"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


அன்றாட அற்புதங்கள்

"அவனா, சமாளிக்கவே தெரியாத ஆசாமிப்பா. நல்ல நிலைமையில இருக்கான். கைநிறைய அத்தியாவசியம் மற்றும் ஆடம்பரத்துக்குப் போதுமான மாச சம்பளம். அவன் அப்படி ஒன்றும் செலவாளியுமில்ல. இருந்தும் பாரேன், எப்பவுமே சிரமதசையில இருக்கான். காசைச் சரியா செலவழிக்கத் தெரியாதவன்னு தான் சொல்லணும். புதுப்பேண்ட் போட்டா பழைய சட்டை போடறான். டை புதுசுன்னா ஷு பார்க்க சகிக்கல்ல. சம்பளப்பணம் எப்படிப் போகுதுன்னே தெரியல்லன்றான். அவன் சம்பாத்தியத்துல பாதி எனக்கு இருந்தாப் போதும். சூப்பரா பட்ஜெட் போட்டு எத்தன அருமையா வாழ்வேன், தெரியுமா", என்று நாம் என்னவோ, அப்படியே வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருவதைப் போல, பந்தாவாக நம்மில் பலர் ஏதோ ஒரு சமயத்தில் அலட்டுகிறோம்.

நாம் எல்லோருமே ஏதோ நிதியமைச்சர் என்ற சுகமான கற்பனை நம் மனதில். வரவுசெலவுத் திட்டத்தில் என்னை மிஞ்ச யாருண்டு என்ற ஒரு சுய போதை! அந்தக் கணத்தில் அது ஒரு சகமான சிந்தனையாகவே இருக்கிறது. நாளிதழ்களைப் பாருங்கள். பக்கம் பக்கமாய், செலவுக் கணக்கும் அதுதரும் வசதிகளுமான அறிவுரைகள். கண்ணைச் சுண்டும் விளம்பரங்களும் பேட்டிகளுமாய். இவ்வகையான செய்திகள் படிப்போரை ஈர்க்கவே செய்கின்றன. சமீபத்தில் ஒரு செய்தித் தாளில் கிளம்பியது ஒரு விவாதம். கட்டுரையில், "எண்பது ரூபாயில் ஒரு வாரத்துக்கு வாழ்வது எப்படி?" ஆனால், "ஒரு நாளைக்கு இருபத்துநான்கு மணிநேரத்துக்கு எப்படி 'வாழ்வது'?", என்பது போன்ற எந்தக் கட்டுரையையும் நான் கண்டதில்லை. இருந்தாலும், 'டைம் ஈஸ் மனி' என்று சொல்கிறார்களே. காலம் என்பது பணத்தைவிட அதிக மதிப்பு வாய்ந்தது என்பது என்னவோ உண்மைதான். பொதுவாகவே, கையில் நேரம் இருந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்பது எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடியது. ஆனால், உங்களிடம் கோடிக்கணக்கில் பணமிருந்தாலும் எனக்கு இருக்கும் அதே அளவிலான மணித்துணிகள் தான் உங்களிடமும் இருக்கும். ஒரு பூனையிடமும் கூட அதே இருபத்துநான்கு மணிநேரம் தான் இருக்கும்.

தத்துவவாதிகள் 'வெளி'யை விவரித்திருக்கிறார்கள். ஆனால், காலத்தை விவரித்ததுண்டா? காலம் தான் எல்லாவற்றுக்குமான கச்சாப் பொருள். ஆதிமூலம் அல்லது லோகமூலம் அது. அதைக் கொண்டு எதையுமே சாத்தியப் படுத்தலாம். நேர உற்பத்தி என்பதுதான் இந்த யுகத்தில் நடக்கக்கூடிய மிகப்பெரிய அற்புதம் என்றால் அது மிகையில்லை. ஒரு ஆச்சரியகரமான சம்பவமாகவும் அது இருக்கக்கூடும்! காலையில் எழுந்து கொண்டதுமே உங்களின் பணப்பையில், அற்புதமான இருபத்துநான்கு மணிநேரம் நிரம்பியிருக்கிறது! அம் மணித்துளிகள் யாவுமே, உங்களுக்கே, உங்களுக்கு மட்டுமே உரியது. அவைதான் ஒருவர் உரிமை கொண்டாடக்கூடிய மிகவும் மகத்தான சொத்து. அந்தச் சொத்தினை உங்களிடமிருந்து யாரும் அபகரிக்க முடியாது; திருட முடியாது. உங்களை விட அதிகமாகவோ குறைவாகவோ வேறு யாரிடமும் இருக்கவும் இருக்காது.

