்பது நாழி; உடுப்பவை இரண்டேயெனும்
உண்மைதனை உணர்ந்த பின்னும்,
வறுமையில் பலர் வாட; வளமிகு செல்வப்
பெருமையில் சிலர் ஆடல் நீதிதானோ?

உலகில் பிறந்தார் அனைவருக்கும்;
உடல், உள்ளத் தேவையெல்லாம்
ஒன்றாக இருக்கும் போது - இதனை
நன்றாகச் சிந்திக்காமல்
வெள்ளம் போல் பொருள் எதற்கு ஒருவன் சேர்த்தல் வேண்டும்?
பள்ளம் போல் வாழ்வினிலே பலர் எதற்குச் சாதல் வேண்டும்?

தனக்கே எலாம் எனும் தனியுடமை தகர்த்துத்
தரித்திரத்தை விரட்டுவதற்குத் தக்க வழி காண
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொதுமைக் கொள்கையினை
வகுத்தளித்து வையத்தில் இன்பம் காண்பது தன் வாழ்வெடுத்த பயனாகும்...!

- கலைஞர் கருணாநிதி எழுதிய "சங்கத் தமிழ்" புத்தகத்திலிருந்து (பக்கம் 288)