"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


 

பொருள் இல்லாதவர்களுக்கு இந்த உலக வாழ்க்கை இல்லை என்பார் திருவள்ளுவப் பெருந்தகையார்.

உலக வாழ்க்கைக்குப் பொருள் மிக முக்கியம் என்று அழுத்தமாகவே சொல்வார்.

ஆனாலும் நாம் தேடும் செல்வம் நிலை இல்லாதது என்றும் சொல்வார்.

கலைநிகழ்ச்சி நடக்கும்போது அரங்கத்தில் பெருங்கூட்டம் கூடுகிறது.

நிகழ்ச்சி முடிந்தவுடன் கூட்டம் கலைந்து போகிறது.

அரங்கத்துக்கு வரும் கூட்டம் அரங்கத்திலேயே நிலைத்து இருப்பதில்லை.

ஒருவனிடம் சேரும் செல்வம் என்றென்றும் அவனிடத்திலேயே நிலைத்து இருப்பதில்லை.

செல்வம் சேரும்போது சேரும்; போகும்போது போகும்.

செல்வம் நிலைத்து நிற்பதில்லை.

“கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று” (332) என்கிறார் திருவள்ளுவர்.

செல்வம் மிக முக்கியம் என்கிறார்.

ஆனால் அது நிலை இல்லாதது என்றும் சொல்கிறார்.

செல்வம் நிலை இல்லாதது என்றால் செல்வத்தை ஏன் தேடவேண்டும்?

நிலை இல்லாத ஒன்றைத் தேடும் வேலை வீண் வேலைதானே?

நிலை இல்லாத ஒன்று எப்படி முக்கியமானது ஆகும்?

திருவள்ளுவர் முரண்படுகிறாரோ?

மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
நாட்டுப் பொய்யெலாம் பேசிடும் நாணிலீர்
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே. (5.84.2)

மாட்டைத் தேடி மகிழ்ந்து நீர் நும்முளே
நாட்டுப் பொய் எலாம் பேசிடும் நாண் இலீர்
கூட்டைவிட்டு உயிர் போவதன் முன்னமே
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே.

`செல்வத்தைத் தேடி உமக்குள்ளே மகிழ்ந்து நாட்டில் உள்ள பொய்கள் எல்லாம் பேசிடும் நாணம் இல்லாதவர்களே! உடலைவிட்டு உயிர் போவதற்கு முன்பே திருக்காட்டுப்பள்ளி உள்ளான் திருவடி சேர்வீர்களாக!’

மாடு – செல்வம்

நும்முளே – உமக்குள்ளே

நாண் – நாணம்

இலீர் - இல்லாதவர்களே

நாணிலீர் – நாணம் இல்லாதவர்களே, நாணம் அற்றவர்களே

கூடு – உடல்

காட்டுப்பள்ளி – ஊரின் பெயர்: மேலைத் திருக்காட்டுப்பள்ளி என வழங்கப்பெறும்

காட்டுப்பள்ளியுளான் – திருக்காட்டுப்பள்ளியில் எழுந்தருளியுள்ள இறைவர்

கழல் – திருவடி

சேர்மினே – சேர்வீர்களாக

உலக வாழ்க்கைக்குப் பொருள் தேவை என்பது உலகறிந்த உண்மை.

இந்த உண்மையைச் சைவ சமயச் சான்றோர்கள் மிகவும் வலியுறுத்தியே சொல்வார்கள்.

“மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்” (3.24.1) என்பார் திருஞானசம்பந்தர்.

மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்குப் பொருள் தேவை.

பொருள் தேவை என்றால் தேடித்தான் ஆகவேண்டும்.

`பொருள் தேடுங்கள்; பொருள் தேடி நன்றாக வாழுங்கள்’ என்று ஊக்கம் ஊட்டுகிறார்கள் சமயச் சான்றோர்கள்.

பொருள் தேடுவது எப்படி என்றும் சொல்கிறார்கள்.

உடல் வளர்ச்சிக்கும் நலத்துக்கும் உணவு தேவை.

எனவே உணவு தேடுவதும் உணவு உண்பதும் மிக முக்கியம் ஆகின்றன.

உணவு தேடுவதில் மகிழ்ச்சி இருக்கவேண்டும்.

உணவு உண்பதில் மகிழ்ச்சி இருக்கவேண்டும்.

ஆனால் உணவு தேடுவதே மகிழ்ச்சி என்று வாழலாமோ?

உணவு உண்பதே மகிழ்ச்சி என்று வாழலாமோ?

உணவே மகிழ்ச்சி என்று வாழத் தொடங்கினால் உணவே நமக்குப் பகையாகிவிடும்.

மூன்றுவேளை உணவு என்பது மறைந்து ஒருவேளை உணவும் நான்குவேளை மருந்தும் உட்கொள்ளும் நிலை வந்துவிடும்.

ஊரிலுள்ள மருத்துவர்கள் எல்லாரும் நமக்கு மிக வேண்டியவர்கள் ஆகிவிடுவார்கள்.

