"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

னிதர்களாகிய நமக்குத்தான் எத்தனை விதமான பழக்கங்கள். காலையில் அது இல்லாமல் எந்த வேலையும் ஓடாது என்று சிலர் கூறும் காபி அல்லது தேநீர் தொடங்கி, அதை எடுக்காமலிருந்தால் கை கால்கள் நடுங்கி வேதனையுறும் நிலைக்கு தள்ளும் போதை மருந்துகள் வரை, பல்வேறு பொருட்களுக்கு மக்கள் பழகியிருக்கிறார்கள். மணிக்கொரு முறை புகைபிடிப்பது, பொடி போடுவது என புகையிலையோடு தொடர்புடைய சர்தா பாக்கு, பீடா, கைனி போன்ற நச்சுப்பொருட்கள் இவையும் குறிப்பிடத்தக்கவை. இது மட்டுமா, அரசாங்கம் போட்ட சாலையின் நீள அகலத்தை சரி பார்க்கும் பொறுப்பான குடிமக்களின் வெறுப்பான மதுப்பழக்கம். இந்த பழக்கங்களில் பெரும்பாலனவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதை மருத்துவ உலகம் அறிவியல் ரீதியாகவே அவ்வப்போது உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது. இந்த பழக்கங்களை மாற்றச் சொன்னால் பலரால் முடியாத நிலையைக்கூட நாம் காணலாம். காரணம் இவர்கள் இந்த பழக்கங்களுக்கு, அடிமைகளாகியுள்ளனர். ஏங்க தேநீர் குடிப்பதைக்கூடவா போதை மருந்தோடு ஒப்பிட்டு அடிமைத்தனம் என்று சொல்வது? சிலருக்கு இப்படியானகேள்விகள் எழக்கூடும். காபி தேநீரை விடுங்கள், நோய் குணமாக உட்கொள்ளும் மாத்திரைகளுக்கு அடிமையானவர்களை பற்றி கேட்டதுண்டா நீங்கள். மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாகியுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அறிய முடியாத நிலையை நொந்து அங்கலாய்க்கும் மருத்துவ வல்லுனர்களைக் கேட்டால் தெரியும், இந்த பிரச்சனை எவ்வளவு தீவிரமானது என்று.

உண்மையில் மக்கள் தங்களது உடலில் ஏற்படும் சில சிக்கல்களுக்காக மருத்துவரை பார்க்க செல்கிறார்கள். மருத்துவரும் அவர்களை பரிசோதித்து பார்த்தபின் சில மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுக்கிறார். அவர்களும் அதை வாங்கி உட்கொண்டு, சிக்கல் தீர்ந்ததும் மகிழ்ச்சியடைகின்றனர். அதில் சிக்கல் இல்லை. ஆனால் பல வேளைகளில், நோயின் அறிகுறிகளையே நாம் பெரிதென எண்ணி, அவற்றை தணிவு படுத்தும் மருந்துகளை மருத்துவர் எழுதிக்கொடுக்க, அதை உட்கொண்டு, அறிகுறிகள் நீங்க, பின் மறுபடி வந்தால், மீண்டும் அந்த மாத்திரையை வாங்கி உட்கொண்டு, இப்படி ஒரு குறிப்பிட்ட மருந்துக்கு நாம் நம்மையே அறியாமல் பழகிக்கொள்கிறோம். இதைச் சொல்பவர்கள் மருத்துவ வல்லுனர்கள். ஜெர்மனியில் 14 முதல் 19 லட்சம் பேர் இப்படியாக மருந்து மாத்திரைகளுக்கு அடிமையானவர்களாக உள்ளனர் என்று ஜெர்மன் போதைபழக்க அடிமைத்தன மையம் கூறியுள்ளது. அந்நாட்டில் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையோடு இந்த எண்ணிக்கை சமநிலை வகிக்கிறது.


