அந்த மூவரும் - முக்கியமாக மனோராஜ்யத்தை மண்ணிலே சமைக்கப் போகிறவர் - எதையும் இழக்கவும், மறுதலிக்கவும், தங்களையும் தங்கள் நண்பர்களையும் தங்களின் இலட்சியங்களுக்காகக் களப்பலி தரவும் தயாராக இருந்தனர். அவர்கள் - குறிப்பாக சகோதரத்துவத்திலே நம்பிக்கையுடையவர் - பார்ப்பதற்கு அன்பானவர்களாகவும், சாந்த சொரூபிகளாகவும் காட்சியளித்தனர். ஆனால், அவர்கள், எதையும் தாங்கும் இதயமும், 'மற்றவரைக் காட்டிலும் தன் நம்பிக்கையும் தானும் மேலானவர்கள்' என்னும் குணநலனைக் குறிக்கின்ற ஒரு வினோதமான சகிப்புத்தன்மையின்மையும் கொண்டிருந்தனர். தங்களின் இலட்சியங்களுக்காகத் தாங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாகவும், தங்களை அந்த இலட்சியங்களைக் கொண்டு செல்கிற தூதுவர்களாகவும், பரப்புகிற செய்தியாளர்களாகவும் அவர்கள் உணர்ந்தார்கள்; தீர்க்கமாக நம்பினார்கள்.
அடுத்த வாழ்க்கைக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருப்பதாக, சற்று ஆழமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது, சன்னியாசி சொன்னார். உலகின் எல்லா மாயைகளையும் கண்டுணர்ந்தும், லெளகீக வாழ்வினைக் கைவிட்டும் இருப்பதால், இந்த வாழ்க்கை தனக்கு அளிக்கப் பெரிதாய் ஏதுமில்லை என்றும் அவர் பிரகடனம் செய்தார். இந்த வாழ்க்கையில், தன்னிடம் சில தனிமனித பலவீனங்களும், மனத்தை ஒருமுகப்படுத்துவதிலே சில சிரமங்களும் இருப்பதாகவும் தொடர்ந்த அவர், அடுத்த வாழ்க்கையிலே தான் நிர்ணயித்துக்கொண்ட மேலான தவசி ஆகப் போவதாகவும் விவரித்தார்.
அடுத்த வாழ்க்கையில், வேறு ஒருவராக ஆகப் போகிறோம் என்கிற நம்பிக்கையிலேயே அவருடைய ஆர்வமும், உயிர்ப்பும் இருந்தன. நாங்கள் பேசிக்கொண்டிருந்த நேரம் எல்லாம், நாளையப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியுமே அவருடைய வலியுறுத்தல் இருந்தது. எதிர்காலத்தைச் சார்ந்தே எப்போதும் இறந்த காலம் இருக்க முடியும் என்றும், எதிர்காலத்தை வைத்தே இறந்த காலத்தை அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் சொன்னார். நிகழ்காலம் என்பது, எதிர்காலத்திற்கு இட்டுச் செல்லும் வழி மட்டுமே எனவும், நாளையின் பொருட்டே, இன்றின் ஆர்வமும் முக்கியவத்துவமும் என்றும் அவர் சொன்னார். நாளை என்று ஒன்று இல்லையென்றால், முயற்சிக்க வேண்டியதன் அவசியம் என்ன? வெந்ததைத் தின்று விதி வந்தால் மாள்கிற ஜந்துவாகவோ, மென்று தின்று - பின் அதை அசைபோட்டு - பின் மடிகிற பசுவாகவோ இருக்கலாமே?
வாழ்க்கை என்பது இறந்த காலத்திலிருந்து, தோன்றியவுடன் மறைகிற நிகழ்காலம் வழியே, எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும் தொடர்ந்த இயக்கம். எதிர்காலத்தில் நாம் விரும்பியவண்ணம் - ஞானதிருஷ்டியுடனும், வலிமையுடனும், கருணையுடனும் - ஆவதற்கு நிகழ்காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிகழ்காலமும் எதிர்காலமும் தற்காலிகமானவையே எனினும், எதிர்காலமே விடைகள் கொணரக் கூடியது. இன்று என்பது நாளைக்கான ஒரு படிக்கட்டே. எனவே, நிகழ்காலம் குறித்து நாம் பெரிதும் கவலைப்படவோ, பொருட்படுத்தவோ கூடாது. நாளை என்கிற இலக்கில் எப்போதும் தெளிவாக இருந்து, அதற்கான பயணத்தை வெற்றிகரமாக்கிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவர் தொடர்ந்தார். மொத்தத்தில், நிகழ்காலத்தைப் பற்றி அவர் பொறுமையிழந்திருந்தார்.
