திடீரெனத் தோன்றி படுவேகத்தில் பரவி பல நாடுகளை அச்சுறுத்திக் கொண்டுள்ளது ஸ்வைன் ப்ளூயென்ஸா எனப்படும் ஸ்வைன் ப்ளூ. இது பன்றிகளில் இருந்து மனிதனுக்குப் பரவுவதால் பன்றிக் காய்ச்சல் எனப்படுகிறது. (பன்றிக்கு பிக் தவிர ஹாக்ஸ், ஸ்வைன் என பல பெயர்கள் உண்டு)
ரிபோ நியூக்ளிக் ஆசிட் எனப்படும் ஆர்என்ஏவை (டிஎன்ஏ மாதிரி) தனது ஜெனிட்டிக் மெட்டீரியலாக (ஜீன்) கொண்ட வைரஸ்கள் உருவாக்கும் நோய்கள் தான் இன்ப்ளூயென்சா (Influenza).
இப்போது ஸ்வைன் ப்ளூவைப் பரப்பி வருவது Orthomyxoviridae என்ற ரகத்தைச் சேர்ந்த வைரஸ் (swine influenza virus-SIV). பன்றிகளுக்குள் நுழைந்துவிட்டால் அதன் சுவாசப் பாதையில் வலம் வரும் இந்த வைரஸ் முதலில் பன்றிகளைக் கொல்லும். இந்த வைரசில் பல வகைகள் (strains) உண்டு.
மேலும் ஆர்என்ஏவை அடிப்படையாகக் கொண்ட இந்த நுண்ணுயிர்களுக்கு உருமாறும் (mutate) திறன் உண்டு. பொதுவாக பன்றிகளில் வாழும் ஒரு வைரஸ் மனிதனுக்குள் புகுந்தால் அதை மனிதனின் தற்காப்பு சிஸ்டம் (Immune system) அழித்துவிடும். ஆனால், இந்த மியூட்டேசன் எனப்படும் உருமாறும் திறன் மூலம் மனிதனின் தற்காப்பு சிஸ்டத்தை வென்று விடுகிறது இந்த வைரஸ்.
இதனால் தான் பன்றிகளில் இருந்து மனிதனுக்குள் புகுந்து தாண்டவமாட ஆரம்பித்துள்ளது இந்த வைரஸ். இம்முறை மெக்சிகோவின் பன்றிகள் வளர்ப்பு பண்ணைகளில் இருந்து தான் இந்த வைரஸ் மனிதனுக்குள் ஊடுருவியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
மெக்சிகோவில் பன்றிகளுக்கு இது எப்படி பரவியது என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. ஆனாலும், ஐரோப்பாவிலிருந்து பறவைகள் மூலம் இந்த வைரஸ் வட அமெரிக்காவுக்கு வந்திருக்க வேண்டும். அங்கு மெக்சிகோவில் பன்றிகளில் புகுந்து உருமாறி மனிதனுக்குப் பரவியிருக்க வேண்டும் என்கிறார்கள்.
இந்த வைரசின் ஆர்என்ஏவை சோதனையிட்டதில் வட அமெரிக்க பன்றிகளில் காணப்படும் வைரசில் உள்ள சில ரசாயனங்களும், அதே நேரத்தில் ஐரோப்பிய பன்றிகளில் காணப்படும் வைரசின் சில வேதிப் பொருட்களும் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் இந்த வைரஸ் ஐரோப்பாவிலிருந்து தான் மெக்சிகோ-வட அமெரிக்காவுக்கு வந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.
மனிதனுக்குள் நுழைந்துவிட்டால் அவர்களது உடலில் பல்கிப் பெருகி சுவாசம் மூலம் அடுத்தவருக்குப் பரவும் திறன் கொண்டது இந்த வைரஸ். இப்போது பரவிக் கொண்டிருக்கும் வைரசுக்கு H5N1 என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
இவ்வாறு மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும் இந்த பன்றி்க் காய்ச்சல் , பன்றியின் மாமிசத்தை உண்பதால் பரவாது என்கிறார்கள். காரணம், 75 டிகிரி அளவுக்கு மாமிசம் சூடாகும்போதே இந்த வைரஸ் அழி்ந்துவிடும்.
இந்த வைரஸ் தாக்கினால் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, குளிர் காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். கவனிக்காமல் விட்டால் பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
இந்த வைரஸை கட்டுப்படுத்த amantadine, rimantadine, Tamiflu (oseltamivir) and Relenza (zanamivir) உள்பட சில மருந்துகள் உள்ளன. ஆனால், முன் கூட்டியே தடுக்கும் வாக்சீன்கள் இல்லை. இந்த மருத்துகளையும் மருத்துவர் ஆலோசனைப்படியே பயனபடுத்த வேண்டும்.
(இதில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிசேசை அளித்தபோது இந்த வைரஸ் amantadine and rimantadine ஆகியவற்றுக்குக் கட்டுப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது)
அதே நேரத்தில் கொஞ்சம் தற்காப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது, நோய் தாக்கப்பட்டவர்கள் இருந்தால் அங்கு நடமாடும்போது மூக்கையும் வாயையும் மூடும் பில்டர்களை அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, நோய் தாக்குதல் உள்ள பகுதிகளுக்குப் போய்விட்டு வந்தால் வாய், கண், மூக்கில் கைகளை வைப்பதை தவிர்ப்பது, வீட்டில் குப்பை சேராமல் தவிர்ப்பது போன்றவை அதில் சில.
நோய் தாக்கப்பட்டவர் இருமல் வந்தால் துணியை வைத்து வாயை மூடிக் கொண்டு இருமினால் அடுத்தவருக்குப் பரவாது.
