"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

னிதர் பூமியில் தோன்றிப் பல மில்லியன் வருடங்களானாலும், பேச்சு மொழியை அதன் ஆரம்ப நிலையில் பயில முயன்றமை சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்புதான் எனக் கருதப்படுகின்றது. மனிதர் மொழியைப் பேசக் கற்றுக் கொண்டமையே மனிதரை நாகரீக வளர்ச்சிக்கு இட்டுச் சென்ற முக்கிய நிகழ்வாகும். எனவே மனித அறிவு பற்றிப் பேசப்புகுமுன். மொழிபற்றியும், குறிப்பாக எழுத்துப் பற்றியும் பேசவேண்டியது அவசியமாகும். ஊடகங்களின் வளர்ச்சி அடிப்படையில் மனித அறிவின் வளர்ச்சி நிலைகளைப் பொதுவாக நான்கு காலகட்டப் பிரிவுகளுள் அடக்கலாம்.

அவையாவன:

1. அடிப்படைத் தேர்ச்சி நிலை
2. வாசிப்பு யுகம்
3. ஒலியினதும் காட்சியினதும் யுகம்
4. இலத்திரனியல் யுகம்

அடிப்படைத் தேர்ச்சிநிலை



எழுத்தறிவுக்கு முற்பட்டகால மனிதர் அக்காலத் தேவையை ஒட்டி தமக்குத் தேவையான கருவிகளை உருவாக்கி அவற்றைக் கையாளப் பழகியதோடு பேச்சு மொழியையும் பயிலத் தொடங்கினர். சில மானிடவியலாளர்களின் கருத்துப்படி சுமார் மூன்று லட்சம் வருடங்களுக்கு முன்பிருந்தே பேச்சுமொழி அறிவு வளர ஆரம்பித்துள்ளது என குறிப்பிடப்பட்டாலும், இதுபற்றி ஆதாரபூர்வமான சான்றுகள் கி. மு. 4000 வரை எதுவுமில்லை.ஆனால், எழுத்தறிவுக்கு முற்பட்டகால மனிதர் தமது அடுத்த சந்ததியினருக்கு விட்டுச் சென்றவைகளில் மிக முக்கியமானவை குகை ஒவியங்களே. வேட்டையாடலுடன் தொடர்புடைய மிருகங்கள், ஆயதங்கள், குறியீடுகள் குறித்த ஓவியங்களாக இவை கலைத்திறனுடன் படைக்கப்பட்டவை. தெற்கு ஐரோப்பாவிலும், ஆசியாவின் பல பாகங்களிலும் வாழ்ந்த குறோ - மக்னோன் மக்கள் கூட்டத்தால் வரையப்பட்ட இக்குகை ஓவியங்கள் தென் ஸ்பெயினிலுள்ள அல்டிமிரா பிரான்சிலுள்ள லாஸ்கோ போன்ற குகைகள் உட்பட 250 குகைகளில் உலகெங்கும் காணப்பட்டுள்ளமையை அறியமுடிகின்றது. ஓவியங்களாகவும் குறியீடுகளாகவும் வரையப்பட்ட இவை 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதன் பற்றிய தகவற் களஞ்சியமாகும். இன்றைய அர்த்த்தில் மொழி ஒரு தகவற் பரிமாற்ற ஊடகம் எனக்கொண்டால், இக்குகை ஒவியங்களுக்கும் அதேபண்பு இருப்பதைக் காணலாம். எனவே வரைதல் மூலம் அடுத்த தலைமுறைக்கு தகவற் பரிமாற்றத்தை ஒவியனே மேற் கொள்ளுகிறான். ஆனால் சுமேரியரின் ஆப்பு எழுத்துக்களின் தோற்றத்துடன் (கி. மு. 5000 - கி. மு. 25000) அசாதாரண ஒவியத்திறமையிலிருந்து நீங்கிச் சாதாரண நிலையில் குறியீட்டினூடாக தகவல் சொல்லப்படும் நிலை உருவாகியது.

