"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


பணம் முக்கியமா ?

முக்கியம். ஆனால் எதற்கு முக்கியம் என்கிற தெளிவு இருந்து விட்டால் சம்பாதிப்பதும், செலவு செய்வதும் அர்த்தமாகும். வெறுமே அடுக்கி வைத்து பார்க்க ஆசைப்பட்டால் பகைவர்களை உருவாக்கும். நிறைய பணம் உள்ளவர்களிடம் யாரும் உண்மையாய் இருப்பதில்லை. இல்லாதவர்களிடம் மரியாதை செலுத்துவதில்லை. சம்பாதித்து சரியாக செலவழிக்கிறவர்களை உலகம் கொண்டாடத் தவறுவதில்லை.

காதல் என்பது மனிதனுக்கு அவசியமா ?

மிக மிக அவசியம். வேறு செய்வதற்கு இங்கு என்ன இருக்கிறது. ஆண்-பெண் நேசிப்பில் தான் உலகம் இயங்குகிறது. நேசிப்பை கொஞ்சம் கவித்துவமாக்கினால் ஏற்படுவது காதல். உடல் இச்சையை நெறிப்படுத்தி உள்ளத்தை அறிய முற்படுவது தான் காதல். நேர்மையாக இருப்பின் காதல் மிகுந்த பலம் தரும்.

சகித்து கொள்வது நட்பாகாது என்கிறார்களே. இது சரியா?

நட்பு வேறன்ன தான் செய்யும்.சகித்து கொள்வதைக் கூட செய்யவில்லை என்றால் அது எப்படி நட்பாகும். மனிதர்கள் என்பவர்கள் குறையும், நிறையும் கொண்டவர்கள். குறையை மெல்ல சுட்டிக்காட்டி களைவதும். நிறையை மிருதுவாக பாராட்டுவதும் தான் நட்பு. குறையை எப்பொழுது சுட்டிக்காட்டி சொல்ல முடியும், திருத்த முடியும். குறையை சகித்துக்கொள்பவருக்குத் தான் திருத்தவும் புத்தி வரும். நிறைவில் தள்ளாடுகிறபோது, பாராட்டுகளில் மயங்குகிறபொழுது மெல்ல கீழிறக்கிவிடுவதும் நட்பு. இடுக்கண் களைவதாம் நட்பு என்று திருவள்ளுவர் கூறுகிறார். உண்மையில் இங்கு இடுக்கண், அதாவது துன்பம் எது தெரியுமா? தன்னை அறியாதவன் தன் நிலை பிறழ்வது, தன்னுடைய பேலன்ஸ் அழிந்து தள்ளாடுகிறபோது பிடித்து நிறுத்துவது தான் நட்பு. சகித்து கொண்டவனுக்குத் தான் தள்ளாடுகிறவரை பிடித்து கொள்ளத் தோன்றும். பரஸ்பரம் சகித்து கொள்ள முடியாது என்பவர் வாழவே முடியாதவர்.

வீட்டில் மனைவியை சகித்து கொள்ள முடியாதவர் வெளியே பொது மக்களை, போலீஸ்காரரை, பொறுக்கிகளை நிறைய பல் காட்டி சகித்து கொள்வார்கள். அது சகித்து கொள்வதாக அவருக்கு தெரியவே தெரியாது. எங்கு தன்னுடைய அதிகாரம் செல்லுமோ அங்கு சகித்து கொள்ளாமல் சீறி வருவதுதான் பண்பாக, பழக்கமாக இருக்கிறது. சகித்து கொள்ள என்ன வேண்டும் தெரியுமா? நண்பரே, தன் மீது பிரியம் வேண்டும். தான் என்ன செய்கிறோம் என்கிற தெளிவு வேண்டும். தன் மீது பிரியம் உள்ளவருக்குத் தான் செய்து கொண்டிருக்கிற விஷயம் தெளிவாக தெரியும். தன் எண்ணங்கள் எத்தகையவை என்று எடை போட்டு உடனே இறக்க முடியும். தன்னை ஒவ்வொரு செயலிலும் எடை போட்டு இறக்கி தான் யார் என்று தெளிவாக தெரிகிறவருக்கு மற்றவரை சகித்து கொள்வது விஷயமே அல்ல. சகித்து கொள்ள முடியாது போன பல உயிரினங்கள் மடிந்து போயிருக்கின்றன. சகித்து கொள்ளல் தான் வாழ்க்கையின் அடிப்படை. அந்த சகித்து கொள்ளலுக்கு அடிப்படை அன்பு. அன்பு பற்றி இடையறாது, இடையறாது இந்த உலகம் அலறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அறிந்தவர் வெகு சிலரே.

