"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


வளைகள் இரண்டு, தவறிப் போய் பால் இருந்த சட்டியில் விழுந்துவிட்டன. இரண்டுமே எம்பி எம்பி வெளியில் வர முயற்சித்தன!

ஐயோ... பாவம்...!

அவை எம்பும் உயரத்தை விட அந்த சட்டியின் வாய் இன்னும் 5 செ. மீ. அளவாவது உயரம்.

நம்பிக்கையிழந்த ஒரு தவளை. இனிமேல் நாம் வெளி உலகத்தையே பார்க்க முடியாது. இங்கேயே கிடந்து சாக வேண்டியது தான் என்ற பயத்தில் இறந்து போனது.

இன்னொரு தவளையோ.... தன் மீதும்... எதிர் காலத்தின் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டது.

"இப்போது வேண்டுமானால் நான் வெளியில் போக முடியாமல் போகலாம்.... ஆனால், விரைவில்... நான் இதிலிருந்து மீள்வேன்...!" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டது.

எம்பிக் குதிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

விடாமல் முயற்சி செய்து கொண்டே... (எம்பி குதித்தபடியே) இருந்தது.

நேரம் ஆக! ஆக! பாலுக்குள்ளிருந்து வெண்ணிறமாக கொழ கொழ வென்று ஏதோ வெளிப்படத்தொடங்கியது.

அது வேறொன்றிமில்லை. பாலைத் தொடர்ந்து கடைவது போல குதித்துக் கொண்டிருந்ததால் வெளியான வெண்ணை.

இப்போது வெண்ணையெல்லாம் திரண்டு.... 7 செ. மீ. உயரத்திற்கு ஒரு கட்டியாக திரண்டது.

நமது தவளை அந்த வெண்ணைத் திரளின் மேல் ஏறி அமர்ந்தது.

ஒரே "ஜம்ப்" தான்.

வெளி உலகிற்கு வந்து விட்டது.

இந்தக் குட்டிக்கதை நமக்கு உணர்த்துவது....

1. வாழ்வின் எந்த சந்தர்ப்பத்திலும் நம்பிக்கை இழக்கக் கூடாது.

2. விடா முயற்சி.

முன்பெல்லாம் எனக்கு நானே இப்படி சொல்லிக் கொள்வேன். "இன்றைக்கு வேண்டுமானால் நான் இப்படி துன்பத்தில் இருக்கலாம். ஆனால், என்றைக்குமே இப்படியே இருக்கப் போவதில்லை."

"நல்லா இருக்க எங்களாலேயே ஒண்ணும் முடியல... நீ என்னத்தை சாதிச்சுடப் போற!" என்று என்னிடம் சிலர் சொல்வார்கள்.

நான் சொல்வேன்....

"இப்ப வேணா நான் தோத்துப் போகலாம்... ஆனா எப்பவுமே தோற்க மாட்டேன். ஆகட்டுமே... எவ்வளவு காலம்தான் ஆகட்டுமே?

உயிர் பிரியும்... அந்த வினாடி வரையிலும்... நான் நம்பிக்கையோடேயே இருப்பேன்.

அட! 10 வருஷம் ஆகட்டும். 20... 30... 50 வருஷம் கூட ஆகிவிட்டுப் போகிறது.

நான் எனது நம்பிக்கையில் ஆழ்ந்திருக்கும் வேளையில் எனக்கே தெரியாமல் என் உயிர் பிரிந்தாலும் கவலை இல்லை.


எனது நம்பிக்கையை ஒரு போதும் விட மாட்டேன்.


நம்பிக்கை! விடாமுயற்சி! காத்திருப்பு!

இதுதான் வாழ்வின் தத்துவம்.

- எம். எஸ். உதயமூர்த்தி புத்தகத்திலிருந்து....