"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

லகு பல அழிவுகளை நாளும் கண்டு கொண்டிருக்கிறது. வெள்ளப் பெருக்கு, நிலநடுக்கம், சூறாவளி ஆகிய இயற்கை சீற்றங்களால் ஏற்படுகின்ற அழிவுகள். லெமூரியா கண்டம் இருந்தது, நாளடைவில் கடலால் மூழ்கடிக்கப்பட்டது எனக்கூறும் ஆய்வுகள் அனைத்தும் அழிவுகளுக்கு சொல்லப்படுகின்ற உதாரணங்கள். சில துறைகளில் மனிதகுல சொத்தான அறிவே மங்கிப்போகும் நிலை. எடுத்துக்காட்டாக நம்முடைய ஊர்களில் உள்ள நாட்டு மருத்துவர்களை சொல்லலாம். பல்வேறு மூலிகைகளை கொண்டு சிறப்பான தைலங்களை தயாரித்து மருந்தாக பயன்படுத்தும் பலர் புத்தகப்புழுக்களாக அனைத்தையும் கற்றுத்தேறவில்லை. ஆனால் அனுபவத்தையே பாடமாகக் கொண்டு, நல்ல மருத்துவ முறையாக செய்து வருகின்றனர். அத்தகைய தைலங்கள் தயாரிக்கப்படும் முறையையோ, விதத்தையோ அவர்கள் யாருக்கும் வெளிப்படுத்துவதில்லை. அவர்களின் மருத்துவ அறிவும், பயன்படுத்திய முலிகை அறிவும் அவர்களோடே அழிந்துபோகக்கூடும்.

கணினி நூற்றாண்டிலும் இவையெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இயற்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. பல உயிரினங்கள் அழிந்துள்ளன, இன்றும் அழிந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு சில உயிரினங்கள் அழிவதால் இயற்கையின் சமநிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு சிக்கல்கள் உருவாகும் என்று கூறப்படுகிறது. காடுகள், மலைகள், தாவரங்கள் விலங்குகள் என இயற்கை வளங்கள் அழிந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இப்படி தாவரங்களும், விலங்குகளும் அழிந்து போவதால், அவற்றின் சுவடே இல்லாத நிலை உருவாகிறது. ஏற்கெனவே இப்படி அழிந்து போனவற்றின் மிச்சங்களாக கிடைக்கும் அவற்றின் மரபணுக்கள் சிலவேளைகளில் இப்படியான விலங்குகளும் தாவரங்களும் இருந்துள்ளன என்பதை பதிவு செய்ய உதவுகின்றன. அழிந்துபோன விலங்குகளின் மரபணு மூலக்கூறுகளை ஆய்வு செய்து மரபணுக்களின் செயல்பாடு பற்றிய விபரங்களை சேகரிப்பது அவ்விலங்கை பற்றிய அறிவை விரிவாக்கி, அத்தகைய மரபணுக்களின் நன்மைகளை நமக்கு எடுத்துக்கூறும். பல உயிரினங்கள் அழிந்து கொண்டிருப்பதால் பொதுவாக மரபணுக்களின் செயல்பாடுகள் மற்றும் ஆற்றல் பற்றிய அறிவை தொடர்ந்து இழந்து வருகிறோம் என்று ஆஸ்திரேலியாவின் மெல்போன் பல்கலைக்கழக மூலக்கூறு தொடர்பான உயிரியலாளர் ஆன்ரூவ் பாஸ்க் கூறினார்.