ஒரு மகத்தான மக்களாட்சியில், காலம் எனும் பெரும்சக்தியின் முன், செல்வத்தின் அதிகாரங்களோ, அறிவின் அதிகாரங்களோ செல்லுபடியாகுமா! அறிவாளிகளுக்கு ஒரு நாளைக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் கிடைக்கிறதா? இல்லையே. இந்த மதிப்புமிகுந்த நேரத்தை கவனமுடன் கணக்குபோட்டுச் செலவிட்டுப் பாருங்கள். அதன்பலன் முழுக்க முழுக்க உங்களுக்கே உரித்தானதாகிவிடும். "இவன் முட்டாள் இல்லை. வெகுளியும் இல்லை. இவனுக்கு இனிமேல் 'நேரம்' வேண்டாம். இவனுக்குரிய நேரத்தை இனி வெட்டி விடுவோம்", என்று எந்த ஒரு மர்மசக்தியும் போடமுடியுமா கத்தி? நேரம் கொடுக்கும் பலம் ஞாயிறுகளால் தடைபடாது. எதிர்காலத்தை இப்போதே செலவிடமுடியாது. ஆகவே, கடன் தொல்லையும் இல்லை! நிகழ்காலத்தை வேண்டுமானால் வீணடிக்கலாம். நாளையை வீணடிக்க முடியாது. அது உங்களுக்காகக் காத்திருக்கும். அடுத்த மணித்தியாலத்தையும் வீணாக்க முடியாது. அதுவும் உங்களுக்கென்று காத்திருக்கும்.

இதெல்லாம் அற்புதம்தான்! இல்லையா? நாள்தோறும் இந்த இருபத்துநான்கு மணிநேரத்திலேயே வாழ்ந்து கழிக்க வேண்டியதான இவ்வாழ்க்கையே ஓர் அற்புதம்தான்! அதற்குள்ளாகவே ஆரோக்கியத்தை, கேளிக்கையை, பணத்தை, சொத்தை, கௌரவத்தை மட்டுமின்றி, ஆன்மிக பரிணாமத்தையெல்லாம் தேடிச் செல்ல வேண்டியதாக இருக்கிறது. காலத்தின் சரியான முறையான பயன்பாடு மட்டுமே மகத்தான பலன்களைக் கொடுக்க முடியும். எல்லாமே அதில்தான் அடங்கியிருக்கிறது. நண்பர்களே, உங்களின் மகிழ்ச்சியும் நீங்கள் பற்றியிருக்கும் அவ்வரிய பரிசுகளும் கூட அதில்தான் அடங்கியிருக்கின்றன! அதைச் சார்ந்தேதான் இருக்கின்றன.

நவீனமும் சாதுர்யமும் கொண்ட நாளிதழ்கள் என்றுமே 'கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் எப்படி வாழ்வது' என்று சொல்வதே இல்லை என்பது எத்தனை விநோதம்! பணம் கிடைப்பது காலம் கிடைப்பதை விட மிகச் சுலபம். ஆழமாகச் சிந்தித்தோமானல், பணம் என்பதுதான் ஆகச் சுலபமாகக் கிடைக்கக் கூடியது என்று ஒருவரால் புரிந்து கொள்ள முடியும். 'காலம்' பூமியின் மேல் மலைகளெனக் குமிந்து பாரமேற்றியபடியிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட அளவிலான பணத்தில் ஒருவரால் வாழ முடியாத நிலையில் அவர் இன்னும் அதிகமாகச் சம்பாதிக்க நினைக்கிறார். அதற்காகத் திருடவும் கூடச் செய்கிறார். வருடத்திற்குப் பத்தாயிரம் ரூபாயில் வாழ முடியாததால் வாழ்க்கையை ஒருவர் குழப்பிக் கொள்வதில்லை. எப்படியேனும் சமாளிக்கத்தான் செய்கிறார். ஆனால், இருபத்துநான்கு மணிநேரம் கையிலிருக்கும் ஒருவர் சரிவரச் செலவிடப் போதுமானதாக இல்லையென்றால் அவர் தன் வாழ்க்கையை நிச்சயம் குழப்பிக்கொள்ளத்தான் செய்கிறார்!

நிற்காமல் தொடர்ந்து வரவிலேயே இருந்திடும் இந்த 'காலம்' இரக்கமே இல்லாத கட்டுப்பாட்டையும் கொண்டது.

நம்மில் யார் இருபத்துநான்கு மணிநேரமும் 'வாழ்கிறோம்'? 'வாழ்கிறோம்' என்றால் 'இருக்கிறோம்' என்பதல்ல! 'சமாளிக்கிறோம்' என்பதும் அல்ல!

காலத்தைச் சரியாகச் செலவிடவில்லை, என்ற ஒருவித அசௌகரியமான குற்றவுணர்வு இல்லாமல் எத்தனை பேர் நம்மிடையே இருக்கிறோம்! நம்மில் எத்தனை பேருக்கு பழைய பேண்டுக்கு புதிய சட்டை அல்லது பழைய சட்டைக்குப் புதிய பேண்ட் என்ற விநோதம் இல்லாமல் எப்போதுமே ஒரே சீரான வாழ்க்கை நடக்கிறது! "இன்னும் கொஞ்சம் கூட நேரமிருந்தால் நானும்கூட மாற்றங்கள் கொணர்வேன்", என்று நம்மில் எத்தனை பேர் அடிக்கடி சொல்லிக் கொள்கிறோம்! பல காலமாகவே சொல்லி வந்திருக்கிறோம்!...

நமக்கு இதற்கு மேல் நேரம் கிடையாது. அன்றும் இன்றும் நாளையும் என்றுமே இதேபோல இருபத்துநான்கு மணித்தியாலங்களே இருக்கும். எப்போதுமே அலட்சியப் படுத்தப்பட்டிருக்கும் இந்த முக்கியக் கூற்றினை உணர்தலே மிகமிக முக்கியம். இந்தக் கூற்றினை நான் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை. சிந்தித்து உணர்ந்தேன். அவ்வளவு தான். இவ்வுண்மையை உணர்ந்த பிறகு தான் நான் தினசரி நேரம் செலவிடும் நுட்பமான செயல்முறைப் பரிசோதனையை மேற்கொண்டேன்.

