"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

குதிரைகள் பசுக்கள் போல
வாய் விட்டு கதறுவதில்லை
வலியில்லை என்பதல்ல
வலிமையே குதிரை ரூபம்.

தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்காப் பணிந்து போகும்

- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் முதலாம் பாடம்.

குளம்படி ஓசைக் கவிதை
குதிரையின் கனைப்புக் கீதம்
வீசிடும் வாலே கொடிகள்
பொங்கிடும் நுரையே கடல்கள்
பிடரியின் வரைவே வயல்கள்
உருண்டிடும் உடம்பே பூமி
சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு

- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் இரண்டாம் பாடம்.

குதிரைகள் பயணம் செய்யா
கூட்டமாய்ப் பறவை போல
இலக்குகள் குதிரைக்கில்லை
முன்பின்னாய் அலைதல் தவிர
குதிரையை மடக்கிக் கேளு
போவது எங்கே என்று
புறம் திரும்பி அழகு காட்டும்
கேள்வியே அபத்தம் என்று
இலக்கில்லா மனிதர் பெரியோர்
உள்ளவர் அடைய மாட்டார்

- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் மூன்றாம் பாடம்.

நிலம் பரவி கால்கள் நீட்டி
கன்னத்துப் பக்கம் அழுந்த
குதிரைகள் தூங்குவதில்லை
மற்றைய உயிர்கள் போல

நிற்கையில் கண்கள் மூடி
களைப்பினைப் போக்கும் குதிரை
தொட்டதும் புரிந்து கொள்ளும்
தொடுதலைப் புரிந்து கொள்ளும்

தூங்குதல் பெரிய பாபம்
தூங்கவா பிறந்தீர் இங்கு
வாழ்வதோ சிறிது நாட்கள்
அதில் சாவினை நிகர்த்த தூக்கம்
புரிபவர் பெரியோர் அல்லர்
வாழ்பவர் தூங்க மாட்டார்
குதிரைகள் கண்கள் மூடி
குறி விறைத்து நிற்கும் காட்சி
யோகத்தின் உச்ச கட்டம்
நெற்றிக்குள் சந்திர பிம்பம்

- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் நான்காம் பாடம்.

நீர் குடிக்கக் குனியும் குதிரை
நிழல் தெரியப் பின்னால் போகும்
மிரளுது மிருகம் என்பார்
சீர் குணம் அறியமாட்டார்

வேறொன்று குடிக்கும் போது
தான் கலக்கல் கூடாதென்று
குழப்பத்தைத் தவிர்க்கும் குதிரை
மிருகத்தில் குழந்தை ஜாதி

கால் வைத்த இடங்கள் எல்லாம்
பூ முளைக்கும் இடமென்றெண்ணி
குளம்பது விளிம்பில் நிற்கும்
குதிரையா மிரளும் மிருகம்
குதிரையின் குளம்பைப் பாரும்
இடுக்கிலே ரோமம் சிரிக்கும்

- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஆறாம் பாடம்.

வல ஆடுகள் கூட இங்கே
கொம்புடன் ஜனித்ததாக
கீச்சுப் பூனைகள் கொண்டதிங்கே
கூரிய நகமும் பல்லும்

யாருக்கும் தீங்கு செய்யா
நத்தைக்கும் கல்லாய் ஓடு
பச்சோந்தி நிறத்தை மாற்றும்
பல்லிவால் விஷத்தைத் தேக்கும்

குதிரைகள் மட்டுமிங்கே
கொம்பின்றி பிறந்ததென்ன?
வெறுப்புடன் பிறந்த மாக்கள்
பயத்தினைத் துணையாய்க் கொள்ள
விருப்புடன் பிறந்த குதிரைக்கு
கொம்பில்லை; விஷமுமில்லை
தர்மத்தைச் சொல்ல வந்தோர்
தடியோடா காட்சி தருவர்?
குதிரைகள் காதைப்பாரும்
உள்ளங்கை சிவப்பு தோற்கும்

-இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஏழாம் பாடம்.

னிதரின் செருமல் போல
குதிரையின் கனைப்பு இல்லை
குதிரைகள் கனைப்பின் மூலம்
செய்திகள் சொல்வதில்லை.

