"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


நீரில் இரண்டு முறை குளிக்க முடியாது என்பார்கள். இன்று அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய ஒப்புமைக்கு இதை பயன்படுத்தினாலும் தவறில்லை என்று எண்ண தோன்றுகிறது. அவ்வளவுக்கு விரைவான மாற்றங்கள் அறிவியல் துறையில், பதிய கண்டுபிடிப்புகளில் உருவாகி வருகின்றன. அறிவியல் கண்டுபிடிப்பு என்றவுடன் புதிதாக ஒரு பொருளை கண்டுபிடிப்பதை மட்டும் குறிக்கவில்லை. கண்டுபிடிப்பட்ட பொருட்களின் தரம், மதிப்பு, வசதிகள் ஆகியவற்றை முன்னேற்றி செலவு, மாசுபாடு, எரியாற்றல் குறைந்த பொருட்களை உருவாக்கும் முயற்சிகளும் அறிவியல் கண்டுபிடிப்பு தொடர்பானவையே. இன்று ஒரு பொருளை வாங்கிவிட்டு, இரண்டு திங்கள் கடந்த பின்னர் மீண்டும் அங்கு சென்று பார்த்தால் நாம் வாங்கிய அதே பொருளில் உயர் தரமுடையவற்றை சந்தையில் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறு நாளும் மாறுபடும் முன்னேற்றங்களை அறிவியல் துறை சந்தித்து வருகிறது. ஆனால் பல கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாகவும், இன்று உலகளவில் பயன்படுத்தப்படும் சில முக்கிய கண்டுபிடிப்புகள் பலவுண்டு. அவற்றில் உலகளவில் மாபெரும் செல்வாக்கை ஏற்படுத்தி வரும் சில அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல்கள் உங்களுக்காக.

விமானப் பணத்தின்போது விமானத்தில் பழுது ஏற்பட்டுவிட்டால் பயணியரின் உயிரை பாதுகாக்கும் விதத்தில் வான்குடைகள் உள்ளன. வான்குடைகளை உடலில் கட்டிக்கொண்டு குதித்து தப்பித்துவிடலாம். கப்பலில் ஏதாவது விபத்து ஏற்பட்டுவிட்டால் அதில் பயணம் செய்வோரை காப்பாற்றும் விதமாக உயிர் காக்கும் படகுகள் உள்ளன. அதேபோல கார்களில் பயணம் செய்கின்றபோது விபத்து ஏற்பட்டுவிட்டால் உயிர் காக்கும் கருவியாக விபத்துக் காப்புக் காற்றுப்பை பயன்படுத்தப்படுவது, உலக அளவில் மாபெரும் செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது. கார் விபத்து ஏற்பட்டவுடன் காற்றுப்பை ஒன்று விரிவடைந்து, உயிர் சேதத்தை தடுக்கும் விதமாக அமைக்கப்படுகின்றது. 1960 களில் காற்றை பயன்படுத்தி பாதுகாப்பு வசதிகள் வாகனங்களில் பயன்பட தொடங்கினாலும், 1971 யில் தான் மெர்சிடஸ் பென்ஸ் வாகன நிறுவனம் வெற்றிகரமான தொழில்நுட்ப சாதனையை நிகழ்த்தி வெளியே தெரியாமல் உள்ளடக்கப்பட்ட காற்று அமைப்புக்களை வாகனங்களில் பயன்படுத்த தொடங்கியது. 1981 ஆம் ஆண்டு மெர்சிடஸ் பென்ஸ் எஸ் ரக காரில் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப பொருத்தப்படும் கருவியாக விபத்துக் காப்பு காற்றுப்பை மாறியது. தற்போது விபத்துக் காப்புக் காற்றுப்பை உலகளவில் புதிய கார்களின் தரமிக்க ஒரு கருவியாக மாறியுள்ளது.