முன்பு, முற்காலத்தில் வாழ்ந்த மிகப் பெரிய யானைகள், மற்றும் மனித இன முன்னோடிகள் முதல் நுண்ணுயிரிகள், தாவர வகைகள் வரை அழிந்துபோனவற்றின் மரபணு மூலக்கூறுகளை அறிவியலாளர்கள் ஏற்கெனவே பிரித்தெடுத்துள்ளனர். ஆனால் மேலதிக செயல்பாடுகள் தொடரவில்லை. அதாவது அந்த மரபணு மூலக்கூறுகளை தாவரங்களில் செலுத்தி அதனால் வளர்ச்சியில் விளையும் பங்களிப்பை சோதனை செய்ய முடியவில்லை. இப்போது அத்தகைய முறையை அறிவியலாளர்கள் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர். அதாவது அழிந்துபோன ஒரு விலங்கின் மரபணு மூலக்கூறுகளை சோதனை எலியில் செலுத்தி, அம்மூலக்கூற்றின் பங்களிப்பை ஆய்வு செய்வது முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மேனியா தென்கிழக்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தீவாகும். அங்கு டாஸ்மேனிய புலி என்றழைக்கப்டும் ஓநாய் மிகவும் புகழ்பெற்றது. இறைச்சி உண்ணும் அவ்விலங்கு, 1900 ஆண்டுகளின் தொடக்கத்தில் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டது. கடைசியானதாக கருதப்படும் டாஸ்மேனிய ஓநாய் அங்குள்ள Hobart உயிரியல் பூங்காவில் 1936 ஆம் ஆண்டு இறந்தது. உலகிலுள்ள பல அருங்காட்சியகங்கள் இளம் டாஸ்மேனிய ஓநாய்களின் உடலை மெத்தனாலில் பாதுகாத்து வந்தன. அவற்றில் இளம் டாஸ்மேனியா ஓநாய்களின் திசுக்கள், தோல் அகியவை உள்ளடக்கம்.

மெல்போனிலுள்ள விக்டோரியா அருங்காட்சியகத்திலுள்ள 100 ஆண்டுகளான டாஸ்மேனிய ஓநாய்களின் மாதிரியிலிருந்து மரபணு மூலக்கூறுகளை சர்வதேச அறிவியலாளர் குழு தனியாக பிரித்தது. அந்த மரபணுப் பொருட்கள் சோதனை எலிகளின் கருக்களில் செலுத்தப்பட்டு, அவற்றின் செயல்பாடுகள் ஆராயப்பட்டன. எலியின் உடலில் இயல்பாக காணப்படும் col 2 a1 என்ற எலும்பை உருவாக்கும் மரபணுவை போன்றே டாஸ்மேனிய ஓநாயின் மரபணு மூலக்கூறும் செயல்படும் என்று கண்டறிந்தனர்.

இவ்வாறு அழிந்து போன விலங்குகளின் மரபணுக்களை மீட்பது அவற்றை உயிருடன் எழுப்பச் செய்வதற்கல்ல. ஆனால் அவை பற்றிய இழந்துவிட்ட அறிவை திரும்பப் பெறுவதில் அது பெரிதும் உதவி செய்யும். இந்த நோக்கில் செய்யப்பட்ட இந்த ஆய்வு புதிய உயிரின மருந்துகள் மற்றும் அழிந்த விலங்குகளின் உயிரியலில் நல்ல புரிந்துணர்வு போன்ற ஏரானமான பயன்களை தந்துள்ளது என்று டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் ரிச்சார்ட் பிஹரிங்கர் கூறினார்.

போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். அதாவது சமூகத்திற்கு நல்லவற்றை அல்லது மாற்றத்தை கொண்டு வருகின்றவர்கள் மக்களின் நினைவில் என்றும் வாழ்கிறார்கள் என்று கூறுவதுண்டு. இனிமேல் உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் அழிவில்லை என்பது உண்மையாகியுள்ளது. இன்றைக்கு திரைப்படங்களில் பார்க்கின்ற டைனோசார், கிங்காங் போன்ற அசுர குரங்கினம், அசுர யானைகள் ஆகியவற்றை நீயண்டதால் என்றழைக்கப்படும் நம்முடைய முன்னோடிகளோடு கைகோர்த்து உயிரியல் பூங்காவில் விடுமுறை சுற்றுலா மேற்கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறுபவர்களை கேலி செய்ய இனிமேல் யோசிக்ககத்தான் வேண்டும் போலிருக்கிறது.

http://tamil.cri.cn/1/2008/08/04/121s73223.htm