பாலியல் தொழிலை வரைமுறைப்படுத்தினால் என்ன?

ஆஹா! செய்யாலாமே. மற்ற எல்லா விஷயங்களையும் வரைமுறைப்படுத்தி விட்டோம். பாலியல் தொழில் ஒன்றுதானே பாக்கி. இதையும் வரைமுறைப்படுத்தி விடலாமே. ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் நம் அனுமதிக்காகக் காத்திருப்பதில்லை. பாலியல் தொழிலை வரைமுறைப்படுத்துவது என்பது நடக்கத்தான் போகிறது. வெகு விரைவில் செய்யதான் போகிறார்கள். ஆனால் இது மனிதரின் திருட்டு புத்தி. இருட்டுப் பக்கம். விலங்கின உறவு. மற்றவரின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காது வேகமாய் எழுகின்ற அலட்சியம். மற்றவரை அவமானப்படுத்துவதில் உண்டான ஆனந்தம். பிணத்தை தழுவுவது போல என்கிறார் வள்ளுவர். மனம் செத்துப் போனவர்கள் தான் பிணத்தை தழுவுவார்கள்.

குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம் தானா?

ஒரு குழந்தைக்கு தவளையின் இருதயம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்தானா. ஒரு குழந்தைக்கு கீரை தண்டு எப்படி வளர்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் தானா. ஒரு குழந்தைக்கு செவ்வாய் கிரகமும், குருவும் எப்படி இருக்கின்றன என்று தெரிந்து கொள்வது அவசியம்தானா. ஆமெனில் SEX கல்வியும் அவசியம்.

பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?

ஆமாம்।

ஆண்களுக்கு பெண்கள் என்றால் ஒரு பலஹீனம் ஏற்படும். எந்தப் பெண்ணைக் கண்டால் பலஹீனம் ஏற்படும் என்பதுதான் முக்கியமான விஷயம். கட்டுமஸ்தானப் பெண்ணைக் கண்டால் ஆணுக்கு காமம் கிளறும். அந்தப் பெண் இரை என்று தோன்றும். மகள் என்று தோன்றினால் ஒரு கவலை வரும். அந்தப் பெண்ணை நல்லபடி மணமுடிக்க வேண்டுமே என்ற பொறுப்பு வரும். சகோதரி என்று நினைத்தால் அந்தப் பெண்ணோடு ஒரு போட்டி இருக்கும். அந்தப் பெண்ணோடு சொத்து சம்பந்தமான எண்ணங்கள் ஏற்படும். வேறு உறவினங்கள் ஆணை பெரிதாகத் தாக்கவில்லை. அழுகின்ற பெண் ஆணுக்கு அம்மாவின் சாயலை கொடுக்கிறாள்।

அம்மா என்பவள் தான் ஆணுக்கு உண்மையான பலஹீனம். அழுகின்ற பெண்ணைப் பார்க்கும்பொழுது அம்மா அழுவது போல் இருப்பின் அந்த இடத்தில் ஆண் அடங்கி விடுகிறான். அப்பால் போகிறான். அல்லது அவசரமாக தீர்வுக்கு நெருங்கி வருகிறான். பெண் என்றால் ஆணுக்கு பலஹீனம். அம்மா என்ற பெண் தான் ஆணின் மிகப் பெரிய பலஹீனம்.

நாம் காணும் கனவுகளுக்கு ஏதேனும் அர்த்தம் உண்டா? கனவுகள் பற்றி சற்று விளக்க முடியுமா!