ஒளிச்சைகை, ஒலிச்சைகை, உடற்சைகை என்பவற்றினூடாக பேச்சுமொழி வளர முடிந்தாலும், ஒரு நிறைவான எழுத்து வடிவை. அதாவது குறிப்பிட்ட ஒலிவடிவத்திற்கேற்ப அகரவரிசையுடன் கூடிய வரிவடிவத்தைப் பெற பல ஆயிரம் ஆண்டுகள் சென்றன. இந்த வரிவடிவ எழுத்துக்களின் தோற்றமே மனிதவரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வாகும். இது குறித்து ஸ்கிராம் என்பவரது கருத்தைக் குறிப்பிடல் இங்கு பொருத்தமானதாக அமையும்.

“மொழி மனிதனின் மிகப்பெரிய சாதனை எனக்கொண்டால் அவனது மிகப்பெரிய கண்டுபிடிப்பாக அமைவது எழுத்தாகும். எழுத்தின் கண்டுபிடிப்பு சக்கரத்தின் கண்டு பிடிப்பிலும் பார்க்க உயர்வானது மட்டுமன்றி இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பூச்சியத்திலும் பார்க்க மேன்மையானது. நியுட்டனின் கணித கணிப்புகளை விடவும், தொலைபேசி, சலனப்படம், ஏன் கணனிகளின் கண்டுபிடிப்புகளை விடவும் உயர்வானது. காரணம் மனிதனின் நினைவுகளை எழுத்துக்கள் வெளிப்படுத்தின. இதுவரை காலமும் ஒலிச்சைகை, ஒளிச்சைகை மூலம் மட்டுமே தொடர்பு கொண்ட மனிதனின் மட்டுப்படுத்தப்பட்ட தொடர்புச் செயற்பாட்டை எழுத்து அறுத்தெறிந்தது. எழுத்தானது காலத்தையும் வெளியையும் வென்று மொழிக்கும், சித்திரத்திற்கும் பாலமாகியது”.

இந்த எழுத்துக்களின் தொகுப்பே நூல்கள். இவ்வெழுத்துக்கள் என்ன வடிவில் அமைந்திருந்தபோதிலும் (பண்டை சுமேரியரின் ஆப்பு எழுத்துப் பதில்கள் தொடக்கம் இன்றைய கணனியின் இலத்திரன் எழுத்துப் பதிவுகள் வரை) இவை பேணப்பட்டு. பண்பாட்டிற்கு வழங்கப்படும் இடங்களே நூலகங்கள். நூலகங்கள் மனித இனத்தின் தொகுக்கப்பட்ட அறிவினைக் காலத்திற்குப் பொருத்தமான ஊடகங்களில் பாதுகாத்துப் பாவனைக்கு வழங்கிவருகின்றன. இச்செயற்பாடு மனித இனத்தில் தொடர்ச்சியாகவே நடைபெற்று வந்துள்ளது.

கி. மு. 4000 ஆண்டளவில் சுமேரியர்கள் ஈரமான களிமண்ணைத் தட்டையாக்கி கூரான குச்சியால் முக்கோணவடிவங்களில் குறியீடுகளாகத் தமது செய்திகளை எழுத ஆரம்பித்துவிட்டனர். ஈரமான களிமண்தட்டு வேகவைத்துக் கடினமாக்கப்பட்டது. கல்லின் தமது தகவல்களைப் பதிவு செய்வதிலும் பார்க்க, இம்முறை சுலபமானதாகவும் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் காவிச் செல்லப்படக் கூடியதாகவும், அதனால் முன்னேற்றமானதாகவும் இருந்தது. சுமேரியர்களின் பிற்பட்டகால களிமண்தட்டுப் பதிவுகளில் பொருட்களின் அட்டவணைகள், சட்டங்கள், சடங்குகள் பற்றிய பதிவுகள் மட்டுமன்றி, இலக்கியங்கள் எனக் கருதப்படக் கூடிய அரசர்களின் வீர வாழ்க்கை போன்றனவும் இடம்பெற்றிருந்தன. உலகின் முதற்காவியம் எனக்கருதப்படும் “கில்கமேஷ் காவியம்” களிமண் தட்டுகளில் பதியப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டிருந்ததை பிற்பட்ட காலத்தில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். அசிரிய மன்னன் அஷர் பனிபல்லினால் நினவே என்னுமிடத்திலுள்ள அவனுடைய அரண்மனையிலேயே இவை சேகரித்துப் வேணப்பட்டிருந்தன. இங்கு கிட்டத்தட்ட 22,000 களிமண் தட்டுகள். முறையாக, பாட ஒழுங்குடன் பேணப்பட்டிருந்தன. மனிதவரலாற்றின் முதல் நூலக உருவாக்கம் இது எனக் கருத இடமளிக்கிறது.