இந் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பூசி (வாக்சீன்) கண்டுபிடிக்கும் பணியில் உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இறங்கியுள்ளன. ஆனால், அதற்குள் நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் பெரிய சிக்கலை உலகம் எதி்ர்கொள்ளப் போவது நிச்சயம்.
-ஏ.கே.கான் (கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)
http://thatstamil.oneindia.in/editor-speaks/2009/04/28-world-battles-swine-flu-as-death-toll-threat.html
தலைப்பு : inbox, உங்களுக்கு தெரியுமா?
காபாவைச் சுற்றி மக்கா மஸ்ஜித் விரிவாக்கம்!
ஜித்தா: மக்காவிலிருக்கும் இறையில்லமான மஸ்ஜித்-அல்-ஹராம் பள்ளி மேலதிகமாக ஐந்து இலட்சம் பேர் தொழ வசதியாக இருக்கும் படி விரிவாக்கப்படும் எனத் தெரிகிறது.
மக்காவிலுள்ள மஸ்ஜித்-அல்-ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கத் திட்டத்திற்கு, இரு புனிதப் பள்ளிகளின் பணியாளரும் சவூதியின் அரசருமான மன்னர் அப்துல்லாஹ் ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் தற்போது மக்காவில் வழிபடுபவர்களைவிட மேலும் ஐந்து இலட்சம் முஸ்லிம்கள் தங்கி வழிபட வசதியானதாக இருக்கும் என்று மக்காவின் நகரத்தந்தை உஸாமா அல்-பர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
"இது மக்காவின் புனிதப் பள்ளியின் மிகப் பெரும் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தில் மக்கா பள்ளியின் முகப்புத் தோற்றத்தையும் மாற்றக் கூடிய திட்டமும் அடங்கும் என்று அல்-பர் கூறினார். இந்த விரிவாக்கம் மூலம் பள்ளியின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் மேலதிகமான முஸ்லிம்கள் தொழ அதிகமான இடவசதி கிடைக்கும் என்றும் கூறினார்.
மன்னர் அப்துல்லாஹ் சென்ற சனிக்கிழமை இந்த விரிவாக்கப் பணிக்காக ஆணை பிறப்பித்தார். நகராட்சி மற்றும் ஊரகத்துறை அமைச்சர் இளவரசர் மிதேப், இத்திட்டத்தில் நடைபாதை சுரங்கங்கள் மற்றும் சேவை நிலையங்களும் இருக்கும் என்று கூறினார்.
இந்த அரசாணை மக்கா பெரிய பள்ளியின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதியில் உள்ள 3 இலட்சம் சதுர மீட்டர் நிலங்களைக் கையகப்படுத்தும் உத்தரவையும் உள்ளடக்கியுள்ளது. இதற்கென்று அமைக்கப்பட்ட விசேஷ குழுக்கள் இந்த நிலங்களின் விலை மதிப்பீடு செய்யத் துவங்கியுள்ளன என்றும் மிதேப் கூறினார்.
மஸ்ஜிதைச் சுற்றியுள்ள சுமார் 1000 சொத்துக்கள் இந்த விரிவாக்கத் திட்டப்பணிக்காக இடிக்கப்பட்டு, கட்டுமானம் விரைவில் துவங்கும். இதற்காக 6 பில்லியன் சவூதி ரியால்கள் ஈட்டுத்தொகையாக அரசு ஒதுக்கியுள்ளது. இப்பணி புதிய திட்டத்தினை துவக்க இயலும் விதமாக 60 நாட்களுக்குள் முடிக்கப்படும்.
"புதிய சுரங்க நடைபாதைகள் மூலம் பள்ளிவளாகத்தின் வடக்குப் பகுதியை இணைக்கும் கட்டுமானப் பணிகளும் இத்திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கும்" என்றும் அவர் மேலும் கூறினார்.
இப்புனிதப் பள்ளியின் முதல் பெரிய விரிவாக்கப்பணி 1925ல் சவூதி அரேபியாவை நிறுவிய மன்னர் அப்துல் அஜீஸின் உத்தரவின் படி நிறைவேற்றப்பட்டது. 1989ல் அப்போதைய சவூதி மன்னர் ஃபஹத், மஸ்ஜித்-அல்-ஹராமின் மாபெரும் விரிவாக்கத்தைச் செயல்படுத்தி 1,52,000 சதுர மீட்டர் பரப்பளவிலிருந்த தொழும் இடத்தை 3,56,000 சதுர மீட்டராக அதிகரிக்கச்செய்தார்.
பள்ளியின் சுற்றுப்புற வளாகம் 40 ஆயிரம் சதுர மீட்டர்களுக்கும் அதிகமாகும் என்றும் இதில் ஒரு இலட்சம் மக்கள் வழிபட வசதியிருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
ஷூரா எனும் ஆலோசனைக் குழு மேலதிகமான நிதி ஒதுக்கீடு மூலம் இரு புனிதபள்ளிகளின் தலைமைக்கு உதவி, அதன் மூலம் மேலும் சிறப்பான சேவைகளை புனித உம்ரா மற்றும் ஹஜ் காலத்தில் இப்பள்ளிக்கு வரும் ஹாஜிகளுக்கும் பயணிகளுக்கும் வழங்கவும் மேலும் இவ்வகையில் பயனுள்ள அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்துள்ளது.
