"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

மது நாட்டில் உள்ள அத்தனை இளைஞர்களும் ஒன்று சேர்ந்து ஒரு அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டும் என நான் விரும்புகிறேன். வலிமையான, தூய்மையான, கெளரவமான, புத்துணர்ச்சியுடன் கூடிய ஒரு தலைமை வர வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்குவோருக்கு நாம் முழுமையாக ஆதரவு தரலாம்.

மும்பையில் நடந்த மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் மக்கள் மனதில் ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அது மேலோங்கி விட நாம் அனுமதிக்கக் கூடாது. அவற்றை தூக்கி தூர எறிந்து விட்டு, அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய இந்தியாவைப் படைக்க முயல வேண்டும்.

தீவிரவாதிகளின் நோக்கம் தோற்க வேண்டும், அவர்களுக்கு தோல்வி கிடைக்க வேண்டும் என நாம் உண்மையிலேயே விரும்பினால், இந்த வெறுப்புணர்ச்சியை நாம் விட்டு விட்டு அன்புப் பாதைக்குத் திரும்ப வேண்டும். தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் என்று போகாமல் அன்பின் வழியில் நாம் செல்ல முன்வர வேண்டும்.

அவர்கள் தாக்கி விட்டார்கள், பதிலுக்கு நாமும் தாக்குவோம் என்று நாம் இறங்கினால் அது தீவிரவாதத்திற்குக் கிடைத்த வெற்றியாகி விடும். மாறாக அன்பையும், அமைதியையும் நாம் நமது இதயங்களில் சுமந்தோமானால், நிச்சயம் அது தீவிரவாதிகளுக்கு விழும் மாபெரும் அடியாக இருக்கும்.

நமக்குள் அன்பும், அமைதியும், பரஸ்பர நம்பிக்கையும் வளர அனுமதிக்க வேண்டும். இதை நாம் பலவீனமாக கருதி விடக் கூடாது. மாறாக, அதுதான் நமது மாபெரும் பலமாக கருதப்பட வேண்டும்.

அரசியல் கட்சிகள் தோற்று விட்டன

தீவிரவாதத்தைத் தடுப்பதில் நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தோற்று விட்டன. சமீப காலங்களில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் மூலம் நமக்குக் கிடைத்துள்ள பாடம் என்னவென்றால், தீவிராதிகளுடன் அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது, அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கூட கேட்கக் கூடாது என்பதுதான். அவர்களை அரசுகள் புறக்கணிக்க வேண்டும்.

இந்தியா தீவிரவாதிகளுடன் ஒருபோதும் பேசாது, அவர்கள் குறித்து அக்கறை காட்டாது என்பதை நமது அரசுகள் தீவிரவாதிகளுக்கு தெளிவாக புரிய வைக்க வேண்டும். இதை நாம் மிகத் தெளிவாக சொல்லியாக வேண்டும்.

இதை எளிதாக விளக்குவதானால், எதிர்காலத்தில் நானோ அல்லது எனது குழந்தைகளோ தீவிரவாதிகளின் பிடியில் சிக்கும் நிலை ஏற்பட்டால், என்னைப் பற்றியோ எனது குழந்தைகளைப் பற்றியோ கவலைப்படாதீர்கள், தீவிரவாதிகளை முதலில் கொல்லுங்கள் என்று நான் சொல்ல வேண்டும். நான் சொல்வேன்.

நமது நாடு மிகப் பெரியது. நமது மக்கள் நல்லவர்கள், அன்பானவர்கள். அவர்களுக்காக, அந்த அன்பு உள்ளங்களுக்காக நான் எனது உயிரை தியாகம் செய்ய தயார். நமது நாடும், அதன் பாதுகாப்பும், நமது மக்களும்தான் எனக்கு முக்கியம். எனவேதான் சொல்கிறேன், தீவிரவாதிகளுடன் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி நமது அரசுகள் பேசக் கூடாது, பேசவே கூடாது.

ஆனால் தீவிரவாதத் தாக்குதல்களை சமாளி்கும் திறமை நமது அரசியல் கட்சிகளிடம் மிகவும் குறைவாக உள்ளது. அனைத்து முக்கிய கட்சிகளும் இந்த விஷயத்தில் தோற்று விட்டன. சமீபத்திய தாக்குதலில் இது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

தொடர்ந்து நமது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரவாதிகள் தாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதைத் தடுக்கவும் முடியவில்லை, அவர்களை ஒடுக்கவும் முடியவில்லை.

மும்பை சம்பவம் காங்கிரஸின் இயலாமையைக் காட்டுகிறது என்றால், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தஹாருக்குக் கடத்தப்பட்ட சம்பவம் பாஜக ஆட்சியின் இயலாமையைக் காட்டியது.

பாஜக ஆட்சியில், காந்தஹார் கடத்தல்காரர்களுடன் பாஜக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும் 3 மிகக் கொடிய தீவிரவாதிகளை விடுவித்து மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது.

இப்படி விடுதலையான அவர்கள் இன்று நம்மை மீண்டும் மீண்டும் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரிய அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, பிராந்திய கட்சிகளும் கூட ஒரு வகையில், தீவிரவாதத்தை வளர்த்து விட்டதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தீவிரவாதம் என்றால் ஏ.கே. 47 துப்பாக்கியோடு கையில் திரிவது என்று மட்டும் அர்த்தம் அல்ல. சாலையில் போவோரை தாக்கி கொலை செய்வது, கல்வீசித் தாக்குவது, அப்பாவிகளை அடித்து உதைப்பது, வன்முறையில் ஈடுபடுவது. இவையெல்லாமும் கூட தீவிரவாதம்தான். இவையெல்லாம் சாதாரண ஜனங்களின் மனதில் பதிந்து அவர்களிடையே தீவிரவாத எண்ணத்தை வளர்க்க உதவுகின்றன.

மேலும், வாக்களிக்கும் உரிமையை நமது மக்கள் சரிவர பயன்படுத்துவதில்லை. இப்படிச் செய்யாமல் இருப்பதன் மூலம் ஓட்டுப் போடாத மக்களும் கூட ஒரு வகையில் குற்றவாளிகள்தான்.

என்னைப் பொருத்தவரை, மாற்றம் ஏற்பட வேண்டும் என விரும்புகிறீர்களா?. முதலில் நீங்கள் மாறுங்கள். தானாகவே நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் வந்து சேரும்.

நமக்கு தவறு என்று தெரிவதை தவறு என்று சொல்லும் தைரியம் நமக்கு இருக்க வேண்டும். சரி என்று தோன்றுவதை செய்யும் துணிச்சல் இருக்க வேண்டும். தனி நபர் நலனுக்காக செயல்படும் போக்கை தூக்கிப் போட வேண்டும். அனைவருக்கும் பாதகமில்லாமல் நடக்க முயற்சிக்க வேண்டும்.

இது ஒவ்வொருவருக்குள்ளும் வரும்போது நிச்சயம் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் மாற்றமும் கூடவே வரும்.

-ஆமிர்கான்

http://www.aamirkhan.com/blog.htm
நன்றி : தட்ஸ் தமிழ்