கி. மு. 3000 ஆண்டளவில் எகிப்தியரால் புதிய தகவல் சேமிப்பு ஊடகம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. நைல்நதிக்கரையோரம் வளர்ந்த பப்பிரஸ் என்ற ஒருவகைக் கோரைப் புற்களை ஒழுங்காக வெட்டி ஒரு புல்லின் ஓரத்தை மற்றப் புல்லின் ஒரத்துடன் இணைத்து ஒட்டினர். பல புற்கள் சேர்ந்து ஒரு தடித்த ஒரத்துடன் இணைத்து ஒட்டினர். பல புற்கள் சேர்ந்து ஒரு தடித்த கடதாசி போன்ற அமைப்பை இது பெற்றது. (பப்பிரஸ் என்ற சொல்லிலிருந்துதான் பேப்பர் என்ற சொல் வந்தது) இவை நீளமானதும், சுருட்டக் கூடியதுமாகும். சுமார் 130 அடி நீளமான பப்பிரஸ் சுருள்களும் பாவனையில் இருந்தன. கோரைப் புற்களாலோ அல்லது தூரிகையாலோ எழுதுவதற்குப் பொருத்தமானதாக இது அமைந்திருந்தது. கி. மு. நான்காம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட 700,000 பப்பிரஸ் சுருள்களைக் கொண்ட மிகப் பெரிய நூலகம் கிரேக்க மன்னன் முதலாம் தொலமியால் (கி. மு. 323 - கி. மு. 283) அலெக்ஸான்திரியாவில் உருவாக்கப்பட்டது. பாடவாரியாக ஒழுங்குபடுத்தப்பட்ட நூலகமாக இது அமைந்திருந்தது. எகிப்தின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுள் ஒன்றாக பப்பிரஸ் அமைந்திந்ததும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும். கிரேக்கர்களைத் தொடர்ந்து உரோமர்கள் எகிப்தைக் கைப்பற்றியதுடன் பப்பிரஸ் ஏற்றுமதியைத் தடைசெய்தனர். இதனால் எகிப்துக்கு வெளியே புதிய ஊடகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட வேண்டிய அவசியம் உருவாகியது.

கி. மு. இரண்டாம் நூற்றாண்டளவில் ஆட்டுத்தோலை நன்கு பதப்படுத்தி அவற்றில் எழுதத் தொடங்கினர். பண்டைய கிரேக்க இராசதானியாக இருந்த பெர்காமம் என்னும் இடத்தில் 200,000 தோற்சுருள்களைக் கொண்ட நூலகம் ஒன்று அமைந்திருந்தது.

எனவே அசையும் தன்மையற்ற கல்லில் தனது நினைவுகளைப் பதியத் தொடங்கிய மனிதர், பின் எடுத்துச் செல்லக் கூடிய, ஒப்பீட்டளவில் சுலபமாக எழுதக்கூடிய, ஆனால் உடையக்கூடிய களிமண் தட்டிற்கு மாறி, பின்பு அவற்றின் அடுத்த கட்ட வளர்ச்சியாக ஒரளவு காகிதத்தை ஒத்த பப்பிரஸ்க்கும் பின் பதனிடப்பட்ட தோலுக்கும் தமது ஊடக மாற்றத்தை ஏற்படுத்தினர். பழைய ஊடகங்களில் குறைபாடுகள் உணரப்படும்போது புதிய ஊடகங்கள் உருவாகுகின்றன. பப்பிரஸ் பாரம் குறைந்த இலகுவான ஊடகமானாலும், அவை சுருட்டப்பட்டே பேணப்பட்டன. தேவையான பகுதிகள் மட்டும் காட்சிக்குத் தெரிய மிகுதியானவை சுருட்டப்பட்ட நிலையில் வாசிக்கப்பட்டன. முன்பு தவறவிட்ட விடயத்தைப் பார்க்க வேண்டுமெனில் திரும்பவும் முழுவதும் குலைக்கப்பட்டு வாசிக்கப்பட வேண்டியிருந்தது. இக்குறைபாட்டை நீக்க எக்கோடியன் வடிவில் இந்நூல்கள் மடிக்கப்பட்டன. தோல்சுருள்கள் ஒன்றின் மேல் ஒன்றாக இன்றைய காகித நூல்கள் வடிவை ஒத்த வகையில் கட்டப்பட்டு வாசிக்கப்பட்டன. இன்றைய நூலை உருவாக்கலில் ஒரு முக்கிய படிநிலையாகும்.

