"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619



பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம்

ரு முயற்சி வெற்றி பெறும்போது நமக்கு என்ன கிடைக்கிறது?

நாம் விரும்பியதை அடைகிறோம்.
நம் சாதனை - நம்மால் முடியும் என்று நிரூபிக்கிறது.
நமக்கு நம்  மீதே ஒரு பெருமை ஏற்படுகிறது.
நமக்கு மனநிறைவைத் தருகிறது.

மேலே கூறிய நான்கு விளைவுகளையும் பார்த்தோமானால் கடைசியில் கூறப்பட்ட மூன்று விளைவுகளும் நம் மனதில் ஏற்படுகின்ற உணர்வுகள் என்பது புரியவரும்.

நம்மைப் பற்றி நம் மனதில் ஏற்படும் பெருமை, நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, நமக்குள் ஏற்படும் மனநிறைவு - இவைதான் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குகின்றன. மேலும் சாதனை செய்யத் தூண்டுகின்றன.

இப்படிப்பட்ட எண்ணங்கள் ஆணின் மனதில் அதிகம் எழுகின்றனவா அல்லது பெண்ணின் மனதில் அதிகம் எழுகின்றனவா என்று கேட்டால், அந்த வாய்ப்பு, குறிப்பாக கிராமங்களில் வாழும் பெண்களுக்கு அதிகம் கிடைப்பதில்லை.

சாதனை புரியும் வாய்ப்புகள் பொதுவாக பெண்களுக்குக் குறைவு. அதிலும் கிராமப் பெண்களுக்கு இன்னும் குறைவு. காரணம் கல்வியறிவின்மை மற்றும் நமது சமூகப் பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள், மரபுகள்.

வெற்றிக்கு முதல்படி: அறிவு - படிப்பு

ஒரு ஆணுக்குக் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை நாம் ஒரு பெண்ணுக்குக் கொடுப்பதில்லை.

"ஒரு பெண் எதற்குப் படிக்க வேண்டும்? கல்யாணம் செய்து கொண்டு கணவன் வீட்டுக்குப் போகிறவள்தானே?" என்று ஒரு பெண்ணைத் திருமணத்திற்காகவே வளர்க்கிறோம்.

ஒரு ஆண் திருமணம் ஆகாமல் இருக்கலாம். ஒரு பெண் திருமணம் ஆகாமல் இருந்தால் அபவாதம். 'கெட்ட பெயர்'. இப்படி ஒரு மரபு. மேனாடுகளில் ஆண்களைப் போல பெண்கள் இப்போது காலந்தாழ்ந்து திருமணம் செய்துகொள்கிறார்கள் அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்கிறார்கள்.

ஒரு பெண்ணின் முன்னேற்றத்தைத் தடை செய்வது படிப்பின்மைதான். படிப்பு இருந்தால்தான் ஊர் உலகம் தெரியும்; படிப்பு இருந்தால்தான் நல்ல வேலைக்குப் போக முடியும். நல்ல வேலைக்குப் போனால்தான் நிறைய சம்பாதிக்க முடியும்; தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்.

வெற்றி என்பது: தன் காலில் நிற்கும் பெருமை

தன் காலில் நிற்கும் பெருமை இருக்கிறதே. அதை நம் நாட்டில் பெண்களுக்கு இல்லாமல் செய்துவிட்டோம். பெண்களை "சார்ந்து நிற்க வேண்டிய ஒரு சமுதாயமாக" உருவாக்கிவிட்டோம்.

ஒரு பெண்ணோ, ஆணோ, தன் காலில் நிற்கும்போது - தன்னால் சம்பாதித்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வரும்போது, அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கிறது. அவர்கள் யாரையும் 'சட்டை' செய்யவேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு சமூக மதிப்பு, சமூகத்தில் ஒரு பெருமை கிடைக்கிறது. வாத்தியாரம்மா, டாக்டரம்மா, வக்கீலம்மா என்று ஊரும் உலகமும் உங்களைப் பெருமையுடன் அழைப்பதைப் பாருங்கள். வேலை பார்க்கும் பெண்களுக்கும் வீட்டிலே இருந்துகொண்டு வேலைக்குப் போகாத பெண்களுக்கும் கொடுக்கப்படும் மரியாதை வெவ்வேறானது.