"ஆனா, எதற்கு இருபத்துநான்கு மணி நேரத்தைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறான் இவன்? இருபத்துநான்கு மணிநேரமும் வாழ்வதில் எனக்கொன்றும் பிரச்சனையில்லையே. நான் செய்யத் திட்டமிடுவதையெல்லாம் செய்கிறேன். அதே நேரத்தில் சில போட்டிகளுக்கும் போக முடிகிறது என்னால். இதெல்லாம் சின்ன விஷயம். ஒரு நாளைக்கு இருபத்துநான்கு மணிநேரம் மட்டும் தான் இருக்கிறது என்று உணர்ந்து கொண்டு திருப்திப்பட்டாப் போச்சு. இதற்குப்போய்..." என்று முக்கிய செய்தியை விட்டுவிட்டு ஒரு சிலர் இதைச் சாதாரணமாகக் கூட நினைக்கலாம்.

ஐயா, என்னை மன்னியுங்கள். உங்களைப் போன்ற ஒருவரைத்தான் நாற்பது ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தேன். உங்களின் முகவரி, தொலைபேசி எண் எல்லாவற்றையும் அவசியம் கொடுங்கள். வாழ்க்கையில் அப்படி எப்படி உங்களால் திருப்திப்பட்டுக் கொண்டிருக்க முடிகிறது என்று தெரிந்துகொள்ள எனக்கும் ஆசை. விரிவாக எனக்குச் சொல்ல என்ன கட்டணம் என்றும் சொல்லி விடுங்கள். நான் உங்களிடம் பேசுவதை விட நீங்கள்தான் என்னிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். முன்னால் வாருங்கள். நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் என்பதில் எனக்கு ஒருவித சந்தேகமுமில்லை. ஆனால், இங்கே ஏராளமான பாவப்பட்ட ஆன்மாக்கள் வருடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உருண்டோடுவதைப் பார்த்தபடியே இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை ஒரு சீரான ஓட்டத்துக்குக் கொண்டு வர முடியவில்லையே என்ற ஒருவிதமான வலியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்முன்னால் வரும்வரை நான் இவர்களுடனேயே பேசிக் கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது.

அவ்வுணர்வைப் பற்றி நாம் விரிவாக யோசித்தால் மேலும் நன்றாகப் புரியும். ஒரு வித அசௌகரியமும், எதிர்பார்ப்பும், ஏமாற்றமும், முன்னோக்கிய அகப்பார்வையும் ஊக்கமும் கலந்த ஓர் உணவு அது. தீராத தொடர் சௌகரியத்தை ஏற்படுத்தக் கூடியது. அது. நமது அனைத்து மகிழ்ச்சிகளையும் தின்று, கோரமாக இளிக்கும் ஓர் எலும்புக்கூடு போலச் செயலாற்றும். திரையரங்கத்திற்குப் போய் நாம் சிரித்து மகிழ்வோம். ஆனால், அது தனது தீனமான ஒரு விரலைச்சுட்டி நம்மைக் குற்றம் சாட்டும். நாம் கிடுகிடுவென்று கடைசி ரயிலைப் பிடிக்க ஓடுவோம். அங்கே தளமேடையில் ரயிலுக்குக் காத்திருக்கும் போதும் நம்மை விடாது பின்தொடர்ந்து, "உன் இளமையை எல்லாம் என்னப்பா செஞ்ச? இந்த வயசுல நீ இப்ப என்ன செஞ்சிகிட்டிருக்க?" என்று கேட்டுத் துளைக்கும். இவ்வகையான உணர்வுகள் வாழ்க்கையில் சகஜம் என்றும் அத்துடன்தான் வாழ்ந்து தீர்க்க வேண்டும் என்றும் நீங்கள் நினைக்கலாம் உண்மை!

ஆனால், ஒவ்வொரு செயலுக்கும் பல்வேறு கட்டங்கள் உண்டு. ஒருவருக்கு மெக்காவுக்குப் போய்வரும் ஆசை இருக்கலாம். மெக்காவுக்குப் போகவேண்டும் என்று இடைவிடாது அவரின் மனசாட்சி சொல்லிக் கொண்டிருக்கும். சுற்றுப்பயண அலுவலகத்தின் துணையுடனோ சுயமாகவோ ஒருமுறை மட்டுமே முயன்றால் போதாது. அதற்குப் பல்வேறுகட்ட முயற்சிகள் தேவையாக இருக்கிறது. நினைத்த மாதிரியே மெக்காவுக்குப் போய்ச் சேரவும் சேரலாம். செங்கடலை எட்டும் முன்னரே அவர் இறக்கவும் இறக்கலாம். அவரது ஆசையோ நிறைவேறாமலே இருக்கும். ஆனால், மெக்காவுக்குப் போக நினைக்கும் அவர் தன்னுடைய ஊரைவிட்டே கிளம்பாமல் இருப்பதுதான் பெரும்பாலும் நடக்கும் வேடிக்கை.

