கடந்த காலம் கழிந்து விட்டது !
நீங்கள் நிகழ்காலத்தில் தான் வாழ முடியும்; கடந்தது கடந்தது தான். இந்த வாக்கியத்தை நீங்கள் நினைவில் நிறுத்தித் தொடர்ந்து கூறிவந்தால், அது உங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றியமைக்கும்.
நீங்கள் இறந்த காலத்தில் வாழ முடியாது. பழைய சுகங்களை அசை போட்டு அனுபவிக்கலாம். பழைய துக்கங்களை உங்களால் முழுவதும் மறக்க முடியாமல் போகலாம். ஆனால் நீங்கள் பழைய சுகங்களையும் துக்கங்களையும் பழைய நிகழ்ச்சியாகளாகவே பார்க்கவேண்டும்.
நினைவுகளாக அவை உங்கள் மனதில் நிற்கலாம், ஆனால் நிகழ்கால உணர்ச்சிகளாக அல்ல.
புத்திசாலித்தனமாக, வெற்றிகரமாக, மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்கு இது ஒரு முக்கியமான பாடமாகும். பழைய சுகங்களும் பழைய துக்கங்களும் மறைந்து விட்டன.
இறந்த காலம் கடந்து சென்றது. கதவை மூடிவிடுங்கள்.
பழைய சுகங்களும் பழைய துக்கங்களும் வெறும் நினைவுகளே. அவற்றை நிகழ்கால உணர்ச்சிகளாக மறு அவதாரம் எடுக்க வைக்காதீர்கள். இறந்த காலம் சென்று மறைந்தது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். நிகழ்காலம் கண் முன் இருக்கும் உண்மை. இறந்த காலத்தில் வாழவோ இல்லை அதை மாற்றவோ நம்மால் முடியாது.
உங்கள் கடந்த காலத் தவறுகளும் சென்று ஒழிந்துவிட்டன. அதன் விளைவுகள் சில நிகழ்காலத்திலும் உங்களுக்கு இடைஞ்சல் தரலாம். நிகழ்காலத்தில் அவற்றை எதிர் கொள்ள வேண்டி வரலாம். நடந்து முடிந்த தவறுகளைத் திருத்த முடியாது. அவற்றிலிருந்து உண்மைகள் உணரப்பட வேண்டும். உணர்வு பூர்வமாக அலசுங்கள் – உணர்ச்சி பூர்வமாக அன்று.
பழைய சோகங்கள், தவறுகள், எரிச்சல் இவற்றை நினைத்து உணர்ச்சி வசப்படுவோர் – நிகழ்காலச் சங்கடங்களை அதிகமாக்குகிறார்கள். மகிழ்ச்சியற்ற கடந்த காலத்தின் நினைவுகள் பற்றி உணர்ச்சி வசப்படும்போது நிகழ்காலம் மகிழ்ச்சியற்றதாகத்தான் இருக்கும்.
சென்றவை சென்று ஒழிந்தது, கதவைச்சாத்துங்கள்.
நிகழ்காலத்தில் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கும் கதவைத் திறந்து வையுங்கள். இன்று கைகொடுப்பவை நிகழ்கால வாய்ப்புக்கள் மட்டுமே.
இன்று இப்பொழுது தான் நம்முடைய நேரம்.
- காப்மேயர்
தலைப்பு : சுயமுன்னேற்றம்