செல்வம் தேடுவதில் மகிழ்ச்சி இருக்கவேண்டும்.

செல்வத்தை நுகர்வதில் (அனுபவிப்பதில்) மகிழ்ச்சி இருக்கவேண்டும்.

ஆனால் செல்வம் தேடுவதே மகிழ்ச்சி என்று வாழலாமோ?

செல்வத்தை நுகர்வதே மகிழ்ச்சி என்று வாழலாமோ?

செல்வமே மகிழ்ச்சி என்று வாழத் தொடங்கினால் செல்வமே நமக்குப் பகையாகிவிடும்.

“மாட்டைத் தேடி மகிழ்ந்து” என்கிறார் திருநாவுக்கரசர்.

`செல்வம் தேடுவதற்கே வாழ்கிறோம்; செல்வம் தேடுவதே மகிழ்ச்சி’ என எண்ணுவதையே அப்பர் குறிப்பிடுகிறார்.

இப்படி எண்ணத் தொடங்கினால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்காகவே செல்வம் தேடுகிறோம் என்பது மறைந்துபோகும்.

செல்வம் தேடுவதே மகிழ்ச்சியான வாழ்க்கை என்னும் எண்ணம் தலைதூக்கி வலுப்பெற்றுவிடும்.

செல்வமே வாழ்க்கை எனும் எண்ணம் வலுப்பெற்றால் `எப்படியும் செல்வம் திரட்டலாம்; எப்படியும் செல்வம் திரட்டவேண்டும்’ என்று செயல்படத் தொடங்குவோம்.

எப்படியும் செல்வம் திரட்டவேண்டும் என்று செயல்படத் தொடங்கினால் எதனையும் செய்யலாம் என்பதே நம் கொள்கை ஆகிவிடும்.

`ஊராரை ஏமாற்றலாம்; வஞ்சகம் செய்யலாம்; நம்பியவர்களை நட்டாற்றில் விடலாம்; பிறர் குடியைக் கெடுக்கலாம்; சட்டத்தை வளைக்கலாம்; சட்டத்தை மீறலாம்; நமக்குப் பணம் வந்தால் சரி, பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என்று எதனையும் செய்யத் தொடங்கிவிடுவோம்.

பணத்துக்காகத் தவறான வழிகளில் இறங்குபவர்களுக்கு உற்ற துணையாகவும் வலுவான கருவியாகவும் இருப்பது பொய் ஆகும்.

பொய்யையே முதலாகக் கொண்டு பொய்யைப் பெருக்கிப் பொருளைப் பெருக்குவார்கள்.

பொய் பெருகப் பெருகப் பொருளும் பெருகும்.

பொருள் பெருகப் பெருகப் பொய்யும் பெருகும்.

அளவில்லாமல் பொய் பேசத் தொடங்குவார்கள்.

நாட்டிலுள்ள எல்லாப் பொய்களையும் சேர்த்துப் பேசுவார்கள்.

எவ்வளவு பொய் பேசினாலும் அவற்றுக்காகச் சிறிதும் நாணம் கொள்ளமாட்டார்கள்.

சிறிதுகூட நாணம் இல்லாமல் பணத்துக்காகப் பொய் பேசுவார்கள்.

“நாட்டுப் பொய்யெலாம் பேசிடும் நாணிலீர்” என இவர்களை விளிக்கிறார் அப்பர்.

பொருளுக்காகப் பொய் பேசலாமோ?

பொய் பேசிப் பொருள் தேடலாமோ?

`கூடாது’ என்கிறது சைவம்.

`கூடாது’ என்கிறார் திருவள்ளுவர்.

`கூடாது’ என்கிறார் திருநாவுக்கரசர்.

பொருள் தேடுவது குறித்த சைவக்கொள்கை மிகவும் தெளிவானது.

`எவ்வளவு செல்வம் வேண்டுமானாலும் தேடுங்கள்; முறையான வழியில் தேடுங்கள்; அறவழியில் தேடுங்கள்’ என்கிறது சைவ சமயம்.

இந்தக் கொள்கையோடு திருக்குறளும் முரண்படவில்லை; திருமுறையும் முரண்படவில்லை.

இல்லறம் நல்லறம் ஆவதற்குப் பொருள் வேண்டும்.

அறவழியில் நின்று பொருள் தேடவேண்டும்.

பொருள் தேடி மண்ணில் நல்லவண்ணம் வாழவேண்டும்.

உடலைவிட்டு உயிர் பிரிந்துபோவது உறுதி.

என்றாவது ஒரு நாள் உயிர் பிரியத்தான் செய்யும்.

ஆனால் அதற்கு முன் வாழவேண்டும்.

செத்துச் செத்து வாழக்கூடாது.

நன்றாக வாழ்ந்து இறக்கவேண்டும்.

http://nanavuhal.wordpress.com/2009/03/11/selvam-vaazkkai/