"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619வாழ்க்கையின் ஏதோவொரு கட்டத்தில் 'நான் யார்' , ' என் வாழ்க்கையின் பயன் என்ன?' போன்ற கேள்விகள் தோன்றுவது இயல்பு.

மனிதர்கள் ஞானிகளாகவும், மாபெரும் சாதனையாளர்களாகவும் ஆவதும் இக்கேள்விகளால் தான்.

மாணிக்கவாசகர் திருவாசகத்தில்...

நான் யார்? என் உள்ளம் யார்? நானங்கள் யார்? என்னை யார் அறிவார்?
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் ?
[ நானங்கள் - ஐந்து புலன்கள் ]

திருக்குறள் அதிகாரங்கள் நிலையாமை(34), துறவு(35), மெய்யுணர்தல்(36), அவாவறுத்தல்(37 ) இந்த அகத்தாய்விற்கு வெகுவாக உதவுகிறது.

நம் கண்களுக்கு தெரிவது இந்த உடல். இந்த உடல்தான் நானா? உடல் கோடானு கோடி திசுக்களால் ஆனது என்பது நமக்கு தெரியும். ஆனால் இந்த உடலில் உள்ள திசுக்கள் சுமார் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுமையாக புதுப்பித்துக் கொள்கிறது. 2001 ஆண்டில் என் உடம்பில் இருந்த திசுக்கள் அனைத்தும் இப்போது இல்லை என்கிறது விஞ்ஞானம். மேலும் திசுக்களில் எதனால் ஆனது? அணுக்களால். அந்த அணு புரோட்டானும், நியூட்ரானும், எலெக்ட்ரானும் ஆனது என்றும் அறிவியல் கூறுகிறது. அணுவை நுண்ணியத் துகள்களாக பிரித்தாலும், 99.99% 'வெற்றிடமாக' இருக்கிறது என்றும் அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது.

அப்படியென்றால் நம் உடல் என்பது 99.99% 'வெற்றிடம்' என்றும், அப்படி கொஞ்சம் நஞ்சம் மீதி உள்ள துகள்கள் அனைத்தும் தொடர்ந்து அழிவதும், பிறப்பதுமாக இருக்கிறது. 2 ஆண்டுகள் முன் இருந்த உடல் கூட இப்போது என்னிடம் இல்லை! . அப்படியென்றால் நான் இந்த உடல்தான் என்று சொல்வது சிற்றறிவு தானே?

நில்லா தவற்றை நிலையின என்றுணரும்
புல்லறிவு ஆண்மை கடை. [ நிலையாமை 34: 1]
[ புல்லறிவு - சிற்றறிவு ; கடை - கடைசி]

'காயமே இது பொய்யடா. காற்றடைத்த பையடா'
என்ற பாடல் புரிய ஆரம்பிக்கிறது.

இந்த ஆராய்ச்சியில் தெளிவாக தெரியும் ஒன்று. 99.99% வெற்றிடமாக உள்ளது உண்மையில் வெற்றிடமா? அல்லது வெட்ட வெளி போல் தோன்றும்
பேரண்டமா(Gallaxy)?

நான் இந்த உடல் இல்லையென்றால், உள்ளமாக இருக்க முடியுமா? உள்ளம் என்பது என்ன? நம்மை சிந்திக்க வைத்து, உடலின் அனைத்து பாகங்களை இயக்குவதும், உணர்வுகளின் ஊற்றும் அதுதான். உதாரணமாக 'பசி' என்று உடலுக்கு சொல்வது இந்த மனம்தான். 'நினைவு' என்பது இந்த மனத்திற்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நினைவில்லாமல் பசி தோன்றாது ; நினைவில்லாமல் சூடான இட்டலி, சாம்பாரை பார்த்தவுடன் எச்சில் ஊறவும் செய்யாது. நினைவே மனத்திற்கு ஆதாரம். முதல் முறையாக ஒரு உணவை பார்க்கும்போது எந்த நினைவும் இல்லாமல் சுரப்பிகள் வேலை செய்வது இல்லை. ஆனால் ஒரு முறை சுவைத்துவிட்டால் அந்த 'நினைவு' பதிந்து விடுகிறது. அடுத்த முறை அதை படமாக பார்த்தால் கூட, நினைவு மனத்தின் மூலம் வயிற்றில் சுரக்க வைக்கிறது. ஐந்து புலன்கள்(கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) நினைவுகளை தோற்றுவிக்கும் கருவிகளாக இருக்கிறது. ஆதலால்தான் மனத்தை அடக்க வேண்டும் என்றால் ஐம்புலன்களை காக்க வேண்டும்.

