"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


" இன்று அமர்க்களமான நாள்!" என்று சொல்லிக் கொண்டு வாழ்வின் காலைப் பொழுதைத் துவங்குங்கள்.

எம். எஸ். உதயமூர்த்தி எழுதி வடித்த தன்னம்பிக்கை ஊட்டும், சுயசிந்தனையை தூண்டும் கட்டுரைகள் பல. சமூகத்தில் அவரின் கட்டுரைகளை வாசித்து சுயசிந்தனையோடு... முன்னேறி வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் பலர். அத்தகைய வெற்றிகளுக்கும், இளைய தலைமுறையின் வழிகாட்டுதலுக்கு தீ பந்தமாகவும் விளங்கும் டாக்டர். எம். எஸ். உதயமூர்த்தி அவர்களின் எண்ண கடலிலிருந்து ஒரு கட்டுரைத் துளி உங்கள் பார்வைக்கு...

" உன்னால் முடியும் "

ஒரு காலத்தில் ரோம் சாம்ராஜ்யம் புகழ்பெற்ற நாடாக, ஆட்சியாக இருந்தது. ஆனால், அதன் புகழ் நிலைபெற்று நிற்கவில்லை. வெகுவேகமாக ரோம் சாம்ராஜ்யம் கவிழ்ந்தது. அதன் சரிவுக்கு காரணம், காமப்பாதையிலும், கள் போன்ற போதைப் பொருட்களிலும் அந்த நாட்டு அரசர்கள் பெரிதும் மூழ்கி திளைத்தது தான்.

தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எப்போதுமே ஒரு லட்சியம் இருக்கும். எப்போது மனதில் லட்சியம் இடம் பெற்று விட்டதோ அதன்பின் அதை எப்படி செயல்படுத்துவது என்ற சிந்தனை எப்போதும் அவன் உள்ளத்தில் அலை மோதும். அதற்கான ஆய்வு வேலைகளைத் துவக்குவான். அதுபற்றிய அறிவும், அனுபவமும் பெற்றவர்களின் ஆலோசனையை பெறுவான். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதில் தான் அவன் கவனம் இருக்கும்.

ஒரு உதாரண சம்பவம் பல பத்திரிகைகளிலும் சில ஆண்டுகளுக்கு முன் வந்தது. யாஹ்யகான் என்பவர் பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்தார். அந்த நாட்டின் பிரபல பாடகியான கீதா என்ற பெண்மணியை தன்னை வந்து பார்க்குமாறு அழைப்பு அனுப்பினார் ஜனாதிபதி. ஜனாதிபதி மாளிகைக்கு பாடகி கீதா வந்தபோது அவரை உள்ளே விட மறுத்து விட்டனர் அரண்மனைக் காவலர்கள். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் நடக்காதபோது, உள்ளிருந்து நேராக ஜனாதிபதி ஆளை அனுப்பினார் அழைத்து வர உள்ளே போனார் கீதா.

முடிவில் மாளிகையிலிருந்து கீதா வெளியே வந்தபோது, மிகுந்த அன்புடன், மிக்க மரியாதையுடன் அவரை வழியனுப்பினர் பாதுகாவலர்கள். இதைக் கண்ட கீதா, " நான் உள்ளே போனபோது இவ்வளவு கெடுபிடி செய்தீர்களே? " என்று கேட்டார். அதற்கு காவலர்கள் தந்த பதில் " அம்மா! நீங்கள் போகும்போது வெறும் கீதாவாக போனீர்கள். திரும்பி வரும்போதோ தேசியகீதமாய் வெளிவந்தீர்கள்!" என்றனர்!

இப்படிப்பட்ட தலைவர்களின் ஆட்சி எப்படி இருக்கும்? தன்னம்பிக்கையும், லட்சியமும் உள்ள மனிதன் தன் காரியத்தில் குறியாக இருப்பான். ஆனால், குடியிலும், முறைகெட்ட காரியங்களிலும் தன்னை மறப்பவர்கள், எதையும் சாதிப்பதில்லை. தலைவனின் பலவீனங்கள் நாட்டையே பலவீனப்படுத்துகின்றன. அடுத்தமுறை அந்த தலைவனை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. அதே சமயம் தன்னம்பிக்கையும், லட்சியமும் கொண்ட தனிமனிதர்கள் நிறைய இருக்கும் ஒரு சமுதாயத்தில் யாரும் தலைவனை லட்சியம் செய்வதில்லை; தலைவனையும் மீறி நாடு முன்னேறுகிறது.

தன்னம்பிக்கைக்கு உதாரணமாக, அமெரிக்க நாட்டில் ஒரு மாமனிதர் அந்நாட்டின் தலைவராகப் பதவி ஏற்றார். அவர் மிகுந்த சந்தேகப் பிராணி. எனவே, அவரது பதவிக்கு எதிராக, போட்டியாக நிற்கும் கட்சியின் தலைமையகத்தில் அவர் தன் ஆட்களை அனுப்பி, அங்கே உள்ள தகவல்களை திருடி வரச் சொன்னார். அவர் பெயர் நிக்சன். இதன் விளைவு என்ன? வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. அவர் பதவியிலிருந்து இறங்க வேண்டியதாயிற்று. நினைவில் கொள்ளுங்கள் தன்னம்பிக்கை என்பது ஒரு மாபெரும் சக்தி. மனிதர்களிடத்தில் இது இயல்பாக உள்ள ஒரு சக்தி. தன்னம்பிக்கையும், லட்சியமும், நேர்மையும் இல்லாதவர்களை மக்கள் எளிதில் நிராகரிக்கின்றனர். முன்னுக்கு வர விரும்பும் எந்த இளைஞருக்கும், பெண்ணுக்கும் தன்னம்பிக்கையும், லட்சியமும், நேர்மையும் அவசியம் தேவை.


தமிழ்நாட்டில் நடந்த மற்றொரு சம்பவம்... எட்டயபுரம் மன்னரின் அவையில் கவிஞராக இருந்தார் பாரதியார். ஒருநாள் பாரதி மீசை வைத்துக் கொள்வதுதான் கம்பீரம் தரும் என்று தீர்மானித்து, மீசையுடன் அரண்மனைக்குச் சென்றார். எட்டயபுரம் மன்னருக்கு இது பிடிக்கவில்லை. பாரதியின் சித்தப்பாவிடம் அவர் மீசையை எடுக்கும்படியும், இல்லாவிட்டால், மன்னர் வழங்கும் மாத மான்ய பணம் நிறுத்தப்படும் என்றும் கூறினார்.

மன்னரிடம் சென்று, " ஐயா, இத்தனை நாள் என் கவித்திறமைக்காக மான்யம் அளிக்கிறீர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போதுதான் மீசைக்காக என்பது தெரிகிறது. இனி, அந்த மீசைக்காக காசு வேண்டாம்!" என்று சொல்லிவிட்டு வெளியே நடந்தார் பாரதியார்! தன்னம்பிக்கை உள்ளவர்கள் சுய கவுரவத்தைப் பறிகொடுக்க மாட்டர். பெரிய அரசியல் தலைவர்களை சுற்றி வரும் இன்றைய மனிதர்களைப் பற்றி கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய புகழ்பெற்ற விஞ்ஞானி வான்பிரான். அவர் ராக்கெட் செய்வதில் ஈடுபட்டிருந்தார். அதாவது, ராக்கெட்டின் நுனியில் வெடிமருந்து குண்டை வைத்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்ப முடியும். 360, 450 கி.மீ., தொலைவிற்கு ராக்கெட்டை அனுப்பி சோதனை செய்து கொண்டிருந்தனர். அதில் தான் ஈடுபட்டிருந்தார் வான்பிரான்.
" பல ராக்கெட்டுகள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு விண்வெளியில் செல்கிறது. நாம் ஏன் சந்திர மண்டலத்திற்கு ராக்கெட்டை அனுப்பக்கூடாது? " என்று எண்ணினார். இப்படித்தான் ஒன்றிலிருந்து ஒன்றாக மனித மனதில் எண்ணங்கள் புறப்படுகின்றன. எண்ணங்கள் வேர் விடவும், வலிமை பெறவும் சில நாட்கள் ஆகின்றன. அதன்பின் இது நிஜமாக நிகழ்கிறது; செயல் வடிவம் பெறுகிறது.

தன்னம்பிக்கை உள்ளவன், ஏன் அப்படி - நாம் நினைக்கிறபடி செய்து பார்க்க கூடாது என்று எண்ணுகிறான். அதையே இரவு, பகலாக நினைத்துக் கொண்டிருக்கிறான். இதன் விளைவாக தெளிவு பிறக்கிறது; அதை செய்து முடிக்கிறான்.

நமது திருமந்திர நூலில் ஓர் இடத்தில், " தத்துவமசி " என்ற வார்த்தை வருகிறது. தத் என்றால் அது, துவம் என்றால் நீ என்று பொருள். அசி என்றால், ஆகிறாய் என்று பொருள்படும். அதாவது, " நீ என்ன எண்ணுகிறாயோ அதுவாக ஆகிறாய்! " என்பது பொருள். இன்று நாம் எண்ணுகிறோம். அதே நினைவாக இருக்கும் போது அதை செய்து முடிக்கிறோம். தன்னம்பிக்கை தான் இதன் மூலம். அது தான் நம்மை எண்ணங்களிலிருந்து, செயல்வரை அழைத்துச் செல்கிறது.

எண்ணம் செயலாவதை பற்றி மாண்டூக்கிய உபனிஷத்தில் அகம் பிரம்மாஸ்மி என்று வருகிறது. அதாவது, பிரம்மம் என்ற மாபெரும் இறை சக்தி நம்மில் குடிகொண்டிருக்கிறது என்பது தான் அதன் பொருள்.

உண்மையும், லட்சிய சாதனையும் இப்படியெல்லாம் வழிகாட்டும் போது, ஏன் இது மக்களின் மூலம் நிறைவேறுவதில்லை? இதை பற்றிய ஒரு பெரிய உண்மையை ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க நாட்டில் இருந்த ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.


அவர் எதையுமே சாதிக்க முடியாமல் சோர்ந்து உட்கார்ந்திருந்தபோது தன் பிரச்னைகளை எழுதி, " ஏன் இப்படி எனக்கு ஏற்படும்படி செய்கிறாய்? என்று கடவுளிடமே கேட்டார். அரை மணி நேரம் சென்றபின், அவர் கையிலிருந்த பேனா தானாக எழுத ஆரம்பித்தது. அதில் வந்த வார்த்தை, " ஒருமைப்பட்ட மனதுடன் மக்கள் என்னை அணுகுவதில்லை! " என்று கடவுளிடமிருந்து பதில் வந்தது. அடுத்த வரியாக, கடவுள் சொன்ன வாசகம், " மக்கள் என்னை நம்புவதில்லை!" என்பது. இப்போது கடவுள் நம்பிக்கை பற்றி நீங்களே யோசித்துப் பாருங்கள். நாம் கடவுளை வேண்டும் போது, பூரணமாக மனம் ஒன்றி வேண்டுகிறோமா? அப்படி நாம் கடவுளை வேண்ட நினைக்கும் போது, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அமைதியில் தான் தெளிவும், மேலிடத்திலிருந்து சரியான எண்ணமும் தோன்றுகிறது. இதை புத்தபிரானிலிருந்து ஏராளமான யோகிகள் வரை பலரும் கூறியிருக்கின்றனர்.

இதை எழுதியபோது தமிழ் பாடல் ஒன்றுதான் என் நினைவுக்கு வருகிறது. மனதில் சலனமில்லாமல் - மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும் என்று ஒரு ஞானி வேண்டிப் பாடியிருக்கிறார். ஏன் நாமும் செய்யக் கூடாது?

ஒரு நாட்டின் சொத்து அதன் நிலவளம், நீர்வளம், கனிம வளம் தான். அத்துடன், என்று மக்களின் உழைப்பும், ஆர்வமும், முன்னேற்ற மனப்பான்மையும், லட்சிய நோக்கும், தொழில் திறமையும், பலன் காண முடியும் என்ற நம்பிக்கையுடன் ஈடுபடுகிறதோ அன்று தான் நாட்டின் வளம் பெருகும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும், வாழ்வு என்ற மகிழ்ச்சிகரமான சூழ்நிலை எங்கும் பரவும்.

ஒரு எண்ணம் மனதில் எழுகிறது. அது கொஞ்சம், கொஞ்சமாக வலுப்பெற்று எப்போது நம்மை செயல்படத் தூண்டுகிறதோ, அப்போதுதான் அது பலன் தரும். எப்படிப்பட்ட எண்ணம் மனதில் இடம் பெற வேண்டும்?

ஒரே ஒரு வார்த்தை தான். அது, நம்பிக்கை. உங்களுக் குள்ளேயே, " அது என்னால் முடியும். நான் முயற்சிக்கப் போகிறேன்! " என்ற நம்பிக்கைதான் அது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பத்திரிகை நிருபர் நார்மன் கசினை பார்த்த மருத்துவர்கள்,  " நீங்கள் பிழைப்பது எளிதல்ல. நோய் உச்ச நிலை அடைந்து விட்டது. இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்? அதை நாங்கள் வாங்கித் தருகிறோம். இந்த கடைசி வாரங்களையாவது நீங்கள் சந்தோஷமாக கழியுங்கள்! " என்றனர்.


நார்மன் கசின் சொன்னார் பொழுதுபோக்க, எனக்குப் பிடித்தது சார்லி சாப்ளினுடைய சினிமா படங்கள் தான்... என்றார். சார்லி சாப்ளின் பிரபல ஹாஸ்ய நடிகர்; இங்கிலாந்துக்காரர். சார்லி சாப்ளின் படத்தை போட்டு காண்பித்தனர். முழுவதுமாக ரசித்தார். தாங்க முடியாமல் சிரித்தார். மூன்றாவது வாரம் மருத்துவர்கள் வந்து பார்த்த போது அவர் பூரணமாக குணமடைந்து விட்டதைப் பார்த்து, சோதனை செய்து ஆச்சரியப்பட்டனர். மன நிலைமாற்றம், நம்பிக்கை, சந்தோஷமான எண்ணம் என்னவெல்லாம் செய்கிறது என்பதை கவனியுங்கள்... இது அமெரிக்காவில் ஹூஸ்டன் மாநகரில் நடந்த உண்மை சம்பவம். இந்த அதிசயத்தை அனுபவித்த மருத்துவர்கள் அவரை மருத்துவ கல்லூரியில் ஒரு பேராசிரியராக நியமித்தனர்.

அமெரிக்காவில் இன்றுகூட ஒரு பெண்மணி பலவித நோய்களுடன் வரும் மக்களை குணப்படுத்தி வருகிறார். அவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் நன்கு, அலசி ஆராய்ந்து பைபிளை முழுவதுமாக படித்தவர். நோயுற்றவர்களை தேவாலயத்திற்குள் அழைத்துச் சென்று இயேசு கிறிஸ்துவின் சிலை எதிரில், " ஓ எங்கள் பிரபுவே..." என்று ஆரம்பிப்பார்.

பின் விவரமாக, " இப்படி இவர்கள் நோயுடன் வாடுகிறார்களே... நீர் ஒருவர் தானே இதை எல்லாம் நிவர்த்தி செய்ய முடியும். இப்படி கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுங்கள்! " என்று சில பைபிள் வசனங்களை சொல்வார். இப்படி, செய்து இதுவரை 20 நபர்களை, நோய்களிலிருந்து காப்பாற்றி இருக்கிறார் என்றால், எத்தகைய நம்பிக்கை, வேண்டுகோள் இதை மாற்றுகிறது என்பதை எண்ணிப்பாருங்கள். அதுதான், நம்பிக்கை - நம்பிக்கை - நம்பிக்கை!

இதை ஒட்டி மற்றோர் செய்தியையும் சொல்ல வேண்டும். சமீபத்தில், ஒரு புத்தகம் படித்தேன், " கடவுளுடன் நான் நடத்திய சம்பாஷனை! " என்பது தான் அதன் தலைப்பு. இந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் பல காலம் எழுதினார். பல விஷயங்களைப் பற்றியும் எழுதினார். ஒன்றும் வெளியாகவில்லை. மற்ற எந்த விதங்களிலும் இவர் எழுத்து அவருக்கு வருமானத்தைக் கொடுக்கவில்லை. எனவே, " கடவுளே நீங்கள் இருப்பது உண்மை தானா? உண்மையானால், என் கஷ்டங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு தானா இருக்கிறீர்? " என்று கேட்டு கடவுளுக்கு விபரமாக கடிதம் எழுதினார். பிறகு, அசந்து போய், எழுதிய இடத்திலேயே உட்கார்ந்து விட்டார். நேரம் போனது தெரியவில்லை. அரை மணி நேரம் கழித்து அவர் பிடித்துக் கொண்டிருந்த பேனா எழுத ஆரம்பித்தது! அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் வந்தது. இதன் முக்கியத்துவம் என்னவெனில் கடவுளிடம் பேச முடியும், அவர் வழி காட்டுவார் என்பதை விவரமாக, தனக்கு ஏற்பட்ட அனுபவம் அனைத்தையும் எட்டு கனமான புத்தகங்களாக எழுதி இருக்கிறார்.

இதில், இரண்டாவது புத்தகத்தில் ஓரிடத்தில் கடவுள் கூறுகிறார். " நான் அவர்களுக்கு எப்படி உதவுவது? மக்கள் கடவுளை நம்புவதில்லை! " என்று அழுத்ததிருத்தமாக சொல்கிறார். இது உண்மைதான் என்று நம் கண்முன் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கும் போது தெரிகிறது.

ஏனெனில், நாம் வேலை நிமித்தமாக ஏதேனும் கோவில் இருக்கும் வழியே செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் வழியே நடந்து செல்பவர்கள், கோவில் அருகில் நின்று கன்னத்தில் இரண்டு போட்டுக் கொண்டு, கண்களை மூடி வேண்டிக் கொண்டு நடந்து செல்வதை பார்க்கலாம்.

இதைத் தான் அந்த எழுத்தாளர் குறிப்பிடுகிறார். இது ஆழமான ஒரு செய்தி. இந்த வேலைக்காரன் மோசம் என்ற எண்ணம் இருந்தால் வேலைக்காரனிடம் பணத்தைக் கொடுத்து, " வங்கியில் கட்டி விட்டு வா... " என்று கூறுவீர்களா? இந்தக் காரியம் நடக்காது என்று தீர்மானித்து விட்டால் கடவுளிடம் போய் முறையிடுவீர்களா?

எல்லாம் எதில் முடிகிறது என்றால், நம்பிக்கை என்ற ஒரு வார்த்தையில். நம்மீது நமக்கு நம்பிக்கை வேண்டும். பயப்பட வேண்டியதில்லை. கடவுள் பெரியவர் தான் எல்லாம் அறிந்தவர் தான் எல்லாம் வல்லவர்தான். அதற்காக அவர் நமக்கு எங்கே உதவப் போகிறார் என்று ஒரு நாளும் எண்ணிவிடாதீர்கள்.

அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். முதலில் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். ஞானிகளைப் பற்றியும், நாயன்மார்களைப் பற்றியும், ஆழ்வார்களைப் பற்றியும், யோகிகளைப் பற்றியும், சித்தர்களைப் பற்றியும், அவர்கள் காட்டும் வழிகளைப் பற்றியும் ஏராளமான தமிழ் நூல்கள் இருக்கின்றன. இவர்கள் நம்மைப் போல் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள். இவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்; நம்புங்கள். நம்பிக்கை தான் எல்லாம். உங்கள் மீது, முடியும் என்ற நம்பிக்கையுடன் கை கூப்புங்கள்; செயல்படுங்கள்.
எல்லாம் நல்லதே நடக்கும்,
நம் எண்ணம் சிறகடித்துப் பறக்கும்!
பொல்லாங்கு கீழ் விழுந்து துடிக்கும்!
இந்தப் புவியில் புதிய யுகம் பிறக்கும்!
என்று ஸ்ரீ அரவிந்த அன்னை எழுதியிருக்கிறார்.
தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தன்னை நம்பாமல் பிறரை சார்ந்து வாழ ஆசைப்படுவர்; தங்கள் பொறுப்பை, கவலைகளை யார் தலையிலாவது சுமத்தி விடுவர்.

ஒரு தீவில் கப்பல் உடைந்து ஒரு பெரிய பணக்காரக் குடும்பம், அந்தத் தீவில் அகப்பட்டுக் கொண்டபோது, அங்கிருந்த சமையல்காரன் தான் எல்லாருக்கும் தைரியமூட்டிக் காரியம் செய்யச் சொல்லி ஒரு தலைவனாக நடந்து கொண்டான் என்று ஒரு கதை இருக்கிறது.

நாம் பிறருக்கு தைரியமூட்ட முற்படும் போது, நமக்கு தைரியம் பிறக்கிறது, நம்பிக்கையும், தைரியமும் கொடுப்பதால் குறைவதல்ல; கொடுக்கக் கொடுக்க நம்மிடம் கூடிப் பெருகும் பொருள் அது. அரசியல் கூட்டங்களில் ஒரு மூன்றாந்தரத் தலைவன் மற்றொரு கட்சிக்காரனைத் தாக்குவதையும், நகைப்பதையும் நீங்கள் கண்டிருக்கக் கூடும்.

அதிலிருக்கும் மனத் தத்துவம்... பிறரைப் பற்றிக் கேவலமாகப் பேசும் போது ஏதோ நாம் அவனை விட உயர்ந்தவன் என்ற இறுமாப்பு நமக்கு எழுகிறது, குழந்தைக்குத் தைரியம் கொடுக்கும் போது, நாம் பெறும் தைரியம் போல. ஆகவே, எங்கெல்லாம் தேவையோ, அங்கெல்லாம் ஒரு வார்த்தை சொல்லுங்கள்; தைரியம் கொடுங்கள்; பிறரது தன்னம்பிக்கையை வளருங்கள். அவை உங்களையே வளர்ப்பதை உணர்வீர்கள்.

தன்னம்பிக்கை இல்லாதவர்கள், கொஞ்சம் பலகீனமானவர்கள். பிறரிடம் யோசனை கேட்கும் போது அவர்கள் சர்வ ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும்... " யோசனை தான் கேட்கிறேன். ஆனால், எப்படி முடிவு செய்வது என்பது என் செயல்!" என்பதை அவர்கள் தங்களுக்குத் தானேயும், யோசனை சொல்பவரிடமும் தெளிவு படுத்தி விட வேண்டும். ஏனெனில், பிறர் யோசனையையும், முடிவையும் ஏற்று நடக்கும்போது, நாம் நம் சுயத் தன்மையை இழந்து விடுகிறோம்.

தன்னம்பிக்கையின்மையின், மறுபக்கம் கர்வம், தற்பெருமை, அகம்பாவம் என்ற குணங்கள், தன்னம்பிக்கையின்மை எத்தனை கெடுதலோ, அதே போலத்தான், என்னால் எல்லாம் முடியும்... " மனது வைத்தேனானால். மறுபடியும் செய்து காட்டுவேன்... " " ஒரு தரம் புரிந்து கொண்டேனானால் போதும், விடமாட்டேன்! " என்று சிலர் தன் திறமையைப் பற்றி அறிவுக்கு மீறிய கணிப்பு செய்வர்.

ஒரு சமயம், " நான் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்... " என்று கூறி, சீனிவாசன் என்ற இளைஞரிடம் தோற்றுப் போனார் காமராஜர். வரிசையாக கென்னடி வெற்றி பெற்றுக்கொண்டே வந்தபோது, " கென்னடி எதை எடுத்தாலும் வெற்றி பெறுவார்! " என்று பத்திரிகையில் எழுதினர்; அவருக்கும் அப்படி ஓர் நம்பிக்கை பிறந்தது.

இதன் விளைவாக, சரியான முன் ஏற்பாடு இல்லாமல் கியூபாவின் மீது எடுத்த படையெடுப்பு பெரிய தோல்வியில் முடிந்து அவரை மூக்கொடிய வைத்தது, அகம்பாவம், தன்னைப் பற்றிய அளவுக்கு மீறிய அதி நம்பிக்கையால் வருவது. இது தானே ஏற்படுவது மட்டுமல்ல... " சுற்றியிருக்கும் கும்பல் துதிபாடும் கும்பல் காலில் விழும் கும்பல் " ஆகியவற்றால் வரும். தலைவனின் பெருமையைப் புகழ்பாடும் போதும், பல தலைவர்கள் அதை உண்மையென்று நம்பி மோசம் போய் விடுவர்.

தாழ்வு மனப்பான்மையும் நம் தன்னம்பிக்கையைக் குலைத்து விடும். நம்மை விட அறிவிலும், திறமையிலும், வலிமையிலும் மிகுந்துள்ளவர்கள் உலகில் நிறையப் பேர் இருக்கக் கூடும். அவர்களோடெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து, நாம் அப்படி இல்லையே என்று ஒப்பாரி வைப்பது நல்லதல்ல.

நம் உணர்வுதான், நம் நினைவுகள் தான் நம்மை வாழ வைக்கின்றன.

" இன்று அமர்க்களமான நாள்! " என்று சொல்லிக் கொண்டு வாழ்வின் காலைப் பொழுதைத் துவங்குங்கள்.