மனதின் இன்னொரு மொழிதான் கனவு. அந்த மொழிக்கு லிபி இல்லை. ஏன் சப்தம் கூட இல்லை. மனதின் மெளன மொழி நாடகமாக கண் முன்னே விரியும். இயக்கங்களும், ஆசைகளும், பயங்களும், கோபங்களும் மனதின் மெளன மொழியில் வெளிப்படும். கனவு காணும் பொழுது விழிப்பாக இருந்தால் விழிக்கும்போது அந்தக் கனவைக் கைபற்றி விடலாம். கனவு காணும் பொழுதே “அட கனவு” என்று எவருக்கு தோன்றுகிறதோ அவர் கனவின் உத்தேசங்களை அறியக் கூடியவர். இதற்கு படுக்கும்பொழுதே என்ன கனவு வந்தாலும் நான் நிதானமாக புரிந்துக் கொள்வேன் என்று தீர்மானித்துக் கொள்வது நல்லது. உங்கள் உறுதியைப் பொறுத்து கனவில் உங்களுக்கு விழிப்பு ஏற்படும். கனவு முடிந்த பிறகு, விழிப்பு ஏற்பட்ட பிறகு கனவு காணாமல் போகும். அது தான் இயல்பு. உடனே கனவைத் துரத்தக்கூடாது. என்ன கனவு, என்ன கனவு என்று பதறக்கூடாது. பதறினால் கனவு இன்னும் அடி ஆழத்தில் போய் சொருகிக் கொள்ளும். வெளியே வராது.

கனவை மறந்து விடுங்கள். கனவை நோண்டி எடுப்பதை தவிர்த்து விடுங்கள். ஒரு அரைமணி நேரத்திற்குள் அந்தக் கனவு வந்து நிற்கும் அல்லது அதன் ஏதாவது ஒரு நுனி உங்கள் முன்பு வந்து நிற்கும். அந்த நுனியைப் பிடித்து இழுக்க மொத்தப் புடவையும் வெளியே வந்து விடும். அப்பொழுது கனவின் உத்தேசமும் உங்களுக்கு தெரிந்து விடும். கனவு என்பது சில சமயம் நீங்கள் என்ன செய்யக்கூடாது, என்ன செய்யலாம் என்றும் சொல்லக்கூடிய திறம் வாய்ந்தவை. கனவோடு போரிடாமல், கனவு மறுபடியும் நினைவுக்கு வரவேண்டும் என்று காத்திருக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, கனவு காணும் பொழுதே கனவைப் பற்றிய அறிவு வேண்டும் என்று படுக்கும் முன்பு தீர்மானம் செய்யுங்கள். பழக பழக இது எளிதாக கைகூடும்.

அழகு என்பது என்ன ?

கண்களிலிருந்து வரும் ஒளி தான் அழகு. அறிவும், அன்பும் கலந்தது தான் அழகு. உடையோ, உயரமோ, பருவமோ, பதவியோ அழகல்ல. மனதில் அமைதி இருப்பின் முகத்தில் அழகு சுடர் விடும்.

தங்கத்தை ஒரு சொத்தாக மனிதன் ஏன் நினைத்துக்கொண்டு வேதனைப்படுகிறான்?

ஏதேனும் ஒன்றை சொத்தாக அவன் நினைத்துக் கொள்ள வேண்டும். தங்கம் முக்கியமாக இல்லாத போது, ஆடு, மாடுகள் முக்கியமாக இருந்தன. ஆடு, மாடுகளுக்கு முன்பு நிலங்கள் சொந்தமாக இருந்தன. எது அபூர்வமோ அதை தன் சொந்தமாக நினைப்பது மனித இயல்பு. நாளையே கடலுக்கு அடியிலிருந்து நாற்பது டன் தங்கம் வெளிவந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். தங்கத்தை யாரும் வாங்கமாட்டார்கள். அது செலாவணி ஆகாது. தங்கம் கிடைப்பது குறைவாக இருப்பதால் இந்த அலையல் ஏற்படுகிறது. வைரம் அதிகம் கிடைக்கிறது. ஆனால், கிடைத்த வைரத்தை திரும்ப குப்பையிலேயே கொட்டி விடுகிறார்கள். வைரம் அதிகம் கிடைக்காமல் வியாபாரிகள் பார்த்துக் கொள்கிறார்கள். வைரம் அதிகம் கிடைத்தால் மரியாதை போய்விடும் என்பதற்காக அவர்களே இயற்கை கொடுத்ததை புறந்தள்ளி விடுகிறார்கள். எது எளிதில் கிடைக்காததோ அதற்கு பெரிய மரியாதை இருக்கும். கடவுள் என்பதற்கு மரியாதை ஏன் இருக்கிறது? கடவுள் என்பது மாயையான விஷயம். புரியாத விஷயம். புரிந்து போனால் அலட்சியப்படுத்தி விடுவார்கள். புரியாத வரை மிக முக்கியமானதாக, பெரிய வியாபாரமாக நடந்து கொண்டுதான் இருக்கும்.

- எழுத்தாளர் பாலகுமாரன்

http://balakumaranpesukirar.blogspot.com/