"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619





போட்டிகள் மிகுந்து வரும் அவசரமான உலகில் போராடி முன்னேறும் வழிகளை தங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடே சிறு குழந்தைகள் கூட மூட்டையை தூக்கிச் செல்வதை போல புத்தக சுமையை தூக்குகின்ற நிலை. முன்பு ஐந்தாம் வயதில் தான் பள்ளிக்கல்வி தொடங்கியது. அதுவரை பெற்றோரின் தனிப்பட்ட கவனிப்பில் இருந்துகொண்டு அம்மா, அப்பா என சொற்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. தாய் தான் ஒரு குழந்தையின் முதல் ஆசிரியராக இருந்தார். இன்று பிறந்த சில மாதங்களிலே கல்வி நிலையங்களில் முன்பதிவு. மூன்றாம் வயதில் பாலர் பள்ளி வகுப்பு. நான்காம் வயதில் எல்கேஜி எனப்படும் மழலையர் கீழ்வகுப்பு. ஐந்தாம் வயதில் யுகேஜி எனப்படும் மழலையர் மேல்வகுப்பு. இவற்றிலிருந்து பயிற்சி பெறாவிட்டால், ஒன்றாம் வகுப்பில் இடமில்லை என்று சொல்லுமளவுக்கு இன்றைய காலம் மாறிவிட்டது. தொட்டிலில் தாலாட்டப்பட்டு தாய் வழிக்கல்வி ஊட்டப்பட வேண்டிய வயதில், நான்கு சுவருக்குள் அடைக்கப்பட்டு, தனிப்பட்ட கவனம் செலுத்தப்படாமல், பத்தோடு பதினொன்றாய் வெளிநாட்டு மொழி கற்பிக்கப்படும் நிலை தொடர்கிறது.

பாலர் பள்ளி வகுப்புக்கு செல்லும்போதே தனது குழந்தை படிப்பில் முதல் இடம் பெற வேண்டும் என்ற ஆசையும் ஏக்கமும் அடையும் பெற்றோர், தங்கள் குழந்தைகள் பேசி பழகுவதற்கு முன்னரே வண்ணப்படங்கள், அறிவை வளர்க்கும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் மூலம் பல பயிற்சிகள் அளிக்கின்றனர். இதுபோல தங்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்க பெற்றோர் கையாளும் முறைகளில் ஒன்று தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க பழக்கப்படுத்துவது. அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் குழந்தைகள் பேச பழகுவதோடு, அறிவுக்கூர்மையும் பெறுவர் என்று பலர் எண்ணுகின்றனர். புற்றீசல்போல் புதிதாக முளைத்துவரும் தொலைக்காட்சிகள் குழந்தைகளுக்கு தொல்லைக்காட்சிகளாக மாறிவருவது ஒருபுறம். அதிலும் குறிப்பாக கல்வி தொலைக்காட்சியையோ, கல்வித் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ குழந்தைகள் பார்ப்பதால் அறிவுக்கூர்மை அடைவர் என்ற அசையாத நம்பிக்கை பெற்றோர் பலரிடம் உள்ளது. இதற்காக குழந்தைகள் பிறந்த சில மாதங்களிலே இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு வசதி செய்துகொடுக்கின்றனர். ஆனால் கல்வி தொலைக்காட்சியை குழந்தைகள் குறிப்பாக பிறந்த முதல் இரண்டு ஆண்டுககால மழலைப் பருவத்தில் பார்ப்பதால் நன்மை கிடைக்குமா என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. தொலைக்காட்சி பார்ப்பதால் அறிவு வளரும் என்ற பெற்றோரின் நம்பிக்கைக்கு மாறான முடிவுகளை இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. இரண்டு வயதிற்குட்ப்பட்ட மழலையரின் மூளை வளர்ச்சிக்கு கல்வி தொலைக்காட்சிகளோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ உதவவில்லை என்று இவ்வாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையின், ஊடகம் மற்றும் குழந்தைகள் நல மையத்தின் துணை ஆய்வாளர் Marie Evans Schmidt அம்மையார் இந்த ஆய்வை மேற்கொண்டார். அப்போது 800 இளைஞர்களை பற்றி அவர் ஆராய்ந்தார். முதல் மூன்று ஆண்டுகால மழலைப்பருவத்தில் அவர்களின் நேரம் செலவிடப்பட்ட விபரங்களை பெற்றோரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். குறிப்பாக தொலைக்காட்சியை பார்ப்பதில் அல்லது குறுந்தகடு மூலம் படங்கள் பார்ப்பதில் அவர்கள் செலவிட்ட நேர அளவையும், அவர்களின் மொழி மற்றும் உடலளவில் இயங்கி செயல்படும் திறன்களை பற்றியும் பதிவு செய்தார். குழந்தைகள் ஓடியாடுவது, மண்ணில் விளையாடி வடிவங்கள் செய்து மகிழ்வது போன்றவற்றை தான் உடலளவில் இயங்கி செய்யும் திறன்கள் என்கிறோம்.