அது அடிக்குரல் பேச்சு அல்ல
அந்தரங்க கேலியுமில்லை
குதிரைகள் தனக்குத் தானே
பேசலின் முயற்சி கனைப்பு
சிலசமயம் குதிரை கனைப்பில்
சின்னதோர் அலுப்பு உண்டு
அடுத்ததாய் செய்யப் போகும்
வேலையின் முனைப்பு உண்டு

குதிரையின் கனைப்பைக் கேட்டு
மறு குதிரைத் திரும்பிப் பாரா
ஒரு கனைப்புச் சத்தம் கேட்டு
மறு கனைப்பு பதிலாய் தாரா.
குதிரைகள் உலகம் எளிது
எதிர்பார்ப்பு ஏதும் இல்லை.
தன் நெஞ்சைத் தானே நோக்கி
குதிரைகள் பேச்சே கனைப்பு

மற்றவர் என்ன சொல்வார்
என்பதே மனிதர் உலகம்
உற்றவர் எனக்கு நானே
என்பதே குதிரை வாழ்வு
குதிரையின் கனைப்பு கேட்க
எனக்கு நான் வணக்கம் சொல்வேன்

வேறெவரும் வாழ்த்த வேண்டாம்
வேறெவரும் வணங்க வேண்டாம்
என் செய்கை எனக்குத் தெரியும்
பூமாலைத் தேவையில்லை
தொடர்ந்து போ மேலே மேலே
குதிரையின் கனைப்புச் சொல்லும்

- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஐந்தாம் பாடம்.

குதிரைகள் குளம்பினூடே
மண்கட்டி சிக்கிக் கொள்ளும்
மண்கட்டி உள்ளே அழுந்த
குதிரைகள் நொண்டத் துவங்கும்
நடையிலே கவிதை காட்டும்
குதிரைகள் நொண்டலாமா

கங்காரு குதித்தல் போல
குதிரைகள் ஓடலாமா
ஒருபக்கம் மழித்த முகமாய்
சிரிப்பதில் அழகு உண்டா
மொழி தெற்றிப் பேசுபவர்
கவிதையை யாரோ ரசிப்பர்

கூன்தென்னை குட்டை ஆலம்
நதி ஒதுங்கி சேறாய் நிற்றல்
வலைசிக்கி தவிக்கும் காக்கை
எத்தனை அவலம் இங்கே

குதிரையின் பின்னங்காலை
வெடுக்கென இழுத்துப் பற்றி
ஈரமண் அகற்றும் வித்தை
அறிந்தவர் எனக்குச் சொன்னார்
பிள்ளையை பிரித்துக் கொடுத்தால்
கர்ப்பிணித்தாய் வணங்கல் போல

கால் சுத்தம் செய்தால் குதிரை
கண்களால் நன்றி சொல்லும்
பேச்சிலே நன்றி சொன்னால்
பொய்யாக இருக்கக் கூடும்
கண்ணிலே நன்றி காட்ட
நெஞ்சிலே வந்து தைக்கும்

-இது
குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் எட்டாம் பாடம்.

னிதர்கள் நிமிர்ந்த நேரம்
மிருகத்தை அடிமை செய்தார்.
குரங்கின வழியில் வந்த
கோலத்தை மறந்து போனார்.
தோழமை என்றார்; ஆனால்
தொல்லைகள் பலவும் தந்தார்.

தோழமை என்றால் என்ன
பரஸ்பரம் மதித்தல் தானே
தான்மட்டும் சிறந்தோர் என்ற
தன்மையை மறத்தல் தானே
மிருகங்கள் நட்பாய் வரினும்
தனித்தனி அளவு கோல்கள்

யானையோ மிரட்டும் உருவம்
சிங்கமோ கர்வம் அதிகம்
புலி சிறுத்தை போக்கிரித்தனம்
நுழைநரி வஞ்சகப் பிராணி
ஒட்டகம் முற்றும் கோணல்
குரங்கது அலையும் தன்மை

கரடியோ அழுக்கு மூட்டை
கழுதைப் புலி அருவறுப்பு
பூனைக்கோ கள்ளம் அதிகம்
நாயது அடிமை புத்தி
குதிரைகள் மட்டுமிங்கே
மனிதருள் நெருக்கமாச்சு.

குதிரைகள் ராஜ ஸ்நேகம்
எவரையும் வெறுக்கா மனது
காமத்தைக் காட்டும் உருவம்
காதலின் உண்மை வேகம்

ஓய்வில்லா தன்மை காட்டும்
உழைப்புக்கு உவமை யாகும்
ஒருமுறை ஸ்நேகம் கொண்டால்
மற்றவை விலகிப் போகும்.

மனிதர்கள் முழுதாய் வளர
குதிரையே பெரிதும் காரணம்

- இது குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் இன்னொரு பாடம்.


ல்தோன்றி மண்தோன்றி கடவுள் தோன்றி
கைவழியே மொழி வளரும் காலம் தோன்றி
கால்நடையே செல்வமெனக் கொண்ட நாளில்
ஆண்டிருந்த ஓர் அரசன் பறையறிவித்தான்.
வீட்டிற்கு ஒரு குதிரை வளர்க்க வேண்டும்
வேண்டுகின்ற உதவிகள் அரசு செய்யும்
குதிரைகள் தேசத்தின் பொக்கிஷங்கள்;
போர் வந்தால் புரவிகளை அரசே வாங்கும்.