தன்னம்பிக்கை இல்லாதவர்கள் பெரும்பாலும் தான் இருக்கிற சூழ்நிலையைப் புரிந்துகொள்ள மாட்டர் அல்லது புரிந்துகொள்ள மறுப்பர். நாம் இருக்கிற சூழ்நிலை, நமது சக்தி, நம்மால் என்ன முடியும் என்பதை பற்றி சரியான தெளிவு இல்லாத போது நாம் எடுக்கிற முடிவுகள் தவறாகப் போகின்றன. அப்போது நம் ஆசைகளால் நம் முடிவுகள் நிர்ணயிக்கப்படுகின்றன. நடைமுறை உண்மைகளிலிருந்து பெறப்படுவது அல்ல. நோக்கே கோணலாக இருக்கும்போது நமது குறி எங்கே சரியாக இருக்கும்...?

நம் நிலைமை என்ன, நம் குடும்ப நிலை என்ன, நம் லட்சியம் என்ன? அது சாதிக்கக் கூடியதா? அதற்கு வேண்டிய அறிவும், திறமையும், பயிற்சியும், பக்க பலமும் இருக்கிறதா என்று அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும்.

இதைத் தான் அழகாகக் கூறுகிறார் வள்ளுவர்: " வினைவலியும், தன் வலியும், மாற்றான் வலியும், துணை வலியும் தூக்கி செயல்!' என்று செயலின் தன்மையை நன்கு ஆராய்வதோடு, நம்மால் முடியுமா, மாற்றானின் வலிமை என்ன, நமக்குப் பக்கத்துணை என்ன என்று ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்கிறார்.

ராஜாஜியிடம் ஓர் அசாதாரண தன்னம்பிக்கை என்றும் உண்டு. வின்ஸ்டன் சர்ச்சிலானாலும், காந்திஜியானாலும் அவர் தன் தனித்தன்மையை இழந்து விடாமல், வாதிடுவார். பிறரது குற்றங்குறைகளைச் சுட்டிக் காட்டுவார். பிறரது புகழோ, வலிமையோ, செல்வாக்கோ எதுவும் அவரை அசைத்ததில்லை.

ராஜாஜி சென்னை மாநில முதல்வராயிருந்த போது, சென்னையை வட சென்னை - தென் சென்னை என்று பங்கிட்டுப் பிரித்து, ஆந்திரர்களுக்குப் போய் விடும் அபாயம் இருந்தது. ராஜாஜியோ சென்னையைத் தமிழ்நாட்டுடன் சேர்த்தார். காரணம், வட மாநில தலைவர்களுக்கு சமமாக அவரால் வாதாட முடிந்தது.


பின் முதல்வரானார் காமராஜர். தமிழ் நாட்டுக்கு சேர வேண்டிய தேவிகுளம், பீர்மேடு போன்ற ஊர்கள் கேரளத்துடன் சேர்க்கப்பட்டன. காமராஜரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆராய்ந்து பார்த்தால், அப்போது அரசியல் துறையில் காமராஜர் வளர்ந்து கொண்டிருந்த சமயம். தன்னைப் பற்றிய சுய உணர்வு, தன்னம்பிக்கை அவரிடம் இல்லாமல் தேவிகுளம், பீர்மேடு பறிபோயிற்று. அதே காமராஜரை, நேரு இறந்ததும் பாருங்கள். தன்னைப் பற்றிய சுய உணர்வு, அவருக்கு " காமராஜின் பதவி விட்டு விலகும் திட்டத்தை " நேரு அங்கீகரித்ததிலிருந்து - அதிகம் வந்தது. ஆகவே, நேரு இறந்ததும் சாஸ்திரியைப் பிரதமர் ஆக்கினார். சாஸ்திரி இறந்ததும் இந்திரா காந்தியைப் பிரதமர் ஆக்கினார். தன்னைப் பற்றிய சுய உணர்வுடன் பாடுபட்டார் காமராஜர்.

இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தார் காந்திஜி. பாகிஸ்தானைப் பெற்று தன் மக்களுக்குத் தனிநாடு அளித்தார் ஜின்னா. நேற்றைய தோல்விகளிலிருந்து தனி மனித முன்னேற்றத்திற்கும், நாட்டு முன்னேற்றத்திற்குமான, பல நல்ல பாடங்களை நாம் அங்கே கற்றுக்கொள்ள முடியும். மனம் என்ற நாற்றங்காலில் எண்ணம் என்ற விதை விழும்போது புதுப்புல் - புதுநெல் அங்கே முளைக்கிறது. நேற்று மடிந்த வைக்கோல் இன்று நல்ல எருவாகி இருக்கிறது.
தன்னம்பிக்கை பெற என்ன வழி என்று ஆராய்வதன் முதல்படி, நமது பயத்தின் காரணத்தைப் புரிந்து கொள்வது தான்.
ஏன் பயப்படுகிறோம்? பல சமயம் நடக்க முடியாதவைகளை எல்லாம் எண்ணிப் பயப்படுகிறோம். அந்தச் சமயத்தில் உங்கள் பயத்தை எழுதி ஒரு பெட்டியில் போடுங்கள். அதை ஒரு வாரம், ஒரு மாதம் கழித்துப் படித்துப் பாருங்கள். இதற்கா பயந்தோம் என்று தோன்றும்.

பல சமயம் நாம் விஷயங்களை ஒத்திப் போடுகிறோம்; காரியம் செய்யப் பயப்படுகிறோம். நாம் எது செய்து என்ன பயன் என்ற சோகமும், விரக்தியும் எழுகிறது. செயல் - முயற்சி - இருக்கிறதே அதைப் போல தன்னம்பிக்கைக்கு அருமருந்து வேறு இல்லை. சிறையிலே கிடந்தான் ஒரு கைதி - பல மாதங்கள், பல ஆண்டுகள். ஒரு நாள் வாசற்கதவுப் பக்கம் சென்று கையை வைத்துத் தள்ளினான். என்ன ஆச்சரியம்! கதவு திறந்து கொண்டது. உண்மை என்னவென்றால் இத்தனை நாளும் சிறைக்கதவு திறந்துதானிருந்தது; மனித முயற்சிதான் அங்கே இல்லை.

முயற்சிக்கு ஈடாக தன்னம்பிக்கை தரும் மருந்து வேறு ஏதும் இல்லை. கொஞ்சம் வாழ்க்கைக் கதவைத் தள்ளிப் பாருங்கள்! அது திறந்துதானிருக்கிறது. தன்னம்பிக்கையற்றவர்கள் முக்கியமான ஒன்றை மறந்து விடுகின்றனர். அது, " வாழ்க்கை ஒரு வாய்ப்பு " என்பது. நம்மை இவ்வுலகில் வாழுமாறு, வாழ்வை ரசிக்குமாறு, அனுபவிக்குமாறு காலத்தை நமக்குக் கடன் கொடுத்திருக்கின்றனர்.

தன்னம்பிக்கை பெற மற்றுமோர் எளிதான வழி உங்களைப் பற்றிப் பிறர் பாராட்டியதை எழுதி, ஒரு தாளில் வைத்துக் கொள்ளுங்கள். சில சமயம் உங்கள் புத்திசாலித்தனத்திற்காக, உதவிக்காக, உங்கள் குணத்திற்காகப் பிறர் பாராட்டியிருக்கக் கூடும். அதை ஒரு சிறு அட்டையில் எழுதி பையில் வைத்திருங்கள்.

" உங்களுக்குப் பல்லக்கு ஏறும் பாக்கியம் உண்டு! " என்று ஜோதிடம் கூறியது; " உனது விடாப்பிடியும், உறுதியும் கண்டு நான் அயர்ந்து போகிறேன்! " என்று உங்கள் நண்பன் கூறியது;  " அப்பா! இந்தத் தள்ளாத வயதில் எனக்கு உதவினாயே. நீ மகாராஜனா இருக்கணும்! " என்று ஒரு பெரியவர் சொன்னது  இப்படி உங்கள் வாழ்வில் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும், அதன் சாரத்தை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை தளரும்போது, சோகம், பயம் எழும்போது அதை எடுத்துப் படித்துப் பாருங்கள். அந்தந்த நிகழ்ச்சிகளை மனக்கண் முன் முழுமையாகக் கற்பனை செய்து பாருங்கள்.
உங்கள் மனம் மீண்டும் லட்சியத்தில் மிதக்கும். தன்னம்பிக்கையால் பூரிப்படையும்; தைரியத்தால் வலுப்பெறும்.
ஒரு சமுதாயம் தன்னம்பிக்கையற்று இருக்கிறதென்றால் அதில் உள்ள பெரும்பாலான மக்கள் தன்னம்பிக்கை இழந்து செயலிழந்து இருக்கின்றனர் என்று அர்த்தம்.

நாடு இருக்கும் நிலையில், நாம் வாழும் சூழ்நிலையில், நம் நாட்டில் தனிமனிதன் தன்னம்பிக்கை இழக்க ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், நாம் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. தன்னம்பிக்கையில்லாத மனிதன் செத்துக் கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்.

பிறரது உதாசீனம், பிறரது அவமானச் சொல் - சில சமயம் நம் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடக் கூடும்.

தினம் பள்ளிக்கூடம் போகிறான் ஒரு மாணவன். படிப்பு ஒன்றும் உங்கள் ஆர்வத்தைத் தூண்டுவதாக இல்லை. போதாக் குறைக்கு ஒரு மனிதர் அங்கு பிரம்புடன் பொல்லாதவராக சிடுசிடு மூஞ்சியுடன் உட்கார்ந்திருக்கிறார். இந்நிலையில் படிப்பு ஏறவில்லை. ஆனாலும், ஆசிரியரோ தினமும் அர்ச்சிக்கிறார்... " ஏ! மக்கு! நீ எங்கே உருப்படப் போறே! " என்று.

குழந்தைக்குப் படிக்க ஆசை வருமா? தன்னம்பிக்கை ஏற்படுமா என்று கூறுங்கள். " ஏண்டா இங்கு வந்து என் கழுத்தை அறுக்கிறே!' " என்று கூறும் ஆசிரியர், எத்தகைய தன்னம்பிக்கையை இளவயதில் ஊட்டுகிறார் என்பதை எண்ணிப் பாருங்கள்.

மாறாக நான் ஒரு சமயம், ஒரு தொழில் நிறுவனத்தின் தலைவரைப் பார்க்கப் போயிருந்தேன். அங்கே அவர் அலுவலக அறையில், கோடுகளால் வரைந்த கொக்குப் படம் மாட்டியிருந்தது. " என் பெண் போட்ட கொக்குப் படம்! " என்று பெருமையுடன் சொன்னார் அவர். அது கொக்கு போல இல்லை; அது வேறு விஷயம். அலுவலகத்தில் மாட்டப்பட்டிருக்கும் படத்தைக் கண்டு அக்குழந்தைக்கு எத்தனை பெருமை ஏற்படும்; அப்பா தரும் முக்கியத்துவம் அக்குழந்தையின் வளர்ச்சியில் எப்படி உதவும் என்று எண்ணிப் பாருங்கள்.

திடீரென்று, ஒருநாள் புது மீசையுடன் என்னைக் காண வந்த இளங்கவிஞரைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். " தெருவில் போனால் எல்லாரும் என்னை தம்பீ " என்கின்றனர். கல்லூரியில் போனால், இந்த இளவயதும், மெலிந்த உருவமும் ஒரு ஆசிரியருக்கு வேண்டிய கம்பீரத்தை, மதிப்பைக் கொடுப்பதாகக் காணோம். எனக்கே நடுக்கம் ஏற்படும் சிலசமயம். அதற்குத் தான் மீசை வளர்க்கத் துவங்கினேன். பாரதியார் போல முண்டாசும் கட்டிக் கொள்ளலாமா என்று யோசிக்கிறேன்! " என சிரித்தார் அவர். பெரிய மனோதத்துவ நிபுணர்கள் கூறுவதை எளிதாகச் செய்துவிட்டார் நண்பர். பிற காரியங்களைச் செய்வதன் மூலம் நாம் மனப்போக்கை மாற்றலாம் என்கின்றனர் மனநூலார். மனம் சோர்ந்திருக்கும் போது ஒரு நல்ல பாட்டை முணுமுணுங்கள். வருத்தமான நேரத்தில் ஒரு சினிமாவில் நிகழ்ந்த ஒரு வீரம் நிறைந்த சம்பவத்தை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். குளித்து விட்டுப் போனால் நமக்கே ஒரு ஆரோக்கியம் ஏற்படுகிறது. நல்ல துவைத்த, சலவை செய்த துணியை உடுத்திக் கொள்ளும் போது நமக்கே ஒரு நிறைவும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. வெளியே வைத்திருக்கும் மீசை உள்ளேயும் சிறிது வீரத்தை ஊட்டுகிறது.

நமது முன்னோர் எழுதியுள்ள நூல்களிலும் சரி, பாடியுள்ள பாடலிலும் சரி, " நாம் நமக்கு மட்டும் வாழ்வதற்காகப் பிறக்கவில்லை; இல்லாதவர்களுக்கு உதவுவதற்காகவும் தான் பிறந்திருக்கிறோம்..." என்று எழுதியிருக்கின்றனர்.

இதை உதவி என்றோ, அன்பு என்றோ, பெருந்தன்மை என்றோ, தாராளமான மனம் என்றோ, வள்ளல் என்றோ கூறுகிறோம். அடுத்த வீட்டுக்காரர் கஷ்டப்பட்டால், பக்கத்து வீட்டுக்காரர் நல்லவராக இருந்தால் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்... " நான் எப்படி உங்களுக்கு உதவி செய்யக் கூடும்! " என்று கேட்டு உதவி செய்யத்தான் வருவார். ஏனெனில், நாளை அவருக்கும் இப்படி ஒரு கஷ்டம் அல்லது துன்பம் நேரிடலாம். தனக்கு மட்டுமே வாழ்பவர்களது வாழ்க்கை பொதுவாக இனிமையாகவோ, மகிழ்வுடனேயோ அமைவதில்லை. இது இயற்கையின் நியதி இதை உணர்ந்த மாமனிதர்களைப் பற்றிப் பார்ப்போம்.

ஆப்ரிக்காவுக்கு இரு தொழிலதிபர்களிடையே ஏற்பட்ட வழக்கு காரணமாக சென்றார் காந்திஜி. கொஞ்ச நாள் அங்கே வாழ்ந்தபோது வெள்ளையர்கள், மற்ற இனத்தவரைத் தாழ்வாக நடத்தியதைக் கண்டு வருந்தினார்; பின் போராடினார்.

இந்தியர்களையும், ஆப்ரிக்காவில் பிறந்து வாழும் கறுப்பர் இனத்தையும் இனவெறியர்கள் கேவலமாகப் பேசினர்; அடித்தனர்; உதைத்தனர். காந்திஜி முதல் வகுப்பு டிக்கெட்டுடன் ரயிலில் பயணம் செய்தபோது அவரை அவரது மூட்டையுடன் ரயிலிலிருந்து ரயில்வே பிளாட்பாரத்தில் பிடித்து தள்ளிய சம்பவம்... எப்படிப்பட்ட கொடுமை; அநியாயம்! அப்போது, அங்கே தலைமை நிர்வாகியாக இருந்த ஸ்மட்ஸ் துரை மிகவும் பொல்லாதவர். சம உரிமை கேட்டு போராடிய அத்தனை இந்தியர்களையும், கறுப்பர்களையும் சிறையில் தள்ளினார். 40 நாட்கள் சிறையிலிருந்தனர்; கஷ்டப்பட்டனர். எனினும், காந்திஜியும், மற்றவர்களும் விடுவிக்கப்பட்ட போது வெளியே வந்த காந்திஜி, ஸ்மட்ஸ் துரையிடம், தான் அவருக்காக சிறையிலிருந்தபோது செய்த ஒரு அழகான செருப்பை அன்பளிப்பாக கொடுத்தார். ஓரளவு ஸ்மட்ஸ் துரையின் மனம் இளகி இருக்கவேண்டும். ஒரு சில நாட்கள் வரை காந்திஜி அளித்த செருப்பை அணிந்து நடந்தார்.

சில நாட்கள் சென்றதும் திடீரென அவருக்கு ஞானோதயம் பிறந்தது. இப்படி சிறையிலடைத்து கஷ்டப்படுத்திய பின்னும் எத்தனை அன்புடனும், மரியாதையுடனும் இவர் நமக்காக ஒரு செருப்பை தைத்துக் கொடுத்திருக்கிறார் என்று எண்ணி அந்த செருப்பை தன் கண்ணாடி அலமாரியில் வைத்தார். நமது ஊரிலும் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், பொதுவாக எதிரியை, எதிர்கட்சிக்காரரை மதிக்கின்றனரா அல்லது திட்டி கேவலப்படுத்துகின்றனரா என்பதைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். ஆனால், காந்திஜி என்ன செய்தார் என்பதை அடுத்து வரும் இளைய தலைமுறைக்காவது உயர் நெறிமுறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்; அப்படிப்பட்டவர்கள் வாழ்ந்ததை நினைவூட்ட வேண்டும்.

திருவள்ளுவர் கூறுகிறார்:
" இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
 நன்னயம் செய்து விடல்... " என்று.
துன்பம் செய்தவர்களை, நமக்கு கேடு விளைவித்தவர்களைத் தண்டிக்க வேண்டுமென்றால், நாம் அவருக்கு எந்த வகையில் உதவ முடியுமோ, அப்படி உதவ வேண்டும். நாம் இப்படி உதவும்போது நம் எதிரியே வெட்கப்படுவார். " எனக்கு கெடுதல் செய்து பழித் தீர்க்க முயலாமல் இந்த மனிதர் உதவுகிறாரே... " என்று, தான் செய்த செயலுக்கு வெட்கப்படுவார் என்கிறார் திருவள்ளுவர்.

காந்திஜி பற்றிய மற்றொரு சம்பவம்...

" வெள்ளையர்கள் நடக்கும் சிமென்ட் நடைபாதையில் கறுப்பர்கள், இந்தியர்கள் நடக்கக் கூடாது; அவர்கள் கீழே உள்ள மண் தரையில் தான் நடக்க வேண்டும்! " என்று சட்டம் இருந்தது, காந்திஜி சொன்னார்:

" பிறரைத் தாழ்த்துவதன் மூலம் எப்படி ஒருவன் உயர முடியும் என்பது எனக்கு புரியவில்லை! "

பிறரைத் தாழ்த்துவதன் மூலம் மற்றவன் உயர்ந்துவிட முடியுமா?

காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்த இங்கிலாந்தின் புகழ்பெற்ற சினிமா பட டைரக்டர் அட்டன்பரோ, " இந்த ஒரு வரிதான் காந்திஜி பற்றிய சினிமாவை எடுப்பதற்கு காரணமாக இருந்தது! " என்று குறிப்பிடுகிறார். காந்திஜி போன்ற மனிதர்கள் நம் தாய் நாட்டில் வாழ்ந்தனர் என்பது நமக்கு மட்டுமல்ல, அடுத்து வரும் இளைய தலைமுறையை சிந்திக்க வைக்கும், சீர்படுத்தச் செய்யும் மந்திரச் சொற்கள். அவர்களுக்கு நம் பெரியோர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறிகளை நாம் உணர்த்த வேண்டும். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ற புகழ் பெற்ற விஞ்ஞானி காந்திஜியைப் பற்றி
" எலும்பின் மீது தோல் போர்த்திய உடம்பு போன்ற - இப்படிப்பட்ட ஒரு மனிதர் இந்த பூமி மீது நடந்தார் என்பதை நாம் நமக்குப் பின்னால் வரும் சந்ததிகள் நம்புவது அரிது! " என்று எழுதுகிறார் விஞ்ஞானி ஐன்ஸ்டைன். இப்படி உலகமே அவரைப் புகழ்கிறது. காந்திஜியைப் பற்றி எழுதுகிறார் ஸ்மட்ஸ் துரை சிறையில், பொதுவாழ்வில எல்லா கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டியிருந்த போதிலும் தன் மனித சுபாவத்தை மட்டும் எப்போதும் துறக்கவே இல்லை காந்திஜி. கோபமோ, வெறுப்போ கொண்டதில்லை. மிகுந்த நெருக்கடியான சம்பவங்களில் கூட தமது நகைச்சுவையை அவர் இழந்தது கிடையாது.

சிறையிலிருந்து விடுதலை அளித்த போது என் உபயோகத்திற்கு என்று ஒரு ஜோடி மிதியடிகளை தயாரித்து எனக்கு சன்மானமாக அளித்தார். அதை அனேக காலம் வரை நான் உபயோகித்து கொண்டிருந்தேன். அந்த மகானால் தயாரிக்கப்பட்ட மிதியடிகளின் மீது நிற்க நான் தகுதியுடையவன் அல்லன் என்ற உணர்ச்சி மட்டும் என்னுள் இருந்து கொண்டிருந்தது... என்கிறார் ஸ்மட்ஸ் துரை. தான் துன்பம் அனுபவிப்பதன் மூலம் மற்றவர்களை சிந்திக்க வைத்து அவர்களைத் தூய்மைப் படுத்துவது என்ற உயரியத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது காந்திஜியின் அணுகுமுறை. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் காந்திஜி தன்னைப் பற்றி கவலைப்பட்டாரா? தன் சுய கவுரவத்தை இழந்ததாக எண்ணினாரா என்பதைக் கொஞ்சம் சிந்தியுங்கள். அதுதான் தன்னைப்பற்றி ஒரு மனிதன் தானே கொண்டுள்ள நம்பிக்கை. அந்த தெளிவுதான் வாழ்வின் அடித்தளம்; அசைக்க முடியாத அடித்தளம்.

பெருந்தலைவர்களைப் போல நாம் எல்லாம் ஆக முடியுமா என்றெல்லாம் பலரும் சிந்திக்கக் கூடும். வாழ்வின் வெற்றிக்கு முக்கிய தேவை வாழ்க்கை நெறிகள் தான். இதைத் தான் நாம் அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதுதான் இன்றைய ஆரம்பப் பள்ளியிலிருந்து கல்லூரி, பல்கலைக்கழகம் வரை மாணவர்களுக்கும், நாளை பொதுவாழ்வில் இறங்க விரும்பும் நல்லவர்களுக்கும், அல்லாதவர்களுக்கும் பாடமாக வைக்கப்பட வேண்டும்.

காந்திஜி போன்றவர்கள் உலகனைத்திற்குமாக, உலக மக்களுக்காக, பிறந்தவர்கள். நாட்டைப் பற்றி, நாட்டு மக்களைப் பற்றி எண்ணி தங்களை அர்ப்பணித்தவர்கள். அவர்கள் தனக்காக வாழ்வதில்லை. வழிகாட்ட வந்த மகான்கள்!

வாழ்க்கை எனும் வண்டி சரியாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று நாம் எண்ணிக் கொண்டிருப்போம். ஆனால், சிலசமயம், நாம் எதிர்பாராத பிரச்னை நம் முன்னே வந்து நிற்கும். " இப்படி நடக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லையே... இப்போது என்ன செய்வது? " என்று யோசிப்போம்.

செய்யும் தொழிலில் கடுமையான போட்டி; தொழிலில் எதிர்பாராத நஷ்டம்; நம் உறவில் எதிர்பாராத ஏமாற்றம் என்று வரக்கூடும்! எதிர்பாராத ஒரு சம்பவம் ஏற்படும்போது நாம் செய்வது அறியாது திகைத்துப் போகிறோம்.

நம் மனமானது இதன் விளைவாக தோல்வியையே, கஷ்டத்தையே மீண்டும், மீண்டும் சிந்திக்க வைத்து பய உணர்வை, பெருக்குகிறது. இப்படிப்பட்ட சிந்தனைகளில் நாம் திளைத்து, அதிலேயே மூழ்கி இருந்தால் கவலையும், துக்கமும் தான் மிஞ்சும்; அதிகமாகும். இப்படிப்பட்ட சம்பவங்கள் எல்லாருடைய வாழ்விலும் நடக்கக் கூடியது தான். சிலர் கோபம் கொண்டு, " வருவது வரட்டும்! " என்று இறங்குவர். அவர்களுக்கு நாம் சொல்லக்கூடிய விஷயம் பகவத் கீதையில் வரும் சம்பவம் தான்.

அர்ஜுனன் வில்லேந்தியவனாய் நிற்கிறான்... ஆனால், கைகளோ செயல்படவில்லை. மனமோ சொல்கிறது, " என் எதிரே எதிரிகளாக நிற்பவர்கள் எல்லாம் என் அண்ணன்கள், தம்பிகள். இவர்களை எல்லாம் நான் எப்படிக் கொல்வேன்? " என்று கண் கலங்குகிறான். தேரோட்டியாக வந்த கிருஷ்ண பகவான் சொல்கிறார்: " கடமையைச் செய். முடிவைப் பற்றி, பயனைப் பற்றி கவலைப்படாதே!' என்று. இதைவிட நல்ல சம்பவத்தை கஷ்டப்படுபவர்களுக்கு நாம் சொல்ல முடியாது. மனதில் எழும், பயம், கவலை எல்லாம் மாற்றி நாம் உருப்படியான செயலில் இறங்கி, நமது பிரச்னையை சமாளிக்க வேண்டும் எனில் முடிவைப் பற்றி கவலைப்படக் கூடாது. கவலைப்பட்டுக் கொண்டிருந்தோமானால் எதையும், சிந்திக்கவோ, செயல்படவோ நம்மால் முடியாமல் போகும். மனிதன் அதிலேயே உழன்று கொண்டிருப்பான்.
பல தற்கொலைகள், அறியாமையால், தன்னம்பிக்கையும், அது தரும் துணிவும் இல்லாமையால் நடக்கின்றன. தன்னபிக்கை பெற நல்ல மருந்து நம் பிரச்னை சம்பந்தமான காரியத்தில் இறங்குவது தான்.
அமெரிக்காவில் எங்கள் அலுவலகத்தில், அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனை கூறும் பணி யிலிருந்தவர் வந்து சேர்ந்தார். அவர் சொல்கிற வாக்கியங்கள் நினைவுக்கு வருகிறது. " என்னை யாரும் பயமுறுத்த முடியாது. நாம் காரியத்தில் இறங்க வேண்டியது தான்! " என்பார்.