கீழைத்தேய நாடுகளில் மரப்பட்டைகள், ஒலைகள், கல், செம்புத் தகடுகள், பட்டுத்துணிகள் என்பவற்றில் கூரான கருவிகொண்டு எழுதினார். சீனர்கள் மூங்கில் பட்டைகளிலும் மரப்பட்டைகளிலும், பட்டுத்துணிகளிலும் எழுதினர். வடஇந்தியா, தமிழ்நாடு, இலங்கை, பர்மா முதலிய நாடுகளில் ஒலைச்சுவடிகளில் அறிவைப் பதிவு செய்தனர். தமிழர் பனை ஒலைகளையும், சிங்களவர் தலிபத் ஒலைகளையும் தமது பிரதான தகவற் சேமிப்பு ஊடகமாக கொண்டனர். ஓலைகள் ஓழுங்காக நறுக்கப்பட்டு இருபுறமும் மெல்லிய மரப்பலகைகள் பொருத்தப்பட்டு நடுவில் துளையிடப்பட்டு நூலால் ஒழுங்குசேர கட்டப்பட்டு நூலை ஒத்தவடிவில் பாதுகாக்கப்பட்டன. இதைவிட கல்லிலும், செப்புத் தகடுகளிலும் அரசர்கள் தமது செய்திகளைப் பதிவு செய்தனர். கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள், செப்பேடுகள் என இவை அழைக்கப்பட்டன.

வாசிப்பு யுகம்

எழுத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து எழுதியவை வாசிக்கப்பட வேண்டிய அவசியம் உருவாகியது. பலரால் வாசிக்கப்பட வேண்டுமெனில், எழுதப்பட்ட விடயங்கள் பிரதி செய்யப்பட வேண்டும். முறையாகப் பேணப்படாவிட்டால் இயல்பாகவே அழியும், ஊறுபடும் தன்மையுள்ள ஊடகங்களாக தோல்பப்பிரஸ், மரப்பட்டை, ஒலை போன்றவை அமைந்திருந்தமையும் பிரதி செய்யப்படவேண்டிய அவசியத்தை உருவாக்கின.

பிரதியெடுக்கும் கலை முதலில் வளர்ந்த நாடு சீனா ஆகும். கி. பி 105-ல் சீனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. கி. பி. முதலாம் நூற்றாண்டு தொடக்கம் மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் சீனர்கள் மரப்படிமங்களில் எழுத்துக்களையும் தெய்வப் படங்களையும் செதுக்கியமையைக் கொண்டு காகிதத்தில் பிரதி எடுக்கும் நிலையை அடைந்துவிட்டனர். இதைவிட களிமண், மரம் போன்றவற்றில் தனித்தனியாக அச்சுக்களை உருவாக்கி அசையும் அச்சை முதலில் உலகிற்கு வழங்கியவர்களும் சீனர்களே. சீனர்களின் சித்திர எழுத்துகள் அசையும் அச்சுக்குப் பொருத்தமானதாக அமையாதபடியால் இக்கலை மேலும் வளர்த்தெடுக்கப்படாமல் சீனர் சுவர்களுக்கு உள்ளேயே நீண்டகாலம் இருந்தது. ஒருவாறாக காகிதத் தொழில் நுட்பம் 12ம் நூற்றாண்டளவில் அராபியர் ஊடாக ஸ்பெயினை அடைந்து காகிதத் தொழில் ஐரோப்பாவில் வளர ஆரம்பித்தது. இருந்தாலும் மத்தியகால ஐரோப்பாவில் மிருகத் தோலிலிருந்து காகிதத்திற்கு நூல்கள் மாற நீண்டகாலம் எடுத்தது. ஜொகான் குட்டன் பேர்க்கின் முதல் அச்சுநூல் 1455இல் (42வரி பைபிள்) மிருகத்தோலிலேயே அச்சிடப்பட்டமை இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