மேலும் மஸ்ஜிதின் மாடி மற்றும் சுற்றுப்புற வளாகங்களில் நிழற்குடைகள் நிறுவவேண்டி ஆய்வுகளை மேற்கொள்ளவும், பள்ளியின் வடக்குப் பகுதியில் நகரும் மின்படிகளை மேற்கூரை வளாகம் வரை நிறுவி வழிபட வந்துள்ளவர்கள் கூட்ட நெரிசல் வேளையில் சிரமம் குறையும் முகமாக இவற்றைச் செயல்படுத்தவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=739&Itemid=192
வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாகச் செலவிட வேண்டிய வரம்பு லட்சங்களில் இருந்தாலும், ஒவ்வொரு தொகுதியிலும் பல கோடிகள், தெருக்கோடிகளில் புரள்கின்றன என்பது ஊரறிந்த ரகசியம். பதவிக்காக பல நூறு கோடிகளை வாரி இறைத்து ஆட்சியைப் பிடிக்க எத்தனிக்கும் அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒன்று, தெருவோரப் பராரிக்காகக் குரல் எழுப்புகிறதா என்று பார்த்தால், அப்படி ஒரு சிந்தனையே எந்தவொரு அரசியல் இயக்கத்துக்கும் இருப்பதாகவே தெரியவில்லை. வாக்குகளைப் பெற பிரியாணி விருந்து தரப்படுவதாக எல்லாம் செய்திகள் வருகின்றன. ஆனால், அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வில் நிரந்தரமாக அவனது பசியைத் தீர்க்க வேண்டாம். அதற்கான திட்டங்களையாவது ஏதாவது ஒரு கட்சி தனது தேர்தல் அறிக்கையில் முன்வைத்திருக்கிறதா என்றால் இல்லை. ஓட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் அரசியல்வாதிகள் ஒருபுறம், ஒரு வேளைக் கஞ்சிக்காக ஏங்கித் தவிக்கும் குடிமக்கள் மறுபுறம். இந்திய ஜனநாயகத்தின் விசித்திரமான பரிமாணங்களில் இதுவும் ஒன்று. இத்தனை கோடி ரூபாய்கள் தேர்தல் என்கிற சாக்கில் வாரி இறைக்கப்படும் வேளையில், ஐக்கிய நாடுகள் சபையில் உலக உணவுத் திட்டத்தின் அறிக்கை ஒன்று வெளிவந்திருக்கிறது. அந்த அறிக்கையைப் படித்தால் திகைப்பும் வியப்பும். இந்தியாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிகம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. உலகில், வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு பசியைப் போக்க எத்தனிக்கும் மனிதர்களில் பாதிக்கும் அதிகமானோர் வாழ்வது இந்தியாவில்தான் என்கிறது அந்த அறிக்கை. அதுமட்டுமா? ஆண்டுதோறும் இந்தியாவில் மரணமடையும் சிசுக்களில் 50 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால்தான் மரணமடைவதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. சஹாரா பாலைவனத்தை ஒட்டியுள்ள ஆப்பிரிக்க நாடுகளில்கூட ஊட்டச்சத்துக் குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை 28 சதவிகிதம்தான். ஆனால், நமது பொன்னான பாரத பூமியில் உலகில் எங்குமே இல்லாத அளவுக்கு 47 சதவிகிதம். சர்வதேச உணவு ஆராய்ச்சி நிறுவனம் என்று ஓர் அமைப்பு. இந்த அமைப்பு இந்தியப் பசிக் குறியீடு என்று அத்தனை தாலுகாவிலும் புள்ளிவிவரங்களைத் திரட்டி ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைவு ஆகிய இரண்டு விஷயங்களிலும் ஆபத்தான நிலையில் இந்தியா இருக்கிறது என்றும், இதைப் பற்றி ஆட்சியாளர்களும், வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள இந்தியக் குடிமக்களும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை என்றும் ஆதங்கப்படுகிறது அந்த அறிக்கை. ஆட்சியாளர்களிடம் கேட்டால், பொது விநியோக முறையில் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு அரிசியும் கோதுமையும் கொடுக்கிறோம் என்றும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மதிய உணவுத் திட்டம் நிறைவேற்றப்படுகின்றன என்றும் கூறித் தப்பித்துக் கொள்கிறார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடிமக்களை முன்னிறுத்தி செயல்படுத்தப்படுவதாகக் கூறும் பொது விநியோக முறை, குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும்தான் செயல்படுகிறது. இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் இன்றும் ரேஷன் கடைகள் அடையாளம் காணப்படவோ, அமைக்கப்படவோ இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மனிதர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்களும் சரி, தங்களுக்கென்று ஒரு விலாசம் இருப்பவர்கள் மட்டுமே. விலாசமே இல்லாமல் தெருவோரவாசிகளாக, குடிசைகளிலும், புறம்போக்கு நிலங்களிலும் வாழ்பவர்களாக அன்றாடம் கூலி வேலை செய்து வயிற்றைக் கழுவுகிறவர்களாக இருப்பவர்கள் இந்தியாவில் கோடிக்கணக்கில் இருப்பதைப் பற்றி பொது விநியோகத் துறையோ, அரசோ, ஏன், நாமோ கவலைப்படுகிறோமா? மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் பசி, பட்டினி, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் இவையெல்லாம் இருந்தன. ஆனால், பசித்தவனுக்கு உணவு அளிப்பது புண்ணியம் என்று அறிவுறுத்தப்பட்டது. அன்னதான சத்திரங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு, வேலை இல்லாதவனும், வறுமையில் வாடுபவனும் பசியாற வழிகோலப்பட்டது. புண்ணியம் தேடுவது போய் பணம் சேர்ப்பது மட்டுமே குறியாகிவிட்டதன் விளைவுதான், பாரதத்தின் பட்டினிப் பட்டாள எண்ணிக்கை உலக சாதனையாக மாறியிருக்கிறது. அதிகரித்து வரும் பசித்திருப்போர், பட்டினி கிடப்போர் எண்ணிக்கை மக்களாட்சிக்கு மட்டுமல்ல, சட்ட ஒழுங்குக்கே சவாலாக மாறும் சாத்தியங்கள் ஏராளம். இந்த முக்கியமான பிரச்னையை முன்னிறுத்தாமல் உலகமயம் பற்றியும், கறுப்புப் பணம் பற்றியும் பேசிக் கொண்டு, பணத்தை இறைத்து வெற்றிபெற விழையும் அரசியல் கட்சிகள் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. அது - ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால்...