நாம் முயற்சியில் ஈடுபட்டால் கவலை மறந்து விடும். அப்போது மாறுபட்ட புதிய எண்ணங்கள் மனதில் தலைதூக்கும்; புதிய எண்ணங்கள் வழிகாட்டும். இதில் முக்கியமான காரியம், " மனதை தளர விடக்கூடாது! " என்பது தான். துணிந்தவனின் மனதிற்கு ஆற்றின் ஆழம் முழங்கால் அளவு தான் என்பர். ஆறு மிக ஆழமாக இருந்தாலும் நாம் நீந்திப் போய் விடலாம் என்பதுதான் அவர்களது லட்சியமாக இருக்க வேண்டும்.

ஷேக்ஸ்பியர் எழுதுகிறார்: கடலைப் போன்றது தான் வாழ்க்கை. மேடு, பள்ளம் நிறைந்தது. புயல் நெடுநேரம் வீசப் போவதில்லை. இரண்டு மரங்களைக் கீழே தள்ளியவுடன் புயல் தானே நின்று விடும் என்ற எண்ணத்துடன் செயலில் இறங்கினால், நிலைமை மாறும். சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும், துணிவும் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை. வாழ்வில் நல்ல விஷயங்கள் அதிகமா, கெட்ட விஷயங்கள் அதிகமா என்று அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தினர். நம்மால் சமாளிக்க முடியாத கெட்ட சம்பவங்கள் மற்றும் தோல்விகள் எல்லாம் வாழ்வில் குறைவாகத்தான் இருக்கின்றன என்று கண்டுபிடித்தனர்.

பலர், " வாழ்க்கை நம் கையிலா இருக்கிறது? திடீரென கஷ்டங்களும், தோல்வியும், நஷ்டங்களும், சங்கடங்களும் வாழ்வில் தோன்றுகின்றனவே. இவற்றை நீக்குவதும், போக்குவதும் நம் கையிலா இருக்கிறது? " என்று கேட்பார்.

எந்த கஷ்டம் வந்தாலும் சரி, அடுத்து என்ன செய்யலாம் என்று அமைதியாக யோசித்தோமானால் தெளிவு தென்படும், ஒரு யோசனை தோன்றும். அமைதியாய் இருங்கள், பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.

அமெரிக்காவில், என் வழக்கறிஞர், எனக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்தார். அசாதாரண மனிதர் அவர்!

அவர் பள்ளி மாணவனாக இருந்தபோது பள்ளியின் பஸ்சில் கடைசி வரிசை பெஞ்சில் அமர்ந்திருந்தார். எதிர்பாராத விதமாக பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று பஸ்சை மோத அவர் கை, கால் ஊனமுற்றவரானார். அவரால் நடக்க முடியாது; தள்ளுவண்டியில் வைத்துத் தான் தள்ளிக் கொண்டு போவர். விரல்களின் நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் எழுத முடியாது. டைப்பிங் மெஷின் முன் உட்கார்ந்து கொண்டு எழுத்துக்களை அழுத்துவார்.

உடல்குறை பற்றி பேச மாட்டார். எடுக்கிற வழக்குகளில் எல்லாம் ஜெயித்து விடுவார். அவர் தன் குறைபாடுகளைக் கண்டு அழுது புலம்பியதில்லை; பிறரது இரக்கத்தையும் எதிர்பார்க்க மாட்டார். அது தான் வாழ்க்கை. இருப்பதை ஏற்று, மேலே என்ன செய்யலாம் என்று யோசித்தோமானால் வழி பிறக்கும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எனக்கு ரசாயனப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் ஒருவர் காரைக்குடியைச் சேர்ந்தவர். அவருக்கு திக்குவாய் இருந்தது. ஆனால், அவரது திக்கு வாய்ப் பேச்சு எந்த விதத்திலும் அவரது புத்திசாலித்தனத்தையும், தெளிவையும் தடுத்ததில்லை. பல தோல்வியாளர்களது வாழ்க்கையைப் பார்த்தோமானால் எங்கோ அவர்கள் வாழ்க்கை என்ற நூலை தவற விட்டிருப்பது புரியும் அல்லது எங்கோ வாழ்க்கை எனும் நூலை சிக்கலாக்கிக் கொண்டு உதவி செய்ய வந்த மனைவியுடன் கூட வாழ முடியாமல் வாழ்க்கையை ஓட்டுவர்.

மருத்துவர்கள் என்ன கூறுகின்றனர்... " வாழ்வில் சிக்கல்கள் சகஜம், நாம் தான் சிக்கல்களைப் பொறுமையாக உட்கார்ந்து அலசி சிக்கலைப் போக்க முயல வேண்டும்! "

அண்ணாதுரை எழுதுவார்: " நான் மேஜையில் போய் இடித்துக் கொண்டேன்! " என்று சொல்ல மாட்டோம்; " மேஜை இடித்து விட்டது " என்போம்! மேஜைகளுக்கு என்ன கையா, காலா இருக்கிறது நகர்ந்து நம்மை வந்து இடிக்க... என்பார். எல்லாம் நமது மனோபாவக் கோளாறு தான். நாம் பார்க்கும் விதம், காரணம். பயம், பயத்தைத் தான் கொண்டு வரும். இன்றைய அரசியலில் நல்லதைப் பாராட்டுகின்றனரா, இல்லை கெட்டதைத் தோண்டிப் பார்த்து திட்டுகின்றனரா? என்பதை கவனித்தீர்களா? பிறரைத் தாழ்த்துவதன் மூலம் தான் பெரிய மனிதாக ஆகலாம் என நம்பி எதிரியைத் தாழ்த்த முயல்கின்றனர். இது வெற்றி பெறுவதில்லை. நம்மால் முடியும் என்று தன் வேலையை நன்றாக செய்தால், கவனித்தால் இவர்கள் வெற்றி பெறுவர்.

ஏன் இப்படி செய்கின்றனர் என்று கேட்கிறீர்களா? அறிஞர்கள் கூறுகின்றனர்... " எல்லாம் மனோபாவக் கோளாறு தான்! இயற்கையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதது தான்! " என்கின்றனர்.
வாழ்வில் தோல்வி ஏற்படுவது சாதாரணம். மனம் தளர்ச்சி அடைவது இயல்பு. அந்தத் தளர்ச்சி அடைந்த காலங்களில் நாம் ஆற, அமர யோசிக்க வேண்டும். அப்போது நமக்குப் புது வழிகள் தென்படும். தோல்வியை சமாளிப்பது எது? சளைக்காத மனம் தான்! தோல்வியை வெற்றிக் கண்டது எது? விடாமுயற்சி தான்!
" தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்! " என்பார் வள்ளுவர். ஆம், தெய்வத்தால் முடியாதது கூட, முயற்சியால் முடியும். சோர்வு இல்லாமல், முயற்சியில் குறைவு இல்லாமல், மீண்டும், மீண்டும் முயற்சிப்பவர்கள் விதியைக்கூட வெற்றி கொள்ள முடியும் என்றும் சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்?

" தோல்வி தானே! எனக்குத் தெரியும் அதை எப்படி சமாளிப்பது என்று..." எனச் சொல்லி, தைரியத்துடன் அதை எதிர் கொள்ளலாம். சில காலகட்டங்கள் நமக்கு சாதகமாக இருப்பதில்லை. என் நண்பர் டாம், குடும்பத்துடன் இரவு விருந்துண்ணப் போனார். கடைகள் எல்லாம் மூடிவிட்டனர். சாமான் வாங்க கடைத்தெருப் பக்கம் போனார். சிலை திறப்பு விழாவில் பாதைகள் எல்லாம் திசை திருப்பி விடப்பட்டன. ரயிலேறினார்; இவர் ஏறிய ரயிலுக்கு முன் சென்ற ரயில் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால், ரயில், பாதி வழியில் நின்று போயிற்று! சில நேரம் தொடர்ந்து இப்படி நடக்கிறது. பட்ட காலிலேயே படும் அல்லவா?

ஏன் இப்படி? உலகமே நமக்கெதிராக, ஆண்டவனே நமக்கெதிராக இருக்கிறார்களா? அதெல்லாமில்லை!

மனவியல் அறிஞர் யங் சொல்கிறார்: இவையெல்லாம் அடையாளங்கள்! இவை எல்லாம் முன்னோடிகள் - வரும் நிகழ்ச்சிகளின் போக்கை தெரிவிக்கும் சூட்சுமங்கள், " மேலே செல்லுங்கள் அல்லது போகாதீர்கள்! " என்று எச்சரிக்கும் வழிகாட்டிகள்... இதை நாம் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! என்கிறார்.

நாம் கண்ணால் பார்க்கிற உலகம் ஒன்று. மலை, ஆறு, கடல், வீடு வாசல், மாடு, மனை என்று; மற்றொன்று, நாம் புரிந்து கொள்ள முடியாத புலனுக்கு அப்பாற்பட்ட சக்திகள் இயங்கும் உலகம்.

இந்தப் புலனுக்கு அப்பாற்பட்ட உலகம், சில நேரம் நமக்கு சில செய்திகளைச் சொல்கிறது; சில காலகட்டம் ஏற்றது; சில காலகட்டம் ஏற்றதில்லை என்று. இன்று மனவியல் அறிஞர் யங் அப்படிச் சொல்வதைத் தான் அன்றே வள்ளுவர் காலமறிதல், காலமறிந்து செயல்படுதல் என்று எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார்.

" தோல்வியின் அடையாளங்கள் தென்படும் போது கொஞ்சம் பின்வாங்கி, நிதானித்து, மறுபரிசீலனை செய்யுங்கள்; அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்; வேறு பாதையில் முயலுங்கள்... " என்று சொல்கிறார் யங். தோல்வியின் அடையாளம் காலம் கனிந்து வரவில்லை என்பதைக் காட்டுகிறது. காலச்சக்கரம் மறுபடியும் திரும்பும்.

தோல்வி நாம் செல்லும் பாதை சரியில்லை என்பதை சூசகமாகத் தெரிவிக்கிறது. அதை நாம் புத்திசாலித்தனமாக புரிந்து கொண்டு, உடனே, வேறு பாதையை ஆராய வேண்டும். மனதில் உற்சாகமான எண்ணங்களை எண்ணுவதன் மூலம், பிறருக்கு உதவும் எண்ணங்களை சிந்திப்பதன் மூலம், பழைய வெற்றிகளை நினைத்துப் பார்ப்பதன் மூலம் நாம் நம் மனதை வலிமைப்படுத்த முடியும். நமது மனம் நமக்குள் இருக்கும் ஒரு பகுதி. அதை நாம் நம் கைக்குள் வைத்திருக்க வேண்டும். நல்ல எண்ணங்கள், வெற்றியைப் பற்றிய நினைப்புகள், சந்தோஷமான அனுபவங்கள் இப்படிப்பட்ட எண்ணங்களை மட்டுமே மனதில் வைத்து நம் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உலகின் மகத்தான சாதனைகள் எல்லாம் சாதாரணத் திறமை படைத்தவர்களாலேயே பெரும்பாலும் சாதிக்கப்படுகிறது. அவர்களது வெற்றிக்குக் காரணம் விடாமுயற்சி தான். எதைக் கண்டும் சளைக்காத மனம். தொடர்ந்து அந்தக் காரியத்தில் மீண்டும், மீண்டும் ஊடாடும் மனப்பக்குவம்.

இந்திய மண்ணில் பிறந்து, அமெரிக்க நாட்டின் நோபல் பரிசு பெற்ற டாக்டர் கொரானர் என்ற பஞ்சாபிக்காரர் மிக சாதாரணமானவர். இந்தியாவில் வேலை கிடைக்காமல் இங்கிலாந்து போனார். அவரது பேராசிரியர் டாட் என்பவர் இவரது திறமைகளில் நம்பிக்கை இல்லாது ஏதோ பேருக்கு ஓர் உபயோகமில்லாத ஆராய்ச்சித் தலைப்பைக் கொடுத்து ஆராயுமாறு அவரைப் பணித்தார்.

கொரானாவோ இதன் மூலம் அந்தக் காலத்தில் உபயோகமற்ற விஷயம் எனக் கருதப்பட்ட, " நியுக்ளிக் அமிலம் " என்ற துறையில் முழுப் பயிற்சி பெற்றார். பின் கனடா வந்து பல ஆண்டுகளைக் கழித்தார். பின் அமெரிக்கா வந்து பல ஆண்டுகளைக் கழித்தபோது அவரது ஒன்று சேர்ந்த அனுபவம், அவரை அந்தத் துறையில் மன்னனாகக் காட்டியது.

காலம் மாறி பாரம்பரிய ரசாயனம் மிக முக்கியத்துவத்தை அடைந்தபோது, அவர் பயின்றதுறை மிக முக்கியத்துவம் பெற்றது.
ஒரு காரியத்தில் வெற்றி - தோல்வியைக் கருதாது தொடர்ந்து ஈடுபட மனப்பக்குவமும், மன உறுதியும் தேவை.
ஒரு வேலையைச் செய்வது - ஒரு வேலையில் ஈடுபடுவது காந்த சக்தி கொண்டது. அப்போது அது, முடியுமா, முடியாதா என்று ஆரூடம் பார்க்க நமக்கு நேரமிருப்பதில்லை. முடிவைப் பற்றிய நினைவே இல்லாமல் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறான். " அவன் முடிவைப் பற்றி பலனைப் பற்றிக் கவலைப் படாதே: உன் தொழிலைச் செய்! " என்று கூறுகிறது பகவத்கீதை.

முடியாதென்று பலர் கூறினர். ஆனால், அது முடியாதென்று அவனுக்குத் தெரியாது. காரியத்தில் ஈடுபட்டான். முடித்து விட்டான். முடியாதென்பது தெரிந்திருந்தால் அவன் முடித்திருப்பானோ, என்னவோ என்கிறது ஒரு ஆங்கிலக் கவிதை.

தன்னம்பிக்கைக்கு மருந்து வேலை தான்; காரியம் தான்; செயல்தான்.

எதிர்பாராத சம்பவங்கள் - நம் செயலுக்கு அப்பாற்பட்ட சம்பவங்கள் அப்படியே நிகழ்ந்து நம் வாழ்வைப் பாதிக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அதற்கு அடுத்தபடியாக மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியம் அனைத்தும் நம் கைக்குள் இருப்பதாகவே நாம் உணர வேண்டும்.

பீத்தோவன் என்ற இசை மேதைக்குக் காது சரிவரக் கேட்காது. ஆனால், அது அவரது இசைப் பெருக்கை, இசை உணர்வை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை. ஹெலன் கெல்லர் பிறவியிலேயே குருடாகப் பிறந்த பெண்மணி. எல்லா இக்கட்டுகளையும் எதிர்கொண்டு ஒரு புகழ் வாழ்வு வாழ்ந்த பெருமகள்.

வாழ்க்கையின் முழுமுதற் கொள்கை தான் என்ன? செயல், தொண்டு, பணி, கருமம், உழைப்பு என்று பிறந்த உயிர் வாழத் துடிக்கிறது. அது ஜீவத் துடிப்பு. அந்த ஜீவத் துடிப்பு நம் எல்லாருள்ளும் இருக்கிறது. அந்த ஜீவத் துடிப்பை சோம்பேறித் தனத்தாலோ, அறியாமையாலோ அடக்கி, ஒடுக்கி சோம்பலில் சுகம் காண முயலவோ, முன்வினைப் பயன்படி நடக்கட்டும் என்று சமாதானம் காண்போர் வாழ்க்கையின் முதல் விதிக்கு எதிராகச் செயல்படுகின்றனர். எங்கே முன்னேற முடியும்?

இடம் தென்னாப்ரிக்கா, அங்கே பழுப்பு நிற இந்தியர்களும், கறுப்பு ஆப்ரிக்கர்களும் நிற பேதம் காரணமாக மூன்றாந்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டனர். செல்வாக்கு, அதிகாரம் அனைத்தும் வெள்ளையர்கள் கையில்.

இந்த அநியாயமான சட்டங்களை எல்லாம் இந்தியர்களும், ஆப்ரிக்க மக்களும் வேறு வழியில்லை என்று பணிந்து ஏற்று வாழ்க்கை நடத்தினர். இந்தச் சட்டங்களை மீறுவது என்று தீர்மானித்தார் காந்திஜி. முதன் முதலாக சட்ட மறுப்பு இயக்கம் தோன்றியது. இதனால், பெரிய கிளர்ச்சி ஏற்பட்டுப் பல இந்தியர்கள் சிறைக்குச் சென்றனர், காந்திஜியைச் சிறையில் போட்டனர்.

காந்தி இன்று சரித்திரத்தில் வாழ்கிறார்; என்றும் வாழ்வார். தான் நிகழ்த்திய அந்தச் சட்டமறுப்பு இயக்கத்தால் - துணிச்சலால் - போராட்டத்தின் நியாயத்தால் அன்று அவர் வென்றார். அதே கொள்கைகளை மீண்டும் இந்தியாவில் பிரயோகித்து இந்திய நாட்டின் சுதந்திரத்தைப் பெற்றார். மனிதன் தனக்காக வாழ்வதற்கு மேலே போய் வாழும் போதுதான் அவன் உயர்கிறான். மனிதன், நல்ல லட்சியங்களுக்காக பாடுபடும் போதுதான், தன்னை அர்பணித்துக் கொள்ளும் போதுதான் தலைவனாகிறான், தேவனாகிறான்.

சமீபத்தில் ஒரு கதை படித்தேன். என்னை சிந்திக்க வைத்த வாழ்க்கையை பற்றிய கதை.

அவள், ஒரு நடுத்தர வயது பெண்மணி. அமெரிக்காவில் வழக்கறிஞராக பணிபுரிகிறார். கம்பீரமான நடை, உடை, பாவனை. கையிலே ஒரு தோல் பை. வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் பெண்மணி, எடுப்பான முகம் அதிகாரமும், தெளிவும், உரிமையும் அவளை சுற்றி காற்றில் மிதப்பது போல் இருந்தது. காரிலிருந்து இறங்கினாள்; வீட்டுக்குள் வந்தாள். அவளது ஆறு வயது மகன், அம்மாவைக் கண்டு ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டான். " சாப்பிட்டாயா? பள்ளிக் கூடம் நன்றாக போயிற்றா? " என்று விசாரித்தாள். சோபாவில் உட்கார்ந்தாள். டெலிபோனை தன் பக்கத்திற்கு நகர்த்தி வைத்துக் கொண்டாள். தன் தோல் பையிலிருந்து டெலிபோன் விலாச நோட்டை எடுத்தாள். டெலிபோனை சுழற்றினாள், தலைமயிரைத் தள்ளியவாறு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

" அம்மா! " என்றான் குழந்தை. " அம்மா போன் செய்யப் போகிறேன். நீ மாடிக்குப் போய் விளையாடு! " அம்மாவின் கட்டளை. பதில் பேசவில்லை பையன். மாடிப்படியில் பேசாமல் ஏறிக் கொண்டிருந்தான். திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை, ஒரு சந்தேகம், ஒரு ஆசை! " அம்மா! அந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது? " என்றான்.

" முக்கியமானவர்களின் விலாசம், பெயர் எல்லாம் இருக்கிறது. நான் இப்போது சிலருடன் பேச வேண்டும்! " என்றாள் அம்மா. " அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா? " என்று கேட்டான் தயங்கியபடி. இந்த சம்பவத்தைப் படித்த நான், அப்படியே ஸ்தம்பித்து விட்டேன் ஒரு கணம். " என்ன வாழ்க்கை இது? எதற்காக வாழ்கிறோம்? " என்ற கேள்வி மனதில். அத்துடன் அந்த பையனின் சோக முகமும் அங்கே தெரிந்தது!

" வேலைக்காக வாழ்கிறோமா அல்லது வாழ்வதற்காக வேலை செய்கிறோமா? " என்றொரு கேள்வி. வாழ்க்கை ஒரே ஓட்டம், ஒரே நெருக்கடி, போட்டி நிறைந்த உலகம்! " எனக்கு நேரமில்லை... " என்ற புலம்பல். " ஏன் ஓடுகிறேன் இப்படி? "

பிறர் என்னைப் பார்க்கும் போது, என் காரையும், வீட்டையும், என் தோல்பையையும், என் பேங்க் பேலன்சையும் பார்த்து அவர்கள் பிரமிக்க வேண்டும். இப்படி ஒரு ஆசை. இது என் ஜீவதாகம்; என் ஆசையும் இதுதான். என் ஆசையின் பின்னால் நான் ஓடுகிறேன்!

இந்த ஊரும், உலகமும் என்னை ஆசைகளால் முடுக்கி விட்டிருக்கிறது; ஓடுகிறேன்!

என் பையைப் பார்க்கிறேன். என் பேனா. எழுத ஒரு சாதாரண பேனா போதாதா? என் பையில் இருப்பது ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட மாண்ட் பிளாங்க்! வாழ்வில் இவையெல்லாம் தேவையா?

" இவை எல்லாம் அத்தியாவசியமா? "

கேள்வி மேல் கேள்விகள். " யாருமில்லை சாட்சியாக. மனமே கேள்வியாக! " என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது. இதுதானா வாழ்க்கை?

சில நாட்களுக்கு முன் நான் சென்ற காந்திஜியின் அருங்காட்சியகம் என் கண்முன் சினிமா போல திடீரென ஓடியது.

அங்கே காந்திஜி படத்தின் முன் அவர் உபயோகித்த ஒரு ஜோடி செருப்பு, ஒரு மூக்கு கண்ணாடி, அவர் உபயோகித்த கடிகாரம். இவைதான் அவரது தேவை.

என் தேவை, அதை விட அதிகம் தான். என் எல்லைகளைப் பற்றி எனக்கு ஒரு திட்டம் உண்டா அல்லது அவ்வப்போது மனதில் பட்டதை வைத்து வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கிறேனா? வருமானம் வாழ்வின் முக்கிய தேவைதான். ஆனால், அதுவே எல்லாம் அல்ல...

நம் வாழ்வில் நாம் பெருமைப்படும்படி செய்யும் சிறு, சிறு சாதனைகளில், உலகைப் புரிந்து கொள்வதில் ஊருக்கு உதவுவதில், மனித உறவில், அந்த மகிழ்ச்சியில் வாழ்க்கை நெறிகளில் தான் நமது நிரந்தர மகிழ்ச்சி இருக்கிறது. வருமானம் குறைவாக இருக்கும் போதும், அது போதுமானதாக இருக்கும் போதும், நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

சம்பளம் இல்லாமல், நம் குடும்பத்தின் மனைவி என்ற ஒரு பெண் நம்மை நம்பி தன் வாழ்க்கையை நமக்காக அர்ப்பணித்திருக்கிறாள். தெய்வீக அன்புடன், நம் குழந்தைகள் என்ற அவர்களின் எதிர்காலம் பற்றிய கற்பனை, அதற்கான முயற்சி வாழ்வில் தான் எத்தனை, எத்தனை சந்தோஷங்கள், ஆனந்தங்கள் இருக்கின்றன!

சொல்கிறார் வள்ளுவர்:

" ஈதல், இசை பட வாழ்தல் மற்றும் ஊதியமில்லை உயிர்க்கு! " நமது குழந்தைகளுடனும், மனைவியுடனும் பெற்றோருடனும் இசைபட வாழ்தல், இணைந்து அனுசரித்து பெருமையுடன் வாழ்வது இருக்கிறதே... அதுவும் ஊருக்கு உதவியாக இருப்பதும்தான் பெரிய பாக்கியம் "
என்கிறார் வள்ளுவர்.

இல்லாதவர்களுக்கு கொடுப்பதில், உதவுவதில் தான் வாழ்வின் அர்த்தம் புரிகிறது. உலகுடனும், இந்த பிரபஞ்சத்துடனும் இசைபட வாழ்வது இருக்கிறதே... அது, எவ்வளவு பெரிய பாக்கியம், எவ்வளவு பெரிய ஆனந்தம்.

வாழ்வில் கற்பனை என்ற மாபெரும் சக்தி, துணை ஒன்று இருக்கிறது. புலன் ஆகாத ஒரு உலகிற்கு இது நம்மை அழைத்து செல்கிறது. பல தொழிலதிபர்கள் இசை, நாட்டிய கலைஞர்கள், கதாசிரியர்கள், யோகிகள் இவர்களது கற்பனைதான் ஒரு புதிய உலகத்தை அவர்களுக்கு எடுத்துக் காட்டுகிறது. கற்பனையை வாழ்வில் சரியானபடி உபயோகிக்கும் போது, " ஏன் முடியாது? " என்றொரு எண்ணம் எழும், அதற்கு நாம் பதில் சொல்லும்போது சாதனை பிறக்கிறது; பல நல்ல காரியங்கள் நிகழ்கின்றன. மனிதனின் கனவுகளும், கற்பனைகளும் பல புதிய பொருட்கள் கண்டுபிடிக்க உதவி இருக்கின்றன.
வாழ்க்கை ஒரு இனிய அனுபவம்; உலக உண்மைகளை அறிந்து கொள்ளும் அறிவு. மனிதன் தேவனாகும் முயற்சி தான் வாழ்க்கை!
" மனதில் சலனமில்லாமல், மதியில் இருளே தோன்றாமல் நினைக்கும்பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்பட வேண்டும்! " என்கிறார் கவிஞர் ஒருவர். மனதில் எந்தவித எண்ணமும் இல்லாமல் மனதை வெற்றிடமாக்கி, அமைதியாக இருந்து பாருங்கள் ஒரு அரை மணி நேரம். உங்கள் உள் உணர்வு, உங்கள் கேள்விகளுக்கு பிரச்னைகளுக்கு வழிகாட்டும், தெளிவும், விடிவும் கொண்டு வரும்.

