"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


ளவையார் என்ற சொல்லுக்குத் தாயார், தவமுடைய பெண், இருடி, மூதாட்டி, பெண்துறவி, திருமணமாகாதவள் என்றெல்லாம் பொருள் கூறுவர். நாட்டுப்புற வழக்கில் ஒளவையாரை "அவ்வயாக்கெழவி" என்றே இன்றும் அழைத்து வருகின்றனர். நிலாவில் வடைசுடுவது முதல் பறம்புமலைப் பாரி, அதியமான் போன்ற வள்ளல்களின் அவையில் தமிழ் பாடியதாகவும், கம்பர், ஒட்டக்கூத்தர், காளமேகம் போன்றோரின் சமகாலத்தவர் என்றும், "சுட்டபழம் வேண்டுமா? சுடாதபழம் வேண்டுமா?" என ஒளவையிடம் இடையனாக வந்த குமரன் கேட்டதாகவும் கதைகள் உள்ளன. ஒளவையாரைத் திருவள்ளுவரின் தமக்கை எனக் கூறுவாரும் உளர். சங்க காலந்தொட்டுப் பல்வேறு காலங்களில் ஒளவையார் என்ற பெயரில் பல்வேறு புலவர்கள் இருந்ததாகவும் தமிழ் வரலாற்று ஆய்வறிஞர்கள் கூறிவருகின்றனர்.

ஒளவையாரால் இயற்றப்பட்ட ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, கொன்றைவேந்தன் எனப் பல நூல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இருப்பினும், பெரும்பான்மையாக ஒளவையார் பாடல்கள் நமக்குத் தனிப்பாடல்களாகவே கிடைத்துள்ளன.

அக்காலப் புலவர் பெருமக்கள் பாலுக்கும் கூழுக்கும், பரிசிலுக்கும் பாடியதோடு அல்லாமல், பாமர மக்களின் வல்லடி வழக்குகள், பிணக்குகள் யாவற்றையும் அறிவுரைகள் கூறித் திருத்தித் தீர்ப்புகள் வழங்கியுள்ளனர். சோற்றுக்காக நிகழ்ந்த ஒரு வழக்கை ஒளவையார் தீர்ப்புக் கூறித் தீர்த்து வைத்த கதை பற்றி இங்கு காண்போம்.

தென்பாண்டி நாட்டில் ஏகன் என்பவன் தன் மனைவி வள்ளியிடம், ""வயலுக்குச் சென்று வருகிறேன். விதை வரகைக் குற்றிச் சோறாக்கி வை!" எனக் கூறிவிட்டு வயலுக்குச் சென்றான். வள்ளியோ, ஆற்றின் மணலில் சுழித்துக்கொண்டு கிடக்கும் வீளை (சிறுதவளை)யைப் பிடித்துக் குழம்பாக்கி வரகரிசிச் சோறு சமைத்தாள். தான் உண்டுவிட்டுத் தன் கணவனுக்கும் வைக்கலாம் என்றிருந்தவள், வீளைக்கறிச் சுவையும் விதை வரகுச் சோற்றின் சுவையும் அவளை மீண்டும் மீண்டும் உண்ணத்தூண்டியதால், கணவனுக்கு மிச்சம் வைக்காது எல்லாவற்றையும் உண்டு தீர்த்துவிட்டாள்.
உண்ட களைப்பால் தனது வீட்டின் முன் உள்ள வாகை மரநிழலில் அயர்ந்து தூங்கிவிட்டாள். உழுத களைப்பும் பசியும் கொண்ட ஏகன் வந்து பார்த்தான். தனக்கு மிச்சம் வைக்காது உண்டுவிட்டுச் சட்டி, பானைகளைக் கூடக் கழுவாமல் படுத்துறங்கும் மனைவியைத் தார்க்கோலால் அடித்து, உதைத்து அவளது தாயாரின் வீட்டுக்கு விரட்டினான். பக்கத்து ஊரான தன் தாயாரின் ஊருக்குச் சென்றால், "கணவனுக்கு மிச்சம் வைக்காமல் உண்டவளாயிற்றே! என்று நம்மை எல்லோரும் இகழ்வார்களே! அங்கு செல்வதா? வேண்டாமா?" என யோசித்த வள்ளி, செல்லும் வழி இடையே ஒரு மாமர நிழலில் அமர்ந்தாள்.