சம்பாதிக்கிற மருமகளை மாமியார் அதிகம் அதட்டிக் கேட்க முடிவதில்லை; அதிகாரம் செய்வதில்லை. மாறாக மதிப்பும் மரியாதையும் கிடைக்கின்றன.

"பொட்டைக் கழுதை" என்று பெண்களை இழிவுபடுத்துவதும், "பொம்பளை மாதிரி பேசறீயே!" என்று பெண்களை உதாரணம் காட்டுவதும் சமுதாயத்தில் பெண்களைக் கேவலப்படுத்துகிறது.

"சாண் பிள்ளையானாலும் அவன் ஆண்பிள்ளை!" என்று ஆண்பிள்ளையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது அவனது சகோதரியின் மண்டையில் அடிக்கிறது. "உன்னால் ஒன்றும் செய்ய முடியாது; ஏனெனில் நீ ஒரு பெண்!" என்று சொல்லாமல் சொல்கிறது, நம் சமுதாயம்.

முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும். அதற்கு முதலில் பெண்கள் படிக்க வேண்டும்.

வெற்றிக்குத் தேவை: பொருளாதார சுதந்திரம்

பொருளாதார சுதந்திரம் - அதாவது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, ஒரு பெண் வாழ்வதற்குத் தேவையான வருமானம்தான் அவளுக்கு உறுதுணையாக என்றும் நிற்கும்.

ஆணுக்குள்ள அத்தனை திறமைகளும் ஒரு பெண்ணிடம் இருக்கின்றன. அதற்கு மேலும் இருக்கின்றன. இதை நாம் புரிந்துகொண்டு மதிப்புக் கொடுத்து நம் பெண்களை வளர்க்கத் தவறிவிட்டோம். பெண்களுக்கு ஏன் பொருளாதார சுதந்திரம் வேண்டும்? இந்த உலகத்தைப் பார்த்தோமானால் ஒருவன் படித்தவனா; படிக்காதவனா என்பது முக்கியமல்ல! பணமிருந்தால் படிக்காதவன் கூட மதிக்கப்படுகின்றான். மரியாதை செய்யப்படுகிறான்.

ஒருவன் பதவியில் இருக்கிறானா? அல்லது பதவி ஏதும் இல்லாமல் இருக்கிறானா? என்பது முக்கியமல்ல. பதவி இல்லாமல் இருந்தாலும் பணம் இருந்தால் பதவியில் உள்ளவர்களை எல்லாம் அடிபணிய வைக்கலாம். எனவே பணம்தான் முக்கியம்.

ஒரு நபர் ஆணா பெண்ணா என்பது முக்கியமல்ல. சொத்துக்கு வாரிசு ஒரு பெண்தான் என்னும்போது உலகமே அந்தப் பெண்ணுக்கு அடிவணங்குவதைப் பார்க்கலாம்.

பணம் என்பது நமக்குப் பாதுகாப்பைத் தருகிறது; பெருமை தருகிறது; செல்வாக்குத் தருகிறது; வலிமை தருகிறது. அதனால்தான் வள்ளுவர், "மகளே! பணம் இல்லாவிட்டால் இந்த உலகில் உனக்கு வாழ்வே இல்லை" என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

35 வயதுக்குமேல்: வெற்றி உண்டு

பணம், சாதனை, வெற்றி என்பதெல்லாம் எதற்காக? அதன் பலன் என்ன? என்ற கேள்வி வருகிறது.

மனிதன் தன் வாழ்வில் மகிழ்வுடன் மனநிறைவுடன் இருக்க விரும்புகிறான். அதுதான் வாழ்வு என்று கருதுகிறான். ஒரு ஆணைப் பார்த்து, "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்கிறோம். அவர் "சும்மாதான் இருக்கிறேன்" என்றால் எவ்வளவு கேவலமாக அவரை மதிப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். வேலை, சம்பாத்தியம் எல்லாம் ஆண்மையின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.

மாறாக, ஒரு பெண்ணை யாரும் 'என்ன செய்கிறீர்கள்?' என்று நம் ஊரில் கேட்பது இல்லை. காரணம் பெண்ணுக்குக் குடும்பம், குழந்தைகள், கணவன், வீடு என்று இருக்கின்றன. அதுவே பெரிய வேலைதான். அதுவே பெரிய மனநிறைவைத் தருகிறது.

ஆனால், ஒரு 30-35 வயது பெண்மணியின் நிலை என்ன? அந்த வயதுக்கு மேலும் ஒரு 30 ஆண்டுகள் வாழக்கூடிய - வாழவேண்டிய பெண்ணின் நிலை என்ன?

