ஒரு ஞாயிற்றுக்கிழமை ஏழை விவசாயி ஒருவன் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது அவனது பால்ய நண்பன் அவனை காண வந்தான்.
விவசாயி “வா!வா! இத்தனை வருடங்களாக எங்கே போயிருந்தாய்? உள்ளே வா, நான் சிலரை சந்திக்க போய்க்கொண்டிருக்கிறேன். இப்போது விட்டுவிட்டால் அவர்களை திரும்ப பிடிப்பது கஷ்டம். அதனால் நீ வீட்டில் சிறிதுநேரம் ஓய்வெடுத்து கொண்டிரு. ஒரு மணிநேரத்தில் நான் திரும்பி வந்து விடுவேன் வந்தபின் நாம் பேசலாம் ” என்றான்.
அந்த நண்பன் “இல்லையில்லை, நானும் உன்னுடன் வருகிறேன். ஆனால் என்னுடைய உடை மிகவும் அழுக்காக இருக்கிறது. நீ எனக்கு வேறு மாற்றுடை கொடு. நான் மாற்றிக் கொண்டு உன்னுடன் வருகிறேன்,’’ என்றான்.
பல நாட்களுக்கு முன் அரசர் சில விலை மதிப்பான ஆடைகளை விவசாயிக்கு பரிசாக கொடுத்திருந்தார். அவன் அதை விசேஷ காலங்களில் அணிய என்று பாதுகாப்பாக வைத்திருந்தான். அதை எடுத்து சந்தோஷமாக நண்பனிடம் கொடுத்தான்.
நண்பன் மேல்அங்கி, தலைப்பாகை, வேட்டி, அழகான ஆடம்பரமான செருப்பு என எல்லாவற்றையும் போட்டுக் கொண்டான். அவன் இப்போது அரசனைப் போல காட்சியளித்தான். தன்னுடைய நண்பனை பார்த்த விவசாயிக்கு சிறிது பொறாமை ஏற்பட்டது. ஒப்பிடும்போது இவன் ஒரு வேலைக்காரன் போல தோன்றினான். தன்னுடைய அழகிய ஆடைகளை கொடுத்து, தான் தவறு செய்துவிட்டோமோ என்று வருத்தப்பட்டான். தன்னை தாழ்வாக உணர்ந்தான். இப்போது எல்லோரும் தன் நண்பனையே பார்ப்பார்கள், தான் ஒரு வேலைக்காரன் போல தோன்றுவோம் என நினைத்தான்.
அவன் தன்னை நல்ல நண்பன் என்றும் தெய்வம் போன்றவன் என்றும் தன் மனதை தேற்றிக் கொள்ள முயற்சித்தான். தெய்வத்தைப் பற்றியும் நல்ல விஷயங்களை பற்றியும் மட்டுமே நினைப்பதாக முடிவு செய்தான். `நல்ல அங்கி, விலையுயர்ந்த தலைப்பாகையில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? இதனாலென்ன?’ என நினைத்தான். ஆனால் அவன் என்ன முயற்சி செய்தாலும் திரும்ப திரும்ப அங்கியும் தலைப்பாகையும் தான் அவன் மனதில் அலை மோதின.
அவர்கள் நடந்து செல்லும்போது வழியில் கடந்து செல்வோர் அனைவரும் நண்பனையே கவனித்தனர். யாரும் விவசாயியை கவனிக்க வில்லை. அதனால் அவன் வருத்தமடைந்தான். தன் நண்பனுடன் பேசிக் கொண்டே இருந்தாலும் அவனுள்ளே அங்கியும் தலைபாகையுமே ஓடிக்கொண்டிருந்தன.
போகவேண்டிய வீட்டிற்கு போய் சேர்ந்தவுடன் அவன் தன் நண்பனை அறிமுகம் செய்தான். “இவன் என் நண்பன், சிறுவயதுமுதல் நண்பன், மிகவும் அன்பானவன்.’’ என்றவன் திடீரென,``ஆனால் இந்த துணிமணிகள் என்னுடையவை’’ என்றான்.
நண்பன் திகைத்து நின்றான். வீட்டிலுள்ளவர்கள் ஆச்சரியப் பட்டனர். இதை சொல்லியிருக்கக் கூடாது என உணர்ந்தான். ஆனால் காலம் கடந்து விட்டது. அவன் தனது தவறுக்காக வருத்தப்பட்டான், உள்ளுக்குள்ளே தன்னை கடிந்து கொண்டான்.
அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தபின், தன் நண்பனிடம் அவன் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். நண்பன், “நான் திகைத்துவிட்டேன். அந்தமாதிரி ஏன் சொன்னாய்’’ எனக் கேட்டான்.
விவசாயி,“மன்னித்துவிடு, வாய் தவறி விட்டது. நான் தப்பு செய்து விட்டேன்.’’ என்றான்.
ஆனால் நாக்கு பொய் சொல்லாது. மனதில் இருப்பது மட்டுமே வாயிலிருந்து குதித்து வெளி வரும். நாக்கு ஒருபோதும் தவறு செய்யாது. விவசாயி, “என்னை மன்னித்து விடு. நான் எப்படி அந்தமாதிரி சொன்னேன் என எனக்கு தெரியவில்லை’’ என்றான். ஆனால் அந்த எண்ணம் தனது மனதிலிருந்து தான் வெளி வந்தது என்பது மிக நன்றாக அவனுக்குத் தெரியும்.
மற்றோர் நண்பனின் வீட்டிற்கு போனார்கள். இப்போது விவசாயி இந்த துணிமணிகள் தன்னுடையது என சொல்லக்கூடாது என்று உறுதியான தீர்மானம் செய்துகொண்டான். தனது மனதை நிலைப் படுத்திக் கொண்டான். அந்த நண்பனின் வீட்டு கேட்டை அடையும் போது அந்த துணிமணிகள் பற்றி எதுவும் பேசக் கூடாது என மாற்றமுடியாத தீர்மானம் செய்துகொண்டான்.
அந்த அப்பாவி மனிதனுக்கு, எதுவும் சொல்லக் கூடாது என தீர்மானம் செய்ய செய்ய, அந்த உறுதியான தீர்மானமே இந்த துணிமணிகள் என்னுடையவை என்பதை உள் மனதில் ஆழமாக கொண்டு செல்லும் என்பது தெரியாது. மேலும் இந்த உறுதியான தீர்மானம் எங்கு செய்யப் படுகிறது.
ஒருவன் பிரம்மச்சரிய விரதம் பூணும்போது அவன் தன்னுடைய காம உணர்ச்சியை வலுக்கட்டாயமாக உள்நோக்கி தள்ளுவது போல, உணவு கட்டுப்பாட்டில் இருப்பதாகவோ, பட்டினி கிடப்பதாகவோ முடிவு செய்தால் அவன் அதிகமாக சாப்பிடும் ஆசையை அடக்கி வைப்பது போல, இது போன்ற முயற்சிகள் உள்ளே தவிர்க்கமுடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தும். எதிர்விளைவை ஏற்படுத்தும். நமது பலவீனம் எதுவோ அதுவே நாம். ஆனால் நாம் அதை அடக்கி ஆள முடிவு செய்கிறோம். அதை எதிர்த்து போராட தீர்மானிக்கிறோம். – இது தானாகவே ஆழ்மனதில் தகராறு உருவாக ஒரு அடிப்படையாக அமைகிறது.
ஆகவே உள்ளே இந்த சச்சரவுடன், நமது விவசாயி அந்த வீட்டிற்க்குள் சென்றான். அவன் மிகவும் ஜாக்கிரதையாக, ‘இவன் எனது நண்பன்.’ என்றான். யாரும் அவன் சொல்வதை கவனிக்கவில்லை. எல்லோரும் நண்பனையும் அவன் துணிமணியையுமே ஆச்சரியத்தோடு கவனித்தனர். இது என்னுடைய அங்கி இது என்னுடைய தலைப்பாகை என அவனுக்கு தோன்றியது. ஆனால் உடையை பற்றி பேசுவதில்லை என்ற தீர்மானத்தை நினைவு படுத்திக் கொண்டான். அவன் உறுதி எடுத்திருந்தான்.
எல்லோரிடமும் எளிமையானதோ அழகானதோ உடைகள் உண்டு. இது ஒரு விஷயமே அல்ல என தனக்குதானே விளக்கம் கூறிக் கொண்டான். ஆனால் அந்த உடைகள் அவனது கண்களுக்கு முன் பெண்டுலம் போல ஆடிக் கொண்டிருந்தது.