நம் ஊரைவிட்டே கிளம்புவதில்லை நாம். பக்கத்தில் இருக்கும் சுற்றுலாப் பயண அலுவலகத்திற்குப் போய் சுற்றுப்பயண விவரங்களைக் கூடக் கேட்பதில்லை. நமக்கு இருக்கும் காரணம் என்ன தெரியுமா? அதைக் காரணம் என்றுகூடச் சொல்ல முடியாது. சால்ஜாப்பு என்றோ சப்பைக்கட்டு என்றோ தான் சொல்ல வேண்டும். ஒரு நாளைக்கு இருபத்துநான்கு மணிநேரம் மட்டுமே இருக்கிறது என்பதுதான் அந்த ஒரே அங்கலாய்ப்பு.

நாம் நமது தெளிவற்ற குறிக்கோளை ஆழ்ந்து ஆராய்ந்தால் அது, அந்தச் சோம்பேறி மடம் கட்டிய கதை, சால்ஜாப்பு கிளம்பிய வேர் நமக்குப் புலப்படும். அதாவது, அதைச் செய்ய வேண்டும் என்ற குறிப்பிட்ட யோசனையில் ஆரம்பித்திருக்கிறது. நம்மிடையே படிந்துள்ள யோசனைகளைக் கடந்தும் நாம் ஏதேனும் செய்யவேண்டும். காலம் காலமாக நம்மில் படிந்திருக்கும் வாழ்க்கைக்கு வேண்டியதைச் சம்பாதிப்பது, சௌகரியங்களைத் தேடுவது, கடன்களை அடைப்பது, சேமிப்பது, சொத்துக்களையும் வாய்ப்புக்களையும் பெருக்குவது, மற்றும் அதற்கு வேண்டிய முயற்சிகள். என்பதுபோன்ற எழுதப் பட்டதும் படாததுமான விதிகள் எல்லாமே, மாற்றியெழுதப் படாமல் இருக்கின்றன. இந்த வேலைகள் கடினமானவை தான்! நம்மில் வெகு சிலரே சாதித்திடும் வேலைகள்! நம்மை மீறியவையாகத் தோற்றம் காட்டும் வேலைகள்! இருந்தும், நாம் அவற்றில் வென்றாலும் தோற்றாலும் மேற்கூறிய 'எலும்புக்கூடு' மட்டும், அனுபவப் பாடம் என்கிறாப்போல. நம்முடனேயே இருக்கும்.

நம் திறனையும் மீறிய செயல் என்று நமக்குத் தெரிந்தாலும். நம் சக்தியால் முடியாதவை என்று தெரிந்திருந்தாலும், நாம் எளிதில் திருப்தியடையக் கூடாது. செலவிட்டுக் குறைந்து போயிருக்கும் நமது சக்திக்கு மேலும் கொஞ்சம் செய்ய வேண்டியிருக்கிறது.

ஆமாம், இது சத்தியம். எல்லோரையும் போல தினசரி செயல் திட்டங்களைக் கடந்தும் ஏதேனும் சாதிக்கும் ஆசை வாழ்க்கையில் குறிப்பிட்ட கட்டத்தைக் கடந்தவர் அனைவருக்குமே வரும்.

அந்த ஆசையை நிறைவேற்றிடும் முயற்சியை மேற்கொள்ளும்வரை மேற்கூறிய அசௌகரியமான காத்திருப்பு இருக்கும். அது நம் ஆன்மாவின் அமைதியைக் குலைத்தபடியே இருக்கும். அந்த ஆசைக்கு எண்ணற்ற பெயர்கள் உண்டு. அறிவுத்தேடல் எனும் பிரபஞ்ச ஆசை என்பது அவற்றில் ஒன்று. இந்த ஆசை மிகவும் உறுதியானது. எந்த அளவிற்குத் தெரியுமா? வழக்கமான தினசரி வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த ஆசையால் உந்தப்பட்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறவும், அறிவை மேலும் அதிகமாகத் தேடவும் நினைக்கிறார்கள். ஹர்பெர்ட் ஸ்பென்ஸர் உலகிலேயே மகத்தான மனம் கொண்டவர் என்றறியப்படுபவர். அவரே இந்த ஆசைக்குள் அடிக்கடி விழுந்தபடியிருந்தார்.

வழக்கமான திட்டமிட்டதுபோன்ற வாழ்க்கையைக் கடந்தும் வாழ ஆசைப்படும், இந்த ஆசைகுறித்த புரிதல் இருக்கும் நிறைய ஆசாமிகள் பெரும்பாலும் அறிவுப்பசி கொண்டவர்கள். அவர்கள் நிறைய வாசிக்கவும் தெரிந்துகொள்ளவும் விரும்புகிறார்கள். இவர்கள் இலக்கிய ஆர்வம் மிகுந்தவர்களாகவும் உருவாகிறார்கள். ஆனால், இலக்கியம் மட்டுமே அறிவுலகைத் தன்னுள் அடக்கியதல்ல என்பதை நான் இங்கே சொல்லியே ஆகவேண்டும். இலக்கியத்தைக் கடந்து அப்பாலும் சுயமுன்னேற்றத்துக்கான, அறிவுப்பசியைத் தீர்க்கும் ஓர் உலகம் விரிகிறது. அவற்றைப்பற்றி நான் பிறகு விரிவாகச் சொல்வேன். இலக்கிய ஈடுபாடு இல்லாதவர்களுக்கு இங்கு ஒன்றே ஒன்றைச் சொல்லிக்கொள்ளவிழைகிறேன்.