எங்கே போய் கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமலே பலர் சென்று கொண்டிருக்கின்றனர். தங்களுக்குள் இருக்கும் திறமைகள் என்ன, தாங்கள் எங்கே பிரகாசிக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளாமலே பலர் ஏதோ கிடைத்த இடத்தில், அகப்பட்ட வேலையில் வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

நாம் யார் என்பது அவ்வளவு முக்கியமான விஷயமல்ல. ஆண், பெண், வயோதிகர், இளைஞர், கீழ்ஜாதி, மேல் ஜாதி, ஏழை, ஊனமுற்றவர் என்பனவை எல்லாம் ஓரளவுக்குத் தான் நமக்கு எல்லை வகுக்குமே ஒழிய அவற்றால் நம்மைச் சிறைப் படுத்த முடியாது. நாம் எங்கே போகிறோம். எதை அடைய விரும்புகிறோம் என்பது தான் முக்கியம். நமது திறமைகள் என்ன, அவற்றை உபயோகிக்கிறோமா என்று நம்மை நாமே புரிந்து கொள்வது தான் முக்கியம்.

தங்களது திறமைகளையும், ஆர்வங்களையும் புரிந்து கொள்ளாமல் ஏதாவது ஒரு வேலை பார்த்துப் பிழைப்பு நடத்த வேண்டும் என்று பெரும்பாலோர் சிந்திக்கவும், செயல்படவும், வாழ்க்கை நடத்தவும் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். நாம் எதில் திறமை கொண்டிருக்கிறோம் என்பது, சில சமயம் பிறரால் பாராட்டப்படும் போதுதான் நமக்கே புரிகிறது. நமது பள்ளிக் கூடங்களில் எதெதைத் தப்பாய் செய்திருக்கிறோம் என்று திருத்துகின்றனரே ஒழிய, நாம் நல்லதாய் செய்ததற்காக அதிகம் பாராட்டப் படுவதில்லை.

விளைவு, பள்ளிப் படிப்பு நமக்கு வழிகாட்டுவதற்கு பதிலாக, நமது குறைபாடுகளைப் பெரிதாக்கிக் காட்டுவதையே தலையாய கடமையாகக் கொண்டிருக்கிறது. நமது வாழ்க்கை எப்படி சிறக்கும்?

சில சமயம் நாம் நாமாக இருக்கப் பயப்படுகிறோமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இரண்டு அங்குலம் உயரம் குறைவாக இருப்பதனால் நீங்கள் போலீசில் சேர முடியாமல் போகலாம். ஆனால், அதனால் நம் உலகம் இருண்டு போய்விடப் போவதில்லை என்ற மனோபாவம் ஏற்படவேண்டும்.
" நான் உளறிக் கொட்டினேன்! " என்று தன்னைத் தானே திட்டிக் கொள்ளும் மனோபாவத்தை மாற்றி, " எனக்குப் பேசும் திறமை இருக்கிறது; அதைச் சரிவரப் பயன்படுத்துவேன்... " என்று சிந்திக்க நாம் பழகுவது நல்லது. தமிழ்நாட்டில் சினிமாத் துறையில் ஈடுபட விரும்புகிறவர்களும், அரசியலில் ஆதாயம் தேட முனைபவர்களும் அதிகம் இருக்கின்றனர் என்றால், காரணம், அதில் மட்டுமே அதிக திறமை கொண்ட மக்களைத் தமிழ்நாடு பெற்றெடுத்து விட்டது என்று அர்த்தமல்ல. மக்கள் முன், இந்த இரு துறைகளும் தான் எல்லாருக்கும் தெரியும்படியும், புரியும் படியும் செய்யப்பட்டிருக்கிறது. பண வசூல் செய்பவர்களது சொர்க்க பூமியாக இத்துறைகள் பொது மக்களால் கணிக்கப்படுகிறது. இந்தத் துறைகளில் உள்ளவர்கள் எத்தனையோ பேர், தொழிலிலோ, விஞ்ஞானத் துறைகளிலோ புகுந்திருந்தால் அங்கும் பிரகாசித்திருக்க முடியும். இன்னும் எவ்வளவோ பயன் தரத்தக்க, நிறைவு தரத்தக்க, சவால்களைச் சமாளித்திருக்க முடியும். மக்கள் தங்கள் திறமைகளைப் பூரணமாக உணராமை தான் ஓரிரு துறைகளில் மட்டும் கூட்டம் சேரக் காரணம்; மற்றொரு காரணம்,

" சாயுற பக்கமே சாயுற " செம்மறியாட்டு குணம்.

நமது ஆர்வங்களை நாமே தட்டி எழுப்ப வேண்டும். " எங்கே நமது ஆர்வம் இருக்கிறதோ, அங்கே நமக்குத் திறமை இருக்கிறது. அந்தத் திறமை இருப்பதனால் தான் அந்த ஆர்வமே எழுந்தது! " என்று நெப்போலியன் ஹில், ஜேம்ஸ் ஆலன் போன்றோர் கூறியுள்ளனர்.

தறி நூல் விற்பவராக வாழ்வைத் துவங்கிய வடகத்திய தொழிலதிபர் அம்பானியை நினைத்துப் பாருங்கள். எத்தகைய தொழில் அதிபராக உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்பதை கவனியுங்கள். இந்தியாவில் எத்தனையோ அம்பானிகள் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் திறமையைப் புரிந்து கொண்டனர். தங்கள் ஆர்வத்தை அறிந்து கொண்டனர். அதன் பின் சென்றனர். " பசி நோக்கார், கண்துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்... கருமமே கண்ணாயினார் " என்பது போல. இந்த லட்சிய தரிசனத்தை வேறு பலர் காண முடியாமல் எது மறைக்கிறது? மூட நம்பிக்கை, பயம், அவ நம்பிக்கை என்ற கறுப்புக் கண்ணாடி.

இன்றைய வாழ்வு நிலைபற்றி நாம் நொந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நமக்கு இருக்கும் எல்லைக் கோடுகளைப் பற்றி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. எல்லைகள், வரையறைகள் - நமது படிப்பு, நாம் வாழும் இடம், வயது எல்லாம் ஓரளவு தான் மனிதனைக் கட்டுப்படுத்தும். அதற்குள்ளும் மனிதன் சுதந்திரமாகச் செயல்பட முடியும். அந்தச் சுதந்திர மனம் எல்லைகளைத் தாண்டிப் பறக்க முடியும்.

நாம் ஒவ்வொருவரும் ஒரு காரணத்திற்காகச் சில திறமைகளுடன் படைக்கப்பட்டிருக்கிறோம். நமது திறமைகளைத் தெரிந்து கொள்வோம். இந்த உலகம் முன்புபோல் இல்லை. வெகுவேகமாக மாறி வருகிறது. அதை உணர்ந்து அதற்கு ஈடு கொடுக்க நாம் கற்றுக் கொள்ளாவிட்டால் அது நம்மை விட்டு விட்டு, நம்மைப் பழங்குடி மக்களாக்கி விட்டுப் போய் விடும். இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், ஒன்றை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர். மனித மனத்தின் - மனித மூளையின் - அபிவிருத்தியில்தான் எதிர்காலம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்து செயல்படுகின்றனர்.

வாழ்வு ஒரு சீட்டு விளையாட்டுப் போல. நமது சீட்டுக்களை நாம் தேர்ந்தெடுக்க முடிவதில்லை; கட்டுப்படுத்த முடிவதில்லை. நம் கையில் சில சீட்டுக்கள் வந்திருக்கின்றன. இவை தானே வந்திருக்கின்றன என்று நொந்து கொள்ளாமல், அலுத்துக் கொள்ளாமல் இருப்பதை வைத்துச் சிறப்பாக விளையாடும் திறமை தான் வாழ்க்கை.

சைபீரியாவில் கடுங்குளிரில் சிறை வைக்கப்பட்டிருந்தனர் அந்த கைதிகள். தினந்தோறும் காலையில் எழுந்து குளிரில் பல மைல் நடந்து போக வேண்டும் கல் உடைக்க. போதுமான உணவு தரப்படுவதில்லை. ஆகவே, அடிக்கடி தளர்ந்து போயினர். சிறை அதிகாரிகளின் கெடுபிடியும், மிருகத்தனமும் வேறு. ஆனால், அந்தக் கைதிகள் இந்த நிலையிலும் பல சுதந்திரங்களை தாங்களே கண்டுபிடித்தனர்; கையாண்டனர்.

நடக்கிற பாதைகளில் கிடந்த பலநிறக் கற்களை எடுத்து அவற்றை மாணிக்கக் கற்களாக எண்ணி மகிழ்ந்தனர். நடக்கும் வழியின் சிரமத்தைக் குறைக்கப் பாடினர். வேலையின் கடுமையைக் குறைக்க, " யார், வேலை அதிகம் செய்கின்றனர் " என்ற போட்டியை ஏற்படுத்திக் கொண்டனர். திரும்பி வரும்போது நடக்க முடியாமல் தள்ளாடுபவர்களை, மற்றவர்கள் தோளில் சுமந்து உதவினர். கைதிகள் தான் அவர்கள்! ஆனால், மனித மனம் சிறைப்படவில்லை அங்கே!

மனமாற்றங்கள் தான், நமது அணுகுமுறை தான், நமது மனமகிழ்வுக்கும், நிறைவுக்கும் காரணமாகிறது. நாம் செய்யும் புறச் செயல்கள் காரியங்கள் தான் நமது அகமாற்றங்களுக்கு வித்தாகிறது.

வாழ்வைப் பற்றி ஆதியோடந்தமாக ஆராய்ந்த அறிஞர்கள் முக்கியமான இரண்டு விஷயங்களை நம் கவனத்திற்கு வைக்கின்றனர் அவை:

வாழ்வில் எது முக்கியம் என்ற தெளிவு. அதை அடைய எது நம்மைத் தடுக்கிறது என்ற அறிவு.

மாற்றங்களை வரவேற்பதிலும், மாற்றங்களுக்கு நம்மை தயார் செய்து கொள்வதிலும் தான் பரிணாம வளர்ச்சி இருக்கிறது. எது தகுதி உள்ளதோ, எது புதிய சூழ்நிலைகளைச் சமாளிக்கிறதோ அதுதான் வாழ்கிறது என்பது டார்வினின் பரிணாம வளர்ச்சி தத்துவம்.

" டைனசோர் " என்ற மிருகம் மிகப் பெரிதாக இருந்த போதிலும் புதிய சூழ்நிலைகளைச் சமாளிக்கும் திறமை இன்மையால், காலச் சுவடுகளால் அழிக்கப்பட்டு விட்டதும், இதற்கு மறுபுறமாகக் கற்கால மனிதனுடன் இன்று வாழும் மனிதனை ஒப்பிடும்போது, இன்று வாழும் மனிதன் எப்படி ஜீவத் துடிப்புடன் வேகமாக வளர்ந்து முன்னேறி இருக்கிறான் என்பதை நாம் உணரலாம். நாமும் மாறத் தயாராவோம். இன்று நம்மிடமுள்ள மோசமான இயல்புகளை உதிர்த்து, இன்றுள்ளதை விட ஒருபடி மேலான நிலைக்கு உயரும் வகையில் மாறுவோம். அந்த மாற்றம் பொருளாதார ரீதியில் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. மனதளவில் நம்மை உயர்த்தினாலும் வரவேற்க வேண்டியதே. மனம் உயர்ந்தால், தன்னால் வாழ்க்கையும் வளமுறும்.
வாழ்க்கைக்கு வேண்டிய ஒரு முக்கியமான குணம் - அதிகம் அலசி ஆராயப்படாதது ஒன்று இருக்கிறதென்றால் அது சுயகட்டுப்பாடு தான். வாழ்வில் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் தான் வெற்றி அடைகின்றனர். நம்மை நாமே ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், புற சூழ்நிலையையும் நாம் கட்டுப்படுத்துகிறோம்.
படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எல்லாருக்கும் எப்படியாவது தான் முன்னுக்கு வர வேண்டும், செல்வந்தர் ஆக வேண்டும் என்று பல ஆசைகள் இருக்கின்றன. ஆனால், பலரும் ஆசைகளை எண்ண அளவில், மன அளவில் தான் வைத்துக் கொண்டு ஏங்குகின்றனரே தவிர, என்ன செய்யலாம் என்றோ, எந்தத் துறையில் இறங்கினால் முன்னேறலாம் என்ற தெளிவான எண்ணமோ இருப்பதில்லை.

வாழ்வில் முன்னேற விரும்பும் ஒருவருக்கு எந்தத் துறை ஏற்றது, எந்த துறை தன் திறமைக்கு வாய்ப்பாக இருக்கும் என்ற ஒரு லட்சியம் இருப்பதில்லை. இதனால், மனதில் ஆசை இருக்குமே தவிர, செயலில் இறங்காது. அப்போது படகோட்டி இல்லாத படகு கடலில் மிதந்து கொண்டிருப்பது போல் தான் ஆகும் கதை!

நமது எண்ணம், ஒரு லட்சியத்தைத் தேர்ந்தெடுக்கும்போது மனம் வேலை செய்யத் துவங்குகிறது... என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்ற கருத்துக்கள் நாளை நாம் ஒரு தொழிலில் இறங்கும்போது தேவைப்படும். எல்லா விதமான சிந்தனைகளும், அதை எப்படி நிறைவேற்றுவது என்ற விவரங்களையும் நம் மனம் வரிசையாக உருவாக்கிக் கொண்டிருக்கும். அதாவது, லட்சியம் தேவை, நோக்கம் தேவை அதே சமயம். மனதில் அற்ப கவலைகளும், என்னால் முடியுமா? இது நடக்குமா, என்ற சந்தேகங்களும், பயமும் நிச்சயமாக கூடவே, ஏற்படும் தான்!

அப்போது தான், மனிதன் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்...
 " இது என்னால் செய்ய முடியும்... செய்து முடிப்பேன், வெற்றி அடைவேன்... " என்ற தன்னம்பிக்கை நமக்கு மிகவும் அவசியம்.

இன்போசிஸ் என்ற பிரபலமான கம்ப்யூட்டர் நிறுவனத்தைப் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். கம்ப்யூட்டர் கம்பெனியை துவங்க அதன் நிறுவனர் நாராயண மூர்த்தியிடம் போதுமான பணம் இல்லை! அவரது மனைவியிடம் கடனாக பணம் பெற்று தொழிலைத் துவங்கினார். அவர் மனைவிக்கு அவர் மீதும், அவர் செய்யப் போகும் தொழில் பற்றியும் பெரிதும் நம்பிக்கை இருந்தது. இந்தியாவின் புகழ் பெற்ற தொழில் நிறுவனங்களில் இன்று இன்போசிஸும் ஒன்று.

எதையும் சாதிக்க, மனிதன் தன் மனதை, மனதில் எழும் எண்ணங்களை ஒருமுகப்படுத்த வேண்டும். அது ஒன்று தான் மனதில் இருக்க வேண்டும். அப்படி அதையே நினைத்துக் கொண்டிருக்கும் போது நமக்கு சாதனைக்கான பல்வேறு வழிமுறைகளையும் நம்மனம் நமக்கே வழங்கி, வழிகாட்டும்.

ஆன்மிகத் துறையில் கடவுளை தரிசிக்க வேண்டும் என்றோ, கடவுளின் அருள் வேண்டும் என்றோ விரும்புபவர்கள் செய்யும் காரியங்கள் ஒன்று, மன ஒருமைப்பாடு; இரண்டாவது, நம்பிக்கை; தன்னம்பிக்கை. மூன்றாவதாக, இறை நம்பிக்கை. இறைவனது பெயரைத் திரும்பத் திரும்ப சொல்லி அதே நினைவாக பிரார்த்தனை செய்வதைத்தான் தியானம் என்றும், தவம் என்றும் சொல்வர்; அதுவும் அவசியம். மன எண்ணங்களுக்கு அபாரமான சக்தி உண்டு. நாம் அதே நினைவாக இருக்கும் போது அங்கே நம் எண்ணம் வலிமை பெறுகிறது. ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று விரும்புபவர், அதற்காக அந்த லட்சியத்திற்காக தன்னைப் பூரணமாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்; மாறாக, வேறு ஆசைகளிலோ, எண்ணங்களிலோ கற்பனைகளிலோ மனதை அலைய விடக்கூடாது.

இத்துடன் என் சொந்த அனுபவத்தையும் சொல்ல வேண்டும். பூமிக்கு அடியிலும், கடலின் ஆழத்திலும் பெட்ரோலியம் எண்ணெய் இருக்கிறது. பூமிக்கு அடியில் இருக்கும் எண்ணெயை எடுப்பதற்கு மரத்தில் துளை போடுவது போல, பூமிக்கடியில் துளை போட வேண்டும். கடைசி கட்டங்களில் பூமிக்கு அடியில் பாறைகள் தென்படும். மேலும், அதைத் துளைத்துத்தான் மேலே செல்ல வேண்டும்.

சில சமயம், பாறைகளைத் துளைத்த உடனேயே கீழே பாறைகளால் அழுத்தப்பட்டு, அடியில் இருந்த எண்ணெய் குளம், துளை போடும் குழாய் வழியே வெகு வேகமாக பீறிட்டு மேலே எழும். எழுந்து சுமார் நான்கு அல்லது ஐந்து தெருக்களில் உள்ள வீடுகளின் மீது எண்ணெயை பீச்சி கொட்டி விடும்.

அப்படிப்பட்ட நிறு வனங்களுக்கு தேவையான பல ரசாயனப் பொருட்களை எங்கள் நிறுவனம் விற்றுக் கொண்டிருந்தது. இரண்டு நல்ல புதிய பொருட்களை நாங்கள் உருவாக்கினோம். ஆனாலும், எல்லாரும், இதற்கு முன் வாங்கி உபயோகித்த பொருளையே வாங்க விரும்பினரே தவிர, எங்கள் புதிய பொருளை வாங்க முன்வரவில்லை. நான் பல பெரிய, பெரிய நிறுவனங்களில் எல்லாம் ஏறி இறங்கி திரும்பி வந்தேன். அதாவது, விற்பனையில் தோல்வி தான் ஏற்பட்டது!

வாழ்விலும் சரி, தொழிலும் சரி. தோல்விகள் வரத்தான் செய்யும். அதை சமாளிக்க அதிலிருந்து மீண்டு வர நமக்கு தைரியம், துணிவு வேண்டும். ஒரு தோல்வியைக் கண்டவுடன், ஐயோ! என்று அலறி நம்மைப் பற்றி எடை போட்டுக் கொண்டிருக்க முடியாது; கூடாது. வாழ்வில் இதுதான் பெரிய விஷயம். நாம் நம்மை சில முக்கியமான குணங்களால் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எதையும் சமாளிக்கும் துணிவு, திறமை, நம்பிக்கை நமக்கு வேண்டும். நாங்கள் தயாரித்த மற்றொரு பொருள், ஆறு மாத காலத்தில் எங்களுக்கு ஏராளமான லாபத்தை, கொண்டு வந்து கொடுத்தது.

உலகம் அப்படித் தான்! குறை சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சொல்ல வேண்டியது, " என்னால் முடியும், முடியும்! " என்ற வாசகத்தைத் தான் நமக்கு நாமே சொல்லிக் கொண்டு நம்பிக்கையுடன் வழி காண முடியும்; வழிபிறக்கும் நிச்சயமாக!

" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " என்றானே ஒரு ஞானி. அதைக் கொஞ்சம் சொல்லிப் பாருங்களேன்; தோல்விக்கும் வாய்ப்பு கொடுத்து முயற்சியின் பலனை அடைய முயலுங்களேன்! வாழ்த்துக்கள்!

முன்பெல்லாம் வெளி நாடுகளுக்கு செல்பவர்கள் வேலைக்காக செல்வர். அங்கே மூன்று, நான்கு ஆண்டுகள் கிடைத்த வேலையை செய்வர். நல்ல மாத சம்பளம் கிடைக்கும். அதை சேமித்துக் கொண்டு திரும்பவும் நம் ஊருக்கு வருவர். வந்து ஏதாவது தொழில் ஆரம்பிப்பர் அல்லது சுகமாக வாழ்வர் புது வீடு கட்டிக்கொண்டு.

இரண்டாண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து சுமார் 65 ஆயிரம் பேர் பெரும்பாலும் கம்ப்யூட்டர் கல்வி கற்றவர்கள் அமெரிக்காவுக்கு சென்றனர். அங்கே அவர்கள் தகுந்த வேலையைத் தேடி, அதில் சேர்ந்து பணிபுரிகின்றனர். இன்னும் நமது நாட்டு படித்த இளைஞர்களும், திறமைசாலிகளும், அனுபவ சாலிகளும் அமெரிக்கா மாத்திரமல்ல... ஆஸ்திரேலியாவுக்கும், பிரான்ஸ் நாடு, ஜெர்மனி, மெக்சிகோ, இங்கிலாந்து என்று போய்க் கொண்டு தான் இருக்கின்றனர்.

அவர்கள் திரும்ப நம் நாட்டுக்கு, தங்கள் குடும்பத்திற்கு அனுப்பும் பணம் நம் நாட்டைப் பணக்கார நாடாக்கிக் கொண்டிருக்கிறது. அது அல்லாமல், நம் நாட்டிலும் இப்போது சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வளர்ச்சியை நாமும் பார்க்கிறோம்.

இந்தியாவிலிருந்து அமெரிக்க நாட்டின் இரும்பு உருக்காலையை வாங்கி கோடீஸ்வரர் ஆன இந்தியர் லஷ்மி மிட்டல் உலகிலேயே ஒரு பெரிய பணக்காரர். அது போல இன்போசிஸ் என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்தை நடத்தும் பெங்களூரைச் சேர்ந்த நாராயணசாமி மற்றும் பலரும் இன்று செல்வந்தர்களாக நாட்டிற்கு பெருமை அளிப்பவர்களாக இருக்கின்றனர். முகேஷ் அம்பானி உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்திருப்பது மிகப்பெரிய பெருமை நமக்கு.

இந்திய மாநிலங்களின் வளர்ச்சிக்காக, கல்வி, தொழில், விவசாயம், புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள், அதற்கான ஆய்வுக் கூடங்கள் என்று மத்திய அரசு ஒதுக்கும் பணத்தைப் பார்த்தோமானால் நமக்கு பிரமிப்பு தான் ஏற்படுகிறது. அறிவுத்திறன் ஏற்றுமதி செய்வதுடன், நம் நாட்டிலிருந்து துணிமணிகள், விவசாயப் பொருட்கள் என்று சில துறைகளிலும் நம் நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி ஆகின்றன.

சென்ற ஆண்டில் வெளிவந்த, " தொழில் வார இதழ் " என்ற புகழ் பெற்ற பத்திரிகையில் இன்னும் இரண்டாண்டுகளில் எந்த நாடுகள் பணக்கார நாடுகளாக ஆகப் போகின்றன என்பதைப் பற்றி எழுதி இருந்தனர்: அதில்

முதல் பணக்கார நாடாக ஆகப் போவது சைனா.

இரண்டாவது பணக்கார நாடாக ஆகப்போவது இந்தியா.

மூன்றாவது பணக்கார நாடாக ஆகப் போவது அமெரிக்கா.

என்று எழுதியிருந்தனர். படித்தபோது ஏற்பட்டது ஆனந்தமும், அதிசயமும்தான். ஆக! இந்தியா " இரண்டாவது பெரிய பணக்கார நாடா? " என்று எண்ணி மனம் பூரித்தது.

சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு தொழிலதிபர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கார்களை உருவாக்கும் இந்திய தொழில்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தை சென்னையில் திறந்தார். இவர் அதிகமாக கார்கள் உற்பத்தியாகும் டெட்ராய்ட் என்ற அமெரிக்க நகரில் அங்குள்ள கார் கம்பெனிகளுக்கெல்லாம் ஆலோசகராக இருந்த ஒரு நிறுவனத்தை உருவாக்கியவர்; அங்கே ஐந்து ஆண்டுகள் இருந்து பல காரியங்களைச் செய்தவர்.

இப்போது மேலும் மேம்பட்ட பாதுகாப்பு மிகுந்த ஒரு காரை உருவாக்கும் பணியில் அதற்கு வேண்டிய நிபுணர்களுடன் சென்னையில் திறந்திருக்கிறார். பாராட்ட வேண்டிய விஷயம்; பெருமைப்பட வேண்டிய விஷயம்.

அதாவது, இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அறிவும் திறமையும், புத்திசாலித்தனமும் நிறைய இருக்கிறது. நாம் நம் அறிவை விற்பவர்களாக அயல் நாடுகளுக்கு செல்வது நிகழ்ந்திருக்கிற ஒரு முதல் கட்டத்தில் நாம் இருக்கிறோமே தவிர, இன்னும் நாம் இரண்டாவது கட்டத்திற்கு போகவில்லை. ஆனால், அதைத் தான் உலகம் எதிர்பார்க்கிறது.