சகோதரத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தவரோ மெத்தப் படித்தவர். அவர் பேச்சே கவிதைபோல் ஜொலித்தது. அவருடைய அறிவும், அந்த அறிவை வெளிப்படுத்த அவர் தேர்ந்தெடுக்கும் நுட்பமான வார்த்தைகளூம், கேட்போரை ஆகர்ஷித்து மயக்குவன. அவரும் தன் எதிர்காலம் குறித்து, அதன் தெய்வீக அமைப்பு குறித்து, திட்டம் வைத்திருந்தார். தனிமனித விடுதலையே அவருடைய வேட்கை. அந்த வேட்கையும் அதற்கான தெய்வீக திட்டமும் அவர் இதயத்தை நிறைத்தன. அதன் பொருட்டு தன்னுடைய மாணாக்கர்களையெல்லாம் அவர் திரட்டிக் கொண்டிருந்தார். மரணம், அவர் நம்புகிற தெய்வீக அமைப்பின் அருகே ஒருவரைக் கொண்டு செல்கிறது என்பதால், மரணம் ஓர் அழகான விஷயம் என்றார் அவர். தன்னுடைய எதிர்கால தெய்வீக அமைப்பின் மீதான நம்பிக்கையே, அவலங்களும், துயரங்களும் நிறைந்த இந்த நிகழ்கால வாழ்வை சகித்துக் கொள்ள வைக்கிறது என்றும் அவர் சொன்னார்.
உலகை மாற்றுவதும், அழகாக்குவதுமே அவர் நோக்கம். சகோதரத்துவத்தின் மூலமே அது சாத்தியாகும் என்று, அதற்காக அவர் அயராது உழைத்து வந்தார். சகோதரத்துவம் என்கிற நோக்கம் - கொடுமைகள், ஊழல், தூய்மையற்ற தன்மை என்னும் பக்க விளைவுகள் கொண்டுவரக் கூடும் என்றாலும் - செய்ய வேண்டியவை நிறைய மீதமிருக்கிற உலகத்தில், அவை தவிர்க்க இயலாதவை என்றார் அவர். துரதிர்ஷ்டவசமாக, சில எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்த, சில கடினமான வழிகளையும் விளைவுகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். சிரமேற் கொண்டுள்ள பணியே தலையானது. ஏனெனில், அதுவே மனிதகுலத்திற்கு உதவக் கூடியது. அந்தப் பணியை எதிர்ப்போரையும், அதற்கு உதவாதவரையும் நாசூக்காகவும், கடுமையில்லாமலும் அப்புறப்படுத்த வேண்டும். அந்தப் பணியில் ஈடுபடுகிற அமைப்பே தலையானது; அதற்கு இடையூறுகள் வராவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு வேறு பாதைகள் உள்ளன என்று தொடர்ந்த அவர், தானும் தன் அமைப்பும் பின்பற்றுகிற வழியே அத்யாவசியமானது என்றும், அதற்கு தடையாய் இருப்போர் அவர்களுள் ஒருவர் ஆக முடியாது என்றும் சொன்னார்.
மனோராஜ்யத்தை பூமியிலே பிறக்கச் செய்யப் போகிறவரோ, இலட்சியவாதமும் நடைமுறைவாதமும் வினோதமான விகிதங்களிலே கலந்த கலவையாய் இருந்தார். அவருடைய வேதமும் விவிலியமும் பழையவை அல்ல, புதியன. அவர் பேசுகிற புதிய வேதத்திலே அவர் மனப்பூர்வமான நம்பிக்கை கொண்டிருந்தார். புதிய வேதத்தின் வரையறைபடி, எதிர்காலமும், எதிர்காலத்தின் விளைவும் எப்படி இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவருடைய திட்டம், குழப்பம் உண்டாக்குவதும், அமைப்பியல் ரீதியாக ஆயத்தப்படுத்துவதும், பின்னர் செயல்படுத்துவதுமேயாகும். ஊழல் நிறைந்ததும், தூய்மையற்றதுமான தற்போதைய உலகமும், நிகழ்காலமும் அழிக்கப்பட வேண்டியன; அந்த அழிவிலிருந்து புதியதோர் உலகம் படைக்கப்பட வேண்டும். தற்போதைய உலகம், எதிர்கால நல்லுலகிற்காகத் தியாகம் செய்யப்பட வேண்டும். நிகழ்கால மனிதரை விட, எதிர்கால மனிதரே முக்கியமானவர்.
எதிர்கால மனிதரை எப்படிச் செதுக்குவது என்று எங்களுக்குத் தெரியும். அந்த மனிதரின் அறிவையும், மனத்தையும், இதயத்தையும் செழுமையாக வடிவமைக்க எங்களால் முடியும். ஆனால், எந்த நல்லதை செயல்படுத்தவும், நாங்கள் அதிகார பீடத்தை அவசியம் கைப்பற்றியாக வேண்டும். எங்களையும் மற்றவர்களையும் வேள்வித் தீயாக்கி, புதியதோர் உலகத்தை மண்ணிலே படைப்போம். அதற்கு இடையூறாக இருப்பவர்களைக் கொல்வோம். ஏனெனில், எங்களுக்கு வழிகளும் பாதைகளும் முக்கியம் அல்ல. அடையப்போகிற இலக்கும், முடிவும் - எந்த வழியையும், எந்தப் பாதையையும் நியாயப்படுத்துகின்றன என்று தொடர்ந்தார் அவர்.
