"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு கிலோ வெளிநாட்டு விதைகளை இரண்டே ரூபாய்க்கு தருவோம்' என்பது அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியாக இன்னும் சில ஆண்டுகளில் மாறலாம். அரிசி, பருப்பு ஆகியவற்றுடன் பயிர் விதைகளும் அரசின் பொது வழங்கல் பட்டியலில் வரலாம். 'ஒரு கிலோ நெல்லு கொடுங்க' என உழவர்கள் கடைகளில் சென்று கேட்கலாம். ‘தக்கன தழைத்தல்’ - டார்வினின் இந்தத் தத்துவம் இன்னும் சில நாட்களில் பொய்த்துப் போகலாம். மாற்றம் மட்டுமே மாறாதது என்னும் இவ்வுலகில் 'டார்வின்' மட்டும் விதிவிலக்கா என்ன?

சரி செய்திக்கு வருவோம்! மரபு மாற்று விதைகளுக்கு இந்திய அரசு உரம் போட்டுத் தண்ணீர் தெளித்திருக்கிறது! தக்காளி, கத்தரிக்காய், காலிபிளவர் ஆகிய காய்கள் இன்னும் மூன்று ஆண்டுகளில் மரபு மாற்றுத் தொழில்நுட்பம் மூலம் உற்பத்தி செய்யப்படும் என அறிவித்திருக்கிறது. மைய அரசின் மரபறிவியல் ஒப்புதல் குழு, மரபியல் மேலாய்வுக்குழு ஆகியவற்றின் ஒப்புதலுக்குப் பின் இந்தியாவில் அவை பயிரிடப்படும். அரசின் இம்முடிவு வேளாண்மை அறிஞர்களை மட்டுமல்லாது பல வெளிநாட்டு அறிஞர்களையும் வியப்படைய வைத்திருக்கிறது.

ஒரு பக்கம் மரபு மாற்று விதைகளை அமெரிக்கா முதலிய நாடுகள் தீவிரமாக ஆதரிக்கின்றன. பெருகிவரும் உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க இம்முறை உதவும் என்பது அந்நாடுகளின் வாதம். மரபு மாற்று முறையில் பயிர்களின் மரபுகளை மாற்றுவதால் பூச்சிக்கொல்லிகள் குறைந்த அளவிலேயே தேவைப்படும்; இதனால் மண்வளம் பாதுகாக்கப்படும். அருகி வரும் சில பயிரினங்களை மரபு மாற்று முறையில் காப்பாற்ற முடியும் எனப் பல வாதங்களை முன் வைக்கிறது அமெரிக்கா. நோபல் பரிசு பெற்ற 25 அறிவியலாளர்கள், 3400 அமெரிக்க வேளாண்அறிவியலாளர்கள் அமெரிக்காவின் இக்கருத்தை ஆதரிக்கிறார்கள்.

(கொசுறுச் செய்தி: பல நாட்கள் வைத்திருந்து விற்பதற்கு வசதியாக மெதுவாகப் பழுக்கும் 'பிளார் சாவர்' என்னும் மரபு மாற்றுத் தக்காளியை முதன்முதலில் கலிபோர்னிய நிறுவனம்தான் அறிமுகப்படுத்தியது)

வலுக்கும் எதிர்ப்புக்குரல்கள்

இத்தனை இருந்தாலும் எதிர்ப்புக்குரல்களும் பலமாகவே கேட்கின்றன. முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் இல்லாத நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் மரபு மாற்றுக் காய்கறிகளைத் தனியே வைத்திருக்கின்றன. இக்காய்களைச் சந்தை விற்பனைக்கு அனுமதித்தாலும் அவற்றின் மீது ஒட்டுத் தாள்கள் ஒட்டப்பட்டு அவை வேறுபடுத்தப்படுகின்றன.

வெனிசுலா நாடு கடந்த 2004ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் மரபு மாற்றுப் பயிரிடலைத் தடுத்திருக்கிறது. அங்கேரி நாடு மரபுமாற்றுப் பயிரிடலையும் இறக்குமதியையும் சட்டம் போட்டு நிறுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் கருத்துகள் அனைத்தும் வடிகட்டிய பொய் என்கிறார் வேளாண்அறிவியலாளர் சார்லசு பென்புருகு. 'இம்முறையால் 5 - 7 விழுக்காடு நட்டம் கூடும்; 5 - 10 மடங்கு களைக்கொல்லி அதிகம் செலவாகும்' என்கிறார் இவர். "ஒட்டு மொத்த ஐரோப்பா கண்டமே புறக்கணித்த மரபு மாற்றுப் பயிர்களை இந்தியா ஆதரிக்கக்கூடாது. மீறி ஆதரித்தால் வட அமெரிக்காவின் சந்தையாக இந்தியா மாறிவிடும். இந்தியர்கள் ஆய்வுக்கூட எலிகளாகப் பயன்படுத்தப் படுவார்கள்" என எச்சரிக்கிறார் பிரான்சைச் சேர்ந்த மரபணு ஆய்வாளர் செராலனி. "எலி, ஆடு, முயல் ஆகியவற்றிற்கு மரபு மாற்றுப் பயிர்களை உணவாகக் கொடுத்து ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவ்விலங்குகளின் இரத்த உறைதல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் மாற்றங்கள் காணப்பட்டன. எனவே மரபு மாற்றப்பயிர்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது" என்கிறார் இலண்டன் கிங் கல்லூரிப் பேராசிரியர் அந்தோனியோ.