நாம் நமது இளைய தலைமுறையை அதற்கு ஏற்றவாறு உருவாக்க வேண்டும், தயார் செய்ய வேண்டும் என்ற பெரும் பொறுப்பு இந்திய நாட்டின் அரசியல் தலைவர்களுக்கும் எல்லா மாநில அரசாங்கத் தலைவர்களுக்கும், குறிப்பாக, நம் நாட்டின் கல்வித் துறைக்கும் இருக்கிறது.

" இது இப்போது இல்லையா? " என்று கேட்காதீர்கள். இது இன்று இருக்கிறது. நம் நாட்டில் அணுசக்தி பற்றிய ஆய்வுக் கூடங்களும், வான்வெளியில் சென்று தங்கும், ஆராயும் ஆய்வுக் கூடங்களும் செயல்படுகின்றன. நாம் பெருமைப்பட வேண்டும்.

பொதுவாக ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வளர்ந்திருக்கும் விஞ்ஞான முன்னேற்றம், கண்டு பிடிப்புக்கள் போன்றவை இன்னும் நம் நாட்டில் வளரவில்லை.

நம் நாட்டிலிருந்து உற்பத்தியாகும் துணிமணிகளும், உணவுப் பொருட்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. ஆனால், என்ன ஆனால் என்று கேட்கிறீர்களா? நம் நாட்டில் 40க்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் கூடங்கள் பல துறைகளில் இந்திய அரசின் ஆதரவில் செயல்படுகின்றன.

எல்லா ஆய்வுக் கூடங்களும் ஆய்வு செய்கின்றன. ஆனால், அவற்றிலிருந்து புதிய, புதிய பொருட்கள், கண்டுபிடிப்புகள் வந்திருக்கின்றனவா என்றால், " இன்னும் இல்லை " என்றோ அல்லது ஒரு மழுப்புதலையோ தான் பதிலாக கூற முடியும். அதாவது, அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. நம்முடைய பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் எப்படி புதிய பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன என்கிற கல்வித்துறை பயிற்சி கொடுக்கப்படவில்லை. இந்த ஆராய்ச்சிக் கூடங்கள் வழிகாட்டியாகவும் இல்லை. நேற்று இல்லாத துறை இது; இதுவரை யாரும் கண்டுபிடிக்காதது. ஆனாலும், இது நமக்குத் தேவையானது. என்ன செய்யலாம்?

மருத்துவத்தில் புதிய, புதிய மருந்துகள் கண்டுபிடிப்பது போல நகைகளிலும், ஆடைகளிலும் புதிய, புதிய கற்பனையில் விரிந்த அழகிய பொருட்களை உருவாக்குவது போல, புதிய கண்டுபிடிப்புகள் புதியன காணும் மனோபாவம் என்பது இன்று இல்லாத ஒன்று. ஆனால், நம் மனதின் கற்பனையிலிருந்து, சிந்தனையிலிருந்து, " ஏன் செய்யக்கூடாது? " என்ற எண்ணத்திலிருந்தும் விளையக்கூடியது இது.

நிச்சயமாக சொல்கிறேன், மேலே குறிப்பிட்ட சிந்தனைக்கும், கற்பனைக்கும், புதிய டிசைன்களுக்கும் என்னால் முடியும் என்ற சவால்களுக்கும் ஈடு கொடுக்கும் நாடு நம் நாடு. தமிழ்நாடும் சரி, இந்தியாவும் சரி. வெளிநாட்டார் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். குளத்தில் இறங்கினால் தான் நீந்தக் கற்றுக்கொள்ள முடியும். அதுபோல இன்றைய தலைமுறையையும், அடுத்த தலைமுறையையும், அதற்கேற்ப கல்வி தந்து நாம் உருவாக்கினால் தான் காரியம் விளையும்; செயல் கூடும் பலன் நிகழும்.

இந்தியா ஏன் இரண்டாவது பெரிய பணக்கார நாடாகத் தான் வேண்டுமா? முதலாவதாக இருக்க முடியாதா? முயன்றால், முடியும்; லட்சியமும், செயலும், ஆர்வமும் இருந்தால் அடையலாம். இது சம்பந்தமான பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

மிகப்பெரிய ஆலமரம் ஒரு சிறிய விதைக்குள் உறங்குகிறது.

வானில் பறக்கும் வல்லூறு ஒரு சிறிய முட்டைக்குள் காத்திருக்கிறது.

நீ காணும் லட்சிய தரிசனத்தில் விழித்தெழும் தேவதைகளின் சிலிர்ப்புகள் கேட்கின்றன!

எத்தனை பெரிய உண்மை!

நம்மில் பலரிடம் நம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை குடிகொண்டிருக்கிறது. இந்தத் தாழ்வு மனப்பான்மை பல விதங்களில் நாம் பேசும் பேச்சுக்கள் மூலமாகவும், செயல் மூலமாகவும் வெளிப்படுகிறது.

தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு காரணம் நம்மிடமுள்ள அளவுகோல். ஒரு நல்ல மனிதன் இவ்வளவு உயரமும், இவரைப் போல் புகழும், இவரைப் போல் பேச்சு வன்மையும், இன்னாரைப் போல் பண வசதியும் இருக்க வேண்டும் என்று தன்னைத்தானே பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்து சதா அளந்து கொண்டிருக்கிறான். யாரிடமாவது நீங்கள் செய்த ஒரு காரியத்தைப் பற்றிக் கூறினீர்களானால், அவர்கள் சட்டென்று தான் ஏன் அதைச் செய்யவில்லை என்றோ, செய்ய முடியவில்லை என்றோ, சமாதானம் கூறுவதைக் கண்டிருக்கிறீர்களா? அவர்கள் உடனே தங்களை நம்முடன் மனத்தில் ஒப்பிடத் துவங்குகின்றனர்.

ஒரு மரத்தில் ஒரு பறவை உட்கார்ந்திருந்தால் அதற்காக நாமும் ஏறி அங்கே உட்கார்ந்து கொள்வதில்லை. அதுபோல நாம் பிறர் பெருமைகளையும், சாதனைகளையும் பார்த்து ரசிக்க, மகிழ வேண்டுமேயல்லாது அவர்களது அளவு கோல்களும், லட்சியங்களுக்கு ஏற்ப வாழ முயலக்கூடாது.

தனது நம்பிக்கைகளில் ஏற்படும் சந்தேகமே பிறரது உடன்பாட்டை எதிர்நோக்கச் செய்கிறது. இவர்கள் தன்னம்பிக்கையில்லாதவர்கள், சுய மதிப்பற்றவர்கள். நாம், நம்மிடம் ஒரு 5 அடி 5 அங்குல அளவுகோலை வைத்துக்கொண்டு எல்லாரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எடை போடுவது மதியீனம். நாம் சுய நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அவரவர் இயல்புக்கேற்ப பேச, நடந்து கொள்ள நாம் அனுமதிப்போம். பிறரை, அவர்களது இயல்பான குணங்களுக்காக என்று நாம் அவர்களைத் தனியாக விடுகிறோமோ, மதிக்கிறோமோ, அவர்கள் சொந்த அபிப்ராயங்களைக் கொள்ள அவர்களுக்குப் பூரண உரிமை இருக்கிறது என்று எப்போது ஏற்றுக் கொள்கிறோமோ அப்போதுதான் நமக்கு ஒரு வளர்ந்த மனோபாவம் ஏற்படுகிறது.

எல்லாரும் நம்மைப் போலவே இருந்தால் அவ்வுலகம் எப்படி இருக்கும் என்பதை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். ஒரே விதமான வீடு, ஒரே விதமான உடை, ஒரே மாதிரியான உணவு என்றால் உலகம் உப்பு சப்பற்றிருக்கும். நாம் பிறரை அவர்கள் போக்கில் விடக் கற்றுக் கொள்ள வேண்டும். வளர்ந்த பிள்ளைகளையும், மனைவியையும் அவர்களது குணங்களுக்காக, தனித் தன்மைக்காக என்று அவர்கள் போக்கில் விடுகிறோமோ அப்போதுதான் நமது மனம் உண்மை நிலைகளை அனுசரித்து ஒழுகுகிறது; இல்லாவிட்டால் மனதில் சுமையும், வலியும் ஏறி விடுகிறது.
நாம் நம் வீட்டில் வசிப்பதுபோல, பிறரை அவர்கள் எண்ண வீட்டில் வாழ, குண வீட்டில் நடந்து கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும். அதேபோல பிறர் நம்மை நெருக்காமலிருக்கவும் நாம் எல்லை வகுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் வாழ்கிறோம். அதற்காக நாம் மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை. தலை குனிந்து நடக்க வேண்டியதில்லை. தலை நிமிர்ந்து வாழுமுன் தலை நிமிர்ந்து நினைக்க முதலில் நாம் பழக வேண்டும். அதற்குத் தன்னைப் பற்றிய ஒரு நல்ல மதிப்பு தேவை. நாம் செய்யும் காரியங்களுக்கெல்லாம், அவை பிறரது உரிமைகளைப் பாதிக்காதவரை, நாம் உயிருக்கு விளக்கமும் சமாதானமும் கூற வேண்டியதில்லை.

பிறர் அபிப்பிராயத்தைத் தேடி, அதற்கேற்ற வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயல்பவருக்கு ஓர் அழகிய கதையைச் சொல்ல வேண்டும். ஒரு சாமியார் பூனையிடம் ஒரு சீடப் பூனை போய் முறையிட்டுக் கொண்டது. " குருவே! எனது வாலைப் பிடித்துக் கடித்து என் கையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் போல ஆசையாயிருக்கிறது. அதற்காகத் தினமும் நான் என் வாலைத் துரத்திக் கொண்டு சுற்றிக் சுற்றி வருகிறேன். வால் கையில் அகப்படுவதில்லை. தேவரீர் திருவுளமிரங்கி என் வால் என் கையில் அகப்படும்படி அருள் செய்யவேண்டும்! " என்றது.

அதற்கு சாமியார் பூனை சொன்னது, " என் உடன் பிறப்பே! நான் இந்த உலக ஆசாபாசங்களை எல்லாம் அறிந்து ஆராய்ந்து வந்திருக்கிறேன். எனக்கும் அப்படி ஒரு ஆசை அடிக்கடி எழுகிறது. ஆனால், ஒன்று நான் கண்டு கொண்டேன். இந்தச் சள்ள பிடித்த வாலைச் சுற்றி வராமல் நாம் நம் வழியில் போவோமானால், வால் நமக்குப் பின்னால் நம்முடன் பதவிசாய் வந்து கொண்டிருக்கும் இதை நீ உணர்ந்து கொள். நிம்மதியடை! " என்றது.
பிறர் பாராட்டையும், ஆமோதிப்பையும், அங்கீகாரத்தையும் பற்றி லட்சியம் செய்யாமல் நாம் நம் பணியில், கொள்கையில் ஈடுபடுவோமானால், பாராட்டும், புகழும் பூனை வால் போல் நம்மைத் தொடர்ந்து வரும்.
அதேபோல வாழ்வில் இடர்ப்பாடுகள் நேரிடும்போது பலர், " நான் துரதிர்ஷ்டசாலி' என்றும், " துக்கத்தை அனுபவிக்கவென்றே பிறந்த பெண் ஜென்மம் " என்றும், " என் வினை என்னை தொடர்கிறது! " என்றும் பல்வேறு விதங்களில் தங்களைப் பற்றி முத்திரை குத்திக் கொள்கின்றனர். " நான் சோனி... " " நான் கையாலாகாதவன்... " " நான் பிறர் பரிதாபப்பட வேண்டிய பிறவி! " என்று பலர் தங்களை முத்திரையிட்டுக் கொண்டு இந்த இலக்கணங்களுக்கேற்ப பரிதாபச் சின்னமாய்த் தங்களை தாங்களே ஆக்கிக் கொள்கின்றனர்.
சில தோல்விகளிலிருந்தோ, சில குறைபாடுகளினாலோ, அல்லது பிறர் ஆமோதிப்பைப் பெறாததனாலோ இவர்கள் இப்படியொரு தண்டனையைத் தங்களுக்கே அளித்துக் கொள்கின்றனர். ஏதோ கடவுள், உலகில் நம்மையே தேர்ந்தெடுத்துக் கஷ்டங்களை அள்ளிக் கொடுப்பது போல் கற்பனை செய்து கொண்டு அவதிப்படுகின்றனர்.
கடவுள் என்ன செய்வார், பாவம்!

அவருக்கு வேறு வேலை இல்லையா?

மனித வாழ்வை ஆட்டிப் படைக்கும் இரு வேண்டாத நிலைகள் குற்ற உணர்வும், கவலையும் என மன சிகிச்சை நிபுணர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். நேற்று நடந்து போன விஷயங்களை எண்ணி,
" நான் நேற்று அப்படிப் பேசியிருக்கக்கூடாது, இப்படி நடந்து கொண்டிருக்கக்கூடாது! " என்று எண்ணி குமைதலை, " குற்ற உணர்வென்று குறிப்பிடுகின்றனர். அதேபோல் கவலை என்பது, " நாளை நடக்கும் விஷயம் எப்படி ஆகுமோ? " என்று பல விஷயங்களையும் எண்ணிப் பயந்து வாழ்வது. குற்ற உணர்வு, நேற்று நடந்த விஷயங்களினால் ஏற்படுவது, கவலை, நாளை நடக்கப்போகும் விஷயங்களால் ஏற்படப் போவது. ஆக நேற்றும் தவறு செய்துவிட்ட வருத்தம்; நாளையும் என்ன நேரிடுமோ என்ற பயம். மொத்தத்தில் இதன் மூலம் மனிதன் நிகழ் காலத்தை வாழ்வின் பொன்னான பகுதியைக் கோட்டை விடுகிறான். மனக் கஷ்டப்படுவதன் மூலமோ, அழுது வருத்தப்படுவதன் மூலமோ நேற்று நடந்த சம்பவங்களையும் மாற்றிவிட முடியுமென்றால், உலகம் வேறு விதமாயிருக்கும்.

எல்லாரும் ஒவ்வொரு சமயமாவது, " நான் செய்த தவற்றை எப்படி மறக்க முடியும்? நான் என்ன பிராயச்சித்தம் செய்வேன்? எந்தக் காவேரித் தண்ணீரில் என் பாவத்தைக் கழுவ முடியும்? " என்று மனம் துன்பப்படுவது உண்டு. இதன் மூலம் நாம் எவ்வளவு மனிதத் தன்மையுடன் இருக்கிறோம் என்பதை நமக்கு நாமே காட்டிக் கொள்கிறோம் என்று மன நூலோர் அபிப்பிராயப்படுகின்றனர்.

குற்ற உணர்வுகளும், கவலைகளும் நமது நேரத்தை வீணடிக்கின்றன. நமது சக்தியை வடித்து விடுகின்றன. நமது எண்ணங்கள் தன் சுதந்திரத் தன்மையை இழந்து இதனால் முடக்கப்படுகின்றன. இத்தகைய எண்ணங்களும், நினைவுகளும் சிறிது நேர வருத்தத்தில் இருந்து, சித்தபேதம் வரை நம்மைக் கொண்டு சென்று விடுகின்றன.

நமது உளுத்துப் போன பல சமுதாயக் கோட்பாடுகளும் நம்மைக் குற்ற உணர்வுடன் வாழ வைக்கின்றன. சூழ்நிலையைத் தெளிவாக ஆராய்வதன் மூலம் இந்த வேண்டாத மன உளைச்சலைப் போக்கிக் கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
குற்ற உணர்வுகள், நம்மை வடித்து விடும் நோய் நிலை. அவற்றைப் பிறர் நம்மிடம் உண்டு பண்ண விழைந்தால், நாம் சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நாமே அது உண்டாகக் காரணமானால் காவேரியில் முழுக்குப் போட்டு மறக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
" இன்று, இந்தியாவின் பொருளாதாரம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. சுதந்திரம் பெற்ற பிறகு இதுபோல இதுவரை நம்நாட்டில் பணப்புழக்கமும், தொழில் வருமானங்களும், வெளி நாட்டில் பணிபுரிபவர்களிட மிருந்து வரும் பணமும் சேர்ந்து நமது பொருளாதாரத்தை உயர்த்தியது இல்லை ".

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, " பிசினஸ் வீக் தொழில் வளம் வார இதழ் " என்ற புகழ்பெற்ற அமெரிக்க பத்திரிகை இப்படி எழுதியது. மேலும்,

உலகின் முதல் பெரிய பணக்கார நாடு சீனா.

இரண்டாவது பணக்கார நாடு இந்தியா.

மூன்றாவது பணக்கார நாடு அமெரிக்கா என்றும் குறிப்பிட் டிருந்தது. இது உண்மையாகி வருகிறது. இது பெருமைப்பட வேண்டிய விஷயம் தான். மிகப்பெரிய பணக்காரரான இந்தியர் மிட்டலும், இந்தியாவின் பிரபல தொழிலதி பரான அம்பானியும் யார், பெரிய பணக்காரர் என்று தங்களை ஒப்பிட்டுக் கொள்கின்றனர்!

சீன நாடு நாற்பதாண்டுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சியால் ஆட்சி செய்யப்படுகின்ற நாடு. எனவே, அங்கு மிகக் குறைந்த சம்பளத்தில் உழைக்கும் மக்கள் கிடைக்கின்றனர். இதனால், ஒரு பொருளை உருவாக்கும் செலவு நம் நாட்டையும் அமெரிக்காவையும் விட மிக மிகக் குறைவானது. சீன நாட்டில் கத்தி, சுத்தி, சம்மட்டி, மற்றும் இதுபோன்ற தொழி லுக்கு தேவைப்படும் பொருட்கள் எல்லாம், மிக மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால், அமெரிக்க தொழில் அதிபர்களோ இந்திய தொழில் நிலையங்களோ சீனாவுடன் போட்டிபோட முடியவில்லை.

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் இருந்த சீன தலைநகரையும் மற்றும் இன்று உள்ள பெரும் நகரங்களையும், அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கையும், வாஷிங்டனையும், கலிபோர்னியாவையும் தோற்கடிப்பதாக இருக்கும். ஆகவே, யாரும் அவர்களுடன் போட்டி போட்டு ஜெயிப்பது என்பது இப் போது இயலாத காரியம்.

நம் நாட்டில் இப்போது பலரும் சொல்லிக் கொண்டிருக்கும் மந்திரம். " நீங்கள் பணக்காரராக வேண்டுமானால் மேலே மேலே படியுங்கள். நிறைய சம்பளத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் போய் நிறைய சம்பாதித்துக் கொண்டு வரலாம்! " என்று அறிவுரை கூறுகின்றனர்.

மேல்படிப்பு ஒன்றுதான், இன்றைய நிலையில் நிறையப் பணத்தை அள்ளித் தரும் என்பது உண்மைதான். ஆனால், வாழ்வில் பணம் தான் முக்கியமா? பெயரும், புகழும், செல்வாக்கும் தான் முக்கியமா? இதற்காக வாழ்வதா லட்சியம் என்பதை நாம் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும். கல்வியிலும் சரி, பொது வாழ்விலும் சரி மனித வாழ்வு எதில் மகிழ்ச்சி, உயர் நிலையை எய்துகிறது என்று நம் கல்வி உபாசகர்களும், இதுதான் முடிந்த முடிவான வழி என்று கூறுபவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நம்முடைய நாடு பழம் பெரும் நாடு என்பது மட்டுமல்ல ஞானிகளும் யோகிகளும், சித்தர்களும், நாயன்மார்களும், ஆண்டாள்களும், ஆழ்வார்களும் வாழ்ந்த நாடு. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கல்கத்தாவில் உயர்நீதிமன்ற நீதி பதியாயிருந்த சர் ஜான் உட்ரப் என்ற இங்கிலாந்திலிருந்து வந்த மனிதர் இந்தியாவை பற்றி தன் நண்பர்களுக்கு எழுதுகிறார்.

" இந்தியர்களை எல்லாம் நம்மைப் போல் முன்னேற்றம் அடைந்தவர்கள் அல்ல என்றும் காளி, ஐயனார், தெருவுக்கு ஓர் பிள்ளையார் என்று சாமி கும்பிடுபவர்கள், சாதாரணமான மனிதர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தோம். அது அப்படி அல்ல; உண்மை அல்ல. அவர்கள் எவ்வளவோ உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கின்றனர். இத்துடன் அவர்களது பதஞ்சலி யோக சூத்திரம் என்ற அவர்களது நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன் " என்று பிரான்ஸ் நாட்டின் இலக்கிய கழகத்திற்கும் அனுப்பினார். பிரெஞ்சு நாட்டு அறிஞர்கள் இதைப் படித்து பிரமித்து போனார்கள். அதன்பின் இதே கதை இங்கிலாந்தில் நடந்தது.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால், இன்று நமக்கு, நம் புத்திசாலித்தனத்திற்கு, உழைப்பிற்கு பணம் கொடுக்கும் மேல் நாடுகளைக் கண்டு மிரளாதீர்கள். பணத்தைக் கண்டு பதறிப்போய் அதுவே எல்லாம் என்று எண்ணிவிடாதீர்கள்.

ஏனெனில், நம் முன்னோர்கள் எழுதிய காவியங்களும் அறிவுரைகளும், எது வாழ்வின் ஆணிவேர், எது வாழ்வின் முக்கியமான செயல், எது வாழ்வின் தேவை என்பதை எல்லாம் திடமாகவும், தீர்மானமாகவும் சொல்லி இருக்கின்றனர்.

ஓ மனிதா! நீ உனக்காகவும் உன் குடும்பத்திற்காகவும் மட்டும் பிறக்கவில்லை; ஊர் உலகிற்கு உதவி செய்வதற்காகவும், இல்லாதவர்களுக்கு வழிகாட்டி உதவுவதற்காகவும் தான் பிறந்திருக்கிறாய். ஏழைக்கு உதவு. ஏழ்மை, கிராமங்களில் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. உழைப்பில் பெறும்பாதி சம்பளத்தை அவர்கள் மதுவில் செலவழிப்பதும் இதனால் குடும்பம் நாசமாவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கிராமத்து பெண்கள் மிகப் படிக்காதவர்களாகவும் பொதுவாக சமுதாயத்தில் பெண்கள் இரண்டாவது நிலையில் இருப்பதையும், மலைவாழ் மக்களின் அறியாமையும், கஷ்டங்களையும் எண்ணிப்பார். இன்றைய சமுதாயத்தில் இருக்கும் லஞ்சம் ஊழல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை என்று இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்தோமானால், படித்தவன், பணத்திற்காக மேலே மேலே படித்து பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பது முக்கியமா அல்லது இவர்களுக்கு உதவுவது நல்லதா என்று தான் எண்ணத்தோன்றும்.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களுடைய அரசாங்கம் தான் ஜனநாயகம். அப்படியா இருக்கிறது நம் நாடு இன்று? லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை என்று இவை அதிகப்படும் சூழ்நிலைகளில் நாடு போய் கொண்டிருப்பதைப் பாருங்கள்.

முதலில், நாம், நம் அரசியலில் ஜனநாயகத்தை சீர்செய்ய வேண்டும். அடுத்து, கல்வியின் தரத்தை, வாழ்க்கை நெறிகளை வாழும் நெறிகளாக மாற்ற பாடு பட வேண்டும். இன்று நம் நாட்டில் இருக்கிற படிப்பு போதும். எது முக்கியம்? குடும்பம் முக்கியமா அல்லது என் குடும்பம் என்ற சமுதாயம் முக்கியமா? என்று சிந்தித்து, படித்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் இறங்கினால்தான் இந்த நாடு நாடாக மாறும். இன்றைய நாடு, நெறிகளற்ற சமுதாயமாக " வல்லான் வகுத்ததே வாய்க்கால்! " என்று போய்க் கொண்டிருக்கிறது. எல்லாரும் வாழ வேண்டும் என்பதற்கு பதிலாக, சுயலாபம் பார்க்கும் மக்கள் சமுதாயமாக போய் கொண்டிருக்கிறது. ஏழைகள் ஏழைகளாகவே இருந்து ஏழ்மை மாறாத வரை, நியாயம், நேர்மை ஏற்படாத வரை எப்படி பணக்கார நாடாக பெருமைப்பட முடியும்? இது பொது வாழ்வில் உள்ள படித்தவர்களின் கடமை அல்லவா?

" தோல்வியே வெற்றிக்கு முதல்படி! " என்று சொல்லும்போது, " தோல்வியைத் தழுவுங்கள்! தோல்வியை வரவேற்று மகிழுங்கள்! " என்று சொல்கிறோமா அல்லது வெற்றி பெறுவதற்கு தோல்வி அடைந்துதான் ஆக வேண்டும். எனவே, தோல்வியை எதிர் பாருங்கள்! என்று சொல்கிறோமா?

இல்லை! இல்லவே இல்லை!

தயவு செய்து, அப்படி எண்ணி விடாதீர்கள்!

வெற்றி வரும் என்று நம்புங்கள்; திட்டமிடுங்கள்; உழையுங்கள். ஆனால், அதையும் மீறி தோல்வி ஏற்படுகிறதென்றால், இடிந்து போகாதீர்கள். தோல்வி ஏன் ஏற்பட்டது என்று காரணத்தை ஆராயுங்கள். அடுத்த முறை அப்படி தோல்வி ஏற்படாதவாறு உங்கள் திட்டத்தை அமையுங்கள்.