ஒருமையில் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து [ அடக்கமுடைமை 13 : 6 ]

அப்படி ஐம்புலன்களில் தம் கட்டுக்குள் வைத்தவர்கள் பெரியோர் என்கின்றார்.

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றுஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு. [ நீத்தார் பெருமை 3 : 7 ]

நம் மனதின் இன்னொரு வெளிப்பாடு எண்ணம். எண்ணங்கள் பெரும்பான்மையானவை புலன்கள் தயாரிப்பவை. சாலையில் செல்லும்போது பெரிய தாடி வைத்த ஒருவர் என்னைக் கடக்கிறார். உடனே 'தாடி வேலை இல்லாதவராக இருப்பாரோ?', 'இவர் போலவே ஒருவரை போனவாராம் பார்த்தேன். அவர் அழுக்குச் சட்டையுடன், கையில் பை ஒன்று வைத்திருந்தார்' ..... என்று ஒன்றை அடுத்து ஒன்றாக எண்ணங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கும் நினைவு வெகுவாக உதவுகிறது.

மனத்தில் தோன்றும் எண்ணங்கள் உடலுக்கு தெரியாமல் மறைந்திருக்க முடியுமா? வீட்டில் நுழைகிறோம். மேசையில் சிகப்பு நிறம் தோய்ந்த கத்தியை பார்க்கிறோம். புலன் தெரிவிக்கும் இந்த செய்தி, எண்ணமாக('நம் வீட்டில் ஏதோ விபரீதம்') மாறுகிறது. நினைவையும்( 'சினிமாவில் இதுபோன்ற கத்தியை பார்த்திருக்கிறேன்') துணைக்கு அழைக்கிறது. விளைவு : அட்ரினலின் சுரந்து உடலில் மாற்றங்கள் உண்டாகின்றன. உண்மையிலேயே காய்கறி வெட்டும் கத்தியில் குங்குமப் பொட்டு சிதறி சிகப்பாகி உள்ளது.

நினைவு மனத்திற்கு ஆதாரம் என்றால், எண்ணம் ? எண்ணமே மனம். மனத்தை உடைத்து உடைத்து பகுத்தாய்ந்தால் நாம் சென்றடைவது 'எண்ணம்'. அதிலும் தொடர்ந்து எண்ணங்களையா நம் கொடுக்கிறது. ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கண்களை மூடுங்கள் . முதல் எண்ணம்: ' நாளை விடுமுறை' , அடுத்த எண்ணம் ' இரவு என்ன சாப்பிடலாம்' ... என்று இரயில் வண்டிபோல் வந்துகொண்டிருக்கும். ஆனால் கூர்ந்து கவனித்தால் ஒரு எண்ணத்திற்கும் இன்னொரு எண்ணத்திற்கும் இடையே ஒரு 'வெட்டவெளியை' காணலாம். இந்த வெட்ட வெளியில் தங்கியிருந்தால் ஒருவித அமைதி தெரிகிறது. ஆனால் அதிகநேரம் இந்த எண்ண இடைவெளியில் அமர்ந்திருக்க முடியவில்லை. ...

மனம் எண்ணங்கள், நினைவுகள் ஆனது என்று பார்த்தோம். அந்த எண்ணங்களும், நினைவுகளுமே மாறிக் கொண்டே செல்வதையும் பார்த்தோம். ஆதலால் 'நான்' மனமும் அல்ல என்பதை உணர முடிகிறது.

உடலை ஆய்ந்துப் பார்த்தால் அங்கும் 'வெட்ட வெளி' யால் நிரம்பி இருப்பதை அறிகிறோம். மனத்தை ஆராய்ந்து பார்த்தால், எண்ணங்களுக்கு இடையே 'வெட்ட வெளி' நிறைந்திருப்பதை பார்க்கிறோம்.

மேலும் 'நான்' உடலும் உல்லை; மனமும் இல்லை என்பதை காண முடிகிறது.

அப்படியென்றால் 'நான்' உயிராக இருக்க முடியுமா?

-கரு.மலர்ச் செல்வன்“நான் யார்?” என்ற கேள்விக்கு பதில் தேடி ஞானியரும் துறவியரும் ஆண்டாண்டு காலமாக அலைந்து வந்திருக்கிறார்கள். ‘இது ஏதோ சித்தர்களும் பெரும் தத்துவ அறிஞர்களும் பேசுகின்ற கருத்து; நமக்கு எதற்கு?’ என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

ஆனால் மனதின் ஆற்றலைப் பேசுகின்ற இத்தொடரில் இக்கேள்வி முக்கியத்துவம் வாய்ந்தது ஆகிறது.