http://www.தினமணி.காம்/தலையங்கம்
தலைப்பு : inbox
நீங்கள் சாப்பிடும் ஒருவேளை பீட்சாவிற்க்காக நீங்கள் கொலை செய்ய படலாம்' இப்படி ஒரு வசனம் 'கற்றது தமிழ்' என்ற திரைப்படத்தில் இடம் பெறுகிறது. இது நிஜம்தான். இன்று இப்படிப்பட்ட ஒரு வளர்ச்சியை நோக்கித்தான் இந்த உலகம் பயணித்துக்கொண்டிருக்கிறது.
இன்று ஒரு மனிதன் சிரமமில்லாமல் எதைத்தான் செய்ய முடிகிறது, ஆக ஒருவேளை உணவிற்க்கே மனிதன் சிரமப்பட வேண்டியிருக்கிறது. மனிதன் தன்னுடைய ஒவ்வொரு தேவைகளையும் சிரமங்களுக்கூடகவே நிறைவேற்றி வருகிறான்.
இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்
தனியோருவனுக்கு உணவில்லை எனில் - இந்த
ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வரிகளை இன்று கடைப்பிடிப்பது என்பது முடியாதது என்பது அல்ல சற்று சிரமமான விஷயம் அவ்வளவுதான்.
நம்மால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்து கொண்டே இருக்க பழக வேண்டும். உதவி என்பது வெறும், பொருள் (பணம்) கொடுப்பது என்று இல்லை. நமது கண் முன்னே ஒருவர் மிகவும் மனமுடைந்து காணப்படுகிறார் என்றால் அவருக்கு ஆதரவாக சற்று கரிசனமாக பேசுவது கூட உதவி தான். காதலியை இழந்த நண்பனுக்கோ, மனைவியை இழந்த ஒருவருக்கோ அல்லது எதாவது ஒன்றை இழந்து தவிக்கும் நண்பனுக்கு அந்த நேரத்தில் அவனுடைய கையை இணக்கமாக பற்றி இருப்பதை விட என்ன உதவி செய்து விட முடியும். சில நேரங்களில் தொடுதல் என்பது பல நூறு வார்த்தைகள் சொல்லாததை செய்து விடுகிறது.
நம்முள் எத்தனை பேர் இன்று நம்முடைய அண்டை வீட்டாருடன் இணக்கமாக நட்புடன் இருந்து வருகிறோம். இன்னும் ஏன் ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வாழ்ந்தது மாறி இன்று ஒரே வீட்டினுள் தனி தனி அறைகள் என்ற சுவர்களுக்குள் குடும்பம் சிறை பட்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேசுவதில் கூட முனைப்பிருப்பதில்லை. நம்மால் முடிந்த வரை நம்மை சுற்றி உள்ளவர்களுடன் மிகுந்த அனபுடன் இருக்க பழக வேண்டும். ஏனெனில் நம்மை சுற்றி உள்ளவர்கள், நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் வரை நமக்கு எந்த தீங்கும் வராது என்பது ஒரு பழமொழி. எனவே இன்று நாம் நலமாக வாழ நம்மை சுற்றி உள்ளவர்களின் பங்களிப்பு கணிசமாக உள்ளது.
நமது கலாசாரத்தின் இரண்டு கண்கள் அன்பும் பண்பும், இவை இரண்டையும் இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். பிறரிடத்தில் நாம் காட்டும் அன்பு நமது மனதில் ஒரு நேரடி வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
இன்னமும் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு கண்ணீர் சிந்துகிற எத்தனையோ மக்கள் நம்மிடையே இருக்கின்றனர். அந்த கண்ணீர் கூட அந்த கதாபாத்திரத்தின் மீது கொண்ட ஒரு அன்பின் வெளிப்பாடுதான். ஆக ஒரு பிம்பத்தின் மீது நம்மையும் அறியாமல் அன்பு வெளிப்படுகிறது. அன்பின் அழகு அதனை வெளிப்படுத்தும்போதுதான் தெரிகிறது. எனவே நம் ஒவ்வொருவரின் மனதிலும் உறங்கி கிடக்கும் அன்பை எந்த தடையுமின்றி வெளிப்படுத்துவோம்.
ஒரு வலிமையான சமுதாயத்தை உருவாக்குவோம்.
அன்பே சிவம்
தலைப்பு : படித்ததில் பிடித்தது
அரிது அரிது மானிடராதல் அரிது. அதனினும் கூன் குருடுசெவிடு நீங்கிப் பிறத்தல் அரிது என்பதோடு மட்டும் ஒளவை தனது பாடலை நிறுத்திவிட்டார்.
வளர்ந்து வரும் மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும், எடுக்கவும் கொடுக்கவும் கூடிய சமுதாய அமைப்பை இப்பொழுது பெற்று வருகிறோம். எனவே தானமும் தவமும்கூட எந்த ஒரு விதத்திலாவது செய்துவிட முடியும்.
