"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


நான் பிறருடன் உரையாடும்போது அளவுக்கதிகமாகப் பேசுகிறேனோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும், "இனிமேல் குறைவாகப் பேசவேண்டும்" என்று முடிவு செய்து கொண்டாலும், அடுத்த முறை என்னையறியாமல் நிறையப் பேச ஆரம்பித்துவிடுகிறேன். அதனால் எனக்கு ஒன்றும் குறைவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனாலும் ஏதோ தவறு செய்வதாக என் உள்மனம் உறுத்துகிறது. இது ஒரு குறையா? அப்படியானால் இதனைப் போக்க என்ன செய்வது?

ம்மில் பலர் உரையாடும்போது அநாவசியமாக நீண்ட நெடிய விளக்கங்களைக் கொடுக்க ஆரம்பித்து விடுகிறோம். இதற்கு முக்கிய காரணம் நம் ஆழ்மனதில் தங்கியிருக்கும் தாழ்வு மனப்பான்மை அல்லது பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள்தான். அடிக்கடி எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்ற உந்துதலும் இதனால் ஏற்படுகின்றது என்பர் (நீரிழிவு தவிர இந்த மனப்பான்மையும் ஒரு காரணம்). பேச்சு தவிர எழுதும்போதுகூட அனாவசியமாக தன் கூற்றை உறுதிப் படுத்துவதாக எண்ணிக்கொண்டு, பத்தி பத்தியாக ஒரே விஷயத்தை எழுதிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் எழுதும் கடிதங்கள் இரண்டு மூன்று பக்கங்கள் ஒரே பாராவாக இருக்கும். முற்றுப் புள்ளியிட இவர்களுக்கு லேசில் மனம் வராது. தாம் கூறுவதை யாராவது நம்பாமலிருந்து விடுவார்களோ என்று இவர்கள் மனதில் ஒரு நம்பிக்கையின்மை "நமநம" வென்று அரித்துக் கொண்டிருக்கும். இதே காரணத்தினால், தான் கூறுவது உண்மைதான் என்று நிரூபிக்கும் முகமாக, யாரும் கேட்காமலேயே பலவித சான்றுகளையும் நிரூபணங்களையும் அடுக்கிய வண்ணம் இருப்பர். தான் சும்மா புருடா விடுவதாக அடுத்தவர் எண்ணிவிடக்கூடாதே என்பதற்காக "அங்கே ஒரு வேலைக்காரர் இருந்தார், அவர் பெயர் இராமசாமி. பஸ் சரியாக காலை 10-12க்கு வந்தது. அங்கே தாடி வைத்துக் கொண்டு ஒரு பிச்சைக்காரன் நின்றான்“. இது போன்ற உப்புப் பெறாத விவரங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருப்பர். அடுத்தவருக்கு இது அலுப்புத் தட்டுமே என்கிற உணர்வு எதுவுமில்லாமல் இதுபோல் செய்வதற்குக் காரணம் தன்னைப் பற்றியே சரியான மதிப்பீடு இன்மைதான்.

என்னுடன் பணியாற்றிய ஒரு பெரிய அதிகாரி தான் எழுதிய ஒவ்வொரு கடிதத்திற்கும் ஒரு நகலெடுத்து தனியாக ஒரு ஃபைல் செய்து தன் அறையில் வைத்துக் கொள்வார் - அவையெல்லாம் அவர் அதிகாரத்திற்கு உட்பட்ட அலுவலகத்தில்தான் இருக்கும் என்றபோதும் கூட. அது தவிர ஏதாவது மீட்டிங்கில் பங்கெடுப்பதென்றால், தன் உதவியாளர்கள் கொண்ட ஒரு படையையே அழைத்துச் செல்வார். அவர்கள் தங்கள்அலுவலகத்தையே பெயர்த்து எடுத்துச் செல்வதுபோல் ஒரு வண்டி ஃபைல்களை சுமந்துவரச் செய்வார் “ஏதாவது மேல்விவரம் கேட்டால் என்ன செய்வது" என்பார். தன் பெயரைக் கேட்டால்கூட ஒன்றுக்கு இரண்டுமுறை check செய்துவிட்டுத்தான் பதில் சொல்வார் என்பார்கள்! அவ்வளவு தன்னம்பிக்கையின்மை. இவர்கள் "படு பேஜார்" கிராக்கிகள். இதுபோன்ற மேலதிகாரி கிடைப்பதற்கு அவருடைய உதவியாளர்கள் முன்பிறவியில் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு அந்தக் கோயில் சுவற்றிலேயே கையைத் துடைத்துவிட்டுச் சென்றதுபோன்ற பல கொடிய பாவங்களைச் செய்திருக்க வேண்டும் என்பது திண்ணம்!

