தோல்வி என்பது ஒரு விஷயத்தை மீண்டும் பரிசீலனை செய்ய ஒரு வாய்ப்பு. எங்கோ தவறி இருக்கிறோம் என்பதைப் புலப்படுத்தும் நமக்குத் தெளிவுபடுத்தும் ஒரு நிகழ்ச்சி. அதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பல நேரம் நாம் செல்லும் திசையைத் திருப்புவதற்காக அத்தகைய தோல்விகள் ஏற்படுவதுண்டு.
தோல்வியின் நன்மை
ஒரு இளைஞர் இருந்தார். ஒரு பெண்ணைக் குறிப்பிட்டு அவளுடன் தான் பழகி வருவதாகவும் அந்தப் பெண்ணுக்கும் தன்னை பிடித்திருப்பதாகவும் சொன்னார். காதல் திருமணங்கள் நல்லவைதாம். திருமண வாழ்வு என்பது, ஒத்த உள்ளத்துடன், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒருவர் மற்றவருக்காக வாழும் உயர் வாழ்வு; உயர் பண்பு; உயர் நட்பு.
அந்தப்பெண் வேறு மதம்; மாறுபட்ட பழக்க வழக்கங்கள் கொண்ட குடும்பம். இளைஞர் படித்தவர். எனவே, பெண்ணின் படிப்பைப் பற்றிக் கேட்டேன். "படிக்காத பெண்" என்றார். எவ்வளவு நாள் தெரியும் என்றேன். "மூன்று மாதமாக" என்றார். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் நான் திருமணத்திற்கு வந்து வாழ்த்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
வேறு வேறு பழக்கங்களையும் பண்பாடுகளையும் கொண்ட மனிதர்கள் சேர்ந்து வாழ்வது என்றால், அதிக பொறுமையும், சகிப்புத் தன்மையும் வேண்டும். அத்துடன் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்களின் குணங்களைப் பற்றி இருவரும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
காதலின் உந்துதல் - உடலுறவின் வேகம் - அதிகமாயிருக்கும்போது மற்றவரது குணங்களைப் பற்றி கவனிக்க மாட்டோம். அது முடிந்து, அன்றாட வாழ்வு வாழும் போதுதான் மற்றவர்களது பழக்க வழக்கங்கள் பெரிய பிரச்சனையாகத் தலைதூக்கும்.
"இன்னும் கொஞ்சநாள் பழகுங்கள். ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்ளுங்கள். அதன்பின் திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று நான் யோசனை சொன்னேன். ஆனால், சில வாரங்களில் அந்தப் பெண் அந்த இளைஞரை விட்டு விட்டுப் போய்விட்டாள்!
இளைஞருக்கு காதலில் தோல்வி! மனமுடைந்து போனார். அதையே எண்ணிப் புலம்பிக் கொண்டிருந்தார் சில வாரம். பிறகு அந்த உண்மையை ஏற்றுக் கொண்டார்.
வாழ்வில் நமக்கு வழி காட்டவே சோதனைகளும் தோல்விகளும் வருகின்றன. சரியான திசையில் செல்லாத போது அவை வழி காட்டுகின்றன. அப்போது அந்த நேரத்தில் நமக்கு அந்தத் தோல்வியின் உண்மை புரிவதில்லை. வருந்துகிறோம். கலங்குகிறோம்!
வேலை போயிற்று! நன்மைக்கு
என் நண்பர் பேராசிரியர் பரஞ்சோதி சொன்னார். "ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். உற்சாகமில்லாத வாழ்க்கை. 'தெண்டமே' என்று வேலைக்குப் போய் வருவேன். ஒரு நாள் என்னை வேலையிலிருந்து நீக்கினார்கள். எனக்கும் உள்ளூர இந்த வேலையிலிருந்த விடுபட வேண்டும் என்பதுதான் விருப்பம். எனினும் வேலை போய்விட்டதால் குடும்பம் நடத்துவது கஷ்டமாகிவிட்டது கவலைப்பட்டேன். பயம் பிடித்துக் கொண்டது.