42 வயது கிறிஸ்டா என்ற பெண்மணி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட ஒரு நபர். செவிலியராக பணிபுரியும் இவர், தனது வாழ்வில் நிகழ்ந்த அந்த கொடுமையான சம்பவத்தின் நினைவுகள் வாட்டியெடுக்க, மிகவும் வேதனையுற்றார். மருத்துவரை நாடியபோது, அவரது பதட்ட உணர்வை, மன அழுத்ததை லேசாக்கும் முகமாக மருத்துவர் சில ஆசுவாசப்படுத்தும், நிதானப்படுத்தும் மாத்திரைகளை பரிந்துரைத்தார். வேலியம் எனப்படும் இந்த மாத்திரை தூக்க மருந்து போன்றது. இந்த மருந்தை உட்கொண்டு கொஞ்சம் நிம்மதியடைந்த இந்த பெண்மணி, நாளடைவில் கொடுமையான நினைவுகள் வாட்டும்போதெல்லாம் மாத்திரையை பயன்படுத்தத் துவங்கினார். நாளடைவில் எண்ணிக்கை அதிகரிக்க, 4 ஆண்டுகள் கழித்து ஒரு நாள்சுய நினைவிழந்து, மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்காகத் தரப்பட்ட மருந்துக்கு அந்த பெண்மணி அடிமையானதால் ஏற்பட்டதே இந்த நிலை. இன்று அவர் அந்த மருந்துகளை எடுப்பதை நிறுத்தி, அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவராக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார் என்பது ஆறுதலான செய்தி.

இவரை போல நம்மில் பலர் நிச்சயம் இருக்கக்கூடும். தலைவலியா ஆஸ்பிரின், காய்ச்சலா பாரசிட்டமால், உடல்வலியா ப்ரூஃபென் என்று நாமே நமக்கு மருத்துவராகி மருந்துகளை வாங்கி உட்கொள்வதும் உண்டு. மருத்துவர் ஒருமுறை எழுதிகொடுத்த மாத்திரையை மறுபடி மறுபடி பயன்படுத்துவதும் உண்டு. ஆனால் இதை நாம் யாரும் பெரிதுபடுத்துவதில்லை.

பொதுவாக நாம் நோயின் மூல காரணத்தை அறியாமல் மேலோட்டமான அதன் அறிகுறிகளையே பெரிதாக கருதுவதால் வரும் குழப்பமே இந்த அடிமைத்தனத்துக்கான அடிப்படையாகும்.

இதில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு அம்சம், இப்படி மருந்து மாத்திரைக்கு அடிமையானவர்களில் மூன்றில் இரண்டு பேர் பெண்கள் என்பதே. வீடு, குடும்பம், அலுவலகம், பணிச்சுமை என்று பல்வேறு நிர்பந்தங்களுக்கு முகம் கொடுக்கும் பெண்களுக்கு மருந்து மாத்திரைகள் பற்றி பல்வேறு நிலைப்பாடுகளும் எண்ணங்களும் உண்டு. பெரும்பாலும் அவர்கள் தங்கள் சுமைகளை நினைத்து கலங்கும்போது, அயற்ச்சியடையும்போது தீர்வாக நாடுவது மருந்து மாத்திரைகளையே என்கிறர, டார்ட்மண்ட் பல்கலைக்கழக்த்தின் உளவியலாளர் காரின் மான். உளவியல் ரீதியான அடிப்படையைக் கொண்ட சிக்கல்கள்களின் மேலோட்டமான அறிகுறிகளாக அமையும் , தூக்கமின்மை, தலைவலி, பதட்ட உணர்வு போன்றவற்றிற்கு மருத்துவரை நாடிச் செல்லும்போது, மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்தால் அதையே சிகிச்சையாக பெரும்பாலானோர் கருதுகின்றனர். வேறு சிலர் இதர ஆற்றுப்படுத்தல், பழக்க வழக்கங்களிலான மாற்றம் முதலிட சிகிச்சை வழிமுறைகள் பற்றி அறிந்தாலும். ஒரு மாத்திரை சாப்பிட்டா போச்சு, மருத்துவர் சொல்வதையெல்லாம் கேட்க பொறுமை நமக்கேது என்று ஒதுங்கிவிடுகின்றனர்.

எனவே மருந்துகளை உட்கொள்ளும்போது கவனம் தேவை. நோயின் மூல காரணத்தை அணுகி அதற்கான சிகிச்சை எடுப்பதே எப்போதும் முழுமையான குணமடைதலுக்கு உதவும். மாத்திரையை விழுங்கினால் நோயின் அறிகுறிகளை தற்காலிகமாக குணப்படுத்தலாம், ஆனால் அது நாளடைவில் அந்த மாத்திரைக்கு நம்மை அடிமையாக்கும் நிலைக்கு தள்ளும் அபாயம் உள்ளது. இதை நாம் மறக்கவேண்டாம். இந்த தகவல்களை எல்லாம் கேட்டு தலை வலிக்கிறது ஒரு ஆஸ்பிரின் போட்டால்தான் சரிப்படும் என்று யாரும் புறப்படவேண்டாம்.

http://tamil.cri.cn/1/2007/06/04/62@54711.htm