போர்காலம் காணாத அரசு இல்லை
போராட்டம் இல்லாத காலம் இல்லை
போர்க்காலம் முன்கருதி புரவி வளர்ப்பீர்
பின்வரும் சந்ததிக்கு உறுதி கொடுப்பீர் .
மீறுபவர் தேசத்தின் முதல் எதிரிகள்
மறுப்பவர்கள் வெளியேற்றப்படுவார் உறுதி
பறையடித்து ஊர்முழுவதும் சேதி சொல்ல
ஜனம் கூடி தெரு நடுவே புலம்பலாச்சு.

இவன் என்ன பேயரசன் குதிரை வெறியன்
திடுமென்று குதிரைக்கு எங்கே போக...
குதிரைதான் செல்வமெனில் செந்நெல் என்ன
கொள்ளுமட்டும் பயரிடவா வயலும் நீரும்
ஆடுகளோ உணவாகும் மாடுகளோ பயிர்வளர்க்கும்
மேய்ப்பதொன்றும் கடினமில்லை; கோல் அசையக் கூட வரும்.
குடும்பத்துப் பெண்மணிக்கு குதிரைகளா கட்டுப்படும்;
குரல்கொடுத்தால் நாய்போல புரவிகளா துணையாகும்?

இவன் என்ன பேயரசன் குதிரை வெறியன்
பார்ப்பனர்கள் சிலர் கூடி தமக்குள் பேசி
முடிவாக திடமாக சபைக்குள் சென்று
தமக்கு மட்டும் கட்டளையைத் தளர்த்துமாறு
பணிவாக அறிவித்தார்; காரணம் சொன்னார்.
வேதங்கள் சொல்லுகையில் குதிரை கனைக்கும்;
பாடத்தில் முழுமுனைப்பு சிதறிப் போகும்.
தோல்பொருளை பார்ப்பனர்கள் தொடக்கூடாது
வாரின்றி குதிரைகள் வசப்படாது.
போருக்கும் பார்ப்பனர்களுக்கும் பொருத்தமில்லை
போரில்லாத வாழ்க்கையிதே எங்கள் கொள்கை
பேரரசன் யோசித்தான்; தலையசைத்தான்.
பார்ப்பனர்கள் குதிரைக்கு விலக்கு என்றான்;
பார்ப்பனர்கள் சபை நீங்கி வணங்கி வந்தார்.

வைத்தியரும் கொல்லரோடு சேர்ந்து கொண்டார்
எங்களுக்கும் விலகளிப்பாய் தேரா மன்னா
வணிகத்தில் எருதுகளே உதவியாகும்;
பொதி சுமக்கும் கழுதைகளே போதும் எமக்கு
ஊர் சுற்றும் வேலையிலே நாங்கள் இருக்க
பெண்டுகளே பிற வேலை செய்தல் வேண்டும்.
புரவிகளைப் பெண்டுகளால் ஆளமுடியுமா?
பேரரசே தயைசெய்யும் இது தாங்க முடியுமா.
மன்னவனும் மனு ஏற்றான்; விலக்கு என்றான்
வந்தவர்கள் சபை மீள கூட்டமாக

தொழில் தெரிந்த சூத்திரர்கள் முன்னே சென்றார்
குதிரைகள் பேணுதற்கு வசதியில்லை
முன்பின்னே இது குறித்துப் பழக்கமில்லை
கைகாலே துணையாக உழைப்போர் நாங்கள்
போரென்றால் கால்படையின் அங்கம் நாங்கள்
குதிரைகள் சுமை எமக்கு உதவி தராது
உழவுக்கோ கவலைக்கோ துணையாகாது
மன்னவனும் தலையசைத்தான் சரியே என்றான்.