வாசிப்பு யுகத்தில் ஏற்பட்ட முக்கிய ஊடக மாற்றம் என்னவெனில் கையெழுத்துப் பிரதி வடிவில் உருவாக்கப்பட்ட நூல்கள் இயந்திரம் மூலம் அச்சிடும் நிலையை அடைந்தது தான். மிருகத்தின் தோல்களில் மிகுந்த மனித உழைப்புடன் மத்தியகால மடாலயங்களில் மதகுருமார் கையாற்செய்து வந்த நூற்பிரதியாக்கற்பணி முடிவுற்று காகிதத்தில் பலநூறு பிரதிகள் செய்யும் நிலைக்கு நூல் உருவாக்கம் வளர்ந்தது. ஜெர்மனியில் மெயின்ஸ் நகரில் ஜொகான் குட்டன் பேர்க்கினால் 1445 -1450 காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட அசையும் அச்சினாலான அச்சுப்பொறியும் அதனைத் தொடர்ந்து அச்சுக்கலையில் ஏற்பட்ட வளர்ச்சியும் மனித நாகரிகத்தின் மற்றுமொரு திருப்பு முனையாகும்.

வாய்மொழி மரபு வாசிப்பும் எழுத்தறிவு மரபு வாசிப்பும்

இந்தச் சந்தர்ப்பத்தில் வாசிப்பின் தன்மை மாற்றங்கள் பற்றிக் குறிப்பிடுதல் அவசியம். வாசிப்பு அதன் தன்மையில் அச்சு நூல்கள் வருவதற்கு முன்பும் பின்பும் வேறுபட்டிருந்ததை இங்கு நோக்கவேண்டியதவசியம். அச்சு நூல்கள் வருவதற்கு முன்பு சமூகத்தின் பிரதான தொடர்பு முறையாக வாய்மொழி மரபே பேணப்பட்டு வந்தது. எனவே வாசிப்பு என்பது உரத்த வாசிப்பாகவே மத்தியகால ஐரோப்பாவிலும் ஏனைய ஆசிய ஆபிரிக்க நாடுகளிலும் இடம் பெற்றன. வரிவடிவத்தை எட்டாத பல பேச்சு மொழிகளைக் கொண்ட ஆபிரிக்க நாடுகளில் வாய்மொழி மரபு இன்றும் கூட செல்வாக்குள்ள தொடர்பு முறையாக அமைந்துள்ளதைக் காணலாம். வாய்மொழிமரபு வாசிப்பு இசையுடனும் அபிநயத்துடனும் கூடியது. மத்தியகால ஐரோப்பாவின் மொழியும் இலக்கியமும் கிட்டத்தட்ட எமது கால திரைப்பட அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒத்ததாகவே அமைந்திருந்தன.

“ஒரு ஆசிரியன் தனது படைப்பு நல்லதா கூடாததாக என்பதை பார்வையாளர்கள் மீது பரீட்சித்துப்பார்த்தே அறிந்து கொள்வான். ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது பின்பற்றிச் செய்வோரால் தொடரப்படும். பார்வையாளனுக்கு வேண்டியது ஒரு கதையே. கதை அக்கால விதிப்படி, குரலாலும் சைகையாலும் கூடிய பாத்திரச் சித்திரிப்பினை கதை சொல்பவனிடமே விட்டுவிட்டது”

