"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


நீங்கள் சாப்பிடும் ஒருவேளை பீட்சாவிற்க்காக நீங்கள் கொலை செய்ய படலாம்' இப்படி ஒரு வசனம் 'கற்றது தமிழ்' என்ற திரைப்படத்தில் இடம் பெறுகிறது. இது நிஜம்தான். இன்று இப்படிப்பட்ட ஒரு வளர்ச்சியை நோக்கித்தான் இந்த உலகம் பயணித்துக்கொண்டிருக்கிறது.

இன்று ஒரு மனிதன் சிரமமில்லாமல் எதைத்தான் செய்ய முடிகிறது, ஆக ஒருவேளை உணவிற்க்கே மனிதன் சிரமப்பட வேண்டியிருக்கிறது. மனிதன் தன்னுடைய ஒவ்வொரு தேவைகளையும் சிரமங்களுக்கூடகவே நிறைவேற்றி வருகிறான்.

இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்
தனியோருவனுக்கு உணவில்லை எனில் - இந்த
ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வரிகளை இன்று கடைப்பிடிப்பது என்பது முடியாதது என்பது அல்ல சற்று சிரமமான விஷயம் அவ்வளவுதான்.

நம்மால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்து கொண்டே இருக்க பழக வேண்டும். உதவி என்பது வெறும், பொருள் (பணம்) கொடுப்பது என்று இல்லை. நமது கண் முன்னே ஒருவர் மிகவும் மனமுடைந்து காணப்படுகிறார் என்றால் அவருக்கு ஆதரவாக சற்று கரிசனமாக பேசுவது கூட உதவி தான். காதலியை இழந்த நண்பனுக்கோ, மனைவியை இழந்த ஒருவருக்கோ அல்லது எதாவது ஒன்றை இழந்து தவிக்கும் நண்பனுக்கு அந்த நேரத்தில் அவனுடைய கையை இணக்கமாக பற்றி இருப்பதை விட என்ன உதவி செய்து விட முடியும். சில நேரங்களில் தொடுதல் என்பது பல நூறு வார்த்தைகள் சொல்லாததை செய்து விடுகிறது.

நம்முள் எத்தனை பேர் இன்று நம்முடைய அண்டை வீட்டாருடன் இணக்கமாக நட்புடன் இருந்து வருகிறோம். இன்னும் ஏன் ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வாழ்ந்தது மாறி இன்று ஒரே வீட்டினுள் தனி தனி அறைகள் என்ற சுவர்களுக்குள் குடும்பம் சிறை பட்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேசுவதில் கூட முனைப்பிருப்பதில்லை. நம்மால் முடிந்த வரை நம்மை சுற்றி உள்ளவர்களுடன் மிகுந்த அனபுடன் இருக்க பழக வேண்டும். ஏனெனில் நம்மை சுற்றி உள்ளவர்கள், நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் வரை நமக்கு எந்த தீங்கும் வராது என்பது ஒரு பழமொழி. எனவே இன்று நாம் நலமாக வாழ நம்மை சுற்றி உள்ளவர்களின் பங்களிப்பு கணிசமாக உள்ளது.

நமது கலாசாரத்தின் இரண்டு கண்கள் அன்பும் பண்பும், இவை இரண்டையும் இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். பிறரிடத்தில் நாம் காட்டும் அன்பு நமது மனதில் ஒரு நேரடி வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

இன்னமும் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு கண்ணீர் சிந்துகிற எத்தனையோ மக்கள் நம்மிடையே இருக்கின்றனர். அந்த கண்ணீர் கூட அந்த கதாபாத்திரத்தின் மீது கொண்ட ஒரு அன்பின் வெளிப்பாடுதான். ஆக ஒரு பிம்பத்தின் மீது நம்மையும் அறியாமல் அன்பு வெளிப்படுகிறது. அன்பின் அழகு அதனை வெளிப்படுத்தும்போதுதான் தெரிகிறது. எனவே நம் ஒவ்வொருவரின் மனதிலும் உறங்கி கிடக்கும் அன்பை எந்த தடையுமின்றி வெளிப்படுத்துவோம்.

ஒரு வலிமையான சமுதாயத்தை உருவாக்குவோம்.

அன்பே சிவம்