"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

நிறைந்த கல்விமான்களும் அறிவாளிகளும் ஆற்றல்மிக்கவர்களும் இல்லாத காரணத்தினால்தான் ஒரு சமுதாயம் முன்னேற முடியாமல் போகிறது என்று கூறுவதைவிட பண்பாடும் ஒழுக்கமும் மனிதத் தன்மையும் இல்லாதவர்கள் நிறைந்திருப்பதால்தான் ஒரு நாடு முன்னேற்றமடையாமல் இருக்கிறது என்று கூறுவதுதான் உண்மை .
- மார்க்கோஸ்

சிலபேர் கல்விமான்களாக இருப்பார்கள் ஆனால் மனிதப் பண்பாடு இல்லாதவர்களாக இருப்பார்கள். இவர்களை விடக் கொஞ்சமாகப் படித்து கொஞ்சமாக அறிவு பெற்று மனிதப்பண்பு நிறைந்தவர்களால் தான் ஒரு சமுதாயம் நல்லப்படியாக வளர முடியும்.

முயற்சி

சிந்தனை, தொழில், செல்வம் இவைகளில் வீரப்பரம்பரை நாம் என்று சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தும் எங்கே தவறு செய்தோம்.

எங்கே நுலிழையைத் தவற விட்டோம்.

ஏன் ஏன் என கொஞ்சம் சிந்தியுங்கள்.

என்னைத் தவிர யாரும் என்னைக் கெடுக்க முடியாது.

குறுக்கு வழியில் லாபமடையவே நம் சிந்தனை செல்கிறது. சுயமாகச் செயல்புரியும் ஆற்றலைக் கட்டவிழ்த்து விடுவதில் நாம் வெற்றி பெறாததே இதற்குக் காரணம்.

எது உண்மை?

விருப்பு வெறுப்பின்றி உண்மை நாடும் பேரவாவுடன் நாம் இவற்றிற்கு விடை காண வேண்டும்.

நல்வாழ்வுக்கு நாம் பொறுப்பு. நம் சூழ்நிலைக்கு நாம் பொறுப்பு நம் முன்னேற்றத்திற்கு நாம் பொறுப்பு என்ற உணர்வு நம்மிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆள்பவர்கள் மீது பழியைச் சுமத்துகிறோம்.

சிறு வயதிலிருந்து பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் வளர்ந்த பின் மேலதிகாரியிடமும் நாம் அவர்கள் முகம் பார்த்து அவர்களது ஆதரவையும் அனுமதியையும் எதிர் நோக்கி நடந்து கொள்ளுகிறோம்.

இல்லாதவனிலிருந்து இருப்பவன் வரை பொருட்களை இனாமாகப் பெற்றுக் கொள்வதை நியாயம் என்று கருதுகின்றோம். இனாமாகப் பெறுவது யாசகம், இழிவு என்ற மனோபாவம் நம்மிடையே இல்லை. தன் காலிலே நிற்க முடியாத சார்ந்து நிற்கும் ஒரு சமுதாயம், நமது பரம்பரையாய்ப் போய்விட்டது. பிறரிடமிருந்து ஒரு பொருளைப் பெறுவது முறையல்ல. நம் தன்மானத்தில் தலையிடிக்கும் செயல் என்று மேல்நாடுகளில் கருதுகிறார்கள். நம் நாட்டில் இது நியாயமாகப் படுகிறது. ஜப்பானில் ஒரு கடையில் இரு நெருக்கமான உறவினர்கள் பானம் அருந்தினால் அவரவர் செலவை அவரவரே செலுத்துவார்கள். எக் காரணங்கள் கொண்டும் ஒருவர் செலவை மற்றவர் ஏற்கவும் மாட்டார். இதுதான் தன் மானம், எல்லோரும் சமநிலை. எல்லோரும் வாழ வேண்டுமென்ற மனோபாவம். எமது நாடு எமக்காக கடும் உழைப்பு உழைக்கிறோம் என்ற சிந்தனை. களவு கிடையாது.

மனதிற்கும் செயலுக்கும் பெரிய தொடர்பிருக்கிறது உண்மை, நேர்மை சமத்துவம், உதவும் உள்ளம் என்ற நிரந்தர உண்மைகளால் தான் இவ்வுலகம் இயங்குகிறது. இதற்கு மாறாக நம் மனோபாவம் அமையும் போது நம்மால் செயல்பட முடிவதில்லை. காரியங்கள் பூர்த்தி பெறுவதில்லை. பிச்சை மனோபாவம் இந்நிரந்தர உண்மைகளுக்கு மாறுபட்ட செயல்.

சந்திர மண்டலத்திற்கு மனிதனை அனுப்பியது திட்டமிட்ட செயல். நம்மனத்தில் தோன்றும் எண்ணங்கள் நாளடைவில் திடமான நம்பிக்கையாய் மாறுகிறது. திடமான நம்பிக்கை நம்மிடம் செயலைத் து}ண்டுகிறது. திரும்பத் திரும்பச் செய்யப்படும் செயல் நமது பழக்கமாய் மாறுகிறது. நமது பழக்க வழக்கங்களே குண நலன்களாகத் திகழ்கின்றன. நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன.

-ஆத்ம சிந்தனைகள் கருமங்கள் - எண்ணங்கள்
( ஆ. சி. முருகுப்பிள்ளை )