"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619



கடமை என்றால் என்ன?

மனிதனின் கடமை என்று எதைக் குறிக்கின்றோம்? ஒருவனுக்குப் பிறரால் விதிக்கப்பட்ட அல்லது தனக்குத்தானாகவே விதித்துக் கொண்ட ஓர் இலக்கின் செயலாக்கத்தைத் தான் கடமையாகக் கருதுகின்றோம்.

ஒரு அலுவலகத்தில் பணி புரியும் ஒரு நபருக்கு மாதம் ஒரு தொகை ஊதியமாக வரையறுக்கப்பட்டு, அதற்காக அவர் செய்ய வேண்டிய பணிகள் யாவை என்று விளக்கப்படுகின்றது. அவரும் அன்றாடம் அந்தப் பணியினைத் தங்கு தடையின்றி செய்வது அவரது கடமை ஆகின்றது.

ஒரு பெற்றோர் தமது குழந்தைகளைப் பேணி வளர்த்து ஆளாக்கி அவர்களுக்குத் தகுந்ததொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதைத் தமது கடமையாகக் கொள்கின்றனர்.

முதலில் கூறிய அலுவலரே பெற்றோராகவும் இருக்கலாம். இருவிதமான பணிகளைச் செய்வது அவருக்கு இருவேறு கடமைகளாகக் கருதப்படுகின்றது. ஆனால் பெற்றோராய் செய்யும் கடமைக்கு ஊதியம் எதுவும் நிர்ணயிக்கப்படுவதில்லை. இதனால், கடமை என்பது ஓர் பொறுப்பு உணர்வு என்று கூறலாம். வாழும் வாழ்விற்கு ஓர் பிடிப்பு, ஓர் அர்த்தம், ஓர் இலக்கைக் கொடுப்பதாகக் கொள்ளலாம். அலுவலகத்தில், அதாவது வெளியுலகில் ஆற்றும் கடமைக்குக் கால வரையறைஉண்டு. காலை ஒரு குறிப்பிட்ட நேரம் துவங்கி, மாலை ஒரு குறிப் பிட்ட நேரம் வரை அலுவலகப் பணிகளைச் செய்வது அந்த நபருக்கு, அவர் எந்த நிலை ஊழியராய் இருப்பினும் கடமை ஆகின்றது. ஆனால், குடும்பத்தில் அவ்விதமாகக் கால வரையறைஏதும் வகுத்துக் கொள்வதில்லை.

இவற்றிலிருந்து நமக்குத் தெரிவது - கடமை என்பது மனிதன் தனக்குத் தானே வரையறுத்துக் கொள்ளும் இலக்கணம் கொண்ட செயல்பாடு. தனக்கு முன்னால் வைக்கப்பட்ட ஓர் பணியை நிறைவேற்றுவதாகவும் இருக்கலாம். தானே வகுத்துக் கொண்ட வரையறையை அடைவதற்கு முயலுவதாகவும் இருக்கலாம். எது எப்படி ஆயினும், அந்தப் பணியை ஓர் ஒழுங்கு முறையாக செயல்படுத்துதல் வேண்டும் என்பது தெளிவாகின்றது. மேலே கூறிய இரண்டு விதமான கடமைகளுக்கும் சில ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் உள்ளன.

நாம் வெளியுலகில் பணியாற்றும்போது, அதாவது, நமது கடமைகளை நிறைவேற்றும் போது அதற்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. காலம் தவறாமை, விதிகளை மீறாமை, இட்ட பணிகளைச் செவ்வனே செய்தல், மேலதிகாரி களுக்குப் பணிந்து நடத்தல், உடன் பணி புரிவோருடன் சுமுகமாகவும் அன்பாகவும் பழகுதல் அவற்றுள் சில. சுயமாகத் தொழில் செய்வோருக்கு இப்பண்புகள் அனைத்தும் பொருந்தும். தமது பணிகளில் ஓர் இலக்கை நிர்ணயம் செய்து, இலட்சியங்களைக் குறித்து கடுமையாக உழைத்து முன்னேறத் துடிப்பதும் ஒரு சாரார் இயல்பு. தமது கடமைகளை நேர்மையாக ஒழுங்காகச் செய்பவர்களுக்கே இப்பாதை சாத்தியம் ஆகின்றது. பொருள் ஈட்டுவது ஒன்றே இலட்சியமாய் இருப்பதைக் காட்டிலும், தனக்கு மட்டுமின்றி, தன்னைச் சார்ந்தவர்களுக்கும், சமுதாயத்திற்கும் சேர்ந்து ஒரு பரந்த நோக்குடன் சிந்தித்து செயல்படு வோரே வாழ்க்கையில் சாதனையாளர்கள் ஆகின்றனர்.