அவன் மறுபடியும் அறிமுகம் செய்தான். “இவன் எனது நண்பன். சிறுவயது முதலே நண்பன். நாணயமானவன். ஆனால் இந்த உடைகள் அவனுடையவைதான், என்னுடையவை அல்ல”
எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். யாரும் இப்படி ஒரு அறிமுகத்தை கேட்டதேயில்லை. “உடைகள் அவனுடையவைதான், என்னுடையவை அல்ல.”
அங்கிருந்து வந்தபின் திரும்பவும் மனபூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டான். ‘மிகப் பெரிய தப்பு!’ என்று அவன் ஒத்துக்கொண்டான். இப்போது அவன் என்ன செய்யக்கூடாது, என்ன செய்ய வேண்டும் என்பதில் குழப்பமடைந்தான். ‘உடைகள் இதற்கு முன் இதுபோல நினைவில் இருந்ததேயில்லை. கடவுளே எனக்கு என்ன நடந்தது.?’
அவனுக்கு என்ன நடந்தது ? அவன் தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்ட முறையை கடவுளே முயற்சி செய்தால் கூட அந்த உடைகளை பற்றிய நினைப்பு கடவுளையும் பற்றிக்கொண்டு விடும். அந்த செயல்முறை அப்படிப் பட்டது என்பது அந்த அப்பாவி விவசாயிக்குத் தெரியாது.
நண்பன் மிகுந்த மன வருத்தத்துடன்,“இனி நான் உன்னுடன் வரவில்லை” என்றான். விவசாயி அவன் தோளைப் பற்றி, “அப்படிச் செய்யாதே! என் வாழ்நாள் முழுவதும் ஒரு நண்பனிடம் இப்படி நடந்து கொண்டேனே என சங்கடத்துடனேயே நான் இருக்க நேரிடும். நான் சத்தியமாக திரும்பவும் இந்த உடைகளை பற்றி குறிப்பிட மாட்டேன். இதயபூர்வமாக, கடவுள் சத்தியமாக நான் உடைகளை பற்றி எதுவும் கூறவே மாட்டேன்.” என்றான்.
ஆனால் ஒருவர் சத்தியம் செய்யும்போது அதைப் பற்றி அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு உறுதியான முடிவு எடுக்கும்போது அடி ஆழத்தில் வேறு ஏதோ அதனுடன் இணைந்துள்ளது. உறுதியான முடிவு மேல் மட்ட மனதில் எடுக்கப் படுகிறது, அதற்கு எதிரானது உள் மனதில் எங்கோ செருகப் படுகிறது. மனம் பத்து பிரிவுகளாக இருந்தால், மேற் பகுதியில் உள்ள ஒரு பிரிவு மட்டுமே முடிவு செய்கிறது. ஆனால் மீதி உள்ள ஒன்பது பிரிவுகளும் அந்த முடிவுக்கு எதிராக உள்ளன. பிரம்மச்சரியம் ஒரு பிரிவால் எடுக்கப் படும் முடிவு எனில் மீதி உள்ள மனம் அனைத்தும் உடலுறவுக்கு அலைகின்றன. இறைவனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஈடு செய்யமுடியாத அந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்துக்காக ஏங்குகின்றன.
