"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


முன்னேற்றத்திற்குப் பல்வேறு மூலதளங்கள் என்றால் அவற்றுக்கெல்லாம் அடித்தளமாக இருக்கக் கூடியது மனிதநேயமாகும். அப்படி என்றால், மனிதநேயம் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

சக மனிதனை நேசிக்கிற மாண்பு, சக மனிதனை மனிதனாகப் பார்க்கிற அணுகுமுறை. தனக்கு இருக்கிற அனைத்து உணர்வுகளும், தனக்குள்ள அனைத்து அடிப்படைத் தேவைகளும் அடுத்தவருக்கும் வேண்டும் என்று எண்ணி ஏற்று அங்கீகரிக்கிற தன்மை. சக மனிதனைப் பாசத்தோடும், பரிவோடும், கருணையோடும் நோக்கும் அன்பு நிலையே மனிதநேயம்.

வள்ளுவரும் வள்ளலாரும்

இதுதான் உயிருள்ள மனிதனின் இயல்பான நிலை, இயற்கையான நிலை. “அன்பின் வழியது உயிர் நிலை” என்பது திருவள்ளுவரின் திருவாக்கு. எனவேதான் தந்தை பெரியார் மனிதனை நினை என்றார். ஆண்டவனைக்கூட “அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலை’ என்கிறார் வள்ளலார்.

மனித நேயம் மரணத்தைத் தடுக்கும்

மனிதனை நேசிக்கிற மனிதனை நினைக்கிற தன்மை இருக்குமெனில் வீழ்ச்சி என்பதே இல்லை, வளர்ச்சி என்பது மட்டுந்தான். முன்னேற்றமே மிஞ்சி நிற்கும் பின்னேற்றம் இருக்காது. அன்புமயமான சூழலில் தனி மனிதனுக்கோ… சமூகத்திற்கோ, அல்லது நாட்டிற்கோ முன்னேற்றத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்.

அன்பான மனிதன், சக மனிதன் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் அல்லற்படுவதைக் கண்டும் காணாமல் கிடக்க இயலுமா? தனக்குப் போக மிஞ்சியிருப்பதை சக மனிதனுக்குப் பகிர்ந்தளித்துப் பசியாற்றினால் எங்காவது இல்லாமையும், பட்டினிச்சாவும் இந்த மனிதகுலத்தில் நிகழுமா?

விழாக்களில் விரயம் தவிர்ப்போம்

ஈந்து உவந்த வாழ்க்கை இன்றில்லை. வருவோர் போவோர்க்கெல்லாம் பசியாற்றிய பண்பாடும், விருந்தோம்பிய வீட்டுத் திண்ணைகளும் இன்றில்லை. விதை நெல்லைக்கூட எடுத்துச் சமைத்து விருந்தோம்பியவர்கள் தமிழர்கள் என்பதை நமது இலக்கியங்கள் காட்டுகின்றன. இன்னொரு பக்கம் திருமண விழாவின் போது பல்லாயிரக் கணக்கானவர்களை அழைத்து இதுபோல யாரும் இப்படி நடத்தியதில்லை என்று சொல்லும்படியாகச் செய்ய வேண்டும் என்று ஒன்றை மற்றொன்று விஞ்சுகிறவகையில் வசதி படைத்தவர்கள் ஏராளமாக உணவையும், பொருளையும் விரயமாக்குகிற செயல்கள் பெருகி வருகின்றன.

சொந்தபந்தங்களை மிக நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து மண விழாக்கள் நடைபெற்றால் சில நூறு பேர்களுடன் முடிந்து விடும். இப்படி திருமணத்தின் பெயரால் நடத்தப்படும் உணவுப் பொருள் விரயத்தைத் தவிர்த்தும் அதையே அரசுக்குத் தொகையாக தந்தால் நாட்டில் பட்டினியாய் யாரும் இல்லை என்றநிலையை உருவாக்கிடலாம். இன்னும் ஒருபடி சென்று மதுவுக்கும், புகைக்கும் செலவழிக்கிற பணத்தை மிச்சப்படுத்தினால் ஏழைகளுக்கு முப்போதும் உணவளிக்க முடியும். இதற்கு மனிதநேயம் இருந்தால் போதும். பட்டினிச்சாவுகள் இல்லாத நாடே முன்னேறிய நாடு.