கையிலுள்ள பொருளை இழந்து தொழிலில் நஷ்டம் அடையும்போது மனிதன் தவிக்கிறான். " இதிலிருந்து மீள்வேனா? " என்று பயப்படுகிறான்

" நம்மிடம் இருப்பது நமது மனம்தான்! " என்று தைரியம் சொல்லிக் மனதை உறுதிப் படுத்திக் கொண்டு, தன் முழுக் கவனத்தையும் செய்கிற தொழிலின் மீது திருப்புகிறான். பசியைப் பற்றி கவலைப்படு வதில்லை; தூக்கத்தைப் பற்றி அக்கறைப்படுவதில்லை; எடுத்த தொழில் ஒன்றே குறியாக உழைக்கிறான்; வெற்றி பெறுகிறான். தோல்வி என்ன செய்தது? நம்மிடமுள்ள ரோஷத்தைக் கிளப்பி விட்டது. நம்மிடமுள்ள தன் மானத்தின் தலையில் அடித்து நம்மை எழுந்து நிற்கச் செய்தது. நம்மை கேவலப்படுத்தி, அதன் மூலம் நம் கோபத்தைக் கிளப்பி, நம் மன உறுதியை வளர்த்தது. தோல்வி என்ற அனுபவம், தோல்வியைப் பற்றிய பயத்தைப் போக்குகிறது. ஒருமுறை ஓட்டாண்டி ஆனவன் - தோல்வி கண்டவன் - மறுமுறை தோல்வியைக் கண்டு, அவ்வளவு பயப்படமாட்டான். தோல்வியிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதில்தான் குறியாயிருப்பான்.

பெண்கள் எல்லாம் அரசியலில் இறங்காத காலம், அது. அறு பத்தாண்டுக்கு முன் அப்போது கே.பி. சுந்தராம்பாள் பிரபல பாடகி, நாடக நடிகை. காங்கிரசு கொடியைக் கையில் பிடித்து தெருவில் தேசப் பாடல்களைப் பாடி, பொதுமக்களை வெள்ளைக்கார அரசுக்கு எதிராக எழுப்பிக் கொண்டிருந்தார். வெள்ளை அரசு அவரைப் பிடித்து சிறையில் தள்ளியது.

சிறை செல்வது சுலபமான வேலையல்ல. அதுவும் பெண்கள் சிறை செல்வது! ஊர் உலகம் சிறை சென்றவர்களை ஒருவிதமாகப் பார்க்கும் காலம் அது. சிறையிலிருந்து கே.பி. எஸ் பாடினார், முன்னிலும் ஆவேசமாக.

" சிறைச்சாலை என்ன செய்யும்? " என்று பாடி னார். மக்களிடையே வீரம் எழுந்தது. கூட்டம் அதிகமாயிற்று. அந்தப் பாட்டு பிரபலமடைந்தது. " சிறைச்சாலை என்ன செய்யும்? " என்று பாடியவர் மேலும் ஒரு படி மேலே போய், " சிறைச்சாலை என்ன செய்தது? " என்று பாடி ஒரு கேள்விக்குறியுடன் பாட்டை நிறுத்தினார்!

கூட்டம் ஆரவாரித் தது - எழுந்து நின்றது - காற்றில் வீரம் கொப்பளித்தது. அதுபோல - தோல்வி கண்டவன் என்ன சொல்கிறான்? " தோல்வி என்னை என்ன செய்ய முடியும்? " என்று கேட்கிறான். தோல்வியை ஓரிரு முறை சமாளித்தவன் ஒருபடி மேலே போய், " ஓ... தோல்வியே! உன்னால் என்னை என்ன செய்ய முடிந்தது? " என்று கேட்கிறான்!

தொழிலில் இறங்குபவர்கள் பத்தில் எட்டு பேர் தோற்றுப் போகின்றனர். இதற்குக் காரணம் பல. அனுபவமின்மை தான் முக்கிய காரணம். ஆனால், அதற்காக, " இனி தொழிலே செய்ய மாட்டேன்! " என்று விட்டு விடுகிறார்களா? சிறிது காலம் சென்றதும் மறுபடியும் முயல்கின்றனர். தொழிலில் இறங்குபவர்களில் யார் வெற்றி பெறுகின்றனர் என்று ஆராய்ந்ததில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் முதல் இரண்டு முறை தோற்றுப் போயிருக்கின்றனர் என தெரியவந்தது.

எனவே, தோல்வி வந்ததென்றால் கலங்காதீர்கள். நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள்; ஆனால், தோல்விகளைத் தாண்டித்தான் போக வேண்டும், வெற்றி பெற.

முதல் வெற்றி சிலநேரம் நமக்கு ஒரு அசாதாரண நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. " எடுத்ததெல்லாம் வெற்றியடையும் " என்ற ஒரு போலி நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. நமது ஆணவத்தை வளர்த்து விடுகிறது.

தோல்வி ஏற்பட்டிருந்தால் ஒரு நிதானம் இருந்திருக்கும்; ஒரு பயம் - ஒரு கவனம் இருந்திருக்கும். ஒரு அடக்கம் ஏற்பட்டிருக்கும். அடக்கம், கவனம், நிதானம் - இவற்றை எல்லாம் தோல்விதான் தருகிறது. எனவேதான், தோல்வி ஒரு பாடம் என்று சொல்கின்றனர். தோல்வி நமக்கு பாடம் புகட்டுகிறது. மாறாக, வெற்றியில் நாம் எதையும் கற்றுக் கொள்வதில்லை - சரியான பாதையில் சென்றிருக்கிறோம் என்பதைத் தவிர அந்த உண்மைகூட வெற்றி பற்றி சிந்திக்கும்போது தான் புலப்படுகிறது. நீங்கள் ஒரு எழுத்தாளர். உங்கள் கதையோ திரும்பத் திரும்பத் திருப்பி அனுப்பப்படுகிறது.

நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்கள். எல்லா இடங்களிலிருந்தும் வேலை இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.

தொழில் தொடங்குகிறீர்கள். பல எந்திரக் கோளாறுகள்! உற்பத்தி செய்ய முடியவில்லை.

அந்த நிலையில் நாம் என்ன செய்யலாம்?

ஒருமுறை ஒரு நண்பரின் தோட்டத்தைப் பார்க்கப் போனார் தத்துவ ஞானி
ஜே.கிருஷ்ண மூர்த்தி. தோட்டக்கார நண்பர் சொன்னார்... " எல்லா மரங்களும் இங்கே காய்க்கின்றன. ஏனோ, இந்த ஒரு மரம் மட்டும் காய்ப்பதில்லை. நான் இதை வெட்டிவிடப் போகிறேன்! "

மறுநாள் காலை எழுந்த ஜே.கே, அந்த மரத்தின் அருகில் போய் நின்றார். தடவிக்கொடுத்தார். அந்த மரம் வெட்டப்படுவதை அவர் விரும்பவில்லை. அந்த மரத்துடன் பேசினார்.

" நீ அழகான மரம். நல்ல வயது. காய்க்க வேண்டாமா? பூக்க வேண்டாமா? நீ பூத்து மலரைக் கொடு; காய்த்துக் கனியாகு! " என்று பேசி அன்புடன் தடவிக் கொடுத்தார். அந்த ஆண்டு முதன்முறையாக அந்த மரம் அமோகமாகக் காய்த்தது.

தோல்வி வரும்; உண்மைதான். ஆனால், அதை அன்புடன் அணுகுங்கள்; பேசுங்கள். வெற்றி வார்த்தைகளை பயன்படுத்துங்கள். உறவாடுங்கள். உடலிலே நோய் ஏற்பட்டாலும் சரி; சூழ்நிலை மோசமாக இருந்தாலும் சரி.

இந்த உலகில் எதுவுமே நிரந்தரமல்ல; தோல்வியும் நிரந்தரமல்ல.

ஒரு கார்ட்டூன் போட்டிருந்தனர். அது ஒரு படுக்கையறை. படுக்கை அறையைச் சுற்றிலும் புத்தகங்கள் நிறைந்திருக்கின்றன. " ஏன் இப்படிப் படுக்கையறையில் போய்ப் புத்தகங்களை நிரப்பி வைத்திருக்கிறீர்களே? " என்று கேட்டதற்கு, என் மனைவி என்னுடன் சதா வாதிடுகிறாள். அவள் சொல்வது சரியல்ல என்று நிரூபிப்பதற்காகத் தான் இப்படிப் புத்தகங்களை வாங்கி அடுக்கியிருக்கிறேன்! என்கிறான் கணவன். பாவம் கணவன்!

நாம் தான் சரி, நாம் சொல்லுவதுதான் சரி என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? உலகில் பல விஷயங்கள், அபிப்ராயங்கள். உலகில் எத்தனை மனிதர்கள் இருக்கின்றனரோ, அத்தனை அபிப்ராயம் இருக்க வழியுண்டு. ஒரே விஷயத்தைப் பல மக்கள் பல்வேறு நோக்கில் காண்பர். மக்களின் சுவை வேறுபட்டது. அவரவர் தாங்கள் வளர்ந்த விதத்திற்கேற்ப அனுபவத்திற்கேற்ப, எதைப்பற்றியும் தனி அபிப்பிராயம் கொள்ள உரிமையுண்டு.

மனிதர்களது தனித்தன்மையை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், புடவை கட்டிக் கொண்டு வரும் ஊரில், ஒரு பெண் கால் சட்டை போட்டுக் கொண்டு வந்தால், அதனால் அவளது புனிதம் பாழாகி விடுவதில்லை. உடை என்றால் இப்படித்தான்; உணவு என்றால் இப்படித்தான்; வீடு என்றால் இப்படித்தான் என்று நாம் எல்லாவற்றையும் அறுதியிட்டுக் கொண்டு எல்லாவற்றையும் நம் அளவுகோளால் அளக்கவும், மதிப்பிடவும் முயல்வது அறியாமை.
உண்மையில் சொல்லப் போனால், மாறுபட்ட மனோபாவம் கொண்டவர்களாலே தான் உலகம் முன்னேறியிருக்கிறது. உலக முன்னேற்றமே சமுதாயத்தையும், நிகழ் உலகத்தையும் எதிர்த்துப் போராடியவர் களாலேயே உருவாகி இருக்கிறது. ஏற்றுக் கொண்டவர்களால் அல்ல. இருக்கிறதை இருக்கிறபடி ஏற்றுக் கொண்டவர்கள் ஆட்டு மந்தைக் கூட்டம். சாய்கிற பக்கமே சாயும் செம்மறியாடுகள். எதிர்ப்பவர்களும், புது வழி கண்டு பிடிப்பவர்களுமே முன்னோடிகள்.
உடன்கட்டை ஏறு வதை எதிர்த்த ராஜாராம் மோகன் ராய், இந்தியப் பெண்கள் உலகத்திற்கே நன்மை செய்தார். ஹரி ஜனங்களுக்காகப் போராடிய காந்திஜி, வெள்ளைக்காரன் ஆட்சியை எதிர்த்த கட்டபொம்மன், சுய மரியாதைக்காகப் போராடிய ஈ.வெ.ரா, இவர்களெல்லாம் முன்னோடிகள்; தனித்தன்மை கொண்டவர்கள். நாம் நம் தனித்தன்மையை வளர்க்க வேண்டும். பிறர் என்ன சொல்வரோ என அதை அமுக்கி, கூட்டத்துடன் சேர்ந்து கோவிந்தா போடக் கூடாது.

தனித்தன்மை பற்றிப் பேசும்போது அத்துடன் தைரியமும், வீரமும் இணைந்து நிற்பதைக் காணலாம். நமது தனித்தன்மையை நிலை நிறுத்த எல்லாரும் புரட்சி வீரர்களாக மாற வேண்டியதில்லை. நாட்டில் எமர்ஜென்சி வந்தபோது எத்தனை பேர் எதிர்த்தார்கள்? ஜெயப்பிரகாஷ் எதிர்த்தார்; பர்னாண்டஸ் எதிர்த்தார். பலர் உள்ளத்தில் எதிர்த்திருக்கக் கூடும்; சரியான சமயத்திற்காகக் காத்திருக்கக்கூடும்.

ஓர் அநியாயமான வரியை எதிர்த்து தோரோ என்ற அமெரிக்க அறிஞர் ஒருநாள் சிறை சென்றார். அவர் ஊரைக் கூட்டவில்லை; புரட்சிக் கூட்டம் நடத்தவில்லை.

மின்சார விளக்கைக் கண்டுபிடித்த எடிசனும், முதல் விமானத்தைப் பறக்கவிட்ட ரைட் சகோதரர்களும், புதுமைக் கவிஞன் பாரதியும் தங்கள் தனித்தன்மை மூலம்தான் கூட்டத்திலிருந்து தனித்து இன்று சரித்திரத்தில் நிற்கின்றனர்.

முள்ளிலே மலரும் மலர், சுற்றியிருக்கும் முட்களுக்காகக் கவலைப்படுவதில்லை. காட்டிலே விரியும் ஒரு மலர் தன்மணத்தை ரசிக்க யாரும் இல்லையே எனக் கவலைப்படுவதில்லை. உளுத்துப்போன சம்பிரதாயங்களை மறந்து விட்டுச் சுதந்திரமான மனநிலையில் ஒரு கவிதை எழுதத் துவங்குங்கள். உள்ளம் சமுதாய விலங்குகளிலிருந்து விடுபடட்டும். உலகில் ஆக்க சக்திகள் நம்முள் பிரவகிப்பதை, உலகின் அதி அற்புத மனிதனாக நாம் உயருவதை நீங்கள் உணரக் கூடும். பழக்கடையில் பழங்களை அழகாக அடுக்கி வைத்திருக்கின்றனர். நாம் நமக்குப் பிடித்த பழங்களை வாங்கிக் கொள்கிறோம். பூக்கடையில் வித, விதமான பூக்களைக் கொட்டி வைத்திருக்கின்றனர். நாம், நமக்குப் பிடித்தமான பூக்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம். பெரிய ஓட்டல்களில் விதவிதமான உணவுகளைச் சமைத்து அடுக்கி வைத்திருக்கின்றனர். நமக்குப் பிடித்த உணவைத் தட்டிலேற்றிக் கொள்கிறோம்.

அதேபோல உலகில் பலவகையான எண்ணங்கள் நிறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. சுக நினைவுகளை எழுப்பும் எண்ணங்கள், துக்கத்தை மூட்டிவிடும்; எண்ணங்கள், சோகத்தையும், உற்சாகத்தையும் தரும் எண்ணங்கள், சோகத்தையும், சோர்வையும் உண்டு பண்ணும் எண்ணங்கள் என்று உலகில் நம் கண்முன் பலவற்றை அடுக்கி வைத்திருக்கின்றனர். காற்றில் மிதக்கவிட்டிருக்கின்றனர். நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம்?

நமக்குப் பிடித்தமானது எது?

கோபக்காரன் என்று பெயர் பெற்றவனையும், தன்னம்பிக்கை இல்லாதவன், கையாலாகாதவன், கவலைப்படுபவன் என்று அழைக்கப்படுபவனையும் பார்த்தால் அவன் உள்ளம் எந்தவகை எண்ணங்களால் நிறைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிய வரும். சிலரது முகத்தைப் பார்த்தாலே சொல்லி விடலாம், துக்கம் கோடுகளைப் போட்டிருக்கிறதா, உற்சாகம் தன்னம்பிக்கையை நிலவவிடுகிறதா என்று. அவர்கள் அழுகிய பழத்தை வாங்குபவர்கள், விலை குறைவாக, வாடிய பூவைத் தெருவிலிருந்து பொறுக்குபவர்கள், ஊசிப்போன உணவை மென்று விழுங்குபவர்கள். அவர்கள் எதைத் தேர்ந்தெடுத்தனர்? துக்கத்தை, துயரத்தை, பிரச்னைகளைச் சமாளிக்க முடியாத அவலத்தை.

இந்தக் கீழ்பட்ட எண்ணங்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் அதில் ஆழ்ந்து போகின்றனர்; மாறாக, மேம்பட்ட எண்ணங்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் வாழ்க்கையின் வெற்றிப் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.
பயம், கோபம், பொறாமை, குற்ற உணர்வு, கவலை இவற்றைத் தாழ்த்தும் உணர்ச்சிகள் என்று கூறுகின்றனர். இந்தக் கீழ் உணர்வுகள் மனிதனது சிந்திக்கும் திறனை, சிந்திக்கும் அமைப்பை முடக்கி விடுகிறது என்று கூறு கின்றனர் மன சிகிச்சை மருத்துவர்கள். முடக்கப்பட்ட மனம் செயலற்றுப் போகிறது. முடக்கப் படுவது மட்டுமல்ல; நமக்கு நல்ல யோசனைகளையும், நம்பிக்கையையும் கொண்டு தந்து உதவக் கூடிய நமது மனதின் வாயிற்கதவை இவை சாத்திவிடுகின்றன.
‘ கனியிருப்பக் காய் கவர்ந்தற்று ’ என்று வள்ளுவர் கூறுகிறார். உண்மை தானே! கனியிருக்க, புளிக்கும் காயைக்கடிப்பானேன்! மனதிற்குள்ளே விடும் சரியான எண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நம் கையில் இருக்கிறது. பரீட்சையில் பெயிலாகி விட்ட மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான்.

பெயிலான மற்றொரு மாணவனோ, ‘ கணித மேதை ராமானுஜத்தைக் கூட ஆங்கிலத்தில் கும்பகோணம் கல்லூரியில் பெயிலாக்கவில்லையா? என்ன யோக்கியதை இருக்கிறது இந்தப் பரீட்சை முறைக்கு? ’ என்று எடுத்துக் கொள்கிறான். எது நல்லது என்பதை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

ஒருவர் வீட்டுக்குப் போகிறீர்கள். அவர் உங்களை மதிக்கவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். நமது கவுரவம் பாழ்பட்டதாகப் புழுங்குகிறோம்; கோபமடைகிறோம்; அந்த மனிதரைத் திட்டுகிறோம்; பழி வாங்கத் துடிக்கிறோம். அதாவது, அந்த மனிதர் உரிய கவுரவத்தை உங்களுக்குத் தரவில்லை. அதனால், உங்கள் கவுரவம் திடீரென்று இறங்கி விட்டதா? இல்லை. நீங்கள் நேற்று இருந்த அதே மனிதர்தான். அவர் கொடுப்பதனால் வருவதில்லை கவுரவம். நம்மை நாமே மதிப்பதால், புரிந்து கொண்டிருப்பதால் வருவது தான் அது.

அது ஒரு சிறு சம்பவம், அது நம்மைப் பாதிக்க நாம் அனுமதிக்கலாம் அல்லது ஏதோ தூசி காற்றில் பறப்பதைப் போல நாம் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஏற்பட்ட மனவேதனை நிகழ்ந்த சம்பவத்தால் ஏற்பட்டதல்ல. அதை நாம் எப்படி எடுத்துக் கொண்டோம் என்பதைப் பொறுத்தே வருகிறது.

புத்தர் ஒரு வீட்டுக்குப் பிச்சை கேட்கப் போனார். அந்த வீட்டுக்காரன் அவரைத் திட்டினான். புத்தர் கூறினார்: ஐயா சற்று நில்லுங்கள். பிச்சை போட்டிருந்தீர்களேயானால் அந்த அரிசி யாருக்குச் சொந்தம்? எனக்குத் தானே! அதேபோல நீங்கள் போட்ட பிச்சையை வாங்க மறுத் திருந்தால் அந்த அரிசி யாருக்கு சொந்தம்? உங்களுக்குத்தானே! அதேபோல நீங்கள் போட்ட திட்டுக்களை ஏற்க மறுக்கிறேன். அவை உங்களுக்கே சொந்தம். எடுத்துச் செல்லுங்கள். நான் உங்களை, ஒரு நண்பனை இழந்தேன்... என்று சொல்லிவிட்டு நடந்தார்.

புத்தர் அவமானப்பட்டவரா என்பதை யோசித்துப் பாருங்கள். எல்லாம் ஒரு சொல்லை, ஒரு சம்பவத்தை, ஒரு பிரச்னையை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதையே பொறுத்து இருக்கிறது.

தாய், தந்தையரின் அரவணைப்பில் குழந்தை வளரும் போது கஷ்டங்களும், துன்பங்களும் தெரிவதில்லை. எல்லாவற்றையும் பெற்றோர் உடனடியாக கவனிக்கின்றனர். குழந்தைகளுக்கு அழுகை ஓய்கிறது.

கொஞ்சம் வளர்ந்தவுடன் தெருவில் உள்ள மற்றொரு குழந்தை ஏதோ ஒரு வினோதமான விளையாட்டு பொம்மையை வைத்திருப்பதை பார்த்து, ‘ அதுதான் வேண்டும்! ’ என கத்தி அடம் பிடிக்கும் போது பெற்றோர் ஓடி வந்து குழந்தையை இழுத்துச் செல்வர். வளர, வளர உலகை நாம் உணர்கிறோம். ஆனாலும், படிப்பில் பிரச்னை; சாப்பாட்டில் பிரச்னை; ஆசிரியரிடம் பிரச்னை என்று வாழ்வில் சமாளிக்க வேண்டிய பிரச்னைகள் மனித வாழ்வில் துவங்கி, தொடர்கின்றன. ‘ வாழ்வே மோசம், உலகமே மோசம்! ’ என்று மனிதன் பாடத்துவங்குகிறான்.

குடும்பத்திலுள்ள பிரச்னைகள், சமுதாயத்தில் தோன்றும் பிரச்னை, அதன்பின் நாட்டில் தோன்றும் பிரச்னை என்று உலகளாவிய அளவில் பிரச்னைகள் துவங்குகின்றன; பரவி நிற்கின்றன. யாருக்குப் பிரச்னை இல்லை? நாடுகளிடையே ஏற்படும் பிரச்னை போரில் முடிகிறது. இதுதான் உலகம்!

பிரச்னைகள் இல்லாத வாழ்வே கிடையாதா என்று எண்ணி மனிதன், ‘ முன்னும் போக முடியாமல் பின்னும் போக முடியாமல் ’ தவிக்கிறான். மிகப்பெரிய பணக்கார நாடு அமெரிக்கா. சில ஆண்டுகளுக்கு முன், சின்னஞ்சிறு நாடான வியட்நாமுக்கும், அமெரிக்காவுக்கும் போர் நடந்தது. உலகில் உள்ள எல்லா நாடுகளுமே கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிடிக்குள் போய்விடுமோ என்ற பயம் அமெரிக்காவை வாட்டியது! இப்போது அவர்களது பிரச்னை, ஈராக் என்ற நாடு. பிரச்னைகள் பெரும்பாலான மக்களிடையே பயத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

இதன் அடிப்படையை ஆராய்வோமானால் பயம், பயம் என்பதில் தான் முடியும். அந்தப் பயம், எங்கிருந்து வருகிறது? அதை ஒழித்துக் கட்டுவோம் என்று பார்த்தால் அது மனிதனுடைய மனத்தில் தான் தோன்றி விஸ்வரூபம் எடுக்கிறது. பிரச்னைகள் மனதில் தோன்றுகின்றன. அதையே எண்ணி எண்ணி, நாம் கவலைப்படத் துவங்கும் போது அவை விசுவரூபம் எடுக்கின்றன. பிரச்னைகள் நம் உள்ளத்தில் பெரும் உணர்வுகளை உருவாக்குகின்றன. அந்த நினைவும், உணர்வும் நம் வாழ்க்கையைத் தொடர்ந்து பாதித்து, மனித வாழ்வை சோகத்தில் ஆழ்த்துகின்றன.

பலகீன மனம் மனிதர்களை சோகத்தில் ஆழ்த்துகிறது; ‘ வாழ்க்கையே வேண்டாம், உலகமே வேண்டாம்! ’ என்று தீர்மானிக்கச் செய்து உயிரையே போக்கிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளுகிறது. பிரச்னைகள் நமக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுக்கக்கூடும். நாம் அவதிப்படுவோம். இது உலகில் நிரந்தரமானது.

இதை எப்படி சமாளிக்கலாம் என்று தீர்மானிக்கத் துவங்கினோமானால் நிச்சயமாக நமது மனமே நமக்கு ஒரு வழியைக் காட்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? பலரும் வாழ்வில் பிரச்னை ஏற்படும் போது அதையே எண்ணிக் கொண்டு, அதே நினைவாக அதிலேயே மூழ்கி விடுகின்றனர். இதனால், பிரச்னை முன்பிருந்ததைவிட இன்னும் பெரியதாகவும், அதிகம் துன்பமுள்ளதாகவும் மாறுகிறது.

‘ எதுவுமே சாதிக்க முடியாதது அல்ல. ஒரு அமைதியான சாந்தமான மனநிலையில், வேறு எந்த விதமான எண்ணமும் இல்லா மல் நாம் சிந்திக்கும் போது சரியான பதிலை, பிரச்னையை சமாளிக்கும் வழியை, நம் மனமே நமக்கு தூண்டும்! ’ என்கின்றனர் நம் ஞானிகள்.

ஜே.கே, என்ற இரண்டு ஆங்கில எழுத்துக்களால் தன் பெயரைக் கொண்டவர் தான் ஜே.கிருஷ்ண மூர்த்தி என்ற அறிஞர்; பெரிய தத்துவஞானி. சென்னை அடையாறில் உள்ள பிரம்மஞான சபையில் வளர்ந்து, அங்கேயே படித்தவர். அவர் பெரும்பாலான காலத்தை அமெரிக்காவில் வாழ்ந்தார். அவர் பெரிய ஆன்மிகவாதி.