இத்தனைக்க மேல் ஒருவன் கவிஞனாகப் பிறக்கிறான் என்றால் அது எத்தனையோ நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்ச்சி என்றுதான் கூறமுடியும். கம்பனுக்குப் பின் தமிழ் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று வரும் கவிஞர் சுப்ரமணிய பாரதியார் ஒருவரே.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு எத்தனையோ தேசியத் தலைவர்களைப் பெற்றெடுத்த பெருமை உண்டு. வ.உசி. சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்றவர்கள் அதே மாவட்டத்தில் பிறந்தவர்கள். எட்டையபுரத்தில் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி சின்னச்சாமி அய்யருக்கும் லெட்சுமி அம்மாளுக்கும் பிறந்த குழந்தைதான் நமது சுப்ரமணிய பாரதியார்.
அவர் இளமையிலேயே கவிபாடக்கூடிய திறமை பெற்றிருந்தார். பதினொரு வயது நிரம்பிய சுப்பையா என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவரை எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் பற்பல சோதனைக்கு உட்படுத்தினர். அவைகளில் வெற்றி பெற்றதால் அந்தப் புலவர்கள் வியந்து அளித்த பட்டம் 'பாரதி'.
அவர் 1894-1897 வரை திருநெல்வேலி ஹிந்துகல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை படித்தார். படிக்கும் போதே தமிழ்ப் பண்டிதர்களுடன் ஏற்பட்ட சொற்போர் காரணமாக 14 வயதிலேயே அக்கால வழக்கப்படி திருமணம் நடந்தது. 7 வயது நிரம்பிய செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
1898-1902 வரை காசியில் தனது அத்தை குப்பம்மாள் அவர்களுடன் தங்கியிருந்தார். அப்போது அலகாபாத் சர்வகலாசாலையில் பிரவேசத் தேர்வு எழுதி வெற்றிப்பெற்றார். காசி இந்து சர்வகலாசாலையில் ஹிந்தியும், வடமொழியும் பயின்றார். அப்போதுதான் நமது பாரதியாருக்கு தலைப்பாகை கட்டும் பழக்கமும் மீசை வைத்துக் கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டதாக அறிகிறோம். மீண்டும் எட்டையபுரம் வந்து 1902 முதல் இரண்டாண்டு காலத்திற்கு எட்டையபுரம் மன்னருக்குத் தோழனாக இருந்தார். அப்போதுதான் மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'விவேக பானு' என்ற பத்திரிகையில் இவரது முதல் பாடல் 'தனிமை இரக்கம்' அச்சாகி வெளியிடப்பட்டது.
1904ம் ஆண்டு மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அதே ஆண்டு நவம்பரில் சென்னையிலிருந்து வெளிவரும் 'சுதேசமித்திரன்' பத்திரிகைக்கு உதவியாசிரியரானார். பின்பு 'சக்கர வர்த்தினி' என்ற பத்திரிகையின் ஆசிரியராக ஆனார்.
1905ம் ஆண்டில் பாரதியார் அரசியலில் ஈடுபட்டு இருந்தார். தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார்.
1906ல் சென்னையிலிந்து 'இந்தியா' என்ற வாரப் பத்திரிகை துவங்கி அதன் மூலம் தனது அரசியல் கருத்துக்களை இந்நாட்டு மக்களிடம் பரப்பினார். அப்போது திருமலாச் சாரியார். வ.உ.சி. சர்க்கரைச் செட்டியார் முதலியோரின் நட்புக் கிடைத்தது.
சூரத் காங்கிரசில் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் 1907ல் பிளவு ஏற்பட்டது. பாரதியார், திலகர் போன்ற தீவிரவாதிகள் பக்கம் நின்று பணியாற்றினார். அப்போது திலகர், லாலா லஜபதிராய், அரவிந்தர் முதலியோரைச் சந்தித்தார். கிருஷ்ணசாமி அய்யர் என்ற தேசபக்தர் பாரதியாரின் பாடல்களில் உள்ள வேகத்தின் தன்மையை உணர்ந்து 'சதேசகீதங்கள்' என்ற தலைப்பில் அவரது பாடல்கள் பலவற்றை அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார்.
1908ஆண்டு 'சுயராஜ்ஜிய தினம்' சென்னையிலும் தூத்துக்குடியிலும் கொண்டாடப்பட்டது. அதில் வ.உ.சி சுப்ரமணியசிவா போன்றவர்களுக்குச் சிறைத்தண்டனை கிடைத்தது. அந்த வழக்கில் பாரதியார் சாட்சியம் சொல்லியுள்ளார்.
அதே ஆண்டில் கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் வெளியிட்ட 'சுதேச கீதங்கள்' என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு ஒன்றை பாரதியார் வெளியிட்டார்.
இது வெளிவந்தபின், பிரிட்டிஷ் அரசாங்கம் பாரதியார் மீது ஒரு கண்ணோட்டம் விட்டது. 'இந்தியா' பத்திரிகையின் சட்ட ரீதியான ஆசிரியர் கைது செய்யப்பட்டு பாரதியார் மீது வாரண்ட் போட்டது. பாரதியார் தலைமறைவானார். புதுச்சேரி சென்றார். அங்கும் போலீஸ் தொல்லைகளுக்கு உட்பட்டார்.
