"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

முல்லா நசுருதீன் ஊர்மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார். வெளியூரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அருகில் அமர்ந்தார்.

முல்லாவின் காதருகே சென்று ஏதோ சவால் விட்டார். முல்லா கலகல என்று சிரித்து விட்டு “ஆஹா… வெகு சுலபம்… கொஞ்ச நேரத்தில் சொல்லுகிறேனே… பொறுங்கள்” என்றார். பிறகு அருகிலிருந்த சிலரைப் பார்த்து…” உழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆவதற்கான யோசனைகள் சில எனக்குத் தோன்றி உள்ளன. அவற்றை இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து இங்கே வெளியிடப் போகிறேன். யார் யாருக்கெல்லாம் அவை வேண்டுமோ அவர்களை எல்லாம் உடனே இங்கே வரச் சொல்லிவிடுங்கள்” என்று உரக்கக் கூவினார்.

அவ்வளவுதான்… செய்தி விஷம் போல பரவியது. திபுதிபு என்று கூட்டம் சேர்ந்தது. முல்லா சொல்லப்போகும் யோசனைக்காகக் கூட்டம் அமைதியாகக் காத்திருந்தது. இரண்டு மணி நேரம் கழித்து “இன்னும் யாராவது வரவேண்டி இருக்கிறதா?” என்றார் முல்லா. இல்லை மற்றவர்கள் வரமாட்டார்கள்… வர மறுத்து விட்டார்கள். நாங்கள்தான் உங்கள் அரிய யோசனைகளைக் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்றது கூட்டம்.

வெளியூரில் இருந்து வந்து முல்லாவிடம் ஏதோ சவால்விட்ட நபரைப் பார்த்து “இவர்களை நன்றாக எண்ணிக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு முல்லா எழுந்து புறப்பட ஆரம்பித்தார். “முல்லா உழைக்காமலேயே பெரும் பணக்காரனாக ஆசைப்படும் எங்களுக்கு ஏதும் சொல்லவில்லையே…” என்று கூட்டம் அலறியது. முல்லாவோ வெகு அலட்சியமாக “இதோ வெளியூரில் இருந்து வந்திருக்கும் இவர் என்னிடம் சவால் விட்டார். எல்லாக் கேள்விக்கும் விடை சொல்கிறீர்களே… இந்த ஊரில் முட்டாள்கள் மொத்தம் எத்தனை பேர் என்று துல்லியமாகச் சொல்ல முடியுமா? என்றார். உழைக்காமல் பணக்காரன் ஆக விரும்பும் உங்களை விட முட்டாள்கள் இருக்க முடியுமா என்ன? அதுதான் உங்களை வரவழைத்து இவரை எண்ணிக் கொள்ளச் சொன்னேன்” என்று கூறிவிட்டு நடையைக் கட்டினார். உண்மை, உழைக்காமல் பணக்காரனாக விரும்பும் எவனுமே அறிவாளி அல்லன். முட்டாளே...!