மூன்று மாதம் வேலையில்லாமல் அலைந்து ஏறி இறங்கிய பிறகு, ஒரு வேலை பாதி சம்பளத்தில் கிடைத்தது. இருந்தாலும் நல்ல வேலை. பிடித்த வேலை. ஏற்றுக்கொண்டேன். இது என் வாழ்க்கையிலே மிகப்பெரிய திருப்பம். பின்னால் நான் வாழ்க்கையில் முன்னேற வழி கோலியது. அவர்கள் வேலையை விட்டு என்னை வீட்டுக்கு அனுப்பியிராவிட்டால், நான் அதிலேயே உட்கார்ந்திருப்பேன். 'இது நல்லதுக்குத்தான் ஏற்பட்டது' என்பதைப் புரிந்து கொள்ளவே இரண்டு ஆண்டு ஆயிற்று."
வாழ்வில் ஏற்படும் தோல்விகள் நம்மை திசை திருப்புகின்றன. நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. தோல்விகளைப் புரிந்து கெள்ளும்போது - ஏற்றுக்கொண்டு செயல்படும் போது - ஒரு புதிய உலகம் நம்மை வரவேற்கிறது.
தோல்வியைத் தோண்டாதே! திசை திரும்பு
அமெரிக்காவில் நாங்கள் இருந்த ஊருக்கு அருகில் - பதினைந்து மைலில் - ஒரு கிராமம் இருந்தது. அங்கே வயல் முழுவதும் எண்ணெய் கிணறுகள். அதிலிருந்து எண்ணெய் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அதன் சொந்தக்காரனை நான் சந்தித்து "எப்படி இவ்வளவு பெரிய பணக்காரன் ஆனாய்? இவ்வளவு பெரிய எண்ணெய் வயலை உண்டு பண்ணினாய்?" என்று கேட்டேன்.
வால்டர் சொன்னார் - "ஐயா! நீங்கள் இருக்கும் ஊரில்தான் நானும் குடி இருந்தேன். எண்ணெய் கிணறு தோண்டுவதுதான் என் தொழில். ஓரிடத்தில் நிபுணர்கள் எண்ணெய் கிடைக்கும் என்றார்கள். நிலத்தை வாங்கி தோண்டினேன். இரண்டாயிரம் அடியில் எண்ணெய் கிடைக்கவில்லை. 'எண்ணெய் கொஞ்சம் ஆழத்தில் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தோண்டுங்கள்' என்றார் நிபுணர். இரண்டாயிரம், மூவாயிரம் என்று பத்தாயிரம் அடிவரை போனோம். எண்ணெய் ஏதும் கிடைக்கவில்லை; காசுதான் போயிற்று.
யோசனை செய்தேன். "இங்கில்லாவிட்டால் சரி விடு. வேறிடத்தில் தோண்டு என்று. தோண்டியிருந்தேனானால், ஐந்து புதிய இடங்களில் தோண்டி இருப்பேன். ஏதாவது ஓரிடத்தில் எண்ணெய் கிடைத்திருக்கும். இருப்பதையே வைத்துக்கொண்டு அதிலேயே ஈடுபட்டு தோல்வியை மேலும் மேலும் சரிப்படுத்த முயல்வது முட்டாள்தனம் என்று கண்டுகொண்டேண். இந்த ஊருக்கு வந்து புதிய இடத்தில் தோண்டினேன்; எண்ணெய் கிடைத்தது!" என்றார்.
தோல்வியை சரிப்படுத்த முயல்வதைவிட வேறு திசையில் அணுகுவது நல்லது.
"வெற்றி என்பது எப்போது நிலையாக இருக்கும்?" என்று கேட்டுவிட்டு தத்துவஞானி ஜேம்ஸ் ஆலன் பதில் கூறுகிறார்.