அளவுக்கதிகமாகப் பேசுவது கண்டிப்பாக ஒரு குறைதான். ஆனால் எது அளவு? எந்த அளவுகோலைக் கொண்டு அதை நிர்ணயிப்பது என்ற கேள்வி நியாயமானது. மேடைப் பேச்சென்றால் "இன்னும் கொஞ்சம் பேசமாட்டானா" என்று பிறர் நினைக்கும் நேரத்தில் முடிக்க வேண்டும் என்பர். அதுபோல் பொதுவாக எப்போதுமே நிறையப் பேசினால் நம் கூற்று மட்டுமில்லாது நம் ஆளுமையும் நீர்த்துப் போகும் அபாயம் இருக்கிறது. நம் இமேஜ் மிகச் சாதாரணத் தோற்றம் கொண்டுவிடும். இதுதவிர, நம் பேச்சு செல்லும் திசையும் நம் கட்டுப்பாட்டிலிருந்து விலகி ஏதேதோ பேசி வம்பில் கொண்டுவிடும் ஆபத்தும் இருக்கிறது. சூழ்நிலையும் நம் கையின் ஆளுமையில் நிற்காது. நாம் சொல்வது மிகச் சாதாரணமானதாக, எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக, ஊடகங்களில் அடிக்கடி தென்படுவதாக இருந்தாலும் கூட, அதனை நீங்கள் பூடகமாக, “எல்லாம் தெரிந்த தோரணையில்", மிகக் குறைந்த சொற்களில், அர்த்தம் தொக்கி நிற்கும்படியாக உரைத்தீர்களானால், அது மிக முக்கியத்துடன் பிறரால் உன்னிப்பாகக் கேட்டு ரசிக்கப்படும் சாத்தியம் உள்ளது.

குறைவாகப் பேசுபவர்கள் மேல் எப்போதும் ஏனையோர் தன்னையறியாமல் ஒருவித அச்சம் கலந்த மரியாதையுடன் அணுகுவார்கள். மூடிமறைத்தாற்போல் உரையாடினால்தான் உங்கள்மேல் தொடர்ந்து ஆர்வம் இருக்கும். இது காதலர்களுக்கும் பொருந்தும். அதிகமாகப் பேசப்பேச, ஏதாவது முட்டாள்தனமாகப் பேசிவிட ஏதுவாகும். ஒவ்வொரு சொல்லும் நம் முழுக் கட்டுப்பாட்டுடனும், நம் சிந்தனை அடிப்படையில் முடிவு செய்யப்பட்டும் வந்து விழவேண்டும். அது பாட்டுக்கு லீக்கான குழாய்போல கொட்டக் கூடாது. நாம் சொல்வது சரிதான் என்கிற நம்பிக்கை நமக்கு முழுமையாக இருக்கும்போது ஒவ்வொரு சொல்லுக்கும் நிரூபணங்கள் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

நீங்கள் எப்போதும் ஒரு "மூடிய கை" யாகத் தோன்றவேண்டும். எல்லாவற்றையும் எல்லோருக்கும் உடைத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அத்தியாவசியத் தேவையிருந்தாலொழிய விளக்கங்கள் அளிக்கக் கூடாது. திரு. எஸ்.எஸ். இராஜேந்திரன் ஒரு திரைப்படத்தில் "நான் எல்லாத்தையும் ஒடைச்சுத்தான் சொல்லுவேன்" என்று பேசும் ஒரு யதார்த்தவாதியாக வந்து மிகுந்த அல்லல் படுவார். அதற்கு அவருடைய மனைவி, “ஒடைச்சு சொல்லுங்க.பரவாயில்லை. அதுக்காக இப்படி சுக்குநூறா ஒடைக்கணுமா" என்பார்.

