"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


வாழ்வில் தோல்வி என்பது சாதாரணம். மனம் தளர்ச்சி அடைவது இயல்பு. அந்தத் தளர்ச்சி அடைந்த காலங்களில் நாம் ஆற அமர யோசிக்க வேண்டும். அப்போது நமக்குப் புது வழிகள் தென்படும்.

வழக்கமாக, நாம் என்ன செய்கிறோம்? பலரும் தோல்விகளைக் கண்டு சலித்துவிடுகிறோம். "இப்படித்தான் முன்பு முயன்றேன். தோல்வி கண்டேன். அங்கே போனேன், அதிலும் தோல்விதான் கிட்டியது. என் அதிர்ஷடம் அவ்வளவுதான். நான் ஒரு தோல்வியாளன்" என்று நம்மைப்பற்றி நாமே தீர்மானம் செய்துவிடுகிறோம்.

நாம் தோல்வியாளன் என்று நம்மீது நாமே முத்திரை குத்திவிடுகிறோம். ஆனால், நாம் தோல்வியாளர்களா? இல்லை! நாம் எத்தனையோ முறை இதற்கு முன் வெற்றி பெற்றிருக்கிறோம். ஏதோ இந்தமுறை தோல்வியுற்றோம். அவ்வளவுதான்.

அப்படி எடுத்துக்கொள்ளாமல், நம் தோல்வியை எண்ணிப் புலம்பிக் கொண்டிருந்தோமானால், எல்லோரிடமும் அதைச் சொல்லி அழுது கொண்டிருந்தோமானால் - எதையும் சாதிக்க முடியாது! நமது நிலைமை இன்னும் மோசமாகிவிடும்!

666 மருந்து

ஒரு மருந்துக்கு 666 என்று பெயரிட்டார்கள். காரணம் 665 முறை முயன்றும் அதை அவர்களால் தயாரிக்க முடியவில்லை. ஆனால் சளைக்கவில்லை. 666-வது முறைதான் அதைத் தயாரித்தார்கள். எனவேதான் அதற்கு பெயர் "சால்வர்சான் 666".

அதேபோல, எடிசன் மின்சார விளக்கைத் தயார் செய்து கொண்டிருந்தார். அதற்கு மின்சாரம் பாய்ந்தவுடன் ஒளி விடும் ஒரு கம்பி தேவை. அதாவது மின்சார சக்தியைத் தடுத்து, ஒளியாக மாற்றும் ஒரு சுருள் கம்பி தேவை. எடிசன் எத்தனையோ உலோகக் கம்பிகளை எடுத்து முயன்றார்.. முயன்றார். மனம் சளைக்காமல் முயன்றார். கடைசியில் 'டங்ஸ்டன்' என்ற உலோகக் கம்பி அந்த வேலையைச் செய்தது!

தோல்வியை சமாளிப்பது எது? சளைக்காத மனம்தான்!
தோல்வியை வெற்றி கண்டது எது? விடாமுயற்சிதான்!

"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்" என்பார் வள்ளுவர். ஆம், தெய்வத்தால் முடியாதது கூட, முயற்சியால் முடியும். தம்பீ ! சோர்வு இல்லாமல், முயற்சியில் குறைவு இல்லாமல், மீண்டும் மீண்டும் முயற்சிப்பவர்கள், விதியைக்கூட வெற்றி கொள்வார்கள் என்றும் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

இரவும் பகலும்

நாம் வாழும் உலகை - இந்த பிரபஞ்சத்தைப் பாருங்கள். இதிலிருந்து சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த உண்மைகள் நமக்கு மன ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகின்றன.

என்ன அந்த உண்மைகள்?

உலகில் பகலுக்குப் பின் இரவு வருகிறது. அதே போல இறப்பு பிறப்பு, இன்பம் துன்பம், வெற்றி தோல்வி என்பவை உலகில் மாறி மாறி வருகின்றன. இவற்றை மாற்ற முடியாது. இதுதான் உலக உண்மை.

துன்பம் இல்லாத உலகம் உண்டா?
இருள் இல்லாத வெளிச்சம் உண்டா?
பள்ளம் இல்லாத மேடு உண்டா?

துன்பம், தோல்வி இவையெல்லாம் வாழ்க்கையின் பகுதிகள்; ஒரு காசின் இரண்டு பக்கங்கள்.

"என் குழந்தை செத்து விட்டான். அவனைப் பிழைக்க வையுங்கள்" என்று அழுத தாயிடம் புத்தர் சொன்னார். "எந்த வீட்டில் சாக்காடு இல்லையோ அந்த வீட்டிலிருந்து கொஞ்சம் எள் வாங்கி வா".

அந்த பெண்மணி வீடு வீடாக ஏறி இறங்கினாள். ஒவ்வொரு வீட்டிலும் இப்படி ஏதாவது ஒரு சாவு நிகழ்ந்துதான் இருக்கிறது என்பதைக் கண்டாள். பிறப்பும், இறப்பும், துன்பமும் தோல்வியும், வெயிலும் மழையும், மின்னலும் இடியும் வாழ்க்கையின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து கொண்டாள்.