“வெற்றியடைந்ததும், வெற்றி பெற்றுவிட்டோம். இனி கவலைப்பட வேண்டியதில்லை. எல்லாம் தானே ஓடும்! என்ற இறுமாப்பு வராமல் சதாசர்வ நேரமும் 'அடுத்து என்ன செய்யலாம்?' என்று கவனமுடன் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். இல்லாவிடில் வீழ்ச்சியின் வித்து அங்கே முளைவிடுகிறது" என்கிறார்.
வெற்றி என்பது ஒரு மன நிலை. முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மனநிலை. கர்வமும், தற்பெருமையும் கொண்டவர்கள் பொது வாழ்வில் எப்படி மக்கள் அபிமானத்தை இழக்கிறார்கள் என்பதை நாம் திரும்பத் திரும்பப் பார்க்கிறோம்.
சார்ந்து நிற்காதீர்கள் - வயோதிகம் தோல்வியல்ல
நமக்கு இரண்டு கால்கள் இருக்கின்றன. நாம் நேரே நிற்கலாம். ஏன் சுவர் மீது தேவை இல்லாமல் சார்ந்து நிற்க வேண்டும்? சாய்ந்து நிற்கும்போது நமக்கு என்ன நேரிடுகிறது? நமது நேரான கம்பீரமான தோற்றம் பாழ்பட்டு விடுகிறது. குழந்தை அம்மாவைத் தான் சார்ந்து நிற்கிறது. வளரும் வரை. ஆனால் நாம் வளர்ந்தவர்கள். இனியும் குழந்தை அல்ல.
திருமண வீட்டிற்கு வாழ்த்துக் கூற மூத்த நண்பர் ஒருவர் வந்திருந்தார். வயது 78. எனவே மேடை மீது அழைத்துச் செல்ல நான் அவர் கையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு நடந்தேன். அவர் என் கையை உதறி தள்ளினார். "என்னால் தனியே நடக்க முடியும்!" என்றார். அவரது சார்ந்து நிற்க விரும்பாத குணத்திற்கு தலை வணங்கினேன். வயோதிக காலத்திலும் உதவியை நாட விரும்பாத உள்ளம்! எப்பேர்ப்பட்ட உள்ளம்!
ஊனம் தோல்வியல்ல!
சமீபத்தில் பார்வையிழந்த ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியைப் படித்தேன். அந்தப் பெண் தனக்குப் பார்வை இல்லை என்பதை ஒரு குறையாகவே கருதவில்லை. இயல்பாக எல்லோரையும் போல் நடந்து கொள்கிறாள். பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள். அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் அவருக்காக பரிதாபப்பட்டு அவரது ஊனத்தை அவருக்கு சதா நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும்? சார்ந்து நிற்க அவர் விரும்பவில்லை. மன ஊனம் அவருக்கில்லை. எப்போதும் எதற்கும் நாம் பிறரை சார்ந்து நின்றோமானால் நாம் நம் தனித்தன்மையையும் கம்பீரத்தையும் இழந்துவிடுவோம்.
ஒரு துன்பம் வந்த நேரத்தில் யாராவது நண்பர்களிடம் சென்று மனச்சுமையை இறக்கி வைக்க முயன்றோமானால், அவர்கள் கேட்பதை எல்லாம் கேட்டுவிட்டு, பிறகு நம்மையே குற்றம் சாட்டுவார்கள். கேவலப்படுத்துவார்கள்.
நாம் அனுதாபத்திற்காக செல்கிறோம். கிடைப்பதோ கேவலம், இழிவு, குற்றச்சாட்டு, கண்டனம்.
இது ஏற்படக் காரணம் நமது சார்ந்து நிற்கிற குணத்தினால்தான். நாம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். உதவ முன் வருபவர்களது உதவியைப் பெற்றுக்கொள்வது வேறு; மாறாக அவர்களைச் சார்ந்து நிற்பது வேறு.
நாம் மிடுக்கான மனிதர்கள். அந்த மிடுக்குடன் வாழ்நாள் முழுக்க உலாவுவோமாக!
- டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி (வெற்றிக்கு முதல் படி-நூலிலிருந்து)
தலைப்பு : எம்.எஸ். உதயமூர்த்தி, சுயமுன்னேற்றம்