அறிவுதாகத்தைத் தீர்க்க இலக்கியக் கிணறு மட்டும் தான் உதவும் என்று நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டாம்!

அன்றாட வாழ்வில் ஒருவித அதிருப்தி மற்றும் அசௌகரியத்துடனேயே வாழ்ந்து வருகிறீர்கள், அதற்கு முக்கியக் காரணம் தினமும் செய்ய நினைக்கும் பணிகளில் பலவற்றை முடிக்காமல் விடுகிறீர்கள், அதிக நேரமிருக்கும் போது அவற்றைச் செய்ய நினைக்கிறீர்கள், என்றெல்லாம் உங்களை நம்ப வைத்தாயிற்று. இந்நிலையில் இப்போது, 'அதிக நேரம்' என்றைக்கும் கிடைக்காது எனும் முகத்தில் அறையும் உண்மை உங்களின் முன்னால் இருக்கிறது! உங்களுக்குரிய நேரம் உங்களிடம்தான் இருக்கிறதே. இப்போது வேலையை அரைகுறையாக விட்டுவிட்டதால் ஏற்படும் அந்த அசௌகரிய ஏமாற்ற உணர்வை உதறித் தள்ளிவிடுவது எப்படி என்ற ரகசியத்தை உங்களுக்குச் சொல்லட்டுமா?

மிக அற்புதமான ரகசியம் அது. அதை நான் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை. அப்படியான எந்த எதிர்பார்ப்பும் என்னில் இல்லை. வேறு யாரும் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் கூட எனக்கில்லை. இன்னும் அது கண்டுபிடிக்கப் படவேயில்லை! இதுவரை நான் சென்னதைக் கேட்டதில் உங்களுக்குள் செத்துக்கிடந்த நம்பிக்கையில் ஒருவித உயிர்ப்பை உணர்ந்திருப்பீர்கள். ஒருவேளை நீங்கள், இத்தனை நாளாக நான் என் சலிப்பையும் அலுப்பையும் விரட்டவென்று தேடித்தேடித் தோற்றுப்போன நேரத்தில் இந்த மனுசன் எனக்கு ஒரு சுலப வழியைச் சொல்லப் போகிறான்" என்று கூட நினைத்திருக்கலாம். அடடா... ஆனால் அந்த மாதிரியான எந்த எளிய அல்லது சுலப வழியும் இல்லையே. மெக்காவுக்கான பாதை அங்கே போய்ச் சேருவோமா இல்லையா என்றே உறுதியாகத் தெரியாதபடி கரடுமுரடாகவும் கடினமாகவும் தானே இருக்கிறது.

ஒருவர் முழுமையாக வாழ ஆசைப்பட்டு தன் வாழ்வைச் சீர்படுத்த முயற்சிக்கும்போது மிக முக்கியமாக கவனத்தில்கொள்ள வேண்டியது இதில் இருக்கக்கூடிய சவாலைத்தான். தியாகங்களும் முடிவற்ற முயற்சிகளும் கொண்ட இந்த வேலை மிகவும் சவாலானது என்ற புரிதல்மட்டும் முதலில் இருந்து விட்டால் நமக்குள் வரக்கூடிய ஓர் அமைதி மிக இன்றியமையாதது. இதை மேலும் அதிகம் அழுத்திச் சொல்லவும் என்னால் முடியாது.

ஒரு காகிதத்தில் பேனாவைக் கொண்டு உங்களின் கால அட்டவணையை முறைப்படுத்திக் கொண்டு உங்களின் குறிக்கோளை அடைய நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள். அந்த யோசனையே வேணாம். ஊக்கக் குறைவுகளுக்கும் மாயைகளுக்கும் நீங்கள் நிச்சயம் தயாராகவே இருக்க வேண்டும். பெரிய முயற்சியில் கிடைக்கும் சிறிய பலனில் அதிருப்தியடையாதவர்களும் இதனால் பலனடைய முடியாது. ஆகவே அத்தகையோர் பேசாமல் நீட்டிப் படுத்துக் கொள்ளுங்கள். வழக்கம்போல உங்களின் 'இருத்தல்' மட்டும் தொடரட்டும். சும்மா இருத்தலே சுகம்.

மிகவும் மனச்சோர்வும் சுவாரஸ்யமின்மையும் கொண்ட அந்தநிலைதான் எத்தனை வருத்தத்திற்கு உரியது? இருந்தாலும், அதுவும் பரவாயில்லை என்றே நான் சொல்வேன். ஏனெனில், இந்தவித இருத்தலில் இருந்து இருந்து, பின்னர் அதைக் கடந்துதான் சொந்தச் செயல் திட்டத்தையையும் மிஞ்சிச் சாதிக்கும் ஆர்வமே வரும். ஆகவே, மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திடும் இந்த 'இருத்தல்' எனக்கும் பிடிக்கும்.

"சரி, நான் போருக்குத் தயார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சொன்னதையெல்லாம் யோசித்து விட்டேன். நான் எப்போது ஆரம்பிக்கலாம்?", என்று நீங்கள் கேட்டீர்களானால், "உடனே! இப்பவே!" என்பதுதான் என் பதில். இதை ஆரம்பிக்க எந்த மந்திரமோ மாயமோ கிடையாது. குளத்து நீர் மிகவும் குளிர்கிறது என்று நீரில் குதிக்காமல் நீச்சல்குளத்தின் கரையிலேயே நின்று கொண்டிருப்பவனுக்கு எப்படி நீச்சல் பயில முடியும்? முதலில் நீருக்குள் இறங்க வேண்டும். பிறகு தான் சில முயற்சிகள் மேற்கொண்டு நீந்தக் கற்கலாம்.

