"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619



ரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது. இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது. ஜேம்ஸ்பாண்ட் சினிமா படங்களைவிட விறு விறுப்பானது.

வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி பிறந்தவர் ஹிட்லர்.

இவருடைய தந்தையின் பெயர் அலாய்ஸ் ஷிக்கிள் கிரப்பர் ஹிட்லர். இவர் சுங்க இலாகா அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாவது மனைவியான கிளாராவின் நான்காவது மகன் ஹிட்லர்.

பிறந்தது முதலே ஹிட்லர் நோஞ்சானாக இருந்தார். அடிக்கடி காய்ச்சல் வரும். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகுதான் உடம்பு தேறியது. தந்தை சுங்க அதிகாரியாகப் பணியாற்றியதால், அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அதனால், ஹிட்லருக்கு அம்மாவிடம் செல்லம் அதிகம். தாய் மீது மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டவர் ஹிட்லர். பள்ளியில் படிக்கும்போது, ஹிட்லர்தான் வகுப்பில் முதல் மாணவர். பிறகு அவருக்குப் படிப்பில் ஆர்வம் குறைந்தது. படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. விரைவிலேயே அழகாக படங்கள் வரையும் ஆற்றல் பெற்றார்.

மாணவப் பருவத்திலேயே நிறைய நாவல்கள் படித்தார். போர்கள் பற்றிய கதைகள் என்றால் நாட்டம் அதிகம். 1903-ம் ஆண்டு, ஹிட்லரின் தந்தை இறந்து போனார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர், நாளுக்கு நாள் முரடனாக மாறினார். மாணவர்களுடன் சண்டை போடுவதுடன், ஆசிரியர்களுடனும் மோதுவார். தனது 17-வது வயதில், பள்ளி இறுதித் தேர்வில் தேறினார். ஹிட்லர் அதற்காகக் கொடுத்த சான்றிதழை வாங்கிக்கொண்டு வருகிற வழியில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார். சர்டிபிகேட்டைக் கிழித்தெறிந்தார்.

இதை அறிந்த ஆசிரியர், அவரைக் கூப்பிட்டுக் கண்டித்தார். "இனி என் வாழ்நாளில் சிகரெட்டையும், மதுவையும் தொடமாட்டேன்" என்று சபதம் செய்தார், ஹிட்லர். அதன்படி, கடைசி மூச்சு உள்ளவரை சிகரெட்டையும், மதுவையும் அவர் தொடவில்லை.

1907-ல் ஒரு ஓவியப் பள்ளியில் சேர முயன்றார். இடம் கிடைக்கவில்லை. அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின் தாயார் இறந்து போனார்.

ஹிட்லரின் தாயார் கிளாரா குழந்தை பருவத்தில் ஹிட்லர் அதன்பின் ஓவிய அட்டைகள் தயாரித்து, பிழைப்பு நடத்தினார் ஹிட்லர். இரவில் கூட மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் ஓவியங்கள் வரைவார். சில மாடல் அழகிகளை வைத்து ஹிட்லர் வரைந்த படங்கள், நல்ல விலைக்குப் போயின. அதனால் சொந்தமாக ஒரு ஓவியக்கூடம் அமைத்தார்.

இந்தச் சமயத்தில், சிந்தியா என்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார். காதல் தோல்வி அடையவே, ராணுவத்தில் சேர்ந்தார். 1914-ல் தொடங்கி, 1918 வரை நடந்த முதல் உலகப் போரின் போது ஜெர்மனி ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1918-ல் போரில் ஜெர்மனி தோற்றது. இந்த தோல்விக்கு ஜனநாயகவாதிகளும், யூதர்களும்தான் காரணம் என்று ஹிட்லர் நினைத்தார்.

"உலகில் ஜெர்மானியரே உயர்ந்த இனத்தினர். உலகம் முழுவதையும் ஜெர்மனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்" என்று விரும்பினார்.

ஹிட்லர் பேச்சு வன்மை மிக்கவர். தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து, தனது பேச்சு வன்மையால் விரைவிலேயே கட்சித் தலைவரானார். அரசாங்கத்தின் நிர்வாகத்திறமை இன்மையால்தான் நாட்டில் வறுமையும், வேலை இல்லாத் திண்டாட்டமும் பெருகிவிட்டதாகப் பிரசாரம் செய்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு, ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். ஆனால், அந்த முயற்சியில் தோல்வி அடைந்தார்.

அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஹிட்லருக்கு முதலில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அது ஓராண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

சிறையில் இருந்தபோது, "எனது போராட்டம்" என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார் ஹிட்லர். இது உலகப் புகழ் பெற்ற நூல்.

1928-ல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி அடைந்தது. ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை. தன்னுடைய கட்சியின் பெயரை "நாஜி கட்சி" என்று மாற்றி நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார். அவருடைய இடைவிடாத உழைப்பும், பேச்சுவன்மையும், ராஜதந்திரமும் வெற்றி பெற்றன. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து, பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றக் கட்டிடம் கொளுத்தப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பர்க், மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்தார். 1933-ஜனவரி 30-ந்தேதி ஹிட்லரை அழைத்துப் பிரதமராக நியமித்தார். அன்று முதல் ஹிட்லருக்கு ஏறுமுகம்தான்.

பிரதமராக இவர் பதவி ஏற்ற 1 வருடத்தில் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக் கொண்டு, எதிர்ப்பாளர்களை எல்லாம் ஒழித்துவிட்டு, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார் ஹிட்லர்.

ராணுவ இலாகாவையும், ராணுவ தளபதி பதவியையும் தானே எடுத்துக்கொண்டார். அரசியல் கட்சிகளை எல்லாம் தடை செய்தார். பாராளுமன்றத்தைக் கலைத்தார். எதிரிகளைச் சிறையில் தள்ளினார். "இனி ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என்று அறிவித்தார்.

யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்று முடிவு செய்து, ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கைது செய்து, சிறையில் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து கொன்றார். பலர் இருட்டறைகளில் அடைக்கப்பட்டு, விஷப் புகையால் கொல்லப்பட்டனர். தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் விஷப்புகையிட்டுச் சாகடிக்கப்பட்டனர்.

ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம்.

முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்குக் காரணமான பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பழிவாங்க வேண்டுமென்று திட்டமிட்டார். ராணுவத்தைப் பலப்படுத்தினார். ஜெர்மனியின் தரைப்படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் உலகின் சிறந்த படைகளாக உருவெடுத்தன.

உலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நேரம் நெருங்கிவிட்டதாக நினைத்தார் ட்லர். 1939-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி, எந்தவிதப் போர்ப் பிரகடனமும் வெளியிடாமல் போலந்து நாட்டின் மீது படையெடுத்தார் ஹிட்லர். பிரிட்டனும், பிரான்சும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்ப் பிரகடனம் வெளியிட்ட போதிலும், போரில் நேரடியாக குதிக்கவில்லை. இதனால், இரண்டே வாரங்களில் போலந்தைக் கைப்பற்றிக் கொண்டது ஜெர்மன் ராணுவம்.

இந்தச் சமயத்தில் ஹிட்லருடன் நட்புக் கொண்டார் இத்தாலி சர்வாதிகாரி முசோலினி. ஜப்பான் உள்பட வேறு சில நாடுகளும் ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டன. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ஒரு ரகசிய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. ஆசியப் பகுதிகளை ஜப்பானும், ஆப்பிரிக்காவை இத்தாலியும், ஐரோப்பிய பகுதிகளை ஜெர்மனியும் தாக்கிக் கைப்பற்றவேண்டும் என்பதே அந்த ரகசிய ஒப்பந்தம்.

ஹிட்லரின் போர் வெறி, அவருடைய நாஜி கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பை உண்டாக்கியது. அதனால், அவரை கொலை செய்ய அவருடைய தளபதிகளே சதித்திட்டம் தீட்டினார்கள். இவர்களுக்குத் தலைவர் கர்னல்வான் ஸ்டப்பன்பர்க். 1944 ஜுலை 20-ந்தேதி தன்னுடைய தலைமை அலுவலகத்தில் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார், ஹிட்லர். அவர் முன் இருந்த மேஜை மீது தேசப்படம் விரிக்கப்பட்டிருந்தது. எந்தெந்த இடத்தை எப்படித் தாக்கவேண்டும் என்று ஹிட்லர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஹிட்லரின் கால்களுக்கு அருகே ஒரு "சூட்கேஸ்" இருந்ததை மெய்க்காவலர் ஒருவர் பார்த்தார். "இது இங்கு எப்படி வந்தது? யார் வைத்தது?" என்று அவர் மனதில் கேள்விகள் எழுந்தது. சந்தேகம் தோன்றியது. பெட்டியை தள்ளிவிட்டார். தரையில் 'சர்' என்று சரிந்து சென்ற பெட்டி, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஹிட்லர் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. நாலாபுறமும் புகை மண்டலம் சூழ்ந்தது. புகை அடங்கியவுடன் பார்த்தால், இடிபாடுகளுக்கு இடையே 4 அதிகாரிகள் செத்துக் கிடந்தனர். மயிரிழையில் உயிர் தப்பிய ஹிட்லருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தன. குண்டு வெடித்த இடத்துக்கும், ஹிட்லருக்கும் இடையே ஒரு மேஜை இருந்ததால் அவர் தப்பினார். மெய்க்காவலர் சந்தேகப்பட்டு பெட்டியை தள்ளி விடாமல் இருந்திருந்தால், நிச்சயம் ஹிட்லர் பலியாகியிருப்பார். இந்த சதியையொட்டி, 5 ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவ்வளவு பேருக்கு தூக்கு மேடை கிடைக்காததால், விளக்குக் கம்பங்களிலும், மரங்களிலும் பலர் தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டனர்.

கறிக்கடையில் மாமிசத்தை தொங்கவிடப்படுவதற்காக உள்ள கொக்கிகளில், வயர்களைக் கட்டி, அதில் பலர் தூக்கில் மாட்டப்பட்டனர். கர்னல் ஸ்டப்பன்பர்க்குக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொரு தளபதியான ரோமெல் என்பவரும் இந்த சதியில் சம்பந்தப்பட்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். குணம் அடைந்ததும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கடைசி காலத்தில் இப்படி ஹிட்லருக்கு எதிராகத் திரும்பினாலும், முதலில் ஹிட்லருக்கு பக்கபலமாக இருந்தவர். ஆகவே ஹிட்லரின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. "அவரை தூக்கில் போட வேண்டாம்" என்றார், கருணை தேய்ந்த குரலில். ரோமெல் அதிர்ஷ்டசாலி, அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்போகிறார்ஹிட்லர் என்று எல்லோரும் நினைத்தனர்.

"அவருடைய பழைய சேவையை நினைத்துப் பார்த்து கருணை காட்டுகிறேன். அவரை சுட்டுக் கொல்லவேண்டாம்; தூக்கிலிடவேண்டாம். விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள்!" என்று கூறினார், ஹிட்லர்! அதன்படி அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

அவரை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டார் ஹிட்லர்.

மாலை மலர்

ஹிட்லர் - முழு குறும்படம் (பகுதி 1)



ஹிட்லர் - முழு குறும்படம் (பகுதி 2)




ஹிட்லர் - முழு குறும்படம் (பகுதி 3)




ஹிட்லர் முழு குறும்படம் (பகுதி 4)