அடுத்ததாக, பல நாடுகளில் பீர் மதுவகை உடலுக்கு அதிக தீங்கிழைக்காத மதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மது வகைகள் பார்லி, கோதுமை, உலர்ந்த பூக்கள் மற்றும் நீர் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இடைக்கால வரலாற்றில் பசைப் பொருட்கள், மாட்டின் பித்தப்பை மற்றும் பாம்பு நச்சு ஆகியவை பீர் மதுவில் சேர்க்கப்பட்டது. அதிக நாட்கள் கெடாமல் இருக்கவும், போதையை அதிகரிக்கவும் ஐயத்துக்குரிய இப்பொருட்கள் சேர்க்கப்ட்டதாக கூறுகின்றனர். ஆனால் 1516 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் பிரபு குடும்பத்தை சேர்ந்த நான்காம் Wilhelm மற்றும் ஐந்தாம் Ludwig சகோதரர்கள் இத்தகைய ஐயத்துக்குரிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்டும் பீர் மது வகைகளுக்கு தடையாணை பிறப்பித்தனர். அதன் பிறகு தான் இக்கால பீர் மது வகைகள் தயாரிக்கப்பட்டதாம். இது ஏற்படுத்தும் உலக செல்வாக்கு என்னவென்றால் ஜெர்மனி நாட்டின் பீர் மது சுகாதார சட்டம் தான் இன்றுவரை உலகிலுள்ள பீர் மது வகைகளின் உயர்தரத்தை மதிப்பிடும் அளவுகோலாக உள்ளதே.

உலகளவில் அதிக செல்வாக்கை ஏற்படுத்தும் இன்னொரு கண்டுபிடிப்பு சி கால்கள் என்ற Microprocessor என்ற நுண்செயலி இணைந்த செயற்கை கால்கள். உடல் சவாலுடையோருக்கு தான் அவ்வுறுப்புக்களின் உண்மையான பயன்பாடு தெரியும். எக்குறையும் இல்லாதோர் அதைபற்றி கண்டு கொள்வதில்லை. குறிப்பாக நமது கைகயில் உள்ள 5 விரல்களில் பெரு விரலை பயன்படுத்தாமல் ஒரு பொருளை எடுக்க முயற்சியுங்கள். அப்போது தான் பெரு விரலின் தனிப்பட்ட பயன்பாடு என்னவென்று தெரியும். அதுபோல கால்களில் சவாலுடையோர் கீழிறங்குவது, நடந்து செல்வது போன்ற எல்லா செயல்பாடுகளுக்கும் சிந்திக்க தான் வேண்டும். அதனை எளிதாக்கும் வகையில் செயற்கை கால் பொருத்தப்படுகிறது. செயற்கை காலில் மிக முக்கியமானது காலின் முழங்கால் மூட்டுப் பகுதி. கட்டை போன்ற செயற்கை கால் முழங்கால் மூட்டை மடக்கி, எழும்புகின்ற வகையில் செயல்பட முடியாமல் நேராக இருக்கும். இதை கொண்டு நடமாடுகின்ற சிலரை நாம் சந்தித்திருக்காலம். செயற்கை கால் பொருத்துகின்ற மருத்துவ நுட்பத்தில் அறிவார்ந்த கட்டுப்பாடு கொண்ட மற்றும் தேவைகேற்ப செயல்படும் திறமை கொண்ட செயற்கை காலான சீ கால் என்பது, கால் உறுப்புகளில் சவால் கொண்டு இயங்க துன்பப்படுகின்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை கொண்டு வந்தது. இதன் மூலம் கால் மூட்டு இயக்கங்கள் மிகவும் எளிதாகின. Microprocessor எனப்படுகின்ற நுண்செயலியை பயன்படுத்தி வடிவமைக்கப்படுகின்ற இந்த செயற்கை கால்கள் எல்லா வகையான இயக்கங்களுக்கும் ஏதுவாக அமைகின்றது. 1997 ஆம் ஆண்டில் Otto Bock நலவாழ்வு அமைப்பு உலக எலும்பியல் மற்றும் புனர்வாழ்வு தொழில் நுட்ப மாநாட்டில் புத்தாக்கமான செயல்பாட்டை முன்வைத்தது. அதன் பின்னர் தான் வினாடிக்கு 50 முறை செயல்படும் உணர்வறிகின்ற கட்டுபாட்டு கருவிகள் மற்றும் Microprocessor எனப்படுகின்ற நுண்செயலி இணைக்கப்பட்ட செயற்கை கால்களான சி கால்கள் மனிதனின் இயங்கத்திற்கும், எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏதுவானதாக பயன்படுத்தப்பட தொடங்கின. ஜெர்மனியின் உயர்ந்த சமூக காப்பீட்டு கழகத்தின் விதிகளின் படி, செயற்கை கால்கள் பொருத்தப்படுவது சட்டபூர்வ உரிமையாகியுள்ளது. உலகளவில் 11,000 பேர் தற்போது இத்தகைய செயற்கை கால்களை நம்பி வாழ்கின்றனர். அத்தோடு செயற்கை கால்களை பயன்படுத்தும் மக்கள் உலகளவில் பெருகி வருகிறார்கள்.

http://tamil.cri.cn/1/2009/03/30/121s82820.htm