வள்ளுவரும் பாரதியும்

‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்’

என வள்ளுவர், பசியால் வாடும் மக்களைப் படைத்த மகேசனையே சாடுகிறார். பாரதியோ ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடு வோம்’ என்று பசியால் பரிதவிக்கும் நிலைகண்டு இந்தப் பார்தான் அதற்குக் காரணம் என்று எண்ணிய பாரதி மனிதநேயம் இல்லாத இந்த மண்ணுலகம் இருந்தென்ன பயன் என்கிறார்.

வேற்றுமையை வேரறுப்பது மனிதநேயம்

மனிதனை நேசிக்கிற எந்த ஒரு மனிதனாலும் சக மனிதனை தீண்டத்தகாதவனாகப் பார்க்க முடியுமா? மனிதனை நேசிக்கிற எந்த மனிதனும், பிறப்பின் அடிப்படையிலான பேதங்களைப் போற்றமாட்டான். பிறப்பின் அடிப்படையிலான பேதங்கள் இல்லாத நாட்டில் சக மனிதனுக்குச் சம உரிமை அளித்துப் பார்க்கிற சமநோக்கு இருக்கும். எங்கே உரிமைகள் சமமாகிறதோ, உள்ளன்போடு தன்னைச் சூழ்ந்துள்ள மனிதனையும் நேசிக்கிறசூழல் மலர்கிறதோ அங்கே சமவுடைமை இயல்பாக நிலவும். எங்கே உரிமையும், உடைமையும் சமமாகிக் கிடக்கிறதோ அங்கே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் இருக்காது. ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு ஏற்படாது. ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமிருக்காது. அன்பின் ஆதிக்கமே மிகுந்திருக்கும்.

தீண்டாமையும், பிறவி பேதமும், இனபேதமும் இல்லாத நாட்டில் அனைவரும் கல்வி பெற, வேலை வாய்ப்புகளைப் பெற, அவரவருக்குத் தேவையான அடிப் படை வசதிகளையும் பெற தடையிருக்காது. எல்லோர்க்கும் எல்லாம் என்ற நிலையிருக்கும். அங்கே முன்னேற்றம் மட்டுமே இருக்கும்.

எல்லோர்க்கும் எல்லாமும் என்ற நிலையில் திருட்டுக்கு வழியிருக்க முடியுமா? ஒருவனுடையதை மற்றவன் அபகரிக்கும் சூழ்நிலை இல்லாத சூழல் இனிமையானதாகத்தானே இருக்க முடியும். எல்லோருக்கும் வேலை இருந்து விட்டால் “சாலையோரத்தில் வேலையற்றதுகளும் இருக்காது. வேளையற்றதுகளின் உள்ளத்தே விபரீத எண்ணங்களுக்கும் வேலை இருக்காது” விபரீத எண்ணங்கள் விளையாத நாட்டில் விளைவது முன்னேற்றம் மட்டுமே!

சத்குருவின் தத்துவ விளக்கம்

நாட்டில் மட்டுமன்று வீட்டிலும் தான். மனித நேயம் மலிந்து கிடக்கிற இல்லத்தில் மனவருத்தத்திற்கு இடமில்லை. ஆணும், பெண்ணும் அன்புடன் நட்போடு வாழும் வாழ்வில் மகிழ்ச்சியும், இன்பமும், ஆனந்தமும் நிலைத்திருக்கும். இஃதென்ன அன்பு, மகிழ்ச்சி, இன்பம், ஆனந்தம் என்கிறீர்களா?