ஒரு விளையாட்டு போல, புதிர்போல, குறுக்கெழுத்துப் போட்டி போல இக்கேள்வியைக் கேட்டு பதில் தேடிப் பார்ப்போமே.

‘நான் யார்?’ என்ற கேள்வியைக் கேட்டு அதற்குண்டான பதிலையும் நீங்களே சொல்லுங்கள் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்.

‘நான் ராமசாமி’, என்கிறீர்கள், ‘நீங்கள் மட்டும்தான் ராமசாமியா? எத்தனையோ ராமசாமிகள் உள்ளனர். அவர்களும் நீங்களும் ஒன்றா’ என்று கேள்வி கேட்கிறேன்.

‘நான் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்கிறீர்கள்.

‘அது உங்கள் பதவி’ என்கிறேன்.

‘தொண்டாமுத்தூர் கோவிந்தசாமியின் மகன் என்கிறீர்கள்.

‘அது உங்கள் மரபு’ என்கிறேன் நான்.

‘நான் தொண்டாமுத்தூர் நேருவீதி 2/12 இல்லத்தில் வசிப்பவன்’ என்கிறீர்கள்.

‘அது உங்கள் இருப்பிடம்’ என்கிறேன் நான்.

‘நான் புருவத்தின்மேல் மச்சம் கொண்ட, சற்றே மாநிறமான, 6 அங்குலம் உயரம் கொண்ட ஆண் என்கிறீர்கள்.

‘அது உங்கள் அடையாளம்’ என்கிறேன் நான்.

‘சரிதான் ஐயா, நான் யார் என்று எனக்கே தெரியவில்லை’ என்கிறீர்கள்.

உண்மைதான்.

நாம் யார் என்று நமக்கே தெரிவதில்லை. அது உண்மை. அதுதான் உண்மை.

இத்தனை நாட்கள் ‘நான்’ என்று நினைத்துக் கொண்டிருந்தது. ஒரு பெயர், ஒரு மரபு, ஒரு அடையாளம், ஒரு இருப்பிடம் என்று ஆகிப் போனது.

உங்கள் மனம், உங்கள் ஆற்றல், உங்கள் சக்தி, உங்கள் எண்ணம், உங்கள் இலட்சியம், உங்கள் போக்கு, உங்கள் பண்பாடு இவைதான் உங்களின் ‘நான்’ யார் என்று தீர்மானிக்கிறது.

நீங்களோ உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அந்த எண்ணமே
நீங்கள் என எடுத்துக் கொள்கிறீர்கள். நிறையப்பேர் தன்னைப் பற்றிய சரியான தீர்மானம் இல்லாமல், மற்றவர்கள் தன்னைப்பற்றி சுட்டிக் காட்டுவதை கணிப்புரையாக ஏற்றுக்கொண்டு அடங்கிக் போகிறார்கள்.

பெற்றோர் பிள்ளையை திட்டுகிறார்கள். ‘வெட்டிப் பயலே, முட்டாப் பயலே, உதவாக் கரையே’ என்று. இந்தப் படிமம் கொஞ்சம் கொஞ்சமாக மனதில் தங்கி அவர்கள் ‘ஓ நாம் இப்படித்தான் போலிக்கிறது’ என்று நாளடைவில் உறுதியான எண்ணமாக மாறிப்போய் தன்னம்பிக்கையே இல்லாத மனிதராக மாற்றிவிடுகிறது. நண்பர்கள் ‘நீ ஒரு வேஸ்டுடா’ என்று திட்டினால் மௌனமாக மனது அதை ஏற்றுக்கொள்கிறது.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தன்னைப் பற்றிய சரியான தீர்மானத்தை தானே ஏற்படுத்திக் கொள்ளாததுதான்.

இந்தப் படத்தில் உள்ளபடி கோடுபோட்ட ஒரு சிறுபகுதி தவிர மற்றவையெல்லாம் தவறான பாதையில் உங்களை செலுத்தக்கூடிய வெறுமைப் பிரதேசங்கள்.