வாய்மொழி மரபின் மற்றொரு முக்கிய பண்பு உரத்த வாசிப்புடன் கூடிய மனனம் செய்தலாகும். வாய்மொழி மரபில் வந்த இந்திய மாணவர்களால் பாடநூல்களை மனத்தால் படித்து வார்த்தைக்கு வார்த்தையாக தமது பரீட்சைகளில் வெளிப்படுத்த முடிந்தது. “புனித” சமய நூல்களும் இவ்வாறே மனனம் செய்யப்பட்டன. சிலவேளை இருக்கு வேதத்தின் சகல ஒலைப்பிரதிகளும், அச்சுப் பிரதிகளும் தொலைந்து விட்டால் கூட, எதுவித தவறுமின்றி அட்சரசுத்தமாக அதை வாய்மொழி மரபுமூலம் இன்றும் திருப்பிப் பதிப்பிக்க முடியும். புராண படனம், கதாகாலேட்சேபம், நாட்டார் கதைகள், நாட்டார் பாடல்கள், நாட்டுக்கூத்து போன்ற வாய்மொழி மரபு வடிவங்கள் இன்றும்கூட முழுமையாக அழியாது எமது பிரதேசங்களில் பேணப்பட்டு வருதலை இங்கு நினைவுகூருதல் பொருந்தும். “ஒரு முதியவனின் இறப்பு தீக்கிரையாகும் ஒரு நூலகத்தை ஒத்தது” என இன்றுவரை நிலவிவரும் ஆபிரிக்க பழமொழியினூடாக வாய்மொழிக் கலாசாரத்தின் மனித பெறுமதியை புரிந்துகொள்ள முடியும்.

கட்புல செவிப்புல சாதனங்கள் தோன்றும்வரை உலகிலே பல பாகங்களிலும் இறவாது இன்றும் தொடர்ந்துவரும் வாய்மொழி மரபுப் படைப்புகளை தகவற் செயற்பாட்டிற்காக களஞ்சியப்படுத்த முடியாதிருந்தது. கட்புல செவிப்புல சாதனங்களின் வளர்ச்சியின் பின்பே இவற்றை நூலகங்களிலும், ஆய்வுநிறுவனங்களிலும் களஞ்சியப்படுத்தி தகவற் பரவலாக்கம் செய்ய முடிந்தது என்பதையும் இங்கு கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.

இவ்வாறாக மேற்கில் மறுமலர்ச்சிவரை செல்வாக்கு பெற்று விளங்கிய வாய்மொழிக் கலாசாரத்தின் கல்வி அறிவு நடவடிக்கைகள் உரத்த வாசிப்பு, இசை, மனனம் செய்யும் தன்மை, அபிநயம் என்பவற்றைக் கொண்டதுடன் குறுகிய இனக் குழுநிலைப்பயில்வாகவும் அமைந்திருந்தது. வாய்மொழி மரபில் அடிப்படைப் பண்புகளை உற்றுநோக்கின் கீழ்வருவன புலனாகும். அதாவது வாய்மொழி மரபானது செவிப்புலம் சார்ந்ததாகவும், பற்றுள்ளதாகவும், ஆள்நிலைப்பட்டதாகவும். சுட்டிப்பானதாகவும், நெகிழ்ச்சியானதாகவும், சுழல் போக்குள்ளதாகவும், உயர்வு நவிற்சியுள்ளதாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.

ஆனால் அச்சுயந்திரத்தின் வருகையும் அதனூடாக உருவாகிய எழுத்தறிவு மரபும் மேற்குறிப்பிடப்பட்ட பண்புகளுக்கு முற்றிலும் எதிரான பண்புகளைக் கொண்ட புதிய யதார்த்தத்தைத் தோற்றுவித்தது. இன்று உலகெங்கும் ஆதிக்கம் செலுத்திவரும் அச்சு நூல்களின் வரலாறு 1445-1450 காலப்பகுதியில் ஜொகான் குட்டன் பேர்க் உருவாக்கிய அசையும் அச்சுகளைக் கொண்ட அச்சுப் பொறியிலிருந்தே ஆரம்பமாகியது. இவரால் உருவாக்கப்பட்ட மரத்தினாலான அச்சுயந்திரம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக அடிப்படை மாறுதல்கள் எதுவுமின்றி தொடரப்பட்டது. பதிப்பிக்கப்பட்ட நூல்களும் மத்தியகால கிறிஸ்தவ சமய நூல்களே ஆனால் மின்சாரத்தின் வருகையைத் தொடர்ந்து அச்சுயந்திரத்திலும் அச்சுக்கலையிலும் துரித மாறுதல்கள் ஏற்பட்டன. நீராவி அச்சுப்பொறி, இயந்திரமூலம் நூல்கட்டல், சுழல் அச்சுப்பொறி என்பன 1830 க்குப் பிற்பட்ட காலத்தில் உருவாகிய மாறுதல்களே.