நாம் உரையாடும்போது அடுத்தவர் நம்மை எப்போதும் அளவெடுத்துக் கொண்டேயிருப்பர். நம் மனத்தினுள்ளே புகுந்து நம் எண்ணங்களை அகழ்வாராய்ச்சி செய்ய முற்படுவர். நம் எண்ண ஓட்டங்கள் பிறரால் முழுமையாகக் கணிக்கப்படுமேயானால், நம் மேல் அவர்களின் ஆதிக்கம் ஏற்படும். பவர் அவர்கள் கைக்கு ஏறிவிடும். அதனால் பொருள்பொதிந்த சொற்கள் சிலவற்றைப் பேசிவிட்டு நிறுத்திவிட வேண்டும். "இந்த ஆள் என்ன நினைத்துக் கொண்டு இப்படிச் சொல்கிறானோ தெரியவில்லையே" என்று அவனவன் மண்டையை உடைத்துக் கொள்ளவேண்டும். நாம் கூறிய ஒவ்வொரு சொல்லையும் அவர்கள் நினைத்து ஆராய்ச்சி செய்யச் செய்ய நம் ஆளுமை கூடிக் கொண்டே போகும். சொற்கள் குறைவாகவும் மௌனம் அதிகமாகவும் இருந்தால் பிறரை ஒரு தடுமாற்ற நிலையிலேயே வைக்கலாம். அப்போதுதான் நம் வேலைகளை சுலபமாக சாதித்துக் கொள்ளலாம்.

இதில் இன்னொரு நன்மையும் உள்ளது. நாம் குறைவாகப் பேசி மௌனத்தைக் கடைப்பிடிக்கும்போது ஏனையோர் தங்கள் பேச்சினால் இட்டு நிரப்பத்தலைப்படுவர். இன்னும் சிலர் தன் மேதாவிலாசத்தைக் காண்பிக்க இன்னும் அதிகமாகப் பேசுவர். அவர்கள் அந்தத் தவற்றை செய்யச் செய்ய அவர்கள்பால் உங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும்.

இதுபோல் உங்களால் பேசப்பட்ட (சிறிது மர்மம் கலந்த) "தொக்கி நிற்கும்" சொற்கள் பலரால் "பாஷ்யம்" எழுதப் பட்டு, பலரால் அவை சிந்தனைக்கு உட்படுத்தப்பட்டு, அதனால் மக்கள் மனதில் உங்களப் பற்றிய ஒரு மரியாதை கூடும். பிகாஸோவின் ஓவியங்கள்போல் சுலபமாகப் புரிந்து கொள்ள இயலாதவைகளுக்குத்தான் மனித குலம் மதிப்புக் கொடுக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன அறிஞர் ஹன் ஃபை சூ இவ்வாறு கூறுகிறார்:-

"உன்னைச் சுற்றியுள்ளவர்கள் வாயைத் திறக்குமுன் நீ வாயைத்திறவாதே. நீ எவ்வளவு நேரம் உன் உதடுகளையும் நாவையும் கட்டி வைத்திருக்கிறாயோ, அவ்வளவு சீக்கிறம் மற்றவர்கள் தம் வாயைத் திறந்து பேசத் தொடங்கி விடுவர். பிறகு அவர்களின் மனத்தை நீங்கள் முழுமையாகப் படித்து அறியலாம். ஆள்பவன் எப்பொதும் ஒரு புரியாத புதிராகவே இருக்க வேண்டும்."

மோனாலிஸா புன்னகை இவ்வளவு தூரம் எல்லோராலும் பேசப்படும் காரணம் அதனை எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான். முன்பு சீனத்தின் சர்வாதிகாரியாக இருந்த மாவோ இந்திய தூதரைப் பார்த்து ஒரு அரை மில்லி மீட்டர் சிரிப்பதுபோல் உதட்டைச் சுழித்தார் என்று பத்திரிகைகள் பக்கம்பக்கமாக "இதன் பொருள் மற்றும் வீச்சு சர்வதேச அரசியலில் என்னவாயிருக்கும்" என்று ஹேஷ்யங்களை வெளியிட்டவண்ணம் இருந்தது பலருக்கு நினைவிருக்கும்.

முழுநிலவன்று சிப்பிகள் தங்கள் வாயை அகலத் திறக்கும். அச்சமயம் பார்த்து பெரு நண்டுகள் அவற்றின் வாய்க்குள் ஒரு கல்லைப் போட்டுவிடும். பிறகென்ன? சிப்பியால் தன் வாயை மூட முடியாது. அது அந்த நண்டின் டைனிங் டேபிளுக்கு செல்ல வேண்டியதுதான்! மனிதர்கள் தன் வாயைத் திறந்து பேசிக் கொண்டேயிருந்தால், வாயில் அல்ல, அவர்தம் தலையில் கல்லைப் போட பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொண்டு, பொருக்கியெடுத்த முத்துக்களாக நம் சொற்கள் வெளிப்பட நாம் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பிறர் நம் மனத்தை ஆள்வதிலிருந்துதப்பிக்கலாம். நாமும் இவ்வகிலத்தை ஆளலாம்!

- எஸ்.கே


http://www.tamiloviam.com