"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

ண்மைக் காலத்தில் உலகில் ஏற்பட்டு வரும் கணினி மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக, மருத்துவ சிகிச்சை முறைகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால், உயிர்க் கொல்லி நோய்களான புற்றுநோய், எய்ட்ஸ் நோய் போன்றவற்றைக் குணமாக்கும் மருந்துகள் இன்றளவும் கண்டறியப்பட இயலாமல் உள்ளது.

பல்வேறுபட்ட நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் உலகெங்கும் உள்ள மருந்தியல் ஆய்வு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய மருந்துகளின் விளைவுகளைப் பற்றி மனிதர்கள் மீது சோதனை செய்யப்படுவதற்கு முன்னர் அவை குரங்கு, எலி, முயல் போன்ற விலங்குகள் மீது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பின்பே மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளாக உருவாக்கப்பட்டன.

இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட சில மருந்துகள் மனிதர்களுக்கு தீயவிளைவுகளை ஏற்படுத்தியும் இருக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்கு தொடக்க மாதங்களில் மயக்கம், தலைசுற்றல், வாந்தி போன்றவை ஏற்படுவது வழமையானதே. 1957 இல் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மருந்தியல் நிறுவனம் இதற்கான தாலிதோமைட் என்ற மருந்தை உருவாக்கி வெளியிட்டனர். இதன் விற்பனை 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இக்காலக் கட்டத்தில், 1960 ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த 10,000 குழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறந்தன. இந்த மருந்து விலங்குகள் மீது சோதனை செய்யப்பட்டது என்பது உண்மைதான்; ஆனால் கருத்தரித்திருந்த விலங்குகள் மீது அவை சோதனை செய்யப்பட்டனவா என்பதைப் பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை.

ஜெர்மன் நாட்டு கொலக்னே பல்கலைக் கழக டாக்டர் ஜாகன்நோப்ளாச் என்பவரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து இந்த தாலிதோமைட் மருந்தைப் பற்றிய புதிய தகவல்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மருந்து மனிதரின் உடலில் சூபர்ஆக்சைட் என்னும் நச்சுத்தன்மை கொண்ட ஆக்சிஜன் மூலக்கூறுகளை அதிக அளவில் உருவாக்குகிறது என்றும், அது குழந்தையின் உடலில் வளரும் செல்களில் அழிவை ஏற்படுத்துகிறது என்றும் தெரிய வந்துள்ளது. கருவின் செல்களுக்கு க்ளுடாதியோன் என்னும் மருந்தை செலுத்துவதன் மூலம் இந்த தாலிதோமைட் மருந்தின் பக்கவிளைவுகளைப் போக்கலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனால் ஏற்கெனவே உடற் குறைபாடுகளுடன் பிறந்துவிட்ட குழந்தைகளுக்கு இது எந்த நன்மையும் செய்யப் போவதில்லை.

இந்தப் புதிய ஆராய்ச்சி ஆழம் நிறைந்ததும், எதிர்காலத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். விலங்குகளும் மனிதர்களும் ஒன்று அல்ல, முன்கூட்டி எதிர்பார்க்க இயலாத அளவிற்கு விலங்குகளின் தன்மைகள் மனிதரிடமிருந்து மாறுபட்டிருப்பவையாகும்.

இந்த சோகமான நிகழ்ச்சிக்குப் பின்னர், புதிய மருந்துகளின் விளைவுகளைப் பற்றி மனிதர்கள் மீது சோதனை செய்யப்படுவதற்கு முன்னர் அவை குரங்கு, எலி, முயல் போன்ற விலங்கினங்களில் ஏதேனும் இரண்டின் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டு, அதனால் பக்க விளைவுகளோ ஆபத்தோ இல்லை என்று தெளிவாகத் தெரிந்த பின்னர்தான் மனிதர்கள் மீது அவற்றை சோதனை செய்து பார்க்க இயலும் என்ற கடுமையான கட்டுப்பாடுகள் இத்தகைய ஆய்வு நிறுவனங்களுக்கு அதிகாரிகளால் விதிக்கப் பட்டன.

தற்போது வெளிவந்துள்ள மேற்கண்ட ஆராய்சி முடிவுகள் இத்தகைய கட்டுப்பாடுகள் தேவையானவையா? பயனுள்ளவையா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் விலங்குகளின் மீது சோதனை செய்யப்பட்ட பின் உருவாக்கப்பட்டவைதான் என்று கருதும் சிலர் இக்கட்டுப்பாடு தேவையானதே என வாதிடுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இதனை ஆதரிக்கும் மனு ஒன்றில் கையெழுத்திட்ட 500 க்கும் மேற்பட்ட அறிஞர்களில் நோபல் பரிசு பெற்ற மூவரும் இடம் பெற்றிருந்தனர்.

விலங்குகளின் மீது சோதனை செய்யும் போது, அந்த மருந்துகள் மனிதர்கள் மீது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளுவது முக்கியமானது. மனிதர் மீது பாதிப்பை ஏற்படுத்திய மேற்கூறப்பட்ட தாலிதோமைட் ஏன் விலங்குகளின் மீதான சோதனையின் போது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை?

இதை மற்றொரு கோணத்திலும் பார்க்கலாம். விலங்குகளின் மீதான சோதனையில் பாதிப்பை ஏற்படுத்தாத மருந்துகள் மனிதர் மீது பாதிப்பை ஏற்படுத்துவது போல, மனிதர் மீது பாதிப்பை ஏற்படுத்தாத மருந்துகள் சில விலங்குகள் மீது பாதிப்பை ஏற்படுத்தவும் கூடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இக்கோட்பாடு உண்மையாக இருக்குமானால், மனிதர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தாத பல அரிய மருந்துகளின் கண்டுபிடிப்புகள் மீதான முயற்சிகள், விலங்குகள் மீதான சோதனையுடன் கைவிடப்பட்டுவிடுகின்றன என்பதை மறுக்கமுடியாது. இதன் காரணமாக எத்தனை அரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படாமல் கைவிடப்பட்டிருக்கக்கூடும் என்ற சிந்தனையே வியப்பை அளிப்பதாக உள்ளது.

விலங்குகள் மீது வெற்றிகரமாக சோதனை மேற்கொள்ளப்பட்ட 100 மருந்துகளில், 92 மருந்துகள் மனிதர்கள் மீது பயன்படுத்தும் சோதனையில் வெற்றி பெறத் தவறிவிட்டன. ஆனால் மனிதர்களுக்குப் பயன்படுத்தும் மருந்துகளில் எத்துணை மருந்துகள் விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த இயலும் என்பதை ஒரு விலங்கியல் மருத்துவரால் பட்டியலளிக்க முடியும். சாதாரண ஆஸ்பிரின் கூட விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த இயன்றது என்பது விந்தையானதே. என்றாலும் மருந்தியல் ஆராய்ச்சியில் விலங்குகள் மீதான சோதனையைக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறைக்கு மாற்றாக வேறொரு நடைமுறையை மேற்கொள்ள இயலாத நிலையில், தாலிதோமைட் போன்ற மற்றொரு பெரும் சோகம் நிகழாமல் இருக்கும் என்று நம்புவோமாக.

- தகவல்: இனியவன் (துபாய்)
தமிழ்வடிவம்: த.க.பாலகிருஷ்ணன்.

http://files.periyar.org.in/unmaionline/2009/may/01-15_2009/page16.php?0945-560_உண்மை_0000-1100_01-15_2009