கணவன் வேலைக்குப் போகிறான். குழந்தைகள் பெரியவர்களாகி படிக்கப் போகிறார்கள். ஒரு பெண்மணி தன்னிடம் எவ்வளவோ திறமை இருந்தும் அவற்றிற்கெல்லாம் எந்த வாய்ப்புமில்லாத நிலையில் வீட்டில் பொழுதைக் கழிக்கிறார்.

இத்தனை நாள் நம் சமுதாயத்தில் தொழில், வேலை என்பது ஆணுக்கும், குடும்பம், குழந்தை வளர்ப்பு என்பது பெண்ணுக்குமாக என்ற ஒரு நடைமுறை இருந்து வந்தது.

இன்று உலகம் மாறி வருகிறது. பெண்கள் படிக்கிறார்கள். அதிகம் பேர் வேலை பார்க்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள்; தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து சமுதாயத்திற்குப் பயன்படும் பணிகளைச் செய்கிறார்கள். எனவே, மாறிவரும் புதிய உலகிற்கு ஏற்பக் கிராமத்துப் பெண்களும் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

சம்பாத்தியம், குடும்பம் என்ற இரண்டிலும் பங்கு பெறும் போதுதான் தன் காலில் நிற்கும் குணமும், பொருளாதார சுதந்திரமும், தன்னைப் பற்றிய நம்பிக்கையும், சார்ந்து நிற்காத குணங்களும் வளரும். இது பெண்களுக்கு நாளைய உலகிற்கு அவசியமான தேவைகள்.

வருமானம், குடும்பம் என்பவற்றில் ஆண்-பெண்ணின் பங்கு பாதிப் பாதி என்ற விகிதத்தில் இருக்க வேண்டியதில்லை. அது அவர்கள் தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். அதேபோல, வளரும் குழந்தைகள் வீட்டிலிருக்கும்போது வருமானத்திற்காக தொழிலிலோ, வேலையிலோ இறங்க வேண்டியதில்லை. அந்தக் குடும்பக் கடமை முடியும்போது, அடுத்த கடமைக்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கும் பெண்தான் வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்க முடியும்.

பெண் குணம்

பெண்களைப் பற்றி ஆராய்ந்தவர்கள் ஆண்களைவிடப் பெண்கள் நம்பற்குரியவர்கள், பிறரை மன்னிப்பவர்கள், உறவில் நயம் தெரிந்து அன்பு காட்டுபவர்கள், கடின உழைப்பாளிகள் என்று எழுதுகிறார்கள்.

ஒரு ஆளை மதிக்கும் அளவுகோல் இன்று எல்லா நாடுகளிலும் பணம்தான். ஆனால் ஜப்பானியர் பணத்தைவிடக் குணத்தை அதிகமாக மதிக்கிறார்கள். அடக்கம், பணிவு, எளிமை, சமுதாயத்துடன் சேர்ந்து இணைந்து இயங்குதல்; பிறருடன் இனிமையாகப் பழகுதல் என்ற பெண் குணங்களை ஜப்பானியர் போற்றுகிறார்கள். அதற்காக அவர்களிடம் பணம் பண்ணும் - தன் காலில் நின்று தொழில் செய்யும் குணங்கள் இல்லை என்பது பொருளல்ல. இன்று பணத்தில் அமெரிக்காவை மிஞ்சும் நிலையில் ஜப்பான் இருக்கிறது.

அமெரிக்காவைப் பொதுவாகப் பார்த்தால் அங்கே ஆண் குணங்கள் அதிகம். அசாத்திய தன்னம்பிக்கை, சுதந்திரம், தன்னைப் பற்றிய பெருமை, தனது தனித்தன்மை பற்றிய உணர்வு - இவை எல்லாம் அதிகம் அங்கே.

எந்த சமுதாயத்திற்கும் இந்த இரண்டு வகைக் குணங்களும் தேவை.

பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் பெண்கள் சமுதாயம், குறிப்பாக நம்முடைய கிராமப் பெண்கள் - அடுத்த நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்க வேண்டுமானால், அவர்களுக்கு இன்று அவசியமான ஒன்று: கல்வி. இரண்டாவது: உலக ஞானம். மூன்றாவது: தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை.


- டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி (வெற்றிக்கு முதல் படி-நூலிலிருந்து)