இறுதியான, நீடித்து நிலைக்கப் போகும் அமைதிக்காக, எந்த வன்முறையையும் பயன்படுத்தலாம். மேன்மையான, நிலைக்கின்ற தனிமனித விடுதலைக்காக, நிகழ்காலத்தில் கொடுங்கோல் ஆட்சியைத் தவிர்க்க இயலாது. எங்கள் கைகளுக்கு அதிகாரம் கிடைக்கும்போது, எல்லாவிதமான சட்டங்களையும், அடக்குமுறைகளையும் பயன்படுத்தி, வகுப்பு பேதங்களோ, வர்ணாசிரம தர்மங்களோ, மதப் பிரிவினைகளோ, மத குருமார்களோ இல்லாத உலகத்தைக் கொண்டு வருவோம் என்று அவர் அறிவித்தார். எங்களின் மையக் கருத்திலிருந்தும், மைய திட்டத்திலிருந்தும் நாங்கள் பிறழ மாட்டோம். ஆனால், எங்களின் செயல்பாடுகளும், பாதைகளும், சூட்சுமங்களும் நடைமுறைச் சிக்கல்களுக்கேற்ப மாறலாம். நாங்கள் திட்டமிட்டு, காய் நகர்த்தி, செயல்பட்டு, எதிர்கால மனிதருக்காக நிகழ்கால மனிதரை பலி கொடுப்போம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார் அவர்.
சன்னியாசி, சகோதரத்துவ மனிதர், மனோராஜ்யத்தின் சேவகர் ஆகிய மூவருமே நாளைக்காகவும், எதிர்காலத்திற்காகவும் வாழ்கின்றனர். உலகின் பொதுப் பார்வையில் அவர்கள் பெரும் பேராசைக்காரர்கள் அல்ல. அவர்களுக்கு பெரும் பட்டங்களோ, செல்வமோ, பதவிகளோ, அங்கீகாரமோ தேவையில்லை. ஆனாலும், ஒரு நுட்பமான, சாதுரியமான வழியிலே அவர்கள் பேராசைக் கொண்டவர்களே. உலகை மாற்றி அமைக்கப் போகிற ஒரு குழுவோடு தன்னை இணைத்துக் கொண்டு தன்னை அடையாளம் காண்பவர் மனோராஜ்யத்தின் மைந்தர். தனிமனித மேன்மையின் அபேஷகர் சகோதரத்துவத்தில் நம்பிக்கை உடையவர். அடுத்த வாழ்க்கையில், தன்னுடைய ஆன்மீக இலக்கை அடைய விரும்புபவர் சன்னியாசி. மூவருமே தாங்கள் எப்படி ஆக வேண்டும் என்பது பற்றியும், தங்களின் சாதனைகள், இலக்குகள் பற்றியும், தங்களின் விரிவாக்கம் குறித்துமே மூழ்கிப் போய் இருக்கிறார்கள். அவர்களது பேராசை - அமைதியையும், சகோதரத்துவத்தையும், மேலான இன்பத்தையும் தடுக்கிறது என்பதை அவர்கள் அறியவோ, உணரவோ இல்லை.
ஆசையும், ஆதிக்கமும் - அது எந்த வடிவில் இருப்பினும் - குழுவிற்காக, அமைப்பிற்காக, தனிமனித மோட்சத்திற்காக, ஆன்மீக சாதனைக்காக என்று எதன் பொருட்டு இருப்பினும் - அவை நிஜமான செயலைத் தாமதப்படுத்துகின்றன. ஆசை என்பது எப்போதும் எதிர்காலத்தைச் சேர்ந்தது. ஒன்றுக்காக ஆசைப்படுவது என்பது நிகழ்காலத்தில் செயலற்றுப் போவதே. நாளையை விட இன்றும், இப்போதும் பெரிதும் முக்கியத்துவம் உடையது. இன்றிலும் இப்போதிலும் எல்லாக் காலங்களும் உள்ளடங்கி உள்ளன. நிகழ்காலத்தைப் புரிந்து கொள்வதே, காலங்களிலிருந்து விடுபட வழியாகும். ஒன்றாக ஆகுதல் என்பதே காலத்தின், துயரத்தின் தொடர்ச்சி. ஒன்றாக ஆகுதல் என்பது ஒன்றாக இருத்தலை உள்ளடக்கியதல்ல. ஒன்றாக இருத்தல் என்பது நிகழ்காலத்தில் இருக்கிறது. ஒன்றாக இருத்தலே மாற்றத்தின் மாபெரும் வடிவம் ஆகும். ஒன்றாக ஆகுதல் என்பது வெறும் முரண்படுகிற தொடர்ச்சிதான். எனவே, அடிப்படையான மாபெரும் மாற்றம் என்பது நிகழ்காலத்திலும், ஒன்றாக இருத்தலிலுமே இருக்கிறது.
- ஜே. கிருஷ்ணமூர்த்தி
மூலம்: Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20203307&format=html
தலைப்பு : கட்டுரைகள், சுயமுன்னேற்றம், ஜே. கிருஷ்ணமூர்த்தி