Marie Evans அம்மையார் மேற்கொண்ட ஆய்வுபடி, பொதுவாக அந்த இளைஞர்கள் இரண்டு வயது வரையான, மழலைப்பருவத்தில் நாளுக்கு 1.2 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிட்டிருந்தனர். இந்த தகவல்களை ஆராய்ந்தபோது, தொலைக்காட்சி பார்ப்பதில் அதிக நேரம் செலவிட்டவர்கள் மூன்று வயதாகியபோது, மொழி மற்றும் உடலளவில் இயங்கி செயல்படும் இதர திறன்களில் மோசமாக இருந்ததை Marie Evans அறியவந்தார். இந்த கட்டத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்த்ததால் எதிர்மறை பாதிப்பு அடைந்த குழந்தைகள் மொழி மற்றும் இதர திறன்களில் மோசமாக இருந்தனர் என்று எண்ணினர்.

பின்னர், குழந்தைகளை பாதிக்கும் பிற காரணிகளை பற்றி Marie Evansசும் அவரது குழுவினரும் ஆய்வு செய்தனர். பெற்றோரின் கல்வி நிலை மற்றும் வீட்டு வருமானம் ஆகிய பல காரணிகளை ஆராயந்தனர். அப்போது தான் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் அறிவு வளர்ச்சிக்கும் இடையில் தொடர்பில்லை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் செல்வாக்கு ஏற்படுத்தவில்லை. ஆனால் பெற்றோரின் கல்வி நிலை மற்றும் பொருளாதாரா நிலைகள் தான் ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தி இருந்தது தெரியவந்தது. ஆய்வின் தொடக்கத்தில் தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் அறிவு வளர்ச்சியோடு தொடர்புடையதாக தோன்றியது. ஆனால் வீட்டிலுள்ள பிற சுற்றுச்சூழல்களால் ஏற்பட்ட விளைவே அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்க செய்துள்ளது என்பதை பிந்தைய ஆய்வின் போது தெரிந்து கொண்டனர்.

இரண்டு வயதிற்குட்ப்பட்ட மழலையரை தொலைக்காட்சி பார்க்க செய்வதால் அவர்களின் அறிவு வளர்வதில்லை என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்படியானால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை தூண்டவிரும்பும் பெற்றோர் என்ன தான் செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? குழந்தைகளோடு குழந்தையாக விளையாடி மகிழ வேண்டும். அவர்களோடு பேசி உரையாடி, கற்றுக்கொடுக்க வேண்டும். சைகைகளால் பரிமாறி அவர்களை பண்படுத்த வேண்டும். நல்லவை செய்யும்போது பாராட்டி, தீயவை செய்யும்போது அறியாமல் செய்வதால் கனிவோடு திருத்தி சொல்லிக்கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட சாதராண நடைமுறைகள் தான் குழந்தைகளை பண்படுத்தி அவர்களின் மொழி, சொல் வளம், இதர சிறப்பு திறன்களை உயர்த்த உதவுகின்றன.

இன்று தந்தையும் தாயும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தால், தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் முடங்கிபோகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட தனக்கு தரவில்லையே என்று ஏங்கும் குழந்தைகள் வீட்டிலுள்ள தொலைக்காட்சி பெட்டியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறுமளவுக்கு இன்றைய சூழ்நிலை உருவாகியுள்ளது. தொலைக்காட்சி பெட்டியின் முன் செலவிடும் நேரத்தை குழந்தைகளோடு செலவிட்டால், குழந்தைகளின் வளர்ச்சி நமக்கே புலப்படும்.

சீன வானொலி