சோதனை மேல் சோதனை

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? அதைக் கண்டு அழுது 'ஐயோ இப்படி நேர்ந்து விட்டதே' என்று புலம்பலாம். அல்லது, "தோல்வி தானே! எனக்குத் தெரியும், அதை எப்படி சமாளிப்பது என்று" எனச் சொல்லிக் கொண்டு, தைரியத்துடன் அதைச் சமாளிக்கலாம். இப்படிப்பட்ட அணுகுமுறை ஒன்றுதான் நம் கையிலிருக்கிறது.

சில காலகட்டங்கள் நமக்கு சாதகமாக இருப்பதில்லை. என் நண்பர் டாம், குடும்பத்துடன் இரவு விருந்துண்ணப் போனார். கடைகள் எல்லாம் மூடிவிட்டார்கள். சாமான் வாங்க கடைத்தெருப்பக்கம் போனார். சிலை திறப்பு விழாவில் பாதைகளெல்லாம் திசை திருப்பி விடப்பட்டன. ரெயிலேறினார். இவர் ஏறிய ரெயிலுக்கு முன் சென்ற ரெயில் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால், ரெயில் பாதி வழியில் நின்று போயிற்று! சில நேரம் தொடர்ந்து இப்படி நடக்கிறது. பட்ட காலிலேயே படும் அல்லவா?

ஏன் இப்படி? உலகமே நமக்கெதிராக - ஆண்டவனே நமக்கெதிராக இருக்கிறார்களா? அதெல்லாமில்லை!

மனவியல் அறிஞர் யங் சொல்கிறார்: "இவையெல்லாம் அடையாளங்கள்! இவை எல்லாம் முன்னோடிகள் - வரும் நிகழ்ச்சிகளின் போக்கைத் தெரிவிக்கும் சூட்சுமங்கள். "மேலே செல்லுங்கள் அல்லது செல்லாதீர்கள் என்று எச்சரிக்கும் வழிகாட்டிகள்" என்கிறார்.

"இதை நாம் புரிந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்கிறார்.

அதேபோல சிலநேரங்களில் எடுத்ததெல்லாம் வெற்றியடைவதைப் பார்த்திருப்பீர்கள். தொட்டதெல்லாம் பொன்னாவதைப் பார்த்திருப்பீர்கள். ஒரு முறை எனக்கு டெல்லியிலிருந்து கடிதம், பத்திரிக்கையிலிருந்து பாராட்டு, சர்வதேச விருது என்று அதிசயப்படும்படி ஒன்று மாற்றி ஒன்று நடந்து என்னை திகைப்பில் ஆழ்த்தின.

ஆடிப்பட்டம் தேடி விதை

மலை, ஆறு, கடல், வீடு வாசல், மாடு, மனை என்பன நாம் கண்ணால் பார்க்கின்ற உலகம்; மற்றொன்று நாம் புரிந்து கொள்ள முடியாத - புலனுக்கு அப்பாற்பட்ட சக்திகள் இயங்கும் உலகம்.

இந்த புலனுக்கு அப்பாற்பட்ட உலகம், சிலநேரம் நமக்கு சில செய்திகளை சொல்கிறது; சில காலகட்டம் ஏற்றது; சில காலகட்டம் ஏற்றதில்லை என்று. இன்று மனவியல் அறிஞர் யங் அப்படிச் சொல்வதைத்தான் அன்றே வள்ளுவர் "காலமறிதல்" - காலமறிந்து செயல்படுதல் என்று எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார்.

"ஆடிப்பட்டம் தேடி விதை" என்பதுபோல நமது நல்வாழ்வின் காற்று எந்தப் பக்கம் அடிக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. காற்றுள்ள பொழுதே தூற்றிக்கொள்ள வேண்டும். தவற விட்டு விடக்கூடாது. ஏனென்றால், எப்பொழுதாவது ஒரு முறைதான் அதிர்ஷ்டம் நம் வீட்டுக் கதவைத் தட்டும்!

"தோல்வியின் அடையாளங்கள் தென்படும்போது கொஞ்சம் பின்வாங்கி, நிதானித்து, மறு பரிசீலனை செய்யுங்கள்; அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்; வேறு பாதையில் முயலுங்கள்" என்று சொல்கிறார் யங். தோல்வியின் அடையாளம் 'காலம் கனிந்து வரவில்லை' என்பதைக் காட்டுகிறது. காலச் சக்கரம் மறுபடியும் திரும்பும்.

தோல்வி என்பது நாம் செல்லும் பாதை சரியில்லை என்பதை சூசகமாக தெரிவிக்கிறது. அதை நாம் புத்திசாலித்தனமாக புரிந்துகொள்ள வேண்டும். உடனே வேறு பாதையை ஆராய வேண்டும்.

தடைகள் ஏற்படும்; ஏற்பட்டால் நின்று நிதானிக்க வேண்டும். தடைக்கல் மீது ஏற முடியுமா? தடைக் கல்லைத் தாண்ட முடியுமா? அல்லது, கல்லைக் குடைந்து உள்ளே புக முடியுமா? என யோசிக்க வேண்டும்.