“உடல் நிலையை ஒரு சுகமான, இனிமையான நிலையில் வைத்திருந்தால் அதனை ஆரோக்கியம், இன்பம் என்கிறோம். மனநிலையில் ஓர் இனிமை யான நிலையிருந்தால் இதனை மகிழ்ச்சி என்கிறோம். உணர்ச்சி நிலையில் இனிமையான நிலை நிலவினால் அதனை அன்பு, நேசம் என்கிறோம். உயிர்சக்தி நிலையில் இனிமையான நிலை ஏற்பட்டால் பேரானந்தம் என்கிறோம்” என்பது சத்குருவின் விளக்கம்.

அன்பும், இன்பமும், மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிறைந்த மனிதர்கள் குடும்பத்தின் முன்னேற்றத்தை உலகின் எந்த சக்தியாவது தடுத்து நிறுத்திவிட முடியுமா? மனித நேயமிக்க அன்புமயமான குடும்பங்கள் வாழும் சமூகத்தின் முன்னேற்றம் எப்போதும் மேட்பட்டே இருக்கும். முன்னேற்றமான வாழ்வைக் கொண்ட சமூகங்களைக் கொண்ட நாடே வளர்ந்த நாடாகும்.

போர் ஒடுங்கில் புவி ஓங்கும்

வளர்ந்த நாடுகளை வல்லரசு என்கிறார்கள். வல்லரசுகள் வல்லூறு அரசுகளாக இருப்பது எதனால்? மனிதநேயம் மங்கிக்கிடப்பதனால். மனிதநேயம் இருக்கிற எந்த மனிதனும் அடுத்த மனிதன் மீதும், அடுத்த நாட்டின் மீதும் ஆதிக்கம் செலுத்த மாட்டான். எப்போது ஒரு மனிதன் அடுத்த மனிதன் மீது ஆதிக்கம் செலுத்தவில்லையோ? அங்கே சண்டையில்லை. எப்போது ஒரு நாடு அடுத்த நாட்டின்மீது ஆதிக்கம் செலுத்தவில்லையோ அங்கே போர் இல்லை. எங்கே போர் இல்லையோ அங்கே வளர்ச்சி, மேம்பாடு, முன்னேற்றம் உறுதி.

ஆனால் மனிதநேயம் மரித்துப் போனால் ஆணவம் ஆதிக்கம் செலுத்தும். ஆணவம் எங்கெல்லாம் ஆதிக்கம் செய்கிறதோ அங்கெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும். வன்முறை எங்கு நிகழ்ந்தாலும் அழிவே மிஞ்சும். முன்னேற்றம் முடங்கிப் போகும்.

அன்பு மலருமிடத்தில், மனிதநேயம் மிளிருமிடத்தில் ஆணவத்திற்கும், ஆதிக்கத்திற்கும் இடமில்லை. அன்பு செத்துவிட்ட அல்லது வற்றிப்போன மனிதர்களிடையில் வன்முறையே எஞ்சும். வன்முறையின் முடிவு முன்னேற்றமன்று. அன்பு அடம்பிடிக்கும் வாழ்வில் முன்னேற்றம் இடம் பிடிக்கும். சிகரத்திற்குச் செல்ல தடம் அமைக்கும். ஆணவம் ஆதிக்கம் செலுத்தும் வாழ்வில் குழப்பமும், வெறுப்பும், வன்முறையும், அழிவுமே மிஞ்சும்.

மனிதநேயத்தை வளர்ப்பது எப்படி?

மனிதநேயத்தை வளர்க்கத் தேவையில்லை. பிறக்கிறமனிதன் நேயமுள்ள அன்புள்ள மனிதனாகத்தான் பிறக்கிறான். அன்பாக இருப்பதே மனிதனின் இயல்பான தன்மை. வெளியிலிருந்து யாரும் கொட்டி நிரப்பத் தேவையில்லை. அன்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே இருக்கிறது.

“எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே”

என்று கவிஞர் பாடினார். ஆகவே அன்பை வளர்க்கத் தேவையில்லை. அதை வளர அனுமதித்தால் போதும். அது பொங்கி வழியும்.