“அரசின் அறிவிப்பே ஒரு மோசடி”

இயற்கையைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடும் கிரீன் பீசு தன்னார்வ அமைப்பு மரபுமாற்றுப் பயிரிடலைத் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. ‘காலம் காலமாக இருந்து வரும் உணவுச் சங்கிலியை மாற்றுவது தவறானது. வணிகத்தைப் பெருக்க வேண்டுமானால் மரபு மாற்று முறை உதவும். வாழ்க்கைக்கு உதவாது’ என்பது கிரீன் பீசின் கருத்து. இதைப் பற்றி, 'கிரீன்பீசு' அமைப்பைச் சேர்ந்த செய் கிருட்டினனைக் கேட்டபோது, " இந்திய அரசின் அறிவிப்பே ஒரு மோசடி! மரபு மாற்றுப்பயிர்கள் தொடர்பான முடிவுகளைச் சுற்றுச்சூழல் அமைச்சகம் தான் எடுக்க வேண்டும். ஏனென்றால் இது நிலம் தொடர்பான சிக்கல்! ஆனால் இப்போது வேளாண்துறை அமைச்சர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுவே தவறானது!" எனப் பொரிந்து தள்ளினார்.

“வடிகட்டிய பொய்”

"ஒரே ஒரு மரபணுவை மாற்றுவதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும் என்பதே வடிகட்டிய பொய்! நம் நாட்டில் ஏற்கெனவே மரபு மாற்று முறையில் பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால் உழவர்களுக்கு அதனால் எவ்விதப் பயனும் இல்லை. சொல்லப்போனால் பருத்தி உழவர்கள் தற்கொலை இன்னும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது." என்றவர் "மரபு மாற்றுப் பயிர் நிறுவனங்கள் நெல்லையும் மரபு மாற்றுப் பயிரிடல் முறையில் திட்டமிட எண்ணியுள்ளன. இந்திய அரசு இப்போதே கவனமாகச் செயல்பட்டு அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். கனடா, அர்சென்டினா, வட அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளில் மட்டும்தான் மரபு மாற்றுப் பயிரிடல் முறை நடைமுறையில் உள்ளது. வேறெந்த நாட்டிலும் இல்லை. மேலும் முதன்மைப் பயிர்களை மரபு மாற்று முறையில் பயிரிட எந்த நாடும் ஒப்புக்கொண்டதில்லை. அமெரிக்கா புளோரிடாவின் முதன்மைப் பயிர் பருத்தி. அங்கு 'பிடி' பருத்திக்குத் தடை உள்ளது. இதே போல் பெரு நாட்டில் உருளைக்கிழங்கும் சீனாவில் சோயாவும் மெக்சிகோவில் சோளமும் மரபு மாற்று முறையில் பயிரிடத் தடை விதித்துள்ளார்கள். நம்முடைய நாட்டிலும் மரபு மாற்றுப் பயிர்களுக்கு முழுமையாகத் தடைகள் வேண்டும்" என்று அவர் விலாவாரியாக விளாசித் தள்ளினார்.

பிடி' (‘Bt’) என்றால் என்ன?

பேசில்லசுத் துரிசென்சி (Bacillus Thurigiensis) என்பது ஒருவகை புரதம். அப்புரதத்தில் இருந்து பருத்திப் புழுக்களைக் கொல்லும் ஒருவகை மரபீனி பருத்திப் பயிர்களில் சேர்க்கப்படுகிறது. இம்மரபீனி சேர்க்கப்பட்ட பருத்தி வகைகள் 'பிடி' பருத்தி எனப்படுகின்றன. இயற்கை வேளாண்மையை ஆதரிக்கும் நம்மூர்க்காரர்கள், "பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த முறையை மாற்றுவது மண்வளத்தைப் பாதிக்கும்; உழவர்கள் விதைகளுக்காகப் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டி வரும்" என்கிறார்கள். முதலாளித்துவத்தை வளர்ப்பதே இதன் நோக்கம் என்பது இவர்களின் குற்றச்சாட்டு.