அவர்கள் மூன்றாவது நண்பனின் வீட்டிற்கு சென்றனர். விவசாயி தன்னை மிகவும் கட்டுப் படுத்திக் கொண்டான். இறுக்கமானவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனெனில் ஒரு எரிமலையே அவர்களுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறது. வெளிப்பார்வையில் அவர்கள் கண்டிப்பானவர்களாக, கட்டுபாடானவர்களாக, இருப்பார்கள். ஏனெனில் அவர்களது இயல்பான போக்கை தன்னிச்சையாக விடாமல் உள்ளே பிடித்துவைத்து சிரமப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நினைவில் கொள், கட்டாயமாக திணிக்கப்படும் எதுவும் தொடரவும் முடியாது, நிறைவு பெறவும் முடியாது. ஏனெனில் அதில் அளவற்ற சிரமம் ஏற்படுகிறது. நீ சில சமயங்களில் ஓய்வாக இருக்கவேண்டும். சில சமயங்களில் தளர்வு கொள்ள வேண்டும். உன்னுடைய முஷ்டியை நீ எத்தனை நேரம் இறுக்க மூடி வைத்திருக்க முடியும் 24 மணி நேரமுமா? நீ இறுக்க இறுக்க அது சோர்வடைந்து விடும். அதனால் அந்த அளவு வேகமாக அது திறந்து விடும். கடின வேலை செய்தால் அதிக சக்தி செலவாகி சீக்கிரத்தில் சோர்வாகி விடுவாய். எப்போதும் ஒரு செயலுக்கு ஒரு எதிர்செயல் இருக்கும், அந்த எதிர்செயல் எப்போதும் உடனடியாக நிகழும். உனது கைகள் எல்லா நேரமும் திறந்தே இருக்கலாம், ஆனால் முஷ்டியை இறுக்கமாக எல்லா நேரமும் வைத்திருக்க முடியாது. அது உன்னை சோர்வடைய செய்யும் அதன்பின் எந்த விஷயமும் வாழக்கையின் இயற்கையான பாகமாக இருக்க முடியாது. எப்போதெல்லாம் நீ கட்டாயப்படுத்துகிறாயோ, அப்போதெல்லாம் ஓய்வு நேரம் தொடர்ந்து வந்தே தீரும். அதனால் ஒரு துறவி எந்த அளவு கட்டுப்பாடானவனோ, அந்த அளவு அவன் ஆபத்தானவன். இருபத்தி மூன்று மணி நேரம் இறுக்கமாக சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் பின்பற்றிய பின், குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் தன்னை தளர்த்திக் கொள்ள வேண்டும். அந்த ஒரு மணி நேரத்திற்க்குள் அவன் தன்னுள் அடக்கிவைத்த அத்தனை தேவையற்றவைகளையும் வெளியேற்றியாக வேண்டிய அவசரம் ஏற்படுகிறது.
இந்த விவசாயி உடைகளை பற்றி பேசக் கூடாது என்ற கட்டுப்பாட்டை இறுக்கமாக வைத்துக் கொண்டான். அவனது நிலையை கற்பனை செய்து பார். உனக்கு ஒரு சிறிதளவு மத அனுபவம் இருந்தால் போதும், அவனது மனநிலையை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடியும். சத்தியம் செய்திருந்தாலோ அல்லது சபதம் எடுத்திருந்தாலோ அல்லது விரதம் என்பதற்க்காக உன்னை கட்டுப் படுத்தி வைத்திருந்தாலோ உனக்கு அனுபவம் இருக்கும். இப்போது அந்த விவசாயியின் பரிதாபத்துக்குரிய மனம் என்ன பாடுபடும் என்பதை உன்னால் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.
அவர்கள் மற்றொரு வீட்டிற்க்கு சென்றனர். அந்த விவசாயி களைத்துபோய்விட்டான், வியர்த்துக் கொட்டியது அவனுக்கு. அந்த நண்பன் கவலைப் பட்டான். விவசாயி வேதனையால் உறைந்து போய்விட்டான். மெதுவாகவும் ஒவ்வொரு வார்த்தையையும் ஜாக்கிரதையாகவும் பேசியவாறே அவன் அறிமுகம் செய்தான். ‘இவன் எனது நண்பன், சிறு வயது நண்பன், மிகவும் நல்லவன்.’
ஒரு வினாடி அவன் தடுமாறினான். அவன் உள்ளிருந்து ஒரு உந்துதல் வந்தது. தான் மதியிழப்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவன் சத்தமாக,“இந்த உடைகள் என்னை மன்னித்து விடுங்கள். நான் அதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன். ஏனெனில் நான் அதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன் என சத்தியம் செய்திருக்கிறேன்.!”
இந்த மனிதனுக்கு என்ன நிகழ்ந்ததோ, அதுவேதான் மனிதஇனம் முழுமைக்கும் நிகழ்கிறது. ஏனெனில் கட்டுப்படுத்தப்படுவதால், காமம் என்பது ஒரு வெறியாக, ஒரு நோயாக, நெறி தவறிய ஒன்றாக மாறிவிட்டது. அது விஷமாகி விட்டது.
- OSHO (Sex to Superconscious)
தலைப்பு : சிந்திக்க சில நிமிடங்கள், படித்ததில் பிடித்தது