"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

கழுவுவதை, நம்மில் பலர் ஒரு நல்ல பழக்கமாக மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறோம். கை கழுவுவது சுத்தமாக இருக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கிறது தெரியுமா? நமது கைகளே கிருமிகளின் சுரங்கமாகவும் இருப்பதால், முறையாக கை கழுவுவதன் மூலம் நோய்களைப் பரப்பும் பேக்டீரியா மற்றும் வைரஸ்களில் இருந்து விடுபடலாம். கை கழுவும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ:

சோப்பு மற்றும் வெந்நீர் கொண்டு கை கழுவுவதன் மூலம் இத்தகைய கிருமிகளால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

அழுக்காக இருக்கும் போது கை கழுவுவது எல்லோருமே செய்வதுதான். ஆனால் அது மட்டும் போதாது. இருமியவுடன், தும்மியவுடன், புகையிலை பயன்படுத்திய பிறகும் கை கழுவுவது அவசியம். அதைப்போல குழந்தைகளின் நாப்கின்களை மாற்றிய பிறகோ, செல்லப் பிராணிகளைத் தூக்கிய பிறகோ, கை கழுவ வேண்டும். இவ்வளவு ஏன்? சமைத்து முடித்த பிறகும் கூட கை கழுவ வேண்டும்.

ஒரு சிலர் பாதுகாப்பாக கையுறைகள் அணிந்திருக்கலாம் என்றும், கையுறைகள் பயன்படுத்துபவர்களும் கூட கை கழுவுவதே பாதுகாப்பானது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கை கழுவுவதை சாதரணமாக நினைத்து விடக்கூடாது. அதனை ஒரு கலை என்றே சொல்லலாம். முறையாக கை கழுவ தண்ணீர், சோப்பு மற்றும் நன்றாக கைகளைத் தேய்த்துக் கழுவுவது அவசியம். கை கழுவுவதை கொஞ்சம் கவனத்தோடு செய்தால் நோய்க் கிருமிகளை தள்ளி வைக்கலாம்.

கை கழுவுவது பலர் அலட்சியமாக கருதுகின்றனர் என்றாலும், சிலர் கை கழுவுவதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து எப்போதும், ஆன்டிபேக்டீரியா கிளீனர் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். ஆனால், நோய்வாய்ப்பட்டிருக்கவில்லை என்றால் சாதாரண சோப்பே போதுமானது. சோப்புக் கட்டியை விட திரவ சோப் மிகவும் ஏற்றது. அதிலும் ஒரே குடுவையைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

கை கழுவும் விதமும் கால அவகாசமும் மிகவும் முக்கியம். 5 அல்லது 10 விநாடிகள் மட்டுமே கை கழுவும் போது எந்தப் பலனும் ஏற்படுவதில்லை என்பது ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளன. 30 விநாடிகளுக்கு நன்றாக கைகளைத் தேய்த்துக் கழுவுவதே மிகவும் ஏற்றது. கைகளின் முன் பக்கம், பின் பக்கம் மற்றும் விரல் இடுக்குகளிலும் நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும்.

சாதாரண நீரே கூட கைகழுவ போதுமானது. குழாயில் இருந்து தண்ணீர் வரும் வேகத்திலேயே கூட அழுக்குகள் அடித்துச் செல்லப்பட்டு விடும்.

கை கழுவினால் மட்டும் போதாது. கை கழுவிய பிறகு, நன்றாகத் துடைப்பதும் மிகவும் அவசியம். கையைத் துடைக்கும் போது எஞ்சிய கிருமிகள் அகற்றப்பட்டு விடுகின்றன. தூய்மையான காகிதங்கள் மூலம் கைகளைத் துடைக்கலாம். துணி, டவல் என்றால் ஒருவர் பயன்படுத்தியதை மற்றவர் தவிர்ப்பது நலம்.

ஜலதோஷம் ஏற்படுத்தும் நோய்க் கிருமிகள், கைகள் மூலமே அதிகம் பரவுகின்றன. ஜலதோஷத்தோடு இருப்பவர்கள் ஸ்விட்ச் போன்றவற்றைத் தொடும் போது கிருமிகள் பரவுகின்றன. எனவே, ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, மூக்கில் கை வைத்தவுடன் நன்றாகக் கழுவி விட வேண்டும். அதே கையோடு, கண் கசக்குவதைத் தவிர்க்க வேண்டும்.

கை கழுவும் பழக்கத்தை பிள்ளை களிடம் தவறாமல் ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் இருந்து திரும்பியதும் நன்றாக கைகளைக் கழுவ பழக்கப்படுத்த வேண்டும். அதுபோல சாப்பிடுவதற்கு முன் கட்டாயம் கை கழுவச் செய்ய வேண்டும்.

- இரா.நரசிம்மன்
குமுதம் ஹெல்த்
16-12-2008