"சோற்றை உண்டதற்காக மனைவியைக் கொடுமை செய்து அடித்தவனாயிற்றே! என ஊரார் நம்மைப் பார்த்து இகழ்வார்களே!" என்று ஏகனும் நினைத்து அவளைத் தேடிச் சென்றான். வள்ளி அங்கு அமர்ந்திருப்பதைக் கண்ட ஏகன், அவளிடம் சென்று தன்னோடு வருமாறு கெஞ்சினான். அப்போது, அங்கு ஒளவையார் வந்தார். இருவரிடமும் நடந்தவை பற்றி வினவினார். உடனே வள்ளி ஓ...வென அழுதாள்.

"வீளைக் கறியே! எம்வ் வெதை வரகாஞ்சோறே!
வாகை நெழலே! - வள்ளியோட
வாழ்க்கையக் கெடுத்தியே...!"

என்று அவள் பாடி அழுதாள்.

"ஊருக்குந் தெரியாது! யாருக்குந் தெரியாது!
உழுத மகென் வயிறு உலையாக் கொதிச்சகொதி
தாருக்குச்சி தானே ஆத்தா - ஏகனை இப்போத்
தரிசா ஆக்கிருச்சி"

என்று ஏகனும் அவன் பங்குக்குப் பாடி முடித்தான். ஒளவையார், கணவன்-மனைவி இருவரையும் தேற்றினார். வள்ளியிடம் சென்று, தீர்ப்பாகத் தன் பாடலைப் பதிவு செய்தார்.

"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நா நாழி - தோழி
நிதியும் நின் கணவனும் நேர்படினும்; தத்தம்
விதியின் பயனே பயன்"

இப்பாடலின் கருத்தாவது, ஒருபடி உமியையோ, தவிட்டையோ, தானியத்தையோ கூட்டிக் குறைத்து அளந்துவிடலாம். ஆனால், ஆழ் கடலில் கொண்டுபோய் நிறை நாழியை (படியை) எவ்வளவுதான் ஆழ அமுக்கி அளந்தாலும் ஒரு படி தண்ணீர்தான் இருக்கும். அவ்வாறே, நிறைவான செல்வமும், பண்புடைய கணவனும் கிடைத்தாலும், தாம் தாம் செய்த வினையின் தன்மைக் கேற்றவாறே, தாம் பெற்ற செல்வத்தாலும், கணவராலும் பயனடைவர். ஊழ்வினையைப் பொறுத்தே பயனடைய முடியும். அதுபோல, கணவன், மனைவியாகிய நீங்கள் உங்களுக்குள்ளே கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருங்கள்; ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள்; உங்கள் பிரச்னைகளில் அடுத்தவர்களுக்கு இடங்கொடுக்காதீர்கள்; ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வு இன்றி அன்பு காட்டுங்கள்; கணவன், மனைவி இருவர் மட்டுமே உங்கள் வாழ்க்கையைத் தீர்மானித்து ஒத்த கருத்தாய் முடிவு செய்யுங்கள். வாழ்வில் உங்களுக்கு ஒரு குறையும் நேராது என்பதாக இப்பாடல் கருத்து அமைகிறது. தற்காலத்துக்கு மட்டுமல்ல, எக்காலத்துக்கும் ஒளவையாரின் இந்தத் தீர்ப்பு அவசியமானதுதானே!

- பேராசிரியர் கா.காளிதாஸ்

http://www.dinamani.com/09 May 2009 11:04:37 PM IST