நான் முன்பே சொன்னதுபோல காலத்தின் தொடர்வரவு என்பது எப்போதுமே அழகுதான். அதை நாம் முன்பே செலவிட முடியாது. அடுத்த ஆண்டை, அடுத்த நாளை, ஏன் அடுத்த மணிநேரத்தை நாம் முன்பே செலவிட முடியுமா? ஆனால், அது எதிர்காலத்தில் துல்லியமாக, குறைவற்று, வீணாகாமல், செலவாகாமல் உறுதியாக நமக்காகக் காத்திருக்கும். ஒவ்வொரு மணிநேரமும் நீங்கள் திருந்த நினைத்தால் திருந்தலாம். வேறு எதுவுமே உங்களுக்காகத் தயாராக அடுத்த வாரத்திலோ நாளைக்கோ காத்திருக்காது. நீச்சல்குளத்தின் நீர் அடுத்த வாரம் வெதுவெதுப்பாக இருக்காது. எப்படி இருக்குமோ தெரியாது. சொல்லப் போனால், இன்னும் அதிகக் குளிராகக்கூட ஆகலாம்.

ஆனால், நீங்கள் ஆரம்பிக்கும் முன்னர், உங்கள் காதில் சில சொற்களை நான் ரகசியமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.

மிக முக்கியமாக உங்களின் சொந்த உற்சாகத்திற்கு எதிரான எச்சரிக்கை இது. நல்லது செய்ய நினைக்கும்போது ஏற்படக்கூடிய ஊக்கம், மிகவும் சூது நிறைந்ததும் வழிதவறக் கூடியதுமானது. அது திடீரென்று செயல் ஒழுங்குகளுக்காக அலறும். அதன் வெறியை முதலில் உங்களால் தீர்க்க முடியாது. மேலும் மேலும் அதிகமான செயல்களைக் கேட்கும் அது. மலைகளையும் ஆறுகளையும் தகர்க்க நினைக்கும். வியர்வை ஆறாகப் பெருகும் வரை திருப்தி அடையாது அது. அதற்குப் பிறகு அடிக்கடி புருவத்தின் மேல் துளிர்க்கும் வியர்வையை உணர்ந்து, "போதும்டா சாமி", என்று சலிப்பாகக்கூட ஓரிரு வார்த்தைகள் பேசும் முன்னரே சடாரென்று களைத்து இறந்துபோகும்.

ஆரம்பத்தில் உற்சாக மிகுதியால் ஒரேயடியாக உங்கள் சக்திக்கு மீறி செயல்படாதீர்கள். குறைவாகச் செயல்பட்டு நிறைவு காணுங்கள். விபத்துக்களை சகஜமாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கக் கூடிய மனித இயல்புக்கு, சுபாவத்துக்கு இடம் கொடுங்கள்.

சுயமதிப்பிற்கும் தன்னம்பிக்கைக்கும் அதிக சேதாரமில்லாத அளவில் ஒன்றிரண்டு தோல்விகள் ஏற்படுவதில் ஒரு பிரச்சனையுமில்லை. ஆனால், ஒரு தோல்வியை விட இன்னொரு தோல்வியோ, ஒரு வெற்றியை விட இன்னொரு வெற்றியோ பெரியதில்லை. உருப்படாமல் போனவர்களில் பெரும்பான்மையினர் அளவிற்கு அதிகமாக முயற்சித்தவர்கள்தான்! துவக்கத்தில் ஏற்படும் தோல்விகள்தான் ஊக்கத்தை அழிக்கக் கூடியது. ஆகவே, இருபத்துநான்கு மணிநேரத்திற்குள் நிறைவாகவும் முழுமையாகவும் சௌகரியமாகவும் வாழ நினைக்கும்போது உடனடியாக நேரக்கூடிய தோல்விகளைத் தவிர்த்தல் மிகவும் நல்லது.

சின்ன வெற்றியைவிட பெரிய தோல்வியே மேல் எனும் பெருவியாபாரிகளின் தத்துவத்தில் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை. சின்னச் சின்னத் தோல்விகளில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு. பெரிய தோல்வி எங்குமே நம்மை இட்டுச் செல்லாது. ஆனால், கண்டிப்பாகச் சின்ன வெற்றியானது பெரிய வெற்றிக்கு தான் நம்மை இட்டுச் செல்லும்.

ஆகவே, ஒரு நாளில் இருக்கும் கால அளவைக் கணக்கெடுப்போம். உங்களின் நாள் முழுவதும் இடைவெளியே இல்லாது நிரம்பியிருக்கிறது என்கிறீர்களா? எப்படி? நீங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வளவு செலவிடுகிறீர்கள்? சராசரியாக ஏழு மணிநேரம் செலவிடுவீர்களா? உங்களின் தூக்கத்துக்கு ஏழு மணிநேரம் செலவாகிறதா? சரி, நான் தாராளமாகவே இன்னும் இரண்டு மணிநேரத்தைக் கூட்டிக் கொள்கிறேன். இந்தக் கணத்தில், உங்களிடம் மீதியிருக்கும் எட்டு மணிநேரத்துக்கு நீங்கள் கணக்கு காட்டுங்கள் என்று நான் உங்களைக் கேட்கிறேன்!