ஒரு சமயம் அவரும், லண்டன் பல்கலைக் கழக பவுதிகப் பேராசிரியர் டேவிட் பாமும் டெலிவிஷனில் பேச அழைக்கப்பட்டிருந்தனர். பிரபஞ்சம் பற்றியும், பிரபஞ்ச உண்மைகள் பற்றியும் பேசினர்.

நோபல் பரிசு பெற்றவர் டேவிட்பாம். உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மையைக் கண்டு பிடித்ததற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஒரு சமயம் தன் பேச்சில், என் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை... என்று கூறினார்! இதைக் கேட்ட பலரும், இவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று மறுத்தால் பிரச்னைகள் திரும்பிப் போய் விடுமா? என்று எண்ணிக் கொண்டிருக்கையில் ஜே.கே, சொன்னார், ‘ பிரச்னைகள் வரும்போது நான் அதையே எண்ணி கலங்கி மயங்கி, விடுவதில்லை; அதில் ஊறிப் போய் விடுவதில்லை. கஷ்டங்களை எண்ணிக் கொண்டு கவலைப்படுவதில் அர்த்தமில்லை.

‘ வாழ்வில் பிரச்னைகள் வரத்தான் செய்யும். அப்போது என்ன தேவை? நாம் அது பற்றி ஒரு முடிவுக்கு வரவேண்டும். அது மட்டுமல்ல. அதுதான் சரியான முடிவு என்றால் நாம் உடனடியாக அதை, அந்த காரியத்தை செயல்படுத்த வேண்டும். நாம் எடுத்த முடிவே, நம்மை காரியத்தில் இறங்கச் செய்கிறது; எடுத்த காரியத்தை நிறைவேற்றி வெற்றிபெற தூண்டிவிடுகிறது. இதுதான் உண்மை! ’ என்றார்.

நமக்குள்ளே நம்மைச் சரியான வழி நடத்தும் ஒரு மாபெரும் சக்தி உள்ளது. அதைப் பலரும் உணர்வதில்லை. இதை உணர்வது இயற்கையிலேயே சிலருக்குத்தான் வாய்க்கும்.

இன்று அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உள்ளுணர்வை வளர்ப்பது எப்படி என்பதை ஒரு பாடமாகச் சொல்லிக் கொடுக்கின்றனர்! இருபதாண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் டீன் பல்கலைக் கழகம் மற்றொரு பல்கலைக்கழகத்துடன் இணைந்து, தொழிலில் அபரிமிதமாக வெற்றி பெற்ற சாதனையாளர்களை எல்லாம் சந்தித்து ‘ உங்கள் வெற்றிக்கு என்ன காரணம்? ’ என்று கேட்டு ஒரு ஆய்வை நடத்தினர். அதில் 95 சதம் பேர், என்னுடைய வெற்றிக்குக் காரணம் என் உள்ளுணர்வு தந்த யோசனையை, எண்ணத்தை நான் செயல்படுத்தியது தான்! என்றனர்.
மனித வாழ்வில் ஏராளமான பிரச்னைகள் நம்மை தினந்தோறும் மோதுகின்றன. நாம் வாழ்வில் நமக்கு நிகழும் சோதனைகளையும், நம் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களையும் யோசித்துப் பார்த்தோமானால், பல சமயம் நமக்குத் தோல்வியும், ஏமாற்றமும், துன்பங்களும் தான் வருகின்றன. வாழ்வில் ஏற்படும் தோல்விகளுக்கும், கஷ்டங்களுக்கும் காரணம் நாம் எடுத்த முடிவுதான் என்பது புரியவரும்.
நாம் சரியான முடிவெடுக்கத் தெரிந்தோ அல்லது நமக்கு யாராவது, இதுதான் சரியான பாதை. இப்படிச் செய் என்று சொல்லிக் கொடுப்பரேயானால்... பிரச்னைகளைப் பற்றி கவலைப்பட மாட்டோம்! வாழ்க்கை சரியான திசையில் சந்தோஷமாகப் போகும்! இதற்கு உதவுவது தான் உள்உணர்வு. இப்படி ஒன்று நமக்கு உதவ இருக்கிறது என்றால் ஏன் அதை அமெரிக்காவில் பாடமாக வைக்கமாட்டார்கள்? நாம் எதையும் எண்ணி ஏங்க வேண்டாம். படித்துத் தெரிந்து கொண்டால் போதும். தெரிந்து கொள்ள முடியும். நம்புங்கள்!

‘ என் உள் உணர்வை அறிந்து கொள்ள, வளர்க்க நான் முயற்சி செய்யப் போகிறேன்! ’ என்று ஆர்வத்துடன் சங்கல்பம் செய்து கொண்டால் போதும். நம் மனதில், பெரும் நீரூற்றுப் போல, பல் வேறு எண்ணங்கள் சதா எழுந்து கொண்டு இருக்கும். அவற்றை எல்லாம் ஒரு கணத்தில் ஆராய்ந்து - பிரித்து - எது நமக்கு உபயோகப்படுமோ - அதை எடுத்து நமக்குச் சொல்வதைத்தான்,
‘ உள்-உணர்வு ’ என்கிறோம். ஒரு பிரச்னை என்று வரும்போது மனம் உடனடியாக அதன் காரணத்தை ஆராய்கிறது. யாரையாவது சந்தித்தோமானால் உடனே, அவர்களை எடை போடுகிறது. நடை, உடை, பாவனை களிலிருந்தும், குறிப்பாக, முகத்திலிருந்தும் எப்படிப்பட்ட மனிதர் இவர் என்று, நமது மனம் உடனடியாக அவர்களைப் பற்றி, அவர்களுடைய உண்மையான நோக்கத்தைப் பற்றிய செய்தியைத் தெரிவிக்கிறது.

அவர்கள் மனதிலே எழும் உணர்வை ஒரு கால் விநாடி நேரத்தில் நமது முகம் முதலில் தெரிவிக்கிறது. அதற்கு மேல் அந்த மனிதனுடைய புத்திசாலித்தனம் அல்லது குணம் அல்லது வெளிவரும் சொற்கள் வேறு எதையாவது மறைத்து சொல்லும் போது, முகம் காட்டும் மாற்றத்தை உன்னிப்பாக பார்க்கப் பழக்கப்படுத்தினோமானால் நாம் பிறரை உண்மையாகப் புரிந்து கொள்ள முடியும்.

உள் உணர்வின் வலிமையை இன்னும் அழுத்திச் சொல்ல வேண்டுமானால், விஞ்ஞானி ஐன்ஸ்டீனைப் பார்த்து, ‘ எப்படி உங்கள் கண்டு பிடிப்புகள் எல்லாம் நிகழ்கின்றன? ’ என்று கேட்டனர். நான் இரண்டு பெரிய கண்டு பிடிப்புக் களை கண்டுபிடித்தேன். அந்த இரண்டும் என் உள்உணர்வு தந்தவை! என்றார் அவர்.

மீண்டும் சொல்லிப் பாருங்கள் அந்த வாசகத்தை!

‘ என் உள் உணர்வு தந்தவை ’ என்கிறார். ‘ உள்ளே ஒரு உணர்வு - ஒரு சக்தி இருக்கிறது. அது தந்தது ’ என்கிறார்.

ஏதோ ஒன்று ஒரு எண்ணத்தை நம் மனதில் கொண்டு வந்துவைக்கிறது. இது எங்கிருந்தோ வருகிறது.

நாம் வாழ்வில் தோற்றுப் போவோம் என்ற பயத்துடனும், இது நல்ல விதமாக நடக்குமா என்ற சந்தேகத்துடனும் நாம் இருக்கும்போது நம் எதிர்பார்ப்புக்கு எதிராக அது நல்ல விதமாக நடக்கும்போது, நம்மையும் அறியாமல் நாம், ‘ தெய்வாதீனமாக நடந்தது ’ என்கிறோம். கவியரசு கண்ணதாசனைக் கேட்டீர்களானால், ‘ நமக்கும் மேலே ஒருவனடா! அவன் நாலும் தெரிந்த தலைவனடா! ’ என்பார். ‘ அவன் செய்யும் வேலை ’ என்று.

நாம் வாழும் உலகம் காரண காரிய உலகம் - ஒரு காரியம் நல்லதோ கெட்டதோ, செய்கிறோம் என்றால் அதன் விளைவை - நல்லதையோ, கெட்டதையோ நாம் அனுபவிக்க வேண்டும்.

டேவிட் பாம் என்ற லண்டன் பல்கலைக் கழக பவுதிகஇயல் பேராசிரியர் 45 ஆண்டுகளுக்கு முன், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களும் - கல், மண், கடல், ஆகாயம் என்பனவும், தாவரங்களும், விலங்குகளும், மனிதர்களும் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றுக்கொன்று பரஸ்பரம் உதவியாகப் படைக்கப்பட்டிருக்கின்றன; செயல்படுகின்றன ’ என்ற மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்தார்.

இதன் அர்த்தம் என்ன என்றால் இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றுடனும் நமக்குத் தொடர்பு இருக்கிறது; நாம் அவற்றுடன் உறவு கொள்ள முடியும். அவற்றை அழைக்கமுடியும் என்பதுதான். இறை சக்திகளான பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற எல்லாம் மனிதன் விரும்பி ஈடுபாட்டோடு மனம் ஒன்றி அழைத்தால் எதுவும் சாத்தியமாகும் என்கிற மாபெரும் உண்மையைத்தான் இது தெரிவிக்கிறது.

ஒரு பெண்ணை அறுவை சிகிச்சைக்காக அழைத்துப் போன போது, அவ்வழியில் சென்ற பெண் டாக்டர் சொன்னார்: ‘ அறுவை சிகிச்சை செய்யுமுன் அவள் இதயம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டுச் செய்யுங்கள் ’ என்றாராம். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் இதயத்தில் ஒரு சிறிய கட்டி, புற்று நோயின் துவக்கம் இருந்ததைக் கண்டார்கள். இதயத்தில் அப்படி ஒரு கட்டி இருக்கும் போது மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டால் இதயம் தாங்காது. செயல்படுவது நின்றுவிடுமாம். நல்ல வேளை அந்தப் பெண் காப்பாற்றப்பட்டாள்.

எப்படி வழியோடு போன அனுபவமிக்க பெண் டாக்டருக்கு இது தெரிந்தது. இப்படி ஒரு பிரச்னையை அவர் சந்தித்திருப்பதால் இந்தப் பெண்ணைப் பார்த்தபோது ‘ இப்படி இருக்கலாம் ’ என்ற எண்ணம் ஏற்பட்டதாம்.

‘ மனம் ஒரு பிரச்னை என்று வந்தவுடன் அது சம்பந்தமாக தான் படித்த, அனுபவித்த எல்லா விஷயங்களையும் ஆராய்கிறது. அதை உணர்வாக உடலில் மாற்றி உடல் உணர்வை ஏற்படுத்தி எச்சரிக்கிறது ’ என்று கண்டு பிடித்திருக்கின்றனர்.

நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் இறை அம்சம், தெய்வீகப் பேருணர்வு இருக்கிறது. இதனுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்ற முனைப்பை ஏற்படுத்திக் கொள்ளும்போது அது நமக்கும் எட்டுகிறது.

இதையே 2600 ஆண்டுகளுக்கு முன் புத்தர் கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார். புத்தமதத் துறவி பூகியான் என்பவர் பர்மாவின் காடுகளில் வசிப்பவர். ஒரு தியான முறையை எஸ்.என். கோயங்கா என்ற ஒரு மார்வாடி இந்தியருக்கு சொல்லிக் கொடுத்தார். கோயங்காவுக்கு இருந்த, எதற்கும் மசிந்து கொடுக்காத ஒற்றைத் தலை வலியைப் போக்கினார். அது மட்டுமல்ல புத்தர் சொல்லிக் கொடுத்த தியான மார்க்கத்தையும் சொல்லிக் கொடுத்தார். இது எளிய தியான மார்க்கம்.

அவர், நீங்கள் மூச்சு விடுவதையும் இழுப்பதையும் மிக கவனமாக அதையே உற்றுப் பார்க்கும்படி சொல்கிறார். வேறெதையும் செய்யாமல் அமைதியாக அதை மாத்திரம் மனம் கவனிக்கும் போது மனத்திற்குப் பூரணமான வேலை கொடுக்கப்பட்டுள்ளதால், மனதிலிருந்து சகஜமாக எழும் எண்ணங்கள் எதுவும் எழாமல் ஒரு வெற்றிடம் உருவாகிவிடுகிறது. அதே நிலையில் இருக்கும்போது நமது கெட்ட அனுபவங்கள், பிரச்னைகள் எல்லாம் ஆழ்மனதிலிருந்து மேலே மிதந்து வருகின்றன.

தியானம் செய்பவர் அப்படி மனதிலே எழும் எண்ணங்களை உற்றுப் பார்ப்பதன் மூலம் அந்தக் கெட்ட எண்ணங்கள் அழிந்து விடுகின்றன.

இப்படிப்பட்ட கெட்ட எண்ணங்களும், அடுத்து அத்துடன் முற்பிறவியில் நாம் செய்த தவறுகளும் மிதந்து வருவதால் அவை அனைத்தும் தியானிப்பவர் அதை உற்றுப் பார்ப்பதன் மூலம் அழிக்கப்படுகிறது.

இதன் மூலம் தியானம் செய்யும் மனிதன் எந்த விதமான துன்பங்களும், துயரங்களும், ஏமாற்றங்களும் இல்லாத வாழ்வு நடத்த முடியும் என்பதை விபாசனா தியான முறை நிரூபித்துக் காட்டி இருக்கிறது.

ஜார்ஜ் கோராஸ் என்ற பெரிய ஐரோப்பியப் பணக்காரர் உள் உணர்வை உபயோகித்து ஸ்டாக் மார்க்கெட்டில் மிகுந்த பணக்காரர் ஆனார்.

அவரது முதுகில் ஒரு வலி ஏற்படுமாம். ‘ உடலில் அப்படித் தோன்றும் உணர்வு, வியாபாரச்சந்தை நல்லதல்ல என்பதை உடல் தெரிவிக்கிறது. நான் என் பங்குகளை உடனே விற்றுவிடு வேன். மறுநாள் பங்கின் விலை இறங்கிவிடும் வேகமாக... ' என் கிறார் கோரஸ். உடல் உணர்வின் எச்சரிக்கையால் எந்தவிதமான நஷ்டமும் ஏற்படுவதில்லை! என்று கூறுகிறார்.
உள் உணர்வு என்பது நமக்கு உள்ளிருக்கும் ஒரு மாபெரும் சக்தி. நம் வாழ்க்கை, பிரச்னையின்றி, துன்பங்களின்றி வாழப்பெரிதும் உதவும் மனஆற்றல்.
இதை நாம் பயிற்சியின் மூலமும் தணியாத ஆர்வத்தின் மூலமும் பெறலாம்.
வாழ்வில் முன்னேறத் துடிக்கும் நாம், உலகம் ஒரு நியாயத்திற்குக் கட்டுப்பட்டு இயங்கி வருவதை உணர வேண்டும். உலகில் நிகழும் எல்லாவித காரியங்களும் ஒரு காரணத்தின் விளைவாகவே நிகழ்கின்றன.
விதையிலிருந்து தான் செடி கிளம்புகிறது. ஓர் எண்ணத்திலிருந்துதான் செயல் பிறக்கிறது.

காரணம் இல்லாமல் காரியமில்லை. நாம் ஒரு காரியத்தைத் துவக்கினோமானால் அதன் விளைவுகளை எதிர்பார்க்க வேண்டும். அதற்கு நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

‘ முற்பகல் செய்யின் பிற் பகல் விளையும் ’ என்று நமது பெரியவர்கள் அழகாகக் கூறியிருக்கின்றனர். ஆக, நாம் துவக்கும் செயல்களின் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியாது. திருடுபவர்களும், பொய் சொல்பவர்களும், ‘ யார் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? ’ என்ற தன்னம்பிக்கையில் பல சமயம் தவறிழைக்கின்றனர். அங்கே நியாயம் பார்த்துக் கொண்டிருக்கிறது; உண்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர்.

தன் மனைவி கண்ணகியை அழைத்துக் கொண்டுவறியவனாய் மதுரை நோக்கிச் செல்லும் கோவலனைப் பார்த்து மாடலன் கேட்கிறான்;
‘ நானறிந்தவரை இம்மையில் நீ செய்தவை எல்லாம் நல்ல காரியங்கள். எப்படி நேர்ந்தது இக்கதி உனக்கு? ’ என; இளங்கோவடிகள் மறைமுகமாக,
‘ ஊழ் வினை வந்து உறுத்த... ’ இப்படி நேர்ந்தது கோவலனுக்கு என்று எடுத்துக்காட்டுகிறார்.

சில சமயம் விளையும் பலன்களுக்கான காரணங்கள் நமக்குப் புரிவதில்லை. அதற்காக, ‘ இவ்வுலகம் தறிகெட்டு நடக்கிறது, வாய்த்தவர்களுக்கு வாழ்க்கை! ’ என்று சிலர் வறட்டுத்தத்துவம் பேசுகின்றனர். இவ்வுலகில் நமக்குத் தெரியாத - விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.

இவ்வுலகில் எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு என்பதை நாம் உணரவேண்டும். பூக்கள், வசந்தகாலத்தில் தான் பூக்கின்றன. பழங்கள், பருவ காலங்களில் தான் பழுக்கின்றன. அதேபோல சில காரியங்கள் நடப்பதற்கும் சில காலம், நேரம் தேவைப்படுகிறது. ஒரு காரியம் நிகழ்வதற்கு அதற்கேற்ற சூழ்நிலை வேண்டி இருக்கிறது. சூழ்நிலை வாய்ப்பாக அமையப் பல மனிதர்கள், சம்பவங்கள் என்று பல விஷயங்கள் சேர்ந்து இயங்க வேண்டி இருக்கிறது. இந்த உணர்வு தேவை. அதற்கு வேண்டிய பொறுமை தேவை; மனப் பக்குவம் தேவை.

தடி கொண்டு அடித்துக் காயைக் கனியாக்கி விட முடிவதில்லை. இதைப் புரிந்து கொள்ளாத போது, அவசரப்படும்போது அதற்கு நேர் எதிரான பலன்கள் புறப்படுவதைக் காணலாம். சதா சிந்தியுங்கள். செயல்படுங்கள். அத்துடன் இயற்கையுடன் ஒத்துப்போங்கள்.
பொருளும், சக்தியும் ஒன்றே என்ற உணர்வு, நம்மை நமது சூழ்நிலையின் நண்பனாக்குகிறது. அணுசக்தியில் பொருள் உடைந்து சக்தியாக வெளிவருகிறது. மனவியலார் மூளைக்கும், மனத்திற்குமுள்ள தொடர்பைப் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். அவர்களுடைய அதிசயம், மூளை, என்ற ஜடப்பொருள், எப்படி எண்ணம் என்கிற ஜடமல்லாத பொருளாக மாறுகிறது என்பது.
கல்லும், மண்ணும், தாவரமும், மிருகமும்,மனித இனமும் வெவ்வேறு விழிப்பு நிலை பெற்ற ஜடப்பொருட்கள் என்ற உணர்வு நமக்கும், நமது சூழ் நிலைக்கும் ஒரு தொடர்பேற்றுகிறது. அதையே, ‘ வானில் மின்னும் நட்சத்திரங்களுக்கு இப்பிரபஞ்சத்தில் இடம் இருப்பது எவ்வளவு உரிமையோ, அதே உரிமை மனிதனாகிய உனக்கும் இவ்வுலகில் இருக்கிறது... ’ என்றார் ஒரு தத்துவஞானி. இதன் மூலம் எல்லாப் பொருட்களையும், எல்லா மனிதர்களையும் சமமாக நோக்கும், அகங்காரமற்ற நிலையில் பார்க்கும் ஓர் அறிவு நம்மை அடைகிறது.

இவ்வுலகம் ஒரு கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கோள்கள் ஒன்றுக்கொன்று ஒரு பரஸ்பர கவர்ச்சியில், ஈர்ப்பு சக்தியில் இயங்கி வருகின்றன. மனிதர்களுக்கிடையே நிலவும் அத்தகைய சக்தியைக் கவர்ச்சி என்றும், அன்பு என்றும், காதல் என்றும் கூறுகிறோம். பிறருடைய உரிமைகளுக்கு ஊறு விளைவிக்காத வகையில் ஒரு கட்டுப்பாட்டுடன், ஒரு நெறியில் நம் வாழ்க்கையை இயக்கும் போது நாம் நமது வாழ்வின் தலைவனாகிறோம். நமது விதியை நாம் நிர்ணயிக்கிறோம்.
கட்டுப்பாடு இல்லாத, நெறியில்லாத, நிதானமில்லாத வாழ்க்கை, தறிகெட்டு ஓடும் கொம்புக் காளைக்குச் சமம். அது பிறரைப் புண்படுத்துவதுடன் தன் வாழ்விற்கும் ஊறு விளைவித்துக் கொள்கிறது.
தமிழிலக்கியத்தில் பேசப்படும் கற்பு அத்தகைய ஒரு நெறி. அந்த நெறிக்கு மகத்தான வலிமை உண்டு. அந்த நெறியுள்ளவர்களால் எதையும் சாதிக்க இயலும். அவர்கள் எதையும் கண்டு அஞ்சுவதில்லை. பட்டினி, விரதம் என்பவை இந்த நெறியை வளர்க்கும் மனப்பயிற்சிகளே.

நிறைந்த மனதுடன், எந்தவிதமான மனக் கலக்கமும் இல்லாமல் அமைதியாக இருங்கள். உங்களை பாதிக்கும்படி யார் என்ன சொன்னாலும் ஒரு எளிய புன்முறுவலுடன், உங்கள் முகத்தைத் திருப்பி அவரைப் பாருங்கள். பின்னர் என்ன நிகழ்கிறதென்று பாருங்கள். அவரை எப்படிப்பட்ட நிலைக்கு உங்கள் புன்முறுவல் மூலம் நீங்கள் மாற்றியிருக்கிறீர்கள் என்பதை அவர் முகம் தெரிவிக்கும். உங்களிடம் மன்னிப்பு கேட்கும் மன நிலையில் அவர் நின்று கொண்டிருப்பார்.

உலகின் எல்லா சாதனைகளும் இப்படி பொறுமையால் தான் நடக்கின்றன. இன்றைய உலகில் சாதனைகளை எதிர்ப்பவர்கள், ஏளனம் செய்பவர்கள்; ‘ அது முடியாது, நடக்காது! ’ என்று அடித்துப் பேசுபவர்கள் தான் அதிகம். ஆனால், சரித்திரத்தை எடுத்துப்பார்த்தோமானால், ‘ எல்லாம் முடியும்! ’ என்பவர்களால்தான் பல பெரிய நல்ல காரியங்களும் நிகழ்ந்திருக்கின்றன; சரித்திர சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

ஒரு சிறிய உதாரணம்: பிரான்ஸ் நாட்டில் மருத்துவ மைதானத்தில் எதிரும், புதிருமாக இரண்டு கட்டடங்கள் இருந்தன. ஒன்று: பெண்களின் பிரசவவிடுதி. அதன் எதிரில் செத்த பிணத்தை அறுத்து, ‘ என்ன நோயால் இறந்தார்... ’ என்று ஆராயும் மருத்துவக் கூடம். என்ன நேர்ந்தது என்றால், பிரசவ விடுதியில் அதிகமான தாய்மார்கள் இறந்து கொண்டிருந்தனர். காரணம் தெரியவில்லை. இதைக் கவனித்த பிரான்ஸ் நாட்டு மருத்துவர் ஒருவர் சொன்னார்: டாக்டர்கள், பிணத்தை அறுத்துப் பார்த்து ஆராயும் ஆய்வுக் கூடத்திலிருந்து, நேராக, பிரசவ விடுதிக்கு செல்வதனால் தான் இவ்வளவு மரணம் ஏற்படுகிறது!  என்று.

பிரான்ஸ் நாட்டு மருத்துவர்களிடையே எழுந்தது கோபம். ‘ மருத்துவர்கள் தான் கொலைகாரர்கள் என்று சொல்கிறாரா? ’ என்று கோபப்பட்டனர். அந்த மருத்துவரை திட்டினர், ஒதுக்கினர். இதன் விளைவாக உண்மையில் என்ன நடந்தது என்றால், அந்த மருத்துவர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கே இறந்தார்.

அதற்குப் பிறகு 10 ஆண்டுகள் கழிந்த பிறகு தான், காற்றில், தண்ணீரில் கிருமிகள் இருக்கின்றன. அவை நோய்களை உண்டு பண்ணும் என்ற உண்மையை லூயீபாஸ்டியர் என்ற பிரெஞ்சு விஞ்ஞானி கண்டுபிடித்தார்.

பட்டு நுõலை உண்டு பண்ணும் புழுக்களும், அந்த புழுக்களுக்கு உணவாக தேவைப்படும் இலைகளும் ஒரு வகை பாக்டீரியாவால் தின்னப்படுவதால் பட்டுத் தொழிலே பாதிக்கப்பட்டதைக் கண்டார். இத்தகைய கேடு செய்யும் பாக்டீரியா காற்றிலும், தண்ணீரிலும் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

இந்த சம்பவத்திலிருந்து மனித இனம் ஒரு நல்ல விஷயத்தை அல்லது சாதனையை சொன்னாலும், செய்தாலும் உலகம் எப்படி வரவேற்கிறது என்பதைக் கவனியுங்கள். ஆனால், முடிவில் உண்மைதான் வெல்கிறது; சாதனையாளர்கள் பொறாமை கொண்ட, அறியாமை நிறைந்த, அரைகுறை ஆசாமிகளின் வாதங்களைக் கேட்டு அஞ்சவோ, அவநம்பிக்கையோ பெறக் கூடாது.