இயற்கையிலேயே உங்களுக்குச் சொந்தமாக அமைந்திருக்கும் ஓர் உணர்வு அன்பு மட்டுமே. பரிவு, இரக்கம், கருணை, நட்பு என்று பலவகையான குணங்களின் ஒட்டு மொத்தமே அன்பு.

குழந்தைகள் இரக்கத்தின் விதைகள். விதைக்குள் முளைப்பு இருப்பதுபோல மனிதனுக்குள் நேயம் நிரம்ப இருக்கிறது. குழந்தைகளும் அன்புக்காக ஏங்குகிறார்கள். மாறிவரும் பொருள் மைய வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் பொருள் ஈட்டுவதில் பெரும்பகுதி நேரத்தைச் செலவிடுகிறவர்கள், குழந்தைகளிடம் அன்பைப் பொழியக்கூட நேரமில்லை, அல்லது அது நிகழவில்லை.

பிள்ளைகளைப் பேணும் முறை

ஒரு மனிதன் அன்பான நிலையில் பேசுவதெல்லாம், சிந்திப்பதெல்லாம் நேர்மறையாகவே இருக்கின்றன. ஆனால் அன்பற்றுப் போன மனிதனின் பேச்சில், எண்ணத்தில், செயலில் எதிர்மறையே ஏகோபித்து இருக்கிறது. நமது பிள்ளைகளிடம் கூட பெற்றோர் பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களைத்தான் பேசுகிறார்கள். இது நன்று அன்று என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். எப்போதும் குழந்தைகளிடம் செல்லாதே, பேசாதே, ஓடாதே, சிரிக்காதே என்று எதிர்மறையாகப் பேசுவதற்கு பதில் இதைச் செய்க. இப்படிச் செய்க, இது நல்லது, இது சிறந்தது என்று நேர்மையாக இனிமையாகச் சொல்லி வழிகாட்ட வேண்டும்.

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்

என்பார் வள்ளுவர்.

இதைச் செய்யாதே என்று தடை போடும் போது இளமையின் வேகம் அதை மீறிப்பார்க்க விரும்புகிறது. சில நேரங்களில் வெறும் விளையாட்டுத் தனங்களிலும், சின்னத்திரை, வண்ணத் திரை, பொழுது போக்குகளிலுமே ஆழ்ந்து அமிழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளைக் கண்டு பல பெற்றோர்கள் ஆவேசமாகத் திட்டுகிறார்கள், கடுமையாகவும் தங்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்கிறார்கள்.

இது ஆபத்தானது, அத்தகைய குழந்தைகளின் ஆர்வமும் ஆற்றலும் அறிந்து மனமாற்றம் செய்யத்தவறினால், அவர்களின் ஆற்றலுக்கு கரையமைத்து நெறிப்படுத்தத் தவறினால் பெற்றோருக்கு விரோதிகளாகி சமூகத்துக்கு விரோதமான மனிதர்களாக, வன்முறையாளர்களாக, தீவிரவாதிகளாக, நேர்வழி தவறியவர்களாக மாறிப்போகிறார்கள்.

பெற்றோர்களே உங்கள் பிள்ளைச் செல்வங்களிடம் அன்பைப் பொழியவில்லையானால் இன்று அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பது போன்று பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான பிணைப்பு அழிந்து, உறவுகள் அழிந்து, பெற்றோர்கள் முதுமையில் அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்குவதான நிலை வளர்ந்துவிடும். பெற்றோர்களைப் பேணிப் புறந்திடாத பிள்ளைகள் உள்ள நாடும் வாழ்வும் முன்னேற்றமாக இருக்க முடியாது. வெறும் பொருள் வளர்ச்சி மட்டுமே முன்னேற்றம் ஆகிவிட்டது. அகம் சீரழிந்தால் அனைத்தும் சீரழியும். அகம் என்றால் உள்ளம், அகமென்றால் இல்லம்.

- டாக்டர். பெரு. மதியழகன்

http://www.thannambikkai.net/2009/11/01/3098/