அப்போது 'இந்தியா' பத்திரிகை 1910 வரை புதுச்சேரியிலிருந்து தனது தேசியத் தொண்டைத் துவங்கியது. எரிமலை வெடித்தது போன்ற எழுத்துக்களால் மக்களிடையே விடுதலை வேட்கையைப் பரப்பினார். இதனைக் கண்ட பிரிட்டிஷார் இந்தியா' பத்திரிகை வருவதைத் தடுத்தது. அத்துடன் பத்திரிகை, விற்பனைக் குறைவால் நின்று போயிற்று.
1911ல் மணியாச்சியில் கலெக்டர் ஆஷ்துரை சுட்டுக்கொல்லப்பட்ட போது புதுச்சேரியில் உள்ள தேசபக்தர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அங்கு உள்ள தேசபக்தர்களுக்குத் தாங் கொணாத் துன்பத்தை ஆட்சியினர் கொடுத்தனர். மேலும் அவர்களை அங்கிருந்த வெளியேற்றவும் முயற்சிகள் நடைபெற்றன. பாரதியாரின் சீடர்கள் ஏராளமாயினர்.
பாரதியார் 1912-ல் கீதையை மொழி பெயர்த்தார். மேலும் கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்கள் எழுதப் பெற்றன. பாஞ்சாலி சபதம் வெளியிடப் பெற்றதும் இந்த ஆண்டில்தான்.
அடுத்த ஆண்டில் 'ஞானபாநு' என்ற பத்திரிகைக்குச் செய்திகள் சேகரித்துக் கொண்டிருந்தார். 1914ல் முதல் உலகப் போர் துவங்கியதும் அங்கு உள்ள தேசபக்தர்களுக்கு ஏராளமான தொல்லைகள் ஏற்பட்டன.
பரலி சு. நெல்லையப்பர் அவர்கள் 1917ல் கண்ணன் பாட்டு முதற்பதிப்பைச் சென்னையில் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து 1918ல் 'சுதேச கீதங்கள்', 'நாட்டு பாடல்' முதலியன வெளியிடப்பட்டன.
புதுச்சேரி வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு உணர்வால் பாரதியார் 1918ம் ஆண்டு நவம்பர் 20ந் தேதி அங்கிருந்து வெளியேறினார். அப்போது கடலூருக்கு அருகே கைது செய்யப்பட்டு, சில நாட்கள் சிறை இருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவுடன் கடையத்துக்குச் சென்றார்.
1918 முதல் 1920 வரை கடையத்தில் வாழ்ந்து வந்த பாரதியார் எட்டையபுர மன்னனுக்கு சீட்டுக் கவிகள் மூலம் தன் நிலைமையைச் சொல்லியும் எவ்விதப் பயனும் ஏற்படாமல் சென்னைக்கு வந்தார். சென்னையில் ராஜாஜி அவர்கள் வீட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார்.
1920ல் மீண்டும் சுதேசிமித்திரனுக்கு உதவியாசிரியரானார். பாரதியாரின் எழுத்துக்கள் அப்போது அதில் நிறைய இடம் பெற்றன.
1921ல் திருவல்லிகேணியில் கோயில் யானை ஒன்றால் தூக்கி எறியப்பட்டு, அதிர்ச்சியுற்று, நோய்வாய்ப்பட்டு 1921 செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவுக்குப் பின் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார். உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்ற பாரதியார், உலக மக்களின் உள்ளங்களிடையே இன்னும் வாழ்ந்து வருகிறார். வாழ்க மகாகவி பாரதியார்.
நன்றி : ஸ்ரீ ஆனந்த நிலையம்
தலைப்பு : வரலாறு
பொருள் இல்லாதவர்களுக்கு இந்த உலக வாழ்க்கை இல்லை என்பார் திருவள்ளுவப் பெருந்தகையார்.
உலக வாழ்க்கைக்குப் பொருள் மிக முக்கியம் என்று அழுத்தமாகவே சொல்வார்.
ஆனாலும் நாம் தேடும் செல்வம் நிலை இல்லாதது என்றும் சொல்வார்.
கலைநிகழ்ச்சி நடக்கும்போது அரங்கத்தில் பெருங்கூட்டம் கூடுகிறது.
நிகழ்ச்சி முடிந்தவுடன் கூட்டம் கலைந்து போகிறது.
அரங்கத்துக்கு வரும் கூட்டம் அரங்கத்திலேயே நிலைத்து இருப்பதில்லை.
ஒருவனிடம் சேரும் செல்வம் என்றென்றும் அவனிடத்திலேயே நிலைத்து இருப்பதில்லை.
செல்வம் சேரும்போது சேரும்; போகும்போது போகும்.
செல்வம் நிலைத்து நிற்பதில்லை.
“கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று” (332) என்கிறார் திருவள்ளுவர்.
செல்வம் மிக முக்கியம் என்கிறார்.
ஆனால் அது நிலை இல்லாதது என்றும் சொல்கிறார்.
செல்வம் நிலை இல்லாதது என்றால் செல்வத்தை ஏன் தேடவேண்டும்?
நிலை இல்லாத ஒன்றைத் தேடும் வேலை வீண் வேலைதானே?
நிலை இல்லாத ஒன்று எப்படி முக்கியமானது ஆகும்?
திருவள்ளுவர் முரண்படுகிறாரோ?
மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
நாட்டுப் பொய்யெலாம் பேசிடும் நாணிலீர்
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே. (5.84.2)
மாட்டைத் தேடி மகிழ்ந்து நீர் நும்முளே
நாட்டுப் பொய் எலாம் பேசிடும் நாண் இலீர்
கூட்டைவிட்டு உயிர் போவதன் முன்னமே
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே.
