"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


சொந்த நாட்டில்
அகதியாக
பதிவு செய்து கொண்டாயிற்று!

அடிக்கடி
சுற்றி வளைத்து
அடையாள அட்டை கேட்கப்படுகிறது.
சொந்த நாட்டில் வாழ்வதற்கு
உத்தரவாதமா அடையாள அட்டை?
வீதிக்கு வரும் போதும்,
தோள் கோர்த்துக்
காதலியுடன்-
சல்லாபிக்கும் போதும்
நடு இரவில்
மனைவியுடன் உறவு
கொள்ளும் போதும்
பத்திரப்படுத்த வேண்டியே உள்ளது
ஒரு அடையாளத்திற்காக...

ஷெல் விழும்; குண்டு தாக்கும்...
அடையாளம் காண கவனம் தேவை!
தொலைந்து விடாதே!
நண்பன் சொன்னான்.

"நண்பனே எனக்கு
உயிர் வாழ்வதற்கு
உத்தரவாதம் தா"
என்ற போது - ஒரு
கைக்குண்டைத்
தந்து சென்றான்!


- நூற்பெயர் : இசைக்குள் அடங்காத பாடல்கள்
ஆசிரியர் : முல்லை அமுதன்