இவ்வளர்ச்சிநிலையால் காகிதத்தில் பெருந்தொகையான நூல்கள் பல்வேறு துறைகளில் அச்சிடப்பட்டன. அச்சுநூல்களின் வருகைக்கு முன்பிருந்த தகவல் ஊடகங்களின் குறைபாடுகள் பலவற்றை அச்சில் வெளிவந்த நூல்கள் தீர்த்து வைக்கும் வகையில் அமைந்தன. அதுமட்டுமன்றி அச்சு வெளியீடுகளின் தோற்றம் முற்று முழுதான புதிய வரலாற்றை உருவாக்கியது. மத்தியகால கைவினைத் தொழில் நுட்பத்திற்கும் நவீன தொழில் நுட்பத்திற்கும் இடையிலான பரிநிலைக்கோட்டை உருவாக்கி வைத்தது. அசையும் அச்சின் வருகையேயாகும்.

“முதன் முதலாக எழுத்து காவிச்செல்லக்கூடிய ஒரு பண்டப் பொருளாக அதாவது தொழிற்சாலையில் உருவாகும் ஒரு சீரான மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்யப்படக்கூடிய, எல்லோராலும் நுகரப்படக்கூடிய பண்டப் பொருளாக உருவாக்கப்பட்டது” என மைக் லுகான் கூறுகிறார். இந்த உருவாக்கம் இதுவரை இருந்துவந்த கல்விப்பரப்பை விசாலித்தது. கல்வி யாவருக்குமான நிலையை உருவாக்க வழியமைத்தது. கல்வியில் குறிப்பிட்ட வர்க்கத்தினரிடமிருந்து வந்த ஏகபோகம் நீங்க உதவியது லத்தீன் (இந்தியாவில் சமஸ்கிருதம்) போன்ற உயர்குழாம் மொழிகளிலேயே மட்டும் வெளிவந்த கையெழுத்துப் பிரதி நிலை மறைந்து அகரவரிசையுடன் கூடிய ஒலி வரிவடிவ எழுத்துக்களைக் கொண்ட எல்லா மொழிகளிலும் வெளியீடுகள் பெருக ஆரம்பித்தன. இந்த வளர்ச்சி விஞ்ஞானம், தொழில் நுட்பம், சமூக விஞ்ஞானம், சமயம் என எல்லாத்துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. தேசிய மொழிகளிலும் வெளியீடுகள்; வளர்ச்சி பெற அது தேசியவாதத்தின் வளர்ச்சியாகியது.

அச்சுநூல்களின் பெருக்கமும் அதனால் உருவாகிய வாசிப்புப்பழக்கம், எழுதும் பழக்கம், ‘வாசிப்புக் கலாசாரம்’, ‘எழுத்தறிவுக்கலாசாரம்’ என சமூகமதிப்பைப் பெற்றது.

வாய்மொழி மரபில் செவிப்புலம் சார்ந்திருந்த வாசிப்புப் பண்பு எழுத்தறிவு மரபில் கட்புலம் சார்ந்ததாக மாறியது. ‘கற்பனை செய்தல்’ என்பது செவிப்புலத்தில் இருந்து கட்புலத்திற்கு மாற உரத்த வாசிப்பும் அபிநயமும் தேவையற்றதாகி விட்டது. எதுகை, மோனை, சந்தம் என்பவற்றின் முக்கியத்துவம் குறைந்து மௌனவாசிப்பிற்கு உரிய கவிதைகள், கட்டுரைகள், புனைகதைகள் உருவாகத் தொடங்கின. மௌனமாக வாசிக்கும் விடயங்கள் தனித்தனிக் காட்சிகளாக மனத்திரையில் ஓடும் நிகழ்ச்சியின் போது வாசகனின் செய்கை ஒரு திரைப்படக் கருவியின் செய்கையை ஒத்ததாகிறது.

- இ. கிருஷ்ணகுமார் B. A. , A. S. L. L. A.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
நூல்: களிமண் பதிவுகள் முதல் கணிணிப்பதிவுகள் வரை

மேலுமறிய:

மொழியியல்: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

குகை ஓவியம்: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88_%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D