கீதையில் கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்று கூறியிருப்பதற்குப் பல அறிஞர்கள் பலவிதமான விளக்கங்கள் அளிப்பதை நாம் கேட்டிருக்கிறோம். மன சாட்சிக்கு மாறுபாடு இல்லாமல், நேர்த்தியாக, உண்மையாக, சத்திய வழியில், ஒழுங்காக செய்யப்படும் ஒவ்வொரு பணியும் நமக்கே தெரியாமல் நிச்சயம் ஓர் பலனை அளிக்கும். அது கண்ணுக்கே புலப்படாத நம்மால் உணரக்கூட முடியாத ஒரு பலனாகவும் இருக்கலம். மறைமுகமாக அந்த பலன் நிச்சயம் நம்மை வரவேண்டிய நேரத்தில் வந்து அடையும். ஓர் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யும், நிறைவேற்றும் எந்தக் கடமையும் என்றும் தோல்வியில் முடியாது. எதிர்பார்ப்பின் இலக்கே வெற்றி. எதிர்பார்ப்பின்மை வெற்றி தோல்வி என்ற பலன்களுக்கு அப்பாற்பட்டது. எதிர் பார்ப்பு, பலன், விளைவு என்ற உணர்வுகளை முழுவதுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, தனக்கு முன்னால் உள்ள ஓர் பணியை அல்லது தான் வகுத்துக்கொண்ட பணிகளைத் தனது கடமை என்று உணர்ந்து ஒருவன் செயல்பட்டால், நிச்சயம் அவனது வழிமுறைகளில், அணுகும் விதங்களில் குழப்பங்கள் இருக்காது, ஒழுக்கமின்மை இருக்காது, அது சீரிய செயலாகத் தான் இருக்கும்.

சில பணிகளில் கடமையைச் சரியாகச் செய்தார்களா என்பதனை அளக்கும் அளவுகோல் கிடையாது. மருத்துவர் ஒருவர் பணி நோயாளியின் நோய் குணம் பெறுதலில் அறியப்படுகின்றது. வாகன ஓட்டுநரின் பணி அவர் குறித்த நேரத்தில் விபத்துக்கள் இன்றி பத்திரமாகச் சென்றடைய வேண்டிய இடத்தை அடைந்தது கொண்டு அறியப்படுகின்றது. ஒரு தச்சன், சிற்பி, கலைஞன் என இப்பணிகளில் ஈடுபடுவோரது செயல்திறன்களும் கடமை யுணர்வும் அவர்களது படைப்புகளில் பிரதிபலிக் கின்றது. ஒரு சில பணிகளில், உதாரணமாக, ஆசிரியப்பணியில் இந்தக் கட்டுப்பாட்டினை அளக்கும் அளவுகோல் (accountablity) துல்லிய மாகக் கிடையாது. எவ்விதமான பணியாக இருப்பினும் உண்மையும் நேர்மையும் கலந்த கடமை உணர்வே என்றும் ஏற்றம் அளிக்கும் என்பதை நாம் அனைவரும் உணர்தல் வேண்டும்.

அத்தனைக்கும் ஆசைப்படு என்பதன் அர்த்தம், தன்னைச் சுற்றியுள்ள அத்தனை உயிர்களின் நன்மைக்கும் ஆசைப்படு என்பது எத்துணை நிதர்சன வாக்கு. ஒரு செயலைச் செய்யும் ஒருவன் தனக்கு மட்டும் பலன் தரவேண்டும் என்ற நோக்கினின்று மாறுபட்டுத் தன்னைச் சுற்றயுள்ளவர்களும் பலனடைதல் வேண்டும் என்ற பரந்த நோக்கில் சிந்தித்து செயல்பட்டால் நமது செயல்களில் தொய்வு என்பதற்கே இடமில்லை. பலன் என்றசொல் பெரும்பாலும் செல்வம், பதவி, புகழ், வாய்ப்பு போன்றவற்றையே உணர்த்துவதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதற்கும் அப்பால் மனநிறைவு அதாவது ஆத்ம திருப்தி என்றும் ஓர் பலன் உள்ளது. தன்னலமற்ற கடமைகள் தரும் மனநிறைவினால் வரும் மகிழ்ச்சி அதனை அனுபவிக்கும்போதுதான் உணர முடியும். பணத்தைக் கொண்டு தனதாக்கிக் கொண்ட ஒரு பொருளால் இந்த மகிழ்ச்சியை நிச்சயம் பெறமுடியாது.

ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒவ்வொரு வரும் தத்தம் கடமையை உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம் அந்தக் குடும்பத்தில் குழப்பங்கள் இருக்காது. உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் வாழ்க்கைத்தரம், செல்வம், கல்வி, பதவி போன்றவை ஒன்று போல அமைவதில்லை. இது உலக நியதி. தனக்கென உள்ள வட்டத்துக்குள் முழு மனதுடன் தனக்கு முன்னால் உள்ள கடமை களைத் தெளிவாக உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம் சுபிட்சமான எதிர்காலத்தைக் காணலாம். முயற்சி, திருப்தி, சகிப்புத்தன்மை, பொறுமை, பிறருடன் ஒப்பிடாது இருத்தல், பொறாமை இன்மை போன்ற முக்கிய பண்புகள் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கடமையைச் செய்யும்போது அரணாக அமைதல் மிகவும் அவசியம்.

பிள்ளைகளைச் சிறப்பாக உயர் பண்பு களுடன் வளர்த்தல் பெற்றோர் கடமை. வளர்ந்த பின்னர் தமது பெற்றோரைப் பேணிக்காத்தல் பிள்ளைகள் கடமை. இல்லறத்தை நல்லற மாக்குதல் கணவன் மனைவி இருவரது கடமை. இக்கடமைகளை நிறைவேற்றுதலில் ஒவ்வொரு வரும் தத்தமது சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல சவால்களைச் சந்திக்க நேரிடலாம். ஆனால் அவர்கள் அனைவருக்கும் குடும்ப ஒற்றுமையும் முன்னேற்றமும் காக்கப்பட வேண்டும் என்பதே ஒரே இலக்காக இருத்தல் வேண்டும்.

பிள்ளைகளுக்குத் தகுந்த கல்வி அளிப்பதும், அவர்களுக்குத் திருமணம் செய்வதும், அவர்கள் வசதியான வாழ்விற்குச் சொத்துக்கள் சேர்ப்பதும்தான் பெற்றோரின் தலையாயக் கடமையாகக் கருதப்படுகின்றது. இவை யாவும் முக்கியமான கடமைகள் தான். அவற்றை நிறைவேற்றுவதில் குடும்பத் தலைவனுக்கும் தலைவிக்கும் பெரும்பங்கு உள்ளதுதான். ஆனால் இதற்கும் மேலாகத் தாம் பெற்ற பிள்ளைகள் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்வதிலும், உயர் பண்புகளைக் கொண்டு வாழ்வதிலும் தம் பெற்றோரின் வழியே நல்வழியில் நடக்க வேண்டும் என்றஉணர்வுடன் வளருமாறு அவர்களை வளர்த்தல் மிகவும் அவசியம்.

நம்முடைய எதிர்காலம் குறித்துப் பல கனவுகளுடன் தமது பெற்றோர்கள் பாடுபட்டுப் பொருளீட்டித் தமக்குக் கல்வி அளிக்கும்போது, பிள்ளைகளின் கடமை அதை உணர்ந்து, கல்வியில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு மணித்துளியையும் பயனுள்ளதாக்கி அயராது உழைத்து முன்னேறுவதையே தமது தலையாய கடமையாகக் கருத வேண்டும்.

எந்தச் சூழலானாலும் தனது கடமைகள் யாவை என்பதை முதலில் ஒரு மனிதன் உணர வேண்டும். பின்னர் அதன் செயலாக்க வழிமுறைகளைத் தெளிவாக வகுத்துக் கொள்ளுதல் வேண்டும். முன்னுரிமைப்படுத்தி பணிகளை வரிசைப்படுத்தி காலம் தாழ்த்தாது தெளிவான சிந்தனையுடன் செயலாக்க முனைதல் வேண்டும். செயல்படும் போது எதிர்வரும் சவால்களைச் சீரிய நெறிகள் கொண்டு, உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் சமாளிக்க வேண்டும்.

கடமைகளை நிறைவேற்றுதல் அன்றி பிரதிபலன் எதிர்பாராது அயராது உழைக்கும் பலத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். சிந்திப்போம். கடமையுணர்வுடன் செயல்படுவோம்.

- முனைவர் G.P. ஜெயந்தி

http://www.thannambikkai.net/2008/12/01/1515/