நேரத்தைச் செலவிடும் உயரிய யுத்தி கைவரப் பெறவேண்டுமானால் செய்யக் கூடியவை என்ன? இதற்கு நான் குறிப்பிட்ட ஓர் உதாரணத்தை முன்னிருத்தித் தான் பேசவேண்டியிருக்கிறது. உண்மையில் சராசரி ஆள் என்ற ஒருவர் இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அவனளவில் சிறப்பானவன். நாம் பார்க்கப் போவது ஒரே ஒரு சராசரி உதாரணம் தான். ஆனாலும், அது ஒன்றே போதுமானதாக இருக்கிறது. பத்து முதல் ஆறு மணி வரை அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெருநகரவாசியை எடுத்துக் கொள்வோம். காலையும் மாலையும் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையேயான இவர் பயணத்திற்கு பதினைந்து நிமிடம் செலவிடுகிறார். இதை விட அதிகநேரம் வேலையிலும் பயணத்திலும் செலவிடுவோரும் இருக்கிறார்கள். அதே போல குறைவாகச் செலவிடுவோரும் இருக்கிறார்கள். ஆனால், நாம் சராசரியைக் குறித்துப் பேசுகிறோம்.

இருத்தலின் பொருளாதாரக் கோணம் இப்போது நமக்குத் தேவையில்லாத ஒன்று. நம்மைப் பொறுத்தவரை வாரத்துக்கு ஓராயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு குமாஸ்தாவும் ஒரு கோடிஸ்வரன் அளவிற்கு சௌகரியமாகவே வாழ்கிறார்.

இப்போது இந்த உதாரண மனிதன் செய்யும் ஒரே பெரிய தவறு என்ன என்று பார்த்தோமானால், அவன் தன் வேலையை வெறுப்பதில்லை. ஆனால், அதேசமயம் ஈடுபாட்டுடன் செய்வதில்லை. பெரும்பாலான நேரங்களில் ஒருவருக்கு (மேற்கூறிய உதாரண மனிதர்) தன் பணியிலோ வியாபாரத்திலோ ஆழ்ந்த ஈடுபாடு இருக்காது. அவருக்கு வெறுப்பு ஏற்படவில்லை என்பதே சின்ன ஓர் ஆறுதல். வேலையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாமதமாகத் துவங்கி அரைமனதோடு இயங்குவார். மிகவும் மகிழ்ச்சியுடன் சீக்கிரமே வேலை நாளை முடித்துக் கிளம்புவார். வேலையில் இருக்கும்போது அவரின் இயங்கு சக்தி அதன் முழுத்திறனோடு இருப்பது அரிதுதான். (என்னிடம் கோபம் கொள்ளும் வாசகர்கள் என்னைக் குற்றம் சாட்டுவார்கள். ஆனாலும், இந்த நம்பிக்கையை நான் மாற்றிக்கொள்ளப் போவதில்லை).

இருந்தும் இந்த மனிதர் தொடர்ந்து பத்திலிருந்து ஆறு வரையிலான நேரத்தைத்தான் தனது முக்கிய 'நாள்' எனக் கொள்கிறார். அதற்குப் பிறகும் அதற்கு முன்பும் இருக்கும் காலத்தை முன்னுரையாகவும் பின்னுரையாகவும் கொள்கிறார். இவ்வகையான மனோபாவம் அவர் அறியாமல் அனிச்சையாகவே அவரில் இருக்கிறது. அந்த மணித்தியாலங்களில் அவருடைய ஈடுபாடு சுத்தமாக அழிந்து போய்விடுகிறது. அதன் காரணமாக, அந்த நேரத்தை அவர் வீணாக்கா விட்டாலும் அவற்றைக் கவனத்தில் கொள்வதில்லை. மணித்துளிகளை எண்ணுவதுமில்லை. அதை வெறும் விளிம்பாக எண்ணிக் கொள்கிறார்.

"ஏதோ ஓடுது சார். இன்னிக்குப் பாடு ஓடினாச் சரின்னு இருக்கு வேற என்ன", என்று நாட்களை வெறுமே 'ஓட்டும்' இந்த மனோபாவாம் மிகவும் அபத்தமானதும் ஆரோக்கியமற்றதுமாகும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கும் அதற்குள் அடங்கியிருக்கும் சில நடவடிக்கைகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒருவர் தன் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியை இப்படியே கடத்தினால் 'வாழ' முடியுமா? நிச்சயம் முடியாது. வெறுமனே 'இருக்க'த் தான் முடியும்.