நம்மைப் பற்றி நமக்கே தெரியாத உண்மையான ஆற்றல் பகுதியும் உதவப் போவதில்லை; நம்மைப் பற்றி பிறர் தவறாக ஏற்படுத்தும் எண்ணப் பகுதியும் நமக்கு உதவப் போவதில்லை. ஏனவே நம்மைப்பற்றிய சரியான கணிப்புரையே நமக்கு உதவிசெய்து உய்த்தக் கூடியது. இதை வலுப்படுத்த வேண்டும். நம்மை அறியாமலேயே நமக்குள் இருக்கும் ஆற்றல் தன்னை வெளிப்படுத்தும். அரிய தருணங்கள் நிகழ்வதுண்டு. அப்போதுதான் நமக்கு நமது மனதின் அளப்பரிய ஆற்றல் துணைக்கு வரும். நமது ஆற்றல் என்பது வேறு; நமது மனதின் ஆற்றல் என்பது வேறு. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் திறமை, உங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் நெருப்பு, உள்ளிருக்கும் அறிவு; உங்கள் மனதில் ஆற்றல் என்பது உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை செயலைப்படுத்தி சாதிக்க வைக்கும் எண்ணப்போக்கு. இந்த இரண்டு ஆற்றலையும் முறைப்படி பயன்படுத்தி முன்னேறும் மனிதன் வெற்றி காணுகின்றான். மனதின் ஆற்றல் பழுதடைந்து போனால் நமக்குள் இருக்கும் எல்லையற்ற ஆற்றலும், சக்தியும் திறமையும் வீணாகிப் போய்விடும். ஒன்றின் பயன்பாடு இன்னொன்றின் பயன்பாட்டுக்கு நம்மை நகர்த்தி வெற்றி பெற வைக்கிறது.

உண்மையான ‘நானைக்’ கண்டு பிடிப்பதில் தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. ஒரு வீடு கட்டுவதுபோல நமக்குள் இருக்கும் ‘நானை’ உருவாக்க வேண்டும். வீடுகட்டத் தேவைப்படும் பொருட்களை சிமெண்ட், மண், கல், இரும்புத் தளவாடங்கள் ஆகியவற்றைத் தேடிப்பிடித்து வாங்கி உரிய இடத்தி அடுக்குவது போல நமக்குள் இருக்கும் ‘நான்’ என்ற உருவத்தை உருவாக்க வேண்டும்.. அதற்கு தேவைப்படும் பொருட்கள் வாய்ப்புக்கள் கிடைத்தால் வெளிப்படும். நமது திறமைகள் நமது சக்திகள், நமது ஆற்றல்கள், இவற்றை நாமே கண்டறிந்து தேடிப்பிடித்து சேகரித்து உரிய இடத்தில் அடுக்க வேண்டும். இதற்கு குறுக்கே நிற்பன பிறர் நம்மைப் பற்றி ஏற்படுத்தும் வேண்டாத, பொய்யான விமர்சனங்கள். இவை நமது பணியை சிதறடித்துவிடும். ‘இவர்களுக்கு என்னைப் பற்றி ஒன்றுமே தெரியாது’ என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ‘இவர்களுக்கு நான் யார் என்று காட்டுவேன்’ என்ற கொஞ்சம் திமிரான எண்ணப்போக்கையும் ஏற்றுக கொள்ள வேண்டும். வாய்ப்புக்கள் தரும் தோல்விகளை விட மனிதர்கள் தரும் தோல்விகளே நமது வளர்ச்சியை தடைபடுத்துவன. எனவே மனிதர்கள் தரும் தோல்விகளை புறக்கணித்து விட்டு வாய்ப்புக்கள் தரும் தோல்விகளை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து பாடம் கற்றுத் தோல்வியை அடுத்த முறை வெற்றியாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.

உங்களுக்கு வியப்பூட்டக்கூடிய ஒரு செய்தி தெரியுமா? உங்களைப் போல் வேறு இல்லை. ஆம், உலகின் ஆறுகோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகையிலே உங்களைப்போல் இன்னொரு மனிதர் கிடையாது. உங்கள் முகச்சாயல் கொணடவர்கள் ஒன்றிரண்டுபேர் இருக்கலாம். அவர்களிடம் உங்கள் கல்வி, உங்கள் பண்பாடு, உங்கள் எண்ணப்போக்கு, உங்களின் திறமை இருக்காது. ஒரே மாதிரி முகச்சாயல் கொண்ட இரட்டையர்களிடம் கூட ஒரே மாதிரி குணநலன்கள் இருக்காது. எனவே நீங்கள் நீங்கள்தான். இன்னொருவர் கிடையாது. ஆங்கிலத்தில் “unique” என்று சொல்வார்களே அதுபோல நீங்கள் ஒரு தனிப்பிறவி. கடவுள் நம் ஒவ்வொருவரையும் தனித்தனி இயல்புகளுடன் படைத்திருக்கிறார். நீங்கள் கடவுளால் தயாரிக்கப்பட்ட ஒரு வித்தியாசமான நபர் மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவருமே அப்படித்தான். என்ன ஆச்சரியம் பார்த்தீர்களா? உடலால் ஓரளவு ஒரே மாதிரி தோற்றமளிப்பவர் கூட மனதால் பெருமளவு வேறுபடுகிறார்கள். “Our universe apparently does ont indulge in duplicates: Each creatin is virtually unrepeatable” என்கிறார் டாரதி கார்கில் பிரிக்ஸ் என்ற எழுத்தாளர்.