வீடு கட்டிய இடத்தில் ஒரு பெரிய பாறை இருந்தது. வீடு கட்டிக் கொண்டிருந்தவன் முதலில் அதை அப்புறப்படுத்த விரும்பினான்; முயன்றான்; முடியவில்லை. அந்த பாறை மீது ஒரு காவல் மாடம் (வாட்ச் டவர்) ஒன்றைக் கட்டினான்! "யார் வருகிறார்கள் இந்தப்பக்கம்?" என்று உயரத்திலிருந்து பார்க்க முடிந்தது இப்போது!

மீந்த இட்லி

எங்கள் கிராமத்தில் கிருஷ்ண அய்யர் காப்பிக் கடை என்றால் பிரசித்தம். ஊரில் மூன்று நாள் திருவிழா. இட்லிக்கு மாவு நிறைய அரைத்து வைத்திருந்தார். மாவை அப்படியே வைத்திருந்தால் புளித்துப் போய்விடும்.

ஆனால், எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. சுட்ட இட்லி பாதிக்கு மேல் அப்படியே இருந்தது. நேற்று சுட்ட இட்லியை என்ன செய்ய முடியும் என்று கவலைப்படலாம்; அல்லது குப்பையில் கொட்டலாம். தடைக்கல்தான்! ஆனால், அதைத் தடைக்கல்லாக எடுத்துக் கொண்டாரா அவர்? இல்லை. படிக்கல்லாக மாற்றினார்! அதை இன்னும் சிறப்பான பொருளாக செய்து விற்றார்.

என்ன செய்தார் கிருஷ்ணய்யர்? இட்லியை எல்லாம் உதிர்த்தார். வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப்போட்டு வதக்கினார். கடுகு தாளித்து, இட்லியை உதிர்த்துப்போட்டுப் புரட்டினார். சாப்பிட்டால் தேவாமிருதமாய் இருந்தது. 'இட்லி உசிலி' பறந்து போய்விட்டது. அதிக விலையில்!

சில ஓட்டல்காரர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? 'இட்லி உசிலி' மிஞ்சினால், மாலையில் அத்துடன் மாவு சேர்த்துப் பிசைந்து பகோடா ஆக்கிவிடுவார்கள்! பகோடா மிஞ்சினால் இரவு பகோடா குழம்பு வைத்துவிடுகிறார்கள்.

வெற்றிக்கும் இப்படி எத்தனையோ வழிகள் இருக்கின்றன!. 'தோல்வி ஏற்பட்டுவிட்டதே' என்று துவண்டு போய் கன்னத்தில் கை வைத்துவிட்டால், ஒரு வழியும் தோன்றாது. அதனால்தான் நம் ஊரில் "கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே" என்பார்கள்.

புல் வெட்டும் எந்திரம்

அமெரிக்க நாட்டில் ஒரு கம்பெனி புல் வெட்டும் எந்திரம் செய்து விற்றது. அங்கே எல்லார் வீட்டிலும், வீட்டிற்கு முன் புல் வளர்த்திருப்பார்கள். கோடையில் மூன்று மாதம் வாரா வாரம் புல் வெட்ட வேண்டும். கோடைகாலம் முடிந்ததென்றால் பனிக்காலம் தொடங்கிடும்; புல் வளராது. புல் வெட்டத் தேவை இல்லை. எனவே வியாபாரம் பனிக் காலத்தில் படுத்துவிடும்.

இந்த நேரத்தில் ஒரு மனிதர் வந்தார். இந்த புல் வெட்டுகிற எந்திரத்தின் அடியில் பனியில் சறுக்க, சறுக்குப் பலகைகளை வைத்துத் தரமுடியுமா? என்று கேட்டார். புதிய முயற்சி. அதிக வேலை. எனினும் அவர்கள் சளைக்கவில்லை. செய்து கொடுத்தார்கள்.

எந்திரத்தின் மீது சவாரி செய்துகொண்டு புல் வெட்டுவது போல, இப்போது பனியின் மீது சறுக்கிக் கொண்டு வேகமாக செல்ல முடிந்தது! புதிய பனி வண்டி ("ஸ்நோ மொபைல்") பிறந்தது! விற்பனை இலட்சக்கணக்கில் போயிற்று.

பனிக்காலம் என்று கம்பிளியைப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருக்கவில்லை அவர்கள்! பனிக் காலத்திலும் வியாபாரம் நடக்கும் ஒரு புதிய கருவியைத் தயாரித்தார்கள்.

மனம் இருக்கிறதே, அது ஒரு அபார சாதனம். அதைத் தட்டிக் கொடுத்து, உற்சாகமாக பேசினோமானால் தோல்வியைக் கூட வெற்றியாக அது மாற்றிவிடும்.

தோல்வி என்பது தோல்வியல்ல! நாமே மேலே ஏறும் வெற்றிப் படி.

- டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி (வெற்றிக்கு முதல் படி-நூலிலிருந்து)