நமது உதாரண மனிதர் முழுமையாக வாழ நினைக்கிறார். அப்படி நினைக்கும் அவர் முதலில் அவரின் ஒரு நாளுக்குள் இன்னொரு நாளைத் திட்டமிட வேண்டும். இதுதான் முக்கிய சூட்சமம். ஒரு டப்பாவுக்குள் இருக்கும் சீனப்பெட்டியைப் போல. நாளுக்குள் இருக்கும் இந்த நாள் மாலை ஆறு மணிக்குத் துவங்கி அடுத்த நாள் காலை பத்து மணிவரைக்கும் நீளும். அந்த நேரத்தில் உடலையும் ஆன்மாவையும் நட்புவட்டத்தையும் வளர்ப்பதைத் தவிர பதினாறு மணிநேரம் இருக்கும் இந்த ஒரு நாளில் அந்த ஒவ்வொரு மணிநேரத்திலும் அவருக்குச் செய்ய ஒன்றுமே இல்லை. அப்போது அவர் மிகவும் வேலையற்றிருக்கிறார். ஆகவே, சம்பளம் இல்லை. லௌகீகங்களில் ஈடுபடாமல் சுயவேலையில் இருக்கும் ஒருவரைப் போல நிம்மதியாக இருக்கிறார். இது தான் அவரின் மனோபாவம். இந்த மனோபாவம் மிகவும் முக்கியமானதும் கூட. பெரிய அளவில் பதிவுவரி செலுத்தி வாங்கும் அவரின் பெருநிலத்தின் பெருமானத்தைவிடவும். அந்த மனிதரின் வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றி இந்த மனோபாவத்தில் தான் அடங்குகிறது.

என்ன? அந்த பதினாறு மணிநேரத்தில் செலவிடும் நேரமும் சக்தியும் வேலையின் எட்டு மணிநேரத்தின் வேலைத்தரத்தைக் குறைக்கும் என்கிறீர்களா? அப்படியில்லை. மாறாக, வேலைத்தரத்தைக் கூட்டத்தான் உதவும். கால்கைகளைப் போலில்லை மூளை. மூளையின் செயற்திறன் தொடர்ந்து செயலாற்றும் ஆற்றல் பெற்றது என்பதை நீங்கள் முதலில் நம்ப வேண்டியது. மூளைக்குத் தேவையானதெல்லாம் மாற்றம் தான். தூக்கம் தவிர வேறு ஓய்வு அதற்கு இல்லை.

காலையில் படுக்கையை விட்டு எழுந்து கொண்டதிலிருந்து கையில் உங்களுக்கு உங்களுக்கே உரியதான பதினாறு மணிநேரத்தை எப்படிச் சரியாகச் செலவிடலாம் என்று ஆராய்வோம். நீங்கள் செய்து கொண்டிருப்பதையும் நீங்கள் செய்ய வேண்டியதையும் மட்டுமே நான் இப்போது சொல்லப் போகிறேன். வாழ்விடங்களை உருவாக்கும் நோக்கில் அழிக்கப் பட்ட மரங்களை மறுநடவு செய்யும் விதத்தில் நேரத்தை எப்படி ஆங்காங்கே நடுவது என்பதைக் குறித்து நான், அப்புறம்தான் பேசபோகிறேன்.

9.10க்கு வீட்டை விட்டுக் கிளம்பும் முன்னர் நமது உதாரண மனிதர் ஒவ்வொரு நொடியையும் வீணாக்குகிறார் என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். பெரும்பான்மையான வீடுகளின் இம்மனிதர் 9.00 மணிக்கு எழுந்து 9.10க்குள் தயாராகி அவசரமாகப் பசியாறி ஓடுகிறார். ஆனால், வாயிற் கதவை விட்டு வெளியேறிய நொடியிலிருந்து அவரின் மூளை கிட்டத்தட்ட செயலிழந்து போகிறது. அது 'கோமா'வில் விழுகிறது.

ரயில் நிலையத்தில் ரயிலுக்குக் காத்திருக்கும் போது கொஞ்சம் நேரம் வீணாகிறது. இப்படித் தளமேடையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடியே நூற்றுக்கணக்கான நாட்கள் பணத்தால் ஈடுகட்ட முடியாத நேரத்தை வீணாக்குகிறார். ரயில்வே போக்குவரத்துத் துறை எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் கவனித்துக் கொண்டிருக்கிறது. உதாரண மனிதர் நூற்றாயிரக்கணக்கான மணிநேரங்களை கொஞ்சமும் யோசிக்காமல் வீணடிக்கிறார். உண்மையில் இதைத் தடுக்க அவருக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் தோன்றவில்லை.

அவர் கையில் இருக்கும் நேரம் ஒரு முழு ஐநூறு ரூபாய்த் தாள் என்று வைத்துக் கொள்வோம். அதைச் சில்லறையாக மாற்றிக் கொள்வதுதான் அவருடைய முதல் வேலை. அப்படி சில்லறையாக மாற்றும்போது அவர் நிறைய சில்லறைகளைச் சிந்தி வீணாக்குகிறார்.

சில்லறை கொடுப்பவர் உதாரண மனிதரிடம், "உங்களுக்கு சில்லறை கொடுக்கிறேன். ஆனால், மூன்று சதவீதம் கட்டணம் வசூலிப்போம்", என்று சொன்னால் நமது உதாரண மனிதன் ஆச்சரியப் படுவானோ? இருக்கலாம். ஆனால், இதைத் தான் ரயில்வே போக்குவரத்துத் துறை இவனிடம் செய்கிறது. அதுவும் தினமும் இரண்டு முறை.

மிகச் சில்லறை விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன் என்கிறீர்களா? ஆமாம். ஆனால், இது எப்படி முக்கியத்துவம் பெறுகிறது என்று நான் பிறகு சொல்வேன்.

இப்போது நீங்கள் நாளிதழை வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறத் தயாரா?

மூலம் : ஆர்னால்ட் பென்னெட்
தமிழில் : ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர் அவர்களின் இதர படைப்புகள்