மனித இனத்தின் அறியாமையுடன், மற்றொரு, ‘ மை ’ இருக்கிறது... அது தான்,‘ பொறாமை! ’ இதைப் போல மற்றோர் சம்பவம் இங்கிலாந்தில் மார்கோணி என்ற ஒரு விஞ்ஞானிக்கு ஏற்பட்டது. அவர் லண்டனிலிருந்து செய்தியை அமெரிக்காவுக்கு அனுப்ப முடியும் என்பதைக் கண்டுபிடித்தார். எழுந்தது எதிர்க்குரல்! ‘ வானவெளியில் செய்திகள் நேர்பாதையில் மேலே உச்சத்திற்குத் தான் செல்லுமே ஒழிய, பாதை வளைந்து அமெரிக்காவுக்கு செல்லாது... ’ என்றனர். ஆனால், லண் டன் விஞ்ஞானியோ செய்தியை அனுப்பினார்; போய்ச் சேர்ந்தது!

பின்னர் 50 ஆண்டுகளுக்குப் பின், ஆராய்ச்சியில் தெரிய வந்தது என்னவென்றால், நாம் வாழும் காற்று மண்டலத்திற்கு மேலே, அயன மண்டலம் என்ற காற்று மண்டலம் இருக்கிறது. அயன மண்டலம் என்பது காற்றில் உள்ள ரசாயனப் பொருள் தனியாக நிற்கும் பொருளாக இல்லாமல், அது தன் அமைப்பின் ஒரு முனையில் பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் என்ற மின்சக்தியைப் கொண்டதாக இருந்ததால், அதிலிருந்து அந்த விடுபட்ட மின்சக்தி அயன மண்டலம் முழுவதும் பரவி நின்றதால் லண்டனில் இருந்து அனுப்பப்பட்ட மின் ஓட்டத்தை வளைத்து அமெரிக்காவுக்கு அனுப்ப முடிந்தது என்று கண்டுபிடித்தனர்.

மேற்சொன்ன இரண்டு சம்பவங்களையும் ஏன் எடுத்துக் காட்டுகிறேன் என்றால், வாழ்வில் ஆழ்ந்த சிந்தனையுடன் பெரும் முயற்சியுடன் ஒரு உயர்ந்த காரியத்தை, திட்டத்தை அல்லது புதிய தொழிலை நாம் உருவாக்கி இருப்போம்.

ஆனால், பொறாமை கொண்டவர்கள், இதைப் பற்றிய அறிவு, அனுபவம் இல்லாதவர்கள். ஆனால், தெரிந்தவர்கள் போல பேசி, நம்மை முட்டாளாக ஆக்க முயல்வர்.

இப்படிப்பட்டவர்களுக்கு இடம் கொடுக்காமல், தன்னம்பிக்கையுடன், துணிவுடன், விடா முயற்சியுடன் நாம் செயலில் இறங்க வேண்டும். எனவே, முதலில் உங்களை நம்புங்கள். அதைத் தான் சொல்கிறது கட்டுரைத் தலைப்பு.

‘உன்னால் முடியும்!’ என்று ஆர்வத்துடன், நம்பிக்கையுடன், செயல்படுங்கள்.

பாரீஸ் விமான நிலையம். நான் சென்ற விமானம் பாரீசுடன் நின்று விட்டது. நான் பாரீசில் இறங்கி பாரீஸ் விமான கம்பெனி நடத்தும் வேறொரு விமானத்தில் ஏறி அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும். எனவே, அந்த விமான தளத்தில் போய் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

வெள்ளைக்கார இளைஞர்கள் ஆறு பேர் கூட்டமாய் வந்தனர். அவர்கள் முதுகில் சுமந்திருந்த கனமான பைகளில் பாண்டிச்சேரி என்று கொட்டை எழுத்தில் ஆங்கிலத்தில் எழுதி இருப்பதைப் பார்த்தேன். எனக்கு உள்ளுக்குள் மட்டற்ற மகிழ்ச்சி. ‘ நீங்கள் எங்கே பாண்டிச்சேரிக்கா போகிறீர்கள்? ’ என்று கேட்டேன். ‘ ஆமாம்! ’ என்றனர் சிரித்துக் கொண்டே! பாண்டிச்சேரி என்றாலே எனக்கு வரும் எண்ணம்... அரவிந்தர் ஆசிரமம் தான்.

ஒரு கணம் என் மனதில் அளவு கடந்த மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்பட்டது ‘ அடாடா! நம் நாடு எத்தகைய புண்ணிய பூமி! ’ என்ற தலை சுற்றும் பெருமை! அவர்களுடன் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால், எனக்குள் எழுந்த எண்ணம் என்னை வாட்டிக் கொண்டிருந்தது; என்னைத் திணற அடித்துக் கொண்டிருந்தது.

இதோ இந்த இளைஞர்கள், ஆன்மிக அறிவை நாடி ஞானத்தைத் தேடி இந்தியாவிலுள்ள பாண்டிச்சேரிக்கு வருகின்றனர். ஆனால், நானோ விஞ்ஞானப் படிப்பை நாடி, செல்வத்தை நாடி அமெரிக்காவுக்கு போய்க் கொண்டிருக்கிறேன்!

நானும் கடவுள் பக்தி உடையவன் தான். என் தந்தை காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விளக்கை ஏற்றி வீட்டில் தேவாரம் படித்துக் கொண்டிருப்பார். என் தாயோ மாலையில் கோவிலுக்கு போய் விபூதி, குங்குமத்துடன் வந்து எனக்கு இடுவார். என் மனதிற்குள் பெரும் போராட்டத்தை என் அருகே பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் என்னுள் எழுப்பி விட்டனர். ‘ யாருமில்லை சாட்சியாக, மனமே கேள்வியாக... ’ என்ற ஒரு வாசகம் தான் சினிமா ரீல் போல ஓடிக்கொண்டே சோகத்தில் ஆழ்த்தியது. என் பையிலிருந்த கர்சிப் துணி என் கண்களைத் துடைத் துக் கொண்டிருந்தது.

வாழ்வும், வயதும் நமக்கு சில அனுபவங்களைத் தருகின்றன. ஞானசம்பந்தர், ராமகிருஷ்ண பரம ஹம்சர், ரமணர் இவர்களெல்லாம் நமது ஊரிலேயே, நமது நாட்டிலேயே ஞானம் பெற்றவர்கள் தான். அங்கே வயதா தேவையாக இருந்தது! வாழ்வுக்கு வெளிநாட்டுப் பயணமா தேவையா இருந்தது என்று எண்ணங்கள் ஓடின.

நான் படித்து பட்டம் பெற்ற பின், அமெரிக்க கல்லுõரி ஒன்றில் ரசாயனப் பாடம் சொல்லிக் கொடுக்கும் பேராசிரியராக எனக்கு பதவி கொடுத்தனர். ஆனால், அந்த கல்லூரியில் காலையில் வெள்ளிக்கிழமை தோறும் ஆன்மிக வகுப்பு ஒன்று இருந்தது. அதற்கென்று ஒரு கிறிஸ்தவ பாதிரியார் கல்லூரியில் இருந்தார். அவர் வகுப்பு எடுக்க வராதபோது அந்த வகுப்பை நான் எடுத்து சொல்லிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

அப்போது, ‘ நீங்கள் உங்கள் இந்து மதத்தைப் பற்றியும், வழிபடும் முறை பற்றியும், ஆன்மிக செய்திகளையும் சொல்லுங்கள்! ’ என்றனர். நாம் எந்த நாட்டிற்கு சென்றாலும் நடைமுறை உண்மை ஒன்றுதான்.

பழங்குடி மக்கள், முன்னோரின் அறிவுரைகளைப் பொன் போல் காப்பாற்றுகின்றனர். அந்தப் பாடல்களைப் பாடுகின்றனர்; நடனம் ஆடுகின்றனர்; முன்னோர் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று பூஜை செய்கின்றனர்.

வெகு காலம் வரை அமெரிக்க நாட்டில் கோவில் பூஜை செய்யவோ, மந்திரங்கள் சொல்லவோ, மந்திரங்கள் மூலம் நோயைக் குணப்படுத்தவோ பெண்களை அனுமதிப்பதில்லை.

சமீப காலத்தில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. கல்லூரியில் படித்த ஒரு பெண், இயேசு கிறிஸ்துவின் வேத நூல்களைப் படித்த பெண், ஒரு நாள் நேராக தங்கள் ஊரில் உள்ள மாதா கோவிலுக்கு சென்று அங்குள்ள ஆலயத் தலைமை பாதிரியாரை சந்தித்து, ‘ ஏன் நீங்கள் உங்களுடைய மாதா கோவில்களில் பெண்களை திருப்பலி செய்யவோ, ஆராதனை செய்யவோ அனுமதிப்பதில்லை? ’ என்று கேட்டார்.

‘ ஏன் நீ கோவிலில் பாதிரியாராய் திருப்பலி செய்ய விரும்புகிறாயா, எப்படி இந்த எண்ணம் உன்னுள் எழுந்தது?’ என்று கேட்டார். அதற்கு அந்த பெண் ‘ இயேசு கிறிஸ்து என்னிடம் சொன்னார். நான் கிறிஸ்துவ மதத்தின் எல்லா நூல்களையும் படித்துள்ளேன்! ’ என்றார்.

அன்றிலிருந்து இன்று வரை அந்த பெண்மணிக்கு மாதா கோவிலில் திருப்பலி செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது. இன்று வரை அவர் திருப்பலி செய்வது மட்டுமல்ல, உபதேசம் செய்வது மட்டுமல்ல, ஐந்தாறு ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும், பிரச்னை உள்ளவர்களுக்கும் பிரார்த்தனை மூலம் நோயைக் குணப்படுத்தியிருக்கிறார்; பிரச்னைகளை தீர்த்து இருக்கிறார். அவர் எழுதிய புத்தகம், ‘ அதிசயங்கள்! ’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது.

இவ்வளவையும் எழுதியதற்கு காரணம், இன்றைய இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை எல்லா மாவட்டங்களிலும் மாநகரங்களிலும், கிராமங்களிலும் வாழ்க்கை நெறிகள் தலைகீழாகி விட்டன.

இன்றைய சமுதாயம் நெறிகளற்ற சமுதாயமாக மாறிவிட்டது. லஞ்சம் ஊழல், கொலை, கற்பழிப்பு, கொள்ளை, மது என்று மகான்களும், ஞானிகளும், யோகிகளும், சித்தர்களும் வாழ்ந்த இந்த நாடு இன்று திருடலாம், பொய் சொல்லலாம், ஏமாற்றலாம் என்று மேல் மட்டத்திலிருந்து கடைசி பள்ளி வகுப்பு வரை நம் இந்திய நாடு மோசமான நெறிகளற்ற ஒரு சமுதாயமாக, வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலையில் நாட்டின் தலைமையிலிருந்து, அதன் பல கிராமங்களிலும், ஊர்களிலும் பிறக்கும் பெண் குழந்தையை அழிக்கும் பயிற்சியில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.

இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்... லண்டன் பல்கலைக் கழக பேராசிரியராயிருந்த டேவிட்பாம் என்ற விஞ்ஞானி நாம் வாழும் உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக, நோபல் பரிசும் பெற்றுள்ளார்.

நம் நாட்டு ஆன்மிக வாதிகள், ஞானிகள், யோகிகள், நாயன்மார்கள், ஆண்டாள் என்று எல்லா பெரியோரும் பிரபஞ்சத்தின் தோற்றம், பிரபஞ்ச இயக்கம் என்று ஏகோபித்து விவரமாக கூறி இருக்கின்றனர்... இந்த பிரபஞ்சம் உருவானபோது முதலில் உயிரற்ற ஜீவனற்ற பொருட்கள் கல் மண், மலை, கடல் தோன்றின. அடுத்த காலகட்டத்தில் உயிருள்ள தாவரங்களும், மிருகங்களும், மனிதனும் தோன்றினர்.

இவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று உதவத் தான் பிறந்திருக்கின்றன. மனிதன் தனக்காக மட்டும் வாழப் பிறக்கவில்லை. இங்குள்ள மற்ற அனைத்திற்கும் அதாவது, நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்கள் எனப்படும் ஐம்பெரும் சக்திகள் ஆன இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தால் தான் வாழ்வு; இல்லாவிட்டால் தாழ்வு என்று சொல்லவில்லை; அழிவு என்று சொல்லி இருக்கின்றனர்.

உங்களுக்கு சந்தேகம் இருக்குமானால் கொஞ்சம் யோசியுங்கள் நிலம் எனும் பூமியும், நீர் எனும் மழையும், ஆறும், கிணறும், தீ எனப்படும், சோற்றை பொங்கித்தரும் அடுப்புத்தீயும், மின்மினியாக வெளிச்சமும், சக்தியும், காற்று எனப்படும் உயிர்களின் மூச்சும், ஆலயம் எனப்படும் எல்லாவற்றிற்கும் தோற்றுவாயாய் ஆகிய மாபெரும் சக்தியும் இப்பிரபஞ்சத்தின் மூலமும், இன்று வாழ்வு போகும் நிலையில் போகுமானால் சீரழிவை அல்லவா வரவேற்கிறோம் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வாழ்க்கை ஒரு வாய்ப்பு. உயரவும் ஒரு பெரும்வானம்; ஒழியவும் ஒரு பெரும் பாதாளம். நாளைய தலைமுறையின் கையில் அமெரிக்க நாட்டு புஷ்ஷிலிருந்து இந்தியாவின் மன்மோகன் சிங் வரை மற்றெல்லா நாட்டுத் தலைவர்கள் உட்பட எப்படிப்பட்ட உலகை அவர்களுக்கு அளிக்கப் போகிறோம் என்பதை சிந்தியுங்கள்; செய்யும் தவறுகளை உடனடியாக விட்டு விடுங்கள்!

யாருமில்லை சாட்சியாக, மனமே கேள்வியாக!

நமது உலகம், ஒரு பரந்த உலகம். மனித வாழ்வின் தேவைக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் கொண்டது தான் இந்த உலகம். அதேபோல எல்லா நலன்களுடனும், திறமைகளுடனும், அறிவுடனும் தான் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான். மனிதன் கண்விழித்து
பரந்த நோக்குடன் பார்த்தால், உலகில் எத்தனையோ பல்வேறு வாய்ப்புகள் இருப்பது தெரியவரும்.

ஏழ்மை கடவுளின் விருப்பமல்ல. உலக இயல்பை புரிந்து கொள்ள முடியாதவர்கள், உழைக்க விரும்பாதவர்கள், எதற்கும் அஞ்சுபவர்கள், ‘ என்ன ஆகுமோ எதிர்காலம்! ’ என்று பயப்படுபவர்கள் தான் வாழ்க்கைப் பாதையை இழக்கின்றனர்; இருளில் கஷ்டப்படுகின்றனர். ‘ என்ன அநியாயம் இது, என்ன கொடுமை இது? ’ என்று அங்கலாய்க்கின்றனர்.

ஒரு இருண்ட எதிர்காலத்தை, சங்கடங்கள் நிறைந்த சூழ்நிலையை கற்பனை செய்து துணிவை இழக்கின்றனர். ‘ என் தலைவிதி இது! ’ என்ற எண்ணத்தில், ‘ முயன்றால் முடியும்! ’ என்றோ, இறங்கினால் ஆற்றுநீர் இடுப்பு அளவு தான் என்பதை உணராதவர்களாய், இறைவனையும், உலகையும் சுட்டிக்காட்டிக் குறைப்பட்டுக் கொள்கின்றனர். தாழ்வு மனோபாவம் கொண்டு ஒரு சோக வாழ்வை வாழ்ந்து முடிக்கின்றனர்.

எதையும் முயன்று பார்ப்போம். என்னால் வெற்றி காண முடியும் என்ற முனைப்பு வேண்டும். மாறாக, நாம் வாடி வருந்தி குறை சொல்லிக் கொண்டிருந்தோமானால் வறுமை தான் மிஞ்சும்!

முனைப்பில் தீபம் ஏற்றி, ‘ முடியும் ’ என்ற எண்ணத்துடன், ‘ முயன்று பார்க்கிறேன்! ’ என்று முழு முயற்சியுடன் இறங்கினால், அதன் முடிவில், ‘ இது இவ்வளவு தானா? இதற்குத் தானா இவ்வளவு பயந்தேன், கஷ்டப்பட்டேனா? ’ என்று நாமே நம்மைப் பார்த்து சிரித்து மகிழும் நிலைக்கு வருவோம்.

‘ அதனால் தான், நம் முன்னோர், முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்! ’ ‘ உழைத்தால் உயர முடியும்; வளர முடியும்; வாழ முடியும்! ’ என்று சொல்லியுள்ளனர். ‘ எடுக்கும் காரியத்தை செய்து முடிக்கும் திறமை நமக்குள் இருக்கிறது! ’ என்ற எண்ணம் தான் திறவுகோல்.

மனித இனம் உருவாவதற்கு முன்பே மனித இனத்திற்காக இயற்கை எனும் பிரபஞ்ச சக்தி, உயிரற்ற, ஜீவனற்ற கல், மண், மலை, நிலம், நீர், தீ, காற்று என்ற படைப்பையும், அடுத்து உயிருள்ள தாவரங்களையும், மூன்றாவதாக மிருகங்களையும், நான்காவதாக மனித இனத்தையும் படைத்திருக்கிறது. இதை நாம் ஒரு முறைக்கு இரு முறையாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அதனால் தானோ என்னவோ, ‘ இல்லை ’ என்று சொல்பவனைப் பார்த்து பூமித்தாய் நகைக்கிறாளாம்! ‘ இந்த உலகில் உனக்காக எல்லாவற்றையும் படைத்திருக்கிறானே மகனே... இல்லை என்று சொல்கிறாயே! ’ என்று இப்படி பூமித்தாயை நகைக்கச் செய்வது யார் என்று நினைக்கிறீர்கள்? திருவள்ளுவர் தான்!

ஒரு நல்ல காரியத்தை எடுத்து செய்வதற்கு தீர்மானிக்கும்போது, திடீரென்று சிலருக்கு இது வெற்றித் தருமா அல்லது தோல்வியில் கொண்டு விடுமா என்ற ஒரு சந்தேகம் வரும். சந்தேகம் ஏற்படும் குழப்பவாதிகள், எடுத்த காரியத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுவர்! இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான்! மனிதனுக்கு வேண்டுவது நம்பிக்கை, தன்னம்பிக்கை.

ஒரு பாடல் இருக்கிறது நம்பிக்கை ஊட்ட...

‘ எடுத்த காரியம் யாவினும் வெற்றி

எங்கு நோக்கினும் வெற்றி மற்றுஆங்கே

விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி

வேண்டினேன் எனக்கு அருளினன் காளி... ’

இந்தப் பாடலில் கூறும் முக்கியமான விஷயம். ‘ எதையும் நல்லவிதமாக நடக்கும் என்று நம்புங்கள்! ’ என்பது தான்.

‘ எதை எண்ணுகிறோமோ அதுவாக ஆகிறோம்! ’ எனும் ஜேம்ஸ் ஆலன் என்ற பெரும் ஆன்மிகவாதி கூறும் பொன்மொழி உண்டு. எதை அடிக்கடி மனதில் நினைத்து அதே நினைவாக,அதை அடைய வேண்டும் என்ற உணர்வு ரீதியாகவும் செயல் பட்டோமானால், அது நிச்சயம் நடக்கும் என்பது தான், உண்மையும் கூட.

இதுவல்லாமல் ஒரு தொழில் துவங்க இருப்பவர்களோ... ஒரு பெரிய சாதனையை செய்ய விரும்புபவர்களோ பலரும் வெற்றி பெற விரும்பினால் சிறந்த சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றையும், குறிப்பாக, அவர்களின் சாதனைத் திறனையும் அறிந்து கொள்வது நல்லது.

அடுத்து முன்பு அந்தத் தொழிலைச் செய்தவர் எந்தக் காரணத்தினால் தொழிலை மூட நேர்ந்தது என்பதையும் தெரிந்து கொள்வது நல்லது. இதன் மூலம் தோல்வியைத் தவிர்க்கலாம்.

பல சமயம் தொழிலிலோ, வாழ்விலோ நாம் எதிர்பாராத தோல்விகள் ஏற்படுகின்றன. ஆனால், கொஞ்சம் பொறுமையாக இருந்தால், எதை நாம் தோல்வி என்று நினைத்தோமோ, அதுவே வெற்றியாக மாற்று உருவம் எடுக்கிறது என்பதை உணர்ந்தால் வியப்போம்.

இதற்கு ஒரு காரணம் கூறுகின்றனர் மனஇயல் துறை அறிஞர்கள். நாம் எடுத்த காரியத்தில் தோல்வி ஏற்படுகிறது. உடன் நாம் என்ன செய்வோம்? நம்முள் துக்கமும், சோர்வும், செயலற்ற தன்மையும் தான் ஏற்படும். அதாவது, ஏமாற்றத்தின் காரணமாய் செயலற்ற தன்மை தான் முதலில் ஏற்படும். மனமும் எந்தவிதமான எண்ணங்களாலும் ஆட்கொள்ளப்படாத நிலையில் வெட்ட வெளியாய் வெற்றிடமாய் உலகமே தெரியும் ஒரு நிலை.

அந்த நிலையில் நாம் சிறிது நேரம் அல்லது ஒரு 10 நிமிடம் எதுவும் சிந்திக்காமல் அமர்ந்திருந்தோமானால் கொஞ்சம், கொஞ்சமாய் திடீரென ஒரு எண்ணம் எழும்பும். அதை தான் உள்ளொலி, உள் உணர்வு எனக் கூறுகின்றனர். அதன்பின், மனதில் தெளிவு ஏற்பட்டு புதிய வாழ்க்கை வாழத் துவங்குவீர்.

எடிசன் என்ற விஞ்ஞானி மின் விளக்கைக் கண்டுபிடித்தார் என்று எல்லாருக்கும் தெரியும்; ஆனால், அந்த மின் விளக்கை உருவாக்க எடிசன் எத்தனை முறை முயன்று தோற்றுப் போனார் என்பது தெரியாது! நூற்றுக்கணக்கான முறை பரிசோதனை செய்து, செய்து அவர் தோற்றுப் போனார்! எப்படி வெற்றி பெற்றார்? பொறுமையால் தான்! தோல்வி அவரை அசைத்து விட வில்லை.

‘ மீண்டும் முயல்வோம். இங்கே, உள்ளே ஒரு பெரிய மதிப்பு மிக்க வைரமும், வைடூரியமும் இருக்கிறது! ’ என்று அவர் எண்ணியிருக்க வேண்டும். தன் லட்சியத்தை அடையும் வரை விடா முயற்சியுடன் அதை முயன்று கொண்டிருந்தார். விடா முயற்சி தான் வெற்றிக்கு வழி கோல்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்வது நல்லது.

வாழ்வில் பல முறை இப்படிப்பட்ட தோல்வியுறும் சம்பவங்கள் வருகின்றன. எனினும், நாம் அடைய வேண்டிய வெற்றி பற்றி தெளிவான, தீர்மானமான நம்பிக்கையுடன் இருப்பது நல்லது. துன்பங்களுக்குப் பின்னால் மறைமுகமாக, வெற்றியின் பாதைகள் திறக்கத் துவங்குகின்றன. ஞானிகள் இதை மிக அழகாக சொல்கின்றனர்.

‘ நல்லதை எப்படி செய்ய வேண்டும் என்பது நம்மை விட கடவுளுக்கு நன்றாகத் தெரியும்! ’ என்கின்றனர். இதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையானால் உணவு அருந்தும்போது கூட இறைவன் உங்கள் மூலம் உணவு அருந்துகிறான் என்பதை நினையுங்கள்; ஏனெனில், அவன் உங்களுடன் நடக்கிறான், உங்களுடன் பேசுகிறான் என்று நினையுங்கள் என்று கூறுகின்றனர் ஞானிகள். இதைத் தொடர்ந்து முயன்றீர்களானால் ஒரு புதிய நல் உலகத்திற்கே நீங்கள் போய் விடுவீர்கள்.

எல்லாம் எண்ணங்களை சீர் செய்வதிலிருந்தும், சிந்திப்பதிலிருந்தும், நமது ஆழ்மன உணர்விலிருந்தும் துவங்குகிறது. மனவியல் பேரறிஞர் கார்லஸ் கஸ்டவ் யங் என்பவர் கூறுகிறார்: ‘ பல அடையாளங்கள் மூலம் எதிர்பாராத சம்பவங்கள் மூலம், ஒரு மாபெரும் சக்தி நமக்குப் பின்னால் இருந்து கொண்டு நம்மை வழி நடத்திச் செல்கிறது! ’என்கிறார்.

‘ வானம் தொட்டு விடும் தூரம் தான்! ’ என்கின்றனர் நம் கவிஞர்கள். விஞ்ஞானிகளோ வான மண்டலத்தில் வசித்துவிட்டு பெருமையுடன் திரும்புவதைப் பார்க்கிறோம். ஏனெனில், வானம் தொட்டு விடும் தூரம்தான்!

- Dr.M.S.UDAYAMURTHY

17A, South avenue
Thiruvanmiyur, Chennai - 600041.
Tamil Nadu
India

http://www.makkalsakthi.org/