படைவீரர் பெருமறவர் கூட்டம் போட்டார்
முடிவாக அரசனிடம் வணக்கம் சொன்னார்.
போர்க்காலம் குதிரைகள் தேவையெனினும்
போர் எதிரி யானையுடன் வந்து நின்றால்
குதிரைகள் என் செய்யும் கலைந்து போகும்
படைவீரர் தெருவுக்கு ஒரு யானை வளர்ப்பார்
முறைபோட்டு அனுதினமும் பேணிக் காப்பார்
வீட்டுக்கொரு குதிரையென்ற விதியினின்று
பேரரசே விலக்களிப்பீர்; யானை தருவீர்.
பேரரசன் யோசித்தான்; கவலை சூழ
கையசைத்தான் மறவர்கள் கலைந்துபோக

மறுநாளே சபைகூட்டி எழுந்து நின்று
பெருமன்னன் குரல் செருமி பேசலானான்.
குதிரையெனச் சொன்னது விலங்கா மக்கள்
புரவியதன் மகிமையைத் தெரியா ஜனமே
வீட்டுக்கொரு வலிமையுள்ள மனிதர் என்று
நான் சொன்ன செய்தியது தவறோ சொல்வீர்?
குதிரையதை சபை நடுவே நிறுத்திப்பாரும்.
உடல் முழுவதும் கைதடவி உணர்ந்து பாரும்

எவ்வளவு தின்றாலும் குழிந்த வயிறு
எப்போதும் எப்போதும் துடித்த உணர்வு
கண்மூடி நின்றாலும் காது கேட்கும்
காதுகளே நாலுபக்கம் சுற்றிப் பார்க்கும் .
உடல்வலிமை இருந்தாலும் மூர்க்கம் காட்டா
குதிரை குணம் கொண்டவர்கள் உயர்ந்தோர் ஆவார்
போர் என்றால் குத்தீட்டி யுத்தம் அல்ல;
மனிதரோடு மனிதர் வெட்டி சாய்தல் அல்ல

பெருவாழ்க்கை தனை நோக்கி காலம் போகும்
தன்மையினைப் போரென்றேன்; வேறொன்றில்லை
புரியாத என்மக்காள் மந்தை ஆடே
உமக்கிங்கே அரசனாக வெட்கம் கொண்டேன்
வெறும் பதரைக் கோல்பிடித்து காப்போர் உண்டோ?
உணர்வில்லா ஜனத்துக்கு அரசன் கேடா .
ஒரு காலம் இவ்வுலகம் கொள்ளும் கண்டீர்
குதிரைகளே உலகத்தின் பெருமூச்சாகும்

குதிரைகளே இப்புவியில் செங்கோல் ஓச்சும்
விரல் நுனியில் விசையறிந்து வேகம் காட்டும்
உழவுக்கும் தொழிலுக்கும் உதவியாகி
ஊர்விட்டு ஊர்போகக் கருவியாகி
விண்முட்டிக் கீழிறங்கி அனைத்துச் செயலும்
குதிரையே முன் நின்று நடத்தும் கண்டீர் .
கலியென்ற காலமுண்டு இத்தரை மீதில்
கடவுளெனக் குதிரைவரும்; ஆட்சி செய்யும்.

பல்வேறு ரூபத்தில் மனிதர் முன்னே
குதிரையெனும் பெருணர்வே கைக்கொடுக்கும்
வளமான வாழ்வுண்டு; மனிதர் அன்று
தேவரென வலம் வருவார் சொல்வேன் கண்டீர்
கால்நடையில் ஆடுகளே செல்வம் என்ற
மக்களிடம் மன்னனென இருத்தல் வேண்டா.
பசுக்களெனும் பார்ப்பனர்கள் காலம் முடிந்து
குதிரையிது வீணையிலே வேதம் பேசும்
காலத்தை என்னுள்ளே இன்றே கண்டேன்
போய் வருவேன் என்மக்காள் விடை கொடுப்பீர்
உம்மோடு இருத்தல் இனி இயலாதென்றான்
பெருமன்னன் வாள்வீசி தன் தலை துணித்தான்.

கலியென்னும் குதிரையதன் ஆட்சியின்று
கண்திறக்கத் துவங்கி விட்ட நேரம் கண்டோம்.
தலைதுணித்த பெருமன்னன் வருவான் மீண்டும்
முகம் மட்டும் குதிரையாகக் கொண்டவாறு
குரங்குகளை மூத்தோராய் கொண்ட மனிதர்
குணம் மாறி குதிரைக்கு வணக்கம் சொல்வார்.
கலியென்ற குதிரை தன் ஆட்சி துவங்கும்
மனிதருக்குள் மறுபடியும் நேசம் துளிர்க்கும்;
யாகங்கள் பூஜைகள் பூர்த்திசெய்யா
ஸ்நேகத்தை குதிரைகள் வளர்த்துக் கொடுக்கும்

குழப்பங்கள் முற்பரப்பில் தோன்றினாலும்
குதிரைகள் விஞ்ஞானம் உலகம் வளைக்கும்
குதிரைகள் ஞானத்தை என்னுள் கண்டேன்
கலியென்னும் யுகத்துக்கு வரவு சொன்னேன்.

- எழுத்தாளர் பாலக்குமாரன் ( இரும்பு குதிரைகள் )

http://balakumaranpesukirar.blogspot.com/