எனவே உங்களின் ‘நான்’ எத்தகையது என்று நினைத்து பார்த்தீர்களானால் மலைத்துப் போய்விடுவீர்கள். இலட்சத்தில் ஒருவன், ஆயிரத்தில் ஒருவன் என்றெல்லாம் சொல்வார்களே அதெல்லாம் பொய். நீங்கள் ஆறு கோடியில் ஒருவன் அல்லது ஒருத்தி. மிக மிக பிரத்யேகமான தனிப்பட்ட, முற்றிலும் வேறுபட்ட குணங்களுடன், இயல்புகளுடனும், ஆற்றல்களுடனும், திறமைகளுடனும் நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவது எவ்வளவு தவறானது இன்னொருவின் கார்பன் காபியாக நீங்கள் இல்லாதபோது, அவருடைய வாழ்வுடன் உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து ஏங்குவது எவ்வளவு மோசமானது! ஒரு உலக அதிசயத்தை பார்க்க வேண்டுமா? வேறெங்கும் தேடித் திரியாதீர்கள். கண்ணாடி முன்னால் நின்று பாருங்கள். உலக அதிசயம் தெரியும்! ஆம், நீங்களே ஒரு உலக அதிசயம்தான்! காரணம் உங்கள் படைப்பே முற்றிலும் வித்தியாசானது என்பதனால் உங்கள் பெருமையை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் எவ்வளவ அரிதானவர் என்பது இப்போது புரிகிறதா? இப்படிப்பட்ட அரிதினும் அரிதான ஒரு பிறவியைப் பெற்ற பின் வேறென்ன வேண்டும். ஒரு கரப்பான் பூச்சியைப் போலத் தான் இன்னொரு கரப்பான் பூச்சி இருக்கிறது. ஒரு ஈயைப் போலத்தான் இன்னொரு ஈ இருக்கிறது. ஒரு மாட்டைப் போலத்தான் இன்னொரு மாடு இருக்கிறது. ஆனால் ஒரு மனிதனைப் போல இன்னொரு மனிதனோ ஒரு மனுஷியைப் போல இன்னொரு மனுஷியோ கிடையாது.

இத்தகைய அதிசயப் பிறவியாகிய உங்களின் ஆழ்மனம் ஆழ்கடலைப்போல ஆயிரம் ஆயிரம் அதிசயங்களை உள்ளடக்கியது. இந்த மனித மனத்தின் அதிசயங்களே மனிதப் பிறவியை அரிதினும் அரிதாக்குகிறது. இந்த மனதின் ஆற்றலைக் கொண்டு நீங்கள் செயற்கரிய செய்ய முடியும். உங்களின் ‘நான்’ எவ்வளவு அற்புதமானது என்று தெரிந்துகொண்டால் உங்களைப் பற்றி உங்களுக்கே புதிதாய் உணர வழி ஏற்படும்.

ஒரு நூலகம். அங்கே ஒரு ஜென் துறவி வருவார். ஒரூ மூலையில் அமர்ந்து கண் மூடி தியானத்தில் ஆழ்ந்து போவார். எதையும் எடுத்து படிக்க மாட்டார். நூலக அதிகாரி அவரை ஒரு மாதமாக கவனித்து பின் அணுகினார்.

‘சுவாமி! தாங்கள் இங்கு தினமும் வருகிறீர்கள். ஆனால் ஒரு நூலையும் எடுத்துப் படிப்பதில்லை காரணம் அறியலாமா?’ என்று கேட்டார்.

‘அதுவா? எனக்கு படிப்பறிவே கிடையாது!’ என்றார் ஜென் துறவி.

‘பின் எதற்கு வருகிறீர்கள்’ என்று கேட்டார் நூலகர்.

அதற்கு துறவி ‘நான் ‘என்னையே’ படிப்பதற்காக இங்கு வருகிறேன். படிப்பதற்கு ‘என்னைத் தவிர வேறெந்த தத்துவ சாஸ்திரமும் வேதாந்த நூல்களும் மேலானது?’ என்று திருப்பிக் கேட்டார் துறவி.

ஆம், ‘தன்னைப்’ படிக்காமல் ஆயிரம் நூல்கள் படித்தும் பயனில்லை.

- ஜெ. கமலநாதன்

http://www.thannambikkai.net/2008/02/01/377/