மலட்டுத்தன்மை அடையும் நிலம்

தமிழ்நாடு உழவர்கள் சங்க மாநிலத்தலைவர் வேட்டவலம் மணிகண்டனிடம் கேட்டபோது "மரபு மாற்றுப் பயிரிடலால் நிலம் மலட்டுத்தன்மை அடைந்துவிடும். மராட்டிய மாநிலத்தில் மரபு மாற்றுப் பயிர்களைப் பயிரிட்ட உழவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். தமிழ்நாட்டில் மரபு மாற்றுப் பயிர்களைப் பயன்படுத்திய உழவர்கள் பலருக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்காகப் பலகட்டப் போராட்டங்கள் நடத்தி ஏக்கருக்கு ஐயாயிரம் பணத்தைப் பெற்றுக் கொடுத்தோம். எனவே மரபு மாற்றுப் பயிர்கள் அதிக மகசூல் தரும் என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை" என முடித்துக்கொண்டார்.

தடை விதித்துள்ள நாடுகளில் சில : தாய்லாந்து, ஆசுதிரியா, அங்கேரி, வெனிசுலா , பிரான்சு, இரசியா, நியூசிலாந்து

"மரபு மாற்றுப் பயிரிடல் முறை பயிர்களில் பல வகைகள் அழியும் வாய்ப்பு அதிகம். இந்தியாவில் பழைய காலத்தில் 120000 அரிசி வகைகள் இருந்தன. 'பசுமைப் புரட்சி'யின் விளைவாகத் தற்போது வெறும் ஐம்பது அரிசி வகைகள் மட்டுமே உள்ளன. இன்னும் மரபு மாற்றுப் பயிரிடலைக் கொண்டு வந்தால் இருக்கும் அரிசி வகைகளும் அழிந்து போகும். சொல்லப்போனால் அன்றாடம் நாம் சாப்பிடும் கத்தரிக்காயில் மட்டுமே இரண்டாயிரத்திற்கும் அதிகமான வகைகள் உள்ளன. அரசின் இவ்வறிவிப்பால் இவை எல்லாம் அழிந்து போகும் நிலை ஏற்படும்" என எச்சரிக்கிறார் இயற்கைமுறை வேளாண்மை முறையைப் பின்பற்றும் செல்லையா.

“வழக்கமாக உழவர்கள் ஓராண்டு விளைச்சலில் இருந்து அடுத்த ஆண்டுக்கான விதைகளைப் பெறுவார்கள். ஆனால் மரபு மாற்று விதைகளை இப்படிப் பயிரிட முடியாது. மரபு மாற்று விதைகள் 'அறிவுசார் உரிமை'ச் சட்டத்தின் கீழ் வருகின்றன. மரபு மாற்று விதைகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும். அவற்றிடம் இருந்து தான் உழவர்கள் விதைகளைப் பெற வேண்டும். இல்லாவிட்டால் 'எங்களை ஏமாற்றி விதைகளைப் பயிரிட்டிருக்கிறார்கள்' என அந்நிறுவனங்கள் வழக்குத் தொடுக்கும். 1998 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஒரு விவசாயி மேல் இப்படி வழக்குத் தொடரப்பட்டது." எனப் புள்ளிவிவரங்களை அடுக்குகிறார்கள் சமூக ஆர்வலர்கள் சிலர்.

இன்னும் பிரான்சில் உள்ள கேன் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறைத் தலைவர் செராலனி, ஒரிசா மாநில ஓமியோபதி மருத்துவர்கள் சங்கத் தலைவர் தத்தா, இயற்கை வேளாண்மை ஆராய்ச்சியாளர் கவிதா குருகந்தி, மரபியல் துறை அறிஞர் பார்கவா, முன்னாள் அமைச்சர் அன்புமணி இராமதாசின் ‘பசுமைத்தாயகம்’ தன்னார்வ அமைப்பு, நடிகைகள் அமலா, உரோகிணி, இயக்குநர்கள் மிசுகின், வசந்து, மருத்துவர் கமலா செல்வராசு என மரபு மாற்றுப் பயிரிடல் முறையை எதிர்ப்போர் பட்டியல் நீளுகிறது.

இப்படிக் கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாகப் பல சிக்கல்கள் இருக்கின்றன. இவையெல்லாம் இருக்க, இந்திய அரசின் தடாலடி அறிவிப்புப் பலரைப் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

- முத்துக்குட்டி

கீற்று.காம்