`செல்வத்தைத் தேடி உமக்குள்ளே மகிழ்ந்து நாட்டில் உள்ள பொய்கள் எல்லாம் பேசிடும் நாணம் இல்லாதவர்களே! உடலைவிட்டு உயிர் போவதற்கு முன்பே திருக்காட்டுப்பள்ளி உள்ளான் திருவடி சேர்வீர்களாக!’
மாடு – செல்வம்
நும்முளே – உமக்குள்ளே
நாண் – நாணம்
இலீர் - இல்லாதவர்களே
நாணிலீர் – நாணம் இல்லாதவர்களே, நாணம் அற்றவர்களே
கூடு – உடல்
காட்டுப்பள்ளி – ஊரின் பெயர்: மேலைத் திருக்காட்டுப்பள்ளி என வழங்கப்பெறும்
காட்டுப்பள்ளியுளான் – திருக்காட்டுப்பள்ளியில் எழுந்தருளியுள்ள இறைவர்
கழல் – திருவடி
சேர்மினே – சேர்வீர்களாக
உலக வாழ்க்கைக்குப் பொருள் தேவை என்பது உலகறிந்த உண்மை.
இந்த உண்மையைச் சைவ சமயச் சான்றோர்கள் மிகவும் வலியுறுத்தியே சொல்வார்கள்.
“மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்” (3.24.1) என்பார் திருஞானசம்பந்தர்.
மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்குப் பொருள் தேவை.
பொருள் தேவை என்றால் தேடித்தான் ஆகவேண்டும்.
`பொருள் தேடுங்கள்; பொருள் தேடி நன்றாக வாழுங்கள்’ என்று ஊக்கம் ஊட்டுகிறார்கள் சமயச் சான்றோர்கள்.
பொருள் தேடுவது எப்படி என்றும் சொல்கிறார்கள்.
உடல் வளர்ச்சிக்கும் நலத்துக்கும் உணவு தேவை.
எனவே உணவு தேடுவதும் உணவு உண்பதும் மிக முக்கியம் ஆகின்றன.
உணவு தேடுவதில் மகிழ்ச்சி இருக்கவேண்டும்.
உணவு உண்பதில் மகிழ்ச்சி இருக்கவேண்டும்.
ஆனால் உணவு தேடுவதே மகிழ்ச்சி என்று வாழலாமோ?
உணவு உண்பதே மகிழ்ச்சி என்று வாழலாமோ?
உணவே மகிழ்ச்சி என்று வாழத் தொடங்கினால் உணவே நமக்குப் பகையாகிவிடும்.
மூன்றுவேளை உணவு என்பது மறைந்து ஒருவேளை உணவும் நான்குவேளை மருந்தும் உட்கொள்ளும் நிலை வந்துவிடும்.
ஊரிலுள்ள மருத்துவர்கள் எல்லாரும் நமக்கு மிக வேண்டியவர்கள் ஆகிவிடுவார்கள்.
செல்வம் தேடுவதில் மகிழ்ச்சி இருக்கவேண்டும்.
செல்வத்தை நுகர்வதில் (அனுபவிப்பதில்) மகிழ்ச்சி இருக்கவேண்டும்.
ஆனால் செல்வம் தேடுவதே மகிழ்ச்சி என்று வாழலாமோ?
செல்வத்தை நுகர்வதே மகிழ்ச்சி என்று வாழலாமோ?
செல்வமே மகிழ்ச்சி என்று வாழத் தொடங்கினால் செல்வமே நமக்குப் பகையாகிவிடும்.
“மாட்டைத் தேடி மகிழ்ந்து” என்கிறார் திருநாவுக்கரசர்.
`செல்வம் தேடுவதற்கே வாழ்கிறோம்; செல்வம் தேடுவதே மகிழ்ச்சி’ என எண்ணுவதையே அப்பர் குறிப்பிடுகிறார்.
இப்படி எண்ணத் தொடங்கினால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்காகவே செல்வம் தேடுகிறோம் என்பது மறைந்துபோகும்.
செல்வம் தேடுவதே மகிழ்ச்சியான வாழ்க்கை என்னும் எண்ணம் தலைதூக்கி வலுப்பெற்றுவிடும்.
செல்வமே வாழ்க்கை எனும் எண்ணம் வலுப்பெற்றால் `எப்படியும் செல்வம் திரட்டலாம்; எப்படியும் செல்வம் திரட்டவேண்டும்’ என்று செயல்படத் தொடங்குவோம்.
எப்படியும் செல்வம் திரட்டவேண்டும் என்று செயல்படத் தொடங்கினால் எதனையும் செய்யலாம் என்பதே நம் கொள்கை ஆகிவிடும்.
`ஊராரை ஏமாற்றலாம்; வஞ்சகம் செய்யலாம்; நம்பியவர்களை நட்டாற்றில் விடலாம்; பிறர் குடியைக் கெடுக்கலாம்; சட்டத்தை வளைக்கலாம்; சட்டத்தை மீறலாம்; நமக்குப் பணம் வந்தால் சரி, பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என்று எதனையும் செய்யத் தொடங்கிவிடுவோம்.
பணத்துக்காகத் தவறான வழிகளில் இறங்குபவர்களுக்கு உற்ற துணையாகவும் வலுவான கருவியாகவும் இருப்பது பொய் ஆகும்.
பொய்யையே முதலாகக் கொண்டு பொய்யைப் பெருக்கிப் பொருளைப் பெருக்குவார்கள்.
பொய் பெருகப் பெருகப் பொருளும் பெருகும்.
பொருள் பெருகப் பெருகப் பொய்யும் பெருகும்.
அளவில்லாமல் பொய் பேசத் தொடங்குவார்கள்.
நாட்டிலுள்ள எல்லாப் பொய்களையும் சேர்த்துப் பேசுவார்கள்.
எவ்வளவு பொய் பேசினாலும் அவற்றுக்காகச் சிறிதும் நாணம் கொள்ளமாட்டார்கள்.
சிறிதுகூட நாணம் இல்லாமல் பணத்துக்காகப் பொய் பேசுவார்கள்.
“நாட்டுப் பொய்யெலாம் பேசிடும் நாணிலீர்” என இவர்களை விளிக்கிறார் அப்பர்.
பொருளுக்காகப் பொய் பேசலாமோ?
பொய் பேசிப் பொருள் தேடலாமோ?
`கூடாது’ என்கிறது சைவம்.
`கூடாது’ என்கிறார் திருவள்ளுவர்.
`கூடாது’ என்கிறார் திருநாவுக்கரசர்.
பொருள் தேடுவது குறித்த சைவக்கொள்கை மிகவும் தெளிவானது.
`எவ்வளவு செல்வம் வேண்டுமானாலும் தேடுங்கள்; முறையான வழியில் தேடுங்கள்; அறவழியில் தேடுங்கள்’ என்கிறது சைவ சமயம்.
இந்தக் கொள்கையோடு திருக்குறளும் முரண்படவில்லை; திருமுறையும் முரண்படவில்லை.
இல்லறம் நல்லறம் ஆவதற்குப் பொருள் வேண்டும்.
அறவழியில் நின்று பொருள் தேடவேண்டும்.
பொருள் தேடி மண்ணில் நல்லவண்ணம் வாழவேண்டும்.
உடலைவிட்டு உயிர் பிரிந்துபோவது உறுதி.
என்றாவது ஒரு நாள் உயிர் பிரியத்தான் செய்யும்.
ஆனால் அதற்கு முன் வாழவேண்டும்.
செத்துச் செத்து வாழக்கூடாது.
நன்றாக வாழ்ந்து இறக்கவேண்டும்.
http://nanavuhal.wordpress.com/2009/03/11/selvam-vaazkkai/
தலைப்பு : சிந்திக்க சில நிமிடங்கள், படித்ததில் பிடித்தது
வாழ்க்கையில் மகிழ்ச்சி தேவை என்றால் முதலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென எண்ணுவதை நிறுத்துங்கள். நீங்கள் வருந்துவதாலோ, அதையே நினைத்துக் கொண்டு இருப்பதாலோ எதுவும் மாறப் போவதில்லை.
வாழ்வை அதன் போக்கில் விட்டு, உங்கள் முயற்சியைத் தொடருங்கள். நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ளுங்கள். எரிமலை சாம்பலில் அதிக சத்துக்கள் இருப்பதைப் போல் எந்த ஒரு துன்பத்திலும் நிச்சயம் ஒரு நன்மை இருக்கும்.
அன்னப்பறவை போல் துன்பத்தை விலக்கி நன்மையை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் நிச்சயம் ஒரு வலி மிகுந்த கடினப் பாதை இருக்கும்.
மற்றவர்களிடம் குறை காணுவதை விட்டு உங்களுக்குள் என்ன நடக்கிறது என கவனியுங்கள். உங்கள் ஆழ்மனதின் விருப்பங்கள், நம்பிக்கைகளை அறிந்து, அதன் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி, உங்களின் லட்சியத்திற்குத் தயார் படுத்துங்கள்.
அனைத்து வசதிகளும் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்பது தவறு. வசதி இருப்பின், வரும் வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்த முயலுவோம். இல்லாவிட்டால், இனி என்ன செய்யலாம் என யோசித்தே மற்றவருக்கும் வாய்ப்புகளை வழங்குவோம்.
எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்தியமென ஹெரொடொடுச் என்ற அறிஞர் கூறுகிறார். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை விட்டுவிட்டு, ஒரு வழி மூடினால் வேறு வழி திறக்கும் என எண்ணுங்கள். அதில் உங்களால் எவ்வளவு தூரம் சாதிக்க முடியும் எனப் பாருங்கள்.
ஒரு நிகழ்வு நிகழ்வில்லையெனில் அதில் உங்கள் குணத்திற்கு ஒவ்வாத ஏதோ ஒன்று உள்ளது என அர்த்தம். இன்று முதல் ஆனந்தம் என வீட்டில் உங்களுக்கு பிடித்த இடத்திலிருந்து உங்களுக்கு பிடித்த செயலைச் செய்யுங்கள். வீட்டில் எந்த இடமும் பிடிக்கா விட்டால் வெளியே வாருங்கள்.
இயற்கை மலர்கள், மனிதர்கள், மரங்கள், மலைகள், நதிகள் எனப் பரந்து விரிந்திருக்கிறது. அதில் உங்களுக்குப் பிடித்த தனிமை நிச்சயம் கிடைக்கும். அந்தத் தனிமையில் உங்களைத் தேடி எதிர்மறை எண்ணங்களை விலக்குங்கள். மனதில் எதிர்மறை எண்ணங்களை விலக்கினால் அந்தக் காலி இடம் நேர்மறை எண்ணங்களால் நிறையும்.
இயற்கையை நம்பி வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து உங்கள் லட்சியத்திற்குத் தேவையான உங்களிடம் இல்லாத திறமையைக் கற்றுக் கொண்டு, கடுமையான உழைப்புடன் நல்ல எண்ணங்களால் நல்முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றி உங்களுக்கே!
(மூலம் : enlightenedbeings.com)
தலைப